• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 1

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அத்தியாயம் 1
பொதுவாகப் புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருணத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலிருந்த அம்மக்களின் பார்வை, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போலக் கோபத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த ஆதிரையின் மீதே இருந்தது. ஆனால் ஆதிரையின் பார்வையோ, தன் கழுத்தில் சுமார் ஒரு ஒரு மணி நேரத்துக்கு முன் தாலி கட்டியவனின் மீதே இருந்தது. கதைகளில் வருவதைப் போல அவளுக்கென சக்திகள் இருந்திருந்தால் அவனைத் தன் கண்களாலேயே எரித்திருப்பாள் என்றால் மிகையாகாது.
ஆதிரையால் நடந்த நிகழ்வுகளை நம்பவே முடியவில்லை. சிறு வயதிலிருந்தே அப்பா, அம்மா, தம்பி அவள். இதுவே அவள் குடும்பம் என்று வாழ்ந்து வந்தாள். உறவினர்கள் என்றால் அது தந்தை வீட்டு உறவினர்களே. தாய் வீட்டு உறவினர்கள் என யாரையும் அவள் இதுவரை பார்த்ததே இல்லை. வளர வளர இது கருத்தில் படவும் ஆதிரையே ஒரு முறை தன் தாயிடம் கேட்டது உண்டு.
“ஏன் அம்மா! உங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லையா? ஏன் யாரையுமே நான் பார்த்தது இல்லை?” என்றாள்.
ஆனால் அதற்கும் தாயிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால், ‘முதலில் காதல் திருமணமாக இருக்குமோ! அதைத் தாய் வீட்டுப் பெரியவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லையோ’ என்று எண்ணினாள். கூடவே “கல்யாணத்தின் முன்பே இவரைப் பற்றித் தெரிந்திருந்தால் இவரைத் திருமணமே செய்திருக்க மாட்டேன்” எனச் சண்டைகளுக்கு நடுவில் கூறும் தாயின் புலம்பல்கள் நினைவு வர, இவர்கள் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைத்தவள், தன் தாய்க்கென உறவினர்கள் யாரும் இல்லை போல என்று தான் எண்ணியிருந்தாள். ஆனால் உண்மைகள் என்றுமே இரகசியமாக இருந்து விடுவதில்லையே!.
ஒரு வாரத்திற்கு முன்பு முத்து என்பவர் ஆதிரையின் தாய் மாமா என்று கூறிக்கொண்டு அவள் வீட்டிற்கு வரும் வரை அவளும் தன் தாய்க்கென உறவினர்கள் யாரும் இல்லை என்றே நம்பிக் கொண்டிருந்தாள். திடீரென ஒருவர் அவள் வீட்டிற்கு வந்ததும் இல்லாமல் அவர்தான் அவளது தாய் மாமா என்றும் அவளது தாயின் பூர்விகம் தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமம் என்றும் கூறினார். அவரது மகள் திருமணத்திற்கு அழைக்க வந்திருப்பதாகவும் கூறினார். முதலில் கிராமத்திற்கு வர மறுத்த பெற்றோர்களும் நீண்ட நேரப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு
‘திருமண நாள் அன்று வருகிறோம்’ என்றனர்.
முத்துவோ அதையெல்லாம் காதில் வாங்காமல் கையோடு கூட்டி வருவதாக ஊரில் கூறி வந்தேன். ‘எத்தனை நாட்கள் ஆனாலும் இருந்து, கூட்டிச் செல்கிறேன்’ எனப் பிடிவாதமாக இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி, ஆதிரையின் குடும்பத்தை இந்தக் கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
நடப்பவை எதுவுமே புரியாமல் முழித்துக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் எதுவாக இருந்தாலும் இந்தத் திருமணம் முடிந்து மீண்டும் நம் வீட்டிற்கு வந்தபிறகு பேசிக் கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கூறியதால் பிள்ளைகளும் அதற்கு மேல் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இவ்வாறே சென்னையிலிருந்து ஆதிரையின் குடும்பம் தஞ்சைக்கு அருகில் உள்ள அவளது தாயின் பூர்விகமான இக்கிராமத்திற்கு வந்தனர்.
ஆனால் தோண்டத் தோண்டப் புதையல் வரும் என்பார்களே அதைப் போல் கிராமத்திற்கு வந்தபிறகும் ஆதிரைக்கும் அவள் தம்பிக்கும் பல ஆச்சரியங்கள் இருந்தன. உறவினர்களே இல்லை என்று நினைத்திருந்த தாய்க்கு முத்து என்பவரோடு சேர்த்து இரண்டு அண்ணன்களும் ஒரு அக்காவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாகவே அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய பிள்ளைகள் என ஆதிரையின் வயதுடைய ஆறு ஏழு பிள்ளைகள் இருந்தனர். முதலில் யாருடனும் அதிகம் சேராமல் இருந்த ஆதிரையும் அவள் தம்பியும் இரண்டு நாட்களில் அங்குள்ள பிள்ளைகளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டனர்.
அங்குள்ள அனைவரும் இவர்கள் இருவரிடமும் நன்றாகப் பழகினாலும் கூட அவர்களது தாயுடன் அங்குள்ள அனைவருக்கும் என்ன பிரச்சனை என்றோ அல்லது இத்தனை ஆண்டுகளாக ஏன் யாரும் அவர்களைப் பார்க்க வரவில்லை என்பதைப் பற்றி எல்லாம் அங்கு யாரும் பேசவே இல்லை.
ஒரு வாரம் முழுவதுமாகத் திருமண வேலைகள் மற்றும் கடைசி நேர சாப்பாடு என அனைவரும் மிகவும் மும்மரமாக இருந்தனர். ஒரு வழியாக அவர்கள் வந்த கல்யாண நாளும் வந்தது. திருமணத்திற்கு வந்த அனைவரும் ஆதிரையும், அவள் தம்பியையும் இவர்கள் தான் மங்களத்தின் மக்களா என நலம் விசாரித்துச் சென்றனர்.
அந்தக் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் உறவினர்கள் நண்பர்கள் எனக் கூட்டம் அலைமோதியது. பெரியவர்கள் அனைவரும் விருந்தினர்களை வரவேற்பதிலும் திருமண வேலைகளிலும் மும்மரமாக இருந்ததால், இளைஞர்களே அனைவரையும் உணவிற்கு அழைத்துச் செல்வது மற்றும் வந்த அனைவரும் உண்டார்களா என்று கவனிக்கும் பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டனர். ஒரு வழியாகக் கூட்டம் குறையத் தொடங்கியது.
சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாமென இளைஞர்கள் பட்டாளம் அமரும் வேளையில் திடீரென மண்டபத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்ன நடக்கின்றது என்று புரியாமல் அனைவரும் பார்க்க ஒரு பத்து பதினைந்து பேர் கைகளில் தாம்பாள தட்டுகளுடன் அங்கு வந்து கொண்டிருந்தனர். அதில் பட்டுப் புடவைகள் அணிந்து ஆறு ஏழு பெண்களும் அவர்களுக்குப் பின்னால் நான்கைந்து ஆண்கள் மிகவும் கம்பீரமாகவும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் மண்டபத்திலிருந்த அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர். “பெரிய வீட்டிலிருந்து வந்திருக்கின்றார்களே! என்ன நடக்கப் போகிறதோ?” என்று சிலர் பேசிக்கொள்வது ஆதிரையின் காதுகளில் விழுந்தது.
“பெரிய வீடா? அவர்கள் வந்தால் என்ன பிரச்சனை?” என எண்ணிக் கொண்டே அவள் குடும்பத்தைப் பார்த்த ஆதிரைக்கு அதிலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
அவள் குடும்பத்தில் யாருமே வந்தவர்களைக் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. மேடையிலிருந்து அனைவரும் விலகிக் கொண்டிருந்தனர். வந்த விருந்தினர்களும் இவர்களது வரவேற்பை எதிர்பார்ப்பது போல் தெரியவில்லை. அவர்கள் நேராக மேடையில் ஏறி விழாவின் நாயகியான மணப்பெண்ணுக்கு அவர்கள் கொண்டு வந்த வரிசைகளையும், தங்கத்தில் நகைகளும் பரிசு அளித்தனர். முதலில் தயங்கிய மணப்பெண் அவளது பெற்றோர்களை ஒருமுறை பார்த்துவிட்டுப் பரிசுகளை வாங்கிக் கொண்டாள்.
வந்தது பரிசு கொடுக்கத்தான் என்பதைப் போலப் புகைப்படத்திற்காகவும் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். அவர்கள் செல்லும்போது சில விருந்தினர்கள் அவர்களுக்கு வணக்கம் வைப்பதையும் பார்க்க முடிந்தது. வணக்கம் வைப்பவர்களுக்கு நடக்கும் பொழுதே ஒரு சிறிய தலை அசைப்புடன் எங்கும் நின்று சிறு தாமதம் கூட இல்லாமல் சென்று விட்டனர்.
‘யார் இவர்கள்?’ என்று கேட்கலாமென உடன் இருக்கும் நண்பர்களைப் பார்த்தால் அவர்களோ அங்கு நடந்த எதையுமே பார்க்காதவர்கள் போல அமர்ந்திருந்தனர்.
‘என்ன இது’ என்று ஆதிரை சிந்திக்கும் பொழுதே அவள் காதருகில் ஒரு குரல் கேட்டது. அது வேறு யார் குரலும் இல்லை ஆதிரையின் தம்பி விக்ரம் தான்.
“என்ன அக்கா, இந்த ஊரில் நம் வீட்டைப் போலவே பல மர்மங்கள் இருக்கும் போல?” என வினவினான்.
“இங்கிருந்து சென்றவுடனே, அம்மாவைப் பிடித்து முழு கதையையும் கேட்டு விட வேண்டும் இல்லையெனில் எனது குட்டி தலை வெடித்துவிடும் அக்கா” என்று விக்ரம் அவனது தலையை ஆட்டி ஆட்டிக் கூறவும் ஆதிரைக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஆனால் அதுவே அவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் வரப்போகிறது என்றோ அந்தத் தருணத்தில் அவர்கள் அறியவில்லை.
திருமணம் முடிந்த அன்றே ஊருக்குக் கிளம்புகிறோம் என ஆதிரையின் பெற்றோர்கள் கூறியதை அங்கு யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் தங்கித்தான் ஆக வேண்டும் என்று கூறவும் வேறு வழியில்லாமல் தங்கினர்.
மறுநாள் காலைப் பொழுது மிகவும் அழகாக விடிந்ததை போல் இருந்தது ஆதிரைக்கு. கண்கள் திறக்கும் முன்பே அவளது காதுகளில் பல பறவைகளின் சத்தங்கள் கேட்டன. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால், கல்யாண வேலையில் இரவு பகலாக வேலை பார்த்ததின் அசதியில் அனைவரும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
யாரையும் தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் மெதுவாக எழுந்து முகம் கழுவி விட்டு வீட்டின் வாசலிற்கு வந்தாள். வாழ்நாளில் அதிகமாக நகரத்திலேயே வாழ்ந்த ஆதிரைக்கு அந்தக் கிராமத்தின் தோற்றம் மிகவும் ரம்மியமாகத் தோன்றியது.
நகரத்தில் காலையில் எழுந்தாலே வாகனத்தின் சத்தங்கள் தான் முதலில் காதில் விழும், காலையில் எழுந்தவுடனே வாகன நெரிசலில் மாட்டினால் நேரம் ஆகிவிடும் என்ற பயத்தில் அன்றைய நாட்கள் ஓடத் தொடங்கிவிட வேண்டும். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேற்றுமைகள் உள்ளன என ஆதிரை மிகவும் வியந்து போனால்.
'சிறிது நேரம் சாலையில் நடக்கலாமா?' என்று நினைத்தவள், அவளது பெரிய அத்தை பத்மாவின் குரலில் திரும்பிப் பார்த்தாள்.
“என்னடா ஊர்மீ? என்ன சிந்தனையில் உள்ளாய்?” என்று கேட்டார்.
“ஊர்மியா?” என்று ஆதிரை கேட்கவும்.
“ஊர்மியா? அப்படியா சொன்னேன்! இல்லையேடா. ஒருவேளை தூக்கக் கலக்கத்தில் ஏதாவது சொல்லிருப்பேன் அதைவிடு இங்கு என்ன செய்கிறாய்?” என்றார்.
“பரவாயில்லை அத்தை, சும்மா நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் எவ்வளவு அழகாக இருக்கின்றது. எங்கும் பசுமையாகவும் அமைதியாகவும் உள்ளது, அதனுடன் இந்தப் பறவைகளின் சத்தம் கேட்கும்பொழுது மிக நன்றாக உள்ளது அத்தை” என்றாள். அவள் கண்ணிலிருந்த பளபளப்பும் முகத்திலிருந்த மகிழ்ச்சியும் பத்மாவை ஏதோ செய்யவும்
“அதற்கென்னடா கண்ணு? அனைவரும் தூங்கி எழுந்தவுடன் உனக்கு ஊரைச் சுற்றிக் காட்டச் சொல்கிறேன், சரியா? இப்போது காபி குடிக்கிறாயா?” என்றார்.
வந்தநாள் முதல் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் எனத் தாயிடம் கேட்டுக் கேட்டு அழுத்து போன ஆதிரைக்கு இன்று ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்றவுடன் மகிழ்ச்சியில் அவளுக்குத் தலைகால் புரியவில்லை.
“சரி அத்தை” என்று கூறிவிட்டுத் துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
காலை உணவு முடிந்தவுடன் பத்மா பிள்ளைகளிடம் ஆதிரைக்கும் விக்ரமிற்கும் ஊரைச் சுற்றிக் காட்டச் சொல்லிக் கூறவும் பிள்ளைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியானாலும் ஆதிரையின் பெற்றோர்கள் முதலில் தயங்கினர். ஆனால் பிள்ளைகள் அனைவரும் செல்வதால் எதுவும் சொல்லாமல் அனுமதித்தனர்.
பத்மாவின் இளைய மகள் கவிதா தான் அங்கு வந்ததிலிருந்து ஆதிரைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாள். அனைவரும் சேர்ந்து நடந்தே ஊரைச் சுற்றிப் பார்க்கலாமெனக் கிளம்பிவிட்டார்கள். செல்லும் வழியில் கவிதா ஆதிரையிடம் “நாம் முதலில் எனக்கு மிகவும் பிடித்த இடத்தைத் தான் பார்க்கப் போகிறோம்” என்றாள்.
“அப்படி என்ன இடம்?” என்ற ஆதிரையிடம்
“நாமே வந்து விட்டோம்" எனக் கூறி அவர்களுக்கு முன் இருந்த இடத்தைக் கைகாட்டினாள்.
அவள் கைகாட்டிய இடத்தைப் பார்த்த ஆதிரை ஒரு நிமிடம் அப்படியே உரைந்து விட்டாள். நகரத்திலேயே வாழ்ந்த ஆதிரைக்கு அந்தக் காட்சி மிகவும் ரம்மியமாக இருந்தது.
அவர்களுக்கு எதிரில் ஒரு பெரிய ஆறு ஒன்று இருந்தது. அதற்கும் ஒரு கரையில் இவர்கள் நின்று கொண்டிருந்தனர். மறுகரையில் அவர்கள் கண்கள் எட்டும் வரை வயலாக இருந்தது. அதைப் பார்க்கும்பொழுது பூமி தாய் பச்சை நிற பட்டு உடுத்தி அழகாகச் சிரிப்பது போல் இருந்தது ஆதிரைக்கு. அவர்கள் நிற்கும் இடத்திற்கு அருகில் கல்லால் ஆன இருக்கைகள் சில இருந்தனர். அதைக்காட்டி அதில் சிறிது நேரம் அமருவோம் என்று அனைவரும் சென்று அமர்ந்தனர். பெண்கள் அங்கு அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்கள் அங்கிருந்த ஆறில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.
கவிதா “இந்த இடம் தான் ஆதிரை எனக்கு மிகவும் பிடித்த இடம். பரீட்சையின்போது கூட நான் இங்கு தான் அமர்ந்து படிப்பேன்” என்றவளை இடைமறித்து.
“ஆமாம். ஆமாம். வீட்டில் அத்தையிடம் அடி வாங்கினாள் கூட அழுது கொண்ட இங்கு தான் வருவாள்” என்று கூறி அவளைப் போல அழுது காட்டினான் ஆதிரையின் பெரியம்மா மகன் ராம்.
ராம் கவிதாவைப் போல் அழுது காட்டவும் அங்கு ஒரு சிரிப்பலை பரவியது. உடனே கோபத்துடன் கவிதாவும் ராமை அடிக்க ஓடவும், அவளது கைகளில் சிக்காமல் ராம் ஓடத் தொடங்கி விட்டான். இவை அனைத்தையும் பார்த்த ஆதிரையும் விக்ரமும் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.
திடீரென அனைவரும் சிரிப்பை நிறுத்தி விட்டு ஒருவகையான பதட்டத்துடன் காணப்பட்டனர். ஆற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தவர்களும் வேகமாகக் கரையேறி பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து அவர்களை மறைத்தவாறு நின்று கொண்டனர். சிறிது வினாடிகளில் ஒரு ஜீப் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அது சென்றதும் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆதிரையும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “என்ன நடந்தது? ஏன் அனைவரும் பதட்டமாக இருக்கின்றீர்கள்" எனக் கேட்டார்கள்.
'ஒன்றுமில்லை' என்று பதில் வரவும் விக்ரம் “அந்த ஜீப் யாருடையது?” என்றான்.
“எந்த ஜீப்பைப் பற்றிக் கேட்கிறாய்?” என்று ராம் பதட்டத்துடன் கேட்கவும்
"இப்போது நம்மைக் கடந்து போனதே! அதைப் பார்த்துத் தானே அனைவரும் பதட்டம் அடைந்தீர்கள்?” என்றான்.
“அது தேவ் அண்ணனின் ஜீப்” என்று கவிதா கூறவும்,
“யார் தேவ்?” என்று ஆதிரை கேட்டாள்.
“அது...” என்று ஆரம்பித்த கவிதாவை இடைமறித்த கவிதாவின் அண்ணன் மணி,
“அன்று அக்காவின் திருமணத்தில் கடைசியாக ஒரு கும்பல் வந்ததே! அவர்கள் வீட்டுப்பையன். அதைத் தவிரப் பெரிதாக ஒன்றுமில்லை” என்றான்.
“ஓ!” என்று ஆதிரை முடித்தாலும் விக்ரம் விடுவதாக இல்லை. அவன் மேலும் கேள்வி கேட்டான். அவனுக்கு அப்படி என்ன தான் இந்தக் குடும்பத்தில் மர்மம் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என ஆர்வம்.
“அவர்கள் யார்? ஏன் அவர்களை யாரும் வரவேற்கவில்லை அப்படி என்ன பிரச்சனை” என்றான்.
இவன் பதில் தெரியாமல் விடப்போவதில்லை என்று அங்குள்ள அனைவருக்கும் புரிந்ததால் மணியே தொடர்ந்தான்.
“அவர்கள் தாத்தாவும் நம் தாத்தாவும் சகோதரர்கள். அவர்கள் நம்மைப் பல விஷயங்களில் ஏமாற்றிவிட்டார்கள், அங்கு யாரும் நல்லவர்களும் இல்லை. பணம் தான் முக்கியம். அதனால் இரு வீட்டிற்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. இப்போதைக்கு இந்த அளவு தெரிந்தால் போதும்” என்று கூறி பேச்சை முடித்து விட்டான்.
பேச்சு வேறு பக்கம் போவதைக் கவனித்த ராம் “சரி பேசியது போதும். ஆதிரைக்கும் விக்ரமிற்கும் ஊரைச் சுற்றிக் காட்டத் தான் வந்தோம், மதியம் சாப்பிட வேறு வீட்டிற்குப் போக வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கதையடிக்காமல் கிளம்புங்கள். அருகில் உள்ள கோவிலுக்குச் செல்லலாம்” என்றான். விக்ரம் ஏதோ சொல்ல வந்தவனை ஆதிரையின் பார்வை அடக்கவும், அனைவரும் கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலா? அல்லது திருமண மண்டபமா? எனும் அளவிற்குக் கோவில் மிகவும் பெரியதாக இருந்தது. கிராமத்தில் அத்தனை பெரிய கோவிலை அக்காவும் தம்பியும் எதிர் பார்க்கவில்லை. அவர்கள் எண்ண ஓட்டத்தைப் படித்தது போல் ராம் “சிலர் இங்கே வேண்டிக்கொண்டு திருமணமும் நடத்துவார்கள்” என்றான்.
கோவிலில் வழிபட்டு விட்டு அனைவரும் வீட்டிற்குச் செல்லலாமென நடக்கத் தொடங்கினர். செல்லும் வழியெல்லாம் கேலியும் சிரிப்புமாகச் சென்றனர். திடீரென அவர்கள் வழியில் காலையில் பார்த்த ஜீப் வந்து நின்றது.
அதிலிருந்து ஒரு முப்பது வயதை ஒட்டிய இளைஞன் ஒருவன் இறங்கினான். வெள்ளை நிற வேஷ்டியின் ஓரத்தில் சிவப்பு நிற கோட்டும் அதற்கு ஏற்றவாறு சிவப்பு நிற சட்டையும் அணிந்திருந்தான். வெள்ளையாகவும் இல்லாமல் கருப்பாகவும் இல்லாமல் மாநிறமாக இருப்பதே அவனுக்கு மேலும் அழகைச் சேர்த்தது. தனது உடம்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே அது சாத்தியம் என்பதைப் போலத் தேகம் வைத்திருந்தான். யாரையும் மயக்கி விடும் அவனது கண்கள் மிகவும் திடமாக ஆதிரையின் மீது இருந்தது. அவனைப் பார்த்ததும் முதலில் புரியாமல் முழித்தார்கள். அதிலிருந்து தன்னை உடனே சுதாரித்துக் கொண்டு பேசியது மணிதான்.
“என்ன? பிரச்சனை எதுவும் செய்ய வேண்டும் என்றே வழியை மறைக்கின்றாயா?” என்றான்.
அவன் கூறியதைக் காதில் கூட வாங்காதவன், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆதிரையின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்.
ஆதிரையுடன் இருந்தவர்கள், அந்த சாலை வழியில் சென்றவர்கள் என அனைவரும் உரைந்து நின்று விட்டார்கள். ஆனால் அங்கு உரையாமல் இருந்தது விக்ரம் மட்டும் தான். அவனது கைகள் அவன் அக்கா கழுத்தில் தாலி கட்டியவனைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது வினாடிகளில் அவனுடன் ராமும் மணியும் கூட சேர்ந்து கொண்டார்கள். அதற்குள் ஊர் மக்கள் அனைவரும் அங்குக் கூடிவிட்டனர். ஒரு வழியாகச் சண்டையை விலக்கிவிட்டு இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் சொல்லி அனுப்பவும், அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.
விக்ரம் அங்கு ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தான். அனைவரது பார்வையும் ஆதிரையின் மீதே இருந்தது. ஆனால் தாலி கட்டிய நொடியிலிருந்து இந்த நொடிவரை அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவளது பார்வையும் தன் மீது தாழி கட்டியவனின் மீதிருந்து மாறவில்லை. அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.​
தொடரும்...​
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
அடே தேவ் என்னடா இப்படி சொல்லாம கொள்ளமா தாலியை கட்டிட்ட🙄🙄🙄.....ஆரம்பமே ஒரே மர்மமா இருக்கு
 

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அடே தேவ் என்னடா இப்படி சொல்லாம கொள்ளமா தாலியை கட்டிட்ட🙄🙄🙄.....ஆரம்பமே ஒரே மர்மமா இருக்கு
nandri akka..
 
Top