• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்டேன் காதலை 9

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 9

"திவி உன் புருஷன் வந்துட்டான்.. ஏதோ பேசணும்னு சொன்னியே போய் பேசிட்டு வா" கார்த்தி வீட்டுக்கு வந்ததும் மீண்டும் ஆரம்பித்து வைத்தார் கலா.

"ம்ம்ம்! நீங்களும் சொல்லவிட போறதில்ல.. அவரும் என்னனு கேட்க போறதில்ல.. பின்ன ஏன் என்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்? ஆளை விடுங்க.." திவ்யா சொல்லும் நேரம் சரியாய் அழைத்தான் கார்த்தி.

"திவ்யா!"

"பார்த்தியா! இது தான் அம்மா புள்ள காம்போ... நான் சொன்னேன்ல அவன் கேட்பான்னு.. அதுக்கு தான் கூப்பிடுறான்.. போய் பேசு! எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகலனு சிலுப்பிக்க தெரிஞ்சா மட்டும் பத்தாது.. புரிஞ்சிக்க ஆரம்பிக்கணும்..." கலா சொல்ல, இப்போதும் அதே புரிந்தும் புரியாத தலையாட்டாலுடன் கிளம்பினாள் திவ்யா.

ஹாலில் நின்றவனிடம் போய் "சொல்லுங்க" என்று அவள் கேட்க, அவள் முகம் பார்த்தவன்

"ஒரு நிமிஷம் உள்ளே வா!" என்று அழைத்து செல்ல, 'பார்றா!' என நினைத்தவள் திரும்பி சமையலறையில் நின்ற தன் அத்தையை பார்க்க, தலையில் அடித்துக் கொண்டவர் "போய் தொலை டி" என்றதும் குடுகுடுவென ஓடினாள் அவன் பின்னே!.

"என்ன வேலை டி பண்ற நீ?" அங்கே நடந்த கூத்தை அமைதியாய் பார்த்த ஜெகதீசன் மெல்ல சமையலறை வந்து மனைவியிடம் கேட்க,

"ரெண்டுத்துக்கும் ஒன்னும் தெரிலங்க.. இவன் வேஸ்ட் பீஸ்னு எப்பவோ தெரியும்.. ஆனா நமக்கு வந்தது வாச்சதுனு பாரபட்சம் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கு... அதான் ஏதாவது ரெண்டையும் தேத்தி விட முடியுமான்னு பார்க்குறேன்" என்றார் கலா.

"காலம் போன கடைசில இந்த வேலை உனக்கு தேவை தான்" சிரித்துக் கொண்டே அவர் சொல்ல, அவரை முறைத்தவர் திவ்யா பாதியில் விட்டு சென்ற காய் வெட்டும் வேலையை கணவரிடம் கொடுத்தார்.

"சும்மா இருந்தா தானே வாய் எதாவது பேசும்... வெட்டுங்க" என்று சொல்லிவிட, சமையலறை வந்தது எவ்வளவு பெரிய தவறு என அப்போது தான் புரிந்தது ஜெகதீசனுக்கு.

"என்னங்க?" கார்த்தி பின்னால் நின்று திவ்யா கேட்க,

"இல்ல ஏதோ பேசணும்னு அப்ப சொன்னியே! அதான் என்னனு கேட்க கூப்பிட்டேன்! என்றான் கார்த்தி.

"ஆஹான்! பரவால்லையே இவ்வளவு சீக்கிரம் ஞாபகம் வந்துடுச்சி" கிண்டலாய் அவள் சொல்ல,

"அப்பவே கேட்டிருப்பேன்.. ஆனா வெளில வேலை இருந்துச்சு. முடிச்சுட்டு பிரீயா பேசலாம்னு தான் அப்ப கிளம்பிட்டேன்.. ஏன் கோபமா?" சிரிப்பை வாயின் ஓரம் வைத்து அவன் கேட்க,

"எனக்கென்ன கோபம்? அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஆனா இப்ப வேலையிருக்கே!" அவள் சொல்ல,

"எப்படியும் அம்மாகிட்ட சொல்லிட்டு தான் வந்திருப்ப.. இப்ப உடனே போனாலும் அவங்க பேசுற பேச்சுல திரும்பி தான் வருவ! அதுனால இப்பவே சொல்லு.. பேசிடலாம்" அவன் சொல்ல, இருவரையும் புரிந்து கொள்வது எப்போது என குழம்பிப் போய் நின்றாள் திவ்யா.

"சொல்லு திவி!" மீண்டும் அவன் கேட்க, அவனின் திவி என்ற அழைப்பில் ஒவ்வொரு முறையும் போல இம்முறையும் மேகத்தில் மிதந்து கொண்டே சொல்ல வந்ததை கூறினாள்.

"உங்ககூட சகிபிரியானு யாரும் ஒர்க் பண்றங்களா?" திவ்யா கேட்டதும் சிரித்தவன்,

"அவ பேரு சகிப்ரியா இல்ல பிரியசகி" என்று திருத்தி சொல்ல, இவ்வளவு தெளிவாய் தெரிந்து வைத்திருப்பான் என அறியாதவள் அவனின் திருத்தத்தில் முறைத்துப் பார்த்தாள்.

"ம்ம் சொல்லு அவளுக்கு என்ன?" அடுத்து அவன் கேட்க,

"அது இருக்கட்டும்! ஆமா எப்படி இவ்வளவு முழு டீடெயில் தெரியும் அந்த பொண்ணை பத்தி?" முறைப்பை குறைக்காமலே அவள் கேட்க,

"ஏய்! அந்த பொண்ணு பேரை தப்பா சொன்ன அதை நான் கரெக்ட் பண்ணினேன்.. அது முழு டீடெயிலா உனக்கு?" அவனும் பதில் கூறினான் அவளின் தேவையில்லா கேள்விக்கு.

'ப்ச்! என்னை தவிர எல்லாரை பத்தியும் பேசுவாங்க.. எல்லார்கிட்டயும் பேசுவாங்க போல' அவள் முணுமுணுத்தது இவன் காதில் கேட்ட போதும் சிரிப்புடன் அமைதியாய் நின்றான்.

"ஆமா அந்த பொண்ணை உனக்கு எப்படி தெரியும்?" அவனே கேட்க,

"எனக்கு தெரியாது. அண்ணா... ஆமா அந்த பொண்ணு எப்படி?" புகழ் விரும்புவதை சொல்ல வந்தவள் யோசனைக்கு பின் சகியினை பற்றி விசாரித்தாள்.

"பேரை சரியா சொன்னதுக்கே என்னவோ வீட்டு அட்ரஸ் வர சொன்ன மாதிரி ரியாக்ட் பண்ற.. இதுல பொண்ணு எப்படிணு கேட்டு.. நான் எதாவது சொல்லி.. எதுக்கு வம்பு.. முதல்ல எதுக்கு கேட்குறனு சொல்லு" அவளினை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல திருப்பி விட்டான் கேள்வியை.

"அதுவும் சரி தான். அப்புறம் எனக்கும் கோபம் வரும்.. முதல்லயே சொல்லிடுறேன்" அவன் மறைக்கும் சிரிப்பை கண்டும் காணாதது போல திரும்பியவள்

"அந்த பொண்ணு உங்களுக்கு தங்கச்சியா வர போகுது" என்று கூறியவள் அவன் முகம் பார்க்க, குழம்பி போய் பார்த்தான் அவளை.

"தங்கச்சியா? புரியலையே!" அவன் சொல்ல,

"எனக்கு அண்ணினா உங்களுக்கு தங்கச்சி தானே?" மேலும் அவள் புதிர்போட,

"அண்ணியா? உனக்கு எப்ப..." புரியாமல் கேட்க வந்தவனுக்கு உடனே புகழ் ஞாபகமும் காலையில் அவன் வந்து தயங்கியதும் கண்முன் வர, உடனே அனைத்தும் விளங்கியது. ஆனால் அது கார்த்தி எதிர்பார்க்காத ஒன்று தான்.

புகழை முழுதாய் தெரியாவிட்டாலும் இவனை புகழ் பார்க்கும் பார்வையும், அவனை பார்த்தாலே தெரியும் பணக்காரத் தன்மையும் சேர்ந்து யோசிக்க தான் வைத்தது இது சாத்தியமா என்று.

"என்ன ரியாக்ஷன் இது? புரிஞ்சிடுச்சா இல்லை தெரியலையா?" அவன் முகத்தையே பார்திருந்தவள் கேட்க,

"புகழுக்காக சொல்றியா?" அவன் நேராய் கேட்க,

"ப்பா! நீங்களும் அத்தை மாதிரியே பிரில்லியண்ட் பாஸ்!" என்றாள்.

"ஆனால் ப்ரியா என்னோட ஜூனியர்... அண்ட்..." தன்னை விடவும் பிரியசகி வீட்டில் வசதி அதிகமில்லை. அதை எப்படி திவ்யாவிடம் சொல்ல? அதை எப்படி இவள் எடுத்துக் கொள்வாள் என அவன் சொல்லாமல் தயங்க,

"நீங்க ஏன் இவ்வளவு யோசிக்குறீங்கனு எனக்கு தெரியுது.. அக்ட்சுல்லி நானே இப்படி தான் ஷாக் ஆனேன் புகழ் சொல்லும் போது.. நானுமே இதை எக்ஸ்பெக்ட் பண்ணல" அவள் சொல்ல,

"என்ன சொல்றதுன்னு தெரியல திவ்யா.. ப்ரியா நல்ல பொண்ணு தான்.. எல்லாம் ஓகே தான்.. பட் புகழுக்கு அவங்க வீட்டை பத்தி தெரியுமா? ஐ திங்க் அவங்க அப்பா தவறிட்டாங்க நினைக்குறேன்.. அண்ட் பேமிலி பேக்கிரேவுண்ட்டும் உங்க அளவுக்கு..."

"ஏன் இப்படி திக்கி திக்கி பேசுறிங்க? என்கிட்ட பேச மட்டும் உங்க வாய் ஒட்டிக்குமா?" அவள் கோபமாய் கேட்க, இப்போதும் அவன் யோசனையாய் தான் இருந்தான்.

"ஹெலோ பாஸ்! ஒரு சின்ன திருத்தம்.. நான் இப்ப மிஸ்டர் கார்த்திகேயன் பேமிலி. புகழ் பேமிலி பேக்கிரேவுண்ட்னு சொல்லுங்க" அவள் சொல்லவும் மீண்டும் இவன் முகத்தில் புன்னகை குடிகொண்டது.

"ஹ்ம்ம் இது நல்லாருக்கு! நீங்க இவ்வளவு யோசிக்காதிங்க. புகழ் சொன்னான் அவங்களுக்கு அம்மா மட்டும் தான்னு. தெரியாமல் எல்லாம் அவன் லவ் பண்ணல.. ஒன்னு சொல்லுவாங்க இல்ல.. ஊருக்கு ஒரு நியாயம்! தனக்கு ஒரு நியாயம்னு! அது தான் புகழ் பண்றது. அவனுக்கு கல்யாணம் ஆகட்டும்.. அப்புறம் பேசிக்குறேன் அவனை!" இப்போதும் சிறு புன்னகை மட்டுமே அவனிடம்.

"இவங்க லவ்வுக்காக நான் அம்மாகிட்ட பேசணுமாம். அந்த ஆப்ளிகேஷன்க்காக தான் காலையில புகழ் வந்ததே" - திவ்யா.

"ஓஹ்! ஒரு கல்யாணத்தை பத்தி பேசுற அளவுக்கு பெரிய மனுஷி ஆயிட்டீங்களா?"

"பின்ன! அண்ணாக்கு கல்யாணம்னா சும்மாவா?" என்றாள்.

"ஹ்ம்ம்! இப்ப சந்தோசமா?" அவன் கேட்க,

"என்ன?"

"இல்ல! இனி அந்த பொண்ணு டீடெயில்ஸ் எனக்கு தெரிஞ்சாலும் உனக்கு பிரச்சனை இல்லை தானே?"

"ம்ம்! தங்கச்சி ஆச்சே! ஐ டோன்ட் மைண்ட்" என்றவள் அவனை பார்த்தவாறே அந்த அறையை விட்டு வெளியே செல்ல, புன்னகையுடனே அதையும் பார்த்து நின்றான் கார்த்தி.

"டக்குனு பாடணும்னு தோணுது.. ஆனா இந்த காலத்து பாட்டு எதுவும் சரியா தெரியலையே! ச்ச! இதுக்கு தான் அப்டேட்டடா இருக்கணும்னு சொல்றது" கலா சொல்லவும்,

"என்ன சிட்டுவேஷன்னு சொல்லுங்க அத்தை! நான் பாட்டு சொல்லி தர்றேன்" என வாயை வாடகைக்கு கொடுத்தாள் திவ்யா.

"ஹான் அதான் என் மருமக இருக்காளே! அதை மறந்துட்டேன் பாரு" என்றவர் "சிட்டுவேஷன் என்னன்னா.. ஹீரோயின் ஹீரோகிட்ட சும்மா தனியா பேசலாம்னு போறா! அங்கே ஒரு ரொமான்ஸ் சீன் ஓடுது.. அது முடிஞ்சு ஹீரோயின் அவளோட மாமியார் பக்கத்துல இருந்து அரைமணி நேரமா வேலை பாக்குறா.. ஆனாலும் அவ முகத்துல ஒரு ஒளிவாட்டம்.. மாமியாரும் அது குறையுமான்னு பாத்துட்டே தான் இருக்குது.. ஆனா அந்த ஒளிவட்டமும் குறையல.. ஹீரோ இருக்குற ரூமை விட்டு ஹீரோயின் கண்ணும் அங்கே இங்கே திரும்பல.. இதான் திவி சிட்டுவேஷன். சும்மா ஒரு பாட்டை எடுத்து விடு" என்று சொல்ல சத்தியமாய் தன் முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்றே தெரியவில்லை திவ்யாவிற்கு.

ஆரம்பத்தில் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்த திவ்யாவிற்கு, இடையில் வந்த மாமியார் ரோலிற்கு பின் தான் தன் அத்தை தன்னை கலாய்ப்பது புரியவே செய்தது.

"ஹாஹாஹா" விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான் கார்த்தி. அவனுக்கு தெரிந்துவிட்டது தெரிந்து இன்னும் இன்னும் முகம் சிவந்து ஒளிந்து கொள்ளவும் இடம் இல்லாமல் அத்தைக்கு பின்னேயே தலை கவிழ்ந்து அவள் நிற்க, அத்தனையும் மறந்து தன் மகனின் அந்த நீண்ட சிரிப்பையே பார்த்துக் கொண்டிருந்தார் கலா.

"ம்மா! இன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. ஆனா நீங்க இப்படி பேசியே திவிய ஓடவிட போறீங்க" சிரிப்பை நிறுத்தாமல் அவன் சொல்ல,

"நான் ஒன்னும் ஓட மாட்டேன்!" அவளும் பின்னிருந்தே சொல்ல, கலாவும் சிரித்தார்.

"அப்பா எங்கேம்மா? டின்னர் ரெடியா?" திவ்யாவை பார்த்துக் கொண்டே அன்னையிடம் அவன் கேட்க,

"ரூம்ல இருப்பாங்க.. நான் போய் கூட்டிட்டு வர்றேன்.. இதையெல்லாம் ஹாலுக்கு எடுத்துட்டு வாங்க" என்றவர் செல்ல,

திவியும் கார்த்தியும் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு திவ்யாவை பார்த்து இன்னும் சிரித்துக் கொண்டே கார்த்தி அமரும் நேரம் வாசலை நோக்கி தற்செயலாய் அவன் திரும்ப, அவனின் மொத்த சிரிப்புமே மறைந்து போனது.

"ஹனிகா!" அவன் உதடுகள் சொல்ல, திவ்யாவும் அவனின் முகமாற்றத்தில் திரும்பி அவன் பார்வை செல்லும் திசையில் பார்த்தாள்.

காதல் தொடரும்..
 
Top