• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
868

1

மனித குலத்தின் நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈர மணலில் தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவநதிக் கரையில் தான் பெருநகரங்களும் நாகரீகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை. ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்று தான் வைகை. தமிழ் நாகரீகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது.

அப்படி பொங்கிப் பெருகி வரும் வைகையின் கரையோரமாக அமர்ந்திருந்தது வயல்பட்டி என்ற அழகிய கிராமம். பெயருக்கேற்றார் போலவே எங்கு நோக்கினும் கண்ணுக்கு குளிர்ச்சி தரும், பசுமையான வயல்வெளிகளே. வயல்கள் நிறைந்த ஊர் என்பதால் கூட வயல்பட்டி என பெயர் வந்திருக்கலாம்.

அந்த ஊரின் ஆற்றங்கரையில் சாந்தமாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீ பால நாகம்மை. வயல்பட்டி மக்களின் காவல் தெய்வம், சிலருக்கு குல தெய்வம். அந்தக் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடந்ததற்கான காட்சிகள் சாட்சியாக காணப்பட்டன. கோவில் சிறியது தான், ஆனால் அக்கோவிலைச் சுற்றி பத்தடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் ஆற்றின் வெள்ள நீர் உள்ளே வராமல் இருக்க கட்டப்பட்டிருந்தது.

சுற்றுச்சுவருக்கு உள்ளே ஒரு கல்யாண மண்டபம், அன்னதானக் கூடம், சிறுவர் பூங்கா, பலவகையான பூக்கள், மரங்கள், மூலிகைச் செடிகளும் என பார்க்கவே ரம்யமாக காட்சி தந்தது பால நாகம்மை திருக்கோவில்.

இவை அனைத்திற்கும் காரணம் பரந்தாமன். அவர் தான் முன்னின்று தன் சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொடுத்தார். இன்றைய திருமணம் கூட அவரது இரண்டாவது மகன் ஷ்யாம் சுந்தருக்கு.

பரந்தாமன் நகரவாசி என்பதால் அவரது நண்பர்கள் வட்டாரம் யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அவருக்கு குலதெய்வ கோவிலில் தன் சொந்தங்கள் அத்தனை பேரும் வந்து வாழ்த்த, தன் தங்கையின் மகளை மகனுக்கு முடிக்க கொள்ளை விருப்பம். அவரது விருப்பம் இங்கே நடந்தேறிக் கொண்டிருந்தது. ஆனால் மணமகனின் விருப்பம்? ஷியாமிற்கும் அவனது அம்மா லலிதாவிற்கும் இதில் துளியும் விருப்பமில்லை. லலிதா சென்னையில் பிறந்து வளர்ந்தவர், அதனால் கிராமமும் அங்கு வாழும் மக்களும் எட்டிக்காய் தான் அவருக்கு.

ஷ்யாம் உருவத்தில் பரந்தாமனை உரித்து வைத்திருந்தாலும், குணம் லலிதாவினுடையது. குணத்தில் அவரது அச்சு அசல்தான் ஷ்யாம் சுந்தர். ஷ்யாம் இப்போது மத்திய ரயில்வேயில் மெக்கானிக்கல் இஞ்சினீயர் வேலை. மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் அவனது சென்னை வாசம். அப்படி வந்தவனை திருவிழா என்று அழைத்து வந்து, திருமணத்தையும் உறுதி செய்திருந்தார் பரந்தாமன். வேண்டவே வேண்டாம் என ஒற்றைக் காலில் நின்ற மகனையும் மனைவியையும் தன் உயிரைக் காட்டி மிரட்டி சம்மதிக்க வைத்திருந்தார்.

இத்தனை வருடங்களில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளாத அப்பா முதல்முறையாக, அதுவும் வசதி வாயிப்பில்லாத, படிக்காத ஒரு பெண்ணிற்காக உயிரைக் காட்டி மிரட்டியது ஷ்யாமிற்கு பெருங்கோபத்தைக் கொடுத்தது.

அந்த கோபத்தை யாரிடமும் காட்ட முடியாமல், தாலி கட்டும் பெண்ணிடம் காட்டும் முடிவில் இருந்தான் ஷ்யாம். இத்தனைக்கும் அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாது அவனுக்கு. எப்படி இருப்பாள், என்ன செய்கிறாள் என்று எதுவும் தெரியாது. பெயர் மட்டும் தெரியும். அதுவும் தங்கையிடம் பேசும் போது இடையில் வந்தது.

நாகம்மை! என்ன பெயர் இது? சுத்தப் பட்டிக்காட்டுத்தனம்! பேரே இந்த லட்சனம் இதுல அழகு? சொல்லவே வேண்டாம். ஏன் அப்பா இப்படி ஒரு முடிவை எடுத்தார். மனம் ஆறவில்லை ஷியாமிற்கு. அவன் இந்த திருமணத்தை வெறுக்க பெயரும் ஒரு காரணம்.

“ஷ்யாம் ரெடியா?” என தம்பியின் அறைக்குள் நுழைந்த சபரீஸைக் கண்டு உச்சுக் கொட்டினான் ஷ்யாம்.

“என்ன மேன் இப்படி டல்லா இருக்க? இது உன்னோட மேரேஜ். ஜாலியா எஞ்சாய் பண்ணணும். அதைவிட்டுட்டு உர்ருன்னு இருந்தா என்ன அர்த்தம்?”

“நீங்க ஏன் ப்ரஃபஷர் பேசமாட்டீங்க? உங்களுக்குப் பிடிச்சப் பொண்ணை லவ் பண்ணி மேரேஜ் செஞ்சுக்கிட்டீங்க. அதிலும் அவங்களும் உங்க கூடவே வொர்க் பண்றவங்க. ஆனா இங்க அப்படியா? என் தகுதிக்கு கொஞ்சமும் செட் ஆகாத ஒரு படிக்காத தற்குறியை என் தலையில கட்டி வைக்க ப்ளான் பண்றாங்க. எழுந்துக்கவே முடியாத படுகுழியில தள்ளப் போறீங்க. இது தெரிஞ்சும் நான் எப்படி ஹேப்பியா இருக்க முடியும்?” வெறுப்பாக வந்தது ஷியாமின் குரல்.

“ஷ்யாம் என்ன இது? படுகுழி அது இதுன்னு... ஏன் நெகட்டிவா யோசிக்குற? அப்பா இவ்வளவு தீவிரமா இருக்கார்னா அவருக்கு இந்த கல்யாணம் எவ்வளவு முக்கியம்னு உனக்கு புரியலையா?” அண்ணனாக அதட்டினான் சபரீஸ்.

“லுக் சபரி, இது என்னோட லைஃப். என்ன பண்ணணும், பண்ணக்கூடாது எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒன்னும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை.” என முகத்திலடித்தார் போல பேச, அங்கு நிற்க முடியாமல் வெளியேறிவிட்டான் சபரீஸ்.

முகம் விழுந்து வெளியேறிய சகோதரனைப் பார்த்து தன்னையேத் திட்டிக் கொண்டவன், ‘ச்சே! எல்லாம் இந்த அப்பாவால... இப்படி விருப்பம் இல்லாம கல்யாணாம் செய்து வச்சா, எப்படி அவக்கூட நான் சந்தோசமா இருப்பேன்னு நினைக்கிறார். இனிதான் அவர் வருத்தப்படப் போறார். அவர்கூட சேர்ந்து அந்த நாகம்மையும்.’ என கோபமாக எண்ணியவனுக்கு இந்த திருமணம் எப்படி உறுதியானது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

பரந்தாமனின் தந்தை சிறுவயதிலேயே பிழைப்பிற்காக திண்டுக்கல் சென்றவர். திருமணம், குடும்பம், குழந்தை என அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

அவரது மனைவி தான் சொந்தம் வேண்டும் என திருவிழா மற்ற விஷேசங்களுக்கு வயல்பட்டி வந்து போவார். அப்படி வரும் போது தான், மகன் பராந்தாமனையும் அழைத்து வருவார். பரந்தாமனுக்கும் வயல்பட்டியை மிகவும் பிடித்துவிட பள்ளி, கல்லூரி விடுமுறைகளில் எல்லாம் தன் ஒன்றுவிட்ட ஆச்சி மரகதம் வீட்டிற்கு வந்துவிடுவார்.

காலம் கடக்க கல்லூரி முடிந்து வேலையும் மத்திய ஏற்றுமதி துறையில் கிடைக்க, அதன்பிறகு அவர் வயல்பட்டி வந்து செல்வது மிகவும் குறைந்து போனது. பரந்தாமனின் தாய், மகனின் திருமணம் குலதெய்வமான நாகம்மையின் ஸ்தலத்தில் தான் நடக்கவேண்டும் என வேண்டுதல் வைத்திருக்க, வயல்பட்டியே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பரந்தாமன், லலிதா திருமணம் நடந்தது.

லலிதா சென்னைவாசி என்பதால் அவருக்கு இந்த கிராமப் பழக்க, வழக்கங்கள் ஒவ்வாமையைக் கொடுத்தது. ஊருக்கு போய் வரவேண்டும் என்ற ஆசை பரந்தாமனுக்கு இருந்தாலும், மனைவியை நினைத்து தவிர்த்து விட்டார். அதனால் ஊருக்கும் அவருக்குமான தொடர்புகள் முற்றிலும் விட்டுப் போயிருந்தது. பரந்தாமன், லலிதா குடும்ப வாழ்க்கையில் இரண்டு மகன்கள், ஒரு மகள்.

பெரியவன் சபரீஸ், தன்னுடன் வேலைப் பார்க்கும் பெண்ணான அனுசுயாவை விரும்பி மணந்து மூன்றாண்டுகள் கடந்து விட, குழந்தையின் வரவிற்காக காத்திருக்கின்றனர்.

அடுத்தவன் தான் ஷியாம் சுந்தர். இவன் தந்தை வழியில் மத்திய ரயில்வே துறையில் பணியாற்றுகிறான்.

அடுத்தது கடைக்குட்டி சங்கவி. மிகவும் சுட்டி நேர்மையின் மறுபதிப்பு. யார் தப்பு செய்தாலும் உடனேத் தட்டிக் கேட்பவள், லலிதாவின் குணத்திற்கு நேர் எதிர். பரந்தாமனுக்கு வலதுகை போல மகள். ‘சவி சொன்னா சரியா இருக்கும்’ எனப் பரந்தாமனே சொல்லும் அளவிற்குத் தான் அவளது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் இருக்கும். இதில் பரந்தாமனுக்கு ஏகப் பெருமை.

ஒரு நாள் இரவு வைகையில் வெள்ளம் பெருகி வயல்பட்டி ஊருக்குள் வந்துவிட, அங்கிருந்த மக்கள் மேடான இடம் பெயர்ந்தனர். வெள்ளம் வடிந்த நிலையில் ஆற்றோரமாய் இருந்த நாகம்மை கோவிலில் சேதாரங்கள் நிறையவே ஆகியிருந்தது. அதை உடனே சரிசெய்ய வேண்டும் என ஊர் மக்கள் முடிவெடுத்து நிதி திரட்ட ஆரம்பித்தனர். பரந்தாமனின் ஒன்றுவிட்ட ஆச்சி மரகதத்தின் பேத்தி மாரியம்மாள் அவருக்கு தங்கை முறை. அப்போதுதான் மாரியம்மா, அண்ணனிடம் கேட்கலாம் என்று சொல்ல, ஊர்ப்பெரியவர்களுக்கு சற்றும் நம்பிக்கை இல்லை.

அதனால் இதை ஒரு வாய்ப்பாக நினைத்துக் கிளம்பி சென்னைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் பயந்தது போல மரியாதை குறைவாக எதுவும் நடக்கவில்லை. லலிதா கூட நல்ல முறையிலேயே நடந்துகொள்ள, வந்த விசயத்தைச் சொன்னதுமே கோவிலின் முழுப் பொறுப்பும் தன்னுடையது என்றுவிட்டார் பரந்தாமன்.

கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் வரை அனைத்தும் தன்னுடைய பொறுப்பு என்று, வந்தவர்களின் நெஞ்சில் பாலை வார்த்தார்.

பேசிமுடித்து கிளம்பும்போது ஒரு பெரியவர் மட்டும் சற்று தயங்க, “என்ன மாமா? என்ன செய்யணும் நான், தயங்காம சொல்லுங்க.” என ஊக்கப்படுத்த,

“இல்ல தம்பி, ஊர்ல எல்லாரும் உங்களைப்பத்தி நம்பிக்கையே இல்லாம பேசினாங்க. ஆனா உங்க தங்கச்சி மாரி தான் அதெல்லாம் எங்கண்ணன் செய்யும்னு உறுதியா சொல்லி எங்களை அனுப்பிவிட்டுச்சு. உங்க மேல அம்புட்டு நம்பிக்கையும் பாசமும் வச்சிருக்க புள்ள... ஆனா நீங்க அந்த புள்ளையோட கல்யாணத்துக்கும் வரல, அவ புருஷன் செத்ததுக்கும் வரல, ஏன் தம்பி?

உங்க குடும்பத்துல வாரிசுனு மிஞ்சி கெடக்குறதே நீங்க ரெண்டு குடும்பம்தான். அதுக்கு அண்ணன்னு சொல்லி நீங்கதான் இருக்கீங்க, ஏன் விட்டீங்க?” என ஆற்றமாட்டாமல் கேட்க அதிர்ந்து போனார் பரந்தாமன்.

‘ஊரில் தங்கை மட்டும்தான் இருக்கான்னா, பெரியவங்க எல்லாம் என்ன ஆனாங்க? ஏன் எனக்கு யாரும் சொல்லல?’ மனதைக் குடைந்த கேள்விகளை ஒதுக்கிவிட்டு வந்தவர்களைப் பார்க்க அதற்குள் மற்றவர், “ஏலேய் லூசுப்பயலே, நாம என்ன வேலையா வந்துருக்கோம்? அத விட்டுட்டு நீ என்ன பேசிட்டு கெடக்க? வந்த சோலிய மட்டும் பேசு, அவங்க குடும்ப விசயத்த ஏன் பேசுற?” என லலிதா இருப்பதை பார்வையால் சுட்டிக்காட்டி, சத்தம் போட்டு அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

மகன்கள் இருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் தன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கியிருக்க, இந்த ஆறுமாத காலமும் வீட்டில்தான் பொழுது போகாமல் இருந்தார். அவ்வப்போது ஊர் ஞாபகம் வரும் தான், ஆனால் இப்போது அங்கு எல்லாமே மாறியிருக்கும், எல்லோரும் மாறியிருப்பார்கள், தன்னை யாருக்கும் தெரியாது என தன் மனதை சமாதானம் செய்துகொண்டார்.

ஆனால் வந்தவர்களின் மூலம் தன் தங்கையின் குடும்ப கஷ்டம் தெரிய, அதன்பிறகு சற்றும் யோசிக்கவில்லை. வந்தவர்கள் எல்லாம் பரந்தாமானின் மனதில் குழப்பத்தை விதைத்துவிட்டுச் சென்றிருக்க, அவரும் ஊருக்குப் போயே ஆகவேண்டும் என முடிவு செய்து மகளுடன் கிளம்பிவிட்டார்.

வீட்டிலும் கோவில் வேலையைக் காரணம் காட்டியிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த மண்ணில் கால் பதித்ததும் அவரது கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அங்கு உள்ள சொந்தங்களில் தன் உறவைப் புதுப்பித்துக்கொண்டார். சில கோபம், சில வாக்குவாதம், சில பாசம், சில உரிமைப்போராட்டம் என அவரது எண்ணங்கள் ஒருவழியாக வெளியேறியிருந்தது. சங்கவிக்கு இதெல்லாம் புது அனுபவம். அங்குள்ள மக்களையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஷியாம்... ஷியாம்...” என லலிதாவின் குரல் கேட்க, தன் சிந்தனையில் இருந்து வெளியில் வந்தவன், தாயை என்ன என்பது போல் பார்க்க,

“கண்ணா இப்பவும் உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு, நீ இங்க இருந்து கிளம்பு. உன் அப்பாவை நான் சமாளிச்சுக்குறேன். அவர் சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்டுவாறே தவிர செய்ய மாட்டார். எனக்கு உன் வாழ்க்கை ரொம்ப முக்கியம். பிடிக்காம சகிச்சிக்கிட்டு உன்னால எப்படி அந்த பட்டிக்காட்டுப் பொண்ணுகூட வாழமுடியும்?” எனக் கோபமாகப் பேச,

“மாம் இதுக்குப் பிறகு பேசி நோ யூஸ், எனக்கு நீங்க எப்படி முக்கியமோ, அதே போல டாடும் முக்கியம். சோ, இந்த மேட்டர இப்படியே விட்டுடுங்க.” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே பரந்தாமன் வந்துவிட அவரைப் பார்த்து, “கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கமுடியும் டேட், ஆனா வாழ வைக்க முடியாது. அவகூட என்னால வாழ முடியாது. ஒருவேளை அப்படி நான் வாழ்ந்தால் அது ஃபிஸிக்கல் லைஃபா தான் இருக்கும்.” என்றுவிட்டு மணமகனாக வெளியேற லலிதா பிடித்துக்கொண்டார்.

உங்க தங்கச்சிக்கு செய்யணும்னா எத்தனையோ வழியிருக்கு. பணம், சொத்து, பிள்ளைங்களுக்கு படிப்புனு செஞ்சிருக்கலாம். அதை விட்டுட்டு என் பையன் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க, இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்.” என ஆவேசமாகப் பேச,

“இங்க வச்சு எந்தப் பிரச்சனையும் நடக்ககூடாது, அப்படி நடந்து என் கௌரவம் போச்சுனா, நான் சொல்லிட்டு இருக்கமாட்டேன்.” லலிதா அதிர்ந்து நிற்பதைக் கூட கவனிக்காமல், அமர்த்தலான குரலில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவ்வளவுதான்

வாழ்க்கையென்று

எதையும் உதறிவிட்டு

செல்லவில்லை

அவ்வளவையும்

இழுத்துக் கொண்டுதான்

செல்கிறது இந்த வாழ்க்கை
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
276
இதென்ன மாமியாருக்குன்னே தனியா மேனுஃபேக்ஷர் பன்ன மெட்டீரியலா இது.? இந்த பொம்பளைய பார்த்தாலே எரிச்சல் வருது
 

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
நாகம்மை ரொம்ப பாவம் தான். இந்த லலிதா(கொசு)வை யாராச்சும் அடிச்சு கொல்லுங்கப்பா.. பர்ஸ்ட் எபிலயே காண்டாக்கி விடுது
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
140
Lovely vani
Thala kupura vilamale pova magane pathukalam
 

Kameswari

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
6
புள்ளையப் பாக்காமலே இந்தப் பய சவடாலா பேசுறானே 🤨 பாப்போம் எத்தனை நாளைக்குன்னு?
 

Mrs.chanmaa ansari

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 28, 2023
Messages
102
அருமையான பதிவு
 
Top