• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 4

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அத்தியாயம் 4
இரவு நடந்த நிகழ்வுகள் மீனாட்சியம்மாளுக்கு சிறிது நம்பிக்கையை அளித்தாலும் உண்மைகள் அனைத்தும் தெரியும்பொழுது ஆதிரை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்கின்ற பயமும் அவருக்கு இருந்தது. ஆனால் அதற்காக இப்போது என்ன செய்தாலும் அது எதிர்மறையாக மாறவும் வாய்ப்பு இருப்பதால் அவர் அமைதியாகவே இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் தான் மீனாட்சியம்மாளின் தந்தை வழி மாமா ஒருவர் இறந்ததாகச் செய்தி வந்தது. குடும்பம் முழுவதும் துக்கத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் திருமணம் ஆன பிறகு முதன் முதலில் ஒரு துக்கக்காரியத்திற்கு செல்லக் கூடாது என்ற பழக்கம் அந்த ஊர் பக்கம் இருந்ததால் தேவாவையும் ஆதிரையையும் வீட்டில் விட்டுச் சென்றனர். ஆனாலும் முதலில் இந்தச் செய்தியை ஆதிரையிடம் கூறவே அனைவரும் தயங்கினர்.
வேண்டும் என்றே தனியாக விடுவதாகக் கூறுவாளோ என்று பயந்தார்கள் ஆதிரையோ செய்தியைக் கூறியதும் ‘சரி’ என்றதற்கு மேல் எதுவும் கூறவில்லை. கிளம்பும்பொழுது மட்டும் எப்போது வருவீர்கள் என மட்டும் கேட்டுக் கொண்டாள். இரவு வந்து விடுவோம் என்று கூறியதால் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
மீனாட்சி போவதற்கு முன் காலை உணவை ஆதிரையின் அறையில் வைத்து விட்டே சென்றிருந்தார். உணவை உண்டுவிட்டு அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தபோது அவளது அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
‘வீட்டில் அனைவரும் கிளம்பிய பிறகு யாராக இருக்கும்? ஒருவேளை தேவாவாக இருக்குமோ’ என யோசிக்கும் பொழுதே “ஆதிரை” எனத் தேவாவின் குரல் கேட்டது.
‘இவனுக்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும். வீட்டில் யாரும் இல்லை என்றதும் தைரியமாகக் கதவைத் தட்டுகிறான். தட்டிக் கொண்டே இருக்கட்டும்’ என மனதில் அவனைத் திட்டிக் கொண்டு அவளது கட்டிலில் அமர்ந்து கொண்டாள். தேவா சிறிது நேரம் கதவைத் தட்டி விட்டு அவளிடமிருந்து பதில் வராமல் போகவும் சன்னல் பக்கம் சென்று தட்ட தொடங்கினான்.
‘இவன் அமைதியாகச் சொன்னால் கேட்கமாட்டான் போல’ என அவனைத் திட்ட ஆயத்தமாகிக் கொண்டு சன்னலைத் திறந்தாள். தேவாவோ இவளைப் பேச விடாமல் மிகவும் அவசரமாக
“ஆதிரை... உன்னிடம் பேச வேண்டும், நான் உள்ளே வரவில்லை. எனவே அதற்காக ஒரு வாக்குவாதம் வேண்டாம்” என்றான்.
“சரி கூறு என்ன? எப்படியும் நீ செய்த செயலுக்கு நியாயம் பேசப் போகிறாயா” என்றவளை இடைமறித்து
“இது நம்மைப் பற்றிய விஷயம் இல்லை. உன்னால் என்னுடன் பக்கத்து ஊர்வரை வர இயலுமா” என்றான்.
அதற்கு அவள் பதில் கூறாமல் அவனைப் பார்த்து முறைத்து விட்டுச் சன்னல் கதவை மூட முற்படவும், தேவா தன் கைகளைக் கொடுத்து மூட விடாமல் செய்ததுடன்
“நான் அங்கு உள்ள பள்ளிக்கூடத்திற்குத் தான் கூப்பிடுகிறேன் வேறு ஒன்றும் இல்லை” என்றான்.
அவனது குரலிலிருந்த அவசரம் அவளைச் சிந்திக்க வைத்தது. அதோடு இல்லாமல் ‘பள்ளிக்கூடத்திற்கு ஏன் கூப்பிடுகிறான்?’ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆகவே மீண்டும் சன்னல் கதவை முழுதாகத் திறந்து
“என்ன? ஏன் வர வேண்டும்? அடுத்த நாடகமா?” என்றாள்.
“ஆமாம். அந்தப் பள்ளியில் ஒரு மேடை இருக்கின்றது. அதில் ஏறி நாடகம் போட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை” என்று கூறிக் கொண்டிருந்தவன் ஆதிரை சந்தேகமாகப் பார்க்கவும் அவனது விளையாட்டுப் பேச்சை நிறுத்திவிட்டு
“அது ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்னால் தனியாகப் போக இயலாத சூழ்நிலை. இந்த ஒரு முறை மட்டும் எனக்கு உதவி செய்” என்றான்.
“பெண்கள் பள்ளியில் உனக்கு என்ன வேலை” என்றாள்.
“அந்தப் பள்ளி மாலையில் முடிந்து விடும். அதுவரை இப்படியே பேசிக் கொண்டிருப்போமா? எனக்குச் சந்தோஷம் தான்” என்று அவன் கூறவும் அதற்கு மேல் அவனைப் பேச விடாமல் சன்னல் கதவை மூடினாள்.
‘இவன் ஏதாவது கதை கூறவும் வாய்ப்பு இருக்கின்றது தான். ஆனால் அவசரமாகக் கூப்பிட்டானே!’ எனச் சிந்தித்தவள் ‘சரி பள்ளிக்குத் தானே கூப்பிடுகிறான், என்ன தான் கதை என்று போய்ப் பார்ப்போம். உதவி என்றும் கேட்கிறான். ஒரு வேளை அனைத்தும் பொய்யாக இருந்தால் பிறகு இவனுக்கு இருக்கு’ என்று மனதிற்குள்ளேயே வழக்கம்போல் அவனை வருத்து எடுத்துக் கொண்டு கிளம்பி வீட்டின் வாசலிற்கு வந்தாள்.
அவளுக்கு முன் ஒரு காரை தேவா கொண்டுவந்து நிறுத்தவும் அவனிடம் குனிந்து
“உன் ஜீப் எங்கே” என்று கடுப்புடன் கேட்டாள். முதலில் முழித்தவன், அவளது கேள்வி புரியவும்
“ஜீப்பை வெளியிலிருந்தும் பார்க்க முடியும் தான். ஆனால் ஜீப்பில் சென்றால் நீ முன் இருக்கையில் அமர வேண்டும். என் அருகில் அமர ஆசையென்றால் சொல் உடனே காரைப் போட்டு விட்டு ஜீப்...” என்றவனிடம்
“போதும் நிறுத்து.” எனக் கூறிவிட்டு பின் இருக்கையில் வேகமாக ஏறி அமர்ந்தாள்.
அவள் கோபமாகக் கூறுவதைப் பார்த்துத் தேவா சிரித்துக் கொண்டே தலையை வலது புறமாகவும் இடது புறமாகவும் ஆட்டவும் ஆதிரை
“பார்த்து ... அப்படியே இழுத்துக் கொள்ள பேகிறது” என்றாள் அவளுக்குப் பதில் சொல்லி அவளைச் சீண்டிப் பார்க்கத் தேவாவிற்கும் ஆசைதான். ஆனால் ஏற்கனவே அவளுடன் வாதாடி நேரம் போய்விட்டதால் சிரித்துக் கொண்டே காரைச் செலுத்தினான்.
தேவா அமைதியாக இருந்தாளும் ஆதிரை அமைதியாகச் செல்வதாக இல்லை. செல்லும் வழியெல்லாம் பேசிக் கொண்டே... இல்லை... இல்லை... கேள்வி கேட்டுக் கொண்டே
“இது என்ன?... அது என்ன?... பள்ளி எவ்வளவு தூரம்... அங்கு எவ்வளவு நேரம் ஆகும்?...”
அவளது கேள்வி நீண்டு கொண்டே போகவும் தேவா
“உன் வயது என்ன?” என்றான்.
அவனது இந்தக் கேள்வியால் சிறிது முழித்தவள்
“ஓ! என் வயதே தெரியாதா? என் பெயராவது தெரியுமா?” என்றாள்.
அவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் ஆதிரையே
“என் பெயர் ஆதிரை” என்றாள்.
மீண்டும் அவன் எதுவும் கூறாமல் அமைதியாகச் சாலையை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கவும்
“என்ன உன் கண்ணுக்கு ஒரு பத்து லாரி தெரிகிறதா? ஏனெனில் எனக்கு ஒரு ஆடும் ஒரே ஒரு சைக்கிளும் தான் தெரிகிறது” என்றாள்.
அவள் கூறுவது புரியாமல் என்ன? என்று தேவா கேட்கவும்
“இல்லை சாலையை உத்து உத்து பார்க்கவும் இந்த நெரிசலில் எப்படி காரை ஓட்டுவது என்று சந்தேகமோ என்று எண்ணினேன்” என்றாள்.
தேவா உடனே காரைக் காலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, பின்பக்கம் இருந்த தன் மனைவியைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தான்.
அவன் திடீரெனக் காரை நிறுத்திவிட்டு முறைக்கவும் ஆதிரைக்கு முதலில் பயம் வந்ததே உண்மை. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல்
“முறைத்தால் பயந்துவிடுவோமா? பெயர் கூடத் தெரியாமல் தாலி கட்டியது உன் தவறு” என்றாள்.
“உன்னை விடவும் உன் பெயர் எனக்கு நன்றாகத் தெரியும்” என அவளது கண்களைப் பார்த்து ‘பெயர்’ என்னும் வார்த்தையை அழுத்திக் கூறினான்.
அவன் கூறியதின் பொருள் அப்பொழுது ஆதிரைக்கு முழுதாகப் புரியாததால்
“ஓ! பெயர் தெரியும். ஆனால் வயது தெரியாதோ” என்றாள்.
“இன்னும் என் கேள்விக்கான பதில் வரவில்லை” என்று அவன் அதே கேள்வியில் நிற்கவும் ஆதிரையும்
“இருபத்தி ஐந்து” என்றாள்.
“ம்ம்.... செல்லும் இடத்தில் உன் வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்”, என்று கூறிவிட்டு காரை எடுத்தான்.
இதைக் கேட்டதும் ஆதிரையின் கோபம் தலைக்கேறியது.
“நான் ஒன்றும் உன்னுடன் வருகிறேன் என்று கூறவில்லை. நீ தான் உதவி செய் என்று என்னிடம் கெஞ்சினாயென மறக்காதே” எனக் கத்திக் கொண்டிருந்தாள்.
“என் விதி. வேறு வழியின்றி உன்னிடம் கெஞ்சும் நிலையாகிவிட்டது. அதுமட்டுமல்ல என் வாழ்க்கையிலேயே நான் செய்த தவறு எதுவென்று தெரியுமா? உனக்குத் தாலி கட்டியது அல்ல. இன்று உன்னைக் கூட்டி வந்தேன் பார்த்தியா அதுதான்” என்றான்.
காரில் ஏறும் பொழுதே தேவா வேண்டும் என்றே தன்னை கிண்டல் செய்கிறான் என்று ஆதிரை தெரிந்து கொண்டாள். அதனால் தான் அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே ஆதிரை ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்ததும்.
ஆனால் அவனோ எதற்கும் கோபப்படாமல் ஒரு சிறிய புன்னகையுடன் பதில் கூறி வந்தான். அந்தக் கோபத்தில் தான் ஆதிரை அவர்களது திருமணத்தைப் பற்றிப் பேசியதும். அவனை அது காயப் படுத்தும் என்று அவள் அறிவாள். ஆனால் அவன் கோபப்படுவான் என்று அவள் அறியவில்லை.
அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. இதற்குமேல் அழுகையைக் கட்டுப் படுத்த முடியாதோ என்ற பயம் அவளுக்கு வரவும்
‘இவனது வேலை என்ன ஆனால் நமக்கு என்ன? நாம் கிளம்புவோம்’ என்று நினைத்தவள் காரை நிறுத்தச் சொல்லி வாய் எடுக்கும் போதே தேவா காரைப் பள்ளிக்குள் செலுத்தி நிறுத்தினான். காரை நிறுத்தியவன் கீழே இறங்காமல் தன் இருக்கையிலேயே கண்களை மூடிச் சாய்ந்துக் கொண்டான். சில நிமிடங்கள் காருக்குள் அமைதி நிலவியது. அந்த அமைதி ஆதிரைக்கும் தன்னை சரி செய்து கொள்ளத் தேவைப்பட்டது.
அவள் தன் அழுகையை அடக்கிச் சரிசெய்யவும் தேவா பேச ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
“ஆதிரை. ஸாரிடா. நான் வேறு எதுவோ நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று அவன் கூறும் பொழுதே ஆதிரை காரை விட்டு கீழே இறங்கிவிட்டாள்.
ஆதிரையின் கோபம் நீண்ட நேரம் இருக்காது என்று தேவா அறிவான். ஆனால் அதற்காக அவள் அதைச் சும்மாவும் விடமாட்டாள் என்றும் அவனுக்குத் தெரியும் தான்.
ஏற்கனவே அறையை விட்டு வெளியே வருவதில்லை. இப்போது இதுவேறு என்று தன்னையே திட்டிக் கொண்டு காரிலிருந்து கீழே இறங்கியவன் ஆதிரையுடன்
“இந்தப் பக்கம்” எனக் கூறி ஆசிரியர்களின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த ஒரு ஆசிரியை தேவாவைப் பார்த்ததும் எழுந்து நின்று வணக்கம் வைத்து
“வாங்க... வாங்க... என்ன இந்தப் பக்கம்” எனக் கேட்டுக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அவர்கள் இருவரையும் அமர வைத்தார்.
தேவா அவர்களிடம் “கவிதா ஆசிரியை அழைத்திருந்தார்கள் அவர்கள் வகுப்பில் படிக்கும் மல்லிகா என்னும் பெண்ணிற்காக” என்று கூறவும் அந்த ஆசிரியையும் ஏதோ புரிந்து கொண்டவரைப் போல
“ஓ. சரி, சரி, நான் இதோ அவர்களை வரச் சொல்கிறேன்” என்று எழுந்தவர் ஆதிரையைப் பார்த்து “இது?” என்றார்.
கேட்கிறார்கள் அல்லவா நீயே பதில் கூறிக்கொள் என்பதைப் போல அமைதியாக இருக்கவும் தேவாவே
“என் மனைவி” என்றான்.
அவரும் அமைதியாகப் போயிருக்கலாம் தான். தேவாவின் நேரமோ என்னமோ
“மனைவியா! திருமணம் ஆகிவிட்டதா? எங்கள் யாரையுமே கூப்பிடவில்லையே” என்றார்.
தேவாவிற்கோ ஆதிரை ஏதாவது கூறிவிடுவாளோ என்று உள்ளுக்குள் பயம். அதை மறைத்துக் கொண்டு,
“திருமணம் திடீரென்று முடிவானதால் யாரையும் கூப்பிட முடியவில்லை. நிச்சயம் வரவேற்பிற்கு அழைக்கிறேன்” இருந்தாலும் அழைத்திருக்கலாம். சரி வரவேற்புக்கு நிச்சயம் கூற வேண்டும் எனக் கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
அவர் காது எட்டாத தூரம் செல்லவும் ஆதிரை “ஆம் திடீர் திருமணம் தான். கல்யாண பெண்ணிற்கே தெரியாதே. அவ்வ...ளவு திடீர் திருமணம்” என்றவள் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியானாள்.
தேவாவிற்கு அப்போது தான் போன உயிர் வந்தது போல் இருந்தது. நல்லவேளை இதை அந்த ஆசிரியை இருந்தபோது கூறவில்லை. அதே நேரம் வரவேற்பைப் பற்றிக் கவனிக்காமல் விட்டாளென அமைதியானான்.
சென்ற ஆசிரியை வேறு ஒருவருடன் வரவும் தேவா எழுந்து நின்றான். வந்த அந்தப் புது ஆசிரியை தேவாவிடம்
“வாருங்கள் யாரையும் அழைத்து வரவில்லையா” என்று கேட்டுக் கொண்டே அந்த அறையினுள் வந்தார். தேவா எழுவதைப் பார்த்துத் தானும் எழுந்து நின்ற ஆதிரையை அந்த ஆசிரியை அப்போது தான் கவனித்தார்.
அவளைப் பார்த்தவர் “ஓ, இருக்கின்றார்களா, நீங்கள்?” என்று ஆதிரையைப் பார்த்துக் கேட்கவும் தேவாவிற்குத் தான் ‘என்ன திரும்பவும் முதலிலிருந்தா?’ என்பதைப் போல் இருந்தது. எப்படியும் அவள் கூறப்போவதில்லை என்று தெரிந்ததால் தேவாவே அவளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
நல்லவேளையாக இவர்கள் வேறு எதுவும் கேட்காமல் அவளை உடன் வருமாறு கூறி பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த ஆசிரியை ஆதிரையை தன்னுடன் வருமாறு கூறவும் ஆதிரை ஒன்றும் புரியாமல் தேவாவைத் தான் பார்த்தாள்.
தேவா “நான் காரில் இருக்கின்றேன். நீ வேலையை முடித்து விட்டுக் காருக்கே வந்துவிடு” எனக் கூறிவிட்டு அவளது பதிலிற்காகக் கூட நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். ஆதிரைக்குத் தான் தலைக்கேறியது...
‘எதற்கு அழைத்து வந்தான் என்றே தெரியவில்லை. இதில் வேலையை முடிக்க வேண்டுமாம்’ என்று நினைத்தவளுக்கு அப்படியே கத்த வேண்டும் போல் இருந்தது.
ஆனால் அப்படி கத்தினால் சுற்றி உள்ள அனைவரும் அவளைத் தான் பைத்தியம் என்பார்களே தவிர அவளை ஆட்டி வைக்கும் அவனை யாரும் ஏதும் சொல்லப் போவதில்லை என்று எண்ணி அமைதியாகவே அந்த ஆசிரியையுடன் சென்றாள்.
அந்த ஆசிரியை ஆதிரையை அழைத்துச் சென்ற அறைக்குள் ஒரு மாணவி அழுதுகொண்டே அமர்ந்திருந்தாள். அவளைத் தவிர அந்த அறையில் யாருமில்லை. ஆதிரைக்கோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது. அவளது நிலைமை தெரியாமல் அந்த ஆசிரியையும்
“இவள் தான் மல்லிகா” எனவும் ஆதிரைதான் திருவிழாவில் காணாமல் போன சிறுபிள்ளையைப் போல் முழித்துக்கொண்டிருந்தாள்.
ஆதிரை அப்படியே நின்று கொண்டிருக்கவும் அந்த ஆசிரியை “என்னமா? என்னவாயிற்று?” என்று கேட்கவும் ஆதிரைக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் யோசித்தவள்
“இவள் ஏன் அழுகிறாள்” என மல்லிகாவைக் காட்டி கேட்டு ஒருமாதிரி சமாளித்தாள்.
அவரும் அதற்குச் சிரித்துக் கொண்டே “பயந்துவிட்டாள் போல” என்றார்.
‘இந்த ஊரில் அனைவரும் மொட்டை மொட்டையாகத் தான் பேசித் தொலைவார்கள் போல’ எரிச்சலாகியது ஆதிரைக்கு. ஆனால் அவள் ஏன் என்று கேட்பதற்கு முன்பாகவே அவரே பேசத் தொடங்கினார்.
“பள்ளிக்கு வந்த பிறகே பெரிய மனுஷி ஆகியிருக்கிறாள் எட்டாம் வகுப்பு படிப்பவள் தானே. தனியாக வேறு உக்கார வைத்ததும் பயந்து விட்டாள். நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க விடாமல் அனுப்பி விடுங்கள்” என்றார்.
ஒரு வழியாக ஆதிரைக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. ‘ஆக இந்தப் பெண்ணை அழைக்கத்தான் தன்னை அழைத்து வந்திருக்கிறான்’ என நினைத்தவளும் வரிசையாகப் பல கேள்விகள் தோன்றின.
‘முதலில் இந்தப் பெண் மல்லிகா யார், ஏன் இவன் அழைக்க வர வேண்டும். அடுத்து என்ன’ என்று பல கேள்விகள் வரிசையாகத் தோன்றவும் அதற்கான பதிலைத் தேவா தான் கூறியாக வேண்டும் என்றும் அவளுக்குப் புரிந்ததும், அங்கு நின்ற ஆசிரியையிடம் சரியெனக் கூறிவிட்டு மல்லிகாவை அழைத்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றாள்.
செல்லும் வழியில் மல்லிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வரவும் ஆதிரை அவளிடம் மெல்லப் பேசத் தொடங்கினாள்.
“உன் பெயர் என்ன?” என்று ஆதிரை கேட்கவும்
“மல்லிகா” என்று பயந்துகொண்டே பதில் கூறினாள்.
காருக்குச் செல்லும் வரை இவளிடம் பேசிப் பார்ப்போம் பயம் கொஞ்சம் குறைந்து சகஜமாகப் பேசுவாளென நினைத்து ஆதிரை பேசப் பேச அவளது பயம் அதிகமாவதைப் போலவே தோன்றவும் ஆதிரை மல்லிகாவிடம்
“உனக்கு என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா” என்று கேட்கவும் மல்லிகாவும் ஆமாம் என்பதைப் போல் தலையாட்டினாள்.
“அடிப்பாவி!!” என்ற ஆதிரை “என்னைப் பார்த்தால் உனக்கு என்ன பயமா? அப்படியா கொடூரமாக இருக்கின்றேன்? என்றாள்.
“இல்லை” என்று மல்லிகாவிடமிருந்து பதில் வரவும்
“பிறகு ஏன் என்னைப் பார்த்துப் பயப்படுகிறாய்” என்றாள்.
“நீங்கள் தானே சென்னையிலிருந்து இங்கு வந்து தேவ் அண்ணாவை வீட்டின் வெளியே உக்கார வைத்தது?” என்று மல்லிகா கேட்கவும் ஆதிரைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவழியாகத் தன்னை சமாளித்துக் கொண்டு
“இது எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்” என்றாள்.
“நான் அங்கே விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்தேன்” என்றாள்.
இவளிடம் என்னவென்று கூறுவது என யோசித்த ஆதிரை
“உன் பள்ளியில் யாராவது தவறு செய்தால் என்ன செய்வார்கள்” என்றாள்.
மல்லிகாவோ “தண்டனை தருவார்கள்” என்றாள்.
“அதைத்தான் நானும் செய்தேன்” என்றாள் ஆதிரை.
ஆனால் ஆதிரை எதிர் பார்க்காத கேள்வியை மல்லிகா அவளிடம் கேட்டாள்.
“எங்கள் தேவ் அண்ணா தவறு செய்தாரா? வாய்ப்பேயில்லை? என்றாள்.
அவள் அப்படிக் கேட்டபோது அவளது அழுகை கோபம் எல்லாம் காணாமல் போய் இருந்தது. மாறாக அதில் மல்லிகா தேவாவின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இருந்தது.
தொடரும்...
 
Top