• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 12

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி..! - 12

மறுநாள் காலையில்..

கீர்த்திவாசனின் அறை கதவு, தட்டப்படும், "உள்ளே வரலாம் " என்று குரல் கொடுக்க, நித்யமூர்த்தி உள்ளே வந்தார்.

"அட, மாமா நீங்களா? இதென்ன புது பழக்கம்? ஒரு வார்த்தை சொல்லி விட்டிருந்தா நானே வந்துருப்பேனே? என்றவனின் பேச்சில் குறுக்கிட்டார்.

" இது கால காலமாக இருக்கிறது தான் மாப்பிள்ளே.. நீங்க என் மருமகன் ஆகிட்டா, நான் அந்த மரியாதையை தரணும்தானே தம்பி..? என்றவரின் பேச்சில் குறுக்கிட்டான்..

"மாமா என்ன இது புதுசாக மரியாதை எல்லாம்.. மருமகனாகிட்டாலும் நான் எப்பவும் உங்களுக்கு கீர்த்திதான்.. அதனால ஒருமையில் கூப்பிட்டு பேசுங்க மாமா, என்று கடிந்துகொள்ள

"சரி ,சரி அது பத்தி எல்லாம் அப்புறமா பேசுவோம் தம்பி.., நான் பேச வந்த விஷயத்தை பேசிடுறேன், ஜவுளி, தாலி எல்லாம் வாங்கணும். நம்ம டாக்டர் சம்சாரம், இதெல்லாம் நல்லா பார்த்து வாங்குவாங்கனு டாக்டர் சொன்னார்.. நீங்க என்ன சொல்றீங்க? அதுக்கு முன்னாடி இந்த விசயத்தை உங்க அக்காமார்கள்கிட்டே சொல்லியாகணும்.. அதை எப்போ செய்யப் போறீங்க? அவங்க உங்களுக்காக இரண்டு பெண்களை பார்த்து இருக்காங்களாம் நேற்று சொன்னாங்க... நான் உங்க கல்யாண விஷயத்தை அவங்ககிட்ட சொல்லலை.." என்று நிறுத்தினார்..

கீர்த்திவாசன் அவரை கூர்ந்து பார்த்துவிட்டு, " அதுக்காக தான் மாமா இப்போ மாடியில் இருக்கிற கூடத்துக்கு எல்லோரையும் வரச் சொல்லி இருக்கிறேன்.. உங்களையும் கூட்டிட்டு வந்து பேசணும்னு தான் கிளம்பிட்டு இருந்தேன்.."

"நான் எதுக்கு தம்பி? அவங்க ஃப்ரீயாக பேச மாட்டாங்க.. எனக்கும் தர்மசங்கடமாக இருக்கும்.." என்று தயங்கினார்.

"மாமா நீங்களும் இந்த வீட்டுல ஒருத்தர் தான் அதை எப்பவும் மறக்காதீங்க.. சொல்லப்போனா இரண்டு வீட்டு சார்பில எல்லாம் நீங்கதான் செய்தாகணும்.. நல்ல வேளை அக்காமார் பொண்ணு பார்த்திருக்கிற விசயத்தை முதல்லயே சொல்லிட்டீங்க, இனிமே நான் பார்த்துக்கிறேன்.. வாங்க ரொம்ப நேரம் காக்க வைக்கக்கூடாது.. என்றபடியே

மாடியில் இருந்த கூடத்தில் அனைவருக்கும் இருக்கை போடப்பட்டு இருக்க, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். யாரோடும் யாரும் பேசக் காணோம். அவரவர் கைப்பேசியில் மூழ்கியிருந்தனர்.

"ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன் போல.. சாரி.. ஒரு முக்கியமான விஷயத்தை உங்க எல்லாருக்கும் சொல்லணும்னு தான் இந்த மீட்டிங். இது உங்க எல்லோருக்கும் சந்தோஷமான விஷயமும்கூட.. அது என்னன்னா, அம்மாவோட ஆசைப்படி நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்.. அதுவும் அம்மா பார்த்து வச்சிருக்கிற பெண்ணையே கட்டிக்கிறதா முடிவும் பண்ணிட்டேன். வீட்டுக்கு பெரியவர் மூர்த்தி மாமா.. அவர்கூட சேர்ந்து நீங்க எல்லோருமாக இந்த கல்யாணத்தை சிறப்பா நடத்திக் கொடுப்பீங்கனு நம்புறேன்.. என்று அவர்கள் குறுக்கிட்டு பேச இடம் கொடாமல் சொல்லி முடித்து நிறுத்தினான்.

அக்காக்களின் கணவர்களும், பிள்ளைகளும், உற்சாக குரலில் "வாழ்த்துகள், வாழ்த்துக்கள் என்று ஆளாளுக்கு வாழ்த்த, சகோதரிகள் இருவரும் சிலகணங்கள் பிரம்மை பிடித்தார்போல அமர்ந்திருந்தனர். அதன் பின் ஒருவாறு சுதாரித்துக் கொண்டனர்.

"ஏன் தம்பி நாங்க வர்றதுக்குள்ள நீயா எப்படி முடிவு செய்யலாம்" _ ஈஸ்வரி கோபம் போல அல்லாமல் சலுகையாய் கேட்பது போல கேட்டாள்

"அதானே உனக்கு பெரியவங்க நாங்க இரண்டுபேரும் இருக்கிறோம். உன்னோட மாமாக்கள் இருக்காங்க, எங்களையும் கலந்துகிட்டு அப்புறமா தானே நீ முடிவு செய்திருக்கணும்.. பெண்ணை நாங்க பார்க்கணும். எங்களுக்கும் அவளை பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தை கேட்கணும்னு உனக்கு
தோனலையா? என்றாள் சங்கரியும் அதே போல....

"கீர்த்திவாசனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.. "என்ன அக்காமாரே இப்படி கேட்டுட்டீங்க? உங்க விருப்பத்துக்கு மாறாக நான் நடந்துப்பேனா? எனக்கு கல்யாணம்னா நீங்க பெண்ணுங்களை க்யூவில நிறுத்திட மாட்டீங்களா? ஆனால் இப்ப அதுக்கெல்லாம் அவசியமும் இல்லை.. அவகாசமும் இல்லை. உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச பெண் தான். உங்களுக்கு அவளை பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதுனால தான், நேற்று அம்மா கேட்டதும் நான் சம்மதம் சொல்லிட்டேன்.. "

"மாமா எதுக்கு இன்னும் சஸ்பென்ஸா பேசுறீங்க, யார் அந்த பொண்ணுனு சொல்லுங்க," என்றாள் ராகவி ..

"நம்ம நித்யமூர்த்தி மாமாவின் மகள் அம்பரி தான். அவளைத்தான் உங்க எல்லோருக்கும் தெரியுமே.. நான் சொன்னது போல எல்லாருக்கும் அவளை பிடிக்கும் தானே? என்று அவன் சற்று நிறுத்தவும், "ஹே .. சூப்பர் என்று இரண்டு ஆண்களும் கைதட்ட, அவர்களது மக்களும் அதில் கலந்து கொண்டனர். தமக்கைகள் இருவரும் ஒப்புக்கு புன்னகைக்க, தொடர்ந்து, கீர்த்திவாசன் பேசினான்,

"அது மட்டுமில்லை, ஏற்கனவே அவளை கட்டிக்க சொல்லி அம்மா கேட்டப்போ நான் மறுத்துட்டேன். அதுக்கு காரணம் உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்ப அவளை நேரில் பார்த்ததும் பிடிச்சது, அதோட அவளுக்கு அம்மா மேல தனி பிரியம் உண்டு.. நேற்று அவள் வந்த பிறகு தான் அம்மாவோட நிலைமை கொஞ்சம் சீரானதா டாக்டர் அங்கிள் சொன்னார். என்னோட முடிவுக்கு இதுவும் ஒரு காரணம். அம்மாவுக்கு எந்த அதிர்ச்சியான விஷயத்தையும் தரக்கூடாதுன்னு அங்கிள் சொல்லியிருக்கிறார். அதை எல்லோரும் கவனத்தை வச்சு நடக்கிறது நல்லது.. என்று முடிக்கவும்.

"நல்வாழ்த்துகள் என்று மாமன்களும்,
"கங்கிராட்ஸ் மாம்ஸ் "என்று மருமகப்பிள்ளைகளும் வாழ்த்த.. ஊடே நல்ல விஷயமாக தம்பி, எங்களுக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்.. என்று கலகலப்பாக சற்று நேரம் அந்த இடம் கலகலத்தது.

ஈஸ்வரியும் சங்கரியும், தாங்கள் எதிர்பார்த்தது போலவே, தம்பிக்கு அம்பரியை மாமன் தான் வஞ்சகமாக கட்டி வைக்க நினைப்பதாக உள்ளுர எண்ணிக் கொண்டனர். ஆயினும்,
இப்போது அவர்கள் இருவர் மட்டுமாக எதிர்மறையாக ஏதும் பேசி வைத்தால், அது தாயின் உடல்நலத்தை பாதிக்கும், அப்படி ஏதும் நடந்தால் தம்பியின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்று அவனது பேச்சு உணர்த்தியிருந்தது ஆகவே தங்கள் ஆதங்கத்தை மறைத்து புன்னகை பூசிக் கொண்டனர்.

"வெயிட், வெயிட், கல்யாணம் வர்ற வியாழக்கிழமை காலையில் என்று ஐயர் குறிச்சு கொடுத்திருக்கார். அதுவும் அம்மா சீக்கிரமாக என்னை கல்யாண கோலத்தில் பார்க்கணும்னு சொன்னதால தான். அதனால இப்பவே எல்லோரும் கிளம்புங்க, இன்னிக்கு கல்யாணத்துக்கு தேவையான ஷாப்பிங் பண்ணிட்டு வந்துடுங்க," என்று தன் கார்டு ஒன்றை எடுத்து ஜெயந்தனிடம், கொடுத்தான் கீர்த்திவாசன்.

"வேண்டாம் கீர்த்தி, நாங்களே அதெல்லாம் வாங்கிக்கிறோம்" என்று கார்டை வாங்க மறுத்த சுகந்தன், தொடர்ந்து,"நீ எங்களுக்கு ஒரே மச்சினன். அதனால எங்களுக்கும் ஏதும் கல்யாண வேலை இருந்தா சொல்லு
செய்றோம்.. நீயும் மாமாவும் எப்படி சமாளிப்பீங்க? "

" அக்காக்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும், தம்பியோட கல்யாணத்துக்கு துணிமணி எடுத்து கொடுக்கிறது சம்பிரதாயம் தானே? அதனால மறுக்காம வாங்கிக்கோங்க, என்றுவிட்டு, "கல்யாண வேலைகள் டென்ஷன் உங்க யாருக்கும் வேண்டாம்.. அதை நாங்களே பார்த்துக்கிறோம்.. டாக்டர் ஆன்ட்டி உதவி செய்வாங்க, தப்பா எடுத்துக்காதீங்க, இங்கே எல்லாமும் அவங்களுக்கு தான் நல்லா தெரியும்..
பந்தல் அலங்காரத்தில் இருந்து, சாப்பாடு தாம்பூலம் வரை அவங்க பொறுப்புனு ஏற்கனவே சொல்லிட்டாங்க... நீங்க ஜாலியா போய் ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க.. அது போதும்..என்றதும் சகோதரிகள் இருவரும் இருக்க,மற்றவர்கள் தங்கள் அறைகளை நோக்கி சென்றுவிட்டனர்.

கீர்த்திவாசன் கேள்வியாக அவர்களை நோக்க,

"அது வந்து தம்பி, உனக்கும், அம்பரிக்கும் டிரஸ், அப்புறம் தாலி எல்லாம் வாங்கணும் கீர்த்தி.. அதனால அம்பரியை எங்ககூட அழைச்சிட்டு போய், அதை எல்லாம் நாங்களே வாங்கிடுறோம்.. " என்றாள் சங்கரி..

நித்யமூர்த்திக்கு திக்கென்று இருந்தது. மகள் சும்மாவே அலைப்புறுதலுடன் இருக்கிறாள்.. இவர்களோடு சென்றால், பேசிப்பேசியே அவளது மனதை கலைத்து விடுவார்கள்.. கீர்த்தியிடம் இதை எப்படி சொல்வது என்று அவர் தவித்தார்.

"நான்தான் சொன்னேனே அக்கா, உங்களுக்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம் என்று.. எல்லாம் நானும் மாமாவும் பார்த்துக்கிறோம்.. நான் கனகுகிட்ட சொல்லிட்டேன்.. வணடி ரெடியா இருக்கு, நீங்க எல்லோரும் கிளம்புங்க, சுப்பம்மாக்கு கல்யாண வேலை நிறைய இருக்கு, அதனால இன்னிக்கு வெளியே சாப்பிட்டுககோங்க, என்றதும் மேலே பேசாமல் அவர்கள் சென்றுவிட..

"நேற்று என்னாச்சு மாமா? நானும் அப்பதிருந்து கவனிச்சிட்டு இருக்கிறேன்.. நீங்க நார்மலாக இல்லையே.. ?என்றான்.

நித்யமூர்த்திக்கு , அவனது இந்த குணம் ரொம்ப பிடித்தமான ஒன்று.. எந்த வேலையில் இருந்தாலும் உடன் இருப்பவர்களை கவனிப்பது..

"அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை கீர்த்தி. அம்பரியை அக்காங்களுக்கு பிடிக்கலையோனு தோனுச்சு.. அதான்.. "

"ஆமா மாமா.. நீங்க சொல்றது சரிதான். அவங்க பார்த்த பெண்ணை நான் கட்டிக்கப் போறது இல்லைனு கோபம்.. ஏன் அதைப்பற்றி பேசக்கூட நான் விடவில்லையே.. அதுவும் கூட காரணமா இருக்கலாம்.. இதை எல்லாம் நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க மாமா. அவங்களை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும்.. நான் பார்த்துக்கிறேன். உங்க பெண்ணோட கல்யாணம் நடக்கப் போகுது . அந்த சந்தோஷத்தோட வேலையை பாருங்க..நான் அம்பரியை கூட்டிப்போய் டாக்டர் வீட்டுல விட்டுட்டு, மற்ற விஷயத்தையும் பேசிட்டு வந்துடுறேன்.. என்றுவிட்டு படியிறங்கி செல்ல..

ஈஸ்வரி, சங்கரி இருவருமாக அவர்களது சம்பாஷணையை கேட்டுவிட்டு கண்ணில் கனலுடன் நகர்ந்தனர்..

அவர்களை பார்த்துவிட்ட நித்யமூர்த்தி, கவலை மனதை பிசைய, கலவரத்துடன் நின்றுவிட்டார்.

சகோதரிகளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?? காத்திருங்கள்..
 

Attachments

  • eiR40R956058.jpg
    eiR40R956058.jpg
    51.4 KB · Views: 22
Top