• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 26

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி...! - 26

மறுநாள் காலை..

விடியும் போதே ஊரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. கூடவே லேசாகத் தூறல் போட்டவாறு இருந்தது. கீர்த்தியிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை. அவள் முயன்றால் தொடர்பு கிடைக்கவில்லை. ஏனோ அம்பரியின் மனம் பதற்றத்தை தத்து எடுத்துக் கொண்டு அலைபாய்ந்தது. அவன் குரலை கேட்டுவிட்டால் போதும் போல இருந்தது. கீர்த்திவாசன், சுவாரஸ்யமாக சிரிக்கும்படி நிறைய கதை சொல்வான். வெளியே எங்கே சென்றாலும் அவ்வப்போது போன் செய்வான். இன்று அவன் போன் வராதது அம்பரிக்கு மிகவும் கவலை அளித்தது. அடிக்கடி தான் பேச முடியாது என்றான் தான். ஆனால் ஒரே ஒரு முறை பேசக்கூட முடியாமல் அப்படி என்னவாயிற்று அங்கே என்று தான் அவள் மனம் கலங்கிக் கொண்டிருந்தது.

அறைக்கு சென்று ஓய்வெடுக்க போகாமல் கீழேயே குட்டி போட்ட பூனையாக சுற்றிக் கொண்டிருந்தவளை, பார்த்த ஆனந்தவள்ளிக்கு மருமகளின் மனநிலை புரிந்தது. கூடவே அவருக்கு மனதுக்குள் இருந்த பெரும் கவலை விலகியது. மகனும் மருமகளும் கடமைக்காக கணவன் மனைவியாக இருக்கிறார்களோ என்று உள்ளூர சிறு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அப்படி இல்லை என்று தெரியவும் நிம்மதி உண்டானது. ஆயினும் அவளது அந்த நிலையை காண சற்று வருத்தமாகத்தான் இருந்ததது. வேறு சமயமாக இருந்தால் மணிமாலாவை, அல்லது பணியாளை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது சென்று வருமாறு சொல்லலாம். அதற்கு வழியின்றி வானம் தூறிக்கொண்டிருந்தது.

ஆகவே மதிய உணவை முடித்த பிறகு, மருமகளை அழைத்து, ஒரு கதை புத்தகத்தை எடுத்து வர செய்து அவருக்காக வாசிக்க சொன்னார்.

அம்பரிக்கு இருந்த மனநிலையில் எதையும் வாசிக்க இயலும் என்று தோன்றவில்லை. ஆனால் அத்தை சொன்னதை தட்ட முடியாமல் கதையை வாசிக்க அமர்ந்தாள். அது ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை.. கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தவள்ளி, தூங்கியிருந்தார். அதைக்கூட கவனிக்காமல், அவள் அப்படியே கதையில் ஒன்றிப் போனாள். கதை முடிந்த பிறகு தான் அத்தையை பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு அத்தையின் சூட்சுமம் புரிய,சிறு புன்னகையுடன், எழுந்து அவருக்கு நன்றாக போர்வையை போர்த்துவிட்டு அறையை விட்டு வெளி வந்தாள்.

கதையை பற்றிய எண்ணம் பின்னுக்கு செல்ல, மீண்டும் அவள் மனம் கீர்த்தியைப் பற்றிய கவலைக்கு சென்றது. நிச்சயமாக அங்கே ஏதோ சரியில்லை என்று அவள் நினைக்கும்போதே
அம்பரியின், கையில் இருந்த செல்போன் இசை பாட, பரபரப்புடன், உயிர்ப்பித்தாள். கீர்த்திவாசன் தான் அழைத்திருந்தான், "ஹலோ, என்றவளுக்கு தொண்டை அடைத்தது.. அதற்குள்ளாக கீர்த்திவாசன் வேகமாக பேச ஆரம்பித்திருந்தான்.

"ஹலோ அம்பரி, கேட்குதா?

" கேட்குது வாசன், என்னாச்சு ஏன் இவ்வளவு நேரமா போன் பண்ணவே இல்லை... " என்றாள் குரலில் கலக்கத்துடன்.

"இங்கே அப்படித்தான் அம்பரி, நினைத்தவுடன் பேசிவிட முடியாது. சரி, கொஞ்சம் கவனமாக கேள் அம்பரி, எந்த நேரமும் தொடர்பு துண்டிக்கப்படலாம், வெகு நேரத்திற்கு பிறகு இப்போதுதான் லைன் கிடைத்தது, என்று மொழிந்தவன், "இங்கே மழை தீவிரமாக பெய்கிறது அம்பரி, மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்திருப்பதால் நான் வர மேலும் தாமதமாகலாம். மலைமீது, இங்கே சும்மாவே டவர் பிரச்சனை. அதிலும் மழை நேரத்தில் தொடர்பு எளிதில் கிடைக்காது மா. நேற்றே சொன்னதைப் போல அடிக்கடி என்னால் தொடர்பு கொள்ள முடியாது. அம்மாவையும் மாமாவையும் பத்திரமாக பார்த்துக்கொள். நீயும் உடம்பை பார்த்துக்கொள்..! அப்புறம் பிரின்ஸிக்கு திடீரென்று மிகவும் சீரியஸாகிவிட்டது. அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம்...! என்று சொல்லும் போதே தொடர்பு விடுபட, அம்பரியின் உடலும் மனமும் ஒருகணம் பதறியது.

உடனேயே மீண்டும் அழைப்பு வர ஆசுவாசத்துடன், எடுத்துப் பேசினாள், " இங்கே நான் பார்த்துக்கிறேன். டாக்டர் என்ன சொன்னார்?" என்று அவசரமாக கேட்டாள்.

"எதுவும் இப்போ சொல்றதுக்கு இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். சரி முடிஞ்சா ராத்திரி கால் பண்றேன். அப்படி கால் வரலைன்னா கவலைப்பட வேண்டாம்னு அம்மாக்கிட்டே சொல்லு.. ! நான் வச்சுடுறேன்"

அம்பரி, அவ்வப்போது பிரின்சியிடம் நலம் விசாரித்து சற்று நேரம் ஆறுதலாக உரையாடுவாள். அப்போது ஒரு முறை குழந்தையை தானே வளர்க்க கேட்டாள். ஆனால் அதற்கு பிரின்சி சம்மதிக்கவில்லை. " வேண்டாம் அம்பரி. உனக்கு நிச்சயமாக குழந்தை பிறக்கும். இன்றைக்கு இரக்கப்பட்டு நீ வளர்க்கலாம், உனக்கென்று ஒரு குழந்தை பிறந்தால், நீ பாகுபாடு பார்க்க மாட்டாய் தான். ஆனால் வெளி உலகம் சும்மா இருக்காது. இரு குழந்தைகளின் மனதை கெடுத்துவிடும். அப்போது உனக்கு கஷ்டமாகிவிடும். அதற்கு பதில் குழந்தை பெற முடியாதவர்களிடம் பாப்பாவை தந்தால், அதன் எதிர்காலம் வளமாக இருக்கும்.. பாப்பாவும் சந்தோஷமாக வளர்வாள்... நான் பிராக்டிகலாக சொல்றேன். நீ தவறாக நினைக்காதே அம்பரி" என்று அந்த பேச்சை முடித்து விட்டாள்.

பிரின்சியை நினைத்துப் பார்த்தாள்.. சாகும் வயதா இது?கீர்த்தியை விட ஒரு சில வயதுதான் கூடுதலாக இருக்கும். ஆனால் அவளை பார்த்தால் அம்பரியை ஒத்த வயது போலத்தான் தோற்றம். அவள் வாழ்வு கொடுக்க நினைத்த குழந்தையும் பாவம்.. தாயாக இத்தனை நாள் பார்த்துக் கொண்டவளை இழந்தால் அந்த பிஞ்சு மனம் என்ன பாடுபடும்? என்று எண்ணி மனம் வருந்தியபடி அமர்ந்திருந்தாள்.

மாலை சிற்றுண்டி சாப்பிட வருமாறு மாரி வந்து அழைக்க..

சாப்பிடும் மனநிலை இல்லை.. என்றாலும் எழுந்து சென்றாள். சாப்பாட்டு அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். மழை திரையை போல் அடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

சூடான பஜ்ஜியை எடுத்து உண்டுவிட்டு, இனிப்பை மறுத்துவிட்டு டீயை கொண்டு வரச் சொல்லி பருகிக் கொண்டிருக்கும் போது..

ஆனந்தவள்ளி அவள் அருகே வந்தமர்ந்தார். அவருக்கு சுண்டல் கொண்டு வந்து வைத்தாள் ராமாயி.

"அத்தை, உங்க பிள்ளை போன் செய்தார்.. என்று அம்பரி விவரம் சொன்னாள்.

அவள் சொன்னதை இயல்பாக எடுத்து," இங்கே அப்படித்தான் அம்பரி. மலைக்கு இப்படி மழையின் போது போனால், தொடர்பு கிடைக்காது. எனக்கு இதெல்லாம் பழக்கம் தானே? என்றவர், பேசாமல் நீயும் அவன்கூட போயிருக்கலாம் அம்பரி" என்றார் அத்தை.

" இல்லை அத்தை, உங்க பிள்ளை அங்கே எல்லாம் பார்த்துக் கொள்வார். நானும் போயிருந்தால் அவருக்கு கூடுதல் பொறுப்பாகியிருக்கும்.. அது மட்டுமில்லாம, உங்க இரண்டு பேரையும் நினைச்சு நான் அங்கே கவலைப்பட்டுக் கொண்டு இருப்பேன். எல்லாம் நன்மைக்கு தான் அத்தை" என்று அவருக்கு மட்டுமின்றி தனக்குமாக சொல்லிக் கொண்டாள்.
🤎🤎🤎

கீர்த்திவாசனை பாராமல் ஒரு நாளை கடப்பதே அவளுக்கு இத்தனை சிரமமாக இருக்கையில், அவன் வருவதற்கு மேலும் இரண்டு நாட்களாகும் என்றது, உண்மையில் அவளை அதிர வைத்திருந்தது. மாமியாரிடம், தைரியமாக சொல்லிவிட்டாலும் ஏனோ, மலை பிரதேசத்தில் அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள, உள்ளூர நடுங்கியபடி, அவனுக்கு ஏதும் ஆகாமல் காப்பாற்று இறைவா என்று உருப்போட்டவாறு...
சென்று பூஜை அறைக்குள் தஞ்சமானாள்.

இதற்கு முன்பு அவளது தந்தை எத்தனையோ முறை சென்றிருக்கிறார். அப்போது எல்லாம் அவள் மனம் இப்படி பதறியது இல்லை. இப்போதோ அவனை கண்ணால் பார்க்கும்வரை அவளால் நிம்மதியாக இருக்க முடியும் போல தோன்றவில்லை. ஆனால் அதற்கு வழிதான் தெரியவில்லை.. அப்படியே அன்றைய நாள் தவிப்புடன் கழிய,

அன்றைய இரவில், தங்கள் அறைக்கு செல்லாது, மாமியார் இருந்த அறைக்கு அடுத்ததாக இருந்த விருந்தினர் அறையில் சென்று படுத்துக் கொண்டாள். இரவெல்லாம் மழை பெய்து கொண்டிருந்தது, தூக்கம்தான் வருவேனா என்று கண்ணாமூச்சி ஆடியது.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் மழையுடன் கழிந்தது. அதற்கு அடுத்து வந்த நாட்களில் கீர்த்திவாசன், சொன்னது போல இல்லாமல் கூடுதலாக, சில நாட்கள் அங்கே தங்கும்படி நேர்ந்து விட்டது. அதற்கிடையே பிரின்ஸியின் குழந்தையை தத்தெடுக்க தம்பதியும் வந்துவிட, அந்த விதிமுறைகளை முடிக்க வேண்டியிருந்தது. குழந்தையை ஒப்படைத்த, அன்றைய இரவே, மகள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டாள் என்ற நிம்மதியோ, என்னவோ, பிரின்ஸியின் மூச்சும் நின்று போயிற்று. மறுநாள் அதற்கான வேலைகள் ஒரு புறம், மழையினால் சுற்றுலா செல்ல முடியாமல், சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட காரணத்தால், விடுதியில் தங்கிவிட்ட சுற்றுலா பயணிகளை கவனிக்க போதிய ஆட்கள் இல்லாததால் .. கிட்டதட்ட எல்லோருமே வேலை செய்ய வேண்டிய நிலை.. கீர்த்திக்கு இன்னமும் அங்கே மராமத்து பணிகள் வேறு செய்ய வேண்டியிருந்தது. எல்லாமும் முடிவதற்கு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது..

அதற்குள்ளாக அம்பரி தான் கணவனை காணாமல் தவித்துப் போனாள். அவனை கண்ணாற காணும் ஏக்கம் புரிந்தோ என்னவோ கீர்த்திவாசன், இடையில் ஒருநாள் காணொளியில் வந்தான். அவனது தோற்றம் கண்டு துணுக்குற்றாள். மீசையும்,தாடியுமாக கல்யாணத்திற்கு முன்பிருந்த தோற்றதில் இருந்தான்.

"வாசன், என்னாச்சு உங்களுக்கு உடம்புக்கு முடியலையா? " குரலை இயல்பாக வைக்க முயன்றும் லேசாக நடங்கிவிட்டது.

"நான் நல்லாத்தான் இருக்கிறேன். நீ தான் ஏதோ பத்து நாள் காய்ச்சலில் படுத்து எழுந்தவள் போல தெரிகிறாய்? சரியாக சாப்பிடாமல், தூங்காமல் என்ன செய்கிறாய் அம்பரி? கண்ணோரம் பார் கருவளையம், ஏன் அம்பரி? ஏதாவது பிரச்சினையா? எனக்கு தெரியாம மறைக்கிறாயா என்ன?" என்று அதட்டினான்.

இவன் என்ன நான் அவனை கேட்டால், பதிலுக்கு என்னை அதட்டுகிறான்? என்று உள்ளூர கடுப்பானவள், அதை மறைத்து ,"ம்க்கும், தினமும் அத்தை கூடத்தான் சாப்பிடுறேன். நான் சரியாக சாப்பிடாவிட்டால் அத்தை என்னை சும்மா விட்டு விடுவர்களாக்கும்? நீங்கதான் எதையோ மறைக்க என் மேல பழியை போடுறீங்க" என்றவள், "போனை தூரமா வச்சுட்டு எழுந்து நடங்க" என்றாள் சற்று அதிகாரத் தோரணையுடன்.

கீர்த்தியின் கண்கள் பளிச்சிட," ஏய் அம்பரி..விட்டால் என்னை பரேட் நடத்த சொல்வாய் போலிருக்கிறதே? என்றவனின் குரலில் சிரிப்பு இருந்தது.

"ம்ஹூம், இந்த சிரிச்சு மழுப்புற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்.. இப்ப நீங்க நடக்கலைன்னா, நான் போய் அத்தைக்கிட்டே சொல்லிடுவேன்" என்று அம்பரி சிறுபிள்ளை போல மிரட்ட,

கீர்த்திவாசன் வாய்விட்டு சிரித்தான். அவனது சிரிப்பு அடங்க சில கணங்கள் பிடித்தது. ஒருவாறு தன்னை கட்டுப்படுத்தியவன்," அம்மாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவியா நீ?"என்றவன், எழுந்து நடந்து காட்டினான்.

அம்பரியின் கண்கள் அவசரமாக அவனை தலை முதல் கால்வரை அளவெடுத்தது. எங்கும் அடிபட்ட தடயமோ, பேண்டேஜோ இல்லை என்று தெளிவாகிவிட, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

கண்ணில் சிரிப்புடன்,"என்ன சின்ன பாப்பா, உன் சந்தேகம் தீர்ந்ததா? என்றான்.

அவனது பேச்சை கவனியாதவள் போல,"ஆமா இதென்ன கோலம்?" என்று சைகையால் அவனது தாடியை காட்டினாள்.

"அதுக்கு கூட நேரம் இல்லை.. அவ்வளவு பிஸிமா. அதான் உனக்கு போன் கூட பண்ண முடியாம போயிடுச்சு. சரி கார்ப்பென்டடர் வந்திருக்கார் போய் பார்க்கிறேன். நீ, ஒழுங்கா சாப்பிடு.. நான் சீக்கிரமாக வர முயற்சி பண்றேன்" என்று விடை பெற்றான்.

அதன் பிறகு இருவரும்,தொடர்ந்த நாட்களில், முடிந்தவரை காணொளியில் பேசிக் கொண்டனர். அதிலேயே அம்பரியின் மனது ஓரளவுக்கு சமாதானம் ஆகிட்டது. ஆனாலும் அம்பரி, அவன் திரும்பி வரும் நாளுக்காகவும், அவனிடம் தன்னை ஒப்புக் கொடுக்கவும் ஆவலாக காத்திருந்தாள்..!

ஆனால்.. அந்த நாள் வந்த போது.. !
 

Attachments

  • CYMERA_20220831_232804.jpg
    CYMERA_20220831_232804.jpg
    41.9 KB · Views: 24
Top