• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 11

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 11

"என்ன பேசறீங்கனு புரிஞ்சி தான் பேசறீங்களா? வேணாங்க நான் எதாவது சொல்லிடுவேன்.. இப்ப அவங்க வீட்டுக்கு போறதுல அவங்களுக்கு என்ன பிரச்சனையாம்?" ஹனிகாவை மரியாதையாய் அழைக்க விருப்பம் இல்லை ஆனாலும் கணவனிடம் பேச்சுவார்த்தைக்காக திவ்யா கேட்க,

"ப்ச்! திவி புரியாம பேசாத! ம்மா அந்த அர்ஜுன் ஏமாத்திட்டு போய்ட்டானாம். அதுகூட பரவால்ல.. அவனால இவ அப்பாவும் சேர்ந்து ஏமாந்துருக்காங்க.. உண்மை தெரிஞ்சதும் எல்லாரையும் தூக்கிப் போட்டுட்டு வீட்டைவிட்டே வந்துட்டா.. இப்ப நான் போக சொன்னாலும் அவளுக்கு போறதுக்கு இடம் இல்லை ம்மா.."

கார்த்திக்கு எவ்வளவுக்கு எவ்வளவு அவள்மேல் கோபம் இருந்ததோ இப்போது அதே அளவு பரிதாபமும் வந்திருந்தது. அதுவும் திருந்தி அவள் வந்திருப்பதாய் நினைத்தவனுக்குள் இருக்கும் இளகிய மனம் முன்னால் காதலி என்றில்லாமல் ஒரு பெண் என்ற முறையில் அவளுக்காக யோசித்து பேசினான்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் திவி எனும்போது வானம் வரை பறந்து வருபவள் இந்த முறை கொஞ்சமும் அதை ஆராயாமல் கார்த்தி என்ற கணவனை பார்வையால் பொசுக்கியபடி நின்றாள். இவள் கவனிக்காவிட்டாலும் அந்த திவி என்ற அழைப்பை மனதுக்குள் குறித்துக் கொள்ள தவறவில்லை ஹனிகா.

"டேய் டேய்! மண்டைல கொஞ்சமாவது எதாவது இருக்கா உனக்கு? நீ பாவப்படுறது இரக்கப்படுறதுலாம் இருக்கட்டும்... முதல்ல இவளுக்கு பதில் சொல்லு..." என திவ்யாவை முன்நிறுத்தியவர் "கல்யாணம் ஆனவன் நீ... இப்ப ஒரு பொண்ணை கொண்டு வந்து பிரண்ட்டுன்னு வீட்ல தங்கவச்சா வெளில சந்தனம் மாதிரி மணக்கும் டா நம்ம வீடு" கலா புரிவது போல எடுத்து சொல்ல, கொஞ்சம் யோசிக்கும் நேரம் ஹனிகா அவனைக் கண்டவள் அவனை யோசிக்க விடாது தன் வேலையை தொடர்ந்தாள்.

"ஆண்ட்டி! நீங்க என்ன நினைக்குறிங்கனு புரியுது.. ஆனா இப்ப எனக்குன்னு கார்த்தியை தவிர யாருமே இல்ல ஆண்ட்டி" என சொல்ல இப்போது காதில் புகைவரவே ஆரம்பித்துவிட்டது திவ்யாவிற்கு.

அதேநேரம் ஹனிகா பேச்சை கேட்ட கார்த்திக்கு சற்றுநேரம்முன் அறையில் பிரியசகி என்ற பெயருக்கே திவ்யாவிற்குள் எழுந்த போஸ்ஸசிவ் இப்போது ஞாபகம் வர ஹனிகா சொல்வதை அவளால் எப்படி ஏற்று கொள்ள முடியும் என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"எனக்கு நீ சொல்றது நல்லா புரியுது ஹனிகா.. ஆனா இப்ப நீ நினைக்குற மாதிரி இங்கே தங்கிட முடியாது.. அது சரியாவும் வராது.. உன் பிரண்ட்டுங்க யார் வீடாவது இங்கே எங்க இருக்குன்னு சொல்லு கார்த்தி கொண்டு வந்து ட்ராப் பண்ணுவான்" அவ்வளவு தான் என்பதை போல கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் தன் கவனத்தை கலா பதிக்க,

"பரவால்ல ஆன்ட்டி! எனக்கு இந்த ஊர்ல கார்த்தியை தவிர யாரும் தெரியாது.. இனி நானே பார்த்துக்குறேன்" கண்களை துடைத்துக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் வெளியே நடக்க அவள் தயாராக,

"ப்ச்! ம்மா ஒரு ரெண்டு நாள் இங்கே அவ தங்குறதுல என்ன வந்துட போகுது? அவங்க மாமா ஒருத்தர் பாண்டிச்சேரில இருக்குறதா சொல்லியிருக்கா.. அவங்ககிட்ட பேசிட்டு நாளைக்கு முடிவு பண்ணலாம்.. இந்த நேரத்துல இப்ப எங்கேயும் போக வேண்டாம். இன்னைக்கு இங்கேயே தங்கட்டும் விடுங்க" கார்த்தியும் அதே குரலில் கூற,

"கார்த்தி!..." என ஜெகதீசன் ஏதோ சொல்லவர,

"அப்ப என்னை கொண்டு என் அம்மா வீட்ல விட்டுடுங்க" என்றாள் யாரும் எதிர்பாராமல் திவ்யா.

"அடியேய்! பேசாம இரு டி... இவ ஒருத்தி.. நிலவரம் புரியாம காமெடி பண்ணிக்கிட்டு..." கலா அவள் காதில் சொல்ல, கார்த்தியும் திவ்யாவை முறைத்து நின்றான்.

"திவ்யா என்கூட வா.." என கார்த்தி அவள் கைப்பிடித்து இழுக்க, நகராமல் நின்றாள் அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

"ப்ச்! வானு சொல்றேன்ல" என்றவன் இழுத்துக் கொண்டு தன் அறைக்கு செல்ல, அவர்கள் பின்னேயே செல்ல இருந்த ஹனிகா கைகளை பிடித்துக் கொண்டார் கலா.

"நீ எங்க போற? சாப்பிடாம தானே வந்திருப்ப? உட்காரு.. புருஷன் பொண்டாட்டி அடிச்சிக்குவாங்க.. அப்புறம் கொஞ்சிக்குவாங்க.. நமக்கெதுக்கு?" பேசிக் கொண்டே அவர் பரிமாற,

"கிழவி... உன்னை!..." என பல்லை கடித்த ஹனிகாவிற்கு வேறெதுவும் செய்ய முடியவில்லை.

"விடுங்க என்னை... நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.. அதெப்படி சொந்த அப்பாவை தூக்கி எரிஞ்சுட்டு வந்து என் கார்த்தினு என் முன்னாடி சொல்றவளை நான் வீட்டுக்குள்ள விட்டு அழகு பார்க்கணுமா? முடியாது.. முடிஞ்சது முடிஞ்சது தான்... இப்ப நான் தான் உங்களுக்கு எல்லாம்.. என்னால எல்லாம் அவ இங்கே இருக்கறதை சகிச்சுட்டு இருக்க முடியாது"

கோபத்தில் கார்த்தியிடம் உரிமையாய் உரிமைக்காக திவ்யா கத்திக் கொண்டிருக்க பேசவே தெரியாது என இவளை கூறிய இவள் அன்னை நினைவு அவனிடம்.

இவனை பேச வைக்கவே பேச ஆரம்பித்தவள் இவன் அன்னையுடன் சேர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறாள் அவர் இருக்கும் தைரியத்தில்.

"ஏன் இப்படி பிகேவ் பண்ற திவி? நான் என்ன... சரிவிடு.. இப்ப அவளுக்குனு யாரும் இல்லை.. ஏதோ ஒரு நம்பிக்கைல இந்த நேரத்துல என்னை தேடி வந்திருக்கா.. என்னை என்ன பண்ண சொல்ற? காலையில நானே ஏதாவது பண்றேன். இப்ப மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" அவன் சொல்லவும் இவள் பல்ஸ் எகிறியது தான் மிச்சம்.

"அய்யோ நான் ஏன் யார் யாரையோ அட்ஜஸ்ட் பண்ணி போகணும்? என்னால முடியாது.. நானும் அதைத்தான் கேட்குறேன்.. எந்த தைரியத்துல உங்களை தேடி இந்த நேரத்துல வரணும்? எனக்கு பயமா இருக்கு.. நீங்க தான் முடிவு பண்ணிட்டிங்களே என்னவோ பண்ணிக்கோங்க.. என்னை அதுவரை என் வீட்ல கொண்டு விட்டுடுங்க" என்றவள் முகத்தில் அவ்வளவு கவலை.. கலவரம்.. பயம்.

இன்னும் நாலு வார்த்தை இவன் பேசினால் அழுதிடுவாள் போல.. பின் அவன் பேசுவது அனைத்தும் இன்னொருத்திக்காக எனும்போது இவளும் என்ன தான் செய்வாள்.

"ஹ்ம்ம் அப்ப என்மேல அவ்வளவு தான் நம்பிக்கை! அப்படிதானே?" - கார்த்தி.

'ஆமா நம்புற அளவுக்கு தான் இவ்வளவு நாளும் பேசி சிரிச்சீங்க..' நினைத்தவள் அமைதியாய் நிற்க, இவனும் அவள் மௌனத்தில் சில நொடிகள் அப்படியே நின்றான்.

அதற்குமேல் அவனிடம் பேசி எல்லாம் ஜெயிக்க முடியும் என்று தோன்றவில்லை அவளுக்கு.

"நான் டிரஸ் பேக் பண்றேன்" என்றவள் நகர போக, அதற்குமேல் அவனும் அவளை விடுவதாய் இல்லை.

என்ன நடந்தது என அவள் உணரும் முன்பே அவன் அணைப்பில் இவள் இருக்க, நொடியில் அவளின் உதடுகளையும் சிறை செய்திருந்தான் திவியின் கார்த்தி.

இதுநாள் வரை இவனுக்கு அவளை நெருங்கிடவெல்லாம் தோன்றியதில்லை. அவளும் அதை எதிர்பார்த்தாளா என தெரியவில்லை. இருவரும் சிறிதாய் மனம்விட்டு பேசினாலே மகிழ்ச்சி கொள்ளும் ரகம் தான்.

ஆனால் அவள் இவனை நம்பிட மறுக்கும் காரணம் இவன் அவளை ஏற்று கொண்டதாய் இதுவரை சொல்லாதிருந்தது தானே? இவனுமே அதை எல்லாம் பெரிதாய் நினைத்திருப்பானா என்ன?

இப்போது அவளுக்கு நம்பிக்கை கொடுத்தே தீர வேண்டும். அதை வாய் வார்த்தையால் எல்லாம் இவனுக்கு சொல்ல முடியும் என தோன்றவில்லை.

அவனுக்கும் எந்த நிமிடம் இவள் தான் அனைத்தும் என முடிவுக்கு வந்தான் என தெரியாது தான்.. ஆனால் தன் முடிவை தனக்குள் அவள் மட்டும் இருக்கும் உணர்வை அவளுக்கும் உணர்த்த வேறு என்ன செய்ய என தெரியவில்லை.

அணைப்பில் அதிர்ந்து நின்றவளுக்கு அவனின் முதல் முத்தம் இன்னும் அதிர்வை கொடுக்க விழி விரித்தவள் ஸ்டச்யூவாக மாறிப் போயிருந்தாள்.

காதலை உணர்த்துகிறானா இல்லை காதலை அவளுக்கு கடத்துகிறானா? ஏதோ வேகத்தில் ஆரம்பித்தவனுக்கு முடித்து வைக்க மனமில்லை.

சில நிமிடங்களுக்கு பின் அவளை தன்னில் இருந்து பிரித்தவன் அவள் முகத்தையும் பார்க்காமல் திரும்பிக் கொண்டான். அவளுக்குமே அதே நிலை தான்.

இனி திவியை பற்றி கவலை இல்லை. அவனுக்கு தெரியும் இனி அவளின் செயல்கள் எப்படி இருக்கும் என்று. அதனாலேயே ஒரு புன்னகையுடன் அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

"என்ன ஆன்ட்டி இன்னும் காணும் அவங்களை?" ஹனிகா கேட்க,

"தூங்கிட்டாங்களோ என்னவோ! நான் அவங்க ரூம்க்கு போய் சாப்பாடு குடுத்துக்குறேன்.. எப்படியும் அவளை சமாதானம் படுத்திடுவான். அவ ஒரு லூசு! இவன் சிரிச்சாலே போதும் அவளுக்கு.. வெளில தான் வீராப்பு எல்லாம்.. நீ போய் அந்த ரூம்ல தூங்கு" கடுப்பாய் தான் இருந்தது கலாவிற்கு. ஹனிகாவின் செயல்கள் சுத்தமாய் பிடிக்கவில்லை.

"இல்ல இல்ல ஆன்ட்டி கார்த்தி வரட்டும்" அவளும் சளைக்காமல் பதில் சொல்ல, ஜெகதீசனுக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

கார்த்தி வெளியே வரவும் "கார்த்தி" என்று ஹனிகா அவன் அருகே வர, அவளை தாண்டி வந்தவன் "சாப்பிட்டியா ஹனிகா?" என்றவாரே சாப்பிட அமர்ந்தான். அதில் முகம் கருத்தவள் "ம்ம் ஆச்சு" என்றாள் முகம் சுருங்கி. பரமானந்தமாய் போனது கலாவிற்கு.

"திவி எங்கே டா?" என்றவருக்கு 'கோச்சிக்கிட்டு சாப்பிடாம தூங்கியிருப்பாளோ?' என்ற சந்தேகம் வந்த நொடி 'ச்ச! ச்ச! அவ அப்படிபட்டவ இல்லையே?' என்றும் நினைக்க,

"வருவா மா" என்றவன் முகத்தில் எதுவும் காட்டவில்லை என்றாலும் இன்னும் மனதில் ஒரு சில்லென்ற காற்று வீச தான் செய்தது.

'அம்மாகிட்ட இன்னைக்கு திவி வசமா மாட்ட போறா' தனக்கே இப்படியென்றால் அனைத்தையும் முகத்தில் காட்டும் மனைவியை ஒரு வாரமாய் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான்.

அதே போல தான் இருந்தது வெளியே வந்த திவ்யாவின் முகம். அது கலா பார்க்கும் முன்பே அவள் முகத்தில் இருந்த 1000 வாட்ஸ் வெளிச்சத்தை ஹனிகா கண்டுகொண்டாள்.

ஆனால் அவளுக்கு கலா அளவிற்கு புத்தி பத்தவில்லை போல. ஜெகதீசனுக்கும் தான்.

"என்னம்மா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே! அம்மா வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம்.. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்" ஜெகதீசன் சொல்ல,

"சரி மாமா" என்றவளை மேலிருந்து கீழாக கலா ஒரு பார்வை பார்க்க, ஈஈஈ என்று சிரித்து வைத்தவளை பார்த்து மனதுக்குள் சந்தோஷம் கொண்டாலும் வெளியில் இன்னும் அதே நக்கல் பார்வை தான் கலாவிற்கு.

கார்த்திக்கு அம்மா மனைவி இருவரையும் பார்த்து சிரிப்பு வந்தாலும் மனைவி முகம் பார்த்து என்றும் இல்லாத வண்ணமாய் இன்று ஆணுக்கே ஆன சிறு வெட்கமும் கூட.

எல்லாம் சரி என்பதை அப்படியே விட முடியாதபடி தனியே தூங்குவதை அடுத்த பிரச்சனையாய் கொண்டு வந்தாள் ஹனிகா.

அதற்குமேல் கலா சும்மா இருக்க வாய்ப்பில்லையே! இனி கலாவே பார்த்துக் கொள்வார் அவளை.

காதல் தொடரும்..
 
Top