• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 6

வழக்கம் போல அடுத்த நாள் சாரு வகுப்பிற்கு கிளம்பிக் கொண்டிருக்க, ப்ரீத்தியும் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"ம்மா! இன்னைக்கு மத்தியானம் வந்துடுவேன்.. சாப்பாடெல்லாம் எடுத்து வைக்க வேண்டாம்" என்று சாரு கூற,

"ஏன் க்கா மதியம்?" என்றாள் ப்ரீத்தி.

"சும்மா தான் ப்ரீ.. இது எக்ஸாம் டைம் அதுனால கிளாஸ்க்கு நிறைய பேர் வர மாட்டாங்க.. இப்போ லீவ் போட்டா தான் கண்டுக்கவும் மாட்டாங்க.. எக்ஸாம் முடிஞ்சதும் கூட்டம் அள்ளும்"

"நான் கூட அப்பா வந்ததால தான் லீவ் போடுறனு நினச்சுட்டேன் சாரு" என்று ஸ்ரீரங்கம் வர,

"நாம பேச தான் டைம் இருக்கே பா.. இப்ப தானே வந்திருக்கீங்க" என்றாள் மகளும்.

"ஆமாமா.. உங்களுக்கு என்ன பேச நேரமா இல்ல? அதான் எனக்கு தெரியாம அப்பா மக எல்லாம் நிறைய பேசுறிங்களே!" என்று தேவி முகத்தை தூக்க,

"என்னவாம்?" என்றாள் சாரு தந்தையிடம்.

"ம்ம்!" என்று உதட்டை பிதுக்கியவர்,

"அங்கேயே கேட்டுக்கோ" என்றார் ஒன்றும் அறியாதவராய்.

"க்கா! எனக்கு தெரியாம என்ன சீக்ரெட் உனக்கும் அப்பாக்கும்?" என ப்ரீத்தி கேட்கவும் தான் சாரு நியாபகம் வந்தவளாக தந்தைபுறம் திரும்பி அதுவா என தலையசைக்க, அதுவே தான் என்று அவரும் தலையசைத்தார்.

"நான் கேட்டுட்டு இருக்கேன்.. அங்க என்ன சிரிப்பு ரெண்டு பேருக்கும்.. அம்மா வந்து எட்டிப் பார்த்துட்டு போறாங்க" என ப்ரீத்தி சொல்லவும்,

"உனக்கு தெரியாதது இல்ல ப்ரீத்தி.. அம்மாக்கு தெரியாதது.. அதான் காண்டு.. இரு பேசிட்டு வர்றேன்" என சாரு செல்ல, என்னவென தந்தையை கேட்க ஆரம்பித்தாள் ப்ரீத்தி.

"ம்மா! எனக்கு ஆதியை புடிச்சிருக்கு மா" எடுத்ததும் அன்னை முன் நின்று சாரு இப்படி சொல்ல, ஏற்கனவே தெரிந்தது தான் இப்பொழுது சம்மதம் தான் என்றாலும் இப்படி சட்டென சொல்லவும் தேவி அதிர்ந்து பார்க்க,

"பாத்திங்களா? அப்பா உங்ககிட்ட பேசின பிறகும் நீங்க இப்படி ரியாக்ட் பண்றீங்க.. நான் உங்களுக்கு புரியவச்சு.. விம் போட்டு விலக்கி.. இதெல்லாம் ஆவுற கதையா? அதான் அங்கே டீல் பண்ணிட்டேன்" என்று கூறவும் ஸ்ரீரங்கம் அங்கே வர,

"அது மட்டும் இல்லம்மா.. நீங்க வேற அப்பா வேறயா எனக்கு?" என்று வேறு சாரு ஐஸ் வைக்க, நேற்றைய தினம் கணவரும் இதை சொல்லி இருந்ததால் இருவரையும் முறைத்தவர்,

"ஆவூன்னா இப்படி சொல்லிடுங்க ரெண்டு பேரும்.. நடிக்க மட்டும் சொல்லி தரவே வேணாம் அப்பாக்கும் பொண்ணுக்கும்.." என்று இட்லிகளை எடுத்து பரிமாற,

"பாத்தியாம்மா! இதுக்கு தான் இவங்க ரெண்டு பேரோடவும் நான் சேருரதே இல்ல" என்ற ப்ரீத்தியை,

"ஆமா ஆமா! நீ தான் அப்பாகிட்ட தூது போனதா கேள்விபட்டேன்" என்று பல்பை கொடுத்து அமர வைத்தார் அன்னை.

"நோ கோபம் ம்மா.. எனக்கு தெரியும் அப்பா உங்களுக்கு புரிய வச்சுட்டுவாங்கன்னு.. அத்தோட வாத்தியார் வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாவே சுத்திட்டு இருக்குதா.. ஒவ்வொருத்தரயா கரெக்ட் பண்ணலாம்னு நினச்சேன்" என்று சாரு கூற,

"ஆனாலும் ஆதி ஏன்ங்க சாருவை வேண்டாம்னு சொல்லணும்?" என்ற தேவியின் கேள்வி,

'அதெப்படி அவன் அப்படி சொல்லலாம்?' என்ற தொனியில் வர,

"எத வச்சு சொல்ற தேவி?" என்றார் ஸ்ரீரங்கம். சாருவும் அமைதியாய் இருக்க,

"அதான்ங்க.. சாருக்கு என்ன குறை? அவளே சொல்லியும் ஆதி வேண்டாம்னு சொல்ல என்ன இருக்கு? அழகு, படிப்பு, அறிவுன்னு எல்லாமே இருக்கு.. இன்னும் சொல்லணும்னா ஆதி டிப்ளமோ தான்.. வசதி கூட..." என்று சொல்லும் போதே சாரு பார்வை மாற,

"சாரும்மா!" என்று அவளை சாந்தப்படுத்திய ஸ்ரீரங்கம்,

"தேவி! எல்லாம் சரி தான்.. ஆனா நீ சொன்ன அதே காரணங்களுக்காக கூட ஆதி வேண்டாம்னு முடிவு பண்ணிருக்கலாம்ல?" என்றார்.

தேவி புரியாமல் பார்க்க, ப்ரீத்தியும் அனைத்தையும் கவனித்தபடி இருக்க,

"என்னனு தெரியாம நீ தராசு வச்சு பார்க்க கூடாது தேவி.. பேசி முடிவு பண்ணலாம்" என்றார் கணவர்.

"என்னடாம்மா?" என சாருவிடமும் கேட்க,

"ப்பா ஆதிக்கு லவ் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது.. சாமியாருக்கும் மனுஷனுக்கும் இடையில உள்ள ஸ்டேஜ் தான் அதோடது.. எவ்வளவு பேசினாலும் என்னை விரட்டுறதுல தான் நிக்கும்.. சோ பார்த்து பேசுங்க.." என்று கூறி சென்றுவிட்டாள்.

"என்னங்க நம்மகிட்டயே இப்படி சொல்றா?" என்றார் தேவி.

தேவிக்கு மகளின் குணம் தெரியும் என்றாலும் தைரியமாய் பேசுபவள் தான் என்றாலும் தாய் தந்தையிடம் பேசுகிறோம் என்ற பயம் இல்லையே என்று அதிர்ச்சியுடன் புரியாமல் கேட்க,

"பின்ன என்ன பண்ணனும்? பயந்து பயந்து தயங்கி தயங்கி பேசணுமா தேவி?" என்றார் ஸ்ரீரங்கம் புன்னகையுடன்.

"அதில்லைங்க.. ஆனா இப்படி கொஞ்சம் கூட பயம் பதட்டம் இல்லாம எப்படி?" என்று கேட்டவருக்கு தான் என்ன நினைக்கின்றோம் என்றே புரியாமல் இருக்க,

"நீ ரொம்ப யோசிக்குற.. தப்பு பண்ணினா தானே பயம், பதட்டம், தயக்கம் எல்லாம் வரணும்? சாரு தப்பு பண்ணலைனு நம்புறா.. அதான் தைரியமா நிக்குறா.. இதுல நீ குழம்ப என்ன இருக்கு? சினிமா பார்த்து கெட்டு போயிட்ட போல" என்றார் மகளை புரிந்து கொண்ட விதமாய்.

"ஹ்ம் புரியுது.. ஆனா சொல்ல தான் தெரியல.. சரி விடுங்க.. ஆமா அப்ப கல்யாணம்? அங்க இப்ப தான் பூ வச்சிட்டு போயிருக்காங்க சுமதிக்கு.. இப்ப எப்படி பேச?" என தேவி கேட்க,

"இதான் தேவி உன்னை ரொம்ப புடிக்குது.. அடுத்து என்னனு உடனே யோசிக்குற பார்த்தியா?" என்று மனைவியை கொஞ்ச,

"ரொம்பத்தான்.. நீங்க யார்னு எனக்கு தெரியும்.. இந்நேரம் என்ன பண்ணனும்னு முடிவே பண்ணி இருப்பிங்களே!" என்றார் கணவனை தெரிந்த மனைவியாய்.

"பார்த்தியா மறுபடியும் ப்ரூவ் பண்ற.." என்றவர்,

"பேசலாம்.. ஆதிகிட்டயும் அவங்க அம்மாவோடவும் பேசுவோம்.. முடிவு அவங்க கையில" என்றுவிட்டார்.

"அப்ப உடனே பேசலாம்ங்க.. இது தான்னு முடிவு பண்ணின அப்புறம் ஏன் தள்ளி போடணும்?"

"சரி தான்.." என்று யோசித்து,

"சரி பேசுவோம்.. ஒரு நாலு மணிக்கு அவங்க வீட்டுக்கு போய்டலாம்." என்று கூறவும் சம்மதித்தார் தேவி.

வெளியே வந்த சாரு எதிரே பார்க்க, அங்கே கடை திறந்து இருந்தாலும் ஆதி இல்லை.

'மதியம் வர எப்படி பாக்காம இருக்குறது?' என நினைத்தவள், கடை முன் வந்து ஹார்ன் அடிக்கவும் வெளி வந்தான் ஆதி.

"இவளா" என்று அவன் திரும்பிவிடப் பார்க்க மீண்டும் ஹார்ன் சத்தம்.

'ம்ஹும் இவளை முறைக்குறதுக்கு கூட திரும்ப கூடாது' நினைத்து அவன் திரும்பிக் கொள்ள, மூன்றாவதாயும் ஹார்ன் சத்தம்.

"ப்பா! காது ங்கொய்ங்குது சாரு" என்று சிரிப்புடன் வந்தான் தியாகு.

"ஹாய் ணா.. குட் மார்னிங்.. உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல தான் வந்தேன்" என்று அவனுடன் பேச்சை வளர்க்க, தியாகு வந்த பின்னும் கூட திரும்பவில்லை ஆதி.

"ஆஹான்! நம்பிட்டேன்.. என்ன காலங்காத்தால இந்த பக்கம்னு நான் கேட்க கூடாது.. அதுக்கு தானே இந்த பிட்டு?" என்று சரியாய் தியாகு கேட்க,

"எக்ஸாக்ட்லி யுவர் ஹானர்..அப்புறம் இந்த ஹார்ன் சவுண்ட் பத்தல.. அதான் ஆதி மெக்கானிக்கல் ஷாப்ல பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" சாரு சொல்ல,

"எது இந்த சவுண்ட் பத்தலயா? பக்கத்து வீட்டு பாட்டி இதுக்கே நெஞ்சப் புடிச்சிட்டு கிடக்குது.. பொட்டுனு போயிட்டுனா நானே உன்னை உள்ளப் புடிச்சி போட்டுடுவேன் பார்த்துக்கோ" என்று ஆதியைப் பார்க்க, யாரோ ரோட்டில் இருவர் பேசுவதைப் போல இருந்தது அவன் பாவனை.

"ஓஹ்! அப்ப இந்த சவுண்ட் போதுமா?" என்று கேட்டு அவன் முறைப்பையும் வாங்கிக் கொண்டாள்.

"அப்புறம்? என்ன டிசைட் பண்ணி இருக்கீங்க மேடம்.." தியாகு கேட்க,

"எங்க பண்றது? அதான் கல்லு கரையவே மாட்டுதே?" என்றாள் அவளும்.

"ஓஹோ!" என்றவனுக்கு அவளிடம் என்ன கூற என்று தெரியவில்லை.

ஆதியை ஒரு தம்பியாய் பார்ப்பவன். சாருவும் நல்ல பெண் தான். சாரு தெளிவாய் தான் இருப்பதாய் தோன்றினாலும் இரு குடும்பங்களும் சம்மதிக்க வேண்டும்.. இப்படி நிறைய இருக்க, சின்ன பெண்ணிடம் எப்படி உன் திருமணம் பற்றி பேச வேண்டும் என்று அதுவும் மூன்றாம் மனிதனாய் தான் கேட்பது என நினைத்து நின்றான் தியாகு.

"சரிண்ணா வந்த வேலை முடிஞ்சது.. டைம் ஆயிடுச்சு.. மதியமா வந்து பாத்துக்குறேன்" என்று சொல்லி சாரு திரும்ப,

"ம்ம் சரி மா பார்த்துப் போ" என்றான் தியாகு.

அவள் அந்த பக்கம் செல்லவும் தான் எழுந்து வந்தான் ஆதி.

"என்னண்ணா சீக்கிரமே கிளம்பினா மாதிரி இருக்கு?" என்று கேட்க,

"ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு ஆதி.. முடிச்சிட்டு கோர்ட்டுக்கு போகணும்.. கல்யாணம் எப்போ? நாள் குறிச்சாச்சா?" என கேட்க,

"இன்னைக்கு போனும்னு அம்மா சொன்னாங்க ண்ணா.. சாயந்திரமா மாரி வந்ததும் கடையை அவன்கிட்ட விட்டுட்டு போகணும்"

"இப்ப எங்க போய்ட்டாரு துரை?" தியாகு மாரியை கிண்டல் செய்ய,

"இன்னைக்கு காலேஜ் இருக்குதாமாம்.. இப்ப தான் லீவ் லெட்டர் அனுப்பினான்" என்று சிரித்தபடி சொல்ல, தியாகும் சிரித்துவிட்டு கிளம்பினான்.

மாலை மாரி வரவும் சொன்னது போலவே ஆதி அவனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு சென்றுவர, அவர்கள் வருவதை எதிர்பார்த்து இருந்தனர் சாரு குடும்பத்தினர்.

சாருவிடமும் ஆதி வீட்டினில் பேச போவதாக தந்தை கூற சரிப்பா என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.

காட்டிக் கொள்ளாவிட்டாலும் சிறு பயம் ஆதியை நினைத்து இருக்க தான் செய்தது.

வீட்டில் பேசி முடிவெடுப்பதை மறுக்க மாட்டான் தான் என்று நினைத்தாலும் ஒரு பயம் மனதை ஆட்டுவிக்க செய்தது உண்மை தான் சாருவிற்கு.

அவன் மறுக்க காரணம் என்று பெரிதாய் இல்லை என்ற நினைவு மட்டுமே இப்பொழுது இருக்கும் பெரும் துணை அவளுக்கு.

மதியம் வரும் பொழுது பார்த்தாள் தான் அவனை. எப்பொழுதும் போல கண்டு கொள்ளாத தன்மை அவனிடம்.

இவளவுமே அதை பெரிதாய் நினைக்காமல் அவனை பார்த்துவிட்டு உள்ளே வந்திருக்க, வீட்டில் தந்தை ஆதியிடம் பேசப் போவதாய் சொன்னது முதல் தொண்டைக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு.

"அடச்சீ! இதெல்லாம் உனக்கு செட்டாகாது சாரு.. நாம தான் வாத்தியாரை அலற விடணும்.. பீ ஸ்ட்ரோங்" தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அன்னையும் தந்தையும் வரும்வரை முழுதாய் மீண்டிருக்கவில்லை.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
தேடி நித்தம் வருகிறேன்_ நீ
தொலைந்து என்னை
தேட வைக்கிறாய்.....
தேடல் கூட சுகமானது .....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
தேடி நித்தம் வருகிறேன்_ நீ
தொலைந்து என்னை
தேட வைக்கிறாய்.....
தேடல் கூட சுகமானது .....
😍😍😍அருமை pa