• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 27

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
27. எந்தன் ஜீவன் நீயடி..!

கொடைக்கானல், மலையடிவாரத்தில் இருந்த கிராமத்திலுள்ள பெரிய வீட்டில்..

சூடாமணி படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். ட்ரிப்ஸ், ஏறிக்கொண்டிருந்தது. அருகே நர்ஸ் ஒருத்தி கையில் ஒரு புத்தகத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

"என் சம்சாரம் எப்படிம்மா இருக்கிறா? என்றவாறு உள்ளே வந்தார் சூடாமணியின் கணவர் செந்தாமரை.

"இப்ப கொஞ்சம் முன்னேற்றம் இருக்குங்க அய்யா... ஆனால் அப்பப்ப கண்ணை திறக்க முயற்சி பண்றாங்க.. இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சிருக்காங்க.." தாழ்ந்த குரலில் நர்ஸ் பதில் சொல்ல, கண்கள் கலங்க, மெல்ல மனைவியின் தலையை வருடி விட்டார்.

கடந்த நான்கு வருடங்களாக சூடாமணி கோமாவில் இருந்தார்.. இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அவருக்கு ஒருவழியாக சுயநினைவு திரும்பியிருந்தது. அதிலேயே செந்தாமரை நிம்மதியடைந்திருந்தார். ஆனாலும் அவள் வாய் திறந்து பேசுவதற்காக ஆவலாக காத்திருந்தார்.

ஆரம்பத்தில் டாக்டர்கள், கோமாவில் போனவர்களுக்கு உடனடியாக நினைவு திரும்புவது லட்சத்தில் ஒரு கேசில் தான். ஆண்டுகணக்காக படுத்த படுக்கையாக கிடந்து மீளாமல் போனவர்களும் உண்டு.. அதிர்ஷ்டவசமாக ஒரு சில ஆண்டுகளில் நினைவு திரும்பியவர்கள் ஒரு சிலரே..என்று சொன்னார்கள். ஆனால் இப்போது நினைவு திரும்பியதும், அந்த வகையில் சூடாமணி அதிர்ஷ்டசாலி என்றனர்.

பெற்ற மகனின் கைங்கரியத்தில் தான் சூடாமணிக்கு இந்த நிலை. தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகன். மிகவும் செல்லமாக வளர்த்துவிட்ட பாவத்திற்கு தான் இந்த தண்டனை போலும். மகன் விரும்பிய பெண்ணை கட்ட வேண்டும் என்றதும் படியேறி சென்று பெண் கேட்டனர். அவர்கள் ஆறு மாதங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்றதும் வேறு பெண்ணை கட்டி வைக்க நினைத்தனர் பெற்றவர்கள். ஆனால் மகனோ "கட்டுனா அவளைத்தான் கட்டுவேன். இன்னும் ஒரு ஆறுமாசம்தானே? பொறுத்தால் போயிற்று" என்றதும் பிள்ளையின் ஆசைக்கு மதிப்பளித்தனர். சொன்னது போல ஆறு மாதங்கள் கழித்து சென்று பெண் கேட்டனர். அவர்களுகும் மறுக்காமல் நிறைய சீர் செனத்தியோடு பெண்ணை கட்டி கொடுத்தார்கள்.

அமுதவானன் ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட சுதாகரியுடன் ஆரம்பத்தில் காதலுடன் தான் குடும்பம் நடத்தினான். ஆனால் திடுமென, அவனது நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தது. காரணத்தை அறிந்த மனைவியோ முதலில், அவனிடம் சண்டை போட்டாள். ஆனால் அவன் மாறப் போவதில்லை என்று புரிந்தபின் மௌனமாக, தன் எதிர்ப்பை காட்டினாள். அதனால், மனைவியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது, குடித்துவிட்டு வந்து அடிப்பது என்று மகன் நடந்து கொண்ட முறையை பெற்ற தாயால் ஜீரணிக்க முடியவில்லை.
தட்டிக் கேட்கப் போனால் இது புருஷன் பெண்டாட்டி விவகாரம் இதில் தலையிடாதீக என்று ஒதுக்கி விடுவான்.

செந்தாமரை பெரும்பாலும் தொழில் விஷயமாக வெளியூர் சென்றுவிடுவார். அவர் இருக்கும் போது அமுதவானன் தன் அராஜகத்தை வைத்துக் கொள்ள மாட்டான். சொல்லப்போனால் அந்த நேரம் அவன் வெளியூர் எங்காவது சென்று விடுவான்.

சூடாமணிக்கு தான் மகனின் இந்த நடவடிக்கை புரியாத புதிராக இருந்தது.
திடுமென ஒருநாள் சுதாகரி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட போது, பெற்றவர்கள் இருவருமே பதறித்தான் போனார்கள். தற்கொலை என்றதும் எங்கே பெண்ணை பெற்றவர்கள் போலீஸ், கேஸ் என்று அலப்பறை செய்து வைப்பார்களோ என்று உள்ளூர கதிகலங்கியிருந்தனர் தாயும்,தகப்பனும்.. காரணம் அவர்கள் அதிகம் படிக்காதவர்கள். தங்கள் பெண் இறந்து போனதற்கு காரணம் ஏதும் கற்பித்து வழக்கு தொடுத்து விடுவார்களோ என்று அஞ்சினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு அமுதவானனும் ஒரு காரணம்.. அவளை இறுதி காரியத்திற்கு தூக்கிச் செல்ல முனைந்த போது"என் சுதாவை என்னை விட்டு பிரிக்காதீங்க, அவ இல்லாம இனி நான் எப்படி உயிர் வாழ்வேன்.. அய்யோ பிள்ளை இல்லைன்னு நான் ஒரு வார்த்தை கூட கோபப்படலையே.. இன்னும் வயசு இருக்கு, காலம் இருக்குனு எவ்வளவோ சொன்னேன்.. பாவி மகள் என் பேச்சை கேட்கவே இல்லையே.. என்னை இப்படி அனாதையாக்கிட்டு போயிட்டாளே.." என்று கதறிய கதறலில்.. அவனை தேற்றத்தான் எல்லாரும் முனைந்தார்களே தவிர வேற எதையும் யோசிக்கவில்லை..

சுதாகரியின் காரியம் முடிந்த பிறகும் சூடாமணிக்கு தான் மருமகள் நினைவில் சோறு இறங்க மறுத்தது. அவளைப் பற்றியே அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார். அப்படித்தான் ஒருமுறை, "அதிர்ந்து கூட பேசாதவள். அப்படிப்பட்டவளுக்கு எப்படித்தான் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு தைரியம் வந்ததோ? என்று வேதனையுடன் அவர் சொல்ல, அமுதவானன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,"சனியன் தொலைஞ்சதுன்னு தலை முழுகு ஆத்தா. அதை விட்டுட்டு, எப்ப பார்த்தாலும்
ஒப்பாரி வைக்காதே" என்ற மகனை திகிலோடு பார்த்தார் சூடாமணி.

மருமகள் என்ன காரணத்துக்காக இறந்தாள் என்று அதுவரை தெரியாமல் குழம்பி இருந்த அவனது தாய் சூடாமணிக்கு, அந்த செய்தி புதிது. மகனின் பேச்சும் செயலும் அவருக்கு உள்ளூர பதற்றத்தையே உண்டாக்க, அதை தன் மனதுக்குள் அதை மறைத்து வைத்துவிட்டு, கணவரிடம் அவனுக்கு இடம் மாற்றம் தேவை என்ற சொல்லி வெளிநாட்டிற்கு மூன்று மாத விசாவில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அமுதவானன் வெளிநாடு சென்றபிறகும் கணவனிடம் மகனைப் பற்றி சொல்லாமல் விட்டதால் தான், அவன் திரும்பி வந்தபின், அவருக்கு இந்த கதி நேர்ந்து நோயாளியாக படுக்கையில் கிடக்கிறார்.

💙🤎💙

அடுத்து வந்த நாட்களில் சூடாமணியிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.. கண்கள் திறந்து பார்த்தார். பேசுவதற்கு முயல்வதும், அப்படியே நினைவு தப்பிவிடுவதுமாக இருந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு, அன்றும் அப்படித்தான்
அதிகாலையில் அவருக்கு விழிப்பு வந்தது. சுற்றிலும் நிதானமாக கண்களை ஓடவிட்டார். பக்கத்தில் இருந்த கட்டிலில் கணவர் தூங்கிக் கொண்டிருக்க, அறை வாயிலில் கிடந்த சோபாவில் அந்த நர்ஸ் படுத்திருந்தாள்..!

அவர்களின் தூக்கத்தை கெடுக்க மனமின்றி கண்களை மூடிக் கொண்டார் சூடாமணி. அவருக்கு அல்பாயுசில் மறைந்து போன மருமகளின் நினைவு வந்தது. எத்தனை அருமையான பெண். மகன் விரும்பிய பெண் என்பதால் மட்டுமின்றி, அவளது குணமும், அவள் காட்டிய பிரியமும் தங்களுக்கு மகள் இல்லாத குறையை தீர்க்க வந்தவளாகத் தான் எண்ணினார். ஆனால் எல்லாமும் கானல் நீராகிப் போயிற்றே.. அவரையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.. " பெத்த பிள்ளை குணத்தை தெரிஞ்சுக்காம உன்னை கட்டி வச்சு உன் வாழ்க்கையை பாழாக்கி, உசுரோட தொலச்சிட்டோமே.. மன்னிச்சிடு கண்ணு" மானசீகமாக மன்னிப்பு கேட்டவருக்கு அழுகை பொங்கியது. அவரது கேவலில் திடுக்கிட்டு கண் விழித்தார்,செந்தாமரை.

"மணி, மணி என்னாச்சுமா? எங்காணும் வலிக்குதா" என்று பதற்றமாக வினவ, அதற்குள்ளாக நர்ஸ் விரைந்து வந்து விளக்குகளை எரியவிட்டு, சூடாமணியை நெருங்கி, நாடியைப் பிடித்து பரிசோதித்தாள்.

"எதுவும் கடிச்சு வச்சிருச்சா, சொல்லுமா, எதுக்கு இப்படி அழுகிறே? என்றார் செந்தாமரை பதற்றமாக..

"பாவம்ங்க சுதாப் பொண்ணு" என்று திக்கி திக்கி சொல்ல.. செந்தாமரை திகைப்புடன் மனைவியை பார்த்தார்.. மனைவியின் குரலை கேட்க மிகுந்த ஆவலாக இருந்தவர், முழுதாக நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நினைவு திரும்பியதும், மகனைப் பற்றி கேட்காமல் மருமகளைப் பற்றி கேட்கிறாளே.. அவள் மீதுதான் இவளுக்கு எத்தனை பாசம்? இருக்கும் தானே? அவள் மகள் போலத்தானே நடந்து கொண்டாள், அருமையான பெண், அவர்களுக்கு தான் கொடுத்து வைக்காமல் போய் விட்டது என்று பெருமூச்சுடன் நினைத்தவர், "எல்லாம் விதிம்மா.. என்ன செய்யச் சொல்றே.. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்மா.. நீ மனசை போட்டு குழப்பிக்காதே மா" என்று மனைவியை தேற்றியவர், " நர்ஸம்மா, இப்ப அவளுக்கு ஏதும் பிரச்சினை இல்லையே? என்று கேட்டார்.

"இப்ப பயப்பட ஒன்றும் இல்லைங்கய்யா. டாக்டருக்கிட்டே நான் இப்ப போன்ல விஷயத்தை சொல்றேன். அவர் வந்து பார்த்துட்டு மேற்கொண்டு என்ன செய்யணும்னு சொல்வார்" என்றாள் நர்ஸ்.

ஒரு மாதம் கழிந்த நிலையில், சூடாமணியின் உடல்நிலை ஓரளவுக்கு தேறியிருந்தது. வீட்டினுள் நடக்கும் அளவுக்கு தெம்பு திரும்பியிருந்தது.

செந்தாமரையின் மனதுக்குள் ஒரு கேள்வி அரித்துக் கொண்டிருந்தது. இப்போது மனைவி உடல் தேறி எழுந்ததும் அதை கேட்டு விட நினைத்து, மெல்ல பேச்சு கொடுத்தார். "ஏன் புள்ள, அன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும், அப்படி என்னதான் புள்ள தகராறு?" என்று கேட்டார். அன்றைய சம்பவம் எதனால் என்று அவருக்கு தெரியாது. மகனிடம் பேசப் பிடிக்காததால் அது பற்றி கேட்காமல் விட்டுவிட்டார்.

சூடாமணி உடனடியாக பதில் சொல்லாமல் சிலகணங்கள் அவரை பார்த்து விழித்தவர். கணவர் எதை பற்றி கேட்கிறார் என்று புரிந்ததும் உள்ளூர திடுக்கிட்டுப் போனார். அவருக்கு கணவரைப் பற்றி நன்றாக தெரியும். மகனுக்கு அப்படி ஒரு தரம்கெட்ட எண்ணம் இருந்ததோ, அதன் காரணமாக மருமகள் உயிரை விட்டதோ, அதற்காகத்தான் தன்னிடம் அன்று அப்படி மூர்க்கமாக நடந்து கொண்டான் என்பதோ தெரிந்தால் மகன் என்றும் பார்க்காமல் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துவிட்டுத்தான் ஓய்வார்.

தவம் இருந்து பெற்ற மகனை அப்படி கம்பிகளுக்கு பின்னால் பார்க்க, அந்த தாயின் மனம் இடம் தரவில்லை. ஆகவே சுதாரித்துக் கொண்டு," சாதாரண தகராறு தான் அத்தான். அவன் வெளிநாட்டுல இருந்து வந்ததுல இருந்து சரியா சாப்பிடாம ஏதோ யோசனையாவே இருந்தான். சுதா நினைப்புல தான் அப்படி இருக்கான்னு நினைச்சு, நான் அவனை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன், அவன் கோவமா, சுதாவை மறந்துட்டு இன்னொருத்தியை கட்டிக்க என்னால முடியாதுன்னு கத்தினான்..செத்துப் போனவளை நினைச்சு எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பேன்னு நான் சத்தம் போட்டேன்,அதுலதான் எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் முத்திடுச்சுங்க" ஒருவாறு திணறியபடி சொன்னார். மனைவியின் திணறலையும், பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொண்டதையும் நோயின் பாதிப்பு என்று நினைத்துக் கொண்டார் கணவர்.

ஆனால் தன் பதிலால் செந்தாமரையின் முகத்தில்,தெரிந்த குழப்பமான யோசனைகளை பார்த்த சூடாமணிக்கு ஏனோ உள்ளம் நடுங்கியது.. அப்படியும் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்தார்.. !

சூடாமணி என்ன கோரிக்கை வைத்தார்? அதனால் யாருக்கு நன்மை விளையும்? அது நன்மைதானா? அமுதவானன் அப்படி என்ன செய்து விட்டான்?

🤎💙🤎
 

Attachments

  • CYMERA_20220906_161148.jpg
    CYMERA_20220906_161148.jpg
    25.1 KB · Views: 26
Top