• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 9

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 9

"என்னவாம்?" ஆதி கேட்க, திடீரென அவன் சத்தத்தில் திரும்பி ஆதியைப் பார்த்தான் மாரி.

கண்களுடன் கைகளும் வேலையில் இருக்க, வண்டியை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

"ஏதோ கேட்ட மாதிரி இருந்துதே.. அண்ணா குரல் மாதிரி தான் கேட்டுச்சு.." என்று நினைத்த மாரிக்கு ஒருவேளை பிரம்மையோ என்று தோன்ற, மீண்டும் வேலையைத் தொடரவும்,

"என்னவாம் டா?" என்ற குரல்.

"இது ஆதிண்ணா குரலே தான்" என்று,

"ண்ணா கூப்பிட்டியா என்ன?" என்று கேட்க, சில நொடிகள் யோசித்தான் ஆதி.

"இன்னைக்கு ஆதிண்ணா சரி இல்ல.. நீயா வம்பை விலைக்கு வாங்கிடாத டா மாரி" என்று மீண்டும் ஒருமுறை ஆதி பதில் பேசாததை நினைத்து மாரி குனிந்து கொண்டான்.

சாருவின் வார்த்தைகள் ஆதிக்கு உள்ளே உறுத்திக் கொண்டிருக்க, அவள் அழைத்ததும் அவளருகே சென்று பேசிவிட்டு வந்திருந்தான் மாரி.

அது என்ன என்று தெரிந்து கொள்ள மனம் உந்த, மாரியிடம் தன்மையாய் இதை எப்படி கேட்பது என்று தான் தெரியவில்லை ஆதிக்கு.

இரண்டு முறை கேட்டும் பதில் பேசாத மாரியிடம் ஆதி தடுமாறி அமர்ந்திருக்க, இது புரியாமல் ஆதிக்கு பயந்து குனிந்து இருந்தான் மாரி.

"உன்கிட்ட தான் கேட்டேன்.." என்ற ஆதி இப்பொழுது மாரியை நேராய் பார்த்தான்.

"என்னையா?" மாரி கேட்கவுமே, ஆதி முறைக்க,

"இல்ல நாம மட்டும் தான் கடையில இருக்கோம்.. எதுக்கும் கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்னு தான்" என்று அவன் பார்வைக்கு பதில் கூறியவன்,

"ஏதாச்சும் கேட்டீங்களா ண்ணா? காது அடைச்சுகிச்சு நினைக்குறேன்.. நீங்க பேசுறது பாதி பாதியா தான் காதுல விழுது" என்ற மாரிக்கு ஆதி அந்த பாதியை தான் கேட்டிருந்தான் என்று தெரியாமல் போனது.

"அதான்.. வேலையைப் பார்க்காம உங்..க..க்..கா கூப்பிட்டதும் எந்திச்சு ஓடினியே.. என்னவாம்?" என்று ஆதி கேட்க, அவனை அதிசயமாய் பார்த்தான் மாரி.

"ண்ணா.. நீ... சாருக்கா பத்தி... அதுவும் என்கிட்ட கேட்குறீயா?" நம்பமுடியாமல் மாரி வாய் பிளந்து கேட்க, அய்யோ என்று இருந்தது ஆதிக்கு.

ஏற்கனவே உணர்வுகள் பிடியில் இருப்பவனை மாரியின் கேள்விகளில் கூச்சமடைய செய்ய, நொடியில் அதை மறைத்தவன், மாரியைப் பார்த்து முறைத்தான்.

"ஒன்னும் இல்லைண்ணா.. எனக்கு ஒரு புக் தேவை இருக்கு.. அக்கா சென்டர்ல யார்கிட்டனா இருந்தா வாங்கி தர சொல்லி இருந்தேன்.. அதைத்தான் சொல்லிட்டு போகுது.. நாளைக்கு வாங்கி தருமாம்" மாரி சொல்லிவிட்டு ஆதி முகத்தையே பார்க்க,

"ம்ம்ம்" என்றவன் மாரி பார்ப்பதை பார்த்ததும்,

"வேலை பாக்குற எண்ணம் இல்லையா? பராக்கு பார்த்துட்டு இருக்குற?.." என்று கேட்க,

"அதானே பார்த்தேன்.. இது தான் ஆதிண்ணா" என்றதை சத்தமாய் இல்லாமல் மெதுவாயும் இல்லாமல் கூறிவிட்டு வேலையைப் பார்த்தான் மாரி.

"ஆதி!" என்று வந்திருந்தான் தியாகு.

"வாங்க அண்ணா.. கோர்ட்டுக்கு போகலையா.. இந்நேரம் வீட்டுல?" என்று ஆதி கேட்க,

"இல்ல டா.. ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ஒரு வேலை.. மதியம் தான் போகணும்" என்கவும்,

"திருட்டு கல்யாணம் எதுவும் பண்ணிக்க போறியாண்ணா?" என்றிருந்தான் மாரி.

"உன்னை எல்லாம் ஆதி அடிக்குறது தப்பே இல்ல டா" தியாகு முறைப்புடன் சொல்ல,

"இல்லைன்னா இல்லைனு சொல்ல வேண்டியது தான? என்ன பழக்கம் கோர்த்து விடுறது?" என்றவன் ஆதி பார்வை தன்னை எரிப்பது தெரிந்து அவன் பக்கம் திரும்பவே இல்லை.

"உனக்கு வேலை இருக்குதா ஆதி? கொஞ்சம் பேசலாமா?" தியாகு கேட்க,

"சொல்லுங்கண்ணா" என்றான் யோசிக்காமல்.

மாரியைப் பார்த்துவிட்டு தியாகு ஆதி பக்கம் திரும்ப,

"என்ன ண்ணா?" என்றான் மீண்டும்.

தியாகு ஆதியைவிட ஒன்றிரண்டு வயதில் மூத்தவன் என்றாலும் இருவருக்குள்ளுமே ஒரு தோழமை உண்டு. அது தியாகு கூறினால் சரியாக இருக்கும் என ஆதி எண்ணும் அளவுக்கு வலிமை உடையதும் கூட.

அந்த நம்பிக்கையில் தான் விடிந்ததுமாய் தியாகுவிடம் மீனாட்சி புலம்பி இருந்தார்.

காலையில் மீனாட்சி வத்தல் காய வைக்க மாடிக்கு சென்றிருக்க, பக்கத்து வீட்டில் தியாகு மாடியில் உள்ள தன் அறையில் இருந்து வெளி வந்திருந்தான் உடற்பயிற்சி செய்ய.

அவனைப் பார்த்ததுமே அனைத்தையும் உளறிக் கொட்டி இருந்தார் மீனாட்சி.

"ஏன் தான் இப்படி இருக்கானோ பா.. அவனவன் வீட்டுல கடனை வச்சுட்டு கல்யாணம் பண்ணிட்டு சுத்துறான்.. இவன் இன்னும் வராத கணக்கெல்லாம் சொல்லி கல்யாணத்தை அதுவும் நல்ல சம்மந்தத்தை வேணாம்னு சொல்லிட்டான்.. சாரு புள்ள வேற என்ன நினைச்சிருக்குமோ" என்றெல்லாம் புலம்பி இருக்க, மீனாட்சியிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை தியாகு.

பின் தான் வாசலுக்கு வந்த நேரம் சாரு மாரியின் கேள்விக்கு பத்தி சொல்லி இருந்தது.

சாரு தன் தாய் தந்தையிடம் இவ்வளவு எளிதாய் சொல்லி இருப்பதிலேயே அவள் மனம் தெளிவாய் புரிந்துவிட அதை ஆதிக்கும் புரிய வைக்க நினைத்தான் தியாகு..

"என்னண்ணா பேசணும் சொல்லிட்டு அமைதியா நிக்கிறீங்க? எதாவது முக்கியமான விஷயமா?" என்றான் ஆதி.

"கடன் எதுவும் வேணுமாட்டு கேளு ண்ணா" மாரி கிண்டல் செய்ய,

"வாயிலே வாங்க போற நீ.." என்றான் ஆதி கண்டிக்கும் விதமாய்.

"அவன் இப்படி பேசலைனா தான் அதிசயம் டா" என சிரித்தான் தியாகு.

"அம்மா சொன்னாங்க ஆதி" என்று தியாகு கூறிய விதமே எதைப் பற்றியதாய் இருக்கும் என புரிய, அன்னையின் மேல் கோபம் வேறு ஆதிக்கு.

"உனக்கு எப்படி புரிய வைக்குறது?" என்றான்.

"எனக்கு புரிய என்ன இருக்குண்ணா? அதான் அவங்களே புரிஞ்சிகிட்டாங்களே!" என்று கூறி வேலையில் ஆதி அமர, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் தியாகு.

எதுவும் புரியவில்லை என்றாலும் மாரிக்கு காது அங்கு நடப்பதில் தான் இருந்தது.

"நீ அப்படி நினைக்குற ஆதி.. மார்னிங் சாரு சொன்னதை கேட்ட தானே? அவளுக்கு எப்படி இருக்கும்னு உனக்கு தோணலையா?" என்று கேட்க, அவள் கேட்ட கேள்வியும் கேட்ட விதமும் என அப்படியே மனதினுள் ஓடியது ஆதிக்கு.

அதில் அவன் அமைதியாய் இருக்க, "உன் மேல தப்பு இல்லை தான்.. ஆனா சாரு மேலயும் தப்பு இல்லை.. அவ ஒன்னும் யாருக்கும் மறச்சு எல்லாம் எதுவும் செய்யல.. சாரு அப்பா வரை எல்லார்க்கும் தெரியுது.. அதுக்கான மீனிங் உனக்கு புரியலையா?"

அம்மாவாய் இருந்திருந்தால் எதாவது பேசி அமைதியாக்கி வெளியில் சென்றுவிடலாம்.. தியாகுவிடம் என்னவென்று சொல்வது?

வக்கீல் என்பதற்கு மேல் அவன் மேல் அக்கறை கொண்ட ஒருவன் வேறு.

"உனக்கும் நிறைய பொறுப்பு இருக்குது தான்.. ஆனா அதை நீ கல்யாணத்தோட முடிச்சு போடுறது தான் சரி இல்லைனு சொல்றேன்.." தியாகு கூற,

"பொறுப்பு தான் ண்ணா.. அதை எல்லாம் நிம்மதியா முடிக்க வேண்டாமா நான்?" ஆதி தான் சொல்வது ஏன் புரியவில்லை என்பதை போல கேட்க,

"எல்லா விஷயத்துக்குமே கால நேரம்னு ஒன்னு இருக்கு ஆதி.. உன்னை விரும்புறானு தெரிஞ்சு அவங்களுக்கும் புடிச்சதனால தானே உன்கிட்ட பேச வந்திருக்காங்க? அவங்க முகத்துல அடிக்குற மாதிரி பதில் சொல்றது சரியா?" என்று தியாகு கேட்க,

"அய்யோ ண்ணா நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணல" என்றான் வேகமாய் ஆதி. ஏற்கனவே அவர்களிடம் பேசியதில் மனது பிசைந்து கொண்டிருக்க, தியாகு முகத்துக்கு நேராய் அப்படி சொல்லவும் திகைத்து தடுமாறினான்.

"சாருக்காவை வேண்டாம்னு சொல்லிட்டியா ண்ணா?" அதிர்ச்சியுடன் முறைப்புமாய் கேட்டான் மாரி.

அதில் தியாகு சிரித்துவிட, மாரி முகத்தை பார்க்கவே இல்லை ஆதி.

"டேய் ஒட்டு கேட்டியா?" தியாகு கேட்க,

"ஆமா இவங்க சவுண்ட் ப்ரூப் ரூம்ல இருந்து பேசுறாங்க.. நாங்க வந்து ஒட்டு கேட்குறோம்.. இவ்வளவு நேரமும் என்னவோனு தான் கேட்டுட்டு இருந்தேன்.. இப்ப தான் எனக்கு புரியுது" என்ற மாரி மீண்டும் ஆதியை முறைக்க,

"அவ்வளவு தைரியமா உனக்கு?" என்றான் தியாகு. இன்னும் மாரியின் கோபத்தில் சிரிப்பாய் தான் வந்தது அவனுக்கு.

ஆனாலும் ஆதி பர்க்காத நேரமாய் வாயில் விரல் வைத்து அமைதியாய் இருக்கும்படி மாரிக்கு சைகை செய்யவும் மறக்கவில்லை.

அனைவரும் ஆதியை எதிர்ப்பது போல அவன் நினைத்து விடக் கூடாதே என்ற எண்ணம்.

ஆதியின் எண்ணம் முழுதும் தியாகு கேட்ட கேள்வியிலேயே சுற்றி நின்றது. தன்மையாய் கூறி இருந்தாலும் மறுப்பு தானே? அதை எப்படி சொல்லி இருக்க வேண்டும்.. தவறு தான் செய்து விட்டோமோ என்று யோசித்திருக்க, தியாகு ஆதி புறம் திரும்பினான்.

"அம்மா நீ கல்யாணமே பண்ணிக்க போறதில்லயோனு என்கிட்ட கேட்குறாங்க ஆதி.." என்றதும்,

"அம்மாக்கு எதாவது புலம்பிட்டே இருக்கனும்" என்றான் சலிப்பாய்.

"ஆனா அது உண்மை தானே? நீ என்ன கல்யாணம் பண்ணிக்காமவா இருக்க போற?" என்றவன்,

"அவங்க கேட்டதுக்கு நீ நம்பிக்கை தரலைனாலும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் போகட்டும்.. எனக்கு நேரம் வேணும்னு சொல்லி இருக்கலாம்ல? இல்ல இப்ப கல்யாணம் பண்ற ஐடியா இல்லைனு சொல்லிருக்கலாம்ல? ஏன் வேண்டவே வேண்டாம்ன்ற ரேஞ்க்கு பேசின?" என்று கேட்க,

ஆதிக்கு புரிந்தது இந்த பதில் அவர்களை காயப்படுத்தி இருக்காது என்று. கூடவே சாருவிற்கும்.

"அந்த பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கும்னு நீ சொன்னியா? சொல்லி இருந்தா அந்த நினைப்பை எல்லாம் மறந்திடு.. இந்த ஜென்மத்துல வேற ஒரு பையனை சாரு பாக்குறதுக்கு எல்லாம் வாய்ப்பில்லைனு தான் எனக்கு தோணுது" என்றவன் எழுந்து கொண்டான்.

தோழனாய் என்றாலும் இந்த விஷயத்தில் அதிகமாய் பேசிவிட்டோமோ என்று தோன்ற, அதை மேலும் வளர்க்க விரும்பாமல் எழுந்துவிட்டான்.

"சரி டா.. டைம் ஆச்சு.. நான் கிளம்புறேன்.. மாரி வர்றேன் டா" என்று சொல்ல,

"சரி ண்ணா" என்ற மாரிக்கு தியாகு மேல் ஒரு அளவிட முடியாத மரியாதை.

"இதுக்கு தான் காலையில கடுப்புல பேசியிருக்கு அக்கா.. பண்றதையும் பண்ணிட்டு பூனை மாதிரி அக்கா என்ன சொல்லிச்சுன்னு கேள்வி வேற" ஆதி காதுபடவே மாரி அதட்டல் குரலில் கூற, ஆதி பதில் பேசவே இல்லை.

'தியாகுண்ணா சொல்ற மாதிரி தானே பேசியிருக்கனும்! கவலைப்பட்டிருப்பாங்களோ? ஆமா கிளம்பும் போதும் சொல்லிக்கலைனு தானே அம்மாவும் சொன்னாங்க' என்று சாருவையும் சாரு குடும்பத்தையும் நினைத்துக் கொண்டிருந்த ஆதி இதற்கு முன் சாரு நிழலைக் கூட நினைக்காதவன் தான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
குழம்பும் மனது
கலக்கம் நீங்கி
காத்திருப்பு நேரம்..... 🤩🤩🤩🤩
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
குழம்பும் மனது
கலக்கம் நீங்கி
காத்திருப்பு நேரம்..... 🤩🤩🤩🤩
அதே தான்
 
Top