• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 23

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
576
அத்தியாயம் 23

ஆதி சாருவின் நிச்சயதார்த்தம் மிக எளிதாய் நடந்து கொண்டிருந்தது அந்த மண்டபத்தில்.

காலையில் திருமணத்திற்கான வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இங்கே மேடையில் ஆதியும் சாருவும் நின்று கொண்டிருந்தனர்.

தியாகு மாரி இருவரும் வேலைகளை பகிர்ந்து கொள்ள, முடிந்த வரை அவர்களுக்கு வேலை இல்லாமல் நிறையவே முடித்திருந்தான் ஆதி.

ஸ்ரீரங்கமும் திருமணத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தான் வந்து சேர்ந்தார்.

ஆதியே எல்லாம் தான் பார்த்துக் கொள்வதாகவும் எந்த பிரச்சனையும் இல்லை விடுமுறை கிடைத்தவுடன் வந்தால் போதும் என்றே சொல்லிவிட, திருமணத்தின் பின் அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் வந்திருந்தார் அவர்.

வந்தவரை உடனே பார்த்து வணங்கி முன்பு நடந்ததற்கு நேரில் ஒருமுறை மன்னிப்புக் கேட்டு சென்றிருந்தான் ஆதி.

ஆதி வாழ்த்து கூறுபவர்களுக்கு புன்னகையுடன் பேசி நன்றி கூறி நிற்க, சாருவும் அவனை பின்பற்றி இருந்தாள்.

இடைஇடையே அவனை தொல்லை செய்யவும் மறக்கவில்லை அவள்.

மெரூன் வண்ண சட்டையும் அதற்கு பொருத்தமான வேஷ்டியும் என மிக எளிதாய் ஆதி மேடைக்கு வந்து கொண்டிருக்க, சாருவின் கண்கள் அங்கே இங்கே என எங்கும் செல்லவில்லை.

ஆதியும் வழியில் நின்றவர்களுக்கு புன்னகை முகமாய் தலையசைத்து அவள்புறமும் பார்வையை வீசி இருந்தான்.

அதே மெரூன் வண்ண புடவையில் ஜரிகை வேலைபாடுகள் பாந்தமாய் பொருந்தி இருந்தது. அவளைப் போல எல்லாம் ஆதியால் பார்வை செலுத்த முடியாமல் போக நேரே வந்து நின்று விட்டான்.

"வாத்தி! நான் மயங்கிட்டேன்" பாவனையாய் அவள் கூற,

"ஷ்ஷ்!" என்றான் முதலில்.

"எவ்ளோ ஹண்ட்ஸாம் தெரியுமா?" விடாமல் பேச,

"எல்லாரும் பாக்குறாங்க சாரு!" என்றான் மெதுவாய் குனிந்து.

"இந்த ரிங்க போடு டா.. எப்ப பாரு பேசிகிட்டு" தியாகு கிண்டல் செய்ய,

"எது நான் பேசினேன்? நீங்க பார்த்தீங்க?" என்றான் தியாகுவிடமே.

"ஆமா ஆமா! அக்கா மாதிரி அமைதியா இருந்து பழகுங்க ண்ணா!" என்றான் மாரி.

"போதுமா?" சாருவிடம் ஆதி முறைக்க,

"வாத்தி இஸ் பேக்!" என்றவள் கையினை அவன்புறம் நீட்டிட, பேச்சை நிறுத்தி அவனுமே அந்த நிமிடத்திற்கு வந்திருந்தான்.

விரல்களின் மோதல்களோடு இருவரும் பரிமாறிக் கொண்டனர் மோதிரங்களை.

அதன்பின் ஒவ்வொருவராய் வாழ்த்து சொல்ல, அது சிறு வரவேற்பு போன்றதொரு அமைப்பாய் இருந்தது.

"இப்போ நான் பாதி பொண்டாட்டி இல்ல?" ஆதியிடம் சாதாரணமாய் கேட்டுவிட்டு அவள் திரும்பி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்துவிட, அப்படி சட்டென மாற முடியாமல் விழித்து பின் சமாளித்து என அவனை திணற வைத்தாள் சாரு.

'வாயாடி உனக்கு இருக்கு!' நினைத்துக் கொள்ள மட்டும் தான் முடிந்தது அவனால்.

"ண்ணோவ் ஒழுங்கா நில்லு ண்ணா.. உன் புள்ளைங்க பேரப் புள்ளைங்க வர இந்த போட்டோஸ் எல்லாம் பாக்கணும்" மாரி கூற,

"நீ எல்லாம் பேசி நான் கேட்க வேண்டியதா இருக்கு பாரு!" என்று நினைத்து நின்றான் ஆதி.

தியாகுவின் நண்பன் போட்டோகிராபராய் வந்திருக்க, தியாகு, மாரி, ப்ரீத்தி, சுமதி, அவள் கணவன் கண்ணன் என சுழற்றி அடித்தனர் பெண்ணையும் மாப்பிள்ளையையும்.

"டேய் போதும் டா" ஆதியே கூற,

"இன்னும் கொஞ்சம் எடுத்துக்கலாம் ஆதி" என்றான் தியாகு.

ஆதிக்கு தனியாய் என்றால் முடிந்திருக்குமோ என்னவோ சுற்றி நின்று கிண்டல் பேசி ஒவ்வொன்றாய் சொல்லியபடி இருக்க, புரிந்து கொண்டாள் சாரு.

"இப்ப போதும் தியாகுண்ணா.. நாளைக்கு தான் ரிசெப்ஷன் எதுவும் இல்லையே! நாளைக்கு எடுத்துக்கலாம்" என்று சாரு கூற,

"இல்ல இல்ல.. இப்பவே எடுத்துக்கலாம்" என்று ஆதி அவளுக்காய் கூற,

"வாத்தி! என்னவோ கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண போற மாதிரி ஒட்டாம நிக்கறதுக்கு போட்டோ வேற.. நாளைக்கு கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் பாத்துக்குறேன்" என்றவள் பேச்சில் அவன் பே என விழிக்க, சாரு முறைக்கும்படி ஆனது போட்டோஷூட்.

அதிகாலை ஐந்து மணிக்கு முஹூர்த்தம்.. சாரு தன் வீட்டிற்கு சொந்தங்களோடு சென்றிருக்க, ஆதி உறவினர்கள் என சிலர் மண்டபத்தில். அவர்களோடு மீனாட்சியும்.

"பிரேமா அத்தை வர்ல டா.. அவங்க அம்மாவை மரியாதை இல்லாம பேசின பொண்ணோட எப்படி சம்மந்தம் வச்சுக்கலாம்னு கோபமா இருக்கா" மீனாட்சி கவலையாய் மகனிடம் கூற,

"அவங்க ஒன்னும் அன்னைக்கு நல்லது நினைக்கலையே! சாரு செஞ்சது சரி தான்.. என்னால பேச முடியல.. அவ பேசிட்டா அவ்வளவு தான் வித்யாசம்.. அதெல்லாம் நினச்சு கவலைப்படாதீங்க ம்மா..அவங்க கடைசி வர நம்ம கூட இருக்க போறதில்ல.. நீங்க வந்தவங்கள கவனிங்க" என்றுவிட்டான் ஆதி.

"சுமதி மாமியார் கூட வர்ல.. நீ மாப்பிள்ளைகிட்ட பேச கூடாது?" என்று கேட்க,

"ம்மா எல்லாம் நான் பேசிட்டேன்.. நீங்க ஏன் ஒவ்வொருத்தரையும் நினச்சு உடம்புக்கு இழுத்து வச்சுக்குறீங்க? சுமதியை பாத்துக்க போறது அவ வீட்டுக்காரர் தான.. அவர் வந்திருக்கார் இல்ல? அப்புறம் என்ன உங்களுக்கு? சொந்தம்னு அப்பப்ப ஒட்டிக்கிட்டு இழுத்து விடறவங்களை முதல்ல விடுங்க ம்மா.. எல்லாரும் வேணும் தான்.. அதுக்காக எல்லாத்தையும் சகிச்சுக்க வேண்டாம்.. விலகி இருக்க வேண்டியவங்ககிட்ட விலகி தான் இருக்கனும்" என்று ஆதி சொல்ல,

இதற்கு மேல் இதை பேசினால் ஆதிக்கு பதில் சொல்ல முடியாது என நினைத்த மீனாட்சி நகர்ந்துவிட்டார்.

பன்னிரண்டு மணி அளவில் கண்ணன், தியாகு, மாரியுடன் ஆதி வீட்டிற்கு வர, சுமதி சாருவின் வீட்டில் இருந்தாள்.

"ண்ணோவ் உனக்காச்சும் வெளியூர்ல பொண்ணு பாருண்ணா.. கேரளா பொண்ணுன்னா இன்னும் பெட்டர்.. இந்த தெருவுக்குள்ளயே எவ்வளவு தான் சுத்துறது?" மாரி தியாகுவிடம் சலித்துக் கொள்ள,

"உள்ளூர்லேயே எவனும் பொண்ணு தர மாட்டுறான்.. நீ ஸ்டேட்டு விட்டு ஸ்டேட்டு போக சொல்ற.. எனக்கு எங்கன்னு விதிச்சிருக்கோ" என்றான் தியாகுவும்.

ஆதியோடு கண்ணனும் சிரித்தபடி இருக்க, "உனக்கு பொண்ணு பார்க்கும் போது இதெல்லாம் சொல்லு" என்று மாரியை கூற,

"எனக்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னா.." என்ற மாரியை,

"ஏன் டா லவ்வு கிவ்வுன்னு விழுந்துட்டியா?"- தியாகு.

"ம்ம்க்கும்.. விழுந்துட்டாலும்! தடுக்கி விழுந்தாலும் அது இந்த ஆதிண்ணா கடையா தான் இருக்கும்" என்ற மாரியின் வசனத்தில்,

"சரி சரி நெஞ்ச நக்காத!" என்று பேச்சு தொடர, ஆதியின் தொலைபேசி அழைத்தது.

சாரு தான் என தெரிந்ததும் ஆதி மற்றவர்களைப் பார்க்க, அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தனர். அதில் ஆதி தனியாய் கழண்டு கொண்டான்.

"உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்..."

மொபைலை காதில் வைத்தவன் அமைதியாய் இருக்க எப்பொழுதும் போலவே ஆரம்பித்து வைத்தாள் சாரு.

"இன்னும் தூங்காம அரட்டையா?" ஆதி கேட்க,

"கல்யாண வீட்ல யாராச்சும் தூங்கி வழிவாங்களா?" என்றாள் சாருவும்.

"என்ன இந்நேரம் போன்?"

"கேள்வியா கேட்காதீங்க வாத்தி.. பாதி பொண்டாட்டி பாதி ராத்திரில போன் பண்ணினா தப்பா?" என்று கேட்டதில் அவன் வாய்விட்டு சிரிக்க,

"ஹ்ம்! சிரிக்கவெல்லாம் வரும் போலயே..நிஜமாவே இன்னைக்கு உங்களைப் பார்த்து நான் மயங்கிட்டேன் தெரியுமா... அப்பப்பா.." என்றாள் அவளும் புன்னகைத்து.

"வாய்! வாய்!.. ரெண்டு நாள் முன்னாடி இந்த பேச்சு எங்க போச்சு?" ஆதி சிரிப்புடனே கேட்க,

"கொஞ்சம் செண்டிமெண்ட்டா லாக் ஆகிட்டேன்.. உடனே ஸ்கோர் பண்ணிடுவிங்களே!.. இப்பவுமே அந்த பீல் இருக்கு.. மிஸ்ஸஸ் ஆதி.. வேற லெவல்ல இருக்குல்ல?" என்று கூறி சாரு சில்லாகிக்க,.

"ஆதி என்ன அப்பாடக்கறா.. ரொம்ப பீல் பண்ற" ஆதியே சொல்ல,

"வாயிலேயே அடிப்பேன்.. எனக்கு ஆதி ஸ்பெஷல் தான்.. போ யா.." என்று இவளும் சொல்ல, இந்த பக்கம் இருந்தவன் முகத்திலும் அத்தனை பிரகாசமாய் புன்னகை.

"சரி தூங்கலாம் தான.."

"தூங்கலாம் தூங்கலாம்.. ஏன் வாத்தி எத்தனை சாங் உங்களுக்கு டெடிகேட் பண்றேன்.. ஒரே ஒரு சாங் எனக்காக பாட கூடாது? அடலீஸ்ட் சொல்லவாச்சும் செய்யலாம்ல?"

"ஹே வாயாடி.. உனக்கு தான் வேற வேலை இல்ல.. எனக்குமா? இப்போ நான் போனதும் தியாகுண்ணாவும் மாரியும் ஓட்டுவாங்க.. ஆமா உன்னை தனியா விட்டு ப்ரீத்தி, சுமதி எல்லாம் என்ன பண்ணுதுங்க?"

"கடமை நேர்மை எருமை.. ஹ்ம் உங்களை திருத்த முடியாது.. நான் தான் எல்லாரையும் விரட்டி விட்டுட்டு உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்" என்று சொல்ல,

"இல்லாத ரவுடி தனம் எல்லாம் பண்ற..." என்றவன் திருமணத்துக்கு பின் நினைத்து தலையை ஆட்டிக் கொண்டான்.

"என்ன இப்பவே கண்ணை கட்டுதா?" சாரு கேட்க,

"ம்ம் வா.. காதை புடிச்சு திருகுறேன்" என்று சொல்ல, நேரம் நொடியாய் கரைந்து கொண்டிருந்தது.

"ஆதி நல்ல பையன்னு தெரியும்.. இப்ப குணமும் எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கு தேவி" தேவியிடம் ஸ்ரீரங்கம் கூறவும்,

"விடிஞ்சா கல்யாணம்.. இப்ப தான் இதையே கண்டுபிடிக்கிறிங்களா நீங்க?" என முறைத்தார் மனைவி.

"அதில்ல தேவி மா..மாப்பிள்ளை வீடுனு எந்த பந்தாவும் காட்டல தான? நான் இங்க இல்லன்ற குறை இல்லாத அளவுக்கு எவ்வளவு வேலை அத்தனையும் பார்த்திருக்கார் தான? அவங்க அம்மாவும் கூட.. யார் இப்படி பார்த்து பார்த்து செய்வாங்க?"

"அதெல்லாம் சரி தான்.. இவ போற இடத்துல வம்ப வளக்காம பொருந்தி போகணும்.. அது தான் என் கவலை" என மகளைப் பெற்ற தாயாய் அவர் கவலையை கூற,

"சாருவை என்ன சண்டைக்காரின்னு நினைச்சியா? பேச வேண்டிய இடத்துல பேசறது தான் அவளோட பழக்கம்.. என் பொண்ணுக்கு எல்லாம் தெரியும்.. அவ ராஜ வாழ்க்கை வாழ்வா பாரு.." என்று மகளுக்கு துணை நின்றார் தந்தை.

ஆதி மண்டபத்திற்கு வந்திருக்க குறித்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாய் அங்கே மணப்பெண்ணாய் வந்திருந்தாள் சாரு.

இருவரின் உணர்வுகளும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த மிக முக்கியமான கட்டத்திற்கு தாங்கள் அடியெடுத்து வைப்பதை உணர்ந்து மகிழ்ந்து உள்வாங்கி என ரசித்து அதில் கலந்திருந்தனர்.

மனமேடையில் தியாகு, மாரி, சுமதி கணவன் என ஆதியுடனே நிற்க, சாருவுடன் ப்ரீத்தியும் சுமதியும் இருக்க, சரியான நேரத்தில் ஆதியின் கை வந்து சேர்ந்தது அந்த மங்கள நாண்.

அதனைக் கண்ட சாருவின் முகத்தில் தெரிந்த ஒளிர்வு.. அதனை பார்த்தபடி இருந்த ஆதி அவள் கழுத்தினருகே கொண்டு சென்று "புடிச்சிருக்கு" என்று கூறி, அவள் விழி விரித்துப் பார்த்த நேரம் அதனை அவள் கழுத்தினில் அணிவித்து தன் மனைவியாய் ஏற்றிருந்தான்.

அழகாய் ஆழமாய் எளிதாய் மனதில் பதிந்து நிறைந்து போனது அந்த தருணம் சாருவிற்கு.

கூடி இருந்தவர்களின் வாழ்த்துக்களோடு சுற்றி இருந்தவர்களின் ஆரவாரமும் என தனி துள்ளலைக் கொடுக்க, எதையும் விடாமல் மனதில் மட்டும் என்று மறைக்காமல் அணுஅணுவாய் ரசித்து தன் தோள்களை குலுக்கி, கண் சிமிட்டி என தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சாரு.

"வாத்தி!" அதே உற்சாகத்தோடு சத்தமாய் அவள் அழைக்க, ஆதியுமே கண் சிமிட்டி புன்னகைத்தான் தன் மனைவியின் புறம் திரும்பி.

தொடரும்..
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
556
சாரு அப்பா... காணோம் 😭😭😭.....
அப்பாடா.....
ஆதி... மிஸஸ் ஆதிக்கு வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐💐💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
576
சாரு அப்பா... காணோம் 😭😭😭.....
அப்பாடா.....
ஆதி... மிஸஸ் ஆதிக்கு வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐💐💐
வந்துட்டாங்க பா 🙂
 
Top