• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 15

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி..! - 15

கீர்த்திவாசன் ஸ்தம்பித்து நின்றது ஒரு கணம்தான்.. உடனடியாக சுதாரித்துக் கொண்டான். கீழ்க்கண்ணால் அம்பரியை பார்த்தான். கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள்.

"அம்பரி, நான் முன்னாடி தப்பானவனாக இருந்தது உண்மை. அதை நான் ஏற்கனவே ஒத்துக்கவும் செய்தேன். ஆனால் அதற்காக ஒரு பெண்ணின் வாழ்வோடு விளையாடும் அளவிற்கு நான் மட்டமானவன் கிடையாது. எதையும் தீர ஆராயாமல் முடிவு செய்யக்கூடாது" என்றான் அழுத்தமான குரலில்.

அம்பரிக்கும் கூட அந்த பெண்ணின் பேச்சை நம்புவதா வேண்டாமா என்று மனது டைலாமாவில் தான் இருந்தது.. அவன் சொன்னதைக் கேட்டதும், மனது சற்று ஆசுவாசமானது. அதற்குள் தொடர்ந்து அவனே பேசினான்..

"அத்தோடு தெரியாத ஊரில், இந்த நேரத்துல குழந்தையோட அவள் எங்கே செல்வாள்? அதனால் அவளை இன்று இரவு இங்கே தங்க வைக்கலாம். வேறு வழி இல்லை. நீ என்ன சொல்கிறாய்?என்றான்.

"வேறு என்ன செய்வது? இரவு தங்கியிருக்கட்டும், காலையில் அவளை அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் அத்தைக்கு பதில் சொல்ல முடியாது.. அவங்களைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே, எதையும் சட்னு கிரகிச்சிடுவாங்க "

"ஆமா, ஆமா,சரி, நான் பேசுகிறேன், என்றபோது,

பூங்கொத்து போல அழகான பெண் குழந்தை, சுமார் 3வயதுக்குள் தான் இருக்கும். மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவாறு பிரின்ஸி உள்ளே வர, அவள் பின்னோடு அவளது உடமைகளை எடுத்து வந்து வைத்துவிட்டுப் போனான் காரோட்டி!

பிரின்ஸி ஏதோ பேச வாயெடுத்தாள், அவளை கையமர்த்தி," நீ இப்ப எதுவும் பேச வேண்டாம். ரொம்ப தூரம் பயணம் செய்து களைத்து போயிருப்ப, அதனால போய் ஓய்வு எடுத்துக்கொள். உனக்கான அறையை காட்டச் சொல்றேன், என்றவன் அங்கிருந்த இன்டர்காமில், பணியாளை விளித்தான். அவன் வருவதற்குள்,

"குழந்தைக்கு இரவில் பால் தேவைப்படும்னா சொல்லுங்க, பிளாஸ்க்கில் கொண்டு வைக்க சொல்றேன் என்றாள் அம்பரி வீட்டுப் பெண்ணாக..

"வெந்நீர் மட்டும் கொடுத்தால் போதும்.. நான் சமாளித்துக் கொள்வேன். எனக்கு குளிக்க வேண்டும் கீசர் இருக்கா? என்றாள் ஏளனமாக..

அம்பரி பதில் சொல்லும் முன்பாக, பொன்னன் வந்துவிட, அவனிடமே தேவைகளை சொல்லி, உடன் பிரான்ஸியை அனுப்பி வைத்தாள் அம்பரி.

பின் இருவரும் மேலே சென்றனர். அவனது சகோதரிகளிடம் என்ன சொன்னானோ, அவர்கள் இருவரையும் சாப்பிட்டு போய் தூங்குமாறு பணித்துவிட்டு, அங்கிருந்த இதர வேலைகளை பணியாட்கள் வைத்து கவனிக்க தொடங்கினர்.
💜🖤💜
முதல் மாடியில் இருந்த ஒரு அறைக்கு அவளை அழைத்துப் போனான்.

கீர்த்திவாசன் அறையின் கதவை திறந்து உள்ளே செல்ல, அவளும் மெதுவாக உள்ளே நுழைந்தாள்.. சின்னதாக லிவிங்ரூம் அமைப்பு, அதில் இருக்க வேண்டிய பொருட்கள் அத்தனையும் அங்கே இருந்தது.. அடுத்து கண்ணாடியால் சுவர் எழுப்பிய அறைக்குள் மாஸ்டர் பெட்ரூம், மூன்று புறமும் கனமான திரைகள் போடப்பட்டிருந்தது. அடுத்து குளியல் மற்றும் உடைமாற்றும் அறை, அதை ஒட்டி, சிட்டவுட் கம் பால்கனி, அது ஸ்டார் ஹோட்டல் அறையை நினைவு படுத்தியது..

"நேற்று வரை என்னுடைய அறையாக இருந்தது இன்றிலிருந்து இது நம்ம அறை" என்றான் கீர்த்திவாசன்.

அம்பரி அன்றுவரை கீர்த்திவாசன் காரணமாக மாடிப்பக்கம் வந்தது இல்லை.. இப்படி ஒருநாள் அவள் இங்கே வரக்கூடும் என்றும் நினைத்தது இல்லை. இவனோடு ஒரே அறையில் இரவுகளில் மட்டும் என்றாலும் தங்க வேண்டுமே என்று உள்ளூர சங்கடமாக உணர்ந்தாள்.. மனைவியாக நடிக்க ஒப்புக்கொண்டாயிற்று .. அதில் இதுவும் ஒரு அங்கம். அத்தைக்காக இது போன்ற சிறு சங்கடங்களை கடந்து தான் ஆக வேண்டும்.. என்று அவள் தன்னில் மூழ்கி இருக்க,

அவனோ, அவளை விளித்து, எது எங்கே இருக்கும் என்று காட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.. அரைக்கவனாமாக கேட்டிருந்தாள். அவளுக்கு எதுவும் மனதில் ஒன்றவில்லை.

கீர்த்திவாசன் அவளது கவனம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து, "என்னாச்சு அம்பரி? ஏன் டென்ஷனா இருக்கிறே? என்னோட ஒரே அறையில் இருக்கணுமேனு சங்கடப்படுறியா? என்று அவள் மனதைப் படித்தவன் போல கேட்கவும்,

அம்பரி ஒருகணம் தடுமாறிப் போனவளாய், லேசாக முகம் கன்ற,"அது வந்து, ஐ'ம் சாரி.. என்றாள் முணுமுணப்பாக..

"இட்ஸ் ஓகே.. உன் இடத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவா.
எனக்குமே உன்னை இப்படி சங்கடத்துகுள்ளாக்கி விட்டோமே என்று வருத்தம்தான் என்றவன், தொடர்ந்து,"சரி, இப்படி வா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டுகிறேன்" என்றவாறு, கட்டிலின் எதிர்புறம் இருந்த சுவர்பக்கமாக சென்றான். கைப்பிடி போன்ற குமிழை திருகினான். அங்கே கதவு இருப்பதே அப்போதுதான் அம்பரிக்கு தெரிந்தது. காரணம் சுவரும் கதவும் ஒரே வண்ணத்தில் இருந்தது. அதனுள் சென்றால் அந்த அறையும் சாதாராண ஹோட்டல் அறையைப் போல காணப்பட்டது.. அந்த அறைக்கு வெளிப்புறமாக செல்லவும் ஒரு கதவு இருந்தது. அதை தனியறையாகவும் பயன்படுத்தலாம் என்று புரிந்தது.

"அம்பரி, இன்று முதல் உன்னுடைய அறை, வெளி உலகுக்கு தான் நாம் கணவன் மனைவி. இந்த அறைக்குள் வந்துவிட்டால் நீ நீயாக, நான் நானாக இருக்கலாம். அப்புறம் இந்த அறை கதவை வெளிப்புறமாக பூட்டியே இருக்கட்டும்.. திறந்து வைத்தால் சந்தேகம் வரும்.. என்றவன், இப்போது உனக்கு ஓகே தானே? என்றான்.

"அமோதிப்பாக தலையசைத்தவள், "கொஞ்சம் பேசலாமா? என்றாள்.

"பேசலாம். இப்படி வந்து உட்கார்" என்று எதிரே இருந்த இருக்கையை கை காட்டி தானும் ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

"வந்து.. வந்து உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..

"ஏன் இத்தனை தயக்கம் அம்பரி. என்னிடம் எதுவென்றாலும் கேட்கலாம்.. இப்போது உனக்கு அதிகாரப்பூர்வமான உரிமை இருக்கிறது..என்றவன்.. அதே போல எனக்கும் இருக்கு என்று நான் எந்த உரிமையும் எடுத்துக் கொள்வேனோ என்று நீ பயப்பட தேவையில்லை.." என்றபோது லேசாக கேலி இருந்ததோ என்று தோன்றிய போதும், அதை விலக்கி விஷயத்திற்கு வந்தாள்.

"பிரின்ஸியைப் பத்தி சொல்லுங்க, உங்களுக்கும் அவளுக்கும் எப்படி பழக்கம்? வந்து.. நாளைக்கு அத்தை என்னை கேட்டால் நான் பதில் சொல்ல தயாரா இருக்கணும்ல அதுக்காக தான் கேட்கிறேன்" என்றாள்.

அவளது பேச்சில் உள்ளூர உண்டான சிரிப்பை அடக்கியவனுக்கு இன்னொரு விஷயம் நினைவு வர,"என்னை நீ முறை வைத்து அழைக்க வேண்டாம். ஆனால் பெயர் சொல்லியே அழைக்கலாம் அம்பரி" என்றதும்..

நான் எதை கேட்டால் இவன் எதை சொல்கிறான்? என்று எரிச்சல் உண்டானபோதும், அதை மறைத்து "சரி, என்னும் விதமாக தலையைசைத்தாள்.

"பிரின்ஸிக்கு பணம்தான் குறி. நான் புத்திகெட்டு அலைந்த அந்த நேரத்தில, அந்நிய மண்ணில் தமிழ் பேசும், நம் நாட்டுப் பெண், என்று எனக்குள் ஒரு சிறு இளக்கம் இருந்தது. பார்க்கவும் அழகாக இருக்கிறாள், என்று அவளுடன் பழகியது உண்மை தான். சொல்லப்போனால் நான் இந்தியாவிற்கு வர காரணமே இவள் தான்.. என்று நிறுத்தி, கைகளால் தலையை கோதிவிட்டவன். சில கணங்கள் கண்களை இறுக மூடித் திறந்து, தொடர்ந்தான்.

"நான் வெளிநாட்டு மோகத்தில் இருந்தது உனக்கு தெரிஞ்சிருக்கும், படிப்பு முடிஞ்சதும் நல்ல வேலையும் கிடைச்சது, எனக்கு அந்த வாழ்க்கை, அதாவது கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை பிடித்திருந்தது.
அங்கேயே செட்டிலாக நினைச்சேன். கிராமத்தில் வந்து என்னால நிம்மதியாக வாழ முடியும்னு தோனலை. எனக்கு, மது, மாது, சிக்ரெட் என்று எல்லா கெட்ட பழக்கமும் இருந்தது.. என்றதும்,

அம்பரியால் ஏனோ அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும்.. அதையும் ஒரு பெண்ணிடம் சொல்வது ரொம்பவே கடினம். நெஞ்சுக்குள் சொல்ல முடியாத ஒரு வேதனை தோன்றியது.

"வந்து, ப்ளீஸ், மற்ற விஷயம் வேண்டாம், எனக்கு பிரின்ஸியை பற்றி மட்டும் சொல்லுங்க, அவளுக்கும் உங்களுக்கு.. என்று மேலே பேச முடியாது தடுமாறினாள்..

அவளை கூர்ந்து நோக்கிவிட்டு, "அதுதான் சொல்ல வந்தேன் அம்பரி",என்று மரத்த குரலில்.. சொல்லிவிட்டு தொடர்ந்தான்..

"பிரின்ஸியை பார்த்த பிறகு கல்யாணம் செய்து கொள்ள தோனாறியது. காரணம், நான் ஒரு வெள்ளைக்கார பெண்ணை காதலித்தால், அம்மா நிச்சயமாக ஒத்துக்க மாட்டாங்கனு தோனுச்சு. அப்படி நான் செய்து, அப்புறமா எனக்கு சொத்தில் பங்கு இல்லை என்றுவிட்டால் என்ன செய்வது என்று உள்ளூர பயம். சம்பாதிக்கிற பணம் இருக்குமே என்று நீ நினைக்கலாம்.. நல்ல சம்பளம் தான். ஆனால் அது ஒழுக்கமாக இருக்கிறவனுக்கு தாராளம். என்னைப் போல ஊர் சுற்றிகளுக்கும் ஊதாரிகளுக்கும் எத்தனை பணம் இருந்தாலும் போதாதே..

பிரின்ஸியை திருமணம் செய்து கொள்ள இன்னொரு முக்கிய காரணம், அவள் அழகாக இருந்தது. கூடுதலாக அவள் தமிழ் பேசுகிறவள் என்றால் அம்மா மறுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அந்த வயதில் திருமணத்திற்கு முதல் தேவை இரண்டு அன்பான உள்ளங்கள் தான். மற்றவை எல்லாம் பிறகு தான் என்று எனக்கு புரியவில்லை. ஆள் வளர்ந்த அளவுக்கு புத்தி வரவில்லை.. எதிராளியை எடை போடக்கூட தெரியவில்லை..

பிரின்ஸியிடம் திருமணத்திற்கு கேட்டதும் அவளுக்கு முதலில் திகைப்பு தான். அப்போதுதான் அவள் என்னைவிட நான்கு வயது மூத்தவள் என்ற விவரம் தெரிய வந்தது..ஆனாலும் நான் பிடிவாதமாக நின்றேன். அவள் யோசிக்க அவகாசம் கேட்டாள். எங்கே அவள் மறுத்துவிடுவாளோ என்று அஞ்சி, எனக்கு நிறைய சொத்துபத்து இருக்கிறது.. அக்காமார்களும் வசதியாக இருக்கிறார்கள்..அதனால கல்யாணத்திற்கு பிறகு எல்லா சொத்துக்களையும் வித்துட்டு,நான் இங்கு தான் செட்டிலாகப் போகிறேன்..நாம் அம்மாவை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்,"என்று நான் சொன்னேன். அப்போதும் ,நான் யோசித்து விட்டு உனக்கு நல்ல பதிலே சொல்கிறேன்" என்று போய் விட்டாள்.

அதன் பிறகு நான் அக்காமாரிடம் சென்று கல்யாண விவரம் சொன்னேன். விஷயத்தை கேட்ட , இரண்டு பேரும் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க.. ஆனால் அத்தான்கள், அவசரப்படாதே, கல்யாணம் எல்லாம் இப்படி எடுத்தும் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது,கொஞ்சம் பொறுமையாக இரு, என்று சொன்னாங்க.. எனக்கு ஒரே கோபம்.. நான் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன், அதை அப்படியே ஒத்துக் கொள்ளாமல் தடுக்க பார்க்கிறார்களே என்று கோபமாக, திரும்பிவிட்டேன்.

அதன்பிறகு என்னை சந்தித்த பிரின்ஸி, ஒரு நிபந்துனையோடு கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்" என்று பெருமூச்சுடன் நிறுத்தினான் கீர்த்தி.

சட்டென்று எழுந்து சென்று ஒரு குவளையில் தண்ணீர் கொணர்ந்து கொடுத்த அம்பரி.
"என்ன நிபந்தனை? " என்றாள்

"அது.. அது.. இந்த சொத்துக்களை விற்றுவிட்டு, வெளிநாட்டுல தங்கிறதில், எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.. அதன் பிறகு உன் அம்மாவை நம்மோடு வைத்து பார்ப்பது எல்லாம் முடியாத காரியம். இங்கேயே நிறைய ஹோம் இருக்கு, பணத்தை கொடுத்தால் போதும் நல்லாவே பார்த்துக்குவாங்க.. மாதம் ஒரு நாள் போய் பார்த்து வரலாம்.. இதற்கு உனக்கு ஓகே என்றால் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்" என்றாள்.

எனக்கு வந்த கோபத்தில் அவளை அடிக்க கை ஓங்கிவிட்டேன்... அப்போது அவள், "நான் சொன்னதுல என்ன தப்பு? உனக்கு உன் ஊர் மீது, பெரிதாக பற்று இல்லை. அதனால தானே அத்தனை சொத்துக்களோடு இங்கே செட்டிலாகணும்னு சொல்றே?? உன் அம்மா மேல் மட்டும் உனக்கு பாசம் இருக்கிறது என்றால் என்னால் நம்ப முடியவில்லை, பிகாஸ் நாம் பேசும்போது குடும்பத்தை பற்றி நீ பெரிதாக அலட்டிக் கொண்டது இல்லை.. ஆனால் அவளை கொணர்ந்து வீட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை..
இதற்கு தான் நான் தீர்வு சொன்னேன், அதில் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது" அவளும் கோபமா கேட்டாள்.

அவளது பேச்சு எனக்கு, முகத்துல அறைஞ்சது போல இருந்தது. கூடவே, அவளுக்கு பணம் தான்.. குறி.. என்றும் புரிஞ்சது.. இல்லை என்றால் சொத்து வேண்டாம் நாம் சம்பதிப்பதே போதும் என்று சொல்லியிருப்பாளே.. அத்தோடு எனக்கு அம்மாவை உடனே பார்க்க வேண்டும் போல தோனிடுச்சு.. என் மனசுல குற்றவுணர்வு , அப்பாவை இழந்து, பிள்ளைகளையும் பிரிஞ்சு அம்மா எவ்வளவு வேதனைப் படுறாங்களோ.. அதற்கு காரணமாகிவிட்டேனே என்று.. ரொம்பவே துடிச்சுட்டேன்.. அடுத்த விமானத்தை பிடித்து நான் இந்தியா வந்துவிட்டேன். அம்மாவைப் பார்த்தபின் எனக்கு திரும்ப அங்கே போக மனது வரவில்லை.. ! இவ்வளவு தான் பிரினஸிக்கும் எனக்குமுள்ள உறவு ! என்றவன் கடைசியாக..

"நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பிறகு, பெண் சகவாசத்தை அறவே விட்டு விட்டேன்.. அதனால் அந்த குழந்தை என்னுடையதாக இருக்க வாய்ப்பு இல்லை.. மற்றது இங்கே வந்ததும் விட்டுவிட்டேன்.. என்றான் தன்னிலை விளக்கமாக"

அம்பரிக்கு என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை.. ஏனோ இப்போது பிரின்ஸியிடம் அவளுக்கு கோபம் உண்டாகவில்லை.. மாறாக அத்தைக்கு அவரது பிள்ளையை மீட்டுத் தந்தவள் என்ற முறையில் நன்றியுணர்வு தான் தோன்றியது..

"பணத்துக்காகத்தான் அவள் வந்திருக்க வேண்டும்.. "என்றவாறு கீர்த்திவாசன் எழுந்தான்.

"அது காலையில் தெரிந்து போகும்.. குட் நைட்.. என்று தனக்கான அறைக்குள் சென்று அம்பரி மறைய, கீர்த்திவாசன் உதட்டில் ஒரு மர்மப் புன்னகையுடன் உடை மாற்றச் சென்றான்...

_ஜீவ ராகம் தொடரும்..
 

Attachments

  • eiDOZ9117253.jpg
    eiDOZ9117253.jpg
    41.8 KB · Views: 32

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
கீர்த்திவாசன் நல்லவனா, கெட்டவனா ஒண்ணுமே புரியலையே அம்மா கொஞ்சம் குழம்ப வைக்குறீங்க 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top