• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 25

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி..! - 25

கீர்த்திவாசனின் வாய் மொழியாக,"என் மனதில் நீ இல்லாவிட்டால் இந்த திருமணத்திற்கு நான் சம்மதித்து இருக்க மாட்டேன்" என்று சொல்ல கேட்டதும், அம்பரி மனம் படபடக்க..பேச்சிழந்து விழிகள் விரிய அவனை பார்த்திருந்தாள். அவளது திகைத்த தோற்றத்தில் எதை கண்டானோ, ஒரு தீவிரத்துடன் அவன் பேசினான்.

"சத்தியம் அம்பரி, என்றைக்கு நான் திரும்ப இந்தியா வந்து உன்னை பார்த்தேனோ அதன் பிறகு என் வாழ்வில் எந்த பெண்ணையும் நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு பிடிக்கவும் இல்லை.. எதிர்காலமே இல்லாத இந்த காதல் எனக்குள் ஏன் வந்தது என்று அடிக்கடி, நான் என்னையே கேட்டுக்கொண்ட தருணங்கள் உண்டு.. ஆனால் அந்த உணர்வு பிடித்திருந்தது. உன்னை நினைத்துக்கொண்டே இருக்க அம்மாவும் ஒரு வகையில் எனக்கு உதவியாக இருந்தார்கள் எனலாம். உன்னை அறிந்து கொள்ள முடிந்தது..! ஆனால், அம்பரி, இப்படி ஒரு திருப்பத்தை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை.. சூழ்நிலை காரணமாக திருமணம் நடந்தே தீர வேண்டும் என்றபோது, அந்த இக்கட்டான நிலையில் என் ஆசை கொண்ட மனமே ஜெயித்தது. அம்மா மற்றும் மாமாவின் விருப்பத்தை காரணம் காட்டி, உன்னை என் பெயரளவு மனைவியாக்கிக் கொண்டேன்.." தப்பு செய்து விட்டதைப் போன்ற குன்றல் அவன் குரலில் தெரிந்தது !

அவள் மீதான காதலை அவன் தெரிவித்ததும் அம்பரியின் மனதில் அவளையும் அறியாமல் உள்ளூர இதம் பரவியதை தடுக்க இயலவில்லை. கூடவே அவனுடைய பழைய நடத்தையின் பொருட்டு, கணவன் இன்னமும் மனதளவில் வருந்துவதை அவளால் உணர முடிந்தது. அது அவள் மனதை பாதித்தது.

"இதோ பாருங்க வாசன், இன்னொரு தரம் உங்களை நீங்கள் குறைவாக நினைச்சு வருத்தப்படக்கூடாது. அதை கெட்ட கனவாக மறந்துவிடுங்கள்" என்று அழுத்தமானகுரலில் அறிவுறுத்தினாள் அம்பரி.

அந்த ஒன்றிலேயே அவன் முகம் தெளிய,"ஓகே அம்பரி. இனி, அப்படி வருத்தப்பட மாட்டேன் என்றவன், தொடர்ந்து," நீயும் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும், என் மனதை நான் சொல்லிவிட்டேன் அம்பரி, நடக்காது என்று நினைத்தது நடந்ததே எனக்கு மனநிறைவாக இருக்கிறது. உன் மனம் என்னுடனான வாழ்க்கைக்கு தயாராகும் வரை நான் காத்திருப்பேன். அதுவரை நல்ல நண்பர்களாக தொடரலாம்.. என்ன நான் சொல்வது சரிதானே? என்று அவளை அபிப்பிராயம் கேட்டான்.

இப்போதைய நிலையில் அவனை வெறுக்க எந்த முகாந்திரமும் இல்லை. அவன் மீது அக்கறை இருக்கிறது. அவன் வருந்தினால் கஷ்டமாக இருக்கிறது.. அவ்வளவே. ஆனால் கணவன் மனைவி உறவு இதற்குள் அடங்குவதில்லையே.. அதனால் அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதை, அவள் சொல்லமல் புரிந்துகொண்ட கணவனை நன்றியோடு பார்த்தவள், அவன் கேட்டதற்கு, சம்மதமாக, "நிச்சயமாக வாசன்..!என்றவாறு எழுந்து, "சரி, நீங்க ஓய்வு எடுங்க" என்று வெளியேறினாள் அம்பரி.

கீர்த்திவாசன் மனதில் இருந்தவற்றை இறக்கிவிட்ட ஆசுவாசத்துடன் படுக்கையில் விழுந்தான்.

🖤🤎🖤

கீர்த்தியை பொறுத்தவரை அவன் மனதை தெரிவித்து விட்டான். இனி அவள் எந்த முடிவை எடுத்தாலும் அவன் ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருக்கிறான்.

அம்பரிக்கு தான் மனதளவில் சற்று தடுமாற்றம் உண்டாயிற்று. முந்தைய வாழ்வு காரணமாக அவன் அவளை விரும்புகிறான் என்பதை முழுதாக நம்பவும் முடியவில்லை. இப்போதைய அவனது நடவடிக்கையால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவனுக்கு அவளிடம் உண்மை நேசம் தான் என்று எப்படி தெரிந்து கொள்வது? அதை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...! ஆனால் அப்போது.. அவள் உணர்ந்தது வேறு !

அடுத்து வந்த நாட்களில், அவன் நல்ல தோழனாக நடந்து கொண்டான். ஒருவருக்கு ஒருவர் உரிமையுடன் கேலி செய்து காலை வாருவதும், வெளி உலகுக்கு தம்பதி சமேதராக விருந்து வைபவங்களுக்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள ரம்யமான இடங்களுக்கும் அழைத்து போய் வருவதுமாக நாட்கள் இனிமையாக கழிந்தது. இடையே அவன் விவசாயத்தில் செய்யும் யுக்தியை பற்றி, அவளை அழைத்துப் போய் காட்டினான். அது மட்டுமின்றி தோப்பு பண்ணை என்று எல்லா இடத்திலும் அவளை அறிமுகம் செய்து வைத்தான். அதற்கு விளக்கமாக, "எல்லாமும் நீயும் தெரிஞ்சு வச்சுக்கிட்டா, நான் ஊரில் இல்லாத சமயத்தில உதவும்" என்றான். இடையில் மாமனார் சொன்னபடி, கணக்கு வழக்குகளை பார்க்கும் பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்தான்..

அவனது சுறுசுறுப்பும், வேலையில் காட்டும் தீவிரமும் ஆச்சர்யமாக இருந்தது. வேலையாட்கள் வராத போது அவனே நிலத்தில் இறங்கி வேலை செய்வதைப் பார்த்தபோது, நாலு வருடங்களுக்கு முன்பு, சட்டையில் அழுக்குப்படாத வண்ணம் நேர்த்தியாக உடை உடுத்திக் கொண்டு அலட்டலாக வலம் வந்தவன் இவன் தான் என்றால் அவளால் நம்ப முடியவில்லை. நாட்கள் செல்ல செல்ல, கீர்த்திவாசன் அவளிடம் காட்டிய அக்கறையும், பிரியமும், அம்பரியின் மனதை ஆகர்ஷித்தது என்னவோ உண்மை.

இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில், கீர்த்திவாசன் அலுவல் விஷயமாக, கொடைக்கானலுக்கு செல்ல நேர்ந்தது. கூடவே பிரின்ஸியின் உடல் நிலையும் மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதாக ரிசார்ட்டின் மானேஜர் தெரிவித்து இருந்தார். குழந்தையை, யாரேனும் குழந்தை பெற முடியாத தம்பதிக்கு தத்துக் கொடுத்துவிட அவள் முடிவு எடுத்திருந்தாள். அதன்படி அன்றைக்கு மறுநாள் ஒரு தம்பதியர் வருவதாக தெரிவித்திருந்தனர். அந்த விதிமுறைகளையும் முடித்துவிட்டு அவன் திரும்புவதற்கு இரண்டு மூன்று தினங்கள் ஆகும் என்று அம்பரியிடம் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.

சொல்லப்போனால் கீர்த்தி அம்பரியை உடன் வருமாறு அழைக்கத்தான் செய்தான்..! இரண்டு வயதானவர்கள், நோயுற்றவர்களை அப்படி விட்டுப் போவது சரியில்லை என்று விட்டாள் அம்பரி. அதுவும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும், மனைவி, ஏதோ காரணமாக தயங்குகிறாள், என்று புரிந்து, அவன் மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.

அவனுடனான பயணங்கள் சுவாரஸ்யமாக இருக்கும், என்பதை கடந்த சில தினங்களில் உணர்ந்து தான் இருந்தாள். உண்மையில் அவனுடன் செல்ல அம்பரிக்கு மிகுந்த ஆவல் தான். அது அவன் கணவன் என்பதாலா? அல்லது வெறும் தோழமை காரணமாகவா என்று அவளுள் சிறு தடுமாற்றம் தோன்றியிருந்தது ஒருபுறம். இன்னொரு புறம் இதுவரை அவர்கள் இருவருமாக வெளியிடங்களுக்கு சென்று தங்கியது இல்லை, அவளது ஐயம் தெளிவாகாத நிலையில் அவனோடு செல்வது உசிதமாக படவில்லை. ஆகவே அம்பரிக்கு ஐயம்திரிபர அறிய வேண்டியிருந்தது. ஒருவேளை இந்த சிறு பிரிவு அதற்கு உதவியாக இருக்கலாம் என்று நினைத்தாள் அவள்.

கீர்த்திவாசன் அலுவல் காரணமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது வழக்கம் என்பதால் பகலில் இயல்பாக இருந்தவள், இரவில் அவன் இல்லாத அறைக்குள் சென்ற போது வெறுமையான உணர்வு. இருவரும் தனித்தனியாகத்தான் உறங்குகிறார்கள், என்றாலும், தூங்க செல்லும் முன்பாக சற்று நேரம் அமர்ந்து அன்றைய தினம் நடந்ததை பகிர்ந்து கொள்வதை இருவருமே வழக்கமாக வைத்திருந்தார்கள். அந்த கணங்களை அம்பரி ஆவலாக எதிர்பார்ப்பாள். இன்றைக்கு அங்கே போய் சேர்ந்ததும் போன் செய்தவன், அதன்பிறகு ஏன் பேசவில்லை? என்று யோசனையுடன்.. படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தபோது, அவளது கைப்பேசி ஒலிக்க தாவிச் சென்று எடுத்தாள்.

அவன் தான்!

"ஹலோ, வாசன்.. ! என்றவளுக்கு மேலே பேச முடியாமல் ஏனோ தொண்டையை அடைத்தது.

"என்னாச்சு அம்பரி? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு? அங்கே ஏதும் பிரச்சினையா?

"அதெல்லாம் எதுவும் பிரச்சனை இல்லை. நீங்க சாப்பிட்டிங்களா?

"சாப்பிட்டேன் அம்பரி. வேலை முடிய நேரமாயிடுச்சு, இப்பத்தான் ரூமுக்கு வந்தேன். வந்ததும் உனக்கு தான் போன் பண்றேன், நீ சாப்பிட்டியா?"

"நான் சாப்பிட்டேன்" என்றவளின் குரல் இயல்பாக இல்லை.

"அம்பரி, என்கிட்ட ஏதும் சொல்லணுமா? என்றான் ஆழ்ந்த குரலில்..

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் தான். ஆனால் போனில் இல்லை. நேரில் சொல்லணும்.. "என்றாள் அம்பரி கம்மிய குரலில்..

"எதுவானாலும் இப்பவே சொல்லு அம்பரி. என்னவோ ஏதோனு என் மனசு பதறுது... போனில் சார்ஜ் வேற குறைவாக இருக்கிறது மா. நீ சீக்கிரமாக விஷயத்தை சொல்லு.. என்றவனின் குரலில் இப்போது பதற்றம் வந்திருந்தது.

"ஐயோ வாசன், நீங்க பயப்படுறாப்ல எதுவும் இல்லை. நீங்க சீக்கிரமாக வேலையை முடிச்சுட்டு வாங்க. நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்.."

அவளது கடைசி வார்த்தை எதையோ உணர்த்த, கீர்த்தியின் ஆசை கொண்ட மனம் படபடத்தது. அதை அடக்கியபடி,"சரி, அம்பரி. நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமாக வர்றேன். நீ ஒழுங்காக சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கணும். இங்கே கொஞ்சம் மராமத்து வேலை இருக்கிறது.. அதோட கொஞ்சம் டெவலப் பண்ற ஐடியா இருக்கு. அதுக்கு இன்ஜினியரை நாளை வர சொல்லியிருக்கிறேன். அப்புறம், அந்த தத்து எடுக்கிற தம்பதியும் வர்றதா சொல்லியிருக்காங்க, அந்த வேலைகள் வேற இருக்கு. அதனால உனக்கு அடிக்கடி போன் செய்ய முடியாது. முடியறப்போ பண்றேன்.. வெளியே தூறல் போடுது... நீ ஜன்னல் சரியா சாத்திட்டு படுமா"

"ம்ம்.. நான் பார்த்துக்கிறேன். நீங்களும் கவனமாக இருங்க வாசன். குட் நைட்"

"குட்நைட்"

இணைப்பை துண்டித்துவிட்டு, படுக்கையில் சாய்ந்தாள். காதோரம் அவனது குரல் ரீங்காரமிட.. அப்படியே தூக்கம் தழுவ,வண்ண கனவுகளோடு ஆழ்ந்து போனாள்.

ஆனால் மறுநாள்... அம்பரியால் இயல்பாக இருக்க முடியாமல் போயிற்று..!
 

Attachments

  • CYMERA_20220831_202003.jpg
    CYMERA_20220831_202003.jpg
    10.2 KB · Views: 27
Last edited:
Top