• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 18

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
ருத்ரன் மற்றும் சாகித்யா இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் தேய்த்து விளையாடியபோது, தடுமாறி ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தங்களை மறந்து பார்வையில் இருந்தனர். பின்பு சுதாரித்து வீட்டிற்கு வந்து குளித்து தயாராகி கீழே வந்தனர். அங்கு ஏற்கனவே மற்றவர்கள் அனைவரும் குளித்து தயாராகி அரட்டை அடித்துக்கொண்டு சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த இவர்களும் அவர்களது அரட்டையில் சேர்ந்து கொண்டனர். இதுவரை பேசாத பல விஷயங்களை ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்து தங்களுடைய நாளை சிறப்பாக கொண்டாடி முடித்தனர்.


இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாகித்யா அருகில் வந்த பாட்டி தாத்தா ராணி மற்றும் சிவலிங்கம் ஒருசேர அவளைப்பார்த்து "எங்கள மன்னிச்சிடு மா உன்னோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் அப்படின்னு எங்களுக்கு தெரியும். நாங்க பெரியவங்களா இருந்தாலும் சின்ன பிள்ளைங்க கூட சேர்ந்து தப்பு பண்ணி தான் இருக்கிறோம், அதனால எங்களையும் மன்னிச்சிடு" என்று கூறினார்கள்.


முதலில் அவர்கள் எதற்காக தன் முன்னே வந்து நிற்கிறார்கள் என்று புரியாமல் பார்த்த சாகித்யா, அவர்கள் அவளிடம் மன்னிப்பு கேட்பதை பொறுக்க முடியாமல் பதறியடித்து எழுந்து அனைவரது கைகளையும் இறக்கி விட்டாள்.


பின்பு "நீங்க எல்லாரும் என்ன ரொம்ப வருத்தப்பட வைக்கிறீங்க. பிள்ளைங்க மேல உண்மையான பாசம் உள்ள பெரியவங்க எப்பவுமே அவங்க நல்லதுக்காக மட்டும் தான் எல்லாத்தையும் செய்வாங்க. நீங்க ஏதாவது தப்பு பண்ணி இருந்தா கண்டிப்பா எங்க வீட்ல உள்ள பெரியவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்து இருக்க மாட்டாங்க. எனக்கு கோவம் எல்லாம் உங்க பையன் மேலயும் பொண்ணு மேல மட்டும்தான். ரெண்டு பேரும் என்கிட்ட பேசி இருக்கலாம் இல்ல கல்யாணம் முடிஞ்ச பிறகாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம். அதுதான் எனக்கு கோபம் உங்க மேல எல்லாம் எந்தவித கோபம் கிடையாது. நீங்க இத நெனச்சு எப்பவுமே வருத்தப்படாதீங்க நீங்க வருத்தப்படுவீங்க என்றால் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்" என்று கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்ட பெரியவர்கள் மனது அப்போதுதான் நிம்மதி அடைந்தது. தங்களுடைய வாரிசுகளை பார்த்து நீங்க செய்ததற்கு எல்லாம் சேர்த்து வச்சு வாங்கிக்கோங்க என்று நினைத்துவிட்டு அவளை மகிழ்ச்சியாக அணைத்துக்கொண்டன அவர்களுடைய கைகள். அனைவருக்கும் இதுவரையில் நடந்த அனைத்தையும் பார்த்து மனது நிறைந்து போனது சாகித்யா வீட்டில் உள்ளவர்களுக்கு, தன் வீட்டுச் செல்லப் பெண் நல்ல குடும்பத்தில் வாக்கப்பட்டு இருக்கிறாள் என்ற எண்ணம் மேலோங்கி வந்தது. தான் செய்த தவறுகளை கூறி மன்னிப்பு கேட்பது என்பது இந்த உலகில் பல காரியம் அதை பெரியவர்களாக இருந்த பிறகும் செய்து அவர்களை அனைவரின் மனதிலும் ஒரு படி மேலே உயர்த்தி சென்றது.


இந்த விஷயத்திலேயே அன்று இரவு அமைதியாக கடக்க மறுநாள் காலை மிகவும் ரம்மியமாக விடிந்தது. காலையிலேயே அனைவரும் ஊருக்கு கிளம்ப திட்டமிட்டு இருந்ததால் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். அனைவரும் கிளம்பி கீழே வந்து சேர்ந்த போது பாட்டி சாகித்யா மற்றும் ருத்ரனை அழைத்து அவர்கள் இருவருக்கும் ஒரு பெரிய தட்டில் புடவை நகை வேஷ்டி பூ பழம் குங்குமம் வைத்து கொடுத்தார். இவர்கள் ஜோடியாக தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அதை பெற்றுக் கொண்டனர்.


பாட்டி தாத்தா மனதார அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தனர். அனைவரும் கிளம்பி நல்லபடியாக தங்கள் ஊர் வந்து சேர்ந்தனர். மறுநாள் புதிய வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்ததால் அதற்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததால், பெரிதாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ஆனால் மிகவும் அமைதியாக இருந்த சாதனாவை பார்த்த அசோக் யாரும் அறியாமல் அவளை அவளுடைய அறைக்கு அழைத்து சென்றான்.


அசோக் "என்னாச்சு எதுக்கு என்னோட செல்ல குட்டி ரொம்ப சோகமா அமைதியா இருக்கீங்க?" என்று கேட்டான்.


சாதனா "நான் உண்மையிலேயே ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேனா அசோக்? சாகி கேட்ட கேள்வி எல்லாம் எனக்கு யோசிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருக்கு, அவள் கேட்டது எல்லாம் கரெக்ட் தானே! அவளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தது மாதிரி உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து இருந்துச்சுன்னா, நான் ஏத்திக்கிட்டு இருப்பேனா? கண்டிப்பா பிரச்சனை பண்ணி தான் இருப்பேன். அது மாதிரி தானே அவளும் ஏன் நான் இத பத்தி யோசிக்கவே இல்லை" என்று கண் கலங்க கேட்டாள்.


அவளுடைய கண்ணீரை துடைத்து விட்ட அசோக் "நீ பண்ணது தப்பு இல்ல அப்படின்னு நான் சொல்லவே மாட்டேன். நீ பண்ணது தப்புதான் ஆனா அதையே யோசிச்சு இப்படி சோகமா இருந்தா, ரொம்ப கஷ்டம் ஒரு விஷயம் நல்லா யோசிச்சு பாரு நீ பண்ணது எல்லாம் அவளை நல்லா பாத்துக்க முடியும், அவளுக்கு வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தை மட்டுமே கொடுக்க முடியும், ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் அவளுக்கு உறுதுணையாக இருக்க நிறைய பேர் இருக்கோம் அப்படிங்கிற நம்பிக்கையை கொடுக்க முடியும், அப்படின்னு தானே! எல்லாமே பண்ண இப்போ நீ நடந்தது எல்லாத்தையும் யோசித்து கலங்குவதை விட இனி அவளை நீ நல்லா பாத்துக்கணும். உன்னோட உண்மையான அன்ப அவளுக்கு காட்டு அவளும் அதை கண்டிப்பா புரிஞ்சுக்குவா முன்னாடி மாதிரி நீங்க உங்க பிரண்ட்ஸோட இருக்கப் போறது இல்ல, நீ அவ அப்புறம் உன்னோட அண்ணன் மூணு பேரும் தான் இருக்கப் போறீங்க. வீகெண்ட் வந்தா நாங்க எல்லாரும் வருவோம் ஆனா உன்னால அவளுக்கு எவ்வளவு தூரத்துக்கு உதவியாய் ஒரு நல்ல பிரண்டா இருக்க முடியுமா அப்படி இரு அவ என்ன தான் உன்ன நாத்தனார் மாதிரி நடத்தினாலும், நீ அவள உன்னோட ஃப்ரண்ட் அதை மட்டும் நினைச்சு பாரு கண்டிப்பா உனக்கு எதுவும் பெருசா தெரியாது. நீ அவ மேல எவ்வளவு அன்பு வைத்திருக்கஎன்கிற விஷயம் எங்க எல்லாருக்கும் தெரியும். அத அவளுக்கும் புரிய வை எல்லாம் நல்லபடியா நடக்கும் அதுக்கு நீ முதல்ல பழைய மாதிரி மாறு" என்று கூறினான் அசோக்.


அசோக் கூறியதை வைத்தே தெளிவான முடிவெடுத்த சாதனா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டு "கண்டிப்பா என்னோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் நீயும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையாய் இருப்பே, அப்படி என்கிற நம்பிக்கையே எனக்கு பல முறை கொடுத்துக்கிட்டே இருக்கிறாய். நான் தெளிவா முடிவெடுக்க நீ பலமுறை உதவி இருக்கிறாய், இப்போதும் அதைத்தான் செய்தாய். இனி நான் பழைய மாதிரி சந்தோஷமா இருப்பேன் ,ரொம்ப தேங்க்ஸ் டா" என்று கூறி அவனுடைய கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு அவன் சுதாரிப்பதற்குள் ஓடிவிட்டாள்.


ஏனென்றால் என்னதான் அவர்கள் காதலர்களாக இருந்தாலும் வீட்டினர் தங்கள் காதலுக்கு மரியாதை கொடுப்பது போல், இவர்களும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பக்கத்தில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு மட்டுமே வந்திருந்தனர். இதுவே இவர்களது முதல் முத்தம். சுதாரித்த அசோக் மகிழ்ச்சியாக சென்ற தன் காதலியை நினைத்து சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.


இருவர் முகத்திலும் இருந்த மகிழ்ச்சியை வைத்தே தன் தங்கை சரியாகி விட்டாள் என்பதை உணர்ந்த ருத்ரன் தன் நண்பனை பார்த்து சிரித்துக் கொண்டான். அவளும் பதிலுக்கு ஒரு புன்னகை சிந்தி விட்டு அவர்களுடன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். சாகித்யா பேசியது முதல் சாதனா பழைய மாதிரி கலகலப்பு இல்லாமல் ஏனோ கொஞ்சம் சோகமாகவே இருந்தாள். ஊரில் வைத்து எதையும் பேசிக் கொள்ள வேண்டாம் என்று எண்ணிய ருத்ரன் வீட்டிற்கு வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று இருந்தான். ஆனால் அதற்கு சந்தர்ப்பம் அமையாமல் போக இப்போது தன்னுடைய நண்பன் அதைப் பார்த்துக் கொண்டான், என்பதை உணர்ந்து கொண்டவன் தன் தங்கை வாழ்க்கையும் எந்தவித குறைவும் இல்லாமல் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டான்.


மதிய உணவை அனைவருமாக சேர்ந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது ராணி பொதுவாக அனைவரையும் பார்த்து "நீங்க மூணு பேரும் தனியா போய் தங்கியிருக்கிறது எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை ஆரம்பித்து நீங்கள் நல்லபடியாக இருந்தால் அதுவே எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். வேலைக்கு மட்டும் ஆள் வைக்கிறீங்களா? இல்ல அதையும் நீங்க தான் பார்க்க போறீங்களா அதை மட்டும் சொல்லு" என்று கேட்டார்.


சாதனா சாகித்யா இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக் கொண்டனர். அதைப் பார்த்து புன்னகைத்த ருத்ரன் "இல்லமா வேலைக்கு ஆள் எதுவும் வைக்க போறது இல்ல எப்படி நம்ம வீட்ல சமையல் நீங்கதான் பண்றீங்க அதேமாதிரி அங்கேயும் சமையல் நாங்களே பண்ணி சாப்பிடுகிறோம். மூணு பேருக்குமே சாப்பாடு சாப்பிடுற அளவு சமைக்க தெரியும் அதனால பிரச்சனை இல்லை. எவ்வளவு தான் நம்ம வீட்ல பணம் இருந்தாலும் நம்ம வேலையை நாம பாத்துக்கிட்டா தான் சரியாக இருக்கும். அதனால நாங்க அங்க எதுக்குமே வேலைக்கு ஆள் வைக்கல அது ஒன்றும் அவ்வளவு பெரிய வீடு எல்லாம் இல்லை கீழ ரெண்டு பெட்ரூம் ஒருகால் ஒரு கிச்சன் அப்புறம் மாடியில ரூம் இல்லாம வெறுமனே பிரெண்ட்ஸ் வந்தார்கள் என்றால் தங்குகிற மாதிரி இருக்கும் அங்கேயே பால்கனி இருக்கும் அவ்வளவு தான் அதனால நாங்க சமாளிச்சு வாழ்ந்திடுவோம்" என்று கூறினான்.


ருத்ரன் கூறியதைக் கேட்ட சாதனா மற்றும் சாகித்யா முகத்தில் ஒரு கடுப்பு குடிகொண்டது. அவர்களுடைய வேலை அனைத்தையும் அவர்கள் பார்ப்பது புதிதல்ல. ஆனால் சமைப்பதும் வீட்டையும் பராமரிப்பதும் அவர்களுக்கு புதிது அதனால் மனதில் ருத்ரனை வறுத்து எடுத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர்.


சாகித்யா மனதில் "டேய் வீணா போனவனே ஏதோ பிளான் பண்ணி விட்டே, ஆனா எங்க ரெண்டு பேர் சமையல் சாப்பிட்டு நீ என்ன ஆகப் போறியா அதுதான் கொஞ்சம் பாவமா இருக்கு நீ" என்று நக்கலாகவும் எண்ணிக்கொண்டே அமைதியாக அமர்ந்து இருந்தாள்.


சாதனா மனதில் "நீ எனக்கு சில நேரம் நல்லது செய்ற மாதிரி மொத்தமா ஆப்பு வைக்கிறா அண்ணா. உனக்கு திரும்ப தருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பா தருவேன்" என்று எண்ணிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.


ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் நன்றாக புரிந்தது என்னதான் பணக்கார வீடுகளில் பிறந்து இருந்தாலும், பணம் என்றுமே நிரந்தரம் கிடையாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அதை சமாளிப்பதற்கு இவர்கள் இருவருக்கும் மனப்பக்குவம் வேண்டும் என்பதற்காகவே இவன் இவ்வாறு சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டவர்கள், பெண்கள் இருவரின் முகத்தையும் பார்த்து அவர்கள் மனதில் இருப்பதையும் எண்ணிக் கொண்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.


ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அனைத்தையும் ஏற்றுக் கொண்டு புதிதாக ருத்ரன் வாங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றனர். கல்லூரி திறக்கும் போது இங்கே வரலாம் என்றுதான் முதலில் யோசித்தான் ருத்ரன். பின்பு முதலிலேயே வந்தால் பக்கத்தில் இருக்கும் இடங்கள் யாவும் இவர்கள் இருவருக்கும் மிகவும் பழக்கப்பட்ட இடமாக மாறிவிடும், அதனால் முன்னாடி செல்வதே சிறந்தது என்று எண்ணிக்கொண்டு இப்போதே அழைத்து வந்துவிட்டான். இவர்கள் வந்து சேர்ந்த நேரம் சரியாக சாகித்யா வீட்டில் உள்ள அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். கூடுதலாக சாந்தினியும் வந்திருந்தாள்.


சாந்தினி வந்திருப்பதைப் பார்த்த சாகித்யா அவளை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள். ஏனென்றால் அவளுக்கு முதன் முதலில் கிடைத்த உண்மையான நட்பு. இவள் தான் தன்னுடைய வாழ்க்கைக்காக என்னவெல்லாமோ செய்து இருக்கிறாள் என்பதையும் அவள் அறிந்துதான் இருந்தாள். ஆனால் நிச்சயமாக தன்னுடைய கல்யாணம் நடந்த பிறகு தான் இவளுக்கு அனைத்தும் தெரிந்து இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டதால், அவளிடம் எந்தவித வேற்று பாடையும் காட்டாமல் சகஜமாக பழகினாள்.


சாந்தினிக்கும் அவள் பழகிய விதத்திலேயே தன்னை தன் தோழி புரிந்து கொண்டாள் என்று எண்ணி மகிழ்ச்சியாக கலந்து கொண்டாள். ஆம் சாகித்யா நினைத்தது போல் அவளுடைய திருமணம் நடந்தபோது தான் சாந்தினி மண்டபம் வந்து சேர்ந்தாள். ஆனால் எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று புரியாமல் அனைவர் மீதும் கோபம் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டாள். ஏனென்றால் அவளுக்கு அப்போது தெரிந்திருந்தது கண்டிப்பாக தன்னை அவளிடம் நெருங்க விட மாட்டார்கள் என்ற விஷயம்.


வீட்டிற்கு வந்த சாந்தினி மனது ஆறாமல் உள்ளுக்குள் தன் தோழி நிலையை நினைத்து அழுது கொண்டிருந்தாள். இப்படியே ஒரு வாரம் தொடர எதேர்ச்சையாக ருத்ரன் சாந்தினி முகத்தை பார்த்து அவளிடம் பேச வந்தான். ஆனால் அவள் பேசாமல் செல்ல முயல அவளை தடுத்த ருத்ரன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். அதற்கு சாந்தினி "அண்ணா நீங்க பண்ணது எல்லாம் அவளோட நல்லதுக்கு தான். ஆனா அத நீங்க அவளுக்கு மறச்சி பண்ணது தப்பு. எனக்கு தெரிஞ்சு இனியாவது எல்லா உண்மையை அவளுக்கு சொல்லி விடுங்கள் அப்படி என்றால் தான் பிரச்சனை வராமல் இருக்கும்" என்று தன் தோழியின் மனதை அறிந்து கூறினாள்.


ருத்ரன் அவளிடம் "கண்டிப்பா நீ சொல்ற மாதிரி அவளுக்கு எல்லாம் உண்மையை சொல்கிறேன். நீ கவலப்படாத நீ பழைய மாதிரி எல்லார் கூடவும் அன்பா பாசமா இரு" என்று கூறினான். அவளும் அதற்கு சம்மதித்து தலையசைக்க அதன்பிறகு அவள் பழைய மாதிரி அனைவருடனும் ஒன்றாக இருந்தாள்.


அதை நினைத்து பார்த்த சாந்தினி அப்போதுதான் தன்னை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவை பார்த்தாள். ஆனால் பெரிதாக கண்டு கொள்ளாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள். அதைப்பார்த்த சத்யாவும் ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு நகர்ந்து சென்றான். சாந்தினி மனதில் சத்யா இருக்கத்தான் செய்கிறான், ஆனால் வீட்டில் பேசி திருமணம் செய்தால் மட்டுமே சாந்தினி அவனுக்கு கிடைப்பாள். இல்லை என்றால் அவனின் கடைசி வரை தேவதாஸ் தான் இதை அவனும் அறிந்து இருந்ததால் கொண்டுவந்த பொருள்கள் அனைத்தையும் அந்தந்த இடத்தில் வைக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் மறுநாள் காலைதான் பால் காய்த்து அவர்களை குடி வைப்பதாக இருந்தது.


அன்றைய இரவு அனைவரும் ஒன்றாக மாடியில் கீழே பாய்விரித்து படுத்தனர். ருத்ரன் மற்றும் சாகித்யா இருவரும் பெரிதாக அன்று முழுவதும் பேசிக்கொள்ளவில்லை தூங்கும்போது தன்னருகில் படுக்காமல் தூரம் சென்று படுக்க போனவளை யாரும் அறியா வண்ணம் இழுத்து தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டான். தன்னுடைய பெற்றோர் முன்னிலையில் ஏதாவது கூறினால் நிச்சயமாக பிரச்சினை பெரிதாகும் என்று யோசித்த சாகித்யா அமைதியாக இருந்தாள். ஏனென்றால் அவனுடைய பெற்றோர் முன்பு நண்பர்கள் முன்பு என்ன கூறினாலும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.


ஏனென்றால் அவர்களுக்கு நடந்தது அனைத்தும் தெரியும் ஆனால் தன் வீட்டில் உள்ளோர் மனது கஷ்டப்படும் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக அவன் அருகில் படுத்துக் கொண்டாள். ருத்ரன் வழக்கம்போல் அவளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தான். அவளுக்கும் வேலை அலுப்பு அதிகமாக இருக்க அவனிடம் எதுவும் கூறாமல் தூங்க ஆரம்பித்துவிட்டாள்.


காலையில் அனைவரும் எழுந்து தயாராக ஆரம்பித்திருந்தனர் சாகித்யா பட்டுப்புடவையில் தயாராக, ருத்ரன் அதற்கேற்ற நிறத்தில் பட்டு வேட்டி சட்டை அணிந்து ரெடியானான். பின்பு அவர்கள் இருவரும் மனையில் ஒன்றாக அமர வைக்கப்பட்டு பூஜைகள் முடிந்து பால் காய்ச்சும் விசேஷம் நல்லபடியாக முடிந்தது.


அனைவரும் ஒன்றாக மதிய உணவை முடித்து விட்டு சில பெரிய அறிவுரைகள் அனைத்தையும் கூறி விட்டு கிளம்பி சென்றனர். அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த நண்பர்கள் அனைவரும் மாலை சிற்றுண்டி நேரத்திற்கு கீழே வந்தனர். சாந்தினி பெரியவர்களுடன் கிளம்பியிருக்க சாதனா சாகித்யா இருவரும் சமையலறையில் சிற்றுண்டி செய்ய ஆரம்பித்தனர். சாதனா நொடிக்கு ஒருமுறை தன்னுடைய முகத்தை பார்ப்பதை பார்த்த சாகித்யா அவளைப் பார்த்து "மை டியர் நாத்தனார் அவர்களே என்னோடு சேர்ந்து உங்கள் அண்ணனுக்கு ஒரு சில ட்ரீட்மென்ட் செய்ய உதவி புரிவீர்களா?" என்று கேட்டாள்.


அவள் தன்னிடம் பேச ஆரம்பித்ததே பெரிய விஷயம் என்று எண்ணிய ஏற்கனவே தன் அண்ணனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டவள். தன் தோழி மற்றும் அண்ணி ஆகிய சாகித்யாவை பார்த்து "கண்டிப்பா எவ்வளவு சிறப்பா செய்யணுமோ அவ்வளவு சிறப்பா செய்யலாம் நான் என்னால் ஆன எல்லா உதவியும் செய்கிறேன்" என்று கூறி கை குலுக்கிக் கொண்டாள்.


இருவரும் ஒரு மர்ம புன்னகை சிந்தி விட்டு அனைவருக்கும் மாலை நேர சிற்றுண்டி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தனர். அனைவரும் அதை மிகவும் ருசியாக இருப்பதாக கூறிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க, ருத்ரன் மட்டும் தன் வாயில் வைத்ததை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் விழிபிதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தான். தன் மனைவி தான் ஏதாவது செய்வாள் என்று எண்ணியவன் தன் தங்கை கொண்டு வந்ததை கையில் எடுத்தான். அதை சாப்பிட்டவன் முகமும் அதேபோல்தான் மாறியது. அப்போது தான் இருவர் முகத்தையும் பார்த்தான். இருவர் முகத்தில் இருந்த சிரிப்பையும் பார்த்தவன் முகம் அதிர்ச்சியில் தத்தளித்தது.

அப்படி என்னதான் இருவரும் செய்தார்கள். என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
கதையை இதுமாதிரி கொண்டு போனால் போதுமா இல்ல வேறு ஏதாவது மாற்றங்கள் வேண்டுமா தயவு செய்து உங்களுடைய பொன்னான கருத்துக்களை கூறுங்கள்.