• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317

ஓலை - 13
" இன்னொரு நாள் பார்க்கலாம்." என்று சொல்லி விட்டு சென்ற கோபியை பார்த்துக் கொண்டு நின்ற, சத்யபிரகாஷின் மனதில் மகிழ்ச்சி பூ பூத்தது. இருக்காத பின்னே சிறுவயதிலே மலர்ந்த நட்பாச்சே.
இனி அவ்வளவு தான் என்று நினைத்து கலங்கித் தவித்துக் கொண்டிருந்த நட்பெனும் உன்னத உறவு மீண்டும் துளிர்க்கும் என்று நம்பிக்கை வந்ததோடு மட்டுமல்லாமல், அவனது தனிமைக்கு துணையாக இருப்பான் என்ற நம்பிக்கையும் வந்து விட்டது.

அதற்குப் பிறகு கோபி தவிர்க்க நினைத்தாலும், சத்யபிரகாஷ் அதற்கு விடவில்லை.

சத்யபிரகாஷ் , தினமும் காலேஜ் முடிந்து மாலையானதும், பத்திரிகை ஆஃபிஸுக்கு எதிரே, காதலிக்காக கால்கடுக்க காத்திருக்கும் காதலனைப் போல கோபிக்காக காத்திருப்பான்.

முதலில் சில நாள் கண்டும், காணாமலும் சென்ற கோபி, பிறகு மனது தாளாமல், " ஏன் டா என் உயிரை வாங்குற?" என்று கடுப்புடன் வினவ.
சத்யபிரகாஷோ முகமெல்லாம் புன்னகையுடன், " நான் தான் உன் உயிர் நண்பனாச்சே அதான்." என்று கண் சிமிட்டினான்.

'அவனது அன்பில் எங்கே தனது மனம் மாறிடுமோ,' என்று எண்ணிய கோபி வேறு வகையில் அவனை மடக்க நினைத்தான்‌.

" என்னடா? படிக்கும் போது, அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும்னு ஃபிலிம் காண்பிச்சவன், இப்போ டீ க்ளாஸ் தூக்கிட்டு இருக்கிறான்." என்று நினைச்சு சந்தோஷப்படத் தான் இங்க டெய்லி வர்றீயா?" என.

" டேய் நீ ஒன்னும் முழு நேரத் தொழிலா இதைப் பார்க்கலையே. உன் படிப்பு செலவுக்காகத் தானே இந்த வேலைப் பார்க்குற. இதுல சிரிக்கிறதுக்கும், கிண்டல் பண்றதுக்கும் என்ன இருக்கு. உன்னை நினைச்சு எனக்கு பெருமையாத் தான் இருக்கு." என்று புன்னகைத்தான் சத்யபிரகாஷ்.

"...."

"என்ன ஒன்னும் சொல்லாமல் இருக்க கோபி? சரி அதை விடு. நீ எங்க தங்கி இருக்க?" என்று சும்மா ஏதோ பேச வேண்டும் என்பதற்காக வினவினான் சத்யபிரகாஷ்.

அதைக் கேட்டதும் கோபியின் முகம் சுருங்கியது.

" ஏன்? என்ன ஆச்சு?" என்று மீண்டும் தோண்டி துருவினான் சத்யபிரகாஷ்.

" நான் தங்கி இருக்க மேன்ஷல இருந்து காலி பண்ண சொல்றாங்க. வேற இடம் இன்னும் அமையலை." என்றான் கோபி.

அவனது சம்பளத்திற்கு கட்டுப்படியாகக் கூடியதாக இடம் அமையவில்லை என்பதே உண்மை.

அதைக் கண்டுக் கொண்ட சத்யபிரகாஷ், " நான் இருக்குற ரூம்ல, நான் மட்டும் தனியா தான் இருக்கேன். ரூம்மேட்ஸ் யாரும் இல்லை. நீ வந்து ஜாயின் பண்ணிக்கிறீயா?" என்றவன்,
கோபி அடுத்து என்ன சொல்லுவான் என்பது புரிய, அவசர அவசரமாக,
" வாடகையை ஷேர் பண்ணிக்கலாம்." என்றுக் கூறி, அவனை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான்.

அதுவும் இல்லாமல் கோபிக்கு ஊரில் இருந்து சில தகவல்கள் தேவைப்பட்டது. அதற்காக சத்யபிரகாஷுடன் நட்பை புதுப்பித்துக் கொண்டான்.

ஆனால் கோபியால் பழையபடி பேச முடியும் என்று தோன்றவில்லை.

ஆனால் சத்யபிரகாஷ் அவனையும் மாற்றினான், அவனும் மாறினான்.

நாட்கள் விரைந்தோட, சத்யபிரகாஷ் சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் கடந்து இருந்தது.
பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் அதற்காக கிளம்பியவன், கோபியிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். " கோபி ஏன் டா இப்படி இருக்க? இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் ஊருக்கு வராமல் இருப்ப. அம்மா, தம்பி எல்லாம் பாவம் இல்லையா?" என்று வினவ.

“நான் அங்கு வந்தா, தேவையில்லாத ஞாபகம் தான் வரும்‌. அதுவுமில்லாமல் என்னைப் பார்த்தா தான் அம்மாவுக்கு வேதனை. என்னைப் பார்க்கும் போதெல்லாம், எங்க அப்பா ஞாபகம் வந்து, கொல்லாமல் கொல்லும். "
என்று தொண்டை அடைக்கக் கூறினான்.

" டேய் கோபி… நீ என்னடா பண்ண? அப்பாவுக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம். முடியலை." என்று சத்யபிரகாஷ் சமாதானமாக கூற.

" அவர் சொன்னதை கேட்கலை‌. என்னோட அமுதா இறந்த ஈரம் கூட காயாமல் இருக்க, அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடு பண்ணுனார்‌. இனி என் வாழ்க்கையில் கல்யாணம்னு ஒன்னுக் கிடையாது. அவர் எவ்வளவோ கெஞ்சியும், நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன். அதை அவரால தாங்கிக்க முடியலை. நெஞ்சு வலி வந்துடுச்சு. மரணப்படுக்கையில் கூட அவரது கண்கள் என்னைப் பார்த்து யாசித்தது.
ஆனால் என்னால் எதுவும் பண்ண முடியாமல், அவரது சாவிற்கு நானே காரணம் ஆயிட்டேன். அதனால எனக்கு அம்மாவைப் பார்க்கவே குற்றவுணர்ச்சியா இருக்கு." என்ற கோபி, கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டான்.

"கோபி… எனக்கு என்னமோ தேவையில்லாமல் யோசிக்கிறதா தோணுது. எந்த அம்மாவும் பையனை தப்பா நினைக்க மாட்டாங்க. நீ உங்கப்பா பார்தத வேலையை, நீ பார்க்க மாட்டேன் என்று சொன்னதே அம்மாவுக்கு வருத்தம் தான் தெரியுமா?" என.

" நான் என்ன பண்ணுவேன் சத்யா? எனக்கு அந்த ஊரை நினைத்தாலே, கசப்பான நினைவுகள் தான் வருது. நான் அங்கேயே இருந்தால் மூச்சு முட்டி செத்துடுவேன். அதுவும் இல்லாமல் தம்பிக்கு ஏதாவது செய்ய வேண்டாமா… அதான் எனக்கு அந்த வேலை வேண்டாம்னு சொல்லிட்டேன்." என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.

"அதுவும் சரி தான். தம்பிக்கு அந்த வேலைக் கிடைத்தது நல்லது தான், ஆனால் அம்மாவையாவது வந்து அப்பப்ப பார்க்க வேண்டாமா? "

" ப்ச்… இன்னும் ஒரு வருஷத்துல படிப்பு முடிஞ்சிடும், நல்ல வேலையைத் தேடிட்டு, அப்புறம் அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துடுவேன்." என்றான் கோபி.

சத்யபிரகஷ்ஷோ, கோபியை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்திருந்தவன், அவனது மறுப்பில் ஏமாற்றத்துடன் ஊருக்கு கிளம்பினான்.

****************************

அங்கோ சுஜாதாவும், பக்கத்து வீட்டு ராஜாத்தியும் வெளியே போயிருந்தனர்.
ராஜாத்தியுடன் செல்வதால், எந்த வித தயக்கமும் இல்லாமல் சுஜாதாவை அனுப்பி வைத்தனர்.

சுஜாதாவோ,தான் சேர்த்து வைத்திருந்த காசை எடுத்துக் கொண்டு வந்தவள் அங்கிருந்த ஸ்டேஷனரி ஸ்டோரில் இருந்த வாழ்த்து அட்டைகளை புரட்டிப், புரட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த கடை முழுவதும் எங்கு திரும்பினாலும், மாணவ, மாணவியர் கூட்டம் அலைபாய்ந்தது.

ஆம் பொங்கல், தீபாவளி, புதுவருடப்பிறப்பு வந்து விட்டாலே போதும் மாணவ மாணவிகளுக்கு கொண்டாட்டம் அல்லவா. தங்களது உறவினர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார்கள்.

அவர்களுக்கு பிடித்த சினிமா நடிகர், நடிகைகளின் படமோ,இல்லை இயற்கை காட்சிகளான, ஆர்ப்பரிக்கும் அருவியோ, இல்லை அமைதியான பூக்களோ, இன்னும் இதே மாதிரி நிறைய சீனரி வாழ்த்து அட்டைகள் கிடைக்கும்.
இதுவரைக்கும் சுஜாதா யாருக்கும் அனுப்பியது இல்லை.

ஒவ்வொரு முறையும் வந்து ஆசையாக பார்த்து அந்த வாழ்த்து அட்டையை வருடி செல்வாளே ஒழிய, அனுப்புவதற்குரிய நெருங்கிய சொந்தக்காரர்கள் எல்லோரும் உள்ளூரிலேயே இருப்பதால் அவள் வாங்கியதில்லை.

இதோ இப்பொழுது தான் அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

அவளுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான இதய உதயனுக்காக தேடிக் கொண்டிருக்கிறாள்.

உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும், அவளது அபிமான எழுத்தாளருக்கு வாங்கி அனுப்பணும் என்று உறுதியில், தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் ஆசைப்பட்ட மாதிரி அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த ஒரு வாழ்த்து அட்டை கிடைத்து விட, அதை எடுத்தவள் தனது அருகில் நின்றிருந்த ராஜாத்தியிடம், " அக்கா… இது நல்லா இருக்கா?" என்று வினவ.

" சூப்பரா இருக்குடி. செம அமைதியான இடம். இந்த இடத்திலே நமக்கு பிடிச்ச கதை புக் இருந்துட்டா‍, உலகத்தையே மறந்துடலாம். சோறு தண்ணிக் கூட வேண்டாம்." என்று சொல்லி சிரிக்க.

" அதான் கா. எனக்கும் இதை ரொம்ப பிடிச்சிடுச்சு." என்றவள், கையோடு போஸ்ட் ஆஃபீஸ் சென்று, பத்திரிகையிலிருந்த அட்ரசுக்கு, அனுப்பி வைத்தாள்.

அப்பாவியான சுஜாதா, அவளது வீட்டு அட்ரஸ், அவளது உண்மையான பெயருடன் தான் அனுப்பி வைத்திருந்தாள்.

வீட்டுப்பறவையான அவள், தனது தயக்கத்தை விட்டொழித்து விட்டு, பொங்கல் வாழ்த்தட்டையை முதன் முதலாக இதய உதயனுக்கு அனுப்பியிருந்தாள்‌.

அதற்கான நன்றி கடிதம் வரும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவள் எழுத்தாளருக்கு அனுப்பியதையே மறந்துவிட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருந்தாள்.
************************
வழக்கம் போல் பொங்கலுக்கு சத்யபிரகாஷ் ஊருக்கு வரவும், அவளது ஆஸ்தான இடமான கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.

அவனை பார்க்கும் சந்தர்ப்பத்தை தவிர்த்தாள்.

சத்யபிரகாஷோ அவளைக் காணாது தவித்தான்.

எங்காவது அவள் தென்படுகிறாளா என்று எப்போதும், அவனது கண்கள் அலைப்பாய்ந்துக் கொண்டே இருக்கும்.
எப்போதாவது அவள், அகப்பட்டால் அதுவே அவனுக்கு பேரானந்தம்.
அவன் ஊருக்கு திரும்பி செல்லும் வரை சிறையில் இருப்பது போல் அறைக்குள் அடைத்திருந்த சுஜாதா, அதற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாள்.

*****************************

சென்னைக்கு சென்ற சத்யபிரகாஷ், அங்கு ஹாயாக படுத்துக் கொண்டிருந்த கோபியிடம்," எப்படி டா பொழுது போனது?"என்று வினவ.

எழுந்து அமர்ந்த கோபி மெத்தைக்கு அருகில் வைத்திருந்த கத்தையான லெட்டர், வாழ்த்தட்டைகளை எடுத்துக் காட்டியவன், " இதையெல்லாம் பார்த்து என் பொழுது போயிடுச்சு." என்றவன் கண் சிமிட்டினான்.

" எங்க காட்டு." என்றான் சத்யபிரகாஷ்.
கோபி ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட, சத்யபிரகாஷ் அதைப் பார்வையிட்டவன், அதைப் பற்றி சிரித்து பேசினான்.

திடீரென்று ஒரு வாழ்த்து அட்டையை மட்டும் கோபி மறைக்க…

" கோபி… எதை மறைக்கிற? காட்டு…" என்று அதை வாங்கியவன், அதில் உள்ள பெயரையும், அட்ரெஸையும் பார்த்து அதிர்ந்தவன், வேகமாக அதைப் பிரித்துப் பார்த்தான்.

அதில் இருந்த குண்டு, குண்டு கையெழுத்து அவனைப் பார்த்து சிரித்தது. அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யபிரகாஷ்.

" டேய் சத்யா. ஜஸ்ட் வாழ்த்து தெரிவிக்கத் தானே அனுப்பிருக்கா. அதை தப்பா எடுத்துக்காத." என்று கோபி கூற.

" நான் ஏன் தப்பா எடுத்துக்க போறேன்." என்று புன்னகைத்த சத்யபிரகாஷ், ஊரில் பார்த்த அவனது தம்பி, அம்மாவைப் பற்றிக் கூறி கோபியின் மனதை திசைத் திருப்பினான். கோபியும் அவர்களைப் பற்றிய பேச்சில் ஆழ்ந்தான்.

******************************
பொங்கல் முடிந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்திருக்க…

சுஜாதாவின் பெயருக்கு கடிதம் வந்தது.

நல்லவேளையாக அன்று அவளது விடுமுறை நாளான சனிக்கிழமையாக இருந்து, கடிதமும் அவள் இருக்கும் நேரத்தில் கையில் கிடைத்தது.

இதய உதயனிடமிருந்து வந்த பதில் கடிதம் அவளை ஆகாயத்தில் பறக்க வைத்தது.

அவள் போஸ்ட்மேனிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து," யாருக்கு லெட்டர் வந்திருக்கு?" என்று வீட்டில் கேட்டதற்கு,

" ராஜாத்தி அக்காவுக்கு…" என்றவள், அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு அங்கே ஓடியவள், தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டாள்.

அதற்கு பிறகு வார வாரம் கதைப் படித்ததும், அந்த கதையைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது பதில் அனுப்பி விடுவாள்.

இதய உதயனிடமிருந்து வரும் பதிலானது சனிக்கிழமை மட்டுமே வரும். அது ஏன் என்று அவள் யோசிக்கவே இல்லை.

சனிக்கிழமை போஸ்ட் மேன் வரும் நேரத்தில் காவல் காத்திருப்பாள்.
********************************
நாட்கள் விரைந்தோட…
சத்யபிரகாஷ் இன்ஜினியரிங் படிப்பில் இறுதி ஆண்டில் இருந்தான். கோபியோ மூன்றாண்டு டிகிரி முடித்து விட்டு, ஒரு கம்பெனியில் வேலைக்கு போய் கொண்டிருந்தான்.

இப்படியே வாழ்க்கை இலகுவாக போய்க் கொண்டிருக்க… அதில் புயல் வீசுவது போல, வீட்டிலிருந்து உடனே ஊருக்கு வர சொல்லி அவனுக்கு தந்தி வந்தது.

என்னவோ ஏதோ என்று பயந்து செல்ல…

அங்கோ உனக்கும், சுஜாதாவுக்கும் திருமண ஏற்பாடு செய்யலாம்னு இருக்கிறோம் என்ற தகவலைத் தெரிவித்தனர்.

அவனோ, சுஜாதாவை பார்க்க…
அவள் கண்கள் கலங்கி இருந்தது.

" என் படிப்பு முடியட்டும். இன்னும் ஒரு வருஷம் தான்." என்று தடுக்கப் பார்த்தான் சத்யபிரகாஷ்.

சுஜாதாவின் அம்மாவோ, " நான் தான் முன்னாடியே சொன்னேனே… சுஜா படிப்பு முடியவும் கல்யாணம் பண்ணிக்கணும், வேற எந்த சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்றேனே." என்று மதி, மனோகர் கல்யாணத்தப்போ நடந்ததை நினைவு படுத்தினார்.

" அது‌…" என்று சத்யபிரகாஷ் தடுமாற.

" உனக்கு சுஜாதாவை பிடிக்கலையா?" என்று கவலையாக கேட்க …

"அப்படி எல்லாம் இல்லத்தை." என்றான்.

"அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ."

" அத்தை… நான் எதுக்கு சொல்றேன்னா நான் வேலைக்கு போகணும். படிப்பு முடிஞ்சதும், எனக்கு வேலை கிடைச்சிடும் அதான் கொஞ்ச நாள் போகட்டும்." என்று தயங்கித் தயங்கிக் கூறினான்.

" அதுக்கென்ன சத்யா. இன்னைக்கேவா கல்யாணம் பண்ணப் போறோம். இப்போ பேச்ச ஆரம்பிச்சா தான், ஆறு மாசத்துக்குள்ள ஏற்பாடு பண்ண முடியும். அப்புறம் படிப்பை முடிச்சதும், சுஜாதாவைக் கூட்டிட்டு சென்னைக்கு போ. அதுவரைக்கும் சுஜாதா இங்கேயே இருக்கட்டும். நீயும் ஊரு பக்கம் வர்ற மாதிரி தெரியலை. அதான் தந்தி அனுப்புனோம்." என்றார் அவரது அப்பா.

"மதியோட இவளுக்கும் கல்யாணம் ஆகிருந்தா, இவளுக்கும் இப்போ புள்ளை இருந்திருக்கும்." என்று மதியைப் பார்த்துக் கொண்டே சுஜாதாவின் அம்மா கூற.
மதியோ புன்னகையுடன் எல்லோருக்கும் காஃபி எடுத்து வந்துக் கொடுத்தாள்.

அவள் பின்னே வால் பிடித்துக் கொண்டு வந்தான் அவளது பையன் மகிழன்.

" ஏய் குட்டிப் பையா. மாமா கிட்ட வாங்க." என்று அவனைத் தூக்கிய சத்யபிரகாஷ்,

" எப்படி மதி இருக்க? டாக்டர் என்ன சொல்றாங்க?" என்று நிறைமாதத்துடன் இருக்கும் தங்கையைப் பார்த்து வினவினான்.

" ஹான் நல்லா இருக்கேன் அண்ணா. இன்னும் ஒரு வாரத்தில் டெலிவரி ஆகிடுமாம்." என்று புன்னகைத்தாள்.

சுஜாதாவை விட ஒரு வயதே பெரியவளான தனது தங்கை, கையில் ஒன்றும் , வயிற்றில் ஒன்றுமாக
சுமந்திருக்க, அவளை வாஞ்சையாக பார்த்து சிரித்தான்.

பெரியவர்கள் திருமணத்தைப் பற்றி திட்டமிட, சத்யபிரகாஷோ காலேஜில் முக்கிய வகுப்பு இருக்கு என்று உடனே கிளம்பி விட்டான்.

கல்யாணத்திற்கு ஆறுமாத காலம் இருந்தது.

தையல் கிளாஸ் போகிறேன் என்று சுஜாதா வீட்டில் கேட்க…

அதெல்லாம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த குடும்பமும் தடை செய்தது. அவர்களுக்கு வாணி, பிரபுவின் ஞாபகம் வந்து போனது.

வழக்கம்போல் தனது மனக்குமுறலை எல்லாம் தனது அபிமான ரைட்டருக்கு எழுதி அனுப்பினாள்.

ஆறுதலாக வந்த பதிலில், அவளது மனம் அலைப்புறுத்தலை நிறுத்தி அமைதி அடைந்தது.

அந்த கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பாளோ என்று தெரியவில்லை.

இன்று கூட மீண்டும் ஒரு முறை எடுத்துப் படித்தாள்.

" அன்புள்ள தோழியே... கலங்கவேண்டாம். கனவை நிறைவேற்ற வீட்டில் தடை செய்தால், கைபிடிக்கும் கணவன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்." என்று அறிவுரை கூறுயிருந்தார்.

அந்த ஆறுதல் வார்த்தையில் அமைதியடைந்திருந்தவள், வீட்டில் வரும் உறவினர்களின் கேலியில் மீண்டும் அவளுக்கு கிலி பிடித்தது.

"கல்யாணம் முடிஞ்சதும், உன் நாத்தி மாதிரி பத்தாவது மாதத்திலேயே புள்ளை பெத்துக்கணும்." கேலி என்ற பெயரில் அவள் வயிற்றில் புளியை கரைத்தனர்.

நாளாக நாளாக பயத்திலேயே சுற்றியவள், ' ஒருவேளை வீட்டில் உள்ளவர்களை போல, சத்யபிரகாஷும் தன் கனவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன பண்ணுவது.'என்று கலங்கி போனாள்.

சுஜாதாவிற்கு கண் பார்ப்பதை கை செய்யும். ஸ்வெட்டர் பின்னுவது, கூடை பின்னுவது, அலங்கார பொருள் செய்வது என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பாள். அவளுக்கு தையல் தொழிலில் ஒரு வித ஆர்வம் உண்டு. அவளுடைய ஜாக்கெட் தைக்க கொடுக்கும் இடத்தில் அந்த டைலர் தைப்பதையே அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டே இருப்பாள்.

எப்படி அந்த சக்கரத்தை சுற்றுகிறார், எப்படி நிறுத்துகிறார் என்று எல்லாவற்றையும் பார்த்தே ஆர்வத்தை வளர்த்துக் கொண்டாள்.

வீட்டில் இருப்பவர்கள் தடை சொல்ல… அபிமான எழுத்தாளரின் பேச்சைக் கேட்டு அமைதி அடைந்தவள், இப்பொழுது மீண்டும் குழப்பமடைந்து, கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது எழுத்தாளருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள்.

அதன் பதிலுக்காக வீட்டிற்கும், வாசலுக்குமாக நடையாக நடந்தாள்.

ஆனால் அந்த கடிதம் தான் அவளை வந்து சேரவில்லை.

கல்யாணத்திற்கு நான்கு நாட்களே இருக்க…

ஊருக்கு பரபரப்புடன் கிளம்பினான் சத்யபிரகாஷ்.
கோபியையும் வந்தால் தான் ஆயிற்று என்று வற்புறுத்தி அழைத்தான்.
கோபியும் மனதில் என்ன நினைத்தானோ அவனும் கிளம்பி இருந்தான்.

கிளம்பும் போது பத்திரிக்கையிலிருந்து வந்த கடிதங்களையும் அள்ளிக் கொண்டு வந்தான்.

" டேய் இதெல்லாம் இப்போ எதுக்கு? இல்லை இங்கே பார்த்திடலாமா? இது ஒரு சுமையா எதற்கு எடுத்துட்டு போகணும்." என்றான்.

" பரவாயில்லை டா. டிரெயின்ல பொழுது போகணும்ல." என்றான் கோபி.

ஒரு வேளை சத்யபிரகாஷின் பேச்சைக் கேட்டு அங்கே படித்தி
ருந்தால்,

சுஜாதாவின் காதல் ஓலைக்குரிய, பதில் ஓலை அவளைச் சென்று அடைந்திருக்கும். விதி விளையாடியது. 
Top