• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 12

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 12

முஹூர்த்த நேரம் நெருங்கி இருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் நின்றுருந்த ஆதி ஏதோ வேலையாய் மண்டபத்தின் வாசலை நோக்கி செல்ல, அவனுக்கு எதிராய் உள்ளே வந்து கொண்டிருந்தாள் சாரு.. உடன் அவள் அன்னை தேவியும், ப்ரீத்தியும்.

இப்படி பார்க்க நேரிடும் நேரங்களில் எல்லாம் சாரு அவனை பார்த்தபடியே இருக்க, ஆதி நொடியும் பார்க்காது திரும்பிவிடுவான்.

இன்று இரு நொடி அதிகமாகவே அவன் கண்கள் நிலைத்திருக்க, "வாவ் வாத்தியாரே!.." என்றவள் வாயை ப்ரீத்தி மூடிவிட்டாள்.

"மானம் போகுது.. அந்த தம்பி என்ன நினைக்கும்? கூட நான் இருக்கேன்னு நினைப்பு இருக்குதா பாரு இவளுக்கு" என்று மகளை தேவி முறைத்து வர,

அவள் அழைக்கவும், இவன் வேறு புறம் திரும்பவும் சரியாய் இருந்தது. "என்ன டா பண்ணி வச்சிருக்க?" என தனக்கு தானே சொல்லி தலையில் அடித்துக் கொண்டவன், மறந்தும் கூட அவள்புறம் திரும்பிடவில்லை.

சாரு கூறியது போலவே அவளை புகைப்படம் எடுக்கலாம் போல.. அவ்வளவு அழகாய் அந்த மண்டபத்தில் வளைய வந்து கொண்டிருந்தாள் சாரு.

"கலக்குற சாருக்கா!" என்று சொல்லி மாரி சட்டை காலரை மடித்துவிட்டு தனது சட்டைக்கும் அவளிடம் கருத்து எதிர்பார்க்க,

"வெள்ள வேட்டி கட்ட.. நல்ல வெள்ள உள்ளம் வேணும்..." என்று பாடினாள்.

"புரிஞ்சிடுச்சு.. கிளம்புறேன்" என்றவன்,

"பொறாம.. இவங்க ஆளுக்கு சொக்கா இவ்வளவு அழகா இல்லயேனு பொறாம" என்று முணுமுணுத்து சாரு விரட்டும் முன் அங்கிருந்து சென்றுவிட்டான் மாரி.

மீனாட்சியின் தூரத்து சொந்தத்தில் உள்ள அண்ணி ஒருவர் மீனாட்சியை அழைக்க,

"சொல்லுங்க பிரேமா அண்ணி! சாப்பிட்டிங்களா?" என்று வந்தார் அவர்.

"அதெல்லாம் ஆச்சு மீனா.. அங்கே நிக்குதே அந்த பொண்ணு யாரு?" என்று கேட்க, யார் என்று பார்த்தார் மீனாட்சி.

ஆகாய வண்ண பட்டுப் புடவையில் ஒற்றை சங்கிலி கழுத்தில் உரச, சந்தனக் கீற்றோடு துருதுருவென அங்குமிங்குமாய் பேசிக் கொண்டு மேடையின் மேலே ஓரமாய் நின்றிருந்தாள் சாரு.

பார்த்ததும் பளிச்சென புன்னகை மீனாட்சி முகத்தில் ஒட்டிக் கொள்ள, "அந்த பொண்ணு.." என்று சொல்லும் முன்,

"நல்ல லட்சணமா இருக்குறா.. நம்ம சிவா ஃபாரின்ல இருந்து வர்றான்.. அதான் பேசுவோமேன்னு கேட்டேன்" என்று அவர் கேட்கவும் திக்கென்று ஆனது மீனாட்சிக்கு.

சொல்வதா வேண்டாமா என்பதை போல மீனாட்சி ஒரு நிமிடம் நின்ற இடத்திலேயே நின்றுவிட,

"ஒருவேளை மாப்பிள்ளை சைடா இருக்குமோ?" என்றபடி நகர்ந்திருந்தார் அவர்.

அவ்வளவு உற்சாகமும் நொடியில் மறைவதை போல மீனாட்சி நின்ற நேரம் ஆதி அவர் அருகே வர,

"உன்னால தான் டா.. உன்னால தான் எல்லாம்.. போச்சு.. அவங்க போய் பேச போறாங்க.. எனக்கு என்னனு தலையில எழுதி இருக்கோ" என்று மீனாட்சி சத்தம் வராமல் மகனை முறைத்து அதட்ட, என்னவோ என பயந்துவிட்டான் ஆதி.

"என்னம்மா என்ன ஆச்சு?" என்று கேட்க,

"உன் பிரேமா அத்தை அவங்க பையன் சிவாவுக்கு சாருவை கேட்க போறாங்க" என்றதும் மகனுமே ஒரு நொடியில் ஜெர்க்காகிவிட்டான்.

காண்பித்து கொள்வானா என்ன! "ம்மா! என்ன நீங்க? அங்க ஆசிர்வாதம் பண்ண உங்களை கூப்பிடுறாங்க" என்று மேடையைப் பார்த்து ஆதி சொல்ல, அங்கே தான் பிரேமா உடன் சில சொந்தங்களும், கூடவே சாருவும் நின்றிருந்தனர்.

"போ வர்றேன்.. நான் புலம்பிட்டு தான் இருக்கனும்.." என்று புலம்பியபடியே சென்றவர் மேடை ஏறியதும் சிரித்த முகமாய் மணமக்கள் அருகே செல்ல, அவரை தடுத்து நிறுத்தினார் ஒரு பெண்மணி.

"என்ன சித்தி?" மீனாட்சி இன்முகத்தோடே கேட்க,

"என்னடிம்மா.. தாலி கட்டப்போற நேரம்.. நீ மேடைக்கு வரலாமா?" என்றதும் சுரீரென்றது மீனாட்சிக்கு.

தனி ஒருவராய் மகனையும் மகளையும் வளர்த்த போது வராத சொந்தங்கள், வாழ்த்த வந்த இடத்தில் இப்படி நஞ்சையும் முன்வைக்க, ஆதி அதிர்ந்துவிட்டான் அந்த முதிர்ந்தவரின் பேச்சில்.

"இல்ல.. நான் ஏதோ நியாபகத்துல.." என்ற மீனாட்சி கண்கள் கலங்கிவிட்டது.

"ம்மா.." என்று ஆதி மனம் கணக்க சொல்லும் முன் அவர் வேகமாய் இறங்க செல்ல,

"ம்மா! என்னம்மா நீங்க.. நீங்க வாங்க.." என ஆதி அன்னை கையைப் பிடித்து இழுக்க,

"ஆதி! ஆதி கண்ணா சத்தம் போடாத.. சுமதி கல்யாணம் தான் முக்கியம்.. எந்த பிரச்சனையும் வேண்டாம்" என்று இறங்க திரும்ப,

"மீனாம்மா ஒரு நிமிஷம்.." என்று சத்தமாய் குரல் கொடுத்தாள் சாரு.

மீனாட்சிக்கு ஒரு மாதிரியான படபடப்பாய் வந்துவிட்டது. அழமாட்டேன் என்ற வைராக்கியமும் நிறையவே இருந்தது.

'என் பிள்ளை திருமணம் நான் பார்க்க தானே சிறப்பாய் நடக்க இருக்கிறது' தன்னைத் தானே தேற்றியபடி மீனாட்சி இறங்கிவிட தான் பார்த்தார்.

சொந்தங்களை பகைத்துக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை.

ஆதிக்கு அவ்வளவு கோபம் இருக்க கண்கள் ரத்தமென சிவந்து விட்டிருந்தது.

"சொல்லு சாரு" சாதாரணமான புன்னகையுடன் அவர் கேட்க,

"இவங்க யாரு?" என்றார் மீனாட்சியை பேசிய பெண்மணியைக் காட்டி.

"என்னோட அத்தை முறைடாம்மா" என்றவருக்கு எதாவது பேசிவிட கூடாதே என்றும் தோன்றாமல் இல்லை.

"மாமியார் இல்லைல? மாமியாராவே இருந்தாலும் என்ன?" என்றதும் அந்த பெண்மணி கோபமாய் பார்த்தார்.

ரேடியோவில் பாடல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.. கீழே இருந்த யாருக்கும் இந்த சத்தங்கள் எல்லாம் கேட்க வாய்ப்பில்லை.

மேடையில் ஒரு புறம் ஓரமாய் தான் நின்றிருந்தாள் சாரு.. ப்ரீத்தி, சாருவும் சாருவுடன் பேச என பிரேமாவும் அவளருகே நின்றிருக்க, அங்கே தான் அந்த பெண்மணியும் நின்றிருந்தார் இன்னும் இரு பெண்களோடு.

இவர்களுக்குள் தான் இந்த சத்தம்.. அது மணமக்கள் இருந்த பக்கம் கூட திரும்பி விடாத அளவிற்கு தான் இருந்தது சாருவின் அந்த அடக்கத்துடன் ஆன சத்தம்.

"ஏப்பொண்ணே! என்ன சொல்ல வர்ற நீ?" மீனாட்சியின் அத்தை என்று கூறப்பட்டவர் நேராய் கேட்க,

"எனக்கு உங்களோட பேச்சு இல்லை.. நான் மீனாம்மாகிட்ட தான் பேசுறேன்" என்று சொல்லவும் முகம் கருத்துவிட்டது அவருக்கு..

சுற்றி நான்கைந்து பேர் தான் என்றாலும் அது மகள் மருமகள் என தன் சொந்தங்களாய் இருக்க, அவமானமாய் உணர்ந்தார்.

"சாரும்மா வேணாம்டா.. ஒன்னுமே இல்ல.. நான் அம்மாவோட கீழ இருக்கேன்.." என்று மீனாட்சி கண்களாலும் சொல்ல,

"சரி ஓகே.. முஹூர்த்ததுக்கு நேரமாச்சு தாலி கட்ட போறாங்க.. இங்க இருக்குற யாராச்சும் உங்களை விட முழு மனசா உங்க பொண்ணு நல்லா இருக்கனும்னு வாழ்த்துவாங்கனு நீங்க நினைச்சீங்கன்னா நீங்க கீழ போங்க.. சரி தானே?" என்று ஆதியிடமும் அவள் திரும்பி கேட்க, ஆதிக்குமே வருத்தமாய் இருந்தது தன் அன்னையின் நிலை.

இப்படி என்றுமே அடுத்தவர் முன் நின்றதில்லை.. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்து தான் பழக்கம் அவனுக்கு.. அந்த பெண்மணியை திருப்பி பேச கூட தோன்றவில்லை. ஒரு முகச்சுளிப்பு போதுமே.. அப்படி தான் நின்றிருந்தவன் சாரு சொல்லவும்,

"ம்மா! நான் தான் சொன்னேனே இவங்க எல்லாம் இதுக்கு தான் வருவாங்கன்னு.." என்று ஆதியும் கூற,

"என்ன மீனா யார் இவ? உன் பையனை விட்டு பேச வைக்குறியா?" என்று சத்தம் போட ஆரம்பிக்க,

"ஷ்ஷ்ஷ்" என்று அவர் பாக்க திரும்பி இருந்தாள் சாரு.

"கல்யாண வீடு.. உங்களால எதாவது பிரச்சனை வந்துச்சு.." என்று மிரட்டியவள்,

"ப்ரீத்தி! நம்ம போலீஸ் அங்கிள்க்கு கால் பண்ணு.. இந்தம்மா கல்யாணத்துல பிரச்சனை பண்றாங்கனு கேஸ் போடலாம்" என்று சொல்ல,

"என்ன பொண்ணே மிரட்டுறியா? எங்க கூப்பிடு பார்ப்போம்" என்று அவர் கேட்க,

"என் அம்மாவை என்ன வார்த்தை சொன்ன?" என பிரேமாவும் சண்டைக்கு வர,

"சும்மா சொல்றேன்னு நினைச்சீங்களா? ப்ரீத்தி நீ கால் பண்ணு.. ஈஸியா வெளில வந்துடுவாங்க தான்.. ஆனாலும் இப்படி பிரச்சனைல... இந்த கல்யாணத்துல... இன்னாரு... இவங்க.... போலீஸ் ஸ்டேஷன் வர போய்ட்டு வந்தாங்களாம்ன்ற பேர் இருக்கும்ல?" என்று கூற வெளுத்துவிட்டது அவர் முகம்.

"சாரு.. சாரு.. ப்ளீஸ்.. ப்ளீஸ் டா.. பேசாத.." என பல விதமாய் கெஞ்சிக் கொண்டு தான் இருந்தார் மீனாட்சி.. அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை சாரு..

அத்தனை கோபம் அவளுக்கு.. எப்படி இப்படி மனசாட்சியே இல்லாமல் ஒருவர் மனதை குத்திக் கிழிக்க முடிகிறது என்று நினைத்தவள் பேசியவரை சும்மா விடுவதில்லை என்பதை போல பேசிக் கொண்டிருந்தாள்.

"நல்ல மரியாதை டி உன் பொண்ணு கல்யாணத்துக்கு வந்ததுக்கு.." வேறெதுவும் பேச முடியாமல் இப்படி சொல்ல,

"வர தான சொன்னாங்க? நாட்டாமை பண்ண சொல்லலையே?" என்று சாருவும் விடுவேனா பார் என கேட்க,

"இனிமே உன் வீட்டு பக்கம் வந்துட மாட்டேன்" என்று கூறி சென்றார் அவர்.

"ஹான் போங்க.. போங்க.. சாப்பாடு அந்த பக்கம்" என்று வேறு கூறி கடுப்பேற்றி அனுப்பி வைத்தாள் சாரு.

கூடவே பிரேமா அவரது மகள், மருமகள் என அனைவரும் கோபமாய் இறங்க,

"சாப்பிட என்ன அவசரம் பாரேன்" என்று விடாமல் கலாய்த்து தள்ளினாள் சாரு.

"என்ன சாரு" என்ற மீனாட்சி குரலில் பயம், பரிதாபம், பரிதவிப்பு என எல்லாம் இருக்க,

"மீனாம்மா.. என் மேல கோபம் இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் காட்டிக்கலாம்.. இப்ப போய் உங்க பொண்ணை ஆசிர்வாதம் பண்ணுங்க பார்க்கலாம்" என்று கூற,

"யார் கல்யாணத்துக்கு அப்புறம் க்கா?" என பின்னிருந்து கண் சிமிட்டி கேட்டாள் ப்ரீத்தி.

"சும்மா இரு சாரு.. அந்தம்மா பேரன் ஃபாரின்ல இருக்கான்.. அவனுக்காக உன்னை..." என்று சொல்ல வந்தவர் கைகளை ஆதி பிடிக்க, சடுதியில் புரிந்து கொண்டாள் சாரு.

"ஓஹ் காட்! இதை ஏன் மா முதல்லயே சொல்லல? நல்லா ஃபாரின சுத்தி பார்த்திருக்கலாமே.. வட போச்சே! இப்ப நான் எங்கன்னு போய் தேடுவேன்" என்று கூட்டத்தை அலசுவது போல அவள் தேடி குறுநகை புரிய, மீனாட்சிக்கு உடனே அவள் விளையாட்டு புரிந்துவிட்டது.

ஓரக் கண்ணால் ஆதியை தான் பார்த்து நின்றாள் சாரு.. அத்தனை நேரம் மனம் முழுதும் சொல்ல முடியாமல் அழுத்தும் உணர்வுடன் அவளை பார்த்திருந்தவன், இறுதியில் முகம் கடுகடுவென மாறிவிட, கைகளை இறுக்கி வேறு எங்கோ பார்வையை வைத்து நின்றான்.

"போ சாரு! எல்லாமே விளையாட்டு தான் உனக்கு" என்றவர் புன்னகை புரிந்தாலும் கவலையோடு வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தவாறே மகளருகே சென்றார்.

ஆதி கண நேரம் என்றாலும் தீப்பார்வையில் பார்க்க, அந்த கண நேரத்திலும் "சும்மா லொலலாய்க்கு" என்று ஓசையில்லாமல் பேசி கண்ணடித்தாள் சாரு.

அதில் உள்ளம் அடித்துக் கொள்ள அன்னை பின்னே வேகமாய் சென்றுவிட்டான் ஆதி.

"ஓட விட்ற க்கா நீ!" என்று ப்ரீத்தி சிரிக்க,

"எவ்வளவு நாள்னு பாக்கலாமே!" என்று சிரித்தாள் சாருவுமே..

மேள சத்தத்துடனும் அனைவரின் ஆசிர்வாத அட்சதையுடனும் ஆதி தங்கையின் திருமணம் இனிதாய் நடந்து முடிந்தது.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
அன்னைக்கு சாரு
ஆதரவாய் பேச
ஆதிக்கு புரியுமா..... 💐💐💐🤩🤩🤩
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அன்னைக்கு சாரு
ஆதரவாய் பேச
ஆதிக்கு புரியுமா..... 💐💐💐🤩🤩🤩
புரியனுமே
 
Top