• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 11

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
அனைவரும் உற்சாகமாக திருவிழாவிற்கு கிளம்பி சென்றனர். சாதனா அனைவரையும் பத்திரமாக கூட்டி சென்றாள். பேருந்து நிலையத்தில் இருந்து இவர்களை அழைத்து செல்வதற்காக நான்கு சக்கர வாகனம் காத்துக்கொண்டிருந்தது, அனைவரும் அதில் ஏறி பழமையான அந்த வீட்டின் முன்பு வந்து இறங்கினர்.
அனைவரையும் ஆவலோடு வரவேற்க அந்த வயதிலும் ஓடிவந்தனர் ஒரு வயதான தம்பதியினர்.


பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது அவர்கள் சாதனாவின் தாத்தா பாட்டி என்ற விஷயம், ஆனால் அவர்கள் இருவரையும் பார்த்த சாகித்யா ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டு யாரும் அறியாவண்ணம் தன்னுடைய திகைப்பை மறைத்து அவர்களுடன் சென்றாள்.



வந்தவர்கள் அனைவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்பதற்காக வேறொருவர் ஆரத்தி கொண்டுவந்தார். அனைவருக்கும் புன்னகை முகமாக ஆரத்தி எடுத்த பாட்டி சாகித்யா மற்றும் சாதனா அருகில் வரும்போது அவர் முகத்தில் அளவுக்கதிகமான பாசம் இருந்தது. அதை சாதனா கண்டிப்பதற்கு முன்பாக சாகித்யா கண்டு கொண்டாள்.



ஆனால் சாகித்யா கண்டுகொண்ட விஷயம் யாருக்கும் தெரியவில்லை, அதை பார்த்த சாதனா மனதில்" இந்த பாட்டி நம்மள மொத்தமா இவகிட்ட மாட்டி விட்டு விடும் போல" என்று எண்ணிக் கொண்டு கண்களாலேயே பாட்டியை கண்டித்துக் கொண்டிருந்தாள்.



தன் ஆசை பேத்தியின் கண்பார்வையை புரிந்து கொண்ட பாட்டி தன்னுடைய பார்வையை மாற்றி விட்டு அனைவரையும் உள்ளே அழைத்து வந்தார். அதேபோல்தான் தாத்தாவும் இவ்வளவு நேரம் சாகி முகத்தை பாசமாக பார்த்துக் கொண்டிருந்தவர், தற்போது எதுவும் நடவாததுபோல் நார்மலாக அவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்.



ஆனால் இது அனைத்தையும் கண்டும் காணாததுபோல் சாகித்யா கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவளுடைய யோசனைகள் அனைத்தும் சரி என என்னும் படியாக நடந்துகொண்டிருந்தது. அனைவரையும் பார்த்த தாத்தா "உங்க எல்லாருக்கும் மாடில ரூம் ரெடியா இருக்கு, எல்லாரும் போய் கொஞ்சம் பிரெஷ் ஆகி ரெடி ஆகிட்டு வாங்க. ஒன்னா சேர்ந்து சாப்பிட்டு விடலாம்" என்று கூறினார்.



அனைவரும் சரி என தலையசைத்து மேலே மாடியில் இருந்த அறைக்கு சென்றனர். கீழே சாதனா மற்றும் தன்னுடைய தாத்தா பாட்டியுடன் அமர்ந்து இருந்தாள். மாடிக்கு செல்லும் வழியில் அங்கிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த சாகித்யா அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள்.



சாதனா தன் தாத்தா பாட்டி இருவரையும் பார்த்து "என்ன உங்க இரண்டு பேர் கிட்டயும் சொல்லி தானே அவளை இங்கு கூட்டிட்டு வந்தேன். இப்படி வந்த உடனே அவளைப் பார்த்து ஓவரா பாசத்தை காட்டுனா அவ கண்டுபிடிக்க மாட்டாளா? அவ உன்னோட செல்லப் பேரன் ஓட பொண்டாட்டி தான். ஆனா அதுக்காக ரொம்ப வெளிப்படையாக பாசத்தை காமிச்சு மாட்டிக்காத எப்பவும் போல இரு. இன்னும் கொஞ்ச நாள் தான் அதற்குப் பிறகு நீங்களும் எங்க கூட வந்துரு எல்லாரும் ஜாலியா என்ஜாய் பண்ணலாம் புரியுதா மைடியர் ஓல்ட் பார்ட்னர்ஸ்?" என்று கேட்டாள்.



அவர்கள் இருவரும் அவளை பாசமாக அணைத்துக் கொண்டே "நல்லாவே புரியுது எங்க செல்ல பேத்தி நீ கவலைப்படாத இந்த பத்து நாள் உங்க எல்லாரையும் நாங்க பத்திரமா பார்த்துக்கொள்கிறோம். அதே மாதிரி பத்து நாளுக்கும் தேவையான ட்ரஸ் எல்லாம் வாங்கி வச்சி இருக்கிறோம். ஆனால் அது உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் கடைசி நாள் திருவிழாக்கு மட்டும் எல்லாருக்கும் வாங்கியிருக்கோம். அதனால எல்லாரையும் வாங்கிக்க சொல்லு இப்போ நீயும் போய் கை கால் அலம்பிட்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தனர்.



அனைவரும் தயாராகி வந்தவுடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உண்டு முடித்துவிட்டு அனைவருமாக இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாகித்யா தாத்தா பாட்டியை பார்த்து "இந்த ஊர் திருவிழா எப்படி இருக்கும் இந்தப் பத்து நாள் என்னென்ன எல்லாம் நடக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்று கேட்டாள்.



அவர்களும் மகிழ்ச்சியாக சொல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களும் அதை ஆர்வமாக கேட்க ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு குழுவினர் தலைமை தாங்கி சீரும் சிறப்புமாக எந்தவித தடையும் இல்லாமல் நடத்திக் கொடுப்பார்கள்.



அது மட்டும் நடக்காது பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அங்குள்ள குளத்தில் கரைத்து வருவார்கள். அதை பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும் என்பது போல் இருக்கும்.



ஒருநாள் முளைப்பாரி எடுத்தல் என்று இருந்தால் மறுநாள் பால்குடம் எடுத்தல் என்று இருக்கும், இதுவரை வேண்டியவர்கள் அனைவரும் தங்களுடைய வேண்டுதலை மிகவும் கர்ம சிரத்தையாக நிறைவேற்றுவார்கள். முளைப்பாரி எடுத்துச் செல்வதற்கு முன்பு அதை சுற்றி கும்மியடித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு ஊரே திரண்டு செல்லும். அதுமட்டுமல்ல பூக்குழி இறங்குதல் இந்த ஊரில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் ஆகும். யாராவது மனதில் வேண்டுதல்களை வேண்டிக் கொண்டு அம்மனை நினைத்து அந்த பூக்குழியில் இறங்கினால் அவர்கள் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும் என்பது இங்கு உள்ள அனைவரின் நம்பிக்கை.



கடைசி நாள் அம்மன் தேரில் ஏறி வீதி உலா வரும் காட்சி மிகவும் அழகாக இருக்கும் அதன் முன்னே கரகாட்டம், சிலம்பாட்டம் சிங்காரி மேளம், கொட்டு மேளம் செண்டை மேளம் என்று அணிவகுத்து செல்லும் கூட்டம் கொஞ்சம் நஞ்சம் இருக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியே வந்து அந்த அம்மனை மனதார தரிசித்து அவருடைய ஆசியை பெறுவார்கள். தேர் கோவிலை சென்று அடைந்தவுடன் மஞ்சள் தண்ணீர் திருவிழா ஆரம்பமாகும். ஊரில் உள்ள அனைத்து இளவட்டங்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் கையில் மஞ்சள் நீரோடு உலா வர ஆரம்பித்து விடுவார்கள்.



இன்னும் சில பல விஷயங்கள் நீங்கள் கொண்டாடும்போது தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்காக நிறைய விதவிதமான கடைகள் கூட இங்கே பரப்பப்படும். நாளை முதல் திருவிழா ஆரம்பம் ஆகும். அதனால் உங்கள் அனைவருக்கும் உடை எடுத்து வைத்துள்ளோம் அதை எங்கள் வீட்டுப் பிள்ளைகள் போல் மறக்காமல் நீங்கள் அனைவரும் வாங்கிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள்.



கோயில் திருவிழாவில் என்னென்ன நடக்கும் என்பதை நேரில் பார்த்து கொண்ட அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் தரும் அன்பு பரிசை நிராகரிப்பதற்கு அங்கு யாருக்கும் மனம் வரவில்லை அதனால் அமைதியாக அதை ஏற்றுக் கொள்கிறோம் என்ற ரீதியில் இருந்தனர்.
சாகித்யா சாதனா மற்றும் அவளுடைய தாத்தா பாட்டி இருவரையும் பார்த்து "நீங்க மூணு பேர் மட்டும்தான் இருக்கீங்க வேற யாரும் வரலையா?" என்று கேட்டாள்.



பாட்டி அவசரமாக "இல்லமா என்னோட பையன் மருமகள் அப்புறமா என்னோட பேரன் எல்லாரும் திருவிழாவில் கலந்துகொள்ள கண்டிப்பா வருவாங்க ஆனா வரதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆயிடும் நீங்கள் கவலை படாதே" என்று கூறினார்.



சாகித்யா "கண்டிப்பா பாட்டி அவங்க எல்லாரையும் பார்க்கிறதுக்காக நான் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன். ஏன் சொல்றேன் அப்படின்னா இவ்வளவு பாசமா பாத்துக்குறே பெரியவங்க இருக்கும்போது அவங்க எல்லாரும் எப்படி தனியா இருக்காங்க அப்படின்னு தெரிந்து கொள்ள ஆசையா இருக்கு" என்று கூறினாள்.



அவள் கூறியது அந்த அனுபவம் வாய்ந்த இரண்டு பெரியவர்களுக்கும் சாதனா மற்றும் மதி இருவருக்கும் ஏதோ மனதில் வைத்து பேசுகிறாள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது. ஆனால் எதுவாக இருந்தாலும் விரைவில் நல்ல முடிவு கிடைத்துவிடும் என்று எண்ணி அனைவரும் அமைதி காத்தனர்.



பின்பு நேரம் ஆவதை உணர்ந்த தாத்தா "சரி எல்லாரும் போய் தூங்குங்க நாளைக்கு காலைல 10 மணிக்கு ரெடியா இருங்க எல்லாரும் கோயிலுக்கு போகலாம்" என்று கூறினார்.
சாகித்யா சாதனா மதி மூவரும் ஒரே அறை எடுத்துக்கொண்டனர். அதனால் மூவரும் ஒன்றாக சேர்ந்து தங்களுக்கான அறைக்கு சென்றனர். உள்ளே சென்றவுடன் அனைவரும் கட்டிலில் படுத்து உறங்குவதற்கு தயாராகினர். ஏற்கனவே இருந்த அலைச்சல் காரணமாக யாரும் எதுவும் பேசாமல் நன்றாக உறங்க ஆரம்பித்து விட்டனர்.



மறுநாள் காலை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக விடிந்தது. அனைவரும் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து காலை உணவிற்காக கீழே வந்தனர். உணவு முடிந்த உடன் அனைவரையும் தனியாக அழைத்தபடி அவர்களுக்கு கடைசி நாள் திருவிழாவிற்காக வாங்கி வைத்திருந்த உடையை கொடுத்தார்.


அனைவரும் அதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டனர் கடைசியாக சாப்பிட்டு எழுந்து சாகித்யா அங்கு வந்து சேரும்போது சாதனா தவிர மற்றவர்கள் அனைவரும் வாங்கிக்கொண்டு தங்களது அறைக்கு சென்று விட்டனர். அதனால் இருவரும் ஒன்றாக வாங்கி சென்றனர். சாதனாக்கு கொடுத்துவிட்டு சாகித்யாவை பார்த்த பாட்டி ஒரு பெரிய தட்டில் பூ குங்குமம் ஒரு பட்டு வைத்து கையில் கொடுத்தார்.


அவளும் திருமணம் ஆன காரணத்தினால் இவ்வாறு தருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அதை பெற்றுக் கொண்ட பின்பு அவளுக்கென வாங்கி வைத்திருந்த மற்ற துணிகளை கொடுத்தனர்.



துணிகளை பார்த்த சாதனா அதை லேசா விரித்து பார்த்தாள். அதில் ஐந்து நாட்களுக்கு பாவாடை தாவணி இருக்க மீதி ஐந்து நாட்களுக்கு பட்டுப்புடவை இருந்தது அதேபோல்தான் சாகித்யாக்கும் இருந்தது. தனக்கு பாவாடை தாவணி எடுத்துக் கொடுத்த பாட்டியை அன்போடு அணைத்துக் கொண்டாள் சாகித்யா. ஏனென்றால் திருமணம் முடிந்தவுடன் நிச்சயமாக புடவை மட்டுமே கட்ட வேண்டிய நிலைமை வரும் என்று எண்ணி கொண்டிருந்தவள், இந்த பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.



அதன்பிறகு அனைவரும் ஒன்றாக கிளம்பி வெளியே சென்றனர். தாத்தா அனைவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு அவருக்கு ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றுவிட்டார். இவர்களும் கோவில் உள்ளே சென்று அம்மனை தரிசித்துவிட்டு அங்குள்ள கடைகளில் சுற்றிக் கொண்டிருந்தனர்.



சாகித்யா சாதனா மட்டும் தனியாக சுற்றிக் கொண்டிருக்க மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக சுற்றி கொண்டிருந்தனர். இவர்கள் இருவரையும் பார்த்து அங்குள்ள ஒரு கூட்டம் இவர்கள் அருகில் வந்தது. அந்த கூட்டத்தை பார்த்து சாதனா முகத்தை சுளித்தாள்.



அதைப் பார்த்த அந்தக் கூட்டத்தில் ஒருவரான வருண் தன் நண்பர்களைப் பார்த்து "என்ன மச்சான் பெரிய வீட்டு அழகியும் பெரிய வீட்டு அழகனுக்கு பொண்டாட்டியாக வந்த அழகியும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் காவலாக இருக்கும் அந்தக் கூட்டத்தை காணவில்லை, இதுநாள் வரை தங்கச்சிக்கு உன் ஒன்றும் ஆக கூடாது என்று எப்பவும் கூடவே சுற்றுபவர்கள் என்று நம்முடைய எதிரி அவனுடைய ஆசை பொண்டாட்டியையும் சேர்த்து பாதுகாக்காமல் விட்டு விட்டு வராமல் இருக்கிறான்" என்று நக்கலாக கேட்டான்.



அவன் கூறியதைக் கேட்ட சாதனா தன் பக்கத்தில் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த சாகித்யாவை திரும்பிப் பார்த்தாள். ஆனால் அவளுடைய முகத்தில் எந்த வித சலனமும் இல்லை அது எதற்கு என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் சாதனாவை பார்த்த சாகித்தியா "என்னமா நாத்தனாரே அதான் உன்னுடைய அண்ணனையும் உன்னுடைய காதலனையும் பாக்கணும்னு ரொம்ப ஆர்வமா எல்லாரும் இருக்காங்க இல்ல இங்கதான் எங்கயாவது நிப்பாங்க சீக்கிரம் வர சொல்லு உன்னுடைய அண்ணன் மிஸ்டர் சிவ ருத்ரனை" என்று கூறினாள்.



அவள் தங்களை முழுவதுமாக கண்டு கொண்டாள் என்பதை உணர்ந்த சாதனா அவளுடைய முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே "கண்டிப்பா அண்ணியாரே இதோ இப்பவே உங்களோட புருஷனுக்கு போன் பண்றேன்" என்று கூறி தன்னுடைய அண்ணனை அழைத்தாள்.



ஏற்கனவே தூரத்தில் வந்து கொண்டிருந்த ருத்ரன், விக்னேஷ், அசோக் மூவரும் ஏதோ பிரச்சனை என்று விரைவாக வந்து கொண்டிருந்தனர். சாதனா போன் செய்யவும் அதை அட்டன் கூட செய்யாமல் அவசரமாக மூவரும் வந்து இவர்கள் பின்னால் நின்றனர்.



இனி நடக்கப் போவதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.



அதேநேரம் ராஜி ருத்ரன் குடும்பத்தை தேடி அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தாள். அவனுடைய எண்ணம் முழுவதும் தனக்கு நடந்ததை யோசித்துக் கொண்டிருந்தது.


திருமண மண்டபத்தில் இருந்து தன்னுடைய தோழி மூலம் வெளியே சென்ற ராஜி சரியாக பேருந்து பிடித்து மதன் இருக்குமிடம் சென்று சேர்ந்தாள். மதனும் இவளை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக கல்லூரி நேரங்களில் இருந்த மாதிரி மாற ஆரம்பித்தான்.


ராஜி அங்கே ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் அமர்ந்தாள். கைநிறைய சம்பளமும் கிடைத்தது அதனால் அவர் வாழ நினைத்து ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள். மதனுடன் காதல் செய்வது அவனைப் புரிந்து கொள்ளலாம் தேவைப்பட்டதால் ஆறு மாதம் கழித்து திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்து ஒன்றாக சுற்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் அவள் தேவையில்லாமல் செலவு செய்யும் நேரத்தில் மதன் அவளை கண்டிக்க ஆரம்பித்தான். மதன் பணக்கார வீட்டு பையன் தான் ஆனாலும் அவனது வீட்டில் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்கும் பழக்கம் இல்லாததால் இவள் செய்யும் தேவை இல்லாத செலவை விட சொல்லி கண்டிக்க ஆரம்பித்தான்.



ஆனால் அது ராஜிக்கு கடுப்பாக இருந்தது இருந்தாலும் தற்போது அவளுக்கு வேறு வழியில்லாமல் விருப்பமே இல்லாத காரணத்தினால் அனைத்தையும் பொருத்துக் கொண்டாள். ஆனால் அவள் தேவையில்லாத செலவு எக்காரணம் கொண்டும் நிறுத்தவில்லை தன்னுடைய போக்கில் தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருந்தாள் ஒரு கட்டத்தில் மதன் வெறுத்துப் போயி அவன் போக்கிலேயே விட்டு விட்டான்.



இப்படி ஒரு மாதம் சென்ற நிலையில் அவளுடைய திருமணத்திற்கு வந்திருந்த ஒரு தோழியை எதர்ச்சியாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போதுதான் அந்த தோழி ராஜிக்கு பதில் சாகித்யா திருமணம் செய்ததை கூறினாள். அதைக்கேட்ட ராஜி ஒன்றும் தன் தங்கைக்காக வருத்தபட வில்லை ஏனென்றால் பிறந்தது முதல் அவனைப் பிடிக்காமல் இருந்ததால் எப்போதும் படிக்கும்போதே திருமணம் செய்தால் கண்டிப்பாக அவனுடைய படிப்பு பாதியில் நின்றுவிடும் அதுமட்டுமல்லாமல் திருமணம் நடக்கயிருந்த நாள் காலையில் தான் வெளியே வந்ததால் தனக்கு பதில் அவளை அனைவரும் கொடுமைப் படுத்துவார்கள் என்று எண்ணி சந்தோஷம்தான் கொண்டாள்.



அந்த தோழி ராஜி பதில் கூறாமல் இருப்பதை பார்த்து தன் தங்கைக்கு நடந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறாள் என்று எண்ணி ருத்ரன் வீட்டின் பணச் செழிப்பையும் சாகித்யா தற்போது கல்லூரிக்கு சென்று கொண்டு இருப்பதையும் வீட்டில் அவளை ராணி ஆக கொண்டாடுவதையும் கூறிவிட்டாள். அதைக்கேட்ட ராஜி உள்ளுக்குள் பொறாமையால் வெதும்ப ஆரம்பித்தாள். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக தன் தோழியிடம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.



வழக்கம்போல் அன்று மாலை அவளை பார்த்துக்கொண்டிருந்த மதன் அவளுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில் தேவையில்லாத செலவை குறைக்க அட்வைஸ் செய்ய இன்னும் கடுப்பான ராஜி அவனிடம் "உன்னால தான் என்னோட வாழ்க்கையே போச்சு இன்னும் எனக்கு நடக்க இருந்த கல்யாணத்த நான் பண்ணி இருந்தேன் அப்படின்னா வாழ்க்கையிலேயே அவ்வளவு சந்தோஷமா இருந்து இருப்பேன் ஆனால் நீ குறுக்க வந்து என்னோட வாழ்க்கையை மொத்தமாக மாற்றி விட்டே இனி என்னோட வாழ்க்கையில வராத நான் என்னோட வாழ்க்கையை பாத்துக்கிட்டு சந்தோஷமா இருக்க போறேன். வேற எங்கயும் போறேன் அப்படின்னு நினைக்காத நான் என்னோட வீட்டுக்கு தான் போகப் போறேன்" என்று கத்திவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்று விட்டாள்.



ராஜி கூறிய பதிலில் உள்ளுக்குள் உடைந்து போன மதன் அமைதியாக வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தான். அதே மனநிலையோடு வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வேலை செய்பவர்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து தன்னுடைய நிலையை நொந்துகொண்டு தன்னுடைய அறையில் அடைந்து கொண்டான். அப்போதுதான் ராஜி பற்றி முதலில் இருந்தே யோசிக்க ஆரம்பித்தான் யோசிக்க யோசிக்க ராஜி பற்றிய விஷயங்களும் அவனுக்கு தெளிவாக விளங்கியது அது மட்டுமல்லாமல் தற்போது அவள் அவளுடைய தங்கை வாழ்வை சீரழிக்க செல்கிறாள் என்பதும் தெரிந்தது. ஏனென்றால் ராஜி வெளியே வந்தவுடன் அங்கு என்ன நடந்தது என்பதனை ஏற்கனவே ராஜிக்கு கூறிய தோழி மூலம் அறிந்திருந்தான். அதனால் அவசரமாக அந்த தோழிக்கு போன் செய்து விசாரிக்க அவளும் தான் ராஜியிடம் கூறிய விஷயத்தை கூறிவிட்டாள். ஆனால் அவன் முழுமையாக அவளை பற்றி தெரிந்துகொள்ள எடுத்துக்கொண்ட காலம் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகியிருந்தது ஏனென்றால் உண்மையான அன்பை வைத்த மதன் அவ்வளவு எளிதில் அவளை தப்பானவன் என்று நம்புவதற்கு மனதில் இடம் இல்லை அதனால் தான் அவ்வளவு நாட்கள் தேவைப்பட்டது.



அதன்பிறகு அவருக்கு அங்கு இருந்த முக்கியமான வேலைகள் அனைத்தையும் முடித்து கிளம்புவதற்குள் இங்கே ராஜி தன்னுடைய தங்கையை சந்தித்து பேசி முடித்து இருந்தாள். மதன் நேராக அவளுடைய வீடு இருக்கும் பகுதியில் சென்று விசாரித்தபோது அவள் வீட்டிற்கு வரவில்லை என்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது அதனால் அவள் இங்கே சென்றிருப்பாள் என்று யோசித்த இடங்கள் அனைத்தையும் தேட ஆரம்பித்தான்.



இறுதியாக ஒருவர் மூலமாக ராஜி ருத்ரன் ஊருக்கு செல்வது தெரிந்து அவனும் பின்னே கிளம்பி வந்து கொண்டு இருந்தான்.

ராஜி என்ன குழப்பம் செய்ய காத்து இருக்கிறாள்?
மதன் புதிதாக பிரச்சனை வருமா?
சாகித்யா என்ன செய்ய காத்து இருக்கிறாள்.
உண்மை அனைத்தும் தெரிந்தவுடன் அவள் எடுக்கப்போகும் முடிவு என்ன?

இதற்கான பதில்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.