• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி! - 33

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எபிலாக்!

இரண்டு வருடங்களுக்கு பிறகு..

அந்த பண்ணை வீடு விழா கோலம் பூண்டிருந்தது!

அந்த வீட்டின் வாரிசுகளுக்கு(?!) முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா!

ஆம் ! வாரிசுகளுக்கும் தான்! அம்பரிக்கு முதல் பிரசவத்திலேயே, ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர் பிறந்தனர்! அவர்களுக்கு தான் இன்றைக்கு முதல் பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார்கள்! மனோகரி என்பது அம்பரியின் தாயின் பெயர், அதையே மகளுக்கு வைக்க விரும்பினான் கீர்த்திவாசன்! அதே போல சுதாகரியின் நினைவாக மகனுக்கு சுதாகரன் என்றும் இருவருக்கும் பெயர் சூட்டியிருந்தனர்!

விழாவில் கலந்து கொள்ள இரு சகோதரிகளின் குடும்பங்களும் வந்திருந்தனர்!

"அம்பரி, ரெடியாகிட்டியா? என்றவாறு இரு நாத்தனார்களும் உள்ளே வந்தனர்!

"வாங்க, வாங்க!" இப்பத்தான் பிள்ளைகளை ரெடி பண்ணி முடிச்சேன் அண்ணி! இனிதான் நான் போய் ட்ரஸ் மாத்தணும்!" நீங்க கொஞ்சம் இவங்களை பார்த்துக்கிறீங்களா?"

"அதைவிட வேற என்ன வேலை எங்களுக்கு! என்று ஈஸ்வரியும் சங்கரியும் குழந்தைகள் அருகே செல்ல,

அங்கே அவர்களுக்கு முன்னதாக அவர்களின் மகள்கள் ராகவியும், ரஜனியும், குழந்தைகளை கொஞ்சியபடி அமர்ந்திருந்தனர்!

"ஏய், இரண்டு பேரும் இங்கே என்னடி பண்றீங்க? என்றாள் சங்கரி!

"சித்தி, இந்த குட்டிப் பசங்க ரொம்ப க்யூட், எனக்கு இவங்களை விட்டு விலகவே மனசு வரமாட்டேங்குது!" என்றாள் ராகவி!

" ஆமா அம்மா! இரண்டு பேரையும் பாருங்க! எவ்வளவு அழகாக சிரிக்கிறாங்க? ரொம்ப சமத்தா விளையாடிட்டு இருக்காங்க !" என்றாள் ரஜனி!

சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்," அப்படியா? அப்ப சீக்கிரமாக உங்கள் இரண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா!"என்றாள் ஈஸ்வரி!

" ஐயோ ! என்னம்மா நீங்க? பாப்பாக்கள் கூட இருக்கிறது பிடிக்குதுன்னா அதுக்காக இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க முடியுமா? இப்பதான் படிப்பு முடிஞ்சிருக்கு! நான் வேலைக்கு போகணும் !அப்புறமா தான் கல்யாணம் எல்லாம்!" என்று படபடத்தாள் ராகவி.

"ம்ம்.. இப்ப சொன்னியே ! இதுதான் சரியான முடிவு! எங்களைப் போல சீக்கிரமாக உங்களுக்கு இந்த பொறுப்பு எல்லாம் வேண்டாம்! முதல்ல உலகத்தை புரிஞ்சுக்கோங்க! "

" எல்லாரும் இங்கே என்ன பண்றீங்க? கீழே வர்றவங்களை வரவேற்க வேண்டாமா?? அம்மா தனியா எல்லாம் கவனிக்கிறாங்க! நீங்க கூடமாட கொஞ்சம் உதவி செய்யலாம்ல?" என்றவாறு கீர்த்திவாசன் அங்கே வந்தான்!

" இப்பத்தான்டா வந்தோம் ! அம்பரி உள்ளே சேஞ்ச் பண்ணிட்டு இருக்கா! அதான் பிள்ளைகளை நாங்க பார்த்துட்டு இருக்கிறோம்! " என்றாள் சங்கரி!

"ராகவி, ரஜனி இரண்டு பேரும் பாட்டி கூட போய் இருங்கம்மா! அப்படியே ஆர்டர் செய்த கேக் வந்துடுச்சான்னு பாருங்க!" என்றதும்

"சரி மாமா, என்றவள்! "அம்மா சீக்கிரமாக பாப்பாக்களை கீழே தூக்கிட்டு வாங்க, நாங்க கேக் வந்துடுச்சான்னு பார்க்கிறோம்" என்றவாறு ராகவி, ரஜனியுடன் சென்றுவிட்டாள்!

"அக்கா, நீங்க இரண்டு பேருமா பிள்ளைகளை தூக்கிட்டு கீழே போங்க ,வந்தவங்க எல்லாம் பிள்ளைகளை பார்க்கணும்னு கேட்கிறாங்க! நானும் அம்பரியும் பத்து நிமிஷத்துல வந்துடுறோம்! " என்றவனை கிண்டலாக பார்த்தனர் தமக்கைகள்!

"நீ ரொம்ப விவரம்தான்டா தம்பி! என்ற சங்கரி," வாக்கா நாம இந்த பட்டுச் செல்லங்களை கொஞ்சலாம்! என்று ஒர் குழந்தையை கையில் தூக்கிக்கொள்ள,

"ம்ம்.. அவன் விவரத்துக்கு என்னடி குறைச்சல்? லேட்டா கல்யாணம் பண்ணனாலும், அடுத்த பிள்ளைக்கு காத்திருக்கிற சிரமம் இல்லாம ஒரே பிரசவத்துல ஆண் ஒன்னு பெண் ஒன்னுன்னு பெத்துக்கிட்டான்ல! " என்று சிரித்த ஈஸ்வரி அடுத்த குழந்தையை தூக்கிக் கொண்டே" டேய், சீக்கிரமா இரண்டு பேரும் வந்து சேருங்க !"

அவர்கள் கிளம்பவும் , அம்பரி உடை மாற்றி அங்கே வரவும் சரியாக இருந்தது!

"அத்தான், அண்ணிங்க இருந்தார்களே ? பிள்ளைகள் எங்கே? என்றவாறு தன் உடையை திருத்துவதில் கவனமாக நின்றவளை நெருங்கினான் கீர்த்திவாசன்!

"சும்மாவே நீ ரொம்ப அழகு! அதுவும் இப்ப கொஞ்சம் சதை போட்டு இன்னும் அழகா மாறிட்டே அபி!" என்று அவளை இழுத்து அணைக்க,

"அத்தான்! விடுங்க! என்ன பண்றீங்க? புடவை எல்லாம் கசங்கிடும்! யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க! " அவனிடமிருந்து விடுபட முயன்றபடி சிணுங்க,

"யார் வந்தா என்ன? என் பெண்டாட்டியை நான் கொஞ்சறேன்! அதை யார் என்ன கேட்கிறது? அக்காமார் வந்ததுல இருந்து நீ டிமிக்கி கொடுத்துட்டு என்னை கண்டுக்காமலே ஓடிட்டு இருக்கிறே! இது உனக்கே நியாயமா இருக்கா செல்லம்! " என்றவாறு அவளது தோள் வளைவில் முகம் புதைத்து மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்! அவனது கையணைப்பில் கட்டுண்டு மார்பில் அடங்கி நின்றிருந்த அம்பரிக்கு, கணவனின் அன்பில் என்றும் போல நெஞ்சம் பெருமிதத்தில் விம்மியது !

அவளது பேறுகாலத்தின் போது அவளை விட அவன் தான் மிகவும் தவித்து துடித்துப் போனான்! ஒரு குழந்தை பிறப்பே மறுஜென்மம் எனும்போது இரண்டு குழந்தைகளை அவள் எப்படி பெற்றெடுத்தாள் என்று அவன் கலங்கியது இப்போதும் நினைவில் இருக்கிறது! பிரசவத்தின் போது அவளை காணும் வரை பிள்ளைகள் முகத்தை அவன் பார்க்கவில்லை என்று தெரிய வந்தபோது , அம்பரிஅவனது காதலில் நெகிழ்ந்தாள்! ஆனாலும் விடாமல், "என்னைப் பார்க்காமல் ,நம்ம பிள்ளைகளை பார்க்க மாட்டேன்னு சொன்னீங்களாமே அத்தான்? அந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தாங்க? என்று அவள் பொய்க்கோபத்துடன் கேட்டபோது,

அவன் சிறிதும் தயங்காது, "உனக்கு அப்புறம்தான் எனக்கு எல்லாருமே! உனக்கு ஏதும்னா நான் தாங்க மாட்டேன்டி! " என்றபோது அவன் குரல் கரகரத்தது!

ஏற்கனவே அவனது அன்பில் திக்குமுக்காடிப் போயிருந்த அம்பரிக்கு கணவனின் பதிலில் உருகிப்போனாள்! எத்தகைய அன்பு இது ? என்று உள்ளூர வியந்தாள்! அன்றைக்குப் பிறகு அவளுக்கு கணவன் சொல்லு வேதமாயிற்று! அவன் மீது அவளும் உயிராகிப் போனாள்!

யாரோ கதவை தட்டும் சத்தத்தில் இருவரின் மான நிலையும் கலைய, அவசரமாக விலகினர்! அம்பரியின் முகம் சிவந்திருக்க, அவன் அவளை ஆசை பார்வை பார்க்க! " ஷ் அத்தான்! போதும் , யார்னு போய் பாருங்க நான் புடவையை சரி செய்கிறேன்! என்று அவனை கதவு பக்கம் தள்ளிவிட்டு தன் உடலை சீராக்கினாள் அம்பரி!


சங்கரியின் மகன் ஹேமந்த் தான்," மாமா, அத்தையை கூட்டிட்டு சீக்கிரமாக கீழே வருவீங்களாம்! கேக் , சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு! உடனே விழாவை ஆரம்பிக்கணுமாம்! பாட்டி சொல்ல சொன்னாங்க! என்று அவசரமாக சொல்லிவிட்டு ஓடினான்!

சற்று நேரத்தில்.. கணவனும் மனைவியும் கீழே தம்பதி சமேதராக கூடத்திற்கு சென்றபோது, அம்மாவிடம் சுதாகரும், அப்பாவிடம் மனோகரியும் அத்தைமார்களிடம் இருந்து தாவி வந்தனர்!

"சரி, சரி சீக்கிரம் கேக் கட் பண்ணுங்க! " என்றார் ஆனந்தவள்ளி!

இரண்டு கேக்குகளையும் பிள்ளைகளின் கைபிடித்து பெற்றோர் வெட்ட, அத்தை மக்கள் மற்றும் உறவினரின் பிள்ளைகள் அனைவரும் வாழ்த்து பாடினர்! கேக்கின் துளியை பெற்றோர் ஊட்ட, பிள்ளைகளும் பெற்றோருக்கு தங்கள் பிஞ்சுக் கைகளால் ஊட்டிவிட, பலத்த கரவொலிகளுடன் அங்கே இருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த காட்சியில் மனது நெகிழ்ந்துவிட்டது!

ஆனந்தவள்ளியின் நிலையை கேட்கவே வேண்டாம்! எந்த பிள்ளையின் வாழ்வு வீணாகிப் போகும் என்று அவர் கவலைப்பட்டாரோ, அந்த மகன் இன்று மனைவி குழந்தைகள் என்று குடும்பமாக நின்ற கோலத்தை பார்க்க பார்க்க அவருக்கு பெருமிதமாக இருந்தது! ஆனந்தத்தில் துளிரவிட்ட நீரை தட்டிவிட்டு, சேலை தலைப்பில் துடைத்தவர்,

"சரி, சரி எல்லாரும் சாப்பிட கிளம்புங்க, பிள்ளைகளை முதலில் சாப்பிட வைங்க" என்று சொல்ல வந்திருந்த விருந்தினர் சலசலத்தபடி தங்களது பரிசுகளை கொடுத்துவிட்டு சாப்பிட சென்றனர்! வீட்டினர் அவர்களை கவனிக்க சென்றனர்!

ஓர் இருக்கையில் அமர்ந்தவாறு மகளின் குடும்பத்தை நிறைவோடு பார்த்திருந்தார் நித்யமூர்த்தி, சின்ன மகளின் வாழ்க்கையில் இதே போன்ற சந்தோஷமும் மனநிறைவும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் மனமார வேண்டிக்கொண்டார்!

கீர்த்தியும் அம்பரியும் அடுத்த நிலைக்கு தங்கள் தாம்பத்திய வாழ்வில் மகிழ்வான தருணத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் !


இனி அவர்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்வான பொன்னான நாளே! நீங்களும் மனசார வாழ்த்துங்களேன்!

*சுபம்
 

Attachments

  • CYMERA_20230101_195713.jpg
    CYMERA_20230101_195713.jpg
    169 KB · Views: 27
Last edited:
Top