• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 29

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
அன்று..!

அமுதவானன் கண்மண் தெரியாத ஆத்திரத்தில் இருந்தான், என்ன செய்கிறோம் என்று புரியாமல், பெற்ற தாய் என்றும் உணராமல், கையில் இருந்த கட்டையால் தாயின் தலையில் தாக்கிவிட்டான், சூடாமணியும், தன்னிச்சையாக தலையை நகற்ற, அந்த சிறு அசைவில் அவனது கை பக்கவாட்டு தலையில் வேகமாக இறங்க.. "ஐயோ அம்மா...ஆ.." என்ற அலறலுடன் , அப்படியே மயங்கி கீழே சரிந்தார். ரத்தம் பார்த்ததும் திகைத்து நின்ற அமுதவானன், ஆட்கள் வரும் அரவம் கேட்டு அங்கிருந்து ஓடிப்போனான். சத்தம் கேட்டு, பின் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் ஓடி வந்து சூடாமணியை பார்த்து பதறி கதற,

மனைவியை அள்ளிப் போட்டுக் கொண்டு, ஆஸ்பத்திக்கு சென்றார். அங்கே போய் சேருவதற்குள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் சூடாமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.. செந்தாமரைக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. உடனடியாக,காவல்துறையை அழைத்து, மகனின் மீது புகார் கொடுத்துவிட்டார்.

நான்கு நாட்களுக்கு பிறகுதான் சூடாமணி உயிர் பிழைத்த செய்தியை சொன்னார் மருத்துவர், மேலும் அவரது தலையில் அடிபட்டதால் கோமாவிற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்க, இடிந்து போனார் செந்தாமரை.

தலைக்காயம் ஆறும் வரை மருத்துவமனையில் வைத்து இருந்தார், அதன் பிறகு வீட்டிற்கு கொணர்ந்து நர்ஸ்களை வைத்து தொடர்ந்து வைத்தியம் பார்த்தார்.

இத்தனை காலமாக கோமாவில் இருந்த சூடாமணி, ஒரு மாதத்திற்கு முன்புதான் சுயநினைவுக்கு திரும்பியிருக்கிறார்.

மேலும் இரண்டு வாரங்கள் சென்றது, சூடாமணிக்கு உடல் நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்திருந்த போதும், மனநிலை கொஞ்சமும் சரியில்லாமல் போயிற்று. அவரது ஒரே மகன், செய்து வைத்திருக்கும் காரியத்தால் ஜெயிலில் இருக்கிறான். பெற்ற தாயாக அவனை அவர் வேண்டுமானால் மன்னிக்கலாம். ஆனால் கணவர் மகனை மன்னிக்க மாட்டார் என்று தெரியும். ஆனாலும் விடாமல் மகனுக்காக பரிந்து கொண்டிருந்தார் அந்த தாய். அன்றும் அப்படித்தான்.. மதிய உணவை முடித்து விட்டு ஓய்வாக சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த செந்தாமரை மனைவியின் நலனை விசாரிக்க ஆரம்பித்தார்.

"மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டியாத்தா? டாக்டர் சூப் எல்லாம் சாப்பிட சொன்னாரே? அதெல்லாம் சரியா சாப்பிடுறியா??

" நம்ப சிங்காரி கரெக்டாக எல்லாம் தந்து விடுகிறாள் அத்தான்",என்றவர், " ஏங்க, நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களே"

"எனக்கு தெரியும் மணி, நீ என்ன கேட்க போறேனு.. எனக்கென்னவோ,அவன் செஞ்ச காரியத்துக்கு இன்னும் கொஞ்சம் நாள் உள்ளே இருந்துட்டு வரட்டும்னு தோனுது..! என்றார் வெறுப்புடன்.

கணவனின் ஆத்திரம் புரிந்தது. கூடவே அதன் காரணம் தன் மீது அவர் வைத்திருக்கும் அன்புதான் என்பதும் புரிந்தது, சில கணங்கள், மௌனமாக இருந்த சூடாமணி,"நமக்கு இருக்கிறது அவன் மட்டும்தானே? ஏதோ புத்தி கெட்டுப் போய் செய்து விட்டான். அதுதான் செஞ்ச தப்புக்கு நாலு வருசமா ஜெயில் தண்டனையை அனுபவிச்சுட்டானே? இன்னமும் எதுக்காக அவன் கஷ்டப்படணும்? அவனை வெளியே எடுத்து நல்ல புத்தி சொல்லி, வழிக்கு கொண்டு வரவேண்டியது பெத்தவங்க நம்ம கடமைதானே அத்தான்?"

"எனக்கு மட்டும் அவன் மேல பாசம் இல்லையா புள்ளே? அவன் திரும்பி வர்றதை விட திருந்தி வரணும்னு தான் நான் எதிர் பார்க்கிறேன்..! ஆனால் எனக்கு என்னமோ அந்த நம்பிக்கை இல்லை புள்ளே, பொண்ணு, பொருள், பணம், புகழ் மேல ஆசை வச்சவன் எப்பவும் விளங்குனதா சரித்திரமே இல்லை புள்ளே"...! என்று அவர் பொதுவாக சொல்ல சூடாமணி துணுக்குற்றார்.

தொடர்ந்து செந்தாமரை, "ஹூம் எல்லாம் நாம வாங்கி வந்த வரம்.. அவ்வளவுதான் வேறென்ன சொல்ல.. " என்றவர் " இந்தா புள்ளே நீ கண்டதையும் நினைச்சு மனசை வருத்திக்காதே. நான் அவனை வெளியில எடுக்க ஆக வேண்டியதை பார்க்கிறேன். நீ செத்த நேரம் படுத்து தூங்கு புள்ளே" என்றவர் யோசனையுடன் கண்களை மூடிக்கொண்டார்.

செந்தாமரை என்னவோ மனைவியிடம் வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால் அவருக்கு மகனின் மீது இருக்கும் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. மனைவி என்றால் அவருக்கு உயிர். மனைவிக்கும் கணவன் என்றால் அப்படித்தான். குழந்தை இல்லாமல் இருந்து, அதன் பிறகு தவமாய் தவமிருந்து அமுதவானன் பிறந்தான். ஒரே மகன் கேட்டதும் கேட்காததும் அவனுக்கு கிடைத்தது. கல்லூரி வரை ஏதோ தக்கிமுக்கி படித்து முடித்தான். அதன் பிறகு தந்தையுடன் தொழிலை பார்த்துக் கொண்டான். அவ்வப்போது நண்பர்களுடன் ஊர் சுத்தவும் போய்விடுவான். அவருக்கு இருப்பதோ ஒரே பிள்ளை, இருக்கும் சொத்து பத்து எல்லாம் அவனுக்குத் தானே? பொறுப்பு வரும்போது அவனே எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிட்டார்.

ஆனால்,இப்போது மகன் செய்து வைத்திருக்கும் காரியத்திற்கு அவன் முகத்தில்கூட முழிக்க அவருக்கு விருப்பமில்லை. கூடவே மனைவி சொன்ன விஷயமும் அவருக்கு சற்று உறுத்தலாக இருந்தது.

முன்பு, நண்பன் கங்காதரன் சொன்னதற்கும், இப்போது மனைவி சொல்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. நண்பன் பொய் சொல்ல தேவை இல்லை. அவனுக்கு அதனால் எந்த லாபமும் இல்லை. ஒரு வேளை மனைவி தான் மாற்றி சொல்கிறாளோ? அல்லது சரியாக நினைவின்றி இப்படி சொல்கிறாளா? என்று செந்தாமரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் என்ன காரணமாக இருந்தாலும் மகன் மனைவியை தாக்கியதை அவர் ஒருநாளும் மன்னிப்பதாக இல்லை..

சூடாமணிக்கும் மனதுக்குள் உறுத்தல் தான். மகனை காப்பாற்ற அவர் நடந்ததை மாற்றி சொல்லிவிட்டார். ஆனால் அது கணவருக்கு தெரியும் போது என்ன விளைவு உண்டாக்குமோ என்று அச்சமும் தோன்றியது. அவர் செய்த அந்த தவறால் தான் அவர்களின் மகன் மேற்கொண்டு செய்யப் போகும் காரியத்திற்கு தூண்டுதலாகிப் போகும் என்பதை அந்த தாய் அறியவில்லை.

💙🤎💙

அன்று வக்கீல் அலுவலகத்திற்கு சென்றிருந்தார் செந்தாமரை. வக்கீல் கனகசபை, அவரை வரவேற்று அமர வைத்தார். காபி வரவழைத்தவர்," நீங்க போன்ல சொன்ன விசயம் நிசந்தானா சார்? என்றார்.

"நிசந்தான் சார், என்ன செய்ய பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லுனு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? என் பெண்சாதி பிழைப்பாளா மாட்டாளானு நான் இத்தனை நாளும் கிடந்து தவிச்சுட்டு இருந்தேன். அவள் பிழைச்சு எழுந்ததும், அவளுக்கு முதல்ல மகன் நினைப்பு தான் வந்துச்சு. ஆயிரம் இருந்தாலும் இந்த பொண்ணுங்களுக்கு எப்பவுமே தாலி கட்டின புருசனைவிட, பெத்த புள்ளைதானே உசத்தி? ஒத்தை பிள்ளை ஏதோ கோவத்துல செஞ்சுட்டான். அதுக்காக அவனை உள்ளே வச்சுட்டு எனக்கு எப்படிங்க சோறு இறங்கும்னு ஒரே கண்ணீர் விடுறா, இப்பத்தான் கொஞ்சம் தேறி எழுந்த உடம்பு, அவள் கவலைப்பட்டு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டா என்ன செய்ய ஐயா,அதனால தான் எனக்கு மனசு ஒப்பாட்டியும், அவனை ஜாமீனில் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படியும் வெளியே கொண்டு வந்திரலாம்ல வக்கீலய்யா?" என்றார் செந்தாமரை.

வக்கீல் மறுத்துவிட மாட்டாரா என்று உள்ளூர அவருக்கு சின்ன நப்பாசை இருந்தது.

"இது முன் பகையோ, அல்லது, திட்டமிட்ட கொலையோ இல்லைங்கிறதாலும், பாதிக்கப்பட்டவங்க,குணமாகிட்டதாலயும்,வெளியே கொண்டு வந்துடலாம் சார். அத்தோடு கேஸ் கொடுத்த நீங்களே வாபஸ் வாங்கிட்டா, அவனை நிரந்தரமாக விடுதலை செய்யவும் வாய்ப்பு இருக்கு.." என்றார் வக்கீல்.

"அப்ப கேஸ் வாபஸ் வாங்கலைன்னா ?

"நிபந்தனை ஜாமினில் வெளி வரலாம். ஆனால்,தீர்ப்பில் குறிப்பிட்ட காலம் வரை தண்டனை அனுபவிச்சுட்டு வரணும்".

சில கணங்கள் யோசித்தார் செந்தாமரை, அதன் பிறகு, "சரி வக்கீலய்யா அவனை ஜாமீனில் எடுக்க ஆக வேண்டியதை செய்யுங்க. அவன் வெளியில வந்துட்டா என் பெண்டாட்டிக்கு நிம்மதி. அவளுக்காக தான் இதை செய்யவே நான் ஒப்புக்கிடுதேன்", என்றவர் எழுந்து விடைபெற்று கொண்டார்.

🤎💙🤎

செந்தாமரை வீட்டிற்கு திரும்பியதும், சூடாமணி கணவர் முகத்தையே ஆவலாக பார்த்திருந்தார்.

மனைவியின் முகம் பார்த்தே அவருக்கு தெரியத்தான் செய்தது. ஆனாலும் அவர் மௌனமாகவே சாப்பிட்டு எழுந்தார்.

சாப்பிட்டு முடியுமட்டும் காத்திருந்தவர், " போன விசயம் என்னாச்சுய்யா? வக்கீலய்யா என்ன சொன்னாரு?"என்று கேட்டு விட்டார்.

அப்போதும் உடனடியாக அவர் பதில் சொல்லவில்லை. அவர் வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்த பிறகே வாயை திறந்தார். "ம்ம்..ஜாமீன்ல எடுக்கலாம்னு சொன்னாரு. அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு தகவல் சொல்றேன்னாரு. நீ ஒரு விசயத்தை நல்லா மனசுல முடிச்சு போட்டு வச்சுக்கோ மணி, உன் முகத்துக்காகத்தான் நான் அவனை வெளியில எடுக்கிறேன். ஆனா, பழையபடி அந்த பயல் இப்படி ஏதும் ஏடாகூடாமா செஞ்சா, ஆயுசுக்கும் அவன் கம்பி எண்ணிட்டு கிடக்க வேண்டியது தான். " என்றார் ஆத்திரம் அடங்கிய குரலில்.

சூடாமணிக்கு மனதுக்குள் திக்கென்று இருந்தது. கூடவே நாலு வருட சிறை தண்டனை மகனை மாற்றியிருக்கும் என்றும் தோன்றியது. அவன் வந்ததும் விசயத்தை சொல்லி வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணத்தை முடித்து விடவேண்டும்" என்று நினைத்தார்.

"என்னத்தா பேச்சையே காணோம்? உன் மவன் வரப் போற சந்தோசத்தில் வார்த்தை வரலியாக்கும்" என்று நக்கலாக கேட்டார்.

"நான் என் மருமவளை நினைச்சுட்டு இருக்கேன்யா" என்றபோதே கண்களில் நீர் கோர்த்தது.

"அந்த மகராசியோட வாழ உன் மவனுக்கு தான் கொடுப்பினை இல்லை. நமக்கும் தான்.. என்று பெருமூச்சுடன் விட்டத்தை பார்த்தார்.

"ஏன்ங்க, சுதாப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி இருந்துச்சே,அதுக்கு கண்ணாலம் ஆயிடுச்சா?"

"உனக்கு நினைவு திரும்புறதுக்கு கொஞ்சநாள் முன்னாடிதான் அந்த புள்ளைக்கும், அவ அத்தை மவனுக்கும் கல்யாணம் ஆச்சுது. அவசரமா நடத்தறதால முறையா அழைக்க முடியலைன்னு.. நம்ம மருமவளோட அப்பாரு போன்ல தகவல் சொன்னாரு ! என்னைய பார்த்தாக்க அவுகளுக்கு சுதாப்பொண்ணு நினைப்பு வரும், அது மட்டும் இல்லாம, உன்னை இந்த நிலையில விட்டுட்டு போக எனக்கு பிடிக்க்கலை..

சூடாமணிக்கு கணவரின் பேச்சில் மனது சற்று அமைதியுற்றது. " ரொம்ப சந்தோசம்ங்க, நாம ஒரு நடை போய் பார்த்து வரலாமுங்களா? உடம்புக்கு முடியாதவங்கனு கேட்டப் பொறவு போக வேணாமா?" என்றார்

"நாலு வருசம் ஆனாலும் நம்மால இன்னும் மருமவளை மறக்க முடியலை. அவளை பெத்தவங்க, அது கூடப் பிறந்தது, அவுகளால அத்தன சுளுவா மறக்க முடியாது , அதனால இப்ப வேணாம் புள்ள, நம்ம மவனுக்கு கல்யாணம் காட்சின்னா கூப்பிட்டுக்க, ஒரு நடை போய் வரலாம் " என்றுவிட சூடாமணி மௌனமாகிவிட்டார்.
ஆனால் உள்ளூர, இனி பயப்பட தேவை இல்லை..என் மகன் மனசு மாறிவிடுவான், என்று நினைத்தார் அந்த பேதை.

நடக்கப்போவதை அவர் அறிவார்?
 

Attachments

  • CYMERA_20221129_131737.jpg
    CYMERA_20221129_131737.jpg
    13.2 KB · Views: 23
Top