• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 23

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
23. எந்தன் ஜீவன் நீயடி..!

நித்யமூர்த்தி சென்னை சென்று சேர்ந்த,மறுநாள் அந்த பிரபல மருத்துவமனைக்கு சென்றார். அங்கே மருத்துவர் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டு்ம், அதன்பிறகே எதையும் சொல்ல முடியும் என்றுவிட்டார். மதியம் கீர்த்திவாசன் அங்கே சென்றுவிட்டான். மாமனுடன் உதவியாக இருந்தான். பரிசோதனை முடிவுகள் வர இரண்டு தினங்கள் ஆகும் என்ற மருத்துவர், அதுவரை அங்கேயே தங்கியிருக்க சொன்னார்.

இரண்டு தினங்களுக்கு பிறகு,
பரிசோதனை முடிவுகளை பார்த்த அந்த சிறப்பு மருத்துவர்,"பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை என்று, முதலில்,நல்ல வார்த்தை சொன்னார்,தொடர்ந்து,
"இன்றைக்கு மருத்துவம் ரொம்ப முன்னேறிவிட்டது. இவருக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை. நான் தரும் மருந்துகளை, சரியாக எடுத்து வந்தாலே போதும், அந்த கட்டி கரைக்கூடிய வாய்ப்பு இருக்கு. ஆனால் எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். முக்கியமாக ஓய்வில் இருக்க வேண்டும்.. வேளா வேளைக்கு ஒழுங்காக நாங்க சொல்லும் டயட்டை பின்பற்றணும். ஆறு மாதங்களில் பூரணமாக குணமடைஞ்சிடுவார். நடுவில் ஏதாவது பிரச்சினை என்றால்,அப்படி ஆக வழியில்லை, ஒரு வேளை பிரச்சனை என்றால் மட்டும் வாங்க"என்று மருத்துவர் சொன்னதும் இரு ஆண்களுக்கும் அப்படி ஒரு நிம்மதி.

"ரொம்ப சந்தோஷம் டாக்டர். நீங்க சொன்னதுபோல எல்லாம் ஃபாலோ பண்ணுவார். நாங்க பார்த்துக்கிறோம்"என்று அங்கிருந்து விடைபெற்றார்கள் ,

"கீர்த்தி, எல்லாம் கடவுள் அருள் தானப்பா. இவ்வளவு தூரம் வந்துட்டோம், திருப்பதி வரைப் போயிட்டு அப்புறமா நாம ஊருக்கு திரும்பலாம், நீ என்ன சொல்றே? என்றார் நித்யமூர்த்தி.

"இப்ப வேண்டாம் மாமா, டாக்டர் உங்களை ஓய்வில் இருக்கணும்னு சொல்லியிருக்கார். அதனால, திருச்செந்தூர் போயிடலாம் மாமா. அங்கே தங்கியிருந்து, சாமி கும்பிட்டு அப்புறமா வீட்டுக்கு போகலாம் மாமா," என்றான்.

"உன் இஷ்டம் கீர்த்தி. எனக்கு இப்ப விடுதலை கிடைச்ச மாதிரி இருக்கு" என்றார் நிம்மதி பெருமூச்சுடன்.

மாமனும் மருமகனும், கோவில்களுக்கு சென்று விட்டு மேலும் நான்கு நாட்கள் கழித்து ஊர் திரும்பினார்கள்.

💜💜💜

கீர்த்திவாசனுடன் திருமணம் என்பது அம்பரி கனவிலும் நினையாத ஒன்று. ஆனால் சூழ்நிலை காரணமாக இருவரும் மணவாழ்வில் இணைந்தாயிற்று.
முன்பு எப்படியோ, கீர்த்திவாசன் மீது இருந்த வெறுப்பு இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தனித்தனியாக என்றாலும் அவன் இருக்கும் அறையில் அவள் தங்கியிருப்பதே அதற்கு சாட்சி.
அதுமட்டுமின்றி, அவன் கிளம்பிச் சென்றது முதல், அவளிடம் போனில் அவளது நலன், தாயின் நிலை, வீட்டு நிலவரம் என்று விசாரிக்கிறான். இல்லாவிட்டாலும்
ஏதேனும் காரணம் வைத்து பேசுகிறான். அவனது அழைப்பை அவளும், எதிர்பார்த்தாள். அது அவளுக்கே சற்று வியப்புதான். மாறுவது மனம், மாற்றம் ஒன்றே மாறாதது. அல்லது எல்லோரும் சொல்வது போல, இதுதான் மஞ்சள் கயிறு மாயமா? அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கு இந்த வாழ்க்கை தான் கடவுள் விதித்து இருக்கிறார் போலும். ஆயினும் அதில் இப்போது எந்த வருத்தமோ வேதனையோ,அவளுக்கு இல்லை..! மாறாக அவளது மனம், நிர்மலமாக இருந்தது.

பெங்களூரில் பரபரப்பாக இருந்துவிட்டு, இங்கே அதற்கு மாறாக ஒரு வேலையும் செய்வதற்கு இல்லாது போகவும், அத்தையிடம் கேட்டுக் கொண்டு, மணிமாலாவுடன் ஷாப்பிங் செய்துவிட்டு வந்தாள்,மாலாவிற்கு அழகு கலை சார்ந்த ஞானம் அதிகம் என்பதால் அவளுக்கும் கற்றுக் கொடுத்தார். அதன் விளைவாக வீட்டில், திரைச்சீலை முதல் மிதியடி வரை மாற்றச் செய்திருந்தாள். தங்களது அறையிலும் புதிதாக எல்லாம் மாற்றினாள். தையலில் பூவேலை செய்ய ஆர்வமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாள். புதிதாக பறித்து வந்த பூக்களை அடுக்கவும் கற்றுக் கொண்டிருந்தாள். வீடு முழுவதும் பூபூக்குவளைகளில் பூக்களை அலங்காரம் செய்ய வீடே கலைநயத்துடன் ரம்மியமாக . தோன்றியது. அவற்றை பார்த்தால் கீர்த்தி என்ன சொல்வான் என்ற சிறு எதிர்பார்ப்பும் உண்டாயிற்று.

அன்று காலையில் எழும்போதே அம்பரிக்கு உள்ளுர ஒருவித பரபரப்பு. கீர்த்தியை பார்த்து முழுதாக ஏழு நாட்களாகிவிட்டது. அவனுடன் அவள் கலகலப்பாக பேசி பழகவில்லை தான். ஆயினும் மனது ஆவலுடன் அவனை காண பரபரத்தது.

முன்தினம், கீர்த்திவாசன் போன் செய்து மறுநாள் காலையில், நித்யமூர்த்தியுடன் வருவதாக, தெரிவித்து இருந்தான். தந்தை எப்படி அவனோடு என்று கேட்டதற்கு, அதை நேரில் தெரிவிப்பதாக சொன்னதோடு,
அவளது தந்தை இனி தங்களுடன் தான் இருக்கப் போகிறார் என்றும் அவருக்கு, கீழே இருக்கும் பெரிய அறையை சுத்தம் செய்து தயாராக வைக்கும்படியும் கூறியிருந்தான்.

உண்மையில் அந்த செய்தி அம்பரியின் மனதுக்கு, மிகுந்த சந்தோஷமாகவும் பெரும் நிம்மதியாகவும் இருந்தது. அவசரமாக குளித்து முடித்து கீழே வந்தவள், கீர்த்தி சொல்லியிருந்தபடி பலகாரங்களை செய்யச் சொன்னாள்.

கடந்த இரண்டு நாட்களாக, ஆனந்தவள்ளியிடமும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. (அவருக்கு ஒன்றும் இல்லை என்று அவளுக்கு தெரியாதே) மகன் வருகிறான் என்றதும் அவரும் அன்று சற்று காலையில் எழுந்து சுறுசுறுப்பாக தயாராகிக் கொண்டிருந்தார்.

காலை ஒன்பது மணிக்கு மாமனும் மருமகனும் வீடு வந்து சேர்ந்தனர். மகளின் முகத்தில் என்றுமில்லாத மலர்ச்சியை பார்த்த நித்யமூர்த்தியின் மனதில், மகளது அந்த சிரிப்பு வாடாமல் நிலைத்து இருக்க வேண்டும் என்று வேண்டுதல் பிறந்தது.

உணவுக்கு பிறகு, நித்யமூர்த்தியை, அவருக்கான அறையில் ஓய்வெடுக்க விட்டுவிட்டு, ஆனந்தவள்ளிமிடம் அமர்ந்து, நலம் விசாரித்து, பொதுவாக சற்று நேரம் பேசியிருந்துவிட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான் கீர்த்தி.

அம்பரிக்கு ஏனோ சட்டென்று பேச்சு வரவில்லை..

"அம்பரி, உன்னிடம் பேச வேண்டும் என்றான் கீர்த்திவாசன் தீவிரமான முகத்துடன்.

"எ.. என்ன? என்றாள். உள்ளூர அந்த பரிசோதனை முடிவு பற்றி சொல்ல வருகிறானோ என்று சிறு பதற்றம் தொற்றிக்கொண்டது.

"நான் தொழில் விஷயமாக வெளியூர் போகவில்லை, மாமாவுக்கு துணைக்கு தான் நான் போனேன். உன்னிடம் சொன்னால் நீ தாங்கிக்கொள்ள மாட்டாய் என்றுதான்,அப்போது சொல்ல எனக்கு தயக்கம்.. என்றவன், நித்யமூர்த்தியின் வியாதி, அது பற்றிய மருத்துவரின் பரிந்துரை, என்று முழு விவரம் கூறிவிட்டு, என்னதான் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டாலும் தேர்ந்த நர்ஸ் போல நம்மால் கவனித்துக் கொள்ள முடியாது, அதனால அம்மாவை பார்த்துக்கிட்ட நர்ஸை ஏற்பாடு செய்திருக்கிறேன்..!

கீர்த்தி சொல்ல சொல்ல, தந்தையின் மீது அவன் இவ்வளவு தூரம் அக்கறையோடு இருப்பதை நினைத்து அம்பரிக்கு, உள்ளூர ஆச்சரியமாக இருந்தது. முன்பு அவளுக்கு அடிபட்ட போது அவன் அக்கறையற்று நடந்து கொண்டது அசந்தர்ப்பமாக நினைவில் வந்து போயிற்று.! கீர்த்தி மாறியிருப்பதற்கு இதுகூட ஒரு சான்றுதான் என்று நினைக்கையில் மனதுக்கு நிறைவாக உணர்ந்தாள்.

"அப்பா நம்ம கூட இருக்கிறதே. எனக்கு நிம்மதியாக இருக்கிறது வாசன், ஆனால் குணமாகிட்டா, திரும்ப அவுட்ஹவுஸ் போறேன்னு சொல்லுவாரே?" என்றாள் கவலையுடன்.

"அப்படித்தான் சொன்னார், நான் தான் ஒத்துக்கலை. இருக்கிறதே நாம நாலு பேர். எதுக்கு ஆளுக்கு ஒரு பக்கம் இருக்கணும்? அத்தோடு, இந்த மாதிரி நிலையில் அப்படி எல்லாம் விடமுடியாது என்று நான் கண்டிப்பாக சொல்லிவிட்டேன்" என்றான்.

ஆனால் நடந்தது வேறு... நித்யமூர்த்தி இந்த நிலையிலும் அவுட் ஹவுஸில் தான் தொடர்ந்து இருக்கப்போவதாக தெரிவித்தார்.

"மாமா நீங்க வீட்டுக்குள்ளே வந்தாதான் உங்க மகள் என் மனைவியாக மாறுவாள்.. இல்லன்னா உங்களை பார்த்துக்கிறேன்னு அங்கே பாதி நாளையும் அம்மாக்கிட்டே பாதி நாளையும் கழிப்பாள். அப்புறம் என்னை குற்றம் சொல்லக்கூடாது என்றிருந்தான் மிரட்டலாக..

அதற்கு மேல் நித்யமூர்த்தி பிடிவாதம் பிடிப்பாரா என்ன?

"நீங்க சொன்னது ரொம்ப சரி வாசன். அப்புறம் நர்ஸ் எல்லாம் வேண்டாமே, அப்பாவை நானே பார்த்துக்கிறேன்"என்றவள்,"சரி, பயணம் செய்து வந்தது களைச்சு இருப்பீங்க. கொஞ்சம் ஓய்வு எடுங்க, நான் கீழே போகிறேன். சிறிது நேரம் கழித்து உங்களுக்கு பழச்சாறு அனுப்பட்டுமா" என்றவாறு எழப் போனவளை கையமர்த்தினான் கீர்த்திவாசன்.

கேள்வியாக அவனை ஏறிட்டாள்.
"பிரின்ஸியின் விஷயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? என்றான், அவளது விழிகளை பார்த்தவாறு

"நீங்களே இப்போதுதான் ஊரில் இருந்து வந்திருக்கிறீங்க. வந்ததும் வராததுமாக அந்த பேச்சை எடுக்க எனக்கு விருப்பமில்லை வாசன். இத்தனை நாளா வெளியில் தங்கியிருந்து சரியா தூங்கியிருக்க முடியாது..அதனால நீங்க கொஞ்சம் படுத்து ஓய்வு எடுங்க" அம்பரி சொல்ல, கீர்த்தியின் முகம் தெளிந்தது.

"களைப்புன்னு பெருசா இல்லை அம்பரி. எனக்கு எப்போது உன்னை பார்ப்போம் என்று இருந்தது, என்றதும்

அம்பரி வியப்புடன் அவனை நோக்கினாள்..

ஒரு கணம் தடுமாறி,"அது.. அது வந்து உன்கிட்ட சில விஷயங்களை இன்றைக்கே பேசிடணும்னு நினைத்தேன்.. அம்பரி. இனிமே உன்னிடம் எதையும் மறைத்து வைத்து மனசுல பாரத்தை சுமக்க நான் தயாராக இல்லை" என்றபோது அவனது குரல் சாதாரணமாக இருந்தது.

கீர்த்திவாசன் சிலகணங்கள் தீவிரமாக யோசித்தான், அம்பரியுடன் சேர்ந்து வாழும் முடிவிற்கு வந்திருந்ததால், அவளது மனநிலையை அறிந்து கொள்ள எண்ணினான். அதனால்,
"நம் திருமணம் ஊருக்காகத்தான் என்று நாம் அறிவோம். ஆனால் இப்போது மாமாவும் உடல் நலமின்றி இருக்கிறார். அம்மா, மாமா இருவரின் காலம் வரை நாம் இந்த ஒப்பந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும் அம்பரி. அப்படி வாழ்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பின்னாளில் ஒரு வேளை நாம் பிரிய நேர்ந்தாலும்கூட, நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வதாக இல்லை.. என்று நிறுத்திவிட்டு அங்கிருந்த சுவரை சிலகணங்கள் வெறிக்க,

அம்பரி குழப்பமாக அவனை நோக்கினாள். "இப்போது ஏன் இந்த பேச்சு வாசன்? என்று கேட்கவும் செய்தாள்.

"பேசித்தான் ஆகணும் அம்பரி.
உனக்கு சின்ன வயது, என்னைப் போல எந்த ஒரு குறையும் உன்கிட்டே இல்லை. அதனால நிச்சயமாக உனக்கு நல்ல வாழ்வு அமையனும் என்பது என்னோட நீண்ட நாள் ஆசை. ஆகவே, இனி நீ இங்கே இருந்து சங்கடப்பட வேண்டாம். நீ பெங்களூருக்கு கிளம்பு. இங்கே பெரியவங்களை நான் சமாளித்து கொள்கிறேன்" என்றவனின் பேச்சில் அவசரமாக குறுக்கிட்டாள் அம்பரி.

"என்ன பேசுறீங்கனு புரிஞ்சுதான் பேசுவீங்களா? அத்தை இப்பத்தான் கொஞ்சம் தேறிட்டு வர்றாங்க, அப்பாவும் இப்ப உடம்புக்கு முடியாமல் இருக்காங்க, இந்த நேரத்துல நான் எப்படி போவேன் என்று நீங்க நினைச்சீங்க? என் வாழ்வை பற்றி நீங்க எப்படி தீர்மானிக்கலாம்? கிட்டத்தட்ட நானும் திருமணமே வேண்டாம் என்றுதானே இருந்தேன்? அப்படி இருக்கையில் நான் மட்டும் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன் என்று நீங்க எப்படி நினைச்சீங்க? அக்காவோட மறைவுக்கு பிறகு நான் திருமணம் பற்றி என்னால் நினைக்க முடியவில்லை. ஒரு வேளை இந்த அறையில் நான் இருப்பது, உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ? அப்படி என்றால் சொல்லுங்க, நான் வேறு அறைக்கு மாறிடுறேன். அப்புறம் இன்னொரு விஷயம், நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். இனி நான் அத்தையையும் அப்பாவையும் பார்த்துக்கொண்டு இங்கேயே இருக்கிறதா முடிவு செய்து விட்டேன். அதனால் நீங்க இனி இந்த மாதிரி எதையும் உளறாதீங்க,"என்று ஆத்திரமாக படபடவென்று பொரிந்து கொண்டிருக்க,

கீர்த்தியின் முகம் மலர்ந்த விதத்தில், சட்டென்று பேச்சை நிறுத்திய அம்பரி, என்ன இது நான் கோபமாக பேசிக்கொண்டு இருக்கிறேன்! இவன் என்னவோ பாராட்டு பத்திரம் வாசித்த மாதிரி சிரித்துக் கொண்டிருக்கிறான்? என்று குழம்பிப் போனாள்.

அதை கவனித்த கீர்த்திவாசன் ஒரு மர்ம புன்னகையுடன்," ஓகே! ஓகே! இனிமே இதுபோல நான் பேசமாட்டேன் அம்பரி, சரிதானா? இது என்னோட அறை மட்டும் அல்ல, இருவருக்குமானதுதான். நீ இங்கே இருப்பதில் எனக்கு ஒரு சங்கடமும் இல்லை,என்றவன் தொடர்ந்து," சரி, இப்போது பிரின்ஸி விஷயம் சொல்கிறேன்". அம்பரி, ஆனால் கேட்ட பிறகு தயவுசெய்து நீ என்னை தவறாக நினைக்கக்கூடாது. இது, இது..உன் நன்மையை கருதி நான் யோசித்து செய்த விஷயம்" என்று இழுக்க

"என்ன விஷயம் வாசன்? ஏன் இப்படி தயங்குறீங்க? உங்களை நான் தவறாக ஏன் நினைக்கப் போறேன்? எனக்கு ஏதேதோ எண்ணங்கள் மனதை கலக்குகிறது. அப்படி என்னத்தை செய்து வைத்தீர்கள்? என்றாள் லேசான பதற்றத்துடன்.

"பிரின்ஸியை நான்தான் இங்கே வரவழைத்தேன். அவள் என் திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. நான்தான், வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன்.

"என்ன திட்டம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை வாசன். விளக்கமாக சொல்லுங்களேன்" என்றாள் பதற்றம் குறையாமல்..

"பிரின்ஸியை இங்கே வந்து அப்படி ஒரு பொய்யை சொல்லும்படி நான் தான் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு
பரிசோதனையில், அந்த குழந்தை என்னுடையது என்று காட்ட நினைத்தேன். எப்படியும் நம் பிரிவு நிச்சயம். அப்படி பிரியும் போது என் மீது உனக்கு, இரக்கம், நல்ல அபிப்பிராயமோ உண்டாகக் கூடாது என்று நினைத்தேன். கூடவே அது என் குழந்தை என்று தெரிய வந்தால், நீ என்னை வெறுத்து வேறு ஒரு வாழ்வை ஏற்பாய் என்று நினைத்தேன். அத்தோடு பிரின்ஸி வேறு நோயால் கஷ்டப்படுகிறாள். நீ விலகிவிட்டால், பிரின்ஸியின் மறைவுக்கு பிறகு அந்த குழந்தையை நான் தத்து எடுத்து வளர்த்தால் என் வாழ்வுக்கு ஒரு பிடிமானம், அர்த்தம் கிடைக்கும் என்று எண்ணினேன்" என்று அவன் சொல்ல அம்பரிக்கு சிலகணங்கள் என்ன சொல்வதென்றே விளங்கவில்லை.

"வாசன்" என்று அம்பரி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள், அவள் வாழ்க்கைக்காக அவன் பழி ஏற்க துணிந்தானா? ஏன்? மனதுக்குள் ஒருவித தவிப்பை உணர்ந்தாள்.

கீர்த்தி தொடர்ந்தான்,"என் திட்டம் அதுவாகத்தான் இருந்தது. ஆனால் மாமாவுக்கு நம் ஒப்பந்த விஷயம் தெரிந்து போய்டுச்சு"

"ஐயோ? என்ன சொல்றீங்க? அப்புறம் எப்படி சமாளிச்சீங்க? என்று பதற்றமாக கேட்க,

"அவர்கிட்டே சமாளிக்க முடியுமா? அம்மா எப்படியோ அப்படித்தான் மாமாவும், ரொம்ப ஷார்ப், அவர் நேரடியாக பார்த்துட்டேன்னு சொல்லவும், நான் வேற வழியில்லாமல், விஷயத்தை சொன்னேன். அப்பத்தான் என் மகள் இன்னொரு வாழ்க்கையை ஏற்க மாட்டாள் என்றார். எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன்பிறகு நான் அந்த திட்டத்தை கைவிட்டு, பிரின்ஸியை கொடைக்கானலுக்கு அனுப்பிட்டேன். அங்கே, அவளையும் குழந்தையையும் பார்த்துக்க ஒரு ஆளையும் ஏற்பாடு செய்துட்டேன். அவளது கடைசி நாட்கள் அமைதியாக கழிய நம்மால் ஆன சின்ன உதவி அது" என்றான் ஒரு பெருமூச்சுடன்..

அம்பரிக்கு அவன் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அவனை அவளுக்கு உணர்த்துவது போலிருக்க,மனதிற்குள் அத்தனை காலம் இருந்த இறுக்கம் தளர்ந்து, ஒருவித இதம் பரவுவதை உணர்ந்தாள்.

"அப்போ அந்த குழந்தைக்கு நிஜ அப்பாவான பிரின்ஸியின் கணவன் எங்கே வாசன்? எனக்கு சொல்லலாம் என்றால் சொல்லுங்க" என்றாள் விவரம் அறியும் நோக்கத்தில்..

"உனக்கு தெரியக்கூடாதது என்று என் வாழ்வில் ஒன்றுமே இல்லை அம்பரி,"என்றுவிட்டு," நான், அவளிடம் சண்டை போட்டுவிட்டு இந்தியா வந்தபிறகு, பிரின்ஸி,
கொஞ்சம் நாள் காத்திருந்து பார்த்துவிட்டு, பிறகு வேற யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வீதியில் பிறந்து சில தினங்களான நிலையில் அழுதபடி கிடந்திருக்கிறது. அதை அனாதையாக விட மனமின்றி, அவளே வளர்க்க முடிவு செய்து அந்த குழந்தையை தத்து எடுத்திருக்கிறாள். இந்த விபரம் நான் அவளை என் காதலியாக நடிக்க அழைத்த போது தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் குழந்தையை வைத்து பிளானை மாற்றினேன்"

அப்படி என்றால் பிரின்ஸி அவனை உண்மையாக விரும்பியிருக்கிறாள் போல.. என்று எண்ணம் தோன்ற, "வாசன், நான் ஒன்று சொன்னால் தப்பா நினைக்க கூடாது" என்றாள் அம்பரி தயக்கமாக..

"என்னிடம் நீ எதற்கும் தயங்கவே வேண்டாம், எதுவானாலும் சொல்லு அம்பரி"

"பிரின்ஸியை திருமணம் செய்துக்க நினைச்சீங்க, ஆனால் அவள் நிபந்தனை பிடிக்காமல் விட்டுட்டீங்க, பிரின்ஸி அப்படி கேட்டது தவறு என்றாலும் அவள் உங்களை உண்மையாக விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. அதனால பேசாமல் அவளை திருமணம் செய்.. அவள் வாக்கியத்தை முடிக்குமுன் கீர்த்தி குறுக்கிட்டான்.

"அது நடக்காது அம்பரி. நான் அவளை கேட்டபோது எனக்கு அவள் மேல் ஒரு கிரேஸ் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் லவ் இல்லை. அவளுக்கு இருக்கா இல்லையாங்கிறது பத்தி இப்ப எனக்கு தேவையில்லாதது" என்றான் மரத்த குரலில்.

அம்பரிக்கு திடுமென அன்று ஈஸ்வரி சொன்னது நினைவிற்கு வந்தது. " சொத்துக்காக தான் தம்பி இங்கேயே தங்கியிருக்கிறான் என்பது போல ஏதோ சொன்னாளே.. அது எத்தனை சதவீதம் உண்மை ? ஆனால் அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இப்போது அவளால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்றியது. ஆனால் அவனிடம் நேரடியாக அப்படி கேட்டுவிட முடியாது, என்பதால் மாற்றி கேட்டாள்.

"சரி, அதை விடுங்க, ஒரு கோபத்தில் தானே கிளம்பி இங்கே வந்தீங்க? வழக்கமா நீங்க நாலு நாட்கள் கூட சேர்ந்தாப்ல இங்கே தங்கவே மாட்டீங்களே..! பிறகு எப்படி நாலு வருஷமா தங்கியிருக்கீங்க? அந்த காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா? இதைக்கூட ஏன் கேட்கிறேன் என்றால்,"நீங்க அங்கேயே செட்டிலாக நினைச்சதா சொன்னீங்களே, அப்புறம் எப்படி மனசு மாறினீங்கனு,நான் எவ்வளவு யோசிச்சும் விடையே கிடைக்கலை, அதான்..!"

அம்பரி தயக்கமின்றி அவனிடம் இலகுவாக பேசுவதை வெகுவாக ரசித்தான் கீர்த்தி. அவள் கேட்ட கேள்வியில் அவன் கண்களில் மின்னல் வெட்டியது போல பிரகாசித்தது. உடனே அது பொய்யோ எனும்படியாக மறைந்தும் போயிற்று.. !

"அதை சொன்னால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என்று தெரியவில்லை அம்பரி ! என்றான் தன் கைவிரல்களை ஆராய்ந்தவாறு..

அம்பரிக்கு அந்த மர்மம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இன்னும் அதிகரிக்க.. "ப்ச், இப்பத்தானே சொன்னீங்க வாசன், என்கிட்டே மறைக்கிறதுக்கு ஏதுமே இல்லை என்று..! அப்படின்னா இப்ப ஏன் தயங்குறீங்க? என்ற போது அவளது குரலில் இருந்த ஏதோ ஒன்று கீர்த்தியின் மனதை என்னவோ செய்தது.

"நான் இங்கே இருக்குறதுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் அம்பரி. ஆனால் எல்லாவற்றையும்விட முக்கியமான காரணம் நீ தான்"

அம்பரி அதிர்ந்த பார்வையுடன் அவனை நோக்கினாள்..

தொடரும்..
 

Attachments

  • ei8HSLK67258.jpg
    ei8HSLK67258.jpg
    78.9 KB · Views: 27

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️கீர்த்திவாசன் அம்பரிய காதலிப்பானோ இருக்கும் 🙄🙄🙄🙄🙄
 
Top