• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் தேடலானவளே 9

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
அறைக்குள் வந்தவள் மித்ராவின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடிக் கொடுத்தாள்.. அவளின் வருடலில் கண் விழித்தவள் "வாஹி" என்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
" கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்டடி.. பாத்து வரமாட்டியாடி" இவ்வளவு நேரமும் தான் பட்ட ஆதங்கத்தை கோபமாக கொட்டிக் கொண்டிருந்தாள்.
அவளின் கோபத்திலும் தன் மேல் அவள் வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்தவள் சிரித்துக் கொண்டே "ஹேய் வாஹி எனக்கு ஒன்னுமில்லைடி.. நான் என்ன புதுசாவ ஏறுறேன் அதுல.. காலுக்கு இடையிலே ஏதோ தடுக்கிடுச்சிடி" என்று சமாதானப்படுத்தினாள்.
அவள் அப்படி கூறவும் யோசிக்க ஆரம்பித்தாள்.. 'இன்று நடந்தது எதேச்சையாக நடந்தது போல இல்லை.. இரு ஆடவர்களின் மீது அவளின் சந்தேகத்தை உறுதிபடுத்தியது. ஆனால் இதைப்பற்றி மித்துவிடம் சொல்ல வேண்டாம் பயந்துவிடுவாள்' என்று அவளுக்குள்ளே ஒரு முடிவு எடுத்தாள்.. அந்த ஒரு முடிவு தான் இருவரின் பிரிவுக்கும் காரணமாக அமைந்தது..
மித்துவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.. அடி அதிகம் எதுவுமில்லை என்றாலும் பயந்த சுபாவம்முள்ளவள் ஆதலால் இன்னும் அவளிடம் பயம் போகவில்லை.. வாஹி அருகிலிருந்ததால் அவளின் பயம் மட்டுப்பட்டது. இருநாட்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் கல்லூரி வந்தனர். அவர்களின் கல்லூரி வாழ்வில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்தனர் இருவரும்.
ரஞ்சித் மித்ராவின் குடும்பத்தை விசாரித்ததில் அவளுக்கு உடன்பிறந்த அண்ணன் ஒருவன் உண்டு.. அவனும் தற்போது இங்கு இல்லை.. தந்தை பிஸ்னஸ்மேன்.. தாய் மாதர்சங்கம் என்று அழைபவர்.. தாயுக்கும் தந்தைக்கும் பணத்தின் கௌரவத்தின் அதிக நாட்டம் உண்டு.. தன் மகன் வாஹினியை விரும்புவது இருவருக்கும் தெரியாது.. அவர்கள் பிள்ளைகள் மேல் பாசம் அதிகம்தான்.. ஆனால் அதை வெளிகாட்டமாட்டார்கள்.. மித்ரா இயல்பிலேயே பயந்த சுபாவம் உள்ளவள்.. கருணை அதிகம் உள்ளவள்.. எல்லோரையும் எளிதாக நம்பிவிடுவாள். அவளின் உயிர்த்தோழி என்றால் அது ரூபவாஹினி மட்டுமே.. அவளை மட்டும் மித்ராவிடமிருந்து பிரித்தால் போதும் மித்ராவை ஆசைத்தீர அனுபவிக்க.. ' என்று பூவின் மணம் கொண்டவளை வேட்டையாட நாள் பார்த்தான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை.. மித்ராவைத்தேடி அவளின் பாதுகாவலனும் வருகிறான் என்று.
அவன் மித்ராவையும் ரூபவாஹினியையும் பிரிக்கும் வழியாக மித்ராவின் தந்தைக்கு வாஹினியை பற்றி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தினான்.. அதற்கு முதல் படியாக வாஹினியும் இன்னொருவனும் சேர்ந்திருக்கும் படி ஒரு ஃபோட்டோ எடுக்க ஏற்பாடு செய்தான்.
அன்று மித்ராவை லைப்ரரியில் விட்டுவிட்டு இருவருக்கும் டீ வாங்க கேண்டின் சென்றாள் வாஹினி.. மித்ரா வரவில்லை வாங்கி வா என்று விட்டாள். இருவருக்குமான டீயுடன் வெளியில் வந்தவள் எதிரில் வந்தவன் மேல் மோதினாள்.. அவன் வருவதை அவள் கவனிக்கவில்லை.. அவன் மேல் மோதியவள் டீ கோப்பையை தவறவிட்டு கீழே விழப்போனாள். எதிரில் வந்தவன் அவளை விழாமல் பிடித்துக் கொண்டான்.. இது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு.. அவ்வழியே வந்த ரஞ்சித்திற்கு அது வசதியாக போய்விட்டது.. ஒரு நொடி இருவரும் நெருக்கமானது போல நின்றதை தனது மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். இருவரும் மன்னிப்பு கேட்டு விலகிக் கொண்டனர்.
'ரூபவாஹினி உன்னை உன்னோட உயிர்த்தோழிக்கிட்ட இருந்து பிரிக்கப்போறேன்டி.. அதுக்கு முதல் ஆயுதம் ரெடி பேபி..' அந்த புகைப்படத்தை முதலில் மித்ராவின் குடும்பத்திற்கு அனுப்பினான்.. அதன் பின் பக்கத்தில் உங்கள் மகன் விரும்பும் பெண் வேறொருவனுடன்.. என்று மொட்டையாக எழுதி அனுப்பினான்.
வாஹினிக்கு அன்று யூபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வு.. அவள் மித்ராவிடம் சொல்லிட்டு தேர்வு எழுத சென்றாள்.. மித்ராவும் வீட்டில் தனியாக இருப்பது பிடிக்காமல் அருகிலுள்ள பார்க்கிற்கு சென்றாள். அன்று விடுமுறை ஆதலால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இருந்தனர்... குழந்தைகள் விளையாடிக் கொண்டும் பெரியவர்கள் மற்றவருடன் பேசிக் கொண்டும் இருந்தனர். அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தாள். அங்கே ஒரு பெரியவர் கீழே விழுந்திருந்தார்.. அதைப் பார்த்தவளின் மனம் துடிக்க அவரருகில் செல்வதற்குள் ஒருவன் வந்து அந்த பெரியவரை தூக்கி அருகிலிருந்த திட்டில் அமரவைத்து தண்ணீர் புகட்டினான். அவர் கொஞ்சம் சரியாகவும் அருகிலிருந்தவனிடம் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொன்னான்.
அவன் அங்கே சாலையின் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு உண்ண உணவு வாங்கி கொடுத்தான்.. அங்கிருந்த குழந்தைகளுக்கு ஐஸ்கீரிம் வாங்கி கொடுத்தான்.. மித்ரா கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவன் செய்யும் செயலில் அவன் மேல் மதிப்பு கூடியது அவளுக்கு. அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளை ஒரு குரல் நனவுக்கு வரவைத்தது.. யாரென்று பார்த்தாள் அவளின் சிந்தனைக்கு சொந்தக்காரன் அங்கே நின்றிருந்தான்.
"எக்ஸ்கியூஸ் மீ மேம்.. அனாதை குழந்தைகளுக்கு டெனேசன் கலெக்ட் பண்றோம்.. உங்களால முடிஞ்சத குடுக்க முடியுமா.. உங்களால ஒரு குழந்தை ஒரு நேர சாப்பாடு சாப்பிடும்.." என்று கைகளில் உண்டியலுடன் நின்றான். இவ்வளவு நேரமும் அவனைப் பற்றியே சிந்தித்தவள் அவனது அந்த குரலில் மயங்கித்தான் போனாள் பெண்ணவள்.. பூவினும் மென்மையானவளை தனது செய்கையால் வசியப்படுத்தினான் அந்த வசியக்காரன் அவனறியாமல்.
" ஹலோ சார்.. எந்த ஆசிரமத்துக்கு டெனெஷன் கலெக்ட் பண்றீங்கன்னு சொல்லுங்க.. நான் என்னால முடிஞ்சத பண்றேன்.." அவனைத் தன்னிடம் பேச வைக்கும் முயற்சியில் இறங்கனாள்.
"ஓ.. தேங்க்யூ மேம் சாரதா இல்லத்துக்கு மேம்.. "
ம்ம்.. ஓகே சார்.. என்று தன்னிடம் உள்ள பர்சில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து அந்த பாக்ஸில் போட்டாள். அதைக் கண்டவன் சந்தோஷ முகத்துடன்
"தேங்க்யூ மேம்.. உங்களால இன்னைக்கு இருபது குழந்தைகளோட வயிறு நிறையப் போகுது.." என்று கூறினான்.
"ஐ ஆம் மித்ரா யாழினி.." என்று அவனிடம் கை நீட்டினாள்.
" ஐ ஆம் நேத்ரன் மேம்.. உங்களை மாறி வசதி படைத்தவங்க எங்க கூட பேசுவீங்களான்னு நினைச்சேன்.. ஆனா நீங்க வித்தியாசமா இருக்கீங்க.." என்றான் நெகிழ்வுடன்.
அவன் அப்படி கூறியதும் அவளின் விழிகளில் கண்ணீர் பெருகியது.. அதை காணாதவன் அவளிடமிருந்து விடை பெற்று சென்று விட்டான். அவன் சென்றும் அதே இடத்தில் அமர்ந்தவளின் மனதில் அவன் உதிர்த்த வார்த்தைகளை ஏற்கவே சிறிது நேரம் பிடித்தது.
இவற்றையெல்லாம் தூரத்திலிருந்தே இருவிழிகள் வன்மத்துடன் பார்த்திருந்தது.
மித்ரா வீட்டிற்கு வந்தும் இன்று பார்த்தவனின் முகமும் அவனின் வார்த்தையும் அவள் நெஞ்சில் ஆணியடித்தது போல நிலைத்தது. அவனின் நினைவிலே உழன்றவளை வாஹினியின் குரல் கலைத்தது.
" மித்து ஐ ஆம் ஆல் சோ ஹேப்பி டி.. நான் பாஸ் பண்ணிடுவேன்டி.. கூடிய சீக்கிரமே அம்மா கலெக்டர் தான் பாத்துக்கோ.." இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.
"வாழ்த்துக்கள் வாஹிமா... வா இன்னைக்கு இத செலிப்ரேட் பண்ணலாம்" என்று அவளை கட்டியணைத்து தனது சந்தோஷத்தை தெரியப்படுத்தினார்.. பின்பு விடாப்பிடியாக அவளை உணவுக்கு வெளியே அழைத்துச் சென்றாள் மித்ரா.
வாஹினி அடுத்தது இரண்டாம்நிலை தேர்வுக்கு தனது படிப்பினில் கவனமாக மித்ராவை கவனிக்க இயலவில்லை.. மித்ராவும் இப்பொழுதெல்லாம் நேத்ரனின் நினைவில் அவனை சந்திக்க ஏதாவது காரணத்தை தேடிக் கொண்டு பார்க்க சென்றாள். ஒருநாள் அவனை காக்கி உடையில் கண்டாள்.. ஆம் அவன் விரும்பும் தொழில் காக்கி உடையில் அசுரர்களை வேட்டையாடும் வேட்டைக்காரன்.. அந்த உடையில் அவனைப் பார்த்ததும் பயம் வந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால் இவ்வளவு பெரிய பதவியில் உள்ளவன் ஆசிரமத்திற்காக அனைவரிடமும் கையேந்துவது அவனின் மேல் மரியாதையை அதிகம் வர வைத்தது.. அன்று அவன் அந்த பெரியவருக்காகவே தான் வந்தான்.. அவன் பெரும்பாலும் வருவதில்லை.. அவனின் ஊதியத்தில் வருவதில் ஒரு சதவீதம் மட்டுமே அவன் எடுத்துக் கொள்வான்.. மீதம் அத்தனையும் தன்னை வளர்த்த ஆசிரமத்திற்கு தந்துவிடுவான்..
ஆனால் பெரியவரின் உடல்நிலை முக்கியமாதலால் அவனே அன்று அதை செய்தான்.. அப்பொழுது தான் அவளை சந்திக்க நேர்ந்தது.. அவனின் கட்டுக்கோப்பான உடல்வாகுவில் பெண்ணவளோ மயங்கித்தான் போனாள்.. அவனுக்கும் அவளின் நடவடிக்கையில் புரிந்தது அவளுக்கு தன் மேல் உள்ள ஈடுபாடு.. ஆனால் இதை தொடர அவன் அனுமதிக்கவில்லை.. அவளை ஒதுக்கத் துவங்கினான்.
அவனின் ஒதுக்கம் அவளுக்கு மனவலியை கொடுத்தது.. அதை தாங்காதவள் அவனிடம் நேரடியாக பேசுவது என்று முடிவெடுத்தாள். அன்று கல்லூரி விட்டு நேராக ஆசிரமம் சென்றவள் அவனைத் தேடினாள்.. அவனோ அப்பொழுது தான் தனது பணியிலிருந்து வந்தவன் ஆசிரமத்திற்கு தேவையான சில பொருட்களை வாங்கி வந்தான்.

அவளைக் கண்டும் காணாதவன் போல சென்றவன் வழியில் சென்று மறித்தாள். அவன் எதுவும் பேசாமல் நிற்கவும் இவளே அவனிடம்,
"நேத்ரன் ஏன் என்கிட்ட பேச மாட்டிறீங்க.. நான் எதாவது தப்பு செஞ்சேனா சொல்லுங்க திருத்திக்குறேன்.. ஆனா இப்படி பேசாம போறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. நான் என்ன தப்பு செஞ்சேன் தரன்.." என்று அவனிடம் கேட்டாள்.. அவளின் கண்களில் இப்பவோ அப்பவோ விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது கண்ணீர் துளிகள்.
அதுவரை எதுவும் பேசாமல் நின்றவன் "இப்போ நீங்க என்னை எப்படி கூப்பிட்டீங்கன்னு தெரியுதா.." என்று அவளிடம் கேட்டான்.
"ம்ம்.. தரன்னு.."
" நீங்க என்னை விரும்புறீங்களா.." நேரடியாக அவளிடம் கேட்டான்.
அவன் கேட்டதும் அவள் முகம் அந்திவானமாய் சிவந்து தான் போனது. அவளின் முகம் பூமியைப் பார்த்துக் கொண்டே "ஆமாங்க.. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லவ் யூ.. உங்க கூட லைஃப் லாங்க் வாழனும்னு ஆசைப்படறேன்.."
" ஒருநாள் உங்களால என்னோட வாழ முடியுமா..உங்களோட வாழ்க்கை முறையும் என்னோட வாழ்க்கை முறையும் வேற வேற.. உங்களுக்கு வீட்டிலே அப்பா அம்மா அண்ணனு ஆயிரம் சொந்தமிருக்கும்.. ஆனா எனக்கு யாருமில்லை.. நான் ஒரு அனாதை.. இந்த ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன்.. ஸ்காலர்ஷிப்ல தான் படிச்சேன்.. நீங்களாம் அப்பா சம்பாதிச்ச காச எப்படி செலவு பன்றதுன்னு தெரியாம செலவு பன்றீங்க.. ஆனா எனக்கு ஒவ்வொரு ரூபாயும் ஒரு குழந்தையோட சாப்பாட்டுக்கு ஆகுமேன்னு சேர்த்து வைக்குறேன்... பசியோட கொடுமை தெரியுமா உங்களுக்கு.. ஆனா எனக்கு தெரியுங்க.. ஒவ்வொரு நாளும் நாங்க ஒரு வேளை சாப்பாடு வயிறார கிடக்காதான்னு ஏங்கியிருக்கோம்.. ஆனா நீங்க அதோட நிழல்கூட தெரியாம வளர்ந்தவங்க.. இப்படிபட்டவன் மேல ஆசை வைக்கிறது தப்புங்க.. உங்க ஸ்டேட்ஸ்க்கு தகுந்த மாறி பையனா பாருங்க.. என்னை விட்டுருங்க.. உங்க பணக்கார விளையாட்டுக்கு நான் ஆளில்லை.." அவளின் காதலுக்கு முடிவுரை எழுத முதல்வரியைத் துவக்கினான்.
அவனின் வார்த்தையில் அதிர்ச்சியடைந்தவள் "இல்லை தரன் நா உண்மையா சொல்றேன்.. உங்களை நேசிக்கிறேன்.. என் உயிருக்கு மேலா.. நான் என்ன பண்ணா நீங்க என்னோட காதலை நம்புவீங்க.. சொல்லுங்க நான் பண்றேன்.." தன் காதலை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதலில் அவனிடம் கேட்டாள்.
அவனோ அவளுக்கு இப்படி புரிய வைக்க முடியாது என்ற எண்ணத்தில் "ம்ம் சரிங்க.. நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க.. அப்போ நான் சொல்றத செய்யுங்க உங்களோடது உண்மையான காதல்ன்னு ஒத்துக்குறேன்.."
"சொல்லுங்க நான் என்னை செய்யனும்.."
"ரொம்ப சிம்பிள் தான்.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. உங்க வீட்டவிட்டு வந்துடுங்க.. ஆனா அங்கிருந்து ஒரு குண்டூசி கூட எடுத்துட்டு வரக்கூடாது.. நீங்க வரும்போது கட்டிருக்கறது கூட என்னோட காசுல தான் இருக்கனும். என்னோட என் வீட்டில் என் சம்பாத்தியத்தில தான் வாழனும்.. எந்த ஒரு இடத்திலேயும் உங்க வசதிய பயன்படுத்தக்கூடாது.. உங்களை கல்யாணம் பண்ணாலும் என்னோட சுன்டுவிரல் கூட உங்க விருப்பம் இல்லாம உங்க மேல படாது.. இது மூனு மாசத்துக்குத்தான்.. அதுக்கப்புறமும் உங்கக் காதல்ல நீங்க உறுதியா இருந்து என் மனசை மாறுச்சுன்னா.. உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க வீட்டில் சொல்லிட்டு அவங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்.. இப்போ சொல்லுங்க.. இதுக்கு உங்களுக்கு சம்மதமா.. ஒன்னும் அவசரமில்லை.. நாளைக்கு பொறுமையா சொல்லுங்க.."
அவன் கூறியதும் அதிர்ச்சி தரும் விழிகளுடன் அவனிடம் இறைஞ்சினாள்.. அவனோ அதற்கும் மனம் இறங்காதவன்
"ம்ம்.. நான் சொல்ல மறந்துட்டேன்.. என்னை மூனு மாசத்துக்கு கொடைக்கானலுக்கு மாத்திருக்காங்க.. நான் அங்கே நாளை மறுநாள் ஜாயின் பண்ணனும்.. நாளைக்கு டென் ஓ கிளாக் எனக்கு டிரெயின் வந்தா உன்னையும் கூட்டிட்டு போவேன்.. இல்லைனா இத்தோட மறந்துடுங்க.. என்னையும் சேர்த்து.." என்று அதுவரை அவளின் முகம் பார்க்காமல் சென்று விட்டான்.
ஆனால் முன்னால் சென்ற அவனின் கண்களும் கலங்கித்தான் போயின.. ஆம் அவனுக்கும் அவளை பிடித்திருந்தது.. பார்த்து முதல் நாளிலே மனதினுள் ஓவியமாய் பதிந்து போனாள் அப்பெண் பாவை.. ஆண்மகனின் நிலை அவளை தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அவனின் வேலை அதற்கு தடைக்கல்லாய் நின்றது.. இப்பொழுது அவன் செல்லும் வேலை அவன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை மீண்டு வருவோம் என்று.. தன்னை நம்பி வரும் பாவத்திற்கு அவளுக்கு தீங்கு நேர்ந்தால் அதைத் தாங்கும் மனவலிமை தன்னிடம் இல்லை.. பார்த்து பழகியது சிறிது நாளே ஆனாலும் அவளின் மாசுமருவற்ற பொன்முகம் எல்லோராவின் அழியா ஓவியமாய் பதிந்துவிட்டாள் அவனின் காரிகை.
தன் மனதினில் வந்தவளை பற்றிய அணைத்துக் தகவல்களும் அவன் திரட்டியிருந்தான்.. அதில் முதல் முக்கியமானவளாய் ரூபவாஹினி இடம் பெற்றிருந்தாள்... ரஞ்சித்தும் அடக்கம் தான்.. ஆனால் அவன் அரக்கர்களை விட குள்ளநரி என்பதை அவனறியாமல் போனது யாரின் தவறோ..?
தன்னவள் நினைவுடனே தனது குவாட்டர்சிற்கு வந்தவன் அவனின் டேபிளைத் திறந்து அதன் அடியில் இருந்த ஃபோட்டோவை எடுத்தான்.. அது மித்ராவும் புகைப்படம். அதைப் பார்ததவுடனே சொல்லிவிடலாம் அவளறியாமல் எடுத்தது என்று.
' யாழுமா.. நீ நல்லாருக்கனும்டி.. நான் திரும்ப உயிரோட வந்தா நிச்சயம் உன்னைத் தேடி வருவேன்டி.. அப்பவும் உன் மனசுல நான் இருந்தேனா நானே என் காதலை சொல்லுவேன்டி.. ஸாரிடி, இன்னைக்கு உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன் இல்லை.. அப்பதான் என்னை விட்டு விலகிப்போவேன்னு சொன்னேன்டி.. எனக்கு தெரியும்டி.. நீ மத்த பணக்கார பொண்ணுங்க மாதிரி இல்லைன்னு.. ஆனா என்ன செய்யறது.. லவ் யூ டி... லவ் யூ லாட்ஸ் மை ஏஞ்சல்..' அவளின் புகைப்படத்திற்கு அழுத்தமாய் ஒரு முத்தத்தை கொடுத்தவன் மறுநாள் கிளம்புவதற்கு தனக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க கிளம்பினான்.
ஆனால் அவன் அறியாத ஒன்று அவனின் தேவதையும் அவனை விடப் பிடிவாதக்காரி என்று.. தன்னவனுக்காக எந்த நிலையையும் தாங்கும் பெண்ணின் உள்ளம்.. இதை அவனறியாமல் போனது விதியின் செயலன்றி வேறொன்றுமில்லை..



வணக்கம் செல்லம்ஸ்.. படிச்சிட்டு மட்டும் போகாம உங்க விமர்சனத்தையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க.. கதையோட போக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா.. இல்லை எந்த இடத்திலையாவுது தொய்வு உண்டா அதையும் சொல்லிட்டு போங்க டியர்ஸ்.. நிறை குறைகளை மறக்காம சொல்லிட்டு போங்க மக்களே.. உங்களோட விமர்சனம் தான் என்னைப்போல வளரும் எழுத்தாளர்களுக்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும்... என் எழுத்துக்களை ஆதரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

தேடல் தொடரும்...✍️
 
Top