• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 20 (A)

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 20 (A)

"ஆமா ஏத்துப்பேன்" என்றவளை அவன் அதிர்ச்சி கலந்த வருத்தம் மேலோங்க பார்க்க,

"எனக்கு என் அம்மா பத்தியும் தெரியும்.. அண்ட் என்னோட புகழ் பத்தியும் தெரியும்.. புகழ் ரிச்னெஸ்ஸை விரும்புற ஆளா இருக்கலாம்.. அதுக்காக பழகின பொண்ணை ஏமாத்துற ஆள் இல்லை.. உன் அம்மா அப்பா என் அம்மாவை கன்வின்ஸ் பண்ணிடுவாங்கனு ஹன்ட்ரேட் பெர்ஸன்ட் நான் நம்புறேன்.. இப்ப என்ன சொல்ற?"

அவன் பார்வைக்கு அவள் முழு விளக்கம் கொடுக்க, தன்னை இந்த அளவுக்கு புரிந்து வைத்திருப்பவளை நினைத்து இன்னும் இன்னும் காதல் கூட பார்த்து நின்றான் பெருமையாய்.

"அப்புறம்! சிஸ்டர் வீட்டுக்கு போறதா சொன்ன? என்ன சொன்னாங்க என்னோட நாத்தனார்?" கிண்டலாய் அவள் கேட்க, சிரிப்புடன் பதில் கூறினான் புகழ்.

"சீனியர்கிட்ட பேசினியா?"

"ம்ஹ்ம் இல்ல சகி.. என்னவோ கார்த்திகிட்ட பேசவே வர மாட்டுது"

"டேய்!"

"சகிம்மா! தப்பா நினைக்காத.. நிஜமாவே சொல்றேன் என்னவோ ஒரு கேப்.. அதை எப்படி ஃபில் பண்றதுன்னு தெரில டா"

"நான் சொல்லவா? உனக்கு ஹெட்வெயிட் கூடி போச்சு.. அவங்க ஜஸ்ட் எம்பிளாய் தான் நீங்க பெரிய அப்பாடக்கர் ஆச்சே.. அதான் அவங்ககிட்ட பேச வரல.. ஆனா அவருகிட்ட ஜூனியரா இருக்குற என்கிட்ட மட்டும் வழிய வருது இல்ல" கோபமாய் தான் கேட்டாள் சகி.

"அய்யோ இல்ல டி.. முதல்ல அப்படி நினச்சேன் தான்.. ஆனா இப்பலாம் அப்படி இல்ல.. எப்ப அப்பாகிட்ட எனக்காக பேசினப்போவே எனக்கும் கார்த்தியை பிடிக்கும்.. ஆனா எப்படி என் சிஸ்டர் ஹஸ்பண்ட்டா அவன்கிட்ட சாரி அவர்கிட்ட கான்வெர்சேஷன் ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியல டி"

"ம்ம் அதுக்கு பேர் தான் மண்டகனம்னு சொன்னேன்"

"ப்ச்! சகிம்மா.. இப்ப நான் எவ்வளவு ஆசையா கிளம்பி வந்திரன் தெரியுமா? இப்ப தான் இதை எல்லாம் பேசணுமா?" கெஞ்சலாகவே கேட்டான்.

"ஹேய் அது உங்க அப்பா கார் மாதிரி இருக்குதுல்ல?" பேச்சை மாற்றி தூரமாய் கைகாட்டி சகி சொல்ல,

"அச்சச்சோ!" என்றவன் அங்கிருந்த மரத்திற்கு பின்னே வேகவேகமாய் ஓடி ஒளிந்தான்.

ஒளிந்த சில நொடிகளிலேயே சகியின் சிரிப்பு சத்தம் பலமாய் கேட்க முதலில் விழித்தவன் பின் அவளின் விளையாட்டு புரிந்து ஒரு முறைப்புடன் வெளியே வந்தான்.

"இது தான் நீ என்னை நல்லா பார்த்துக்குற லட்சணமா? இதுல நாளைக்கு பூ வைக்க வர்ராங்க.. நான் உனக்காக என்ன வேணா பண்ணுவேன்னு பில்டப் வேற.. ஏன்டா கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா? அப்பா தானே? எல்லாம் அவருக்கு தெரியுமே.. பார்த்தால் பார்க்கட்டும்னு நினைக்க மாட்டியா?" சகி வாயில் வந்த வார்த்தைகளால் கழுவி கழுவி ஊற்ற,

"ச்ச! நீ என் மூடையே ஸ்பாயில் பண்ணிட்ட.. போ நான் கிளம்புறேன்" என்றவன் கோபமாய் முகத்தை வைத்திருந்தாலும் அவன் பேசியது சிறு குழந்தை பேசியதை போல தான் இருந்தது.

"போ போ! நான் உன்னை தடுக்கவெல்லாம் மாட்டேன்.. நான் சொன்ன மாதிரி சீக்கிரம் உன் மாமாகிட்ட அதான் உன் சிஸ்டர் ஹஸ்பண்ட்கிட்ட பேசிட்டு அப்புறமா உன் சீனை என்கிட்ட காட்டு" என்று சத்தமாய் கூறியவள் அவனுக்கு எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தாள்.

இப்படித்தான் முடிந்தது அந்த நாள். ஆனாலும் மேனுஃபேக்ட்சரிங் டிஃபேக்ட் என்பது போல பிறக்கும் போது கூடவே பிறந்த சுபாவத்தை அழிப்பது என்ன எளிதா? தன் வீட்டிற்கு வந்து தன்னுடன் இருக்கும் போது இன்னும் முழுதாய் புரிந்து கொள்வாள் என்று தான் நினைத்துக் கொண்டான் புகழ்.

ஆக மொத்தத்தில் நான் மாற மாட்டேன் என்பது அவனது எண்ணம்.

அடுத்த நாள் கலா கார்த்தியையும் திவியையும் மட்டுமே பூ வைக்க அனுப்பி வைக்கலாம் என முடிவு செய்து அதை கார்த்தியிடம் சொல்ல அவனோ அதை திவியிடம் சொல்ல, சட்டமாய் டேபிள் அருகே அமர்ந்து விட்டாள் திவ்யா.

"என்ன தான் டி வேணும் உனக்கு? நேரமாச்சு! கிளம்பிட்டு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க?" என கலா கேட்க, கார்த்தி தலையிடாமல் ஓரமாய் தன் தந்தை அருகே நின்றான்.

"நான் போகல" பட்டென்று அவள் சொல்ல,

"லூசாடி நீ?" என்றதும்,

"ஆமா! நான் தனியா போனா எங்கம்மா உங்களை தான் கேட்பாங்க"

"நாங்க தான் நிச்சயத்துக்கு வர்றோம்னு சொல்றோமே! நீ இப்ப கிளம்பு திவி.. அண்ணி கேட்டா நான் சொல்லிக்குறேன்" இதமாய் கலா சொல்ல,

"கலா அதான் திவ்யா இவ்வளவு சொல்றா இல்ல.. நாமளும் தான் போனா என்ன?" என்றார் ஜெகதீசன்.

"அத்தை! நீங்க எதுக்காக இப்ப வர மாட்டேன்னு சொல்றிங்க? அண்ணன் ஏதாவது சொன்னானா?" திவியும் இப்படி கேட்க,

"ப்ச்! ம்மா இப்ப நீங்க கிளம்பலைனா இவ கற்பனை குதிரை தறி கெட்டு ஓடும். வாங்க மா போய்ட்டு வரலாம்" என்றான் கார்த்தியும்.

"அடடா! திவி சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்களே நினச்சேன்.. வேற ஒன்னும் இல்ல போதுமா.. சரி சரி! அஞ்சே நிமிஷம் இருங்க இப்ப வந்துடுறேன்" என்றவர் அனைவரின் சொல்லையும் ஏற்று சென்று புடவையை மாற்றி வந்தார்.

"அம்மா சொன்னது உங்களுக்கு மறந்து போச்சா அத்தை? பூ வைக்க நாம மட்டும் தான் போறோம்.. நிச்சயத்துக்கு தான் எல்லாரும் வருவாங்க.. அதுமட்டும் இல்ல.. நாம தானே அத்தை இனி அவங்களுக்கு முதல் சொந்தம்? மத்தவங்க எல்லாம் அப்புறம் தான். எனக்கும் சரி அம்மா அப்பாக்கும் சரி நீங்க தான் முதல்ல அதை நியாபகம் வச்சுக்கோங்க" திவி தீவிரமாய் தெளிவாய் சொல்ல, அவ்வளவு விரிந்த புன்னகை கார்த்தி முகத்தில்.

"அம்மா தாயே! இனி நீ வான்னு சொன்னா வர்றேன்.. நில்லுன்னு சொன்னா நிக்குறேன்.. போதுமா.. தெரியாமல் சொல்லிட்டேன்.. வாங்க போகலாம்" என்ற கலா,

"பொண்டாட்டி அம்மாவை பேசுறதை எப்படி ஈஈஈஈ னு நின்னு கேட்டுட்டு இருக்குறான் பாரேன்" என அனைவர் காதிலும் விழும்படியே முனுமுனுத்து முதலில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெகதீசன் செல்ல,

"தேங்க் யூ" என கார்த்தி திவியிடம் கூறினான்.

"ஏன்?" திவி கேட்க,

"சும்மா தான் சொல்லணும் தோணுச்சு"

"அதான் ஏன்?" மீண்டும் அவள் கேட்க,

"நிஜமா தெரியல.. அம்மாவை நீ கன்வின்ஸ் பண்ணின விதம் புடிச்சிருக்கு.. அண்ட் நான் என்னோட வைஃப் இப்படி தான் இருக்கனும்னு எல்லாம் நினைச்சது இல்ல.. அதனாலயோ என்னவோ நீ பண்றது எல்லாம் எனக்கு ஒருமாதிரி புதுசா நல்லா இருக்கு"

"ஹப்பா! எவ்வளவு நீளமா பேசிட்டிங்க?" என அவனை கிண்டல் செய்தவள்

"வாழ போற இடத்துல அந்த பொண்ணை எப்படி அந்த வீட்டுல நடத்துறாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி தான் அந்த பொண்ணோட பழக்கமும் இருக்கும்.. சோ என்னோட பழக்கம் அத்தைகிட்ட இருந்து தான் வந்தது. தேங்க்ஸ் டு அத்தை" என்று சொல்லி கண் சிமிட்டி அவனோடு ஒன்றாய் வெளியே வந்தாள்.

கார்த்தி குடும்பம் சண்முகம் வீட்டிற்கு சென்று அங்கிருந்து நேராய் ஐவருமாய் சகியின் வீட்டிற்கு சென்றனர்.

பார்த்ததும் மனதில் ஒட்டும் அளவிற்கு புகழின் குடும்பத்தை பிடித்துப் போனது சகியின் அன்னைக்கு.

அதைவிட அதிகமாய் சகியை பார்த்ததும் மனம் நிறைந்து போன உணர்வு புகழ் பெற்றோர்க்கு.

திவ்யா பேசவே மாட்டாள் என்கின்ற கூற்றை இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தகர்த்துக் கொண்டிருக்க, சகியின் இனிதாய் பழகும் முறையான பேச்சு அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுத்தது.

இப்படி இரு குடும்பங்களும் பார்த்ததும் ஒன்றாகிவிட பூ வைக்கும் விழா இனிதாய் நடந்து முடிந்து திருமண நிச்சய நாளும் குறித்து இப்போது அதற்கான மண்டபத்தில் இருக்கின்றனர்.

கார்த்திக் மாப்பிள்ளையின் அறையில் புன்னகையுடன் நுழைந்து அதே புன்னகையுடன் புகழைத் திரும்பிப் பார்க்க, அவனும் இவனை தான் பார்த்தான்.

'நம்மளை பார்த்து தான் இப்படி சிரிக்கிறனா?' என்று யோசித்த புகழ் 'பதிலுக்கு நாமளும் சிரிக்கணுமோ' என்று கூட யோசிக்க அதற்குள் கார்த்தி மீண்டுவிட்டான்.

எதற்கும் புகழ் சாம்பிரதாயமாய் சிரித்தவனுக்கு அன்று சகி சொல்லிப் போனதும் கண்முன் வர அவனே பேச்சைத் தொடங்கினான்.

"திவி எங்கே?" என்று.

'பார்றா!' என்று மனதினுள் சொல்லிக் கொண்டாலும் "இப்ப தான் அத்தை பொண்ணு ரூம்க்கு அனுப்பி வச்சாங்க" என்று சொல்ல,

'ஓஹ் அம்மா சொன்னதால தான் வந்திருக்கானா?' என்று நினைத்துக் கொண்டான்.

அதன்பின் கூடவே நின்று மாப்பிள்ளை தோழனாய் கார்த்தி புகழுடனே மேடையிலும் இருக்க, திவியும் மணப்பெண் தோழியாய் சகி அருகிலேயே இருந்தாள்.

புகழ் - சகியின் நிச்சயம் நல்லபடியாய் அந்த மாலை நேரத்தில் நடைபெற, இந்த புது ஜோடிகளை விட கார்த்தி- திவியின் கண் ஜாடை முதல் அருகருகே நின்று ஒன்றுமே இல்லாமல் தலையாட்டிக் கொள்வதும் கூப்பிடாமலே கூப்பிட்டியா என கேட்டுக்கொள்வதும் பேச வார்த்தை இல்லாவிட்டாலும் ஏதோ ஒன்றை பேசி சொதப்புவதுமாய் அழகாய் முடிந்தது.

இரவு பத்து மணிக்கு மேல் அனைவரும் சாவகாசமாய் மண்டபத்தின் முகப்பில் அமர்ந்து கதை பேச திவியும் சகியின் அருகில் அமர்ந்திருந்தாள்.

கார்த்தி நீண்ட நேரமாய் ஏதோ யோசனையில் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவனை அவ்வப்போது திவியும் என்னவாய் இருக்கும் என பார்த்து வைக்க,

கலாவுமே "இவனுக்கு என்னவாம்?" என்று பார்த்துக் கொண்டு தான் இருந்தவர் பின் தன் கணவனை அவன் அருகில் அனுப்பி வைத்தார்.

"என்னடா ரொம்ப நேரமா நடக்குறியாம்?" என ஜெகதீசன் வந்து கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா சும்மா தான்" என்றவன் திரும்பி திவி இருக்கும் இடத்தை பார்த்தான்.

"சரி சாப்பிட்டியா?" அவர் கேட்க,

"ஆச்சு பா.. மாப்பிள்ளை பொண்ணு கூடவே நாங்களும் சாப்பிட்டோம்" என்று கூறிவிட,

"சரி டா.. பார்க்க டையார்டா தெரியுற.. நீ வேணா ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு நான் அப்புறமா வரேன்" என்றார்.

"இல்லப்பா பார்வையில்ல" என்றவனுக்கு எப்படி இவர்களிடம் சொல்வது என்றே தெரியவில்லை.

"அப்ப கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்ஸா உட்காரு டா.. ஏன் இப்படி நடந்துட்டே இருக்குற? காலையிலேயேயும் நீ தான் புகழ் கூடவே நிற்கணும்"

"சரிப்பா" என்றவன் அப்போது தான் அனைவரும் எழுந்து வருவதை பார்த்தான்.

"என்னங்க சொல்லறான்?" கலா கேட்க, திவியும் அவர்கள் அருகே வந்து நின்றாள்.

"ஒன்னும் இல்ல தூங்க போனு தான் சொல்லிட்டு இருந்தேன்" என்று அவர் சொல்ல,

"வாங்க மாப்பிள்ளை தூங்க போலாம்.. காலையிலே சீக்கிரம் எழுந்துக்கணுமே!" சண்முகம் சொல்ல,

"ஹான் மாமா!" என்றவன் திரும்பி திவியை பார்க்க, அவன் முகமே ஏதோ போல இருந்தது. என்ன என அவள் கண்களால் கேட்க இவனால் சொல்லத்தான் முடியவில்லை.

"சரி நீங்க எல்லாரும் வாங்க.." என பெண்களை சுகுணா அழைக்க,

"அத்தை ஒரு நிமிஷம்" என நிறுத்தினான் கார்த்தி.

தொடரும்..
 
Top