• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 1

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 1

"ண்ணோவ்! ன்னண்ணா.. என்ன பிரச்சனைனே புரியலையே.. எப்டி பார்த்தாலும் உள்ள ஒன்னும் இருக்குற மாதிரி தெரில.. இதெல்லாம் ஒரு வண்டின்னு வச்சுட்டு நம்ம உசுர வாங்குறானுங்க" ஸ்பான்னர் கொண்டு அந்த பழைய வண்டியினை பிட்டு பிட்டாய் கழட்டிப் போட்டுக் கொண்டே கூறினான் மாரி.

"டேய்! அவன் பிரேக்ல பிரச்சனைனு சொன்னா நீ ஏன் டா வண்டியயே பிரிச்சு போட்டு வாய் பேசுற.. வண்டிக்காரன் மட்டும் இப்ப வந்தான் நீ காலி" வக்கீல் கோர்ட்டை தோளில் போட்டபடி வாட்ச்சை சரிபார்த்துக் கொண்டு வந்த தியாகு கூற,

"அட போங்க ண்ணா! இதெல்லாம் என் பூட்டன் காலத்துலயே தடை பண்ணுன வண்டி.. மியுசியத்துல வைக்குறதை விட்டுட்டு இன்னும் ஓட்டிட்டு திரியுறான்.. ஒருநாள் இல்ல ஒரு நாள் ஓடிட்டு இருக்கும் போதே பார்ட் பார்ட்டா கழண்டு அவன் மண்டை பொளந்து ரோட்ல கிடக்க போறான் பாருங்க.." மீண்டும் மாரி சொல்ல,

"அடிங்... காலங்காத்தால உன் வாயில நல்ல வார்த்தையே வராதா டா.. கடை பக்கம் வராதனு சொன்னாலும் கேட்குறது இல்ல.. சும்மா நொய்யி நொய்யினு.. அதை வுடு.. போயி அந்த ஐயர் வண்டிய பாரு" என மாரி தலையில் கொட்டி அந்த வண்டியை தன் வசம் கொண்டு வந்தான் ஆதி. அந்த இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடையின் உரிமையாளன்.

மாரி அந்த கடையில் ஆதியிடம் வேலை பார்ப்பவன் பகுதி நேரமாய்.. கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான் மாரி.. பள்ளி படிக்கும் போது மாரியின் வீட்டு சூழ்நிலைக்காய் மாலை நேரம் அவனை ஆதி சேர்த்துக் கொள்ள, விடுமுறை நாட்களிலும் கல்லூரி முடிந்து சில மணி நேரங்களும் என ஆதி கடையில் வேலை பார்க்கின்றான். பேச்சுக்கு மட்டும் குறையே இருக்காது அவனிடம்.

சிறியதாய் பத்து வண்டிகள் நிறுத்தும் அளவிற்கு அந்த கடையின் அளவு இருக்க, அதற்கு வலது பக்கமாய் ஆதியின் வீடு.

"ஆதி அந்த காலி இடத்தை வாங்க சொன்னேனே... யோசிச்சியா?" என பக்கத்து வீட்டில் வசிக்கும் தியாகு அவனிடம் கேட்க,

"எங்கண்ணா! சுமதிக்கு கல்யாணத்துக்கே என்ன செய்யுறதுன்னு புரியல.. இதுல இடம் எல்லாம் வாங்கி... சரிபட்டு வராதுண்ணா" - ஆதி.

"ண்ணோவ்! நான் வேணா என் வூட்ல கேட்டு காசு தரட்டுமாண்ணா.. நீ மட்டும் பெரிய கடைக்கு ஓனராகிட்டா சும்மா கெத்தா ஆதி அண்ணா தம்பிடான்னு ஊருக்குள்ள சொல்லிப்பேன்ல..." மாரி சொல்ல,

"ஆமா! சாரு வீட்ல தங்கமும் வெள்ளியும் கொட்டிக் கிடக்குது.. அள்ளிட்டு வந்து தர போறாரு.. உன் அம்மா தினமும் உன்னை அடிச்சாலும் வாய் குறையுதா பாரேன்"

"தியாகுண்ணா! என்னை அவ்வளவு சீப்பால்லாம் எட போட்றாத.. நான் இடுப்புல மாட்டிருக்குறது பியூர் கோல்ட்ணா.."

"எது அந்த ஏழு முழ கயித்துல இத்துணுண்டு ஒட்டிட்டு இருக்குமே.. அதை தான சொல்ற?" தியாகு சொல்ல ஆதி சிரிக்க,

"நல்லதுக்கே காலம் இல்லண்ணா.. உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நல்ல எண்ணத்துல சொன்னேன்" என்றான் மாரி.

"டேய் அந்த இடத்தோட மதிப்பு என்னனு தெரியுமா? அது ஆகும் டா முப்பது நாப்பது லட்சம்னு.." ஆதி வண்டியினை ஸ்டார்ட் செய்து முறுக்கிக் கொண்டே சொல்ல,

"அவ்வளவு தான? ஆயிரத்துல இருந்து ஒரு ஜீரோ கூட.. இதுக்கு போய் புலம்புற.. நான் வேணா ஆச்சிகிட்ட சொல்லவா? உடனே காசு கொடுத்துரும் உனக்கு" என்றான் மாரி.

"நிஜமா காலேஜ் போறியா நீ? எனக்கென்னவோ சந்தேகம் தான்.. லட்சம்னா எவ்வளவுனு கூட தெரில.. பேசாமல் வேலைய பாரு டா" என தியாகு சொல்ல, ஒரு முணுமுணுப்புடன் வேலையைத் தொடர்ந்தான் மாரி.

"நம்ம ஏரியால உன் ஒர்க்ஷாப்பை நம்பி தான் ஆதி எல்லா வண்டியும் வருது.. கடையை பெருசு பண்ணினா இன்னும் கொஞ்சம் வருமானம் கூடும்.. அப்புறம் சுமதிக்கு நல்ல வரனா வந்தா பார்த்து பண்ணிடலாம்ல.. அதுவும் இடம் கடைக்கு பின்னாடியே இருக்கு.. பெருசா வேலை இருக்காது.. பின்னாடி இருக்குற சுவத்தை மட்டும் இடிச்சுட்டு சேர்த்து கட்டினா போதும்..."

"சரிதான் ண்ணா! ஆனா காசு வேணுமே.. இருக்குற காசை இதுக்கே செலவு பண்ணிட்டு அப்புறம் கல்யாணத்துக்கு இழுத்து வச்சுட கூடாதுல்ல.. அதான் யோசிக்குறேன்.." - ஆதி.

"அம்மாகிட்ட பேசினியா?" தியாகு கேட்க,

"அம்மா என்ன சொல்லும்? உனக்கு சரின்னு படுறதை செய்யுடாங்குது.. எனக்கு தான் ரெண்டுங்கெட்ட மனசா இருக்கு.."

"அதான் அம்மாவே சொல்றாங்க இல்ல.. இப்ப இடத்தை வாங்கிட்டு கல்யாணத்துக்கு லோனை போடு.. இல்ல இடத்தை லோன் போட்டு வாங்கினா கல்யாணத்தையும் சேர்த்து கூட கிராண்டா பண்ணிடலாம்.. உனக்கும் திருப்தியா இருக்குமே.."

தியாகு ஆதியின் மேல் இருக்கும் அக்கறையில் மட்டுமே சொல்ல, ஆதிக்கும் கூட இப்படி செய்யலாம் தானே என்ற எண்ணம் வரவும் யோசிக்க ஆரம்பித்தான்.

"நல்ல இடம் டா.. அதான் சொல்றேன்.. சரினு சொன்னா ரெஜிஸ்டரேஷன் எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ நல்லா யோசி நான் கிளம்புறேன்"

"சரிண்ணா பார்த்துப்போம்" என்று மனதினுள் கணக்கு பார்த்துக் கொண்டே ஆதி சொல்ல,

"ண்ணோவ்! இடம் வாங்கினா உனக்கு பீஸ் வருமா? அதுக்கு தான் ஆதிண்ணா காதை கடிக்குறியா?" என்றான் மாரி.

"உன்னை எல்லாம் உன் அம்மா இன்னும் நாலு போடு போடணும் டா.. ஆதிக்கு நான் பிரீயா கூட செஞ்சு குடுப்பேன்.. ஒழுங்கா வேலையை பாரு டா.. வந்துட்டான் ஓட்ட வாயை தூக்கிட்டு.." என அவன் தலையிலேயே மீண்டும் கொட்டிவிட்டு சென்றான் தியாகு.

"நம்ம ஏரியாலயே வெள்ளை சொக்கா பளபளக்க கிளம்புற ரெண்டாவது ஆள் நீ தான்ண்ணா" அவன் கொட்டியதை கூட நினைக்காமல் தியாகுவின் அந்த வெள்ளை சட்டையை பெருமையாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான் மாரி.

"அப்ப முதல் ஆளு யாரு டா?" தனக்கு தெரியாமல் யாராய் இருக்கும் என தியாகு கேட்க,

"அதான் எக்ஸ் மிலிட்டரினு சுத்துறாரே அந்த பரமசிவம் தாத்தா" என்று மாரி கூற,

"இதை தான் நோட் பண்ணிட்டு சுத்துறீயா நீ? படிச்சு முடிச்சி வேலைக்கு போற வழியை பாரு" என்று கிளம்பினான் தியாகு.

தியாகு இப்போது தான் வளர்ந்து வரும் வழக்கறிஞர்.. கூடவே பத்திரப்பதிவு அலுவலகமும் ஆரம்பித்து நடத்தி வருகிறான்.

"ஆதி!" என அழைத்தவாறு வீட்டினுள் இருந்து வெளிவந்தார் மீனாட்சி. ஆதியின் அன்னை.

"சொல்லு ம்மா!" ஆதி சொல்ல,

"என்ன ஆச்சி வெறுங்கையோட வரீங்க? காபி தண்ணி கொண்டு வருவீங்கனு நினச்சேன்" என தன் வாயை அடுத்தபடியாய் ஆதி அன்னையிடம் மாரி கொடுக்க,

"கடையை திறந்து இன்னும் அரை மணி நேரம் ஆகல.. காபி கேட்குறீயே! உன்னையும் கூட வச்சுட்டு தான் என் மவன் மேல வரணும்னு கடவுள் எழுதி இருக்கான் பாரு.. அவனை சொல்லணும்"

பேச்சுக்கு கூட மகனை இறக்கி பேசிடவோ அபசகுணமான வார்த்தையையோ உபயோகிக்க விரும்பாத நல்ல உள்ளம் தான் மீனாட்சி.

"அது சரி! ஒரு க்ளாஸ் காபிக்கே இவ்வளவு பேச்சு.. உங்க கடையில தான் வருஷக் கணக்கா இருக்கேன்.. கொஞ்சமாச்சும் மதிப்பு இருக்கா?"

"இன்னைக்கு நீ என்கிட்ட உத வாங்கிட்டு தான் வீட்டுக்கு போக போற டா.. லொட லொடனு எப்ப பாரு யார்கிட்டயாச்சும் வம்பு பேசிகிட்டு..." ஆதி மிரட்ட, கொஞ்சமும் பயந்தான் இல்லை மாரி.

"நீ சொல்லும்மா.. என்ன விஷயம்?"

"ஒன்னும் இல்லை டா.. எதிர் வீட்டு தேவிம்மாக்கு நேத்து வந்த சிலிண்டர்ல ஏதோ பிரச்சனை போல.. மாட்டவே மாட்டுதாம்.. கொஞ்சம் என்னனு பாரேன்.. நான் போய் மாட்டிப் பார்த்தேன் முடியல.. அப்பவே சொல்லிட்டு போனாங்க நான் தான் மறந்துட்டேன்" மீனாட்சி சொல்லவும் ஆதி செய்து கொண்டிருந்த வேலையில் இருந்து கைகள் அப்படியே நின்று விட கண்கள் அங்கும் இங்குமாய் சென்று வர, மாரியோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

"ஆதி இவனை செலவானாலும் பரவால்லனு ஒரு நல்ல ஆஸ்பத்திரியா கூட்டிட்டு போய்ட்டு வா டா.. கொஞ்சமா இருக்கும் போதே பார்த்திருக்கலாம்..இப்ப நமக்கு தான் செலவு அதிகம் வர போகுது.. இன்னும் முத்திப் போறதுக்குள்ள முடிஞ்சா சரி பண்ணிடுவோம்" மீனாட்சி சொல்லிக்கொண்டு இருக்க, அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சிரித்துக் கொண்டு இருந்தான் மாரி.

அன்னையின் பேச்சில் தன்னிலை வந்தவன் திரும்பி மாரியை முறைத்துப் பார்க்க அவன் இன்னும் கையை காலை ஆட்டி சிரித்துக் கொண்டு தான் இருந்தான்.

வந்த ஆத்திரத்தில் வேகமாய் எழுந்து மாரியை நோக்கி ஆதி வர, சுதாரித்து எழுந்து ஓடியவன் நடு ரோட்டில் போய் நின்று சிரிப்பை தொடர்ந்தான்.

"இன்னைக்கு அமாவாசை கூட இல்லையே டா.. என்னவாம் இவனுக்கு?" மீனாட்சி புரியாமல் கேட்க,

"ம்மோவ்! அவன் கிடக்குறான்.. இப்ப எதுக்கு இந்த வேலையெல்லாம் என்கிட்ட சொல்ற? நான் தான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்னு தெரியும்ல?" ஆதி கேட்க,

"ண்ணோவ்! ஆச்சி உன்னை பொண்ணு பார்க்க போக சொல்லல.. எடுபுடி வேலை பார்க்க போக சொல்லிச்சு" ஆதி காதில் சொல்லிவிட்டு மீண்டும் ஓடி விட்டான் ரோட்டிற்கு மாரி.

"இந்த நாயை...." என்று கீழே கிடந்த கல்லை எடுக்க ஆதி குனிய,

"நான் போய் என் வூட்லயே காபிய குடிச்சுட்டு வந்துடுறேன்.. நீங்க அதுக்குள்ள முடிச்சுட்டு வாங்க" சொல்லியபடியே ஓடி இருந்தான் மாரி.

"நீ கையில மாட்டு டி" ஆதி சொல்ல,

"அந்த பைத்தியத்தை விடு.. இவனுக்கு ஏன் லீவ்வெல்லாம் விடுறாங்க.. சரி தியாகு இருந்தா அவன்கிட்ட சொல்லியிருப்பேன்.. அவன் இப்ப தான் போனதா மாடில இருந்து அவங்க அம்மா சொன்னதும் தான் உன்னை தேடி வந்தேன்.. பாவம் டா! அந்த பொண்ணுங்க வேலைக்கும் காலேஜுக்கும் போக தேவி சாப்பாடு கட்டிக் கொடுக்கணும்.. ஒரு எட்டு பாத்துட்டு வந்துடு" மீண்டும் மீனாட்சி சொல்ல,

"ப்ச்! அட என்னம்மா நீ?"

"ரொம்பத்தான் பண்ணாத டா.. எதாவது உதவின்னு இது நாள் வரை கேட்ருப்பாங்களா? இது கூட செய்யலைனா நாளைக்கு நமக்கு தேவைனா யாரும் வர மாட்டாங்க"

"சரி சரி புலம்பாத.. நீயும் வா.. தனியா எல்லாம் போ முடியாது"

"சுமதி ஆபீஸ் கிளம்பிட்டா.. அவளுக்கு சாப்பாடு கட்டணும்.. நீ போ நான் பின்னாடியே வரேன்" என்றவர் அவன் பதிலையும் கேட்காமல் வீட்டுக்குள் திரும்பி நடந்தார்.

"ம்மா! ம்மோவ்!.." ஆதி கூப்பிட்டது காற்றில் தான் போனது.

'இந்த அம்மாவோட இதே பொழப்பா போச்சி... இதுவா வினையை இழுத்துட்டு வருதே.. இவளா வந்தாலே சுனாமி வந்தா மாதிரி எதையாச்சும் பண்ணிட்டு தான் போவா.. இதுல நான் வாண்ட்டடா போய் மாட்டினா? என்ன செய்ய போறாளோ.. சாமி அந்த பிசாசுகிட்ட இருந்து என்னை இன்னைக்கு காப்பாத்திடு' நினைத்தபடியே எதிர்வீட்டை நோக்கி நடந்தான் ஆதி.

மனம் எங்கும் கொஞ்சம் பயம் தான் அந்த பிசாசை நினைத்து. சுனாமி போலவே சில நிமிடங்களில் பல பேச்சுக்களில் மனதை கலங்கடித்து செல்பவளை நினைத்து தொண்டையில் இப்போதே ஏதோ ஒன்று கவ்வியது ஆதிக்கு.

ஆழ்ந்த மூச்சில் தன்னை சமன்செய்து காலிங்பெல்லை அழுத்திவிட்டவனுக்கு இன்னும் அதிகமாய் மூச்சு வாங்கியது எங்கே அவள் கதவை திறந்துவிடுவளோ என்று.

அந்த நொடி கடவுள் அவனை காப்பாற்றிவிட கதவை திறந்து வெளிவந்து ஆதியை பார்த்து சிரித்தது ப்ரீத்தி. தேவி அம்மாவின் இளைய மகள்.

"அம்மா இருக்காங்களா மா?" ஆதி கொஞ்சம் ரிலாக்ஸ் மோடுக்கு சென்று கேட்க,

"இதோ கூப்பிடுறேன் ண்ணா" என்றபடி உள்ளே குரல் கொடுத்துக் கொண்டே ஓடினாள் கல்லூரி செல்லும் ப்ரீத்தி.

தொடரும்..
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆அய்யோ அய்யோ இந்த ஹீரோ ஏன்தான் இப்படி பயந்து நடுங்குறானோ 😃😃😃😃அப்படின்னா நம்ம ஹீரோயின் அடாவடி பேர்வழியா 😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲
ஆதி பார்த்து இருப்பா அந்த பிள்ளை கிட்ட 😜😜😜😜😜😜😜
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
எனை மீட்டிடும் இசை....
தென்றலை எதிர்பார்த்தால்
புயலாய் வரும் போல....

💐💐💐💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
எனை மீட்டிடும் இசை....
தென்றலை எதிர்பார்த்தால்
புயலாய் வரும் போல....

💐💐💐💐
பாக்கலாம் sis😍
 
Top