• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 7

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 7

"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?" பாடியபடி காலை சமையலை செய்து கொண்டிருந்தார் கலா.

"பருப்பா கூட இருக்கலாம் அத்தை" என ஆஜர் ஆனாள் திவ்யா.

"இன்னும் காணுமேன்னு நினச்சேன். வந்துட்டியா? நீயெல்லாம் தேறவே மாட்ட டி" - கலா.

"ஏன்த்த?"

"என்ன ஏன்த்த? புருஷன் வேலைக்கு கிளம்புற வரைக்கும் ரூமைவிட்டு வெளில வராமல் அவனை சுத்தி வந்து கவனிச்சு கொஞ்சம் அப்படி இப்படி ரொமான்ஸ் பண்ணி அனுப்பி வைப்பியா.. அதை விட்டுட்டு எப்படா மாமியார் சமயக்கட்டு வருவா.. ஜோடி போட்டு சமைக்கலாம்னு வந்திருக்கியே! ஊரு உலகத்துல மருமக எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா? உன்னை எல்லாம் கட்டி கார்த்தி என்னனு வாழ போறானோ!"

"ஆமா! உங்க புள்ள மட்டும் எழுந்ததும் ஆசையா வந்து என்கிட்ட பேசிட்டு தான் ஆபீஸ் போவாரு பாருங்க.. அட போங்க அத்தை! அவரை நாலு வார்த்தை பேச வைக்குறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளுது"

"பார்றா! அந்த அளவுக்கு வந்துட்டியா? அப்ப ட்ரை பண்ணியிருக்க! பரவால்லையே! அப்ப கார்த்தி தான் சரி இல்லைனு சொல்ற?"

"அப்படிலாம் இல்ல அத்தை! ஏதோ கொஞ்சம் கன்ஃபியூஷன்ல இருக்காங்க போல! அதெல்லாம் பாத்துக்கலாம் அத்தை"

"ம்ம் பலே பலே! உனக்கு நான் எடுத்த பாடம் வீண் போகல.. இனி அவனை திருத்துறது உன் பாடு! அவன் என்ன பண்றான்?"

"தூங்குறாங்க"

"சரி சரி! எழுப்பி இந்த காபிய கொடுத்துட்டு வா" என்றவர் கிச்சடிக்கு தாளிக்க ஆரம்பித்தார்.

"மாமாக்கு காபி?"

"மாமா வாக்கிங் போய்ட்டு இன்னும் வர்ல. நீ கார்த்திக்கு கொடு. மாமா வந்ததும் நான் குடுத்துக்குறேன்"

"ம்ம் சரி அத்தை!" என்றவள் காபியுடன் அவர்களது அறைக்கு சென்றாள்.

"கார்த்..." கார்த்தி என்றே அழைக்க வந்தவள் இன்னும் அந்த அளவுக்கு நெருக்கம் வரவில்லை என்று உணர்ந்து நிறுத்தினாள்.

'என்னன்னு கூப்பிடலாம்?' யோசித்தவள் விடை இப்போது காண முடியாமல் சிரிப்புடனே அவனருகில் சென்றாள்.

"பாஸ்... பாஸ்" என்று அழைக்க அது அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் புரண்டு படுத்தான்.

"மிஸ்டர் கார்த்திகேயன்!" அவன் காதுக்குள் இவள் அழைக்க, எந்த அசைவும் இல்லாமல் "ம்ம் சொல்லு திவி" என்றவனை ஆச்சர்யமாய் தான் விழி விரித்து பார்த்தாள்.

"காபி!"

"வச்சுடு! ஒரு ஃபைவ் மினிட்ஸ்" என்றவன் இன்னும் கண்களை திறக்கவில்லை.

திரும்பி செல்ல அவளுக்கும் மனம் இல்லை. சென்றாலும் கலா சும்மா விடப்போவது இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தவள் அவன் கூறிய அந்த ஐந்து நிமிடமும் அங்கேயே அமர்வது என முடிவுக்கு வந்தாள்.

அதற்கு முன்பே எழுந்து கொண்டவன் "குட் மார்னிங்" என்று விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

மீண்டும் வெளிவந்து காபியை பருகி அவன் ஆபிஸ் கிளம்பும் வரையுமே அதே இடத்தில் அமர்ந்து அவன் செய்யும் ஒவ்வொன்றயும் உன்னிப்பாய் கவனித்திருக்க, கார்த்தியும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

"என்னாச்சு? ஏன் இப்படி உட்காந்துட்டு இருக்க?" தலைவாரிக் கொண்டே அவன் கேட்க,

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று பதில் வரவில்லை.

"அது.. அதுவந்து.. ஹான் அத்தை தான் நீங்க கிளம்புற வரை இங்கே இருக்க சொன்னாங்க" சொல்லி முடித்தபின் தான் சொல்லியதை உணர்ந்து அவள் நாக்கை கடிக்க, அன்னையை பற்றி தெரிந்தவன் இப்போது மனைவியையும் புரிந்து கொள்ள ஆரம்பித்து ஒரு சிரிப்புடன் அமைதியானான்.

"திவ்யா..." என்று வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்க கலா தான் வாசலுக்கு வந்தார். வெளியே புகழ் நின்றிருந்தான்.

"அட புகழ்! உள்ள வா பா.. நீ வர்றனு திவி சொல்லவே இல்லையே?" புகழுடன் ஹாலுக்கு வந்தார் கலா. பின்னோடே ஜெகதீசனும் உள்ளே வந்தார்.

"நான் வர்றது திவ்யாக்கு தெரியாது அத்தை" என்றவனிடம்

"வாப்பா புகழ்! எப்படி இருக்க? அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?" ஜெகதீசன் கேட்க,

"நல்லாருக்காங்க மாமா!" என்றவன் எப்படி திவ்யாவிடம் தனியாய் பேசுவது என நெளிந்து கொண்டிருந்தான்.

"திவ்யாமா!" கலா குரல் கொடுக்க,

"தோ வரேன் அத்தை" என்று ஓடினாள் திவ்யா. பேச்சு சத்தம் கேட்டு ஆபீஸ் கிளம்பிய கார்த்தியும் வெளிவந்தான்.

"புகழ்!" அவனை எதிர்பார்க்காத ஆச்சர்யத்தில் திவ்யா அழைக்க சிறிதாய் சிரித்து அமர்ந்தான் புகழ்.

"வாங்க" கார்த்தி வரவேற்க, அவனை பார்த்தும் அதே ஸ்மைல்.

"என்ன புகழ்! நேத்து தானே வந்தேன்? அம்மா எதாவது சொல்லி விட்டாங்களா?" திவ்யா கேட்க,

"திவி என்ன இது? வந்தவங்ளுக்கு எதாவது சாப்பிட கொடுத்துட்டு கேளு!" கலா மாமியாராய் அதட்ட,

"ஸ்ஸ்! மறந்துட்டேன் அத்தை! ஒரு நிமிஷம் புகழ்" என்றவள் அவன் மறுத்து பேசும்முன் உள்ளே சென்றாள்.

கார்த்தியும் அதையே தான் யோசித்து நின்றான். முக்கியமான விஷயம் இல்லாமல் இவன் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டான் என அவனும் அறிவானே!

திவ்யா அவனுக்கு தண்ணீரை கொடுக்க அதை பருகியவன் பேசும்முன் அனைவருடன் அவனையும் வலுக்கடையமாக சாப்பிட அழைத்து சென்றார் கலா.

'திவிகிட்ட தனியா பேசவே முடியாது போலயே! இதுல எப்படி நான் சகி பத்தி இவகிட்ட சொல்லி... கடவுளே!' புகழ் நினைத்துக் கொண்டே ரவா கிச்சடியை கிண்டிக் கொண்டிருக்க கலா அவனை கவனித்தார்.

"சாப்பிடு புகழ்! என்ன தயக்கம் நம்ம வீட்ல?" ஜெகதீசன் சொல்ல,

"ஒன்னும் இல்ல மாமா!" என்றவன் சாப்பிட கலா திவ்யா இருவரும் மற்றவர்களுக்கு பரிமாறினர்.

சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்த பின்னும் அவன் தயங்கியே அமர்ந்திருக்க, "ம்மா! ஆபீஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்" என்ற கார்த்தியை புகழ் பார்க்கவும் "வர்றேன்" என அவனிடமும் சொல்லிவிட்டு திவ்யாவை பார்த்து தலையசைத்து சென்றான்.

"ஹப்பா! ஒரு டிக்கெட் அவுட்" புகழ் மீண்டும் நினைத்துக் கொள்ள,

"சொல்லு புகழ்! என்ன இவ்வளவு தூரம்?" திவ்யா மீண்டும் கேட்க, கலா, ஜெகதீசனும் அங்கே தான் இருந்தனர்.

'ம்ஹ்ம்ம் இது சரி இல்ல.. கிளம்பிடலாம்' புகழ் முடிவுக்கு வர,

"திவி!" என அழைத்த கலா அவளை அருகே வருமாறு சைகை செய்தார்.

அவரருகே சென்றவள் "சொல்லுங்க அத்தை" என்க,

"டியூப்லைட் திவி! உன் அண்ணா உன்கிட்ட தனியா பேச தான் அப்ப இருந்து நெளிஞ்சுட்டு வர்றான். இது கூட புரியல... போ" என்றவர்

"என்னங்க! கொஞ்சம் இங்கே வாங்க" என்று ஜெகதீசனுடன் அவர் அறைக்கு சென்றார்.

புகழ் ஒரு பெருமூச்சு விட இப்போது தான் அத்தை சொன்னதை நம்பவே செய்தாள் திவ்யா.

"என்ன புகழ் எதாவது சொல்லனுமா?" - திவ்யா.

"ம்ம்"

"என்ன?"

"அது... இல்ல நேத்து அம்மா கல்யாணம் பத்தி பேசினாங்க இல்ல..." அவன் இழுக்க,

"ஓஹ்! அதுக்குள்ள பொண்ணு பார்த்துட்டாங்களா? எனக்கு போன் பண்ணவே இல்லையே அம்மா" அவள் அவசரப்பட,

"ஏய்! நான் சொல்றத கேளு!"

"சரி சொல்லு!"

"இல்ல.. அது என்னன்னா! பொண்ணு பார்க்க வேண்டாம்னு அம்மாகிட்ட சொல்லேன்"

"என்ன சொல்ற நீ? ஏன் அப்படி சொல்லணும்? எப்படியும் கல்யாணம் பண்ணிக்க போற தானே?" அவன் சொல்ல வருவது புரியவில்லை அவளுக்கு.

"ப்ச்! அய்யோ! நான் ஒரு பொண்ணை விரும்புறேன் திவி" அவன் சொல்லிவிட, "என்ன" என ஆச்சர்யமாய் பார்த்தாள் திவ்யா.

"ண்ணாவ்! நிஜமாவா சொல்ற? உன்னையும் ஒரு பொண்ணு விரும்புதா? இல்ல நீ மட்டும் தான் விரும்புறியா? ஒன் சைடு லவ் தானே?"

இவன் இருக்கும் பகட்டிற்கு இவன் காதலிக்கிறான் என்பதையே நம்ப முடியவில்லை. இதில் எங்கே ஒரு பெண் இவனை விரும்ப போகிறாள் என்று தான் தோன்றியது.

"ஏய்! என்ன கிண்டலா? அவளுக்கும் என்னை பிடிக்கும். அவளும் என்னை லவ் பண்றா" அவன் சொல்ல,

"புகழ் நிஜமாவா சொல்ற? என்னால நம்பவே முடியலை. யார் அந்த பொண்ணு?" புகழை பற்றி தெரிந்தவள் அவனை போலவே சம அந்தஸ்து பார்த்து தான் காதலித்து இருப்பான் என நினைத்து அவள் கேட்க,

"அவ பேரு பிரியசகி! அம்மா மட்டும் தான் இருக்காங்க. அப்புறம்... அவ உன் வீட்டுக்காரர்கூட தான் வேலை பாக்குறா" என்று சொல்ல இன்னும் இன்னும் ஆச்சர்யதோடு அதிர்ச்சி தான் திவ்யாவிற்கு. அண்ணனின் குணம் தெரிந்தவள் அல்லவா.

"கார்த்தி கூட ஒர்க் பண்றங்களா? அது தெரிஞ்சும் நீ லவ் பண்றியா?" அவள் கேட்க, இவன் அவளை முறைத்தான்.

"அய்யோ! நிஜமா என்னால நம்ப முடியல புகழ். எப்படி தெரியும் எங்கே பார்த்த?" அவள் கேள்வியாய் கேட்க,

"ஏய்! அதெல்லாம் அப்புறம் சொல்றேன்! இப்ப நீ அம்மா ஏதாவது பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி அவங்ககிட்ட பார்க்க வேண்டாம்னு சொல்லு"

"நானா? நான் என்னனு சொல்றது?"

"ப்ளீஸ் திவி! நானே சொல்லிடுவேன் தான். ஆனா எப்படி சொல்றதுன்னு தெரில. அதான் உன்னை தேடி வந்தேன்" அவன் சொல்ல,

"ம்ம்! நீயெல்லாம் வேற லெவல் புகழ். உன்னை என்னவெல்லாம் நினச்சேன். ஆனா நீ கலக்குற போ!"

"அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல நீ என்ன பண்ணுவியோ அம்மாகிட்ட கால் பண்ணி பேசு. ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ண சொல்லு"

"ஆஹான்! பட் நான் அதுக்கு முன்னாடி அவங்களை பார்க்கணுமே!"

"காட்றேன் திவி. இப்ப நீ இதை வேற யார்கிட்டயும் உளறி வைக்காத!" கார்த்தியை அவன் சொல்ல, அது கூட தெரியாதவளா திவி.

"வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஆனா என் ஆத்துகாரர்கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன்" அவனை போலவே பதில் கூறினாள் திவ்யா.

"அதானே! நினைச்சேன். சரி நான் கிளம்புறேன். நீ அம்மாக்கு கால் பண்ணி மறக்காமல் சொல்லிடு" என எழுந்து கொள்ள, தன் அத்தையை அழைத்தாள் திவ்யா.

"என்னப்பா அதுக்குள்ள கிளம்புற? மதியம் விருந்து சாப்பிட்டு கிளம்பலாம்" - ஜெகதீசன்.

"இல்ல மாமா இன்னொரு நாள் வர்றேன். அப்பா வெளில போகணும்னு சொன்னாங்க. நான் தான் கூட்டிட்டு போகணும். வர்ரேன் மாமா. வர்றேன் அத்தை" என்றவன் "மறக்காமல் சொல்லிடு திவி" என திவ்யாவின் காதில் சொல்லி செல்லவும் மறக்கவில்லை.

காதல் தொடரும்..
 
Top