• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 14

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu

தவிப்பு - 14 :



சங்கமித்ரா தன் போனை உடைத்ததில் மிகுந்த கோபத்தில் இருந்த ரகுவீர் அவளை தரதரவென்று சமையலறையின் ஒரு ஓரமாக இருந்த ஸ்டோர் ரூமை நோக்கி இழுத்துச் சென்றான்.



அவன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபடி "ப்ளீஸ் சார்... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க... நான் வேணும்னே உங்க போனை உடைக்கல" என்று சங்கமித்ரா கெஞ்சலாக சொன்னாள்.



"நீ சொல்ற கதையையெல்லாம் நான் நம்புவேன்னு நினைக்கிறியா? என்ன என் போனை உடைத்து என்னை இரிடேட் பண்ணுனு அவன் சொல்லி அனுப்பினானா?"



"நீங்க என்ன சொல்றிங்க சார்? எனக்கு புரியல"



"உனக்கா புரியாது? எனக்கு உன்னைப் பார்த்தாலே பிடிக்கலைனு தெரிஞ்சதால தான நீ அவனை இன்சல்ட் பண்ணதை கூட மறந்துட்டு அவன் இப்போ உன்கூட ப்ரண்ட்லியா பழகறான்... நீயும் அவன்கூட ஈன்னு இளிச்சி இளிச்சி பேசிக்கிட்டு இருக்க... நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான என்னை இரிடேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... இன்னைக்கு நான் உனக்கு கொடுக்க போற தண்டனையில நீ இனி நான் இருக்க பக்கமே தலை வைத்து படுக்க மாட்ட" என்று உறுமியவன் அவளை ஸ்டோர் ரூமிற்குள் விட்டு கதவை சாத்தினான்.



"ஐயோ சார்... என்ன பண்றிங்க... கதவை திறங்க..." என்று கதவை தட்டியபடி சங்கமித்ரா கத்தினாள்.



"இன்னைக்கு நாங்க கிளம்பற வரைக்கும் இங்கேயே கிட... உன் முகத்தை பார்த்தா எனக்கு எரிச்சல் தான் வருது... மியூசிக் வரமாட்டேங்கிது"



ரகுவீர் அதை சொல்லிக் கொண்டிருந்த போது இதுநேரம் வரை சமையலறை வாசலில் இருந்து அவர்கள் சண்டையை ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆத்விக் 'ஒஹ்... அவளை பார்த்தா உனக்கு எரிச்சலா இருக்கா... அப்போ இன்னைக்கு முழுக்க எரிச்சலோடவே இரு' என்று முணுமுணுத்தவன் சத்தமின்றி கதவை சாத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியே சென்று காரை எடுத்தான்.



'இன்னைக்கு காலையில என்னையும் உன் தங்கச்சியையும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வச்ச இல்ல... இப்போ உன் டர்ன்" என்று முனகியவன் விசிலடித்தபடி காரை தன் கம்பெனியை நோக்கி செலுத்தினான்.



இதை அறியாமல் சங்கமித்ராவை ஸ்டோர் ரூமில் அடைத்துவிட்டு சமையலறை வாசலை நோக்கி வந்த ரகுவீர் கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து ஒருகணம் அதிர்ச்சியடைந்தான்.



'நிச்சயம் இது அவனோட வேலையா தான் இருக்கும்' என்று சரியாக கணித்த ரகுவீர் "பிரேம்... டேய் பிரேம்... கதவை திற" என்று கத்தியபடி கதவை தட்டினான்.



ஆனால் பிரேம் கதவை திறக்கவில்லை. பதிலும் அளிக்கவில்லை. சிறிது நேரம் கதவை தட்டியவன் ஆத்விக்கை அழைக்க மனமில்லாமல் சோர்ந்து போய் கதவின் மீது சாய்ந்தபடி இப்போது என்ன செய்வது என்று யோசித்தான்.



அதேநேரம் சங்கமித்ரா தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.



அதில் எரிச்சலடைந்தவன் வேகமாக சென்று ஸ்டோர் ரூம் கதவை திறந்துவிட்டான்.



அவன் கதவை திறந்ததும் வெளியே வந்த சங்கமித்ரா "ஏன் சார் கொஞ்சமாவது படிச்சவர் மாதிரி நடந்துக்கறீங்களா? உங்க போனை நான் உடைச்சதாகவே இருக்கட்டும்... அதுக்காக இப்படியெல்லாமா பண்ணுவீங்க? நேத்து நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணதால நமக்குள்ள இருக்க பிரச்சனைகளை மறந்துட்டு உங்ககூட நல்லபடியா பழகலாம்னு நினைத்தேன். ஆனா இப்போதான் நீங்க எப்படிப்பட்டவர்னு எனக்கு தெரியுது. இனி எதுக்காகவும் நீங்க இருக்க திசை பக்கமே வரமாட்டேன்.



என்று கோபத்தில் பொரிந்து தள்ளியவள் கதவை நோக்கிச் சென்றாள்.



கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்தவள் அதை திறக்க முயன்றாள். ஆனால் கதவு திறக்கவில்லை. அவள் திரும்பி ரகுவீரை பார்த்தாள்.



தோள்களை அலட்சியமாக குலுக்கியவன் "எல்லாம் உன் பிரெண்டோட வேலைனு தான் தோணுது" என்றான்.



அவள் எதுவும் பேசாமல் "ஆத்விக்... ஆத்விக்... கதவை திற" என்று கத்தினாள்.



ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.



அவள் தொடர்ந்து கதவை தட்டுவதை பார்த்த ரகுவீர் "நீ கத்தறது வேஸ்ட்... அவன் வேணும்னே தான் இப்படி பண்ணியிருக்கான்... சோ கதவை திறக்க மாட்டான்" என்றான்.



கதவை தட்டுவதை நிறுத்திவிட்டு "நீங்க சொல்றது உண்மையா இருந்தா கூட இந்நேரம் பிரேம் சார் வந்து கதவை திறந்திருக்கணுமே" என்று யோசனையுடன் சொன்னாள்.



"ஆமா... ஆனா அவன் இங்க இருக்கற மாதிரி தெரியல"



"இப்போ என்ன பண்றது? வேணும்னா போன் பண்ணி பாருங்களேன்" என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு தன் நாக்கை கடித்தாள்.



"அதை தான் உடைச்சி வச்சிட்டியே... அப்புறம் எப்படி போன் பண்றது?" என்று அவன் எரிச்சலுடன் கேட்டான்.



அவள் வாயை திறக்கவில்லை. சிறிது நேரம் அந்த இடத்தில் அமைதி நிலவியது.



பின்னர் அவனே "உன்கிட்ட போன் இருக்குல்ல... நீ பிரேம்கு போன் பண்ணேன்" என்றான்.



"என் போன் ரிகசெல் ரூம்ல இருக்கு"



"அப்போ வேற வழியில்ல... பிரேம் நம்மை காணோம்னு தேடி வந்தா தான் உண்டு" என்றவன் அருகே இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.



அப்படியே அரைமணி நேரம் கழிந்தது. இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.



'சே... இப்படியே எவ்வளவு நேரம் அமைதியா இருக்கறது... அவன் திட்டினாலும் பரவாயில்ல... பேச வேண்டியதுதான்' என்று நினைத்தவள் "ஆனா ஒன்னுப்பா... இப்போல்லாம் செய்யற தப்புக்கு கடவுள் உடனே தண்டனை கொடுத்துடறாரு" என்று சத்தமாக சொன்னாள்.



அவள் குரல் கேட்டு கண்ணை திறந்த ரகுவீர் அவளை யோசனையுடன் பார்த்தான்.



'என்ன சொல்றா இவ... ஒருவேளை என்னை பத்தி தான் மறைமுகமா சொல்றாளோ' என்று அவன் நினைக்கும் போதே அவன் கண்களில் இருந்த கேள்வியை புரிந்து கொண்டவள் "அதான் சார்... நீங்க என்னை ஒரு ரூம்ல அடைச்சு வைக்க நினைச்சீங்க... ஆனா பாருங்க இப்போ நீங்களே ஒரு ரூம்ல அடைந்து கிடைக்கற மாதிரி ஆகிடிச்சு... இப்போல்லாம் கடவுள் உடனுக்குடனே தண்டனை கொடுத்துடறார் இல்ல சார்" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னாள்.



அவள் தன்னை கிண்டல் செய்கிறாள் என்று புரிந்த ரகுவீர் "நீ சொல்றது உண்மைதான். நிஜமாவே இது மிகப்பெரிய தண்டனை தான். ஆனா இந்த ரூம்ல அடைந்து கிடைக்கறது இல்ல... உன்னோட இருக்கறதுதான்" என்று நக்கலாக சொன்னான்.



"அதுசரி... இப்படி ஒரு அழகான பொண்ணு கூட ஒரே ரூம்ல அடைந்து கிடக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா?"



"ஆமா... நீ பெரிய உலக அழகி... உன் அழகை நீதான் மெச்சிக்கணும்... உண்மையான அழகுன்றது வெளித்தோற்றம் கிடையாது...." என்று ரகுவீர் சொன்னதும் அவள் அவனை திகைப்புடன் பார்த்தாள்.



"எதுக்காக இப்போ முட்டை கண்ணை விரிச்சி என்னை முழுங்க போற மாதிரி பார்க்கிற?"



"இல்லை சார்... நீங்களா இப்படி பேசறீங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு... நேத்து கூட ஹோட்டல்ல என்னை பார்த்து சிரித்த எல்லாருக்கும் செருப்படி கொடுக்கற மாதிரி பேசினீங்க... இவ்வளவு நல்ல சிந்தனைகளோட இருக்க நீங்க ஏன் என்கிட்ட மட்டும் எப்போதும் கோவமா, வெறுப்பா பேசறீங்க?"



"இதுக்கு நான் பதில் சொல்வேன்னு உனக்கு தோணுதா?"



"நீங்க என்னை ஒரு ஆளா மதித்து பதில் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்... என் மனசுல இருந்த ஒரு கேள்வியை நான் உங்ககிட்ட கேட்டுட்டேன்... ஆனா உங்க பதிலை எல்லாம் எதிர்பார்க்கல"



"அப்போ உனக்கு பதில் தெரிய வேண்டாம். அப்படித்தானே?"



"பதில் தெரிஞ்சுக்க வேண்டாம்னா நான் கேள்வியே கேட்டிருக்கமாட்டேன் சார்... ஆனா உங்களுக்கு விருப்பமில்லைனா கட்டாயப்படுத்தி தெரிஞ்சிக்க விரும்பல"



ஒருவேளை சங்கமித்ரா அவனிடம் பதிலை தெரிந்துக்கொண்டே ஆக வேண்டும் என்று ஆர்வம் காட்டியிருந்தால் சொல்லியிருக்க மாட்டானோ என்னவோ? ஆனால் இப்போது சொல்ல தோன்றியது.



"நம்மோட பர்ஸ்ட் மீட்டிங் உனக்கு நியாபகமிருக்கா? அன்னைக்கு நீ எப்படி பேசின? அதான் எனக்கு உன்மேல கோபம்... அதுக்குப் பிறகும் நாம சந்திச்சிக்கிட்ட எல்லா சந்தர்ப்பமும் நமக்குள்ள சண்டை தான். சோ நான் உன்மேல கோபமா இருக்கறது நேச்சர் தானே?"



"நீங்க சொல்றதெல்லாம் சாதாரண ஆளுங்களுக்கு வேணா சரிவரும்... ஆனா நீங்க ரொம்ப மெச்சூர்டா திங்க் பண்றிங்க... அந்த டைம்ல கோபம் வந்தாலும் அதுக்குப் பிறகு யோசிச்சு பார்த்திருந்தா என்மேல தப்பில்லைனு உங்களுக்கே புரிந்திருக்குமே?" என்று அவள் தலையை சாய்த்தபடி கேட்டாள்.



அவள் சொல்வது உண்மைதான். பிரேம் எடுத்துச் சொன்ன அன்றே அவள்மீது தவறில்லை என்று அவனுக்கு புரிந்துவிட்டது.



"என்னோட கெஸ் என்னன்னா நமக்குள்ள நடந்த சண்டையெல்லாம் நீங்க என்மேல இப்போ கோபப்பட காரணம் இல்ல... நான் ஆத்விக் கூட க்ளோஸ்ஸா பேசறதால தான் நீங்க என்னை எதிரியா பார்க்கறீங்க... எதிரிக்கு எதிரி நண்பன்ற மாதிரி... எதிரியின் நண்பன் நமக்கு எதிரின்னு நினைக்கிறீங்க... அப்படித்தானே"



அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.



"உங்க அமைதியே அதுதான் உண்மைன்னு சொல்லாம சொல்லுது... சார் இப்போ நாம ஒரு டீல் போட்டுக்கலாம்... இதுக்கு முன்ன நமக்குள்ள நடந்த சண்டை, நான் உங்களை திட்டினது... நீங்க என்னை திட்டினது எல்லாத்தையும் மறந்துட்டு நாம ப்ரெண்ட்ஸா இருக்கலாமா?" என்று கேட்டவள் அவன் அருகே வந்து கையை நீட்டினாள்.



ரகுவீர் கையை கொடுக்காமல் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.



"அட சும்மா கையை கொடுங்க சார்" என்றவள் இதுநேரம் வரை அவன் நன்றாக பேசிய தைரியத்தில் தானாகவே அவன் கையை பற்றி குலுக்கினாள்.



அவள் செய்கையில் கோபப்படுவதற்கு பதிலாக அவளை பார்த்து சிரித்த ரகுவீர் "ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான்... என் கையை பிடிச்சு குலுக்கிறியே நான் பளார்னு உன் கன்னத்துல ஒன்னு விட்டா என்ன பண்ணுவ?" என்று கேட்டான்.



"இன்னொரு கன்னத்தையெல்லாம் காட்ட மாட்டேன் சார்... உங்களை திருப்பி அடிக்க முடியலைனாலும் கடிச்சி வச்சிடுவேன்" என்று அவள் சிரித்தபடி சொன்னாள்.



அவள் சொன்னதை கேட்ட ரகுவீர் வாய்விட்டு சிரித்தான். அவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது. அரைமணி நேரம் முன்புவரை யாரை பார்த்தால் டென்ஷன் ஆனானோ இப்போது அவள் பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறான்.



அவன் சிரிப்பை ரசித்து பார்த்தவள் "நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கீங்க சார்... இனி அடிக்கடி சிரிங்க" என்றாள்.



"அப்போ சிரிக்காத போது பார்க்க அசிங்கமா இருக்கேனா?"



"அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணுமா?' என்று அவள் சொன்னதும் அவன் அவளை அடிப்பது போல கையை ஓங்கினான்.



அவனிடமிருந்து விலகி நின்றவள் "இங்க பாருங்க... நீங்க என்னை அடிச்சாலும் இந்த சங்கமித்ரா வாயில இருந்து எப்போதும் பொய் வராது பாத்துக்கோங்க" என்றாள்.



"சரியான வாய் உனக்கு... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் அம்மு கூட உன்னை மாதிரிதான் பேசிக்கிட்டே இருப்பா... ஆனா இப்போல்லாம் பேச்சே குறைந்து போச்சு..." என்று சிரிப்புடன் ஆரம்பித்தவன் மெல்லிய குரலில் முடித்தான்.



பின்னர் ஏதும் பேச விரும்பாதவனை போல கண்களை மூடிக்கொண்டான். அவன் தொண்டைக் குழி ஏறி இறங்குவதை பார்க்கும் போது அவன் எதையோ தனக்குள்ளேயே விழுங்குகிறானோ என்று தோன்றியது. எனவே சங்கமித்ரா அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியானாள்.
 

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
ஆத்விக், ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சும்மாவா சொன்னாங்க. இவனுக்கு இதுவும் வேணும். இதுக்கு மேலும்..

நல்லா திட்டிட்டு இப்ப ஈன்னு ... இழிக்கிறான் பாரு. கூடிய சீக்கிரம் அவகிட்டே விழுந்துருவான்.
 

kkp29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2023
36
12
8
Tamilnadu
ஆத்விக், ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சும்மாவா சொன்னாங்க. இவனுக்கு இதுவும் வேணும். இதுக்கு மேலும்..

நல்லா திட்டிட்டு இப்ப ஈன்னு ... இழிக்கிறான் பாரு. கூடிய சீக்கிரம் அவகிட்டே விழுந்துருவான்.
sirichathu oru kuthamaa sis...