• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 14

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 14

ஆதி மாரி இருவரும் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றவர்கள் வர நேரமாகிவிட, இரவு பத்து மணிக்கு ஆதி மாரியை அவன் வீட்டில் விட்டுவிட்டு தன் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டின் கதவு பூட்டியிருக்க, அன்னை தியாகு வீட்டில் இருப்பாராய் இருக்கும் என நினைத்து கேட்டை திறந்த நேரம் தியாகுவின் வீட்டில் இருந்து தேவி அழுதபடி வர, அவரை சமாதானப்படுத்தி வந்தனர் மீனாட்சியும் தியாகு அன்னையும்.

தியாகு தனது பைக்கை எடுத்துக் கொண்டு வர, "என்னாச்சு மா? ஏன் அழுறாங்க?" என அன்னையிடம் வந்தான் ஆதி.

"சாருவும் ப்ரீத்தியும் இன்னும் வீட்டுக்கு வரலையாம் பா" என்றார் மீனாட்சி.

"இவ்வளவு நேரமா?" என்று ஆதி தியாகுவைப் பார்க்க,

"கிளாஸ் முடிச்சிட்டு ப்ரீத்திக்கு உடம்பு சரி இல்லைனு ஹாஸ்பிடல் போயிருக்காங்க.. இப்ப போன் பண்ணினா போன் சுவிட்ச் ஆப்" என்ற தியாகு,

"நான் போய் பாக்குறேன்" என்று சொல்ல,

"நானும் வர்றேன்" என்று ஆதியும் கூட அவன் வண்டியை எடுத்துக் கொண்டான்.

ஆதி அதிகமாய் பயம் எல்லாம் கொள்ளவில்லை. இங்கே தான் எங்கோ இருக்கிறார்கள் என்று தான் அவன் மனம் சொல்லியது.

அது பொய்யில்லை என்பதை போல வண்டியை தள்ளிக் கொண்டு தூரத்தே வருபவர்களை பார்த்துவிட்டான் ஆதி.

சாரு, ப்ரீத்தி அருகே சென்று வண்டியை நிறுத்தியவன் தியாகுவிற்கு அழைத்து இவர்கள் இருக்கும் இடத்தை கூறி வர சொல்லியவன், அடுத்து அன்னைக்கும் அழைத்து பார்த்துவிட்டதாய் கூறினான்.

ஆதியைப் பார்த்ததும் முகத்தில் மின்னலடிக்க, கண்களை விரித்து பார்திருந்த சாரு, அவன் இவர்கள் அருகே முறைத்துக் கொண்டே வரவும் குழப்பமாய் நெற்றியை சுருக்கினாள்.

தொலைபேசியில் இவன் பேசியதை கேட்டதும் தான் அவர்கள் தேடி இருப்பதே புரிந்தது.

"அம்மா அனுப்பினாங்களா? நான் சொல்லிட்டு தான்..." எனும் போதே,

"போன் எங்க?" என்றான் ஆதி கோபமாய்.

"அது பேட்டரி டவுன்" என்று தூக்கி காண்பிக்க,

"வீட்டுல தேடுவாங்கனு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா? வாயை கேளு எட்டூருக்கு பேச்சு கொடுக்கும்.. மணி என்ன ஆச்சு? ஒரு போன் பண்ணி சொல்ல தெரியாது?" கேள்வியாய் கேட்டு சத்தமாய் அவன் கோபத்தை காண்பிக்க, வந்துவிட்டான் தியாகு.

"என்ன சாரு! ஒரு போன் பண்ணி சொன்னா என்ன? எல்லாரும் பயந்து போய் இருக்காங்க" அவன் கூறியதையே அமைதியாய் கூறினான் தியாகு.

"போன் சார்ஜ் இல்லண்ணா.. வர்ற வழில வண்டியும் நின்னுடுச்சு.. காலையில தான் வேண்டினேன் வண்டி ஏன் இப்படி நல்ல கண்டிஷன்ல இருக்குன்னு.. அதுக்கு இப்படி அர்த்த ராத்தரில கடவுள் பலனை கொடுத்து என் காதுல ரத்தம் வரவும் வச்சுட்டார்" என்று ஆதியை பார்த்து சாரு சொல்ல,

"சில்லி ரீசன் சாரு.. அம்மா அங்க அழுதுட்டு இருக்காங்க.." என்று தியாகுவுமே கடுமையாய் சொல்ல,

"அய்யோ ண்ணா.. நான் என்ன வேணும்னா பண்ணினேன்.. இதெல்லாம் விதி.. இவளுக்கு பிவேர் வந்தது.. வண்டி ரிப்பேர் ஆனது.. இப்படி நின்னு பேச்சு வாங்குறது.." என்று சாருவும் தன் பக்கமாய் நியாயத்தை சொல்ல,

"ப்ச்! சொன்னதையே சொல்ற.. சரி விடு.. ஆதி! வண்டிக்கு என்னாச்சு பாரு" என்று சொல்லவும், அவனும் பார்க்க,

"ஷெட்ல போய் தான் பார்க்க முடியும்னா.. லீக்கேஜ் இருக்குன்னு நினைக்குறேன்" என்றவன்,

"வண்டி நிக்கட்டும்" என்று கூறி சாவியை எடுத்து தன் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

சாருவும் ப்ரீத்தியும் அசையாமல் நிற்க, பல்லைக் கடித்த ஆதி, "ப்ரீத்தி! வந்து ஏறு" என்று சொல்லவும் தலை அசைத்தவள் ஆதி வண்டியில் ஏறிக் கொள்ள,

"திமிரு கூடி போச்சுல்ல.. உனக்கு இருக்கு யா" என்று நினைத்தபடி தியாகுவுடன் சென்றாள் சாரு.

'வாய் பேச தெரியுதுல்ல.. வந்து உக்கார மட்டும் வெத்தல பாக்கு வைக்கணும்' தெளிவாய் புலம்பிய ஆதியின் குரல் கேட்டு கண்களை விரித்த ப்ரீத்தி ஆர்வக் கோளாறாய்,

"என்ன சொன்னிங்க?" என்று கேட்ட கேள்வியின் அதிர்ச்சியே நிரம்பி இருக்க, நாக்கைக் கடித்துக் கொண்டான் ஆதி.

"இல்ல.. ஒன்னும் இல்ல" என்றவன் நேராய் வீட்டின் முன்பு நிறுத்த, அத்தனை திட்டுக்களும் தேவியிடம் இருந்து சாருவிற்கு.

"சரி தேவி.. ரோட்ல நின்னு என்ன பேச்சு.. அதான் பசங்க வந்துட்டாங்க இல்ல? வீட்டுக்கு கூட்டிட்டு போ" என்று தியாகுவின் அன்னை கூற,

"அதான.. சும்மா வந்துட்டு இருந்த புள்ளைங்கள காணும்னு அழுது பயந்தது நீ.. வசவு அதுங்களுக்கா?.. போய் சாப்பாட்டை குடு தேவி" என்றார் மீனாட்சியும்.

"உள்ள வாங்க டி" என்று தேவியும் சென்றுவிட,

"ஷப்பா.." என்று மூச்சு விட்ட சாரு,

"தேங்க் யூ" என்று பொதுவாய் அங்கிருந்தவர்களைப் பார்த்து சொல்லிவிட்டு சிரித்தபடி செல்ல,

"விளையாட்டு தான் எப்பவும்" என்றபடி கலைந்தனர்.

ப்ரீத்தி சாருவின் காதில் எதுவோ சொல்லியபடி செல்ல, என்னவாய் இருக்கும் என அறிந்த ஆதி வேகமாய் உள்ளே சென்றுவிட்டான்.

"இன்னும் ஆறு மாசத்துக்கு மேல ஆகுமாம் சாரு அப்பா வர" தகவலாய் மீனாட்சி கூற, எதுவும் பேசிடவில்லை ஆதி.

"இந்த முறை வந்தா சாரு கல்யாணத்தை முடிச்சிட்டு தான் போனும்னு முடிவா இருக்காராம்" அடுத்த தூண்டிலை போட,

"ம்மா!" என்று ஆதி அழைக்கவும், ஏதாவது சொல்லுவான் என ஆர்வமாய் அவனருகில் வர,

"அந்த சார் ஏன் மா இன்னும் வெளிநாட்டுக்கு போனும்? அவங்களுக்கு தான் நம்ம மாதிரி எந்த நிர்பந்தமும் இல்லையே?" என யோசித்தவாறே கேட்க, முறைத்தார் மீனாட்சி.

"புத்தி போகுது பாரு.. ஏaன் டா.. இப்ப இது ரொம்ப முக்கியமா? அவரு எங்க வேலை பார்த்தா நமக்கு என்ன? மனசுல எப்ப பாரு இந்த நினைப்பு தானா உனக்கு? நமக்கு மட்டும் என்ன நிர்பந்தம்? சும்மா எதாவது பேசி என்னை கடுப்பேத்தாத" என்றவர் ஏற்கனவே கடுப்பில் தான் இருந்தார்.

"அப்ப இந்த நேரத்துல அவங்க வீட்டு பிரச்சனை மட்டும் ரொம்ப முக்கியமா இங்க?" என்று ஆதியும் கேட்க,

"இதெல்லாம் சரி வராது.. நான் பாட்டுக்கு இங்கேயும் அங்கேயுதைரியமா நீங்க பேசினது பேசி சமாளிச்சு கல்யாணமும் பண்ணி வச்சு.. நாளபின்ன நீ கடமை எருமைனு அவளை பார்க்காம விட்டன்னா நான் தான் அசிங்கப்படணும். விடிஞ்சதும் முத வேலையா போய் அவங்கள மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்க சொல்ல போறேன்.." என்று மீனாட்சி கூற, மீண்டும் சறுக்கினான் ஆதி.

"அதில்ல மா.. அங்க தான் எந்த பிரச்சனையும் இல்லையே.. அப்புறமும் ஏன் குடும்பத்தை விட்டு அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுனு நினைச்சு கேட்டேன்" என்று தனிவாகவே அவன் கூற,

"பின்ன.. நீ போய் நான் தான் மூத்த மருமகன்னு அங்க எல்லா பொறுப்பையும் ஏத்துக்க போறியா? இல்லல்ல? ரெண்டு பொண்ணு வச்சுருக்காங்க.. ஒத்த தங்கச்சிக்கு நீ செஞ்சத அவங்க ரெண்டு பொண்ணுக்கும் நல்லபடியா செஞ்சு முடிக்க வேண்டாமா.. கேக்குறான் பாரு கேள்விய" என்று கூற,

"அது சரி தான்.. அதுக்குன்னு கடல் கடந்து.." என்றவன் பேச்சில்,

"உனக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நானும்.. கட்டிக்கணும்னு ஒரு பொண்ணும் ஒத்த காலுல நிக்குறோம் பாத்தியா.. நான் பேசுனதை அப்படியே மாத்தி எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க.." என்றார் கோபமாய்.

"சரி மா... என்னவோ தோணுச்சு கேட்டேன்" என்றான் முடிக்கும் விதமாய்.

"ம்ம்க்கும்.. கேட்டதுக்கு மட்டும் பதில சொல்லிடாத" மீனாட்சியும் விடாமல் கேட்க,

"எனக்கு இன்னும் ஒ ரு ஒருவருஷன் போகட்டும்னு இருக்கு" என்றவன் அமர்த்தலான தயக்கமான பேச்சில் அவன் யோசிக்கிறான் என்று புரிந்துவிட,

"மண்டபத்துல அவ்வளவு பேர் முன்னாடி எவ்வளோ தைரியமா உன் பாட்டியை கேள்வி கேட்டா.. அப்போ என்னை எப்படி பார்த்துக்குவா?" என்று கேட்கவும்,

"எப்பவும் ஒரே மாதிரியா இருப்பாங்களா எல்லாரும்?" என்ற ஆதி பதில் அவனுக்கே அபத்தமாய் தான் தோன்றியது பேசி முடித்தபின்.

'ஜான் ஏறினா முழம் சறுக்குறான்.. இவனை என்ன பண்ணலாம்' என்று அன்னையும் முறைக்க,

"எனக்கு இன்னும் ஒரு வருஷமாச்சும் நேரம் வேணும் மா.." என்று எழுந்து கொள்ள,

"அப்போ அப்படியே சொல்லவா?" என்றார் அவனைப் போலவே பிடிகொடுக்காமல்.

"எப்படி?"

"என் மகனுக்கு கல்யாணம் பண்ணிக்க ஐடியாலாம் இல்லையாம்.. அண்ணே வந்ததும்..." என்றதும் அவன் இடுப்பினில் கைவைத்து முறைக்க,

"ஏன் டா வேணும் வேண்டாம்னு சொல்ல என்ன உனக்கு? அம்மாகிட்ட சொல்ல கூட இவ்வளவு யோசிக்குற?" என்றவர்,

"பட்டுன்னு ஒன்னை சொல்லேன்.. உனக்காக தான் காத்துட்டு இருக்கு.. ஒரு வார்த்தை பேசுதா?" என்று கேட்க,

'அவ்ளோ கம்மியாலாம் அவளுக்கு பேச வருமாக்கும்' என்று தோன்றவும் மறக்கவில்லை ஆதிக்கு.

எதுவாய் இருந்தாலும் அவன் ஒருமுறை வாய் திறந்து பேசிவிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது மீனாட்சிக்கு.

கட்டாயப்படுத்திவிடக் கூடாது என்றே ஒரு மாதமாய் சாருவைப் பற்றி எதுவும் மகனிடம் பேசாமல் இருந்தவர், இப்போது நேராய் நின்று கேட்கவும் செய்தார் ஒரு முடிவை கொண்டுவர.

"சரி நீங்களே பேசிக்கோங்க" என்றவன் உள்ளே சென்றேவிட்டான்.

இதற்குமேல் உடைத்து எல்லாம் பேச முடியவில்லை அவனுக்கு. அழுத்தம் என்று தான் பார்ப்பவர்களுக்கு அவன் குணம்.

அப்படியே இருந்து பழகிக் கொண்டவனை இத்தனை வயதுக்கு மேல் மீட்டெடுக்க யாரும் நினைக்கவும் இல்லை.

முடிவுகள் சரியாய் இருக்கும் பட்சத்தில் இதுவரை அதற்கான அவசியமும் வந்திருக்கவில்லை.

எதையும் நிதானமாய் பல முறை சிந்தித்து முடிவெடுத்து பழகியவன் முடிவுகள் என்றும் தவறியதும் இல்லை.

சாருவிற்கும் அதே போலவே நீண்ட நெடும் நேரங்களை அவன் எடுத்துக் கொள்ள அது தான் பிடிக்கவில்லை மீனாட்சிக்கு.

இப்பொழுது கூட மனதில் உள்ளதை சொல்லாமல் உங்கள் விருப்பம் என்பதை போல அவன் சொல்லிச் சென்றாலும் அதுவே போதுமானதாய் இருந்தது அன்னைக்கு.

"இந்த ஒத்த வார்த்தையை வாங்குறதுக்குள்ள தலையால தண்ணி குடிக்க வச்சுட்டான்.. இனி இவனாச்சு இவன் பொண்டாட்டி ஆச்சுன்னு இருந்து அவளை வச்சே தான் இவன்கிட்ட வேலைய ஆக்கிக்கணும்" என அதற்குள் பொறுப்புக்களை மருமகளிடம் கொடுப்பது பற்றிய யோசனைக்கே சென்றுவிட்டார் மீனாட்சி.

எப்போதடா விடியும் இதை அனைவரிடமும் சொல்லலாம் என மீனாட்சி கைகால்கள் எல்லாம் பரபரக்க, உள்ளே வந்தவனுக்கோ 'இப்படியா வாய் பேச முடியாமல் போவோம்' என்று தன்னை குறித்தே வெட்கமாகிப் போனது.

அன்னை கேட்டதும் தான் நினைப்பதை சொல்லிவிட வேண்டும் என நினைத்திருக்க, சொல்லிவிடுவேனா பார் என அவன் உதடுகளே சதி செய்தது.

தான் சொல்லி வந்தது அன்னைக்கு புரிந்திருக்கும் என்றாலும் இன்னும் தெளிவாய் சொல்லத் தான் நினைத்தான் அவன்..

"அதற்கு நீ சாரு இல்லையடா மடையா.. நீ ஆதி" என்றது மூளை எள்ளலுடன்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
சொல்லிட்டானே அவன்
சம்மதத்தை.....
சொல்லும் போதே
சுகமாய் வெக்கம் தாங்கல..... 🤩🤩🤩🤩
 
Top