பகுதி – 14.
சந்தியா, தன்னிடம், தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது கேட்பாள் என அவன் எதிர்பார்க்க, அவள் கேட்ட கேள்வியை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பதுபோல் பார்த்திருந்தான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க, ஏன் அமைதியா இருக்கீங்க?”.
“அது... ஆமா...” தயக்கமாக பதில் கொடுத்தான்.
“நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லன்னா, பிறகு எப்படி...?” அவள் இழுக்க,
“என் ப்ரண்ட் வருண் எல்லாத்தையும் சொன்னான்” இப்பொழுது எதற்காக இதையெல்லாம் விசாரிக்கிறாள்? என எண்ணிக் கொண்டான்.
“ஓ... என்ன சொன்னான்?” ஒரு மாதிரியாக இழுத்தாள்.
“நடந்ததைச் சொன்னான்... நான் செஞ்சு வச்ச காரியத்தைச் சொன்னான். என்னன்னு தெளிவா சொல்லு சந்தியா”.
“அப்போ அவன் சொல்லியிருக்கலன்னா உங்களுக்கு எதுவுமே தெரிஞ்சிருக்காது. நீங்க எப்படி அவன் சொன்னதை நம்பினீங்க?”.
“நான் இப்போ வர்றேன்...” சொன்னவன், தன் அலுவலக அறைக்குச் சென்று, ஒரு அலைபேசியைத் தேடி எடுத்து வந்தான். அதில் எதையோ துழாவி, தேடியது கிடைக்க, அதை அவள் முன்னால் நீட்டினான்.
அதைப் பார்த்தவளது முகம் பேரதிர்ச்சியை வெளிப்படுத்தியது. “இது அன்னைக்கு ரகு என்னை அடிச்சப்போ எடுத்த போட்டோ. இந்த காயம் எல்லாம் ஆற, சரியாக ஒரு வாரம் ஆச்சு. அங்கே இருந்து நான் உடனே கிளம்பலை, இதுக்கெல்லாம் பதில் தெரியாமல் எப்படி வருவேன்?” அவன் குரல் நைந்து வெளிவர, அவனைப் பார்த்தாள்.
“எதையோ செஞ்சு வச்சுட்டேன், உடனே தப்பிச்சு போய்டலாம்னு எல்லாம் நான் செய்யலை. அடுத்தநாள் ரகுகிட்டே பேசி, என் விலாசத்தை கொடுத்துட்டுதான் வந்தேன். என்ன முடிவா இருந்தாலும், நீங்க எடுக்கறதுதான்னு சொல்லிட்டுதான் வந்தேன்” அவன் சொன்ன இந்த சேதி அவனுக்கு முற்றிலும் புதியது.
அதை கிரகித்தவாறே, “உங்க ஹெல்த் பத்தி தெரிஞ்சும் குடிப்பீங்களா? அப்போ என்னைமாதிரி இன்னும் எத்தனை பொண்ணுங்க கழுத்தில் தாலி கட்டி இருக்கீங்க?” ஆத்திரமாக கத்தினாள்.
“சந்தியா... அப்படியெல்லாம்...”
“என்ன எதுவும் இல்லன்னு சொல்ல வர்றீங்களா? எப்படி நம்பறது? அதை நீங்க எப்படி நம்பறீங்க?” தன் கோபம் குறையாமலே கத்த, தன்னை முழுதாக நியாயப்படுத்திக் கொள்ளக் கூட அவனால் முடியவில்லை.
“நான், என் சரிபாதியா, என் வாழ்க்கைக்குள் வந்தால் நல்லா இருக்கும்னு ஆசைப்பட்ட ஒரே பொண்ணு நீதான் சந்தியா” இந்த தன்னிலை விளக்கம் அவனை குறுகிப் போகச் செய்தது.
“இதென்ன புதுக் கதை?”.
“புதுக் கதை எல்லாம் இல்லை... ரொம்ப பழைய கதைதான். நான் பாண்டி வந்த அன்னைக்கு காலையில், முதல்ல பாத்தது உன்னைத்தான். அப்போவே...”.
“கண்டதும் காதலா? நம்பற மாதிரியா இருக்கு?” வெகு நக்கலாக வினவினாள்.
“காதல்ன்னு நான் எப்போ சொன்னேன்? உன்னை உன் சூழ்நிலையில் இருந்து காப்பாத்தணும்னு மட்டும்தான் தோணிச்சு. பகல்ல அந்த சிந்தனை மட்டும்தான் இருந்தது. ஆல்க்கஹால் உள்ளே போன உடனே, அதற்கான தீர்வா என் மூளை எதைச் சொன்னதோ, அதை அனிச்சையா செய்து வச்சிருக்கேன் அவ்வளவுதான்...”.
“ஓ... அவ்வளவுதான்... ரொம்ப சிம்பிள் இல்ல? அதுக்குப் பிறகான பாதிப்பு எல்லாம் என்னன்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா?” கோபம், கோபம் அது மட்டுமே அவளிடம் இருந்தது.
“அந்த நேரம் நான் எதை எப்படி யோசிப்பேன்னு எனக்குத் தெரியாது” இயலாமையாக பதில் கொடுத்தான்.
“சரியா தாலி கட்டணும்னு மட்டும் எப்படித் தெரியும்? என்னைக் கீழே தள்ளி, என்மேல்...” அவள் முகத்தை மூடிக்கொண்டு விம்ம, நொறுங்கிப் போனான்.
“நோ... சந்தியா பிளீஸ்... நான் அப்படி நடந்திருக்க முயற்சி பண்ணி இருக்கவே மாட்டேன்” அதை மட்டும் உறுதியாகச் சொன்னான்.
“அப்போ நான் பொய் சொல்றேனா? நடந்தது எல்லாம் ஞாபகமே இல்லாத நீங்க சொல்றது சரி, நான் சொல்றது தப்பு... சூப்பர் போங்க” அவனைப் பாராட்ட, அதில் இருந்த இகழ்ச்சியில் இதயத்தில் ரத்தம் கசிந்தது.
“இல்ல... நான் அந்த அளவுக்கு கெட்டவன் கிடையாது”.
“ஆமா கெட்டவன் கிடையாது, கேடுகெட்டவன்... அப்படித்தான் சொல்லணும். நீங்க எப்படி... பொண்ணு ஏதாவது வேணுங்கும் போது மட்டும் குடிப்பீங்களோ? இதைச் சொல்லி தப்பிச்சுக்கலாமே...” தன் கையில் இருந்த ஃபயில்களை அவன் முன்னால் தூக்கி வீசினாள்.
“என்னைப்பத்தி இவ்வளவு தூரம் தெரிஞ்சும், எனக்குத் தெரிஞ்சு, நானே குடிப்பேன்னு நினைக்கறியா?” தன் கடைசி சொட்டு நம்பிக்கையை பற்றிக் கொண்டு கேட்டான்.
“அப்படின்னா? குடிச்சதுக்கே இப்போ கதை சொல்லப் போறீங்களா?”.
“கதை இல்லை, உண்மை...”
“என்ன உங்களுக்கே தெரியாமல் குடுத்துட்டாங்கன்னு சொல்லப் போறீங்களா? அந்த அளவுக்கு அதோட வாசனையும், ருசியும் தெரியாத அளவுக்கு பாப்பாவா நீங்க? நான் நம்பிட்டேன்...” தன் கடைசி நம்பிக்கையும் தோல்வியுற, பரிதாபமாக அவளைப் பார்த்தான்.
“என்ன? இப்படிப் பார்த்தால் உங்களை நான் நம்பிடுவேனா?” அவள் கேட்க, தன் போராட்டத்தை நிறுத்திக் கொண்டான்.
“ஏற்கனவே கஷ்டத்தில் இருந்த என்கிட்டே, திடீர்ன்னு கழுத்தில் தாலி கட்டி, உருட்டிப் போட்டு மேலே விழுந்து... எப்படி இருந்தது தெரியுமா? ஒரு வாரம் ஜுரம்... நடந்ததை வெளியே சொல்ல முடியாத வேதனை, அழுத்தம்... உங்களுக்குச் சொன்னா புரியாது.
“ஒரு ராத்திரி கூட நிம்மதியா தூங்க முடியலை. எத்தனைநாள் அலறி எழுந்து உக்காந்திருக்கேன் தெரியுமா? வெளியே போனால், எங்கே எவனாவது வந்து தாலி கட்டிடுவானோன்னு...” அவள் சொல்லிக்கொண்டே போக, தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு பட்டென வெளியேறினான்.
மாடிக்குச் சென்றால் கதவைத் திறக்கும் ஓசை கீழே கேட்கும் என்பதால், தன் அலுவலக அறைக்குள் புகுந்து கதவை சாற்றினான். அது பூட்டிக் கொண்டதா? இல்லையா? என்பதை எல்லாம் அவன் கவனிக்கும் நிலையில் இல்லை.
தன் அலைபேசியில் இருந்து வருணுக்கு அழைக்க, “மச்சான்... நிஜமாவே நீதானாடா? பேசி எத்தனை வருஷம் ஆச்சுடா...” அவன் உற்சாகத்தில் பேச, இவனோ கொலை வெறியில் இருந்தான்.
“ஒரு வார்த்தை என்கிட்டே பேசாதே... அந்த அஞ்சு பேரையும் இப்போ உடனே கான்ஃபிரன்ஸ் கால்ல கனெக்ட் பண்ணு” இவன் போட்ட சத்தத்தில், படுக்கையில் அமர்ந்திருந்த சந்தியா வெளியே ஓடி வந்தாள் என்றால், வருணோ சற்று நடுங்கிப் போய் அவன் சொன்னதைச் செய்தான்.
இரவு வெகு நேரம் கடந்துவிட்டதால், அனைவரின் அழைப்புக்களும் இணைய ஐந்து நிமிடங்கள் பிடித்தது. அனைவருமே சந்திரன் தங்களிடம் பேசுவதற்காக அழைத்திருக்கிறான் எனத் தெரிய, கொள்ளை சந்தோசம் கொண்டார்கள்.
‘அந்த’ நாளுக்குப் பிறகு, அனைவரையும் முழுதாக தவிர்த்துவிட்டான், எனவேதான் அவன் இப்பொழுது பேசப்போகிறாள் எனத் தெரியவே பரபரப்பானார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் அவனை அழைத்து பேச முயல, “டேய், எவனும் பேசக் கூடாது... நான் மட்டும்தான் பேசுவேன். எல்லாரும் நல்லா இருக்கீங்களா? கல்யாணம், குழந்தை குட்டின்னு சந்தோசமா இருக்கீங்களா?
“உங்களை எல்லாம் நம்பி கூட வந்ததுக்கு, எனக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டீங்கடா. நல்லா இருங்கடா... எல்லாவனும் நல்லா இருங்க. பாவிங்களா, உங்களுக்கெல்லாம் நான் என்னடா துரோகம் பண்ணேன்?” கேட்டவன் அலைபேசியை வைத்துவிட்டான்.
சந்திரன் அலைபேசியை வைத்துவிட, மற்றவர்கள் அனைவரும் இணைப்பிலேயே இருந்தார்கள். “இவனுக்கு என்னடா ஆச்சு? இத்தனை வருஷம் கழிச்சு ஏண்டா இப்படி பேசுறான்?
“வருண், உனக்கு ஏதாவது தெரியுமா?” வருண், சந்திரனோடு நெருங்கிய தொடர்பில் இல்லை என்றாலும், அவனைப்பற்றிய விஷயங்கள் அனைத்தும் வருணுக்கு மட்டுமே தெரியும் என்பதால் கேட்டார்கள்.
“அதுவா, இன்னைக்கு அவனுக்கு ‘அந்த’ பொண்ணோடதான் கல்யாணம் முடிஞ்சது. அதில் ஏதாவது பிரச்சனையா இருக்கும். எதுவா இருந்தாலும் நாளைக்கு காலையில் பேசிக்கலாம், இப்போ எல்லாரும் படுங்க” சொல்லிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான்.
மனிதன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும், சில நேரம் விதியின் வசம் சிக்கி துன்பப்படுவதை என்னவென சொல்வது? இந்த நொடி சந்திரனும் அப்படி ஒரு நிலையில்தான் இருந்தான். அவன் பேசியது அனைத்தையும் அட்சரம் பிசகாமல் கேட்ட சந்தியாவுக்கு என்ன நினைப்பது என்றே தெரியவில்லை.
அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள். சந்திரனை நல்லவன் என்றெல்லாம் மனம் உடனே ஏற்க மறுத்தது. பல வருட நினைப்பை, ஒரே நிமிடத்தில், நாளில் களைவது என்பது சாத்தியமில்லாதது தானே. படுத்தவள், அருகே இருந்த பாலைப் பார்த்துவிட்டு, அதை முழுதாக குடித்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், திடுமென ஒரு சவுக்குத் தோப்புக்குள்ளே தன்னை யாரோ விரட்டுவதும், மூச்சிரைக்க அவள் ஓட, ஒரு கட்டத்தில் தன்னைத் துரத்தியவர்களின் வசம் சிக்கிக் கொண்டாள். அந்த நொடி, பட்டென கண் திறந்தவள், படுக்கையில் எழுந்து அமர்ந்தாள்.
அந்த ஏசி அறையிலும், முகம் மொத்தமும் வியர்த்திருக்க, தேகம் மெல்லியதாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் எழுந்த அசைவில் கண் விழித்தவன், அறையின் விளக்கை எரியவிட்டான். அதன் பிறகுதான், தான் இருக்கும் இடமும், சுற்றுப்புறமும் அவளுக்கு உறைத்தது.
“சந்தியா, என்ன ஆச்சு? முதல்ல தண்ணியைக் குடி...” அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கிப் பருகியவளுக்கு, பதட்டத்தையும் மீறிய சிறு ஆறுதல் எழுந்தது. இத்தனை வருடங்களாக தனிமையில் போராடியவளுக்கு, முதல் முறையாக ஒரு துணையையும், அனுசரணையையும் உணர்ந்தாள். கூடவே, இதற்கு இவன்தான் காரணம் என்பதும் புரிய, அவளுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.
நோயும் அவன், மருந்தும் அவன் என்கையில் எதை எடுக்க? எதை விட? எனத் தெரியாத தடுமாற்றம் அவளிடம்.
“ஏதாவது கெட்ட கனவா? ரிலாக்ஸ்... இங்கே உனக்கு எதுவும் ஆபத்து இல்லை” அவளை ஆறுதல் படுத்தினான்.
“ரொம்ப நாளைக்குப் பிறகு இப்போதான் இந்த கனவு மறுபடியும் வருது. அதுவும் குறிப்பா, நீங்க எப்போ என் வாழ்க்கைக்குள் வரணும்னு ஆரம்பிச்சீங்களோ அப்போ இருந்து அடிக்கடி வருது” இதற்கு காரணம் நீதான் என்பதை அவள் உரைக்க, அவனுக்கு எப்படி இருக்குமாம்?
“இனிமேல் நான் இதே பதட்டத்தோடதான் வாழணும் இல்ல?” அவனது உடனிருப்பை தன்னால் தவிர்க்கவே முடியாது என்ற நினைப்பில் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவன் சிதறிக் கொண்டிருந்தான்.
“உன் அனுமதி இல்லாமல், உன் விருப்பம் இல்லாமல், என் நிழல் கூட உன்னைத் தீண்டாது சந்தியா. என்னை நீ நம்பலாம்...”.
“நான் நம்பற மாதிரி நீங்க நடந்துக்கலைங்க... இப்போ இந்த நிமிஷம் உங்களோட தனியா இருக்கறதை நினைச்சாலே, எந்த நிமிஷம் நீங்க மாறுவீங்கன்னு ஒரே பயமா, பதட்டமா இருக்கு” அவள் தன் மனதுக்குள் இருப்பதை சொல்ல, இமைகளை அழுத்தமாக மூடி, வேதனையை விழுங்கினான்.
தன் அருகே ஒரு பெண் இருக்கவே பயப்படுவாள் என்பதெல்லாம் அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திராத விஷயம். பெண்களுக்கு நிழலாக, பாதுகாப்பாக மட்டுமே இருக்கவேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்டவன் அவன் அப்படி இருக்கையில், கட்டிய மனைவியே பயப்படுகிறேன் என்கையில், தான் உயிருடன் இருப்பதே வீண் எனத் தோன்றியது.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், தன் மனதை யோசனைகளில் இருந்து பிரித்து எடுத்தான். எதைச் செய்தால் அவளது பயமும் பதட்டமும் தணியும்? அவள் நிம்மதியாக இருப்பாள் என சிந்தித்தவன், வேகமாக எழுந்து வெளியே சென்றான்.
கீழே வந்தவன், பெரும் தயக்கமாக இந்திரனின் அறைக் கதவைத் தட்டினான். தாய் எழுந்து வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் ஒரு பக்கம் இருக்க, “ப்ரோ... அண்ணி...” மெதுவாக குரல் கொடுத்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கீர்த்திக்கு சட்டென விழிப்பு வர, “சந்திரன்...” கேள்வியாக குரல் கொடுத்தவள், நேரம் பார்த்துவிட்டு, அறைக்கதவை திறந்து பதட்டமாக வெளியே வந்தாள்.
“என்ன சந்திரன் இந்த நேரம்? ஏதும் பிரச்சனையா?” முதலிரவு அறையில் இருந்து, நள்ளிரவைக் கடந்து வெளியே வந்து தங்களை அழைக்கிறான் என்றால், ‘என்னவோ?’ என்ற பதட்டம் இருக்கத்தானே செய்யும். அதுவும் அவனது கதை தெரிந்தவளுக்கு இன்னும் அதிகமாகவே இருந்தது.
“அண்ணி, பயப்படற மாதிரி எதுவும் இல்லை” ‘கண்டேன் சீதையை’ என்னும் விதமாக அவன் சொன்ன பிறகுதான் ஆசுவாசமானாள்.
அதற்குள்ளாக, இவர்களது பேச்சு சத்தம் கேட்டு, “என்ன கீர்த்தி?” இந்திரனும் எழுந்துவிட,
“உங்க தம்பிங்க...” அவள் சொல்லவே, அவனும் பதட்டமாக எழுந்து வெளியே வந்தான்.
“என்னடா?”
“ப்ரோ, டென்ஷன் ஆகாதே, எதுவும் இல்லை... அண்ணி, மானுவை நான் எங்களோட படுக்க வச்சுக்கவா பிளீஸ்...” அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, மறுப்பாளோ என்ற பயத்தில் இறைஞ்சும் குரலில் கேட்டான்.
“சந்திரன்...” அவள் தயங்க,
“பிளீஸ் அண்ணி, மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. மானு பயப்படற மாதிரி எல்லாம்...”
“டேய், வாயை மூடு... இரு வர்றேன்” இந்திரன், உள்ளே சென்று, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வந்து அவனிடம் கொடுத்தான்.
“நீ தூக்கிட்டு போ... சில நேரம் நடுவில் சிணுங்குவா, தட்டிக் கொடுத்தா தூங்கிடுவா” அதற்கு மேலே அவன் எதையும் சொல்லவில்லை.
அவன் செல்லவே, கதவைப் பூட்டியவள், “என்னங்க, அவன்தான் புரியாமல் வந்து நிக்கறான்னா, நீங்களும் குழந்தையை தூக்கி குடுக்கறீங்க? அத்தைக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு ஒரு நிமிஷமாவது யோசிச்சீங்களா?”.
“கட்டுன பொண்டாட்டிக்கு வில்லனா இருக்கறது எல்லாம் ரொம்ப பெரிய கொடுமை கீர்த்தி” அவன் அழுத்தமாக உரைக்க, அவன் அருகே பொத்தென அமர்ந்துவிட்டாள்.
“ம்ச், இந்திரன்...” அவன் தோளைத் தொட,
“கொஞ்ச நாளில் அவளும் புரிஞ்சுப்பா. அது வரைக்கும் அவன் போக்கில் விடு. அம்மாவை ஏதாவது சொல்லி சம்மாளிக்கலாம்” சொன்னவன் பேசாமல் படுத்துவிட, அவன் நெஞ்சில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்.
குழந்தையை தன் அறைக்கு தூக்கி வந்தவன், மானசாவை அவள் கரத்தில் கொடுத்தான். சந்தியா கேள்வியாகப் பார்க்கவே, “உனக்கு என்மேல் நம்பிக்கை வர்ற வரைக்கும், குழந்தை நம்மளோடவே இருக்கட்டும்.
“குழந்தையோட தூக்கம் கலையிற அளவுக்கு கூட நான் நடந்துக்க மாட்டேன், இதிலாவது என்னை நம்பு” சொன்னவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.
“சித்தா...” கொஞ்சமாக உறக்கம் கலைந்த குழந்தை, இந்திரனின் குரலைக் கேட்டுவிட்டு அவனை அழைக்க,
“மானு, தூங்குடா... அவளை பக்கத்தில் படுக்க வச்சு தட்டிக் கொடு. விளக்கை முதல்ல நிறுத்திடறேன்” அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்தாள்.
அவனது செய்கை அவளை ஒரு பக்கம் நெகிழச் செய்ய, “எனக்கு சின்னக் குழந்தைங்களை எல்லாம் பக்கத்தில் படுக்க வச்சு பழக்கமே இல்லை. தெரியாமல் நசுக்கிட்டேன்னா?” சிறு பயத்தோடே கேட்டாள்.
“அதெல்லாம் செய்ய மாட்ட, சின்னப் பிள்ளையில் நான் படுக்கையில் ரொம்ப உருளுவேன். என் அம்மா என்னை கிட்ட படுக்க வச்சுக்கவே மாட்டாங்க. அவங்களை எல்லாம் உதைச்சு கீழே தள்ளிடுவேன்.
“ஆனா அதுவே சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனா, மத்த பசங்களோட, பெரியம்மா, சித்தி கூட எல்லாம் ரொம்ப சமத்தா தூங்குவேன். நம்ம புலன்கள், மைண்ட் எல்லாம் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நம்மளை மாத்திடும். சோ...” சொன்னவன் அமைதியாக படுத்துக் கொண்டான்.
அவளும் குழந்தையை அருகே போட்டு, தானும் படுத்து கண்களை மூடினாள். ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றாலும், சற்று நிம்மதியாக அவளால் உறங்க முடிந்தது.
இரவில் தாமதமாக உறங்கினாலும், தினமும் எழும் ஐந்து மணிக்கு சரியாக கண் விழித்து விட்டாள். குழந்தை அவளது இடக்கரத்தில் தலை வைத்து, வயிற்றில் காலைப் போட்டுக்கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஏசியின் குளிர் சந்தியாவைத் தாக்க, போர்வையை நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டாள்.
‘இப்போ எழுந்து போறதா இல்லையா? கிச்சன் எங்கே இருக்குன்னு தெரியும். ஆனா, எது எது எங்கே இருக்கும்? என்ன செய்யணும்னு தெரியலையே?’ வழக்கமான அவளது பொழுதுகள் இப்படித்தான் விடியும் என்பதால், சமையலைப் பற்றிய சிந்தையே முதலில் எழுந்தது.
கண் விழித்த பிறகு, படுக்கையில் இருப்பது கடினமாக இருக்கவே, எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். வழக்கமாக அவள் சுடிதார்தான் அணிவாள். ஆனால் இந்த புடவையைக் கட்டுவது கொஞ்சம் கொடுமையாகத்தான் இருந்தது.
அவனது உறக்கம் கலைந்துவிடக் கூடாதே என்று விளக்கைக் கூட போடாமல், அந்த இரவு விளக்கின் ஒளியிலேயே அனைத்தையும் செய்தாள்.
புடவை மாற்றுகையில், பார்வை அனிச்சையாக சந்திரனிடம் செல்ல, அவனோ, குப்புற கவிழ்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
ஒரு வழியாக உடை மாற்றிவிட்டு நேரம் பார்க்க, அதுவோ ஐந்து முப்பதைக் காட்டியது. வேகமாக அவள் கீழே இறங்கி வர, பாமா அப்பொழுதுதான் அறைக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தார்.
“சந்தியா... என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்துட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமேம்மா... சரி பூஜை அறையில் விளக்கேத்து” அவர் சொல்ல, நொடியில் அதைச் செய்து வந்தாள்.
“என்ன சமைக்கட்டும் அத்த? வழக்கமா என்ன செய்வீங்க?” அவள் கேட்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்.
வேலை செய்வதற்கு அவள் தயங்கவில்லை. சொல்லப்போனால் சமைக்காமல் அவளால் ஒரு கவளம் கூட உண்ண முடியாது என்பதுதான் உண்மை. அவள் பிறந்த வீட்டில் அவளுக்கு இடப்பட்டிருந்த சட்டம் அதுதான்.
துணைவருவான்.......