• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 30

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
அன்று அமுதவானன் ஜாமீனில் வெளி வந்திருந்தான்!

செந்தாமரை அவனிடம் ஒன்றும் பேசவில்லை! அவனை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, அவர் தன் வேலையை கவனிக்க சென்றார்!
ஆனால் அவருக்கு மகன் அடித்ததற்கு மனைவி சொன்ன காரணம் தான் இன்னமும் நம்பும்படியாக இல்லை.. அதில் வேறு ஏதோ விவகாரம் இருக்கும் என்று உள் மனது சொன்னது! ஆகவே மனதை மாற்றிக்கொண்டு வீட்டுக்கு வண்டியை செலுத்தினார்!

ஆனால் பாதி வழியில் அவரது கைப்பேசி ஒலித்தது! அவரது மளிகைக்கடையில் இருந்து கணக்குப்பிள்ளை அவசரம் என்று அழைத்தார்! அவர் சொன்ன விசயம் உடனடியாக கவனிக்க வேண்டியது என்று வேறு வழியின்றி திரும்பி விட்டார்!


இரவு அவர் வீடு வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. எப்படியும் மறுநாள் மனைவியிடம் விசயத்தை அறிந்து கொண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தபடி படுத்துவிட்டார்!

மறுநாள்!

காலையில் வழக்கம்போல காலை அலுவல்களை முடித்தவிட்டு சாப்பிட அமர்ந்தார் செந்தாமரை! சூடாமணி பரிமாறினார்!

"எங்கே உன், அருமை மகன்? துரை இன்னும் எழுந்துக்கலையோ?

" எழுந்து காபி குடிச்சிட்டான்! குளிக்கப் போனான்!"

"இனி என்ன செய்யறதா உத்தேசம்? கடைக்கு வர்றானா? இல்லை இன்னமும் இப்படியே பொறுப்பில்லாம திரியப் போறானா?"

"நேத்து தானே வந்திருக்கிறான் மச்சான்! ஒரு வார்த்தை கூட பேசலை! அங்கே சரியான சாப்பாடு இல்லாம பிள்ளை உடம்பு ரொம்ப இளைச்சுட்டான்! அதனால கொஞ்சம் நல்லா சாப்பிட்டு ஓய்வு எடுக்கட்டும்! இரண்டு நாள் கழிச்சு சோலியை பார்க்க வரட்டும்"! என்றார்

"இந்த அம்மாக்களுக்கு இது ஒரு நினைப்பு, அவன் முன்னைவிட நல்லா முறுக்கிவிட்ட காளை போலத்தான் வந்திருக்கான்! ம்ம் நல்லா தேத்திவிடு இன்னும் கொழுப்பெடுத்து ஆடட்டும்"! என்றவர் ,இன்னிக்கு தென்னந்தோப்புல காய் இறக்கிறாங்க, மதிய சாப்பாட்டுக்கு வரதுக்கு கொஞ்சம் முன்னே பின்னே ஆகும்! நீ நேரத்துக்கு சாப்பிட்டு மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்ரு" என்றவர் எழுந்து கையை கழுவிவிட்டு பின் பக்கமாக இருந்த தென்னந்தோப்பிற்கு கிளம்பிச் சொன்றார் !

சற்று நேரம் கழித்து அமுதவானன் சாப்பிட வந்தான்! முன் தினம் அவன் வீடு வந்தது முதல் அதிகமாக பேசவில்லை! அதில் சூடாமணிக்கு பெரிதாக வருத்தம் ஒன்றும் இல்லை! கண் முன்னால் மகன் இருக்கிறான் என்பதே அவருக்கு போதுமானதாக இருந்தது! மகனின் குணத்தை எண்ணித்தான் உள்ளூர கலக்கம் உண்டாயிற்று! எப்போது என்ன செய்து வைப்பானோ என்று!

பேசாமல் சாப்பிட்டு முடித்த அமுதவானன், மாடிக்கு சென்றான்! சில கணங்கள் கழித்து அங்கிருந்தே அன்னையை மேலே வரச் சொன்னான்!

தென்னந்தோப்புக்கு சென்று கொண்டிருந்த செந்தாமரை அப்போதுதான் கைப்பேசியை எடுத்து வராதது புரிந்தது! தோப்புக்கு சென்ற பிறகு யாரையாவது அனுப்பலாம்தான்! ஆனால் தோப்புக்கு இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும்! அதற்கு பதிலாக, வீட்டுக்கு சென்று விடலாம் என்று திரும்பி நடந்தார்!

முதல் நாள் வந்தது முதலாக அவன் பேசாமல் இருந்ததே மனத்திற்கு சரியாகப்படவில்லை! இப்போது மகன் கூப்பிடவும் என்னவோ ஏதோ என்று பதறியபடி மாடிக்கு சென்றார் சூடாமணி!

"என்னடா? கீழேயே சொல்றதுக்கு என்ன? என்றார் சற்று சிடுசிடுத்தவாறு!

"அங்கேயே கேட்டா நீ சத்தம் போட்டு ஊரை கூட்டுவே!
"சரி சரி எதுக்கு கூப்பிட்டே அதை சொல்லு!

"எனக்கு கொஞ்சம் பணம் வேணும் " என்றான்!
"எவ்வளவு வேணும்?"

"4 லட்சம்"!

"என்னது!?? நாலு லட்சமா?" எதுக்குடா அவ்வளவு பண்ம்?
"எனக்கு இப்ப தேவைப்படுது!
பணம் கேட்டா கொடும்மா! அதை விட்டுட்டு அனாவசியமாக கேள்வி எல்லாம் கேட்காதே" என்றான் கடுப்புடன்

"எனக்கு தேவை இல்லைடா! உன் அப்பா கேட்டா நான்தானே பதில் சொல்லணும்! அதுதான் கேட்கிறேன்!

"நான் கல்யாணம் செய்துக்க போறேன்!! நான் கேட்ட பணத்தை கொடு! இல்லைன்னா நான் வட்டிக்கு கடன் வாங்குவேன்! அப்புறமாக மானம் போச்சு மரியாதை போச்சுன்னு உன் புருஷன் வந்து குதிப்பாரு! உனக்கு அது பரவாயில்லையா??"

கல்யாணம் என்று தானே சொல்கிறான்! அந்த பெண்ணை என்று சொல்லவில்லையே என்று சற்று ஆறுதல் உண்டாக, " நல்ல விஷயம்தானே? இப்பத்தானே நீ வந்திருக்கிறே! கொஞ்சம் நாள் பொறுத்துக்கோடா,நான் அப்பாக்கிட்ட சொல்லி, என்று தொடர்ந்து பேச முயன்ற தாயின் பேச்சில் குறுக்கிட்டான்!

"ம்மா..! இப்ப நீ எதுக்கு புதுசா ஆரம்பிக்கிறே? இனிமே உன்கிட்ட பேசி எந்த பிரயோசனமும் இல்லைனு தெரிஞ்சுடுச்சு! என் ஆசை என்னன்னு உனக்கு நல்லா தெரியும்மா! அப்படியும் நீ இப்படி பேசுறது சரியில்லை! இந்த நாலு வருசத்துல அதை மட்டும் நான் மறக்கலைமா!"

சூடாமணிக்கு பதற்றமும் ஆத்திரமும் ஒருங்கே உண்டாயிற்று! நாலு வருஷம் வெளி உலகை பாராமல் கஷ்டப்பட்டும் மகன் கொஞ்சமும் திருந்தவே இல்லையே!"இங்கே பாருடா, அமுதா, ஏதோ யார் செய்த புண்ணியமோ,இன்னிக்கு நான் உயிர் பிழைச்சு எழுந்துட்டேன்.. இனிமேவலாவது நீ உன் பிழைப்பை பாரு.. நம்ம சொந்தத்திலேயே அழகான பொண்ணுங்க இருக்காங்க, நல்ல வசதியான வீட்டுப் பிள்ளைகள் தான்! தரகர் மூலமாக வரன்களும் வருது! அதுல ஒரு பொண்ணை காட்டு, உனக்கு கட்டி வைக்கிறோம்.. சந்தோஷமா குடும்பம் நடத்தற வழியைப் பாருடா, அப்படி இல்லைன்னா, பெத்த பிள்ளை என்றுகூட உன் அப்பா பார்க்க மாட்டார்! மனசுல வச்சுக்க"
சூடாமணி பேசும் போதுதான் செந்தாமரை பின்பக்க படிக்கட்டுகள் வழியாக தங்கள் அறைக்கு சமீபமாக வந்திருந்தார்!

மகனுடைய அறையில் இருந்து வந்த மனைவியின் பேச்சில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பிப்போனவர், தொடர்ந்த மகனின் பேச்சும் அவருக்கு சுத்தமாக புரியவில்லை! என்னடா நடக்குது என்ற தோரணையில் மொட்டை மாடி செல்லும் படிக்கட்டின் கைப்பிடிச்சுவரை பிடித்தபடி நின்றுவிட்டார்!

"என்னம்மா,பூச்சாண்டி காட்டுறியா? எல்லாம் வரப்போவே விசயத்தை கேட்டு தெரிஞ்சுட்டுதான் வந்திருக்கிறேன்..! அதனால நீ பேசாமல் ஒதுங்கிக்கோ!" என்றான் கறார் குரலில்!

"டேய் நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்றாப்ல சொல்றேன்! நீ என்னடான்னா பழைய குருடி கதவத்திறடின்னு பேசிட்டு இருக்கிறே! வேண்டாம்டா அமுதா! உன்னோட நினைப்பை மாத்திக்கடா! ஆமா நீ என்னத்தை கேட்டு தெரிஞ்சுட்டு வந்தே? இந்த தரம் நான் உன் அப்பாருக்கிட்டே கெஞ்சி கூத்தாடித் தான், நீ இப்ப வெளியில வந்திருக்கிறே. இல்லைன்னா நீ இன்னமும் ஜெயில்ல களி தின்னுட்டு இருந்திருப்ப.. பெத்த பாவத்துக்காக பெரிய மனசு பண்ணி உனக்கு பெயில் வாங்கியிருக்காரு.. இன்னமும் அந்த மனுசனுக்கு உண்மை விவரம் தெரியாது! அதோட கேஸை இன்னும் அவர் முழுசா வாபஸ் வாங்கிடலை. அதை நினைப்புல வச்சுக்கிட்டு சூதானமா நடந்துக்க பார்"

என்றார் அழுத்தமான குரலில்.
அன்று வரை மனைவி அப்படியான உயர்ந்த குரலில் பேசி அறிந்திராதவர் செந்தாமரை! அந்த குரலில் தெரிந்த கடுமையை உணர்ந்து ஒரு கணம் திகைத்துதான் போனார்! அப்படியே படிக்கட்டில் அமர்ந்து கொண்டார்!

"ம்மா, நான் நேத்தே எல்லாத்தையும் விவரமா கேட்டுட்டு தான் நம்ம வீட்டுக்கே வந்தேன்! அதுக்கு நடந்தது கட்டாய கல்யாணம்! அவள் விரும்பி ஒன்னும் அவனை கட்டிக்கலை! ஆனாக்க நான் அந்தப் புள்ளையை கல்யாணம் கட்டிட்டு வந்து நிற்கலைன்னா என் பேரு அமுதவானன் இல்லை.. அவ புருசனும் வெளியூர் போய் இரண்டு வாரத்துக்கு மேலாச்சாம்! இதுதான் சரியான சமயம்! நான்.. இன்னைக்கே போய் அவளை பார்த்து இது அவ அக்காவோட கடைசி ஆசைன்னு சொன்னேன்னு வை, மறுபேச்சு பேசாம எனக்கு கழுத்தை நீட்டிருவா தெரியுமா? உன் புருஷனுக்கு பயந்துட்டு நீ வேணும்னா இருந்துக்க, நான் பயப்பட மாட்டேன்! போன தடவை நீ என்கிட்ட வாங்கின அடியை மறந்திருக்க மாட்டேனு நினைக்கிறேன்! அதனால என் வழியில குறுக்கே யார் வந்தாலும் நான் கண்டுக்க மாட்டேன்! போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்!"

அவனது குரலில் தெரிந்த வன்மம் சூடாமணியை மட்டுமல்ல, எதற்கும் அஞ்சாத செந்தாமரையை கலங்கடித்தது! அவருக்கு சில கணங்கள் எதுவும் ஓடவில்லை! மகன் வெளியே வருவது தெரிய அப்படியே மொட்டை மாடிக்கு போய் அங்கே இருந்த சிறு அறைக்குள் அமர்ந்துவிட்டார்! அவருக்கு படபடப்பாக இருந்தது!

மகன் பேசியதில் அவருக்கு முழுதாக விபரம் தெரியவில்லை! யாருக்கு கட்டாய திருமணம் நடந்தது? என்று யோசித்த போது அவன் சொன்ன அக்காவின் கடைசி ஆசை என்ற வார்த்தையில் அவருக்கு விளங்கிவிட்டது! கூடவே மனைவி சுதாகரியின் தங்கை பற்றி பேசியதும் நினைவுக்கு வந்தது! ஆக அந்த பெண் அம்பரியைத் தான் மகன் மறுதாரமாக்க நினைக்கிறான் என்று புரிந்தது! இன்னமும் அவருக்கு தெரியவேண்டிய விசயம் இருப்பதாக தேன்றியது! இப்போது மனைவி பலத்த அதிர்ச்சியில் இருப்பாள்! அவளுக்கு மேலும் அதிர்ச்சியை தரவேண்டாம் என்று நினைத்தவர் சில கணங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றார்! கைப்பேசியை எடுத்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பி வீட்டைவிட்டு வெளியேறினார்!
💙🤎💙
நித்யமூர்த்திக்கு சிகிச்சைக்கு பிறகு உடல்நலனில் நல்ல முன்னேற்றம் தான். ஆனந்தவள்ளி பழையபடி நடமாட தொடங்கிவிட்டார். அம்பரிக்கோ கீர்த்திவாசனை எப்போது காண்போம் என்றிருந்தது. ஒரு வாரம் என்றிருந்தது பத்து நாட்களுக்கும் மேலாக அவன் அங்கே மட்டுமின்றி மற்ற தொழில் நடக்கும் இடங்களுக்கும் போய் வந்தான். இங்கே வந்தால் நேர விரயம் என்றிருந்தான். எவ்வளவு சீக்கிரமாக வேலைகளை முடிக்க முடியுமோ, முடித்துவிட்டு வந்துவிடுவதாக கீர்த்தி சொன்னபடியே இருந்தானே தவிர, வேலைகள் வரிசைக்கட்டி கொண்டு வந்த வண்ணம் இருந்தது! ஆனால் ஒவ்வொரு நாள் நகர்வது மிகவும் சிரமமாக உணர்ந்தாள். உள்ளூர அவளுக்கே மிகுந்த வியப்பு தான்.. கீர்த்திவாசனுக்காக அவள் ஒரு நாள் இப்படி காத்திருக்க கூடும் என்று முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நல்ல நகைச்சுவை என்று அவள் சிரித்திருப்பாள். ஆனால் இதோ அது நடக்கும்போது அவளுக்கு தன்னை நினைத்து சிரிப்பு வந்தது.. ! சரியான மாயக்காரன்.. பேசிப் பேசியே அவளை இப்படி மாற்றி வைத்துவிட்டானே!

அன்று இரவு கீர்த்தி கைப்பேசியில் அவளை தொடர்பு கொண்டபோது அன்றுவரை கேட்காமல் தவிர்த்து வந்தது, அவள் வாய்மொழியாக வந்தேவிட்டது..

வழக்கமான நலன் விசாரிப்புகள் முடிந்ததும், "அம்பரி, நமக்கு கோவாவில் ஒரு பேக்டரி இருக்குனு தெரியுமில்ல? அதுல தயாரிக்கிற தயாரிப்புக்கு வெளிநாட்டுல நல்ல வரவேற்பு.. புதுசா ஒரு ஒப்பந்தம் கிடைக்கிற மாதிரி இருக்கு, அதுக்காக.. என்றவனின் பேச்சில் அம்பரி அவசரமாக குறுக்கிட்டாள்..!

"இருங்க, இருங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க? அந்த ஒப்பந்த விஷயமா நீங்க கோவாக்கு போகப்போறேன்னு சொல்லப்போறீங்களா? "

"அட எப்படி இவ்வளவு சரியா சொல்லிட்டே?" என்றான் கிண்டலாக

"ம்க்கும் இதுக்கு புதுசாக ஜோசியமா பார்க்கணும்? அங்கே போனதுல இருந்து இப்படித்தானே சொல்லிட்டு ஊர் ஊரா போயிட்டு இருக்கீங்க?" என்று அவள் படபடக்க, அவன் வாய்விட்டு சிரித்தான்..!

"இந்த சிரிச்சு மழுப்புற வேலை எல்லாம் வேணாம் சொல்லிட்டேன், ஆமா உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க? உங்களுக்குனு வீடு, வாசல் இருக்கிறது மறந்து போச்சா?" என்றாள் சற்று கோபமாகவே!

"எல்லாம் ஞாபகம் இருக்கு, அத்தோட அந்த வீட்டுல என் மனைவியும் இருக்கிறாள் என்பதும் நல்லாவே ஞாபகம் இருக்கு" என்றான் சிரிப்பு குரலில்!

"ஆகா நம்பிட்டேன், அப்படி நினைக்கிறவர் தான் மாசக்கணக்கா வெளியூரே கதின்னு இருக்காரோ?"

அம்பரியின் பேச்சில் கீர்த்திவாசனின் மனதுக்குள் வண்ண வண்ணக்கோலங்கள் பரவியது..! மனைவி மறைமுகமாக உணர்த்திய விஷயம் அவனை ஆனந்தத்தில் ஆழ்த்தியது..!

"இரண்டு நாட்களில் நான் வீட்டுக்கு வந்துவிடுவேன் அம்பரி..! அதை சொல்லத்தான் அழைத்தேன்! " என்றான்!

"அப்ப அந்த ஒப்பந்த விஷயம் ? நான் சொன்னதற்காக தானே இப்படி சொல்றீங்க? என்றாள் கம்மிய குரலில்

"ஒப்பந்த விஷயம் உண்மை தான் அம்பரி. அதற்காக நான் அங்கே போக தேவையில்லை.. அவர் தான் இங்கே வருகிறார்.. ! நான் முழுதாக சொல்வதற்குள் நீ கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாய்! ஆனால் அதுவும் நல்லதற்குதான்! என்றான் ஒரு மாதிரி குரலில்!

"என்ன நல்லது? அம்பரிக்கு புரியவில்லை!

"அதைவிடு, நான் வரும்போது உனக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று சொல், வாங்கி வருகிறேன்!

"எனக்கு ஒன்றும் வேண்டாம், நீங்க நல்லபடியாக வந்து சேருங்க போதும்! ஆ..ங் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நேற்று அண்ணிங்க எப்போ அங்கே வர்றீங்கனு கேட்டுபோன் பண்ணினாங்க, நீங்க வந்ததும் அதுபற்றி முடிவு செஞ்சுட்டு போன் பண்ணுறதா சொல்லிட்டேன்.. சரிதானே?"

"ரொம்ப சரி, நான் வந்ததும் மாமாவுக்கு பயணம் செய்ய முடியும்னா நாலு பேருமாக ஒரு ட்ரிப் போய் வரலாம், என்றவன், "சரி அம்பரி நாளைக்கு நிறைய வேலை இருக்கு, குட் நைட் !டேக் கேர்" என்று பேச்சை முடித்துக் கொண்டான் கீர்த்திவாசன்.

அம்பரிக்கு அவன் வருகிறான் என்ற செய்தியே அன்றைய தூக்கத்தை விரட்டிவிட்டது! ஏனோ சந்தோஷத்தில் உடம்பும் மனமும் பரவசமாக கட்டிலில் புரண்டிருந்தாள்.

அவன் வந்த பிறகு, ஏதேனும் மறக்க முடியாத பரிசு ஒன்றை தந்து அவனிடம் தன் மனதை சொல்ல வேண்டும்..என்று நினைத்தாள் அம்பரி. ஆனால் அவன் கோடீஸ்வரன், அவனிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை. அதே சமயம் அவள் எதை கொடுத்தாலும் அவன் முகம் மலர ஏற்றுக்கொள்வான் என்பதும் அவளுக்கு தெரியும்..! ஆனால் அவனுக்கு என்ன வாங்கித் தருவது.. அவள் சம்பாத்தியம் வங்கியில் சேர்ந்து கிடக்கிறது. அந்த பணத்தில் அவன் எப்போதும் அவளை நினைக்கும்படி ஒரு பரிசு வாங்க வேண்டும்.. ! சற்று நேரம் தீவிரமாக யோசித்தாள் !
அப்போதுதான் கீர்த்திவாசன் கொடைக்கானல் கிளம்பும் போது அவளிடம் கொடுத்த பரிசு பெட்டியின் நினைவு வந்தது. அன்றக்கு இருந்த மனநிலையில் அதை பிரிக்க மனமில்லாமல் தன் அலமாரிக்குள் போட்டு வைத்திருந்தாள். கீர்த்திவாசனும் கொடைக்கானல் போனபிறகு, அங்கே தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் காரணமாக அது பற்றி கேட்கவில்லை. இப்போது அது நினைவு வரவும் ஓடிச்சென்று எடுத்து பிரித்தாள்.

அது மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்(கைக்கடிகாரம்) அதில் கைப்பேசி அழைப்பை ஏற்கவும், செய்தி அனுப்பவும், முக்கியமாக உடல்நலத்தை பேணும்விதமாக சில செயல்பாடுகளும் இருந்தது. அதன் பயன்பாடு பற்றி மேலும் தெரிந்து கொள்ள வலைதளத்தில் தேடி அறிந்து கொண்டாள். அவளுக்கு அந்த கடிகாரம் மிகவும் பிடித்துப் போயிற்று. அவளும் கணவனுக்கு ஒரு சிறப்பான பரிசை தர வேண்டும். ஆனால் அவனிடம் இல்லாதது என்று எதுவும் இல்லையே..!

கூடத்தில் பெரிய டிவியில் ஏதோ சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. மாரிக்கு பாட்டு கேட்பது என்றால் இஷ்டம், அவள் பெருக்கி துடைத்தபடி டிவியிலும் ஒரு கண்ணை வைத்திருந்தாள்.
காலை உணவை முடித்துவிட்டு
அம்பரியும் கணவனுக்கு எதை பரிசளிப்பது என்ற தீவிர சிந்தனையுடன் அங்கேதான் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது விளம்பர இடைவேளை வந்தது. அதை அசுவாரசியமாக பார்த்திருந்தாள். அப்போது அதில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்ததும் வாங்க வேண்டிய பொருளை முடிவு செய்துவிட்டாள்.

உடனடியாக மதுரையில் உள்ள பிரபல கடையை தொடர்பு கொண்டு தனக்கு வேண்டியதை தெரிவித்து மறுநாளே அது தனக்கு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள்.

அதன்படி நகை கடையில் இருந்து மறுநாள் பதினோரு மணியளவில் தகவல் வந்தது! ஆனந்தவள்ளியிடம் சென்று,
"அத்தை மதுரைக்கு ஒரு வேலையாக போக வேண்டும்,போய் வரட்டுமா?" என்றாள்

"என்ன அம்மு, அப்படி என்ன வேலை திடீர்னு? நாளைக்குத்தான் வாசு வந்துடுவானே.. அவனை கூட்டிட்டு போய் வரலாமே?" என்றார்.

அம்பரி லேசாக முகம் சிவக்க, "அது.. அது வந்து அத்தை, உங்க பிள்ளைக்குத் தான் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஆர்டர் கொடுத்திருந்தேன்! ரெடியாகி விட்டதாம்! அதுதான் நான் போய் வாங்கிவரலாம்னு நினைக்கிறேன். ராமாயியை வேணுமானா துணைக்கு அழைச்சிட்டு போறேன்!"

ஆனந்தவள்ளி சற்று யோசித்துவிட்டு, " வீட்டுக்குள்ளேயே இருந்து எனக்கும் ஒருமாதிரியா இருக்கு, அதனால எனக்கும் ஒரு மாற்றமா இருக்கும் நானும் உன்கூட வர்றேன் அம்மு.." என்றார்!

அம்பரி ஒரு கணம் திகைத்துப் போனாள். ஆனால் சட்டென்று தன் முகபாவத்தை இயல்பாக வைத்துக் கொண்டு,"உங்களுக்கு எதுக்கு அத்தை வீண் அலைச்சல்? இப்பத்தான் நீங்க கொஞ்சம் நடமாடுறீங்க, திரும்பவும் உங்க உடம்புக்கு ஏதும் ஆகிட்டா உங்க பிள்ளை என்னை ஒரு வழி பண்ணிடுவாரு" என்றாள் பயந்த குரலில் !

"என்னை ஒரேடியாக நோயாளியா படுக்க வச்சிருவீங்க போலிருக்கு, என் மகன்கிட்ட நான் பேசிக்கிறேன், நீ போய் வண்டியை எடுக்க சொல்லு " என்றார்.

வேறு வழியின்றி அவள் மாமியாருடன் கிளம்பினாள்.
மதுரை !

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருப்பதால் முதலில் கோவிலுக்கு போகலாம் என்று ஆனந்தவள்ளி சொன்னார்!
வீட்டில் இருந்து கிளம்பியது முதல், தன்னை யாரோ பார்ப்பது போலவும், பின் தொடர்ந்து வருவது போலவும் அம்பரி உணர்ந்தாள். திரும்பி பார்த்தால் அங்கே யாரும் இல்லை. ஏதோ மனபிராந்தி என்று தன்னை தேற்றிக்கொண்டாள்.

கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, அங்கிருந்த கடைகளில் சில பொருட்களை வாங்கினாள் அம்பரி, அதன்பிறகு பிரபல நகைக்கடைக்கு சென்றனர்..

ஆனந்தவள்ளி ஒர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, " அம்மு உனக்கு என்ன வாங்கணுமோ வாங்கிட்டு வா! அவசரம் ஏதும் இல்லை..! நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்" என்றார்!

"அத்தை உடம்புக்கு ஏதும் செய்யுதா? வேண்டுமானால் வீட்டுக்கு போயிடலாமா? நான் டாக்டர் அங்கிளை வரச் சொல்றேன் " என்று பதறியவளை தடுத்து,

"அம்மு எனக்கு ஒன்றும் இல்லை, நீ உன் புருஷனுக்காக ஏதோ வாங்கனும்னு சொன்னியே,உன் விருப்பம் போல தேர்வு செய்துக்கோனு சொன்னேன்! அது வரை நான் காத்துட்டு இருக்கிறேன்" சரிதானா? என்று சமாதானம் செய்து அனுப்பினார்.

"நான் தான் ஏற்கனவே ஆர்டர் கொடுத்து விட்டேன் என்று சொன்னேனே அத்தை? இப்ப பணத்தை கொடுத்துட்டு பொருளை மட்டும் வாங்கிட்டு போறதுக்கு தான் நாம வந்திருக்கோம்! அதனால நீங்க வாங்க, எப்படி இருக்குனு சொல்லுங்க" என்று அவரை கையோடு அழைத்துப் போனாள் அம்பரி!

ஆண்கள் அணியும் கைச்சங்கிலி அது! பிளாட்டினத்தில் அழகான அதே சமயம் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன, இரு கிளிகள் கொஞ்சுவதைப் போல அமைந்திருந்தது, அதில் வெள்ளை கற்களால் With love என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

"எப்படி இருக்கு அத்தை?"

"ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அம்மு!" என்ற ஆனந்தவள்ளி, கண்களில் ஆனந்த கண்ணீருடன் மருமகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

மதிய உணவை வழியிலேயே முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்! ஆனந்தவள்ளியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, தந்தையிடம் பரிசை காட்டி, சற்று நேரம் பேசிவிட்டு, அம்பரி தன் அறைக்கு வந்தாள்! வானம் மந்திரமாக இருந்தது! அவளுக்கு மாந்தோப்பிற்கு போக வேண்டும் போல இருந்தது..!

ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள்! பெரியவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்! ஆகவே சுப்பம்மாவிடம் விவரம் சொல்லிவிட்டு, கையில் குடையுடன் கிளம்பினாள்! அந்த நேரத்தில் அவள் அங்கே போவதால் நேரவிருக்கும் ஆபத்தை யாரும் அறியவில்லை!
 

Attachments

  • CYMERA_20221201_090954.jpg
    CYMERA_20221201_090954.jpg
    74.8 KB · Views: 22
Top