• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - அத்தியாயம் 16

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
110
பல நாட்கள் கழித்து கடல் காற்று முகத்தை வருட, தன்னவளின் மடியில் நிம்மதியாக உறங்கினான் பிரணவ்.

பிரணவ்வின் தலையை வருடியபடி கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.

தன்னைப் பற்றி முழுவதும் அறிந்தால் பிரணவ் தன்னை ஏற்றுக்கொள்வானா என்ற கேள்வியே அவளை அதிகம் பயமுறுத்தியது.

சில மணி நேரங்களிலேயே விழிப்புத் தட்டிய பிரணவ் கண்டது கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியைத் தான்.

பிரணவ் சட்டென எழுந்து அமரவும் திடுக்கிட்ட அனுபல்லவி, "என்னாச்சுங்க? உங்க தூக்கத்தை கலைச்சிட்டேனா?" என வருத்தமாகக் கேட்கவும் கலங்கியிருந்த அவளின் கண்களை துடைத்து விட்ட பிரணவ், "சாரி பல்லவி... ரொம்ப நாள் கழிச்சி அசந்து தூங்கிட்டேன்... உனக்கு கால் வலிச்சி இருக்கும்ல..." என்றான் வருத்தமாக.

அனுபல்லவி, "அச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பிரணவ்... அது சும்மா காத்துக்கு கண்ணு கலங்கி இருக்கு... நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க... அதான் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல..." என்றாள்.

லேசாகப் புன்னகைத்த பிரணவ் அனுபல்லவியை தன் நெஞ்சின் மீது சாய்த்துக்கொண்டு, "நிஜமாவே நான் முன்னாடி பண்ணின தப்பை நினைச்சி உனக்கு என் மேல கோவம் இல்லையா பல்லவி?" எனக் கேட்டான்.

பிரணவ்வின் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்ட அனுபல்லவி, "நீங்க இன்னுமே அப்படி இருந்தீங்கன்னா நிச்சயம் நான் கோவப்பட்டு இருப்பேன்... வருத்தப்பட்டு இருப்பேன்... ஆனா நீங்க தான் இப்போ திருந்திட்டீங்களே பிரணவ்... என் கிட்ட வரும் போது நீங்க பொண்ணுங்களை மதிக்கிற, அவங்களை கண்ணியமா நடத்துறவரா தானே இருக்கீங்க... அதனால எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்..." எனப் புன்னகையுடன் கூறவும் அவளைத் தன்னுள் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்ட பிரணவ், "பல்லவி... இந்த லைஃப் நீ எனக்கு கொடுத்த மறுஜென்மம்... ஆக்சிடன்ட்டுக்கு அப்புறம் எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிஞ்சதும் எதுக்குடா இன்னும் வாழுறோம்னு தோணிச்சு... ஆனா அந்த ஆக்சிடன்ட்டுக்கு அப்புறம் தினமும் என்னைக் காப்பாத்தின பொண்ணோட முகம் என் கனவுல வரும்... ஆனா உன் முகம் சரியா தெரியாது... உன்ன முதல் தடவை பார்த்ததும் என்னையே அறியாம உன்னோட எல்லா செயலையும் ரசிச்சேன்... அதனால எனக்கு என் மேலயே கோபம்... உன்ன காதலிக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்னைப் போல ஒரு குறை உள்ளவன் உன்ன எப்படி ரசிக்கலாம்னு... அந்த கோவத்தை தான் முட்டாள் மாதிரி உன் மேல காட்டி உன்ன கஷ்டப்படுத்தினேன்... ஆனாலும் நீ என்னை விட்டு தூரமா போறதை என் மனசு ஏத்துக்கல... அதனால தான் ஏதாவது ஒரு காரணம் காட்டி உன்ன என் கூடவே வெச்சிக்கிட்டேன்... இப்போ இந்த நிமிஷம் தோணுது இப்படியே உன் கைய பிடிச்சிக்கிட்டு நூறு வருஷம் வாழணும்னு..." என்றவன் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அதனை விழி மூடி அனுபவித்தாள் அனுபல்லவி.

சில நொடிகள் மௌனமாய் கழிய, "பல்லவி... ரொம்ப லேட் ஆகிடுச்சு... உன் ஃப்ரெண்ட் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா... வா போகலாம்..." என்ற பிரணவ் எழுந்து அனுபல்லவிக்கு எழுவதற்காக கையை நீட்டினான்.

அனுபல்லவி, "அவ கிட்ட வர லேட் ஆகும்னு ஆஷ்ரெடி இன்ஃபார்ம் பண்ணிட்டேன்..." என்றவள் பிரணவ்வின் கரத்தைப் பற்றி எழுந்து நின்றாள்.

பிரணவ் காரை ஓட்ட, அனுபல்லவி அவனின் தோளில் சாய்ந்தவாறு வர, அனுபல்லவியின் அபார்ட்மெண்ட் வந்ததும் காரை நிறுத்திய பிரணவ் அனுபல்லவியின் கன்னத்தில் முத்தமிட்டு, "நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..." என்கவும் முகம் சிவந்தாள் அனுபல்லவி.

************************************

சாருமதியும் அனுபல்லவியும் மறுநாள் சாவகாசமாக ஆஃபீஸ் வர, மொத்த கம்பனியும் ஒரே பரபரப்பாக இருந்தது.

அவர்களைப் புரியாமல் பார்த்தபடி இருவரும் சென்று தம் இருக்கையில் அமர, ஆகாஷ் அவர்களைக் கடந்து செல்லவும், "ஓய் பனைமரம்..." என அழைத்தாள் சாருமதி.

ஆகாஷ் வாயெல்லாம் பல்லாக, "என்ன குட்டச்சி பேபி?" என இளித்துக்கொண்டு வர, அவனைக் கேவலமாக ஒரு லுக்கு விட்ட சாருமதி, "எதுக்கு இப்போ ப்ரஷ் பண்ண போறது போல மொத்த பல்லையும் காட்டிட்டு இருக்க?" எனக் கேட்கவும் அனுபல்லவி வாயை மூடி சிரித்தாள்.

சாருமதியை முறைத்தவாறு, "சொல்லு என்ன விஷயம்? எதுக்கு கூப்பிட்ட?" எனக் கேட்டான் ஆகாஷ்.

சாருமதி, "ஆமா... இன்னைக்கு ஏதாவது இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கா? எதுக்கு எல்லாரும் டென்ஷனா இருக்காங்க?" எனக் கேட்கவும், "ஓஹ்... அதுவா... கம்பனி எம்.டி வராங்க இன்னைக்கு..." என்றான் ஆகாஷ் கூலாக.

அனுபல்லவி, "என்ன? மூர்த்தி சார் வராரா? ஏன் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணல?" எனப் பதறிக் கேட்க, "அவர் கம்பனி... அவருக்கு வேண்டிய நேரம் அவர் வராரு... உனக்கு என்ன டி வந்துச்சு? ஏதோ தப்பு பண்ணி மாட்டிக்கிட்டது போல முழிக்கிற..." என்றாள் சாருமதி.

அவளைப் பார்த்து இளித்து வைத்த அனுபல்லவி, "ஆமால்ல... சும்மா பயப்படுறேன் நான்..." என்றாள்.

ஆகாஷ், "மூர்த்தி சார் ஒன்னும் இன்னைக்கு வரல... அவர் பையன் தான் வரார்..." என்கவும், "என்ன? அவர் பையனா? எப்படி இருப்பார்? பார்க்க ஹேன்ட்சமா இருப்பாரா?" எனச் சாருமதி கண்கள் பளிச்சிடக் கேட்கவும் ஆகாஷிற்கு உள்ளுக்குள் எரிந்தது.

அவனின் முகம் போன போக்கைப் பார்த்து தனக்குள் சிரித்த சாருமதி, "சொல்லு பனைமரம்... ஆள் பார்க்க எப்படி இருப்பார்?" என வேண்டும் என்றே அவனைக் கடுப்பேற்றுவதற்காக கேட்க, "ஆஹ்... அவர் வந்ததும் நீயே போய் பார்த்துக்கோ..." எனக் கடுப்பாக கூறிய ஆகாஷ், "வந்துட்டா ஹேன்ட்சம் அது இதுன்னு... ஒருத்தன் அவ பின்னாடியே சுத்துறேன்... அதெல்லாம் அவ முட்டைக் கண்ணுக்கு தெரியாது... என் கிட்டயே கேட்குறா பாரு கேள்வி..." என முணுமுணுத்தவாறு அங்கிருந்து செல்லவும் சாருமதி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

அனுபல்லவி, "ஹேய் பாவம் டி சாரு அவர்... எதுக்கு சும்மா அவரை டீஸ் பண்ற?" எனத் தோழியைக் கடிந்துகொள்ள, "என்ன எவ்வளவு கடுப்பேத்தி இருப்பான்... கொஞ்சம் நேரம் வயிறு எரியட்டும்..." எனச் சிரித்தாள் சாருமதி.

சற்று நேரத்திலேயே அங்கு வந்த மேனேஜர் மோகன், "காய்ஸ்... சீக்கிரம் எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வாங்க... எம்.டி வந்துட்டு இருக்கார்..." என்கவும் அனைவருமே மீட்டிங் ஹாலிற்கு சென்றனர்.

அனுபல்லவி, 'என்ன இன்னைக்கு இவர் இன்னும் வரல? எம்.டி வேற வராராமே... எம்.டி கிட்ட திட்டு வாங்குவாறோ? ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னு வேற சொன்னாரே...' என எண்ணியபடி சென்றாள்.

மீட்டிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து தமக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, புயல் வேகத்தில் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக அவ் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு அனைவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தன.

சாருமதி திறந்த வாய் மூடாமல் இருக்க, அவனைத் தொடர்ந்து வந்த ஆகாஷோ சாருமதியைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

அனுபல்லவிக்கோ இன்னும் என்ன நடக்கிறது என்று புரியாத நிலை.

அர்ச்சனா ஒரு படி மேலே சென்று கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அம்ர்ந்து இருந்த கார்த்திக் தான் அர்ச்சனாவைப் பார்ந்து மனம் வாடினான்.

கம்பனி எம்.டி என்பதற்கு பொருத்தமாக கருநீல நிற கோர்ட் சூட் அணிந்து டை கட்டி கம்பீரமாய் வந்திருந்த பிரணவ்வோ அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு, "ஹாய் காய்ஸ்..." என்றான்.

பிரணவ், "என்னைப் பத்தின இன்ட்ரூ உங்களுக்கு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்... இருந்தாலும் சொல்றேன்... என் ஃபுல் நேம் பிரணவ் ராஜ்... எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் சீ.இ.ஓ. மூர்த்தி ராஜோட ஒரே பையன்... இந்த கம்பனி எம்.டி நான் தான்..." என்றவன் ஆகாஷிடம் கண் காட்ட, அதனைப் புரிந்து கொண்டதாய் தலையசைத்த ஆகாஷ், "தன்னோட ஸ்டாப்ஸோட ஸ்டாஃப்ஸா வேலை பார்த்து அவங்க மனசுல என்ன இருக்குங்குறதை தெரிஞ்சிக்க தான் பாஸ் நம்ம கம்பனில ப்ராஜெக்ட் மேனேஜர் போல ஜாய்ன் பண்ணார்... பாஸ் கைட் பண்ணின டீம் மட்டும் இல்லாம எல்லா டீமுமே ரொம்ப நல்லா வர்க் பண்ணீங்க... சோ இன்னைல இருந்து பாஸ் எம்.எல். கம்பனீஸ் பெங்களூர் ப்ரான்ச்சை பொறுப்பு எடுத்து நடத்துவார்..." என்கவும் அனைவரும் கை தட்டினர்.

இன்னும் சில முக்கியமான விடயங்களைப் பேசி விட்டு மீட்டிங் முடிய, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாருமதியின் பின்னே பெளியேறிய ஆகாஷ், "என்ன குட்டச்சி? உங்க எம்.டி ஹேன்ட்சமா இருக்காரா?" எனக் கேலி செய்ய, அவனைப் பார்த்து உதட்டை சுழித்த சாருமதி, "உன்ன விட ஹேன்ட்சமா தான் இருக்கார் நெட்டக்கொக்கு..." என்று விட்டு செல்லவும் குறும்பாகப் புன்னகைத்தான் ஆகாஷ்.

அனைவரும் சென்ற பின்னும் அனுபல்லவி மட்டும் அங்கேயே நிற்க, அனைவரும் சென்று விட்டதை உறுதிப்படுத்தி விட்டு அனுபல்லவியை நெருங்கிய பிரணவ் அவளின் தோள்களில் தன் கரத்தைப் போட்டுக்கொண்டு, "எப்படி இருக்கு என் சர்ப்ரைஸ்?" எனக் கேட்டான் புன்னகையுடன்.

அவனைத் தயக்கமாக ஏறிட்ட அனுபல்லவி, "நீங்க தான் இந்த கம்பனி எம்.டி னு ஏன் முன்னாடியே சொல்லல?" எனக் கேட்க, "ஏன் பல்லவி? நான் எம்.டி யா இருக்குறது உனக்குப் பிடிக்கலயா?" என வருத்தமாகக் கேட்ட பிரணவ், "மனசுக்கு ஒரு சேன்ஜ் தேவைப்பட்டது... என் கடந்த காலத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகி வர முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வர நினைச்சேன்... அதனால தான்..." என்றான்.

வருவிக்கப்பட்ட புன்னகையுடன், "ஓஹ்... இல்ல எனக்கு ஹேப்பி தான்... திடீர்னு சொல்லவும் கொஞ்சம் ஷாக்... அவ்வளவு தான்..." என்ற அனுபல்லவி, "நா... நான் போகட்டுமா?" எனக் கேட்டாள்.

அவளின் நடவடிக்கைகளை குழப்பமாகப் பார்த்த பிரணவ், "என்னாச்சு பல்லவி? ஆர் யூ ஓக்கே? உடம்புக்கு ஏதாவது முடியலயா? நீ வேணா லீவ் எடுத்துக்குறியா?" என அனுபல்லவியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி வினவினான்.

பிரணவ்வின் அக்கறையில் உள்ளம் குளிர்ந்த அனுபல்லவி புன்னகையுடன், "நான் நல்லா இருக்கேன்... எனக்கு ஒன்னும் இல்ல... டென்ஷன் ஆகாதீங்க... யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க... அதான்..." என்க, "அதுல என்ன இருக்கு?" எனக் கேட்டான் பிரணவ் புரியாமல்.

ஒரு நொடி அமைதியாக இருந்த அனுபல்லவி, "பிரணவ்... சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம்... நாம காதலிக்கிற விஷயம் இப்பவே யாருக்கும் தெரிய வேணாம்... ப்ளீஸ்... எனக்காக இதை மட்டும் பண்ணுவீங்களா?" எனக் கேட்டாள் கண்களை சுருக்கி.

அவளின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய பிரணவ் உடனே புன்னகையுடன், "நீ கேட்டு நான் மறுப்பேனா பல்லவி? யாருக்கும் எதுவும் தெரியாது... பயப்பட வேணாம்... நீ போய் வேலையை கவனி... எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு..." என்கவும் முகம் மலர்ந்த அனுபல்லவி அங்கிருந்து சென்றாள்.

அனுபல்லவி சென்றதும் லேசாக தலை வலிப்பது போல் உணர்ந்த பிரணவ் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளாது தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான்.

அனுபல்லவி புன்னகையுடன் தன் இருக்கையில் வந்து அமர, "அனு... என்னாச்சு? ஏன் சிரிச்சிட்டே வர? நேத்துல இருந்து நீ சரி இல்லயே... ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருக்க..." எனக் கேட்டாள் சாருமதி சந்தேகமாக.

"ஒன்னும் இல்லயே... ஒன்னும் இல்லயே..." என சிரித்தே சமாளித்த அனுபல்லவி, "இந்த சுதந்திர இந்தியாவுல ஒரு பொண்ணு சும்மா சிரிக்க கூட காரணம் வேணுமா?" என வராத கண்ணீரைத் துடைக்கவும் அவளை முறைத்த சாருமதி, "போதும் மேடம்... உங்க ட்ராமாவை நிறுத்துங்க... எப்படி இருந்தாலும் கடைசில என் கிட்ட தானே வந்தாகணும்... அப்போ பார்த்துக்கலாம்..." என்றாள்.

பின் சாருமதியின் கவனம் வேலையில் பதிய, நிம்மதிப் பெருமூச்சு விட்ட அனுபல்லவி, 'எப்படியோ இன்னைக்கு சமாளிச்சிட்ட அனு... டெய்லி இப்படி மறைக்க முடியுமா? பேசாம நானும் பிரணவ்வும் லவ் பண்றதை அவ கிட்ட சொல்லிடலாமா?' எனத் தன்னையே கேட்டுக்கொள்ளவும் அவளின் மனசாட்சி விழித்துக் கொண்டது.

மனசாட்சி, 'ஆமா... பிரணவ் எப்போ உன்ன லவ் பண்ணுறதா சொன்னான்?' எனக் கேட்கவும், 'ஆமால்ல... நான் மட்டும் தானே என் லவ்வை அவர் கிட்ட சொன்னேன்... அவர் ஒரு தடவை கூட ஐ லவ் யூ சொல்லலயே...' என யோசித்தவள், 'ச்சே ச்சே... பிரணவ் ஐ லவ் யூ சொல்லலன்னா என்ன? அவர் என்னைக் காதலிக்கிறது எனக்கு தெரியாதா? அவரோட பார்வையே என் மேல உள்ள காதலை சொல்லுது...' எனத் தன் மனசாட்சியை அடக்கினாள்.

அனுபல்லவி தன் போக்கில் மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க, அவள் தலையில் குட்டிய சாருமதி, "எந்த கோட்டையை பிடிக்கலாம்னு இப்போ யோசிச்சிட்டு இருக்க?" எனக் கேட்டாள் கேலியாக.

வலியில் தன் தலையைத் தடவியபடி சாருமதியை முறைத்த அனுபல்லவி அவளுக்கு பதிலளிக்காது கணினித் திரையில் பார்வையைப் பதித்தாள்.

************************************

"என்ன சொல்ற அர்ச்சனா? அந்த பிரணவ் தான் உங்க கம்பனி எம்.டி யா?" எனப் பிரதாப் அதிர்ச்சியாகக் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அர்ச்சனா, "ஆமா பிரதாப்... நான் தான் சொன்னேனே அவனைப் பார்த்தா சாதாரண ஆள் போல தெரியலன்னு... எப்படியோ நான் ஆசைப்பட்டபடியே வசதியான வாழ்க்கை வாழ முடியும்... அதுக்கு முதல்ல நீ அந்த அனுவை ஏதாவது பண்ணு... உன்னால முடியலன்னா சொல்லு... நான் என் வழில அவ கதையை முடிக்கிறேன்..." என்றாள் வன்மமாக.

பிரதாப், "அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதே அர்ச்சனா... அனுவுக்கு சீக்கிரம் நான் ஒரு வழி பண்றேன்... இனிமே அவ உன் வழில குறுக்கா இருக்க மாட்டா... நான் அதுக்கு இப்போவே ஏற்பாடு பண்றேன்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அர்ச்சனாவோ பகல் கனவு காணத் தொடங்க, அவளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், "அர்ச்சு... ஏன் நீ இவ்வளவு மாறிட்ட? ப்ளீஸ்... இப்படி எல்லாம் பண்ண வேணாமே..." எனக் கெஞ்ச, அவனைக் கோபமாக நோக்கிய அர்ச்சனா, "என்ன வேணாம்? நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை இல்லயா?" எனக் கேட்டாள் கோபமாக.

கார்த்திக், "அது தப்பில்ல அர்ச்சு... பட் ஒரு பொண்ணு வாழ்க்கையை ஸ்பாய்ல் பண்ணிட்டு உனக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?" எனக் கேட்க, "பிரணவ்வைப் பத்தி எதுவும் சரியா தெரியாமலே அவனை அடைய ஆசைப்பட்டேன் நான்... இப்போ இவ்வளவு பெரிய சொத்துக்கு சொந்தக்காரன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஈஸியா விட்டுக் கொடுத்துடுவேனா? நான் நினைச்சதை நடத்தியே தீருவேன்... அதுக்கு யாரு குறுக்கா நின்னாலும் அவங்களை என்ன வேணாலும் பண்ணுவேன்.." என்றாள் அர்ச்சனா ஆவேசமாக.

அர்ச்சனாவின் முகத்தில் தெரிந்த வன்மத்தில் கார்த்திக்கிற்கே திக் என்றானது.
 
Top