பகுதி – 18.
சந்திரன் தங்கள் அலுவலக அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க, சந்தியா அவனைத் தேடி வந்தாள். அவள் வந்திருக்கிறாள் என்றாலே விஷயம் இல்லாமல் இருக்காது எனப் புரிந்தாலும், அவளைக் கண்டுகொள்ளாமல் தன் கணினியிலேயே கவனமாக இருப்பதாக காட்டிக் கொண்டான்.
அவனை அழைக்காமல், அவன் தன்னைப் பார்க்க மாட்டான் என்பது புரிய, “ரகு வந்திருக்கான்...” மெதுவாக உரைக்க, அப்பொழுதும் அவன் அசையவே இல்லை.
“நான் சொன்னது உங்க காதில் விழலையா? ரகு வந்திருக்கான்னு சொன்னேன்” சற்று குரல் உயர்த்தினாள்.
அதற்கும் அவன் எந்த எதிர்வினையும் செய்யாமல் போகவே, அவனுக்கு அருகே சென்றவள், “என்னங்க, உங்ககிட்டேதான் பேசிட்டு இருக்கேன்... இப்படி உங்க வேலையையே பாத்துட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” அவன்மேல் கோபத்தை விட, ஒருவித வருத்தம்தான் இப்பொழுது அவளுக்கு எழுந்தது.
“என்கிட்டேயா பேசிட்டு இருந்த? நான் ஏதோ உனக்கு நீயே பேசிக்கறியோன்னு நினைச்சேன். ரகுவா? யார் அது? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே?” கேள்வியாக தன் தாடையை வருடினான்.
“என் ப்ரண்ட்டுன்னு சொல்லியிருக்கேன்... அப்படியும் நீங்க இந்த மாதிரி பேசறது நல்லா இல்லை” அவன் வேண்டும் என்றேதான் செய்கிறான் என்பது கூடவா அவளுக்குப் புரியாது?
“உன் ப்ரண்ட்டுகிட்டே எனக்கு என்னம்மா வேலை? நீ போய் பேசிகிட்டு இரு. எனக்கு அவன்கிட்டே பேச எதுவும் இல்லை” அவன் குரலிலோ, முகத்திலோ கோபமில்லை என்றாலும், அந்த வார்த்தைகளில் அவளுக்குத்தான் சுணக்கம் வந்தது.
“வீடு தேடி வந்தவங்களை இப்படித்தான் அவமானப்படுத்துவீங்களா? உங்ககிட்டே இருந்து நான் இதை எதிர்பாக்கலை. நாங்க மட்டும் ரேப் பண்ண வந்தவனையே கல்யாணம் பண்ணி அனுசரிச்சுப் போகணுமாம்.
“இவங்க எல்லாம், அதைத் தட்டிக் கேட்டவன் கிட்டே கூட பேச மாட்டாங்களாம். உங்க நியாயம் ரொம்ப நல்லா இருக்கு. நான் கீழே போய் அம்மாகிட்டேயே சொல்றேன், நீங்க அவங்களுக்கு பதில் சொல்லிக்கோங்க” அவள் திரும்பி நடக்க முயல, அவள் கரத்தைப் பற்றி அழுத்தமாக தடுத்தான்.
“நீ என்னை என்ன வேண்ணா சொல்லு, ஆனா ரேப் பண்ண வந்தேன்னு மட்டும் சொல்லாதே... என் அம்மா மேலே ஆணை, நான் அப்படி ஒரு விஷயத்தை செத்தால் கூட செய்ய மாட்டேன்” சொன்னவன், மடிக்கணினியை தூக்கி படுக்கையில் போட்டுவிட்டு, வேகமாக கீழே இறங்கிவிட்டான்.
அந்த நம்பிக்கை, அவன்மீதான நம்பிக்கை மட்டுமல்ல, அவனது வளர்ப்பின் மீதான நம்பிக்கை. அதைவிட அவனது கோபம், நியாயமான ஒரு மனிதனின் தார்மீக கோபம் என்பதும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், நடந்து முடிந்ததை அவள் என்னவென நினைக்கவாம்? ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், கீழே சென்றாள்.
“வாங்க ரகு... அம்மா, டீ கொடுத்தீங்களா?” அவனை வரவேற்றவன், அவன் அருகே அமர்ந்து கொண்டான்.
“இப்போதான் டீ குடிச்சேன்... உங்களையும், சந்தியாவையும் மறுநாளே விருந்துக்கு அழைச்சிருக்க வேண்டியது. ஏதோ நாள் நல்லா இல்லன்னு தள்ளிப் போயிடுச்சு. நாளைக்கு நாள் நல்லா இருக்கு... அதான் அழைச்சுட்டு போகலாம்னு வந்தேன்.
“சந்தியாவோட அப்பாவுக்கு திடீர்ன்னு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அதனால்தான் அவரால் வர முடியலை. நாளைக்கு எப்போ வரட்டும்னு சொல்லுங்க, அப்போ காரை எடுத்துட்டு வர்றேன்” அவள் வீட்டு மனிதனாக பேச, சந்திரனின் பார்வை தன்னவளைத்தான் பார்த்தது.
அவள் முகத்தில் மருந்துக்கும் மலர்ச்சி இல்லை என்பது புரிய, அவனுக்குப் புரியவில்லை. ‘ஒரு வேளை, நாள் ஆயிடுச்சு, அப்பா வீட்டுக்கு போக முடியலைன்னு கோபமா இருக்காளோ?’ இப்படித்தான் எண்ணிக் கொண்டான்.
அவள் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் எதுவும் முழுதாக அவனுக்குத் தெரியாதே. ஆனாலும், விருந்துக்கு அழைக்க வந்திருப்பவனோடு ஒரு சம்பிரதாயத்துக்கு வேண்டியாவது அவளது தம்பிகளை அனுப்பவில்லையே என மனதுக்குள் குறித்துக் கொண்டான்.
“அம்மா...” சந்திரன் தாயை அழைத்தான்.
“கல்யாணம் முடிஞ்சா மாமியார் வீட்டு விருந்தெல்லாம் சகஜம்தான் சந்திரா. போயிட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வா... அவளுக்கும் கொஞ்சம் சந்தோசமா இருக்கும். அதே மாதிரி தம்பி... நீ நாளைக்கு எல்லாம் இங்கேயும், அங்கேயும் அலைய வேண்டாம்.
“இவங்களே நாளைக்கு அங்கே வந்துடுவாங்க. அவ அப்பாகிட்டே சொல்லிடுப்பா” பாமா சொல்ல, ரகுவுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
சாதாரண வீட்டு மனிதர்களே மாப்பிள்ளை முறுக்கும், சம்பந்தி ஜம்பமும் காட்டுகையில், பாமா ஒரு சாதாரண அலைச்சலையே புரிந்துகொண்டு பேசியது வியப்பாக இருந்தது. ஆனாலும் அவனது பார்வை சந்திரனை தொட்டு நிற்க,
“அதான் அம்மா சொல்லிட்டாங்களே... அதுக்கு மேலே மறு பேச்சே கிடையாது. நாளைக்கு மத்தியானம் அங்கே இருப்போம்” சந்திரன் உரைக்க, மலர்ந்து சிரித்தான்.
சந்தியாவுக்கோ தன் பிறந்த வீட்டுக்கு செல்வதை எண்ணி கொஞ்சமும் சந்தோசப்பட முடியவில்லை. அவளது திருமணம் முடிந்த பிறகு, அவளுக்கும் அந்த வீட்டுக்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக் கூடாது என கனகம் மிகத் தெளிவாகச் சொல்லி இருந்தாள்.
அவளது தந்தையையும் பத்து நாட்களுக்கு மட்டுமே தனக்கு கடனாகக் கொடுப்பதாக சொல்லியவள். இன்று விருந்துக்கென அழைக்க கூட பெற்றவர் வராத பொழுதே, வீட்டின் நிலைமை என்னவென அவளுக்குப் புரிந்து போனது.
அப்படி இருக்கையில், அங்கே இரண்டு நாட்கள் தங்கி, மூன்று வேளை உணவு உண்பது எல்லாம்... அவளுக்கு பெரும் மலைப்பாக இருந்தது. அவர்கள் அங்கே செல்வதால், அவளது தந்தை ஹோட்டலில் இருந்து உணவு கொண்டுவந்து கொடுப்பார் என அவளுக்குத் தெரியும்தான்.
ஆனாலும், சந்திரனுக்கு ஹோட்டல் சாப்பாடு கொடுக்க வேண்டி, பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வது எல்லாம் அவளுக்கு சரியாகத் தோன்றவில்லை. ஒருவித தனிமை உணர்வு சட்டென தாக்க, கண்கள் கலங்கும் உணர்வு.
“அப்போ நான் கிளம்பறேன்... நீங்க சொன்னதை அப்படியே ரமணன் அங்கிள் கிட்டே சொல்லிடறேன்” இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
அதைப் பார்த்தவன், “காலையிலேயே இங்கே இருக்கீங்கன்னா, கண்டிப்பா விடிய முன்னாடியே கிளம்பி இருப்பீங்க. டிபன் சாப்ட்டுட்டு நிதானமா போனா போதும். இன்னைக்கு ஆபீஸ் போகணுமா என்ன?” அவனிடம் கேட்டான்.
“இல்ல, ரெண்டு நாள் லீவ் போட்டிருக்கேன்”.
“அப்போ என்ன... சந்தியா, ரகுவை கவனி... கீழே கெஸ்ட் ரூம்ல ப்ரஷப் பண்ணச் சொல்... அம்மா...” தாயிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.
“தியா, மேலே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. ஏதாவது அவசியம்னா கூப்பிடு...” சொன்னவன் ரகுவிடம் விடைபெற்று, அவர்கள் பேச தனிமை கொடுத்துவிட்டு மாடிக்குச் சென்றான்.
அவனும் சந்தியாவின் முகத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்... அதில் விரவி இருக்கும் சோகத்துக்கான காரணம் அவனுக்குப் புரியவில்லை. ரகுவிடம் பேசினால் தெளிவுக்கு வருவாளோ என்பதை அறிய வேண்டியே அவர்களை விட்டு மாடி ஏறினான்.
இல்லையென்றால் அங்கேதான் இருந்திருப்பான். ரகுவுக்கு அறையைக் காட்டியவள், அவன் முகம் கழுவி வரவே, தட்டு வைத்து இட்லியை பரிமாறினாள். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. இருவருக்கும் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், பேச முடியவில்லை.
இந்திரன் அவசர வேலையாக அமெரிக்கா சென்றிருக்க, பாஸ்கர் அவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உணவை முடித்துக் கொண்டவன், கிளம்பவே, கீழே இருந்த அழைப்புமணியை சந்தியா அழுத்த, சந்திரன் உடனே இறங்கி வந்தான்.
“அப்போ நான் கிளம்பறேன் மாப்ள... நாளைக்கு பாக்கலாம்” ரகு கை குலுக்கவே,
“சந்திரன்னு கூப்பிடு... இந்த மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்” அவன் சொல்ல, ரகு விழித்தான்.
ரகு சந்தியாவை விட ஒரு வயது பெரியவன். சந்திரன் தங்களை விட எப்படியும் ஐந்து ஆறு வயது பெரியவனாக இருப்பான். அவனை பெயர் சொல்லி அழைப்பதா? என்பதுதான் அவனது எண்ணமாக இருந்தது.
அவனது எண்ணம் புரிந்தவனாக, வீட்டுக்கு வெளியே அழைத்து வந்தவன், “முகமே பஞ்சராகற அளவுக்கு அடிச்சு துவம்சம் பண்ணி, நாயேன்னு கூப்பிட்ட பிறகு, என்னவோ பேர் சொல்லி கூப்பிட அவ்வளவு யோசிக்கற? அதெல்லாம் எனக்குப் பரவாயில்லை” அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் உரைத்தவன், வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
அவன் செல்லவே, இப்பொழுது ரகுவும், சந்தியாவும் தனித்திருக்க, “சந்தியா, உனக்கு இங்கே ஏதும் பிரச்சனை இல்லையே?” சந்திரனின் பேச்சைக் கொண்டு, சற்று கவலையாகவே கேட்டான்.
அவளோ, “அதெல்லாம் எதுவும் இல்லை... அங்கே வீட்டில் ரொம்ப பிரச்சனையா? அவங்க அப்பாவை இங்கே வர விடலையா? அப்படி இருக்கும்போது இதெல்லாம் அவசியமா?” அவள் தன் நினைப்பில் இருந்ததால், சந்திரன் பேசியதை கவனிக்கவில்லை.
அவளது கவனம் அங்கே இல்லை என்பது தெரிந்து தானே அவனும் ரகுவிடம் அப்படிப் பேசிவிட்டுப் போனான்.
“என்ன பேசற சந்தியா? கல்யாணம் முடிஞ்ச உடனே உன்னை தண்ணி தெளிச்சு விடுங்கன்னு உங்க சித்தி ஆடினால், அந்த தாளத்துக்கு எல்லாம் ஆட முடியுமா? உனக்குன்னு நாங்க எல்லாம் இருக்கோம்... அவங்க செய்யாதது எதையும் நீ புதுசா பாத்துடப் போறதில்லை” அவளிடம் சிறு கண்டிப்பைக் காட்டினான்.
“அது எனக்கு சரி... அவருக்கு?” அவளது கேள்வியில் அசந்தே போனான்.
திருமணம் முடிந்து முழுதாக ஐந்து நாட்கள் கடக்கும் முன்பே, தன் கணவனின் கௌரவத்துக்காகப் பார்க்கும் சந்தியாவை வியப்பு மேலிடப் பார்த்தான்.
அவளை அவன் நல்ல விதமாக நடத்தியிராவிட்டால், சந்தியா நிச்சயம் உடைந்து போய்தான் பேசியிருப்பாள் என அவனுக்குப் புரிய, அது அப்படி இல்லை எனத் தெரிய வந்ததே அவனுக்கு பெரும் விடுதலை உணர்வைக் கொடுத்தது.
‘ஹப்பாடி... மனுஷனுக்கு என்மேல்தான் கோபம் போல, இவளை எதுவும் சொல்லலையா? எனக்கு அது போதும்’ உள்ளுக்குள் ஒரு ஆறுதல் எழுந்தது. அவளைப் பார்க்கும் வரைக்கும் உள்ளுக்குள் பயந்துகொண்டே இருந்தது அவனுக்குத்தானே தெரியும்.
தன்னைக் கண்டவுடன் கண் கலங்குவாளோ? அழுவாளோ? கதறுவாளோ? என ஒவ்வொரு நொடியும் பயந்துகொண்டிருந்தான். அவள் சாதாரணமாக பேசிய பிறகுதான் நிம்மதியானான்.
இப்பொழுது சந்திரனுக்காகவும் பேசவே, தன் தோழியின் வாழ்க்கை இனிமேல் எந்த சிக்கலும் இல்லாமல் போகும் என்ற எண்ணம் தோன்ற, முகத்தில் பூத்த புன்னகை சிரிப்பாக மலர்ந்தது.
அதைப் பார்த்தவள், “நான் டென்ஷனா பேசறேன், நீ எதுக்குடா இளிக்கற?”.
“அதெல்லாம் பாத்துக்கலாம் விடு... அவராச்சு, நாமளாச்சு. நீ தேவையில்லாமல் எதையும் போட்டு குழப்பிக்காமல் நிம்மதியா இரு” சொன்னவன் அவளிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
மறுநாள் காலையில் டிபனை முடித்துக் கொண்டவர்கள் காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பயணம் துவங்கிய சிறிது நேரம் வரைக்கும் அமைதியாக இருந்தவளிடம், நேரம் செல்லச் செல்ல ஒருவித பதட்டம் தெரிந்தது.
அவளுக்கு தன் பிறந்தவீட்டுக்குச் செல்வதில் இருக்கும் மனத்தடை அவனுக்குப் புரிந்தாலும் அவள் முகத்தில் ஏறும் டென்ஷனின் அளவைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
“சந்தியா, ஏன் டென்ஷனா இருக்க? நைட் பாப்பா இல்லாமல் தனியா தூங்க வேண்டி இருக்குமேன்னு யோசிக்கறியா? நான் அந்த அளவுக்கு எல்லாம் கெட்டவன் இல்லை” அவளை எதையாவது சொல்லி திசைமாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே பேசினான்.
அவளுக்குத்தான் அப்படி ஒரு நினைப்பே இல்லையே... எல்லாம் வீட்டுக்குப் போகும் டென்ஷன் தானே. தன் ஒருத்திக்கே சாப்பாடு போட கனகம் அவ்வளவு யோசிப்பாள். இப்பொழுது சந்திரன் வேறு வருகிறான். மாப்பிள்ளை விருந்து வேறு சமைக்க வேண்டும்.
சாதாரண சாப்பாட்டுக்கே வழியில்லாத பொழுது விருந்தை எல்லாம் அவளிடம் எதிர்பார்க்க முடியுமா? சாப்பிட உக்காந்த பிறகு, இவன் மனது காயப்படும்படி, கோபப்படும்படி ஏதாவது சொல்லிவிட்டால் அவள் என்ன செய்வதாம்?’ அவளது சிந்தையெல்லாம் அதைப்பற்றியே இருக்க, அவனை முறைத்தாள்.
தன் வீட்டு நிலையை அவனிடம் வெளிப்படையாக பேச ஒரு வரட்டு கௌரவம் தடுக்க, முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“சந்தியா, ஏதாவது பேசு. இப்படி பேசறதுக்கு கூட கணக்கு பாத்தால், உன்னை நம்பித்தான் அங்கே வர்றேன். அங்கேயும் யார் பேசுவாங்கன்னு தெரியாது, நீயும் இப்படி இருந்தால் நான் என்னதான் பண்றதாம்?” அவளோடு உறவாட, அவளை இலகுவாக்க முயன்றான்.
ஏற்கனவே இருக்கும் குழப்பத்தில், அவன்வேறு இப்படி பேச, அதற்கும் மனம் முரண்டியது. வாயை அழுத்தமாக மூடிக் கொண்டு அசையாமல் இருந்துவிட்டாள்.
தான் இவ்வளவு பேசியும், அவள் வாயே திறக்காமல் போகவே, “என்கிட்டேதான் எதுவும் சொல்ல மாட்டேங்கற, அவன்கிட்டேயாவது சொல்லுவியா? அப்போ போன் போட்டு பேசு...” சற்று கோபமாகவே இரைந்தான்.
“நான் எதையும் அவனுக்கு சொல்லணும்னு அவசியமே இல்லை. நான் சொல்லாமலே அவனுக்குத் தெரியும்” தன் வீட்டுச் சூழ்நிலை ரகுவைத் தவிர வேறு யாருக்கு அதிகமாகத் தெரிந்துவிடுமாம்? அந்த எண்ணத்தில் வேகமாக பதில் கொடுத்தாள்.
“ஓ... சரிதான்... என்னதான் இருந்தாலும் அவன் உசத்திதான் இல்ல” ஒரு மாதிரி குரலில் உரைத்தவனின் கரத்தில் கார் பறந்தது. அவள் இருந்த மனநிலையில், அவனது கோபத்தை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இருக்கவில்லை.
அவளுக்கு அவளது குழப்பமே பெரிதாக இருக்கையில், அவனை எங்கே கவனிக்க? அவனுக்கு அதுவே கோபத்தை அளிக்க, காருக்கு இறக்கை முளைக்காத குறைதான். காரின் போக்கில் இருந்த மாறுதல் கொஞ்சம் கொஞ்சமாக புரிய, சற்று நடப்புக்கு வந்தாள்.
அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ கருமமே கண்ணாக இருந்தான். சற்று நேரத்தில், ஒரு இடத்தில் கார் தானாகவே நின்றுவிட, காரிலிருந்து இறங்கி அதை ஓரமாக தள்ளி நிறுத்தியவன், பேனட்டைத் திறந்து பார்த்தான்.
அவளுக்குமே கார் வழியில் நின்றுவிட்டது சிறு பதட்டத்தை அளிக்கவே, வேகமாக இறங்கி கீழே வந்தாள்.
அவன் கார் இஞ்ஜினையே பார்த்திருக்க, சில நிமிடங்கள் பொறுத்தவள், “என்ன ஆச்சு? ஏன் கார் நின்னுடுச்சு?” அவனிடம் கேட்டாள்.
“எனக்கும் தெரியலை... ஜஸ்ட் பாக்கறேன்... மெக்கானிக் வந்தாத்தான் சரி பண்ண முடியும் போல” சொன்னவன், தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
சில பல நிமிடங்கள் பேசியவன், “என்னது... அங்கே இருந்து வர ஒரு மணி நேரம் ஆகுமா? பக்கத்தில் தெரிஞ்சவங்க யாரும் இல்லையா? நான் ஃபேமிலியோட வந்திருக்கேன்டா. ரோட்டிலேயே நிக்க முடியாது. பசி வேற எடுக்குது” இருக்கும் ஆத்திரத்தை எல்லாம் அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தான்.
“அவன் வர நேரமாகுமாம்... நீ ஏன் வெயில்ல நிக்கற? உள்ளே உக்கார்” அவன் சொல்ல, அவனையே பார்த்திருந்தாள். அதன் பிறகுதான், அவன் பேசியதும், தான் அதற்கு பதில் கொடுத்ததும் என அனைத்தும் நினைவுக்கு வர, தன் தலையிலேயே மானசீகமாக அடித்துக் கொண்டாள்.
‘யார்கிட்டேயும் இப்படி பேசவே மாட்ட, இவர்கிட்டே மட்டும் எல்லாத்துக்கும் பதில் கொடுக்கற. ஏன் சந்தியா இப்படி?’ லட்சம் முறையாக தன்னையே கேட்டுக் கொண்டாள்.
“வெயில் ஜாஸ்த்தியா இருக்கு... பட்டுப் புடவைக்கும் இதுக்கும் உடம்பு எரியப் போகுது, உள்ளே உக்கார்...” அவள் அங்கேயே நிற்கவே மீண்டுமாக சொன்னான். அவனது அந்த அக்கறை மனதைத் தொட்டது. அதென்னவோ அவளுக்கான உறவுகள் யாரும் அவளிடம் அக்கறை காட்டியதே இல்லை.
ரகுவும், அவனது வீட்டு ஆட்களும் பாசமும், அக்கறையும் காட்டுவார்கள்தான். அது ஆயிரம் இருந்தாலும், அவளுக்கான முதல் உறவு, அவன் காட்டும் அக்கறை அவளை பலமாக அசைத்துப் போட்டது.
“நீங்களும் வாங்க... இங்கேயே நின்னால் சரி ஆகுமா என்ன?” அவள் கேட்க, அவளை அதிசயமாகப் பார்த்தான்.
“ஒரு போன்கால் பண்ணிட்டு வர்றேன்” சொன்னவன், அவளது தந்தைக்கு அழைத்தான். தங்களது கார் ரிப்பேர் எனச் சொன்னவன், மதிய உணவை முடித்துவிட்டு அங்கே வருவதாகச் சொல்லி அலைபேசியை வைத்துவிட்டான்.
அங்கே சுற்றிலும் பார்த்தவன், அருகே இருந்த ஹோட்டலைப் பார்த்துவிட்டு அவள் அருகே வந்தான். “எனக்கு ரொம்ப பசிக்குது, பக்கத்தில் இருக்க ஹோட்டலுக்கு போய் லஞ்ச் சாப்பிடலாம் வா” அவன் அழைக்க, ஏதோ ஒரு விடுதலை உணர்வோடு இறங்கினாள்.
அங்கே சென்று உணவை முடித்துவிட்டுத் திரும்ப ஒருமணி நேரம் கடந்திருக்கவே, காரில் ஏறி அதைக் கிளப்ப, உடனே அது ஸ்டார்ட் ஆனது.
அதைப் பார்த்தவளின் புருவம் நெரிய, “கார் ரிப்பேர்ன்னு சொன்னீங்க” அவனிடம் கேட்டாள்.
“ஒரு வேளை உன் மனசுக்குள் இருக்கறது என் காருக்கும் புரிஞ்சதோ என்னவோ?” சொன்னவன் காரை ஓட்டுவதில் கவனமாக, அவளுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே கணிக்க முடியவில்லை. அந்த நொடி, அவனை, அவனது புரிதலை அவ்வளவு பிடித்தது.
“தேங்க்ஸ்...” கண்கள் கலங்க அவள் உரைக்க,
“உனக்கு நீயே நன்றி சொல்லிப்பியா?” அவளை ஆழமாகப் பார்த்தவாறு சொன்னவன், ‘நான் இதைப் உணர்ந்து, புரிந்துதான் சொல்கிறேன்’ என அவளுக்கு உணர்த்தினான்.
அவளது இமைகளும் இதயமும் படபடக்க, உள்ளங்கை சட்டென வியர்த்துப் போனது. ‘நான் நல்லவிதமா உணரலைன்னு எனக்காக இதைச் செய்திருக்கார்’ அவள் மனம் குதியாட்டம் போட்டது.
ரகு அவளுக்கென எதையாவது செய்கையில், ‘இவனுக்கும் கஷ்டத்தை கொடுக்கிறோமே’ என வருந்தும் மனம், சந்திரனின் செய்கையில் உரிமையாக அதை ஏற்றுக் கொண்டது. அன்றே அவன், அவனுடையது எல்லாம் அவளுடையது என உணர்த்தி இருந்தானே.
அது மட்டுமா? அவளை விரும்பித்தான் மணந்தேன் எனச் சொன்னதைக் கேட்ட பிறகு, அவன்மீதிருக்கும் எந்த கோபத்தை அவள் பிடித்து வைக்கவாம்?
அவன் காலில் விழுந்ததை யோசித்தால், மூளை மொத்தமும் ஸ்தம்பிக்கையில், கோபமாவது ஒன்றாவது?
காரின் வேகம் இப்பொழுது முழுதாக குறைந்திருக்க, அந்த நெடுஞ்சாலையில் வெகு நிதானமாக பயணித்தது. இன்று வீட்டுக்கு வர வேண்டுமே என்ற நினைப்பிலேயே இரவு அவள் சரியாக உறங்கி இருக்காமல் போக, தூக்கம் கண்களைச் சுழற்றியது.
அவள் தன்னை மீறி தூங்கிவிட, காரை சாலையோரம் நிறுத்தியவன், அவளுக்கு சீட் பெல்ட் அணிவித்துவிட்டு, சீட்டையும் நன்றாக சாய்த்துப் போட்டான். அதைச் செய்வதற்குள்ளாகவே, அவள் எங்கே கண்விழித்துப் பார்த்து, தன்னைத் தவறாக எண்ணி விடுவாளோ என பயந்தான் என்றே சொல்லலாம்.
அவளுக்கு அனைத்தையும் செய்தவன், சில நிமிடங்கள் அவள் முகத்தையே பார்த்திருந்தான். ‘இனிமேல் எதுக்காகவும், யாருக்காகவும் நீ பயப்படாதே. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்’ மானசீகமாக அவளிடம் உரைத்தவன், காரை நிதானமாகவே செலுத்தினான்.
அவள் நன்றாக உறங்கி கண் விழிக்கையில், கார் ‘ஆரோவில்’ பகுதியில் நின்றிருக்க, மாலை நேரத்துக்கான குளுமை அங்கே நிலவியது. பட்டென இமை திறந்தவள், உறக்கம் பறந்தோட, வேகமாக எழ முயன்றாள். சீட் பெல்ட் அணிந்திருக்கவே, அது அவளால் முடியவில்லை.
“ஈஸி... ஈஸி... இப்போ எதுக்கு இவ்வளவு அவசரம்? ஒரு நிமிஷம் இரு” சொன்னவன் அவளது சீட் பெல்ட்டை விடுவித்தான். சீட் இன்னுமே படுக்கை நிலையிலேயே இருக்க, அவளால் நேராக நிமிர்ந்து அமர சற்று திணறினாள்.
“அந்தப் பக்கம் இருக்கற ‘நாப்’பை பின்னாடி இழு, சீட் தானா மேலே வந்துடும்” அவன் சொன்னபடி செய்ய முயல, அது அவளால் முடியவில்லை.
அவள் பக்கம் சாய்ந்து அதை நேராக்க முயன்றவன், அவள்மேல் சாயாமல் அது முடியாது என்பது புரிய, “நீ கதவைத் திறந்து கீழே இறங்கிக்கோ, நான் நேரா வைக்கறேன்” அவன் சொல்லவே,
‘அப்போ இதை சாய்க்கும்போது?’ அவளுக்குள் எண்ணம் எழ, அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வைக்கான பொருள் புரியவே, “சாய்க்கும்போது காரை நிறுத்திட்டு இறங்கி வந்துதான் சாய்த்து படுக்க வைத்தேன்” வேகமாக விளக்கம் கொடுத்தான்.
“எப்போ இங்கே வந்தோம்? எவ்வளவு நேரமா தூங்கறேன்?” முயன்று எழுந்து அமர்ந்தவள் கேட்டாள்.
“அதெல்லாம் இப்போ எதுக்கு? உன் ப்ரண்ட்டு கால் பண்ணி வீட்டுக்கு கூப்ட்டான். அங்கே போயிட்டு, பிறகு உன் வீட்டுக்குப் போகலாம். உங்க அப்பாகிட்டே பேசிட்டேன், அவரும் சரின்னு சொல்லிட்டார்” அவன் சொல்ல, காரிலிருந்து இறங்கி முகம் கழுவிக் கொண்டாள்.
அதன் பிறகு அவளை நேராக ரகுவின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே அவ்வளவு பெரிய வரவேற்பை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
மகேஸ்வரியும், தாமோதரனும் அவனை தங்கள் வீட்டுக்கு வந்த மருமகன் போலவே நடத்த, அவனுக்கு சற்று கூச்சமாகவே இருந்தது. ரகுவிடம் பெரிதாக முகம்கொடுத்து பேசவில்லை என்றாலும், இருவரும் முகம் திருப்பிக் கொள்ளவில்லை.
சந்தியாவுக்கு அதுவே போதுமென்று இருக்க, சற்று நிம்மதியாகவே உணர்ந்தாள். தாமோதரன் சந்திரனிடம் அவர்களது வேலையைப் பற்றி, வெளிநாட்டு வாய்ப்புகளைப் பற்றி ஆர்வமாக விசாரிக்க, அவருக்கு பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
அதே நேரம், மகேஸ்வரியும், சந்தியாவும், ரகுவும் ஒன்றாக அமர்ந்து பேச, மகேஸ்வரி அவளது புகுந்த வீட்டைப் பற்றி அக்கறையாக விசாரித்தார்.
“தம்பி உன்கிட்டே நல்லபடியா நடந்துக்கறாரா? ஆசையா இருக்காரா?” ஒரு தாயின் அக்கறையில் அவர் கேட்க, சிறு சங்கடத்தில் நெளிந்தாள்.
“நல்லா பாத்துக்கறார் ஆண்ட்டி...” சொன்னவளுக்கு அடுத்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
‘ஆசையான்னா...’ தனக்குள் அவன் செய்கையை ஓட்டிப் பார்த்தாள். முதல் இரவு துவங்கி, கடந்த நொடி வரைக்கும் அவனுக்கு தன்மீது இருக்கும் அக்கறை மிகத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் தன்மேல் ஆசை இருப்பதாக அவளுக்குத் துளியும் தோன்றவே இல்லை.
“ஒரு வாரம், பத்து நாள் எங்கேயாவது வெளியூர் போயிட்டு வர்றது தானே. அதைப்பத்தி ஏதாவது சொன்னாரா?” தங்கள் பெண்ணை அவன் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு அவரிடம் அதிகம் இருந்தது.
“அது...” இழுத்தவள், ‘என்னைக் காப்பாற்றேன்’ என்னும் விதமாக ரகுவைப் பார்த்தாள்.
“ம்மா... அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க... இதென்ன நோண்டி, நோண்டி கேட்டுகிட்டு இருக்கீங்க!!!” தாயை அடக்க முயன்றான்.
“நான் என்னடா தப்பா கேட்டுட்டேன்? நம்ம வீட்டுப் பொண்ணுடா... நான் கேக்காமல் யார் கேப்பா? நீ சும்மா இரு” அவரோ அவனை அடக்கினார்.
‘உன் பாடு கஷ்டம்தான்’ என்பதுபோல் அவன் பதில் கொடுக்க, ‘போடா...’ கண்களாலேயே அவனை மிரட்டினாள்.
“அம்மா, இவ அவங்க வீட்டு பொண்ணா மாறி அஞ்சு நாளாகுது. அவர் இங்கே வந்தால் யார் கவனிப்பான்னு அம்மணிக்கு ஒரே கவலை. அது உங்களுக்குத் தெரியுமா?” அவன் கேலியாக உரைக்க, அவளுக்கு சிறு வெட்கமும், கோபமும் ஒருங்கே எழுந்தது.
“எவன்டா இவன்... அஞ்சு நாள் என்னடா? பொண்ணுங்களுக்கு கழுத்தில் தாலி ஏறிட்டா போதும், பிறகு எல்லாமே அவன்தான்... அதை தக்க வைக்கத் தெரியாமத்தான் பலபேர் கோட்டை விட்டுடறாங்க” வாழ்வின் சூட்சமம் அறிந்தவராக அவனது தாய் பேசினார்.
“சரி இருங்க, நான் டிபன் எடுத்துட்டு வர்றேன்” அவர் உள்ளே எழுந்து செல்ல, அவர் பின்னாலேயே செல்ல முயன்ற அவளைத் தடுத்தார்.
“நீ உக்காந்து பேசிட்டு இரு... எல்லாம் நான் பாத்துக்கறேன்” அவர் செல்லவே, ரகுவும், அவளும் பேசத் துவங்கினார்கள்.
“டேய், ஏன்டா அப்படிச் சொன்ன? நான் எப்போடா அப்படி நடந்துகிட்டேன்?” அவனிடம் சண்டைக்குப் போனாள்.
“அதைவேற நான் என் வாயால் சொல்லணும்னு எதிர்பாக்கறியா? அங்கே நீ எப்படி இருப்பியோன்னு நான் கவலைப்பட்டா, அம்மணி அவருக்கு வேண்டி பாக்கறீங்க. ஆனாலும் பொண்ணுங்க எல்லாம், எப்படித்தான் இப்படி மாறிடறீங்களோபோ...” சலிப்பாக சொல்வதுபோல் இருந்தாலும், அவளைக் கேலி செய்கிறான் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
“போடா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை” அவனிடம் மறுத்தாலும், தன்னவனுக்கென அவள் மனம் தவித்தது உண்மை தானே.
“இதை வேற ஏதாவது இளிச்ச வாயன் இருப்பான் அவன்கிட்டே சொல்லு, என்கிட்டே வேண்டாம். கல்யாணத்துக்கு முன்னாடி நீ பயந்ததென்ன? இப்போ உருகறது என்ன? ம்... ம்... நீ நடத்து” அவன் கேலியில் இறங்க, அவளுக்கு சற்று தவிப்பாக இருந்தது.
“போதும்டா... வாயை மூடு...” அடிக்குரலில் அவனை அடக்க முயன்றாள்.
“சந்தியா, நான் சீரியஸா கேக்கறேன், ஏதும் பிரச்சனை இல்லையே. எல்லாம் ஒகே தானே... இன்னும் அவரைப் பாத்து பயப்படறியா?” இப்பொழுது அவன் குரலில் இருந்த கேலி கரைந்து காணாமல் போயிருந்தது.
“ம்ஹும்... பயமெல்லாம் இல்லை, நாம நினைச்ச அளவுக்கு எல்லாம் அவர் கெட்டவர் இல்லை” சொன்னவளின் கண்களுக்குள், சந்திரன் காலில் விழுந்தது நினைவுக்கு வர, தேகம் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது.
ரகுவிடம் புன்னகை மாறாமல் அவள் பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரில் அமர்ந்து, அவள் முகத்தில் வந்துபோகும் பாவனைகளை எல்லாம் சந்திரன், பாராமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்கிட்டே எப்போ இவ இப்படி பேசுவா?’ என மனம் எதிர்பார்க்க, மறு மனதிலோ பொறாமை வழிந்தது. அவன் தங்களை கவனிப்பதை அவளும் கவனித்தாள்.