• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 8

Malar Bala

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
67
அத்தியாயம் 8

தன் எதிரில் தீவிர சிந்தனையில் நின்று கொண்டிருந்தவனின் எண்ண ஓட்டங்களைக் கயலால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவனது துன்பத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனது துன்பம் பொறுக்காமல் கயல் தேவாவிடம்,

“இப்படி அனைவரும் கஷ்டப் படுவதற்குப் பதிலாக ஆதிரையிடம் அனைத்து உண்மைகளையும் கூறிவிடலாம் இல்லையா, தம்பி” என்றாள்.

“எனக்கே சில நேரங்களில் தோன்றுவது உண்டுதான் அண்ணி. ஆனால் ஏற்கனவே என்னை ஒரு வில்லன் அளவிற்குச் சித்தரித்து வைத்து இருக்கிறாள். இப்போது போய் நான் இதைக் கூறினால் வேண்டும் என்றே வேறு விதமாகப் புரிந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால் தான்…” என்று தேவா இழுக்கவும் கயல் “அதுவும் சரிதான்” என்றாள்.

கயல் தோசையை ஊற்றி, எடுத்து வந்து ஆதிரையிடம் கொடுக்கவும் அவள் வாங்கி வேக வேகமாக உண்ணத் தொடங்கினாள். அதைப் பார்த்த கயலிற்குச் சிரிப்பதா அல்லது பரிதாபம் படுவதா என்றே தெரியவில்லை. தான் சாப்பிடுவதையே எதிரில் உள்ளவள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு

“உங்களை உங்கள் கணவர் தேடப் போகிறார் நீங்கள் செல்லுங்கள். நான் நன்றாகத்தான் உள்ளேன்” என்றாள்.

“அது சரி! நான் இங்கு இருப்பதால் உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கயல் கேட்கவும்

“அதெல்லாம் இல்லை. உங்களைத் தேடுவார்கள்” என்று ஆதிரை கூறும் பொழுதே

கயல் “தேடுவதற்கு யாரும் வீட்டில் இல்லையே” என்று கூறவும் ஆதிரைக்கு எதுவும் புரியாமல் முழித்தாள். ஆதிரை முழிப்பதைப் பார்த்துச் சிரித்துவிட்டு கயலே தொடர்ந்து “முழிக்காதே ஆதிரை. அவரும் அத்தையும் வெளியில் சென்றுள்ளார்கள். நாளைதான் வருவார்கள். அதைத்தான் அப்படிக் கூறினேன்” என்றாள்.

“என்ன? எப்பொழுது சென்றார்கள்” என்று ஆதிரை கேட்கவும் கயல் “காலையில் நாங்கள் வந்தவுடனேயே சென்று விட்டார்கள். காலையிலிருந்து நானும் தனியாகத்தான் இருந்தேன். உன்னிடம் பேசலாமா என யோசித்தேன். ஆனால் நீ பேசுவாயா என்று தெரியவில்லையா” என்று கூறவும்

ஆதிரை “ஏன்? நான் என்ன ஊமையா?” என்று கேட்டாள். ஆதிரை அப்படிக் கேட்கவும் என்ன கூறுவது என்றே தெரியாமல் முழிப்பது தற்போது கயலின் முறையானது. அவள் முழிப்பதைப் பார்த்ததும் ஆதிரை சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கி விட்டாள்.

தன் முன் காரணமேயன்றி விழுந்து விழுந்து சிரிப்பவளைப் பார்க்கக் கயலிற்கே எரிச்சலாக வரவும் “என்ன?” என்றாள்.

ஆதிரை “சும்மா விளையாட்டிற்காகக் கூறினேன் அக்கா” என்றாள்.

கயல் அதற்கும் அதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் ஆதிரையே “என்னக்கா கோபமா?” என்றாள்.

கயல் “என்ன திடீரென மரியாதை எல்லாம் வருகிறது?” என்றாள்.

கயலின் கேள்விக்கு ஆதிரை தன் தோள்களைக் குலுக்கி விட்டு எந்தவொரு பதிலும் கூறவில்லை. சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு “அத்தை எங்கே சென்றுள்ளார்கள்” என்றாள்.

இந்தக் கேள்வியை ஆதிரையிடமிருந்து கயல் எதிர் பார்த்திருந்ததால் யோசிக்காமல் “அது தெரியவில்லை ஆதிரை. நாளை வந்த பிறகுதான் கேட்க வேண்டும்” என்று கூறி சமாளித்தாள்.

இருவரும் இரவு வெகுநேரம் பேசி முடித்துவிட்டு உறங்கியும் போனார்கள். ஆனால் அந்த இரவு முழுவதும் உறக்கத்தைத் தொலைத்தது தேவாதான். ஆதிரையை எப்படிச் சரிசெய்வது என்றே புரியாமல் வேதனை அடைந்தவனுக்கு ஆதிரையின் இன்றைய கோபம் சிறிது மன அமைதியையும் கொடுத்தது. அவளைவிடவும் இன்னொருவருக்கு முக்கியத்துவம் அளித்ததால் வந்த கோபம் அல்லவா, எனவே ஆதிரையின் கோபம் தேவாவிற்குச் சிறிது நிம்மதியாக இருந்தது.

காலையில் ஆதிரை கண்விழித்துப் பார்த்தபொழுது அவளுடன் கயல் இல்லை. நீண்ட நேரம் ஆகிவிட்டதோ என்று மணியைப் பார்த்தால் மணி அதிகாலை ஆறைக் காட்டியது. கயல் எங்கே சென்றிருப்பாளென எழுந்து முகம் கழுவிவிட்டு தன் அறையைவிட்டு வெளியில் வந்து பார்த்தாள்.

ஆனால் அறையின் வாசலில் ஒரு இருக்கையில் தேவா கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நேரத்தில் இவன் இங்கு என்ன செய்கிறானென அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த கயல்

“என்ன அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? உன் கணவன் தான் வேறு யாரும் இல்லை” எனக் கிண்டல் செய்து கொண்டே வரவும் ஆதிரை

“காலையிலேயே தவம் செய்து கொண்டிருக்கவும் ஏதோ சாமியார்தான் நம் வீட்டுக்குள் வந்து விட்டாரோ” என்று நினைத்தேன் என்றாள்.

“தவம்தான். தன் மனைவிக்கு இரவு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இரவு முழுவதும் அமர்ந்தே தவம் போல” என்று கூறி கைகளை விரிக்கவும் ஆதிரை தன் பளிங்கு விழிகளை விரித்து

“என்ன இரவு முழுவதும் உறங்கவில்லையா?” என்றாள்.

“தன் அறைக்கே போகவில்லை என்கிறேன்” என்றாள் கயல்.

ஆதிரைக்குத் தேவாவின் செயல்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தனது சிறிய வயதிலிருந்து இன்று வரை அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவளது தாய்தான் இரவு முழுவதும் உறங்காமல் அவள் அருகிலேயே இருப்பாள். விக்ரம்கூட பலமுறை அவளது தாயை அதற்காகக் கிண்டல் செய்ததும் உண்டு. சில நாட்களில் அவளுக்கென்றால் மட்டும் உறங்காமல் இருக்கின்றீர்கள், எனக்கென்றால் இருப்பதில்லையெனச் சண்டையெல்லாம் போட்டது உண்டு.

மங்களமோ “அவள் வேறு வீட்டிற்குப் போகப் போகிறவள்டா. அதோடு இல்லாமல் நீ என்றாள் தாங்கிக்கொள்வாய் அவள் அப்படி இல்லையே” என்று காரணம் கூறி அவனைச் சமாதானம் செய்வதும் உண்டு. ஆனால் தேவா ஏன் இரவு முழுவதும் உறங்காமல் முழித்திருக்க வேண்டும். அப்படி என்ன தன்மீது பாசம் என்று ஆதிரைக்குக் குழப்பமாக இருந்தது.

அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களது சத்தம் கேட்டு எழுந்த தேவா ஆதிரையிடம் அவளது உடல்நிலையை விசாரித்து விட்டு அதற்குமேல் வேறு எதுவும் பேசாமல் தன் அண்ணியிடம் ஒரு சிறு தலையசைப்புடன் மேலே ஏறிச் சென்று விட்டான்.

ஆதிரையின் வாழ்க்கையில் காலம் மிகவும் வேகமாக ஓடத் தொடங்கியது. திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இதுவரையிலும் அவள் ஏன் அந்த வீட்டில் இருக்கிறாளென அவளுக்கே தெரியவில்லை. இன்னும்கூட ஆதிரையால் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவர்கள் யாரையும் வெறுக்கவும் அவளால் முடியவில்லை. தேவாமீது இருந்த கோபங்களும் அப்படியே தான் இருந்தன.

இந்த இரண்டு மாதங்களில் மாறியிருந்தது மிகவும் அற்பமான சில விஷயங்களே. ஆதிரையின் பெற்றோர் அவளிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருந்தனர். ஆனாலும்கூட நேரில் வர மறுத்துவிட்டனர். விக்ரம் பலமுறை அழைத்து நீ கூறினாள் உடனேயே உன்னை அங்கிருந்து அழைத்து வரத் தயாரெனத் தன் தமக்கையிடம் கூறிக்கொண்டிருந்தான். இவற்றுடன் ஆதிரையும் கயலும்கூட மிகவும் நெருக்கமாக மாறிவிட்டனர்.

ஒருமுறை ஆதிரை கயலிடம் அவளைப் பார்த்ததும் மரியாதை இல்லாமல் பேசியதற்கும் மன்னிப்பும் கேட்டபிறகு இன்னும் நெருக்கம் கூடிவிட்டது. இத்தனை நிகழ்வுகள் நடந்தேறிய பின்னும்கூட ஆதிரை தன் மனதில் தோன்றிய சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

அவளது முதல் கேள்வியே தேவா என்பவன் உண்மையில் யார்? அவன் ஏன் அவளைத் திருமணம் செய்தான்? முன்பின் அறியாத ஒரு பெண்ணின் மீது இவ்வளவு அன்பாக ஒருவரால் இருக்க முடியுமா? என்பதாகத் தான் இருந்தது.

இப்பொழுதெல்லாம் தேவா ஆதிரையிடம் முன்பு போலப் பேசுவதும் இல்லைதான் அதற்காகப் பேசாமலும் இருப்பதில்லை இதைச் செய், அண்ணியைக் கூப்பிடு, சாப்பிட்டாயா, என்ன வேண்டும் என்பவற்றைப் போல எதார்த்தமான பேச்சுக்கள் இருவருக்குள்ளும் எந்த வாக்குவாதங்களும் இல்லாமல் பரிமாறப்பட்டு வந்தன.

இவ்வாறு ஆதிரையின் வாழ்க்கை மிகவும் அமைதியாகச் செல்லச் செல்ல அவள் மனதிற்குள்ளும் கேள்விகள் பெருகிக் கொண்டே சென்றன. அதன் விளைவாக அடிக்கடி தன்னையும் தன் சுற்றத்தையும் மறந்து சிந்தனை உலகத்திற்குள் புகுந்து கொண்டாள். இதை மீனாட்சியும் கவனிக்கத் தவறவில்லை. தான் கேட்டால் ஆதிரை எப்படியும் உண்மையைக் கூறப்போவதில்லை என்று தோன்றவும் கயலிடம் இதைப் பற்றி ஆதிரையிடம் பேசச் சொல்லி அவளை ஆதிரையிடம் அனுப்பியிருந்தார்.

ஆதிரை அவளது சிலகால வழக்கமான பழக்கத்தைப் போலத் தென்னந்தோப்பில் உள்ள ஒரு கட்டையில் அமர்ந்து சிந்தனை உலகத்தில் உலாவிக்கொண்டிருந்தாள். தன் முன் கயல் வந்து நிற்பதைக் கூடக் கவனிக்காமல் ஆதிரை எதையோ ஆதிரை சிந்தித்துக் கொண்டிருந்தவள் கயல் “ஆதிரை” என்று பல முறை அழைத்த பிறகே நிகழ் உலகத்திற்குத் திரும்பினாள்.

ஆதிரை “அக்கா! இங்கு என்ன செய்கிறீர்கள். எப்போது வந்தீர்கள்” என்றாள்.

கயல் “அடிப்பாவி! நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி என்ன சிந்தனை உனக்கு?” என்றாள்.

சும்மா எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்று ஆதிரை சமாளிக்கவும் கயல் “ஆதிரை! இன்று என்று இல்லை, சில நாட்களாக நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கின்றாய். எதுவானாலும் வெளியில் சொன்னால் தானே தெரியும் ஆதிரை” என்றாள்.

கயல் கேட்ட தோணியிலேயே அவள் பதிலைப் பெறாமல் விடப் போவதில்லை என்று ஆதிரை புரிந்து கொண்டாள். ஆனால் இப்போது இவளிடம் என்ன கூறி சமாளிப்பது என்று யோசித்தவளுக்குச் சட்டென ஒன்று தோன்றியது.

அது, அந்த வீட்டில் ஒரு அலுவலக அறை இருந்தது அதற்குள் ராமும், தேவாவும் அடிக்கடி ஒன்றாகச் சென்று நீண்ட நேரம் பேசுவதுண்டு. ஆதிரை அறிந்த வரை தேவா குடும்ப தொழில்களைப் பார்த்துக் கொள்கிறான். அதில் முக்கியமானது விவசாயமும் அதைச் சார்ந்த வேலைகளும் ஆகும். ஆனால் ராம் தனக்கென்று தனியாக ஒரு தொழில் நடத்தி வந்தான், அது கட்டடம் சம்பந்தம் பட்டவை. அதனுடன் சிமெண்ட் தொழிற்சாலையும் நடத்தி வந்தான். அவனது தொழிலிற்கும் தேவாவின் தொழிலிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு அவர்கள் அவ்வளவு நேரம் அதுவும் அலுவலக அறையில் பேச வேண்டும். இதுவும் ஆதிரையின் மனதிலிருந்த பல கேள்விகளுள் ஒரு கேள்விதான். எனவே அதையே தன் சந்தேகமாகக் கயலிடம் கேட்டாள். கயல் “உண்மையாகவே இதுதான் உன் சந்தேகமா ஆதிரை?” என்று நம்பாமல் கேட்டாள்.

ஆதிரை “ஆம் அக்கா. நீங்கள் வேறு என்ன நினைத்தீர்கள்” என்று கேட்கவும் “ஒன்றுமில்லை” என்று கூறியவள் ஆதிரையின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

கயல் “ஆதிரை! ஏன், எதற்கு என்றெல்லாம் எனக்கும் தெரியாது. ஆனால் நம் வீட்டில் இருக்கும் அனைத்து தொழில்களும் சொத்துக்களும் அவரது பெயர் தேவா தம்பியின் பெயர் என இருவரின் பெயரிலும் தான் இருக்கின்றன. ஒருவரின் தொழில் விபரத்தை இன்னொருவரும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். வங்கி முதல் அனைத்து கணக்கு வரவு செலவுகளிலும் இருவரது கையெழுத்தும் நிச்சயம் அவசியம். அதைப்பற்றித்தான் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் நேரத்தில் பேசுவார்கள்” என்றாள்.

ஆதிரை அதற்கு “ஓ” என்று கூறவும் கயல் “இதைக் கேட்டால் கூறப்போகிறோம். ஆனால் இதற்காகத் தான் இப்படி இருந்தாய் என்று என்னால் நம்பமுடியவில்லையே? என்றாள்.

ஆதிரை கயலின் கேள்விக்குப் பதில் கூறும் முன்பே மல்லிகா அங்கு ஓடி வந்தாள். வேகமாக ஓடி வந்ததின் தாக்கத்தால் மூச்சு வாங்கிக் கொண்டே “அக்கா” என்று அவள் கூறவும் இருவரும் “முதலில் மூச்சு வாங்கிக் கொண்டு பிறகு சொல்” என்றனர். சில வினாடிகள் மூச்செடுத்து கொண்டவள் கயலைப் பார்த்து

“அக்கா, பெரிய ஐயா பெரிய அம்மாவை நாளை வருமாறு கூறி அனுப்பினார். பெரியம்மா கோவிலுக்குச் சென்றுள்ளாராம் அத்தை கூறினார்கள். அம்மா வந்ததும் கூறிவிடுகிறீர்களா?” என்றாள்.

ஆதிரைக்கு மல்லி பெரிய ஐயா என்று கூறுவது தேவாவின் தந்தையைத் தான் என்று புரிந்தது. ஆனால் அவரை எப்படி மல்லி பார்த்திருக்க முடியும் என்ற குழப்பத்தில் மல்லியிடம்

“பெரிய ஐயாவா? யாரைக் கூறுகிறாய் மல்லி? மாமாவையா?” என்றாள் வேகமாக.

கயல் ஆதிரை என்று அழைத்ததையும் பொறுங்கள் அக்கா என்று கூறி அவளைத் தடுத்து விட்டு மல்லியிடம் விசாரணையைத் தொடர்ந்தாள் பாவம் கயல் ஆதிரை என்று அழைத்ததையும் பொறுங்கள் அக்கா என்று கூறி அவளைத் தடுத்து விட்டு மல்லியிடம் விசாரணையைத் தொடர்ந்தாள் பாவம் மல்லி. சிறுபிள்ளைக்கு தன் தந்தை வேலை செய்யும் அந்தப் பெரிய வீட்டின் உள்ளரசியல் புரியவில்லை. தனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் ஆதிரை கேட்கக் கேட்க ஒப்பித்து விட்டாள்.

“ஆமாம் அக்கா. அவரைத் தான் சொன்னேன் ஏன் கேட்கிறீர்கள்” என்றாள் மல்லி.

ஆதிரை “அவரை எங்கே எப்போது பார்த்தாய்?” என்று கேட்கவும்

மல்லி “இப்போது தான் அக்கா வயல் வீட்டில் பார்த்தேன்” என்றாள்.

ஆதிரை கேள்விகளால் மல்லியை துளைத்தெடுக்கவும் ஒரு கட்டத்தில் மல்லியே முழிக்க ஆரம்பித்து விட்டாள். நடுவில் கயல் பேசப் பல முறை முயன்றும் அவளது முயற்சிகள் அனைத்தும் வீணெனச் சென்றது. ஆனாலும் கூட ஆதிரை விடுவதாக இல்லை

“அங்கே என்ன செய்கிறார் மல்லி? எப்போதிலிருந்து அங்கு இருக்கிறார்” என்றாள்.

மல்லி பதில் ஏதும் கூறாமல் கயலை பார்த்து முழிக்கவும் ஆதிரை “என்னைப் பார்த்துப் பதில் கூறு மல்லி” என்று அதட்டினாள்.

ஆதிரையின் குரலில் பயந்த மல்லி கண்கள் கலங்க “இரண்டு மாதமாக அங்கு தானே அக்கா இருக்கிறார்” என்றாள்.

மல்லியின் பதிலில் ஆதிரை குழம்பிப் போனாள். இரண்டு மாதமாக இங்கு தான் இருக்கிறார் என்றால் பிறகு எதற்காகத் தேவா என்னிடம் பொய் கூற வேண்டும் என்று யோசித்தவள் தன் அருகில் அமர்ந்திருந்த கயலைப் பார்த்தாள். அவளது முகத்திலிருந்த கலவரமே ஆதிரைக்கு, கயலிற்கும் உண்மை அனைத்தும் தெரியும் என்பதைப் புரியவைத்தது.

ஆதிரை மல்லியிடம் “நாளை அத்தையை வயல் வீட்டிற்குப் போகச் சொல்லி நானே கூறிவிடுகிறேன் மல்லி” என்று கூறவும் அவளும் சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

மல்லி அங்கிருந்து செல்லவும் கயல் “ஆதிரை... அது வந்து…” என ஆரம்பிக்கவும் ஆதிரை “வீட்டில் அனைவரும் வந்தபிறகு கூறுங்கள். நான் பேச வேண்டும்” என்றவள் அங்கிருந்து நேராகத் தன் அறைக்குள் சென்று விட்டாள் கயலிற்குத் தான் என்ன செய்வது என்றே புரியாமல் போனது.

வேறு வழியின்றி தேவா முதல் மீனாட்சி வரை அனைவருக்கும் தொலைப்பேசியில் அழைப்புகள் பறந்தன, அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் அந்த வீட்டில் ஆதிரையின் அறைக்கு வெளியில் நின்றனர்.
தொடரும்...​
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️தேவா நீ மாட்டிகிட்டே ஆதிரைகிட்ட வாழ்க்கை முழுக்க சந்தேகம் கேட்டே உன்ன ஒரு வழி பண்ணப்போறா 😲😲😲😲😲😲😲😲😲😲
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Nice ma
 
Top