• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 20

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 20

"அய்யோ! என்ன கார்த்தி? பொது இடத்துல இப்படியா இழுத்துட்டு வருவீங்க?" திவி கைகளை தேய்த்துக் கொண்டே கேட்டாள்.

"இது பொது இடமா?" கிண்டலாய் அவள் கைகளை காண்பித்து கேட்டான் கார்த்தி.

"ஹப்பா! அம்மாக்கு புள்ள தப்பாம இருக்கிங்க.. நான் இந்த மண்டபத்தை சொன்னேன்"

"ம்ம்! தெரியுதுல்ல? மண்டபம் பொது இடம்னு தெரிஞ்சு தான என்னை இவ்வளவு நேரமா சைட் அடிச்சுட்டு இருந்த?"

"ஹய்யடா! ஆசை தான் சார்க்கு.. எனக்கு வேற வேலை இல்லை பாருங்க" திவி தன்னை கண்டு கொண்டானே என வெட்கம் கொண்டாலும் அதை மறைத்து சொல்ல,

"ஆஹான்! அப்ப என் அம்மா உன்னை கூப்பிட்டப்பவும் நீ கண்டுக்காமல் என்னையே பார்த்துட்டு இருந்தியே.. அது தான் உன் வேலையா?" புன்னகையை உதட்டுக்குள் அதக்கிக் கொண்டு கார்த்தி சொல்ல,

"அய்யயோ! அத்தை கூப்பிட்டாங்களா? போச்சு! சும்மாவே என்னை கலாய்ச்சு தள்ளுவாங்க.. இருங்க நான் போய் என்னனு கேட்டுட்டு வர்றேன்" என்றவள் தன் அத்தை இருக்கும் பக்கமாய் ஓட,

"ஏய்! ஏய்!" என்ற கார்த்தியின் அழைப்புக்கு அவள் அங்கே இல்லை.

"கூப்பிட்டிங்களா அத்தை?" கார்த்தியிடம் இருந்து ஓடி வந்தவள் நேராய் கலா மீது மோதி நின்று கேட்க, அவளை மேலும் கீழுமாய் பார்த்து வைத்தார் கலா. அருகே சுகுணா, சண்முகம் இருவரும்.

"ஏன் டி இப்படி ஓடி வர்ற? மெதுவா வந்தா தான் என்ன?" சுகுணா கேட்க, மூச்சு வாங்கி நின்றாள் திவி.

"இல்ல அத்தை கூப்பிட்டாங்களா அதான்" திவி சொல்ல,

"நான் உன்னை எப்ப கூப்பிட்டேன்?" சந்தேகத்தோடே கேட்டார் கலா.

"அது... அது இப்ப தான்.. டைனிங் ஹால்ல வச்சு..." என்றவளுக்கு இப்போதுதான் கார்த்தியின் மேல் சந்தேகம் வந்தது.

"என்ன திவி உளறுற? கலா இப்ப தான் பொண்ணு ரூம்ல இருந்து வெளில வர்றா" என்றார் சுகுணா.

"என்னம்மா? எதாவது பிரச்சனையா? ஏன் இப்படி முகம் எல்லாம் வேர்த்து இப்படி ஓடி வந்து சம்பந்தம் இல்லாமல் கேட்குற?" சண்முகம் புரியாமல் கேட்க, திவியின் கண்களோ தன்னை மாட்டிவிட்டவனை தேடியது.

அவள் பின்னோடு மெதுவாய் நடந்து வந்தவன் ஒரு சிரிப்போடே சண்முகம் அருகில் வந்து அப்போது நிற்க, கலா இருவரையும் காண தவறவில்லை.

"ஏன் டி உங்களுக்கு ஓடி புடிச்சி விளையாட இந்த மண்டபமும் கோர்த்து விட நானும் தான் கிடைச்சோமா? அப்படி புருஷன் பொண்டாட்டி விளையாடனும்னா டீசண்டா வீட்ல இருந்து மெதுவா கிளம்பி இருக்க வேண்டியது தானே? என்னை வச்சு விளையாட நான் என்ன தொக்கா உங்களுக்கு? என் புருஷன கூப்பிட்டேன்னு வையி..." கலா திவியின் காதருகே சொல்ல, கார்த்தி நல்ல பிள்ளையாய் சண்முகத்துடன் பேசிக் கொண்டிருந்தான் ஓரப் பார்வையை மட்டும் திவியின் மேல் வைத்து.

"என்ன கலா? என்னவாம்?" - சுகுணா.

"ம்ம் உங்க மகளுக்கு கொஞ்ச நாளா கட்டம் சரியில்ல அண்ணி.. சுத்த வேண்டிய இடத்தை சுத்தாம, சுத்த விட வேண்டியவனையும் சுத்த விடாமல் இப்படி தான் மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி சுத்தி வர்றா.. என்னனு தான் இவளை எல்லாம் சமாளிக்க போறோமோ நானும் என் புள்ளையும்"

இவர்கள் பேச்சு திவியை பார்த்தவாறே இப்படி இருக்க, அவளோ பயங்கரமாய் அனைவரின் முன்பும் கார்த்தியை முறைத்துக் கொண்டு நின்றாள்.

"அண்ணி நீங்க மேடைக்கு போங்க.. நான் அவரை கூட்டிட்டு வர்றேன்" என்ற கலா சுகுணாவோடு சண்முகத்தையும் மேலே அனுப்பி வைத்தார்.

"ஏன் டா பொது இடத்துல என்ன விளையாட்டு உனக்கு?" கார்த்தி விளையாட்டு தான் என புரிந்து கலா கேட்க,

"நான் எதுவும் பண்ணலையே!" என உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினான் அவன்.

"உங்களை..." என திவி அவன் அருகே செல்ல போக,

"அடியேய்.. எப்பபாரு பே'ன்னு அவனை பார்த்து வைக்குறது இல்லைனா அவன்கிட்டயே சண்டைக்கு நிக்குறது.. முதல்ல உன் கண்ணு தான் என் புள்ளைக்கு அதிகமா இருக்கும் போல.. வீட்டுக்கு போய் மறக்காமல் இவ காலடி மண்ணெடுத்து உனக்கு சுத்தி போடணும் டா" திவியிடமும் கார்த்தியிடமும் கூறியவரை திவி இன்னும் முறைத்து நிற்க, கார்த்தி அப்போதுமே சிரிப்போடு தான் நின்றான்.

"இவ அடங்க மாட்டா டா.. துணை மாப்பிள்ளை நீ இங்கே என்ன பண்ணுற? போ போய் மாப்பிள்ளை ரெடியானு பாரு.. இவளை நான் கவனிச்சுக்குறேன்" என கார்த்தியை தள்ளிவிட்டவர் திவியை தள்ளிக் கொண்டு போய் பிரியசகியின் அறையில் விட்டார்.

மாப்பிள்ளை அறையில் கெத்தாய் தயாராகிக் கொண்டிருந்தான் புகழ். அருகே அவனின் தோழர்கள் என்று கூட யாரும் இல்லை. அதுவெல்லாம் அவனுக்கு பெரிய விஷயம் இல்லையே!

அம்மா, அப்பாவிற்கு பின் எல்லாம் ஆன அவன் சகி இன்னும் சில நிமிடங்களில் ஊரறிய அவனின் சகியாய் மாறிப் போக இருக்கிறாளே!

மணமகன் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் கார்த்தி. இன்னும் தன் மனைவியை நினைத்து முகத்தில் தேக்கிய புன்னகையுடன் தான் புகழ் முன் வந்து நின்றான்.

புகழ் நினைவுகள் அந்த நாளை நோக்கி சென்றது.

பூவைக்கவென்று கலாவின் குடும்பத்தை வரவேற்றுவிட்டு சென்ற புகழ் அன்று மாலையே சகியை காண சென்றான் அவளின் அழைப்பை ஏற்று.

எல்லாம் நல்ல விதமாய் போய்க் கொண்டிருக்க, அப்படி ஒரு நிம்மதி புகழுக்கு. அந்த மகிழ்ச்சியோடே அவன் கிளம்பி ஆவலாய் வந்தான் அவனவளைக் காண.

முன்பில்லாத பதற்றம் அது அவனுக்கு. எப்போதும் இருக்கும் யாராவது பார்த்து விடுவார்களோ என்கின்ற பதற்றம் இல்லை.. அனைவரின் சம்மதத்திற்கு பிறகு முதன்முதலாய் அவளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு.. அது கொடுத்த பதற்றம்.. அது இன்பப் பதற்றமே!

இதோ இனி யாரின் பார்வையும் தன்னை குறை சொல்ல முடியாது என்ற ஒரு உயிர்ப்போடு அவளருகே அவன்.

"என்ன டார்லிங்! முன்னாடியே வந்துட்ட போல?" துள்ளல் பேச்சோடு புகழ் ஆரம்பிக்க, அதன் அசாதாரண தோரணையையும் கண்டு கொண்டாள் சகி.

"நீ எப்ப டா எனக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணியிருக்க?" என்ற அவளின் கேள்வியே அவள் சாதாரண மனநிலை தெரிந்தது.

கொஞ்சம் வழிந்தவன் "சாரி சகிம்மா! இனிமேல் நோ ரெஸ்ட்ரிக்ஷன்.. நீ எங்க சொல்றியோ வர்றேன்.. எவ்வளவு நேரம் வேணா டைம் ஸ்பென்ட் பண்றேன்.. எவ்வளவு நேரம் வேணாலும் காத்து கிடக்குறேன்.. போதுமா?" அவள் மனைவியாக போகிறாள் என்கின்ற உரிமையில் வாக்குகளை அள்ளி விட,

"ஹ்ம்ம்! இந்த தைரியமே இப்ப தான் வந்திருக்குதா?" என அதற்கும் நொந்து கொண்டாள் சகி.

"நாளைக்கு உங்க வீட்டுக்கு வர்றேன் வித் அம்மா, அப்பா, திவி எல்லாரும்.. ஞாபகம் இருக்குல்ல?" சாதிக்க போகும் உணர்வுடன் அவன் கேட்க,

"வேற எதுவுமே நியாபகம் இல்லாத அளவுக்கு இது ஞாபகம் இருக்கு.. அம்மா, அப்பா வர்ராங்கன்னா என்னோட அம்மா நோ சொல்ல வாய்ப்பே இல்ல.. எனக்கும் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தான் தோணுது" சகி சொல்ல,

"எவ்வளவு பெரிய விஷயம்? அதை ஏன் இவ்வளவு நார்மலா சொல்ற? நான் எவ்வளவு எக்ஸ்ஸைட்டடா இருக்கேன் தெரியுமா?" என்றான் புகழ்.

"நானும் அதே அளவு சந்தோசமா தான் இருக்கேன்.. நீ இவ்வளவு எக்ஸ்ஸைட் ஆக காரணம் இனி யாருக்கும் ஒளிஞ்சு ஓட வேண்டாம்னு தான்.. சரி தானே?" அவள் கேட்க, மீண்டும் பல்பு வாங்கியவனாய் அவள் முன் நெளிந்து சிரித்தான் புகழ்.

"நான் ஒன்னும் ரொமான்ஸ் பண்ண உன்னை இங்கே கூப்பிடல" சகி சொல்ல,

"பின்ன?" - புகழ்.

"நாளைக்கு நீங்க வர்றதுக்கு முன்னாடி அம்மாக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும்னு..." சகி இழுக்க,

"தெரிஞ்சிருக்கணும்னு?" எதாவது பிரச்சனையா எனும் கேள்வியுடன் அவளை பார்த்து நின்றான் புகழ்.

"பதறாத! தெரிஞ்சிருக்கணும்னு இன்னைக்கு அம்மாகிட்ட உன்னை பத்தி நானே சொல்லிட்டேன்" என்றாள் முழுதாய்.

"ப்ச்! சகிம்மா என்ன அவசரம்? நான் தான் வர்றேன்னு சொன்னேன்ல? என்னை நம்பலையா நீ?"

"அப்படி இல்ல புகழ்.. அம்மா தனியா கஷ்டப்பட்டு என்னை வளர்த்தாங்க.. உனக்கே தெரியும் அம்மா தான் எனக்கு எல்லாமே.. அம்மாக்கும் நான் தான் எல்லாம்.. இப்ப திடிர்னு நீ பேமிலியா வந்து நின்னா அம்மா அவங்ககிட்ட மட்டும் நான் மறைச்சுட்டேன்னு நினைக்க மாட்டாங்களா?"

"புரியுது சகி! ஆனா நீ ஏன் தனியா பேஸ் பண்ணணு கேட்குறேன்.. உனக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன் கண்ணம்மா" அவ்வளவு கனிவாய் கூறினான் புகழ்.

தான் இல்லாமல் எப்படி சமாளித்திருப்பாள் என்னும் பதட்டம் அதில் தெரிந்தது.

அவனிடம் இருந்து எப்போதாவது வரும் அந்த கண்ணம்மாவில் இவளும் உருகி தான் போவாள்.

"ஆண்ட்டி! ப்ச் சாரி அத்தை என்ன சொன்னாங்க?" புகழ் கேட்க,

"ஹ்ம்ம் உன் அத்தை ஆச்சே! பச்சை கொடி தான்"

"என்னடி சொல்ற? முழுசா சொல்லு.. அத்தை ஒன்னுமே சொல்லலையா?"

"மிஸ்டர் புகழ்! இந்த சகி பேசின பேச்சு அப்படி.. அம்மாகிட்ட நான் லவ் பண்றேன் சேர்த்து வையுங்கள்னு சொன்னா எல்லா அம்மா மாதிரியும் எனக்கும் டோஸ் விழுந்திருக்கும்.. ஆனா இந்த சகி யாரு?" பெருமையாய் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.

"ஆமாமா வேற ஒருத்தர் ஸ்கூட்டிக்கு காசு கரெக்ட் பண்ண பார்த்தவ தானே நீ?" நக்கலாய் அவன் சொல்ல,

"டேய்! என்ன வீட்டுல ஓகே சொன்னதும் வாய் நீளுது.. கல்யாணத்துக்கு அப்புறம் என்கூட தான் இருக்கனும் நியாபகம் இருக்குல்ல?"

"சாரி மேடம்! சொல்லுங்க!" பவ்யமாய் கேட்டான்.

"அது! அம்மாகிட்ட நான் உன்னை விரும்புறேன்னு எல்லாம் சொல்லல.. எனக்கு ஒரு பையனை புடிச்சிருக்கு மா.. அவனுக்கும் என்னை புடிக்கும்.. நீங்க ஓகே சொன்னா மட்டும் அவங்க அம்மா அப்பாவை வர சொல்றேன் இல்லைனா எனக்கு வேண்டாம்னு சொன்னேன்"

"அடிப்பாவி! ஸ்ட்ரயிட்டாவே சொல்லிட்டியா?"

"பின்ன உன்ன மாதிரி சிஸ்டர் பின்னாடி ஒளிஞ்சுக்க சொல்றியா? அம்மாவை ஏமாத்தக் கூடாது.. அதே டைம் அவங்களை ஹர்ட் பண்ணவும் கூடாது.. அதான் அப்படி பேசினேன்.."

"ஹ்ம்ம் அதுவும் சரி தான்.. அப்புறம்?"

"அம்மா சோ ஸ்வீட்! என்னை புரிஞ்சிக்கிட்டாங்க.. இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு எனக்கு.. ஆனாலும் பையன் பேமிலியை பார்த்த அப்புறம் தான் என்னோட முடிவை சொல்வேன்.. எதுவா இருந்தாலும் ஏத்துக்கணும்னு சொல்லிட்டாங்க"

"அப்ப எதுவா இருந்தாலும் ஏத்துப்பியா சகிம்மா?" அவள் அன்னை அப்படி சொன்னதில் கொஞ்சம் கோபம் கொஞ்சம் வருத்தம் அவனுக்கு.. அதை அவன் குரலே உணர்த்த,

"ஆமா ஏத்துப்பேன்" என்றவளை இன்னதென்று புரியாத பார்வை பார்த்து நின்றான்.

தொடரும்..
 
Top