தவிப்பு - 11 :
மறுநாள் காலை...
கழுத்தில் அணிந்திருந்த டையை சரி செய்தபடி படியில் இறங்கி வந்த ரகுவீர் அங்கே சோபாவை துடைத்து கொண்டிருந்த வேலைக்காரனிடம் "அம்மு தூங்கிகிட்டு இருக்கா... அவ எழுந்ததும் சத்துமாவு கஞ்சி கொடுத்துடுங்க... இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு காபி, டீ கொடுக்காதீங்க... நான் எங்கேன்னு கேட்டா பிரேம் கூட ப்ராஜெக்ட் விஷயமா வெளிய போயிருக்கறதா சொல்லிடுங்க" என்றான்.
"சரிங்க ஐயா" என்று வேலைக்காரன் சொன்னதும் ரகுவீர் தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அதேநேரம் சங்கமித்ரா சந்தோஷமாக ஒரு பாடலை முணுமுணுத்தபடி வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். இருக்காதா பின்னே?
நேற்று அவள் முதலாளியே போன் செய்து ரகுவீர் மற்றும் ஆத்விக்கை புத்திசாலித்தனமாக சமாளித்து ஒரு பெண் பாடகரை தேர்ந்தெடுக்கச் செய்ததை பாராட்டினார்.
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே முதலாளியிடம் இருந்து பாராட்டு கிடைத்ததில் மேடம் கால்கள் தரையில் படாமல் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
தன் ஹாண்ட்பேகை எடுத்துக் கொண்டவள் செருப்பை மாட்டிக் கொண்டு "அம்மா நான் போயிட்டு வரேன்" என்று குரல் கொடுத்தபடி தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்தாள்.
சமையலறையில் அவளுக்காக தோசை சுட்டுக் கொண்டிருந்த அவள் அம்மா கஸ்தூரி "ஏய் சாப்பிட்டு போ" என்றபடி வெளியே வந்தார்.
"இல்லைம்மா... இன்னைக்கு என்ன சீக்கிரமே வர சொல்லி இருக்காங்க... பசிச்சா நான் ஹோட்டல்ல சாப்பிடுகிறேன்" என்றவள் ஸ்கூட்டியை கிளம்பினாள்.
அப்போதுதான் இன்று காலையில் காய்கறி வாங்க அவள் பர்ஸில் இருந்த ஐநூறு ரூபாயை எடுத்தது கஸ்தூரிக்கு நினைவிற்கு வந்தது. காய்கறி வாங்கிவிட்டு மீதி பணத்தை மீண்டும் அவள் பர்ஸில் வைக்க மறந்துவிட்டார்.
"ஏய் மித்ரா... நில்லு... காசு எடுத்துட்டு போ" என்று அவர் சொல்வதை கேட்க அவள் அங்கே இருந்தாள் தானே?
சங்கமித்ரா எப்போதோ தன் ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.
"ஐயோ பாவம் என் பொண்ணு... பசிச்சா சாப்பிட கூட அவகிட்ட பணம் இல்லையே" என்று அவர் கவலையுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த கண்ணம்மா "என்ன விஷயம் கஸ்தூரி? உன் முகம் ஏன் வாடிக் கிடக்கு?" என்று கேட்டார்.
கஸ்தூரி நடந்ததை அவரிடம் சொன்னார்.
"என்ன கஸ்தூரி... உனக்கு எப்போதும் இதே வேலையா போச்சு... அப்படி என்ன இந்த வயதில் உனக்கு மறதியோ? இத்தனை நாள் பரவாயில்லை... அவகிட்ட காசு இல்லைனு தெரிஞ்சா வீட்டுக்கு வந்து சாப்பிடுவா... ஆனா இப்போ வேலைக்கு போறா... வேலை முடிந்து தான் வீட்டுக்கு வர முடியும்... அதுவும் இப்போதான் புதிதாக வேலையில் சேர்ந்திருக்கா... யார்கிட்டயாவது பணம் கடன் கூட வாங்க முடியாது..." என்று தன் மருமகளை கடிந்து கொண்டவர் "போ... சீக்கிரம் அவளுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லு... இப்படி கவலைப்பட்டுக்கிட்டே இருந்தா எதுக்கும் பிரயோஜனமில்லை" என்றார்.
கஸ்தூரி உடனே தன் மகளுக்கு போன் செய்தார். ஆனால் அவள் போனை சைலெண்டில் போட்டு வைத்திருந்ததால் போனை எடுக்கவில்லை.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவர் அவள் போனை எடுக்காததால் "போனை எடுக்க மாட்றா அத்தை" என்று பாவமாக சொன்னார்.
"போனை சைலெண்ட்ல வச்சிருப்பாளா இருக்கும்... மிஸ்ட் கால் பார்த்துட்டு அவளே கூப்பிடுவா... அப்போ விஷயத்தை சொல்லிடு... இப்போ போய் வேலையை பாரு" என்று சொன்னார்.
மறுபுறம் காரில் சென்று கொண்டிருந்த போதே ரகுவீர் பிரேமிற்கு போன் செய்தான்.
அவன் போனை எடுத்ததும் "பிரேம் நான் உன் வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன்... ரெடியா இரு" என்றான்.
"மச்சான் நான் ஆல்ரெடி ரெடியாகி விஸ்வநாதன் அங்கிள் கூட அவர் ஆபிஸ் வந்துட்டேன்... நீ நேரா இங்க வந்துடு... இங்க இருந்து நாம எல்லாரும் சேர்ந்து போய்டலாம்" என்றான்.
"ஓகே" என்ற ரகுவீர் காரை விஸ்வநாதனின் அலுவலகத்தை நோக்கி செலுத்தினான்.
அவன் விஸ்வநாதனின் அலுவலகத்தை அடையவிருந்த போது அவனுக்கு போன் செய்த பிரேம் "மச்சான் நீ ஆபிஸ் போக வேண்டாம்... விஸ்வநாதன் அங்கிளுக்கு அர்ஜெண்டா ஒரு ஒர்க் வந்துடிச்சி... அதை முடிச்சிட்டு அப்படியே வந்து நம்மளோட வந்து ஜாயின் பண்ணிக்கறதா சொல்லிட்டாரு... நான் அவர் ஆபிஸ் பக்கத்துல இருக்க சரவண பவன்ல இருக்கேன்... நீயும் அங்க வந்துடு... சாப்பிட்டுட்டு போய்டலாம்" என்றான்.
"ப்ச்... இப்படினு தெரிந்திருந்தா நான் அம்மு எழுந்த பிறகு அவளோட சாப்பிட்டுட்டு வந்திருப்பேன்டா"
"சரி விடு... இப்படி நடக்கும்னு யாருக்கு தெரியும்? இன்னைக்கு நீ என்னோட தான் சாப்பிடணும்னு விதி இருக்கு... சீக்கிரம் வந்து சேரு" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
அடுத்த பத்து நிமிடத்தில் ரகுவீர் சரவண பவனில் இருந்தான். சங்கமித்ராவும் அதே ஹோட்டலில் தான் இருந்தாள். பொதுவாக அவள் இதுபோன்ற பெரிய ஹோட்டலுக்கு வர மாட்டாள். ஆனால் இன்று பசி அவள் வயிற்றை கிள்ளியது. அந்த ஏரியாவில் இருந்த அனைத்து ஹோட்டலுமே இதுபோன்ற பெரிய ஹோட்டல்கள் தான் என்பதால் வேறு வழியில்லாமல் அவள் அந்த ஹோட்டலுக்கு வந்தாள்.
வெயிட்டரிடம் ஒரு மசால் தோசையை ஆர்டர் செய்தவள் "இந்த சார் மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்பே அவசர வேலையா வெளிய கிளம்பறதை இன்போர்ம் பண்ணியிருந்தா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். இப்போ தொன்னூறு ரூபா வேஸ்ட்" என்று புலம்பினாள்.
இவளும் அதே ஹோட்டலில் இருப்பது பற்றி தெரியாமல் ரகுவீர் மற்றும் பிரேம் இருவரும் தங்கள் பிசினஸை பற்றி பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
தோசை வந்ததும் சாப்பிட்டு முடித்த சங்கமித்ரா பில்லுக்காக காத்திருந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.
"மச்சான் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்... நீ பில் பே பண்ணிடு" என்று ரகுவீரிடம் சொல்லிவிட்டு பிரேம் எழுந்து சென்றான்.
ரகுவீரும் தன்னுடைய பில்லுக்காக காத்திருந்தான்.
அப்போது சங்கமித்ராவிடம் வந்த வெயிட்டர் "மேடம் உங்க பில்" என்றார்.
பில்லை வாங்கி பார்த்த சங்கமித்ரா "என்னது நானூறு ரூபாயா? ஒரு மசால் தோசை நானூறு ரூபாயா? எப்போ அண்ணா உங்க ஹோட்டல்ல இவ்வளவு விலை ஏத்தினீங்க?" என்று கேட்டாள்.
"மசால் தோசை தொண்ணூறு ரூபாய் தான் மேடம்... ஒரு நிமிஷம் பில்லை கொடுங்க" என்றவர் அதை வாங்கி பார்த்தார்.
"சாரி மேடம்... பில் மாறி போச்சு... இந்தாங்க உங்க பில்... இது உங்களுக்கு பின்னாடி இருக்க டேபிள் பில்" என்றவர் அவள் பில்லை அவளிடம் கொடுத்துவிட்டு மற்றொரு பில்லை கொண்டு சென்று ரகுவீரிடம் கொடுத்தார்.
பில்லை பார்த்துவிட்டு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றிய சங்கமித்ரா தன் பர்ஸை திறந்து ஐநூறு ரூபாயை தேடினாள். ஆனால் அதில் பணம் இல்லை.
"ஐயோ கடவுளே இருந்த பசியில பர்ஸ்ல வச்ச பணம் இருக்கா இல்லையான்னு செக் பண்ண மறந்து சாப்பிட்டுவிட்டோமே... இப்போ என்ன பண்றது? எல்லாம் இந்த சுபத்ராவால தான்... இப்போ மட்டும் என் கையில சிக்கின சுபத்ரா... உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்று பல்லை கடித்தபடி நினைத்தவள் "ஐயோ இப்போ சுபத்ராவை திட்டி ஒன்னும் ஆகப் போறதில்லை... முதல்ல பில் செட்டில் பண்ற வழியை பார்க்கணும்" என்று முனகியவள் தன் பர்ஸில் இருந்த பத்து, இருபது நோட்டுகளை எண்ண ஆரம்பித்தாள்.
எல்லாம் சேர்த்து எழுபது ரூபாய் இருந்தது. மீதி இருபது ரூபாய்க்கு என்ன பண்றது என்று அவள் யோசிக்கும் போதே அவள் பர்ஸில் இருந்த சில்லறைகள் அவள் பார்வையில் விழுந்தது.
'பில் அமௌண்ட்டை சில்லறையா கொடுத்தா அந்த வெயிட்டர் என்ன பத்தி என்ன நினைப்பான்?' என்று அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனாலும் இப்போது அவளிடம் வேறு வழியில்லை.
எனவே அந்த சில்லறைகள் மற்றும் நோட்டுகளை அவள் பில் புக்கிற்குள் வைத்தாள். அவள் பணத்தை வைத்துவிட்டு எழுவதற்கும் அந்த வெயிட்டர் பில் புக்கை எடுப்பதற்கும் சரியாக இருந்தது.
அதில் சில்லறைகள் இருக்கும் என்பதை எதிர்பார்க்காத வெயிட்டர் அசால்ட்டாக அதை எடுத்ததால் அதில் இருந்த சில்லறைகள் அங்குமிங்கும் தெறித்து விழுந்தன.
அதை பார்த்து அந்த வெயிட்டர் திகைப்புடன் சங்கமித்ராவை பார்த்தார் என்றால் மற்ற அனைவரும் சிரித்தனர்.
"அட... இந்த பொண்ணு பில்லுக்கு சில்லறையை கொடுத்திருக்கா பாருங்களேன்"
"பணம் இல்லாம எதுக்காக இப்படிப்பட்ட பெரிய ஹோட்டலுக்கு வரணும்... ஏதாவது ரோட்டு கடையில சாப்பிட்டு இருக்கலாமே" என்று அங்கிருந்த இளைஞர் பட்டாளத்தை சேர்ந்தவர்கள் கிண்டலாக சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை கேட்ட சங்கமித்ராவிற்கு அப்படியே பூமிக்குள் புதைந்து விட்டாள் தேவலாம் என்று தோன்றியது.
அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த ரகுவீர் "ஷட் அப்" என்றான்.
சங்கமித்ரா அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்ததால் அவள் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை.
சிரிப்பவர்கள் அனைவரையும் கோபத்துடன் பார்த்தவன் "ஹலோ அந்த பொண்ணுகிட்ட அவ சாப்பிடத்துக்கான பணத்தை கொடுக்க சில்லறையாவது இருக்கு... சில பார் மாதிரி அவ ஒன்னும் பிரெண்ட்ஸ் பணத்துல சாப்பிடலையே... பர்ஸ்ட் உங்க முதுகுல இருக்க அழுக்கை பாருங்க... அதுக்கு பிறகு அடுத்தவங்களை பத்தி பேசலாம்" என்று அங்கிருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்தபடி சொன்னான்.
அவன் பேச்சை கேட்ட சங்கமித்ரா திரும்பி பார்த்தவள் அங்கு சத்தியமாக ரகுவீரை எதிர்பார்க்கவில்லை. ரகுவீரும் அவளை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவன் திகைத்து நின்றது ஒரு கணமே... அடுத்த நொடி அவன் அவளை கண்டுகொள்ளாமல் அவளை கடந்து சென்றான்.
அப்போது சங்கமித்ரா "தேங்க்ஸ்" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
"உன் தேங்க்ஸை நீயே வச்சிக்கோ... என்கிட்ட மட்டும் அந்த வாயடிக்கிற... இப்போ ஏன் அமைதியா இருந்த? எப்போதும் உனக்காக நீதான் சண்டையிடணும்... அது யார்கிட்டயா இருந்தாலும்... புரிஞ்சிதா?" என்று சிடுசிடுத்தவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
அதேநேரம் தூங்கி எழுந்து சாப்பிட்டு முடித்த அமிர்தாவிற்கு அப்போதுதான் தன் பர்ஸ் மிஸ்ஸானது தெரிந்தது.
'பர்ஸ் எங்க மிஸ் ஆச்சு' என்று அவள் யோசித்த போது தான் நேற்று ஆத்விக்கின் கையில் அதை பார்த்தது நினைவிற்கு வந்தது.
"ஐயோ கடவுளே... அந்த பர்ஸை ஆது திறந்து பார்த்துடக்கூடாதே" என்று பதற்றத்துடன் நினைத்தவள் உடனே ஆத்விக்கின் வீட்டை நோக்கி சென்றாள்.
மறுபுறம் விஸ்வநாதன் அனுப்பிய முகவரிக்கு பிரேம் மற்றும் ரகுவீர் சென்றனர்.