• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 7

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அத்தியாயம் 7

ஆதிரையின் கோபம் அதிகரிப்பதைப் போலவே அடுத்தடுத்த நிகழ்வுகளும் வரிசையாக நடந்தேறின. கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவள் காரின் சத்தம் கேட்டு, தன் அறையின் கதவுகள் வழியே எட்டிப் பார்த்தாள். அங்கே காரிலிருந்து ஒரு ஜோடி இறங்குவதைப் பார்த்ததும் ‘தேவாவின் அண்ணனும் அண்ணியும் வந்து விட்டார்கள்’ என்று ஆதிரைப் புரிந்து கொண்டாள்.

ஆதிரைக்கு விருப்பம் இல்லாமல் தான் அவளது திருமணம் நடந்தது. இன்றுவரையிலும் தேவாவையும் அவள் கணவனாக ஏற்றுக்கொள்ளவில்லை, அந்த வீட்டையும் தன் புகுந்த வீடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏனோ அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள், அவளை விடவும் வேறொரு பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காரிலிருந்து தேவாவின் சாயலில் இறங்கிய இளைஞனைப் பார்த்ததுமே ‘அவன் தான் தேவாவின் அண்ணன்’ என்று புரிந்து கொண்டவள், அவனுக்கு அருகிலிருந்த பெண்ணைக் கவனிக்கத் தொடங்கினாள்.

அந்தப் பெண் மீனாட்சியம்மாளிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். மீனாட்சியும் தன் கைகளால் அவளது தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்தவளுக்கு, இதுநாள் வரை மீனாட்சி தன் அருகாமையில் கூட வந்து பேசாதது முதன்முறையாகக் கருத்தில் பட்டது. அது, அந்தக் காட்சிக்கு அழகுகாட்டுவதைப் போன்றோ அல்லது எறியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றோ இருந்தது எனக் கூறலாம். அதே போல், தேவாவும் அங்கு வந்து சேர்ந்தான்.

அனைவரும் சில விநாடிகள் பேசிவிட்டு வீட்டினுள்ளே சென்றார்கள். அங்கே பேசிக்கொண்டிருந்தவர்களுக்குச் சிரிப்பிற்குக் குறைவில்லாமலிருந்தது.

‘சரி. எப்படியும் அறிமுகம் செய்து வைக்க, என்னிடம் தானே வந்தாக வேண்டும்? அப்போது பார்த்துக்கொள்கிறேன்’ என்று மனதிற்குள் முடிவு கட்டியவள், அவர்கள் வருகைக்காக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள்.

நீண்ட நேரமாகியும் அவள் அறைக்குள் யாரும் வந்ததைப் போலத் தெரியவில்லை. நேரம் போகப் போக ஆதிரை, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிவிட்டாள்.

சிறிது நேரத்தில், யாரோ கதவைத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்கவும் கண்களைத் தூக்கம் கலைந்து பார்த்தாள். அங்கே காலையில் பார்த்த அதே சமையல் செய்யும் பெண் மதிய உணவு வைப்பதைப் பார்த்தாள். ஆதிரை எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்கவும் வந்த பெண்ணும் எதுவும் கூறாமல் உணவை அங்கிருந்த மேஜையின் மீது வைத்துச் சென்றாள்.

‘யாரோ ஒருத்தி வந்ததால், வீட்டில் வேலை செய்பவர்கள் கூடத் தன்னை மதிக்கவில்லை’ என்று ஆதிரை எண்ணினாள். ஆனால் ஆதிரை அறியாத வேறுசில விஷயங்கள் இருந்தன. அது, அங்கு வேலை பார்த்த அனைவரும் ஆதிரையைப் பார்த்துப் பயந்தார்கள் என்பது தான். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. அந்தக் காரணம், ஆதிரையின் கணவன் தேவாதான்.

தேவாவின் தாத்தா அவ்வூரிலேயே பணக்காரராக இருந்தார். அதே சமயம் அனைவருக்கும் உதவுவதிலும் முன்னிற்பவராகவும் இருந்தார். தேவாவை வளர்த்தவரும் அவர்தான். அவரைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, அவரைப்போலவே தேவாவும் அனைவருக்கும் உதவுவதை தன் முக்கிய கொள்கையாக வைத்திருந்தான்.

சதாசிவம்-மீனாட்சிக்கு முதல் மகனாக ராம் இருந்தாலும், அவர்களது முக்கியமான குடும்ப தொழில்களையெல்லாம் தேவாதான் பார்த்துக்கொண்டிருந்தான். அதே போலப் படிப்பிலும் முதலிடம் வாங்கிவிடுவான்.

அக்கிராமத்தில் யார் வீட்டு விஷயமாக இருந்தாலும், துக்கமான நிகழ்வுகளாக இருந்தாலும், தேவாதான் முதல் ஆளாக இருப்பான். அக்கிராமம் மட்டுமின்றி... சுற்றியிருந்த கிராம மக்களும் தேவாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். தன் வீட்டுப் பிள்ளைகளையும் தேவாவைப் போல் வளர்க்க ஆசைப்பட்டனர். சிறுவர்களும் இளைஞர்களும் கூடத் தேவாவையே தன் முன்மாதிரியாக வைத்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல், அனைவரும் தேவாவை தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதினர். அந்தக் கிராமத்தின் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பணக்காரர்களில், கல்யாண வயதிலிருக்கும் தங்களது பெண் பிள்ளைகளைத் தேவாவிற்குத் திருமணம் செய்து வைக்கச் சதாசிவத்திடம் முயன்றுகொண்டிருந்தனர். ஆனால் சதாசிவம், ‘இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை’ என்றேக் கூறித் தட்டிக்கழித்து வந்தார்.

ஆனால் சதாசிவம் உட்பட யாருமே தேவா இப்படியொரு திருமணம் செய்வான் என்று எதிர்பார்க்கவே இல்லை. என்னதான் தேவா அப்படியொரு திருமணம் செய்திருந்தாலும்... பலர், ‘ஆதிரை மிகவும் கொடுத்து வைத்தவள்’ என்று தான் நினைத்தார்கள்.

ஆனால் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாத, அனைவரும் மதிக்கும் தேவாவையே ஆதிரை, வீட்டைவிட்டு வெளியில் போகச் சொன்னது அனைவருக்குமே பெரிய ஆச்சரியம் என்றால்... அவள் அதற்குப் பின் யாருடனும் பேசாமல், தனி அறையில் இருப்பதும் ஊர் முழுக்கப் பரவி இருந்தது.

இதற்கு முன், ‘தன் விருப்பம் இல்லாமல் தாலி கட்டியவனை ஆட்டி வைக்கிறாள்’ என்று சிலர் பேசிக்கொண்டாலும், அவனிடம் வேலை பார்ப்பவர்களெல்லாம் ‘தங்கள் முதலாளியையே இப்படி ஆட்டி வைப்பவள் தங்களையும் பாடாய்ப்படுத்தி விடுவாளோ?!’ என்று அவள்மீது அனைவருக்கும் பயம் இருந்தது.

ஆனால் இது எதுவும் தெரியாத ஆதிரையின் கோபம் முழுவதும் அந்த வீட்டின் மூத்த மருமகள் மீதே இருந்தது. அதை யார்மீது காட்டுவது என்று தெரியாமல் அவளது மதிய உணவின் மீதே காட்டினாள். அதன் விளைவாக அவள் மதியம் உண்ணாமலிருந்ததே மிச்சமானது. இப்போது அவளது கோபத்துடன் பசியும் சேர்ந்துகொண்டது.

‘அவள் உணவு உண்டிருப்பாள்’ என்று அந்தப் பாத்திரங்களை எடுக்கவந்த பெண், அவள் உண்ணாமலிருக்கவும் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

“எனக்குப் பசியில்லை” என்று ஆதிரை கூறவும், வேறு வழியின்றி கொண்டுவந்திருந்த உணவுகளை, எடுத்துச்சென்றாள் அந்தப் பெண்.

ஆதிரை உணவைத் திருப்பி அனுப்பிவிட்டாள் என்று தெரிந்ததும், மீனாட்சி அல்லது தேவா என யாராவது அவளைத் தேடி வருவார்கள் என்று உள்ளுக்குள் அவள் எதிர்பார்த்தாள் தான். அவள் எதிர் பார்த்ததைப் போல அவளைத் தேடி தேவா வந்தான் தான். ஆனால் அது மதிய உணவை அனுப்பிய பிறகு இல்லாமல் இரவு உணவை அனுப்பிய பிறகே வந்தான்.

வந்தவனும் அமைதியாக இருந்திருக்கலாம் தான். ஆனால் வாயைக் கொடுத்து வாங்கியே கட்டுவேன் என்று இருப்பவனை யார்தான் காப்பாற்ற முடியும்?.

“என்ன ஆதிரை? உடம்பு எதுவும் முடியவில்லையா? இன்று முழுவதும் நீ உணவு எடுத்துக்கொள்ளவே இல்லையா?” என்று அறையினுள் வந்தவன் பல கேள்விகளுடனேயே வந்தான்.

அவன் பல கேள்விகள் கேட்டும் ஆதிரை பதிலேதும் கூறாமல் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன தான் வாயைத் திறந்து பதில் கூறாமலிருந்தாலும், அவள் வழக்கம்போல் அவனை மனதினில்...

‘வந்தது ஒரு நாளான பிறகு... ஆனால் கேள்விகள் மட்டும் ஏதோ என்மீது இந்த உலகத்திலேயே இவன் தான் அக்கரையாக இருப்பதைப் போல் கேட்பது... என்ன ஒரு நடிப்பு!’ என்று திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் அவனது கேள்விகளுக்குப் பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருக்கவும், “என்ன ஆயிற்று? ஏன் அப்படிப் பார்க்கிறாய், உடம்பிற்கு எதுவும் முடியவில்லையா?” என்று மீண்டும் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகவும் ஆதிரை, “நான் ஒருத்தி...” என்று ஆதிரை கூற ஆரம்பித்தாள். அவளை முழுதாகப் பேசவிட்டிருந்தால் அவள் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ தெரியாது. ஆனால் அதற்குள் பாதி மூடியிருந்த அவளின் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும், அவள் பேசுவதை நிறுத்திவிட்டு கதவைப் பார்த்தாள்.

‘கதவைத் தட்டுவது கண்டிப்பாக மீனாட்சியாகத்தான் இருக்கும். உள்ளே வரட்டும் அம்மா, பிள்ளை இருவரையும் வைத்துக் கொண்டே பேசலாம்’ என ஆதிரை நினைத்துக் காத்திருந்தாள்.

தேவாவும் கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் யாரென்று வெளியே எட்டிப் பார்த்தவன்,

“வாருங்கள் அண்ணி! என்ன இந்த நேரத்தில்? எதுவும் வேண்டுமா?” என்று கேட்கவும்... வந்திருப்பது தேவாவின் அண்ணி என்று ஆதிரை புரிந்து கொண்டாள். ஆனால் இவள் ஏன் இப்போது இங்கு வருகிறாள்? என்று ஆதிரை சிந்திக்கும் பொழுதே தன் கையில் ஒரு கிளாஸ் முழுதும் பாலுடன் அறையினுள் வந்தவள்

“ஏன்? நான் வந்து உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனா?” என்று தேவாவிடம் சிரித்தபடியே கேட்டுக் கொண்டு உள்ளே வந்தாள்.

அவளது கேள்விக்குத் தேவா வேகமாக “அதெல்லாம் இல்லை அண்ணி. எதுவும் வேண்டுமோ என்று நினைத்தேன்” என்று கூறவும்

“அதுசரி கொழுந்தானாரே, நீங்கள் இங்கே இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்?” என்றவள் அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஆதிரையிடம் திரும்பி “ஆதிரை. நீ காலையிலிருந்து சாப்பிடவில்லையா?” என்றாள்.

‘இவளை யார் என்றே தெரியவில்லை. இதில் இவளிடம் சாப்பிட்டேனா இல்லையா என்று கூறவேண்டுமோ’ என்று ஆதிரை நினைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

இவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போகவும் தேவா தன் அண்ணியிடம் “என்னவென்று தெரியவில்லை அண்ணி. காலையிலிருந்து சாப்பிடவில்லையாம். கேட்டாலும் பதில் கூறாமல் அப்படியே இருக்கிறாள்” என்று கூறவும் ஆதிரை

“காலையில் சாப்பிட்டேன் மதியத்திலிருந்து தான் சாப்பிடவில்லை” என்று கூறினாள்.

ஏனோ தேவாவிற்கு அவளது குரலில் நக்கல் இருப்பதாகத் தோன்றியது. நேற்று முழுவதும் நன்றாக இருந்தவளுக்கு இன்று என்ன ஆனது என்றே அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அவள் கோபமாக இருப்பதாகத் தோன்றியது. தேவா சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனது அண்ணி தன் கையில் வைத்திருந்த பாலை ஆதிரையிடம் நீட்டி

“நீ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்று கூறினார்கள் ஆதிரை. அதான் பால் காய்ச்சி எடுத்து வந்தேன்” என்று கூறியவளை இடைமறித்துத் தேவா

“அண்ணி, ஆதிரைக்குப் பால் பிடிக்காது” என்றான்.

தேவா ஆதிரைக்குப் பால் பிடிக்காது என்று கூறிய வேகத்தில் ஆதிரை பிடிக்கும் என்று கூறிவிட்டு பாலை தன் கையில் வாங்கி மூச்சுவிடாமல் குடித்து முடித்தாள்.

தேவா கூறியதைப் போல ஆதிரைக்குப் பால் என்றாலே பிடிக்காதுதான். இன்னும் கூற வேண்டும் என்றால் அதன் நறுமணமே அவளுக்கு ஆகாது. சிறு வயது முதலே ஆதிரையை வெறுப்பேற்ற விக்ரம் கையாளும் சில பழக்கங்களில் பாலை அவள் அருகில் கொண்டு செல்வதுதான் முதன்மையானது கூட.

தேவா மீது இருந்த கோபத்தில் அவன் என்ன சொல்வது என்றுதான் பாலை குடித்து முடித்தாள். ஆனால் அதற்காகப் பால் என்ன வேறு மணமா வீசப்போகிறது? வழக்கம்போலப் பாலை சேர்த்த உடனேயே ஆதிரைக்குக் குமட்டத் தொடங்கி விட்டது. அதிலும் அதைக் குடித்து முடித்ததும் அவளுக்கு வாந்தியே வந்து விட்டது.

அவள் பாலை குடித்து விட்டுக் குமட்டத் தொடங்கவுமே தேவா “ஆதிரை! ஆதிரை!” என அழைக்கத் தொடங்கி விட்டான். இதில் ஆதிரை ஓடிச் சென்று வாந்தி வேறு எடுக்கவும் தேவாவிற்குத் தான் செய்த தவறு புரிந்தது.

என்னதான் ஆதிரை அனைவரிடமும் சாதாரணமாக நடந்து கொண்டாலும் அவள் இன்னும் தேவாவைக் கணவனாக ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் சிறு சிறு நிகழ்வுகள் கூட அவளது கோபத்தைத் தூண்டுகின்றது. ஏற்கனவே கோபமாக இருந்தவளிடம் அவன் சாதாரணமாகப் பேசியதே தவறு. இதில் தான் கூறுவதற்கு அப்படியே எதிர்மறையாகச் செய்பவளிடம் குறைந்தபட்சம் இந்தப் பாலை பற்றியாவது பேசாமல் இருந்திருக்கலாமெனத் தன்னையே நோந்து கொண்டான்.

தேவாவின் நிலை இப்படி என்றால் ஆதிரையின் நிலை அதைவிட மோசமாக இருந்தது. உணவு உண்ணாமல் இருந்ததுடன் வாந்தியும் சேர்ந்து கொள்ள மிகவும் சோர்ந்து போய் விட்டாள். ஆனாலும் கூட அதன்பிறகு இருவரும் எவ்வளவோ சமாதானம் செய்தும் வேறு எதையும் உண்ண மறுத்து விட்டவளைத் தேவாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தேவாவிடமும் ஆதிரை எதுவுமே பேசாமல் இருக்கவும் தான் இருப்பதால்தான் எதையும் உண்ண மறுக்கிறாளோ என்று நினைத்தவன் தன் அண்ணியிடம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். ஆதிரையை அப்படியே விட்டுச் செல்லவும் மனம் இல்லாமல் அறையின் வாசலிலேயே ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டான்.

அறையின் உள்ளே மிகவும் சோர்வாக ஆதிரை படுத்திருந்தாளும் கண்களை மூடாமல் தன்னை பார்த்துக் கொள்ளவென்று தன் எதிரில் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்திருந்த தேவாவின் அண்ணியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன்னையே ஆதிரை பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தவள் “என்ன ஆதிரை? என்மீது எதுவும் கோபமா?” என்று கேட்டாள்.

கேள்வி கேட்டவள் விளையாட்டாகத்தான் கேட்டாள். ஆனால் அதற்கு ஆதிரை ஆம் என்று பதில் கூறுவாளென அவள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் ஆதிரையின் பதில் அவளை அதிர்ச்சியடையச் செய்தது.

“என்மீது கோபமா” என அதிர்ச்சியாகக் கேட்டவள் தொடர்ந்து “என்மீது என்ன கோபம்? பால் கொடுத்தேன் என்றா? உனக்குப் பால் பிடிக்காது என்று எனக்குத் தெரியாதே” என மிகவும் பாவமாகக் கூறவும் ஆதிரைக்கே ஒரு நொடி தான் செய்தது தவறோ என்று தோன்றியது.

ஆதிரையிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும் தேவாவின் அண்ணியே தொடர்ந்து “என்ன ஆதிரை? எதுவும் கூறாமல் என்னையே பார்த்தால் என்ன அர்த்தம்” என்று கேட்டாள்.

ஆதிரை அவளது எந்த ஒரு கேள்விக்கும் பதில் கூறாமல் “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள்.

“என் பெயரா? என் பெயரை உன்னிடம் யாரும் கூறவில்லையா?” என்று கேட்டவள் தொடர்ந்து “கயல்” என அவளது பெயரையும் கூறினாள்.

வாய்ப்பிற்காகக் காத்திருந்த ஆதிரை எப்படி இதைச் சும்மா விடுவாள் “ஓ! பெயரா? இப்படி ஒருவர் இருப்பதையே நேற்று வரை யாரும் கூறவில்லை. இதில் பெயர் கூறாததைப் பற்றிக் கேட்கிறீர்களே!” என்றாள்.

“அத்தைக் கூடவா என்னைப் பற்றிக் கூறவில்லை?” என்று அவள் கூறி முடிப்பதற்குள் ஆதிரை “அத்தையா? அவர்களுக்கு உங்களுக்குப் பிடித்ததைச் சமைப்பதற்கே நேரம் போதவில்லை. இதில் என் ஞாபகம் எப்படி இருக்கும்? என் ஞாபகம் இருந்தால் தானே என்னிடம் பேசுவார். பேசினால் தானே உங்களைப் பற்றிக் கூறுவதற்கு” என்றாள்.

கயலிற்கு அவள் கூறுவதன் அர்த்தம் முழுதாகப் புரியவில்லை. என்ன கூறவருகிறாள் என்று சிந்திக்கும் பொழுதே ஆதிரையே கயலிடம் “எனக்குப் பசிக்கின்றது” என்றாள்.

தோசை எடுத்து வரவா எனக் கயல் கேட்கவும் ஆதிரையும் சரியென்றாள். தோசை ஊற்றுவதற்காக அறையை விட்டு வெளியில் வந்த கயலிடம் தேவா

“அண்ணி! என்ன ஆகிற்று மீண்டும் வாந்தி எடுக்கின்றாளா? மருத்துவமனைக்குச் செல்வோமா அண்ணி” என வரிசையாகக் கயலைப் பேசக்கூட விடாமல் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனான்.

தேவாவைப் பார்க்கக் கயலுக்கே பாவமாக இருந்தது. ஆனால் ஆதிரையின் மனநிலை என்னவென்று அவளுக்கே புரியாத நிலையில் இவனிடம் என்னவென்று விளக்க முடியும்.

“அவள் நன்றாகத் தான் இருக்கிறாள் தம்பி. பசிக்கின்றது எனக் கூறினாள் அதான் தோசை ஊற்றலாம் என்று” என்றவளிடம் தேவா

“அவள் உங்களிடம் நன்றாகத்தான் பேசினாளா? உங்களை எதுவும் கூறவில்லையே” என்றான்.

‘இதற்கு என்ன பதில் கூறுவது?’ என்று யோசித்தவள் “அவள் என்னிடம் எப்படிப் பேசுகிறாள் என்று தெரியவில்லை தம்பி. ஆனால்...” என்று ஆரம்பித்து ஆதிரை பேசிய அனைத்தையும் தேவாவிடம் கூறி முடித்தாள்.

கயல் கூறகூற தேவாவிற்கு ஓரளவு ஆதிரையின் கோபத்திற்குப் பின் இருந்த காரணம் புரிந்தது. கயலிற்காக மீனாட்சி சமைத்தது ஆதிரைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஆனால் காலையிலிருந்து மீனாட்சி வீட்டில் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இதில் இருவரையுமே குறைகூற இயலாது. ஆனால் தேவாவின் நிலை அப்படி இல்லையே. அவனாகத் தான் காலையிலிருந்து ஆதிரையை வேண்டும் என்றே தவிர்த்தான். ஆனால் அதன் காரணத்தைத் தற்போது இருக்கும் நிலையில் அவனால் அவளிடம் கூறவும் முடியவில்லை.
தொடரும்...
 
Top