• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 18

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 18

"சொல்லுங்க வாத்தியாரே!" என ஆதி முன் வந்து நின்றாள் சாரு.

ஒரு மணி நேரத்திற்கு முன்பே சொல்லிக் கொண்டு வெளியே வந்துவிட்டவள் நேராய் ஆதியிடம் தான் வந்தாள்.

என்ன என அவள் கேட்ட பின்பும் கூட அமைதியாய் யோசித்து நின்றான் ஆதி.

"ஏதாச்சும் முக்கியமான விஷயமா?" சாரு கேட்க

"ஹ்ம்ம்!" என்று மட்டும் கூறினான்.

"அப்ப பக்கத்துல இருக்குற கோவில்ல பேசலாமா?" என கேட்க மறுப்பேதும் சொல்லவில்லை அவன்.

கோவிலில் உள்வந்தும் அமைதியாய் ஒரு இடத்தில் ஆதி அமர்ந்துவிட, அவனிடம் கேட்காமலே சாமியை கும்பிட்டுவிட்டு வந்து அருகில் அமர்ந்தாள்.

சற்றுமுன் வரை அவன் பேசியதும் சிரித்ததும் என அவளுள் பதிந்து போயிருக்க முகம் முழுதும் விகசித்து இருந்தது.

தன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் எனும் பொழுதே காரணம் இல்லாமல் வர வாய்ப்பில்லை என உறுதி கொண்டவளுக்கு என்னவோ பெரிதாய் இருப்பதாய் தான் தோன்றியது.

அது தான் ஆதி யோசிக்கவும் காரணம். திருமணத்திற்கு என ஒரு வருடம் நேரம் கேட்க வந்திருப்பதை கூறினால் இவள் முகம் எப்படி மாறுமோ என நினைத்தைபடி அமைதியாய் இருந்தான்.

சாருவும் அவனாய் பேசட்டும் என்பதை போல அமைதிகாத்தாள்.

"உன்கிட்ட இன்னைக்கு வெளில போறதா அம்மா சொன்னாங்களா?" ஆதி கேட்க,

"ம்ம் ஆமா பூ வைக்குறது பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க.. என்னாச்சு? நாள் குறிச்சுட்டாங்களா? உங்களுக்கு அது செட்டாகலையா? அதுக்கு தான் பேச வந்திங்களா?" அவளாக இதுவாக இருக்குமோ என நினைத்து பேச,

"ப்ச்! கொஞ்சம் பேச விடு.. எப்ப பாரு லொடலொடன்னு" என்றதில் பழைய ஆதி மீண்டிருந்தான்.

"ஆஹான்!" என்றவளுக்குமே புன்னகை அதில்.

முழுதாய் அன்னையிடம் தான் சொல்லியது முதல் தேவியுடன் அன்னை சென்று செய்து வைத்தது வரை என அனைத்தையும் சொல்லி இருந்தான்.

"ஜாதகம் எல்லாம் எனக்கு பெருசா நம்பிக்கை இல்ல.. ஆனா இந்த மூணு மாசம்ன்றது தான்... அம்மாகிட்ட பேசி பார்த்தேன்.. அம்மா தான் உன்கிட்டயே கேட்க சொன்னாங்க" என்று கூற,

"ஆக மொத்தம் என்னை பார்க்க தான் இவ்வளவு ரீசன் இல்ல?" என்று சாதாரணமாய் அவள் கூற, என்ன நினைத்தாளோ என்ன கூறுவாளோ என்பதை போல முறைத்து பார்த்து நின்றான் ஆதி.

"இதுல என்ன இருக்கு? எனக்கு எந்த ப்ரோப்லேமும் இல்ல.. வாழப் போறது யாரோடனு நாம முடிவு பண்ணின பின்னாடி அதுக்காக எவ்வளவு நாள் வேணா காத்திருக்கலாம்.. ஒரு வருஷம் எல்லாம் ஒரு விஷயமா?" என்று சொல்லவும் ஆதி நம்பமுடியா முகபாவனையை காட்ட,

"எனக்கு எந்த ஆட்சயேபனையும் இல்ல. சொல்ல போனா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கூட இல்ல.." என்று சொல்லவும் புரியாமல் பார்த்தான் ஆதி.

"நான் இப்ப கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கவே இல்ல.. உங்களோட கல்யாணம்.. அது மட்டும் தான்.. அது எப்ப நடந்தாலும் ஓகே தான்.." என்றவள் முகத்தில் அத்தனை தீவிரம்.

அதுவே அவள் அளவில் எவ்வளவு திடமாய் நம்பிக்கையாய் இருக்கிறாள் என்பதை கூற இங்கே பலவீனப்பட்டுக் கொண்டு இருந்தான் ஆதி.

"நான் அம்மாகிட்ட பேசறேன்.. ஒரு வருஷம் தானே? அதெல்லாம் இப்படின்றதுக்குள்ள போயிடும்" என்று அவள் கூற, இவனுக்குள் புதிதாய் ஒரு தவிப்பு உருவானதை நன்றாய் உணர முடிந்தது ஆதிக்கு.

"ஆனா நான் எப்பவும் உங்களோட இலக்குக்கு தடையா இருக்க மாட்டேன்.. உங்க வாழ்க்கைக்குள்ள வந்த பின்னாடியும் வர்றதுக்கு முன்னாடியும்" என்று சொல்லவும்,

"நிஜமா அப்படி இல்ல.. அப்படி நான் நினைக்கவும் இல்ல.. இன்னும் சொல்லனும்னா உன்கிட்ட இதை கேட்க நான் தயங்கினதே நீ இப்படி நினைச்சுடுவியோன்ற ஒரு எண்ணத்துல தான்" நீண்ட வார்த்தைகள் முதல் முறை சாருவுக்கு ஆதியிடம் இருந்து வர, புன்னகைத்தவள்,

"அப்படி நினைக்கலைனா கல்யாணத்தை நிறுத்த இவ்வளவு தூரம் என்னை தேடி வர அவசியம் இல்லையே?" என்றாள் சீண்டலாய்.

"இலக்குன்னு எதுவும் இல்ல.. உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா அப்பாவை இழந்த பின்னாடி என்னை விட அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.. அதை என்னால உணர முடிஞ்சது.. அப்ப இருந்தே ஒரு எண்ணம் அப்பா இருந்தா இதை எல்லாம் எப்படி செய்வாங்களோ அதை எல்லாம் அதைவிட நல்லா செய்யணும்.. அம்மா கொஞ்சம் கூட அதுல வருந்திட கூடாதுன்னு.. அந்த ஒரு காரணம் தான்" என்றான் அவளிடம் விளக்கமாய் தன் மனதில் இருப்பதை.

"அதுக்கு தடையா நான் இருப்பேன்னு நினைக்குறிங்களா? அதனால தான் கல்யாணத்தை நிறுத்த இவ்வளவு மெனக்கெடலா?" மீண்டும் அதே கேள்வியே வேறு மாதிரி சாரு கேட்க,

"தப்பா புரிஞ்சுக்குற.. கொஞ்ச நாள் முன்ன வரை எனக்கு கல்யாணம்ன்ற எண்ணம் வந்ததே இல்ல" என்றதும்,

"அப்ப எப்ப வந்ததாம்?" என்றாள் குறும்பு புன்னகையுடன்,

"பேச விடறியா?" மெல்லிய முறைப்புடன் அவனுமே சிரித்தபடி சொல்ல,

"ஓகே ஓகே!" என்றாள் அதில்.

"இன்னொன்னு.. கல்யாணத்தை நிறுத்த நான் கேட்கல.. ஜஸ்ட் தள்ளி போடறதை தான் பேச வந்தேன்.." என்றான் அவள் வார்த்தைக்கு வார்த்தை அதை சொல்லியதை கேட்டு..

"ஓஹ்.. அப்படியும் சொல்லலாமா?"

"அப்படி மட்டும் தான் சொல்லணும்" என்றவன்,

"என்ன சொல்ல வந்தேன்னே மறந்து போய்டும் போல.. உன்கிட்ட பேசறதுக்குள்ள.." என்று முறைப்பாய் அவன் சொல்ல,

"ஹப்பா இப்ப தான் வாத்திகிட்ட பேசுற ஃபீலே வருது.. சாப்ட்டா சிரிச்சிட்டே பேசினீங்கன்னா எனக்கு ஒன்னும் ஓட மாட்டேங்குது.. கூட சில்ற வேற இல்லையா.." என்கவும் இன்னும் நன்றாய் அவன் முறைக்க,

"இல்ல ஒரு ரெண்டு வார்த்தை அவனும் எடுத்து கொடுப்பான் இல்ல. அதுக்கு தான்.." என்றாள் சமாளிப்பாய்.

"ப்ச்! சொல்ல விடறியா இல்லையா?" என்றான் மீண்டும்.

"சரி ஓகே.. மூச்!" என்று வாயில் விரல் வைத்துவிட, என்ன பேசினோம் என சில நொடி யோசித்தவன்,

"கல்யாணம் பத்தி எல்லாம் நிஜமாவே நான் யோசிச்சது இல்ல.. எனக்கான கடமைகள் தான் முதல்லனு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்பவும் அதே தான்.. ஆனாலும்..." என்று இழுக்க, வந்த புன்னகையை உதட்டுக்குள் மறைத்து வைத்தாள் சாரு.

"நீ தடையாவோ இல்ல நீ வந்தா என்னால மேனேஜ் பண்ண முடியாதோன்னு எல்லாம் இல்ல.. என்னோட வாழ்க்கைக்குள்ள ஒருத்தர் வரும் போது அவங்களுக்கான முழு இடமும் அங்க இருக்கனும்னு நினைக்குறேன்.." என்று கூறவுமே அவன் சொல்வதன் அர்த்தம் புரிந்து அவள் கண்களை விரிக்க,

"எல்லாரும் சொல்ற மாதிரி என்னால எல்லாத்தையுமே மேனேஜ் பண்ண முடியும் தான்.. ஆனா எனக்கு அது வேண்டாம்.. ஒரு அமைதியான வாழ்க்கை தான் எனக்கு வேணும்.. அது எங்க கிடைக்கும்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு.. அதை முழுசா அனுபவிச்சும் வாழனும் தானே?" என்று கூறியவன்,

"என்னால உன்னை மாதிரி எல்லாம் பேச முடியாது.. எனக்கான டைம் மட்டும் கொடு" என்று வேண்டி நிற்க, பேச்சச்சு போனாள் அவன் பேச்சினில்

அவனிடம் சில மாற்றங்களை சில காலமாய் உணர்ந்தாள் தான் என்றாலுமே இன்று மட்டும் அவனின் பல பரிமாணங்களை மிக குறைந்த நேரத்தில் கண்டிருக்க, ஏற்கனவே அவனை பிடித்த மனதிற்கு அவன்பால் இன்னுமே நெருங்கி இருந்தது.

சாரு என்ற பெண்ணை வாயாடியாய் மட்டும் நினைத்து, பார்த்து என வந்தவனுக்கு அவளிடம் எப்படி, என்னவென பேச என அவ்வளவு தயக்கம் இருந்தது முதலில்.

அதெல்லாம் எதுவுமே இல்லை என்பதை போல தான் இருந்தது இருவரின் இலகுவான உரையாடல்களும்.

அவள் பேசுவதுm இவன் முறைப்பதும் என இருந்த காலத்திலேயே இருந்த ஆதிக்கு பிடித்தம் என்ற ஒன்று எப்படி மனிதர்களை ஆட்டி வைக்கும் என தெளிவாய் புரிந்தது.

முதல் நாள் தனிமை போல இல்லாத நன்றாய் புரிந்துணர்வு கொண்டவர்களுக்கான அழகான நாளாய் இருந்தது அந்த நாள்.

"என்ன பதில காணும்? இவன் எப்ப செட்டில் ஆகி எப்ப கல்யாணம் பண்ணணு நினைக்குறியா?" என்று கேட்டவன் முகத்தில் இருந்த புன்னகை அவன் கிண்டல் செய்வதை உணர்த்த,

"இல்ல கொடுக்குற டைம்குள்ள வேற யாரும் கொத்திட்டு போயிட கூடாதே.. அதான் யோசிக்குறேன்" என்றாள் அவளும்.

"ஆமா வரிசைல தான் நிக்கிறாங்க.. கிளம்பு!" என்றவன்

"ஒரு வாயாடிக்கே கண்ணை கட்டுது" என முணுமுணுத்து எழுந்து கொண்டான்.

"அவ்ளோ தானா?" எழுந்து கொள்ளாமல் அவள் கேட்க,

"வேற என்ன?" என்றவன், நினைவு வந்தவனாய்

"இப்ப பேசின இதெதாவது சொல்லி அவனோட கூட்டு சேர்ந்து அப்புறமா வாய் பேசின..." என்றவன் மிரட்டுவது போல ஒற்றை விரலையும் நீட்டிவிட,

"ஓஹ்! அப்போ நாம ரகசியமா தான் மீட் பண்ணனுமா இனி?" என்றாள் அவன் பேசியதை எல்லாம் கணக்கில் எடுக்காமல்.

"இனி மீட் பண்ண என்ன இருக்கு?" என்று முறைத்தவன்,

"நான் சொன்னதெல்லாம் புரிஞ்சது தானே?" என்று கேட்க,

"வாத்தி சொல்லி புரியாம போகுமா? ஆனா ஒன்னு.. இனி பேசும் போது முறைச்சுட்டே பேசுங்க.. திடிர்னு சிரிச்சதும் என் பல்ஸ் நார்மலா இல்லாம தாறுமாறா ஏறி இறங்கிடுச்சு.." என்று சொல்ல முறைக்க நினைத்தும் முடியாமல் புன்னகை முட்டி நின்றது அவனிடம்.

"திரும்பவும் சொல்றேன் இப்படி ஏடாகூடமா எக்ஸ்பிரஸன் குடுத்தா ஐம் பாவம்.. பச்ச புள்ள இல்ல.. தூக்கி தூக்கி போடும்.." என்று கூற,

"வாய் வாய்.." என்றான் எப்போதும் மனதில் நினைப்பதை இன்று வெளிப்படையாய்.

"சரி வா போகலாம்" என்று வெளியே வரவும் மீண்டும் பூக்கடை கண்ணில் பட, மீண்டும் அதே எண்ணம்.

ஆனால் இப்போதும் எதுவும் மாறவில்லை.. கலாய்க்கத் தான் செய்வாள் நினைத்து சிரித்துக் கொண்டவன் கடந்து வந்து பைக்கை எடுக்க,

"நானும் உங்களோட வரவா வாத்தியாரே? அப்படியே 'பார்த்த முதல் நாளே...'னு பாடிட்டே போகலாம்?" என சாரு பாவனையாய் கேட்க,

"எங்கேருந்து தான் பேச கத்து வச்சுருக்கியோ.." என்றவன்,

"போய் கிளாஸ் கவனி.. உன்கிட்ட கூட கத்துக்க வர்ராங்க பாரேன்" என கலாய்த்துவிட்டே செல்ல, முகம் கொள்ளா புன்னகையை முகத்தில் கொண்டு சென்றாள் சாரு.

ஆதி நினைவெங்கும் அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் கண் பாஷைகளும் நிறைத்திருக்க மனதின் துள்ளலுடன் வீட்டை நோக்கி சென்றான்.

நான் என்பதில்
இன் மறைந்து இம் வந்ததும்
ஏனோ
போ என்பதில்
போ ஒழிந்து வா வந்ததும்
ஏனோ

வெட்கம்
என்னை நனைக்கும்
இது ஏனோ

வார்த்தைகள்
நாவிலே உடையுதே
ஏனோ
மண்ணில் நான்
வாழ்வதே மறந்ததே
ஏனோ

தொடரும்..
 
Top