• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 2

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 2

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க நித்தி திரும்பி சத்யாவை பார்ப்பதும் பின் ரோட்டை வெறிப்பதுமாக இருந்தாள்.

சிறிது நேரம் அவளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அவள் கேட்பது போல இல்லை என்று எண்ணி அவனே பேச ஆரம்பித்தான்.

"நித்தி.. என்னை சைட் அடிக்கணும்னா என்கிட்ட பர்ஸ்ட்டே சொல்லிடு. அப்ஜெக்ட் பண்ணமாட்டேன்" என கூறி கண் சிமிட்ட, "மாமா.." என சினுங்கி கையில் இருந்த பர்ஸ் கொண்டு அவனை அடித்தவள் "உங்களை.." என்று விட்டு எதுவும் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள்..

"ஆமா அது என்ன! வீட்டுல சத்யா, நீ, வா, போ, ன்ற.. வெளில வந்ததும் மரியாதை வந்துடுது?" என அவன் தெரியாதது போல கேட்க,

அவளோ "ம்ம்ம் வீட்டில இருக்கிற கிழவி நம்மளை எப்படி எல்லாம் வெறுப்பேத்துது! அதை வெறுப்பேத்த தான் வீட்ல அப்படி. வெளியே யார்கிட்டயும் என் மாமாவை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்றவளை கனிவுடன் பார்த்தான் சத்யா.

பின் இருவரும் பேசிக் கொண்டே வர, கார் நின்றதை கண்டதும் அவனை பார்க்க, "இறங்கு" என்றான். இறங்கியவள் சுற்றிலும் பார்வையை ஓட்டி, "ஏன் மாமா இங்கேயே நிக்குறிங்க? உதய் இங்கே வர்றானா?" என்று கேட்டாள்.

"ஹேய் என்னை கூட எந்த இடத்தில் எப்படி கூப்பிடனும்னு தெரியுது. அவனுக்கும் என் வயசு தானே! அவனை மட்டும் எப்போதும் பேர் சொல்லியே கூப்பிடுற?" என புரியாமல் சத்யா கேட்க,

"ஹ்ம்ம் அதுக்காக அவனும் என் மாமாவும் ஒண்ணாகிட முடியுமா? அவனுக்கு நம்ம கிழவியே தேவலை! எப்ப பாரு என்னை சீண்டுறான். நான் அவனை எல்லாம் பார்க்க விரும்பல. என்னை மது வீட்டில் ட்ராப் பண்ணிட்டு நீங்க எங்க வேணா போங்க" என்றாள்.

அவள் பேசுவதை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன் பின், "உன் பிரண்ட் வீடு நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் தானே?" என்றதும் அவனை முழுதாய் பேச விடாமல் "ஓஹ் உங்க பிரண்ட்டை சொன்னதும் கோபம் வந்துட்டா? என்னை நடந்து போனு சொல்ல வர்றிங்க ! அதானே?" என வேக மூச்சுக்களை விட்டுக் கொண்டே கேட்க,

அவள் தலையில் கொட்டியவன் "முழுசா கேளு டீ என் அத்தை மகளே! உன் பிரண்ட் வீடு நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் தானே? அவளை போன் பண்ணி இங்கே வர சொல்லு" என்றான்.

நித்தி புரியாமல் விழிக்க, அவளை அழைத்துக் கொண்டு எதிரே இருந்த பெரிய ஹோட்டலினுள் நுழைந்தான்.

"அச்சச்சோ மாமா இங்கே எதுக்கு வந்தீங்க? சும்மா வந்தாலே காசு கேப்பானுங்க இவனுங்க! வாங்க வாங்க ஓடிடலாம்" நித்தி பதறினாள்.

"ஷ்ஷ் பேசாம வா. பர்ஸ்ட் உன் பிரண்ட்க்கு போன் பண்ணி நான் சொன்னதை சொல்லு" என்று வேகமாக நடக்க, யோசனையுடன் மதுவை மொபைலில் அழைத்துக் கொண்டே அவனுடன் சென்றாள்.

"இவ எல்லாம் படிக்கலைனு யாரு அழுதா? கழுதையை வீட்டோட போடாம.. காலேஜி கேக்குதாம் காலேஜி" என்று மதுவை திட்டிக் கொண்டிருந்தார் அவளது சித்தி சாந்தி.

மதுமிதா! வேலாயுதம் ஆண்டாள் தம்பதியின் ஒரே மகள். மதுவிற்கு பத்து வயது இருக்கும் போது ஆண்டாள் நெஞ்சு வலியில் இறந்து விட வேலாயுதம் அவரின் ஒன்றுவிட்ட அத்தை மகளான சாந்தியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன புதிதில் மதுவை நன்றாக பார்த்துக் கொண்டவள், கர்ப்பமானதும் மதுவை புறக்கணிக்க ஆரம்பித்தாள். ஆண்டாள் இறந்த சில மாதங்களில் வேலாயுதம் தொழிலும் நட்டம் ஏற்பட்டு விட நடுத்தர வர்க்கத்தை விடவும் கீழான நிலைக்கு வந்து விட்டார்.

பின் சாந்திக்கு பெண் குழந்தை பிறக்க வீட்டு வேலை அனைத்தையும் மதுவை பார்க்க வைத்தாள் சாந்தி. சாந்தி மகள் வித்யா அன்னை மாதிரி அல்லாமல் வளர வளர மதுவிடம் அழகாக ஒட்டி கொள்வாள்.

அனைத்து வேலைகளும் முடித்து மது பள்ளி செல்ல அதையும் தடுக்க பார்த்தாள் சித்தி. ஒரு வாரம் வீட்டோடு மது அழுது கொண்டே இருக்க, ஒருநாள் வேலாயுதம் வீட்டில் சாந்தியிடம், "கண்டிப்பா அவள் இஸ்..கூலுக்கு போகணும். நீ இதுல உள்ள வராதே" என்று விட, எங்கே வேலாயுதம் மது பக்கம் சாய்ந்து விடுவாரோ என்ற பயத்தில் அடக்கியே வாசிப்பாள் சாந்தி.

இப்போது மிகவும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விட சாந்தி அந்த கோபத்தை தான் மதுமேல் காட்டிக் கொண்டிருந்தார்.

"அம்மாம்பெரிய காலேஜி தான் இவளுக்கு கேடு. எல்லாம் அப்பன் குடுக்கிற இடம்" என திட்டிக் கொண்டிருக்க, எப்போதும் கேட்கும் பாடல் என்பது போல சாதாரணமாக வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் மது.

இன்று சனிகிழமை கல்லூரி விடுமுறை தான். ஆனாலும் நித்தி தன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னது முதல் அவளுக்கு பயமாக இருந்தது. நித்தி மது இருவரும் ஒரே வகுப்பு தோழிகள். ஒன்றாம் வகுப்பில் இருந்து இப்போது வரை சேர்ந்தே இருக்கின்றனர். வீட்டில் நித்திக்கு சத்யா முக்கியம் என்றால் கல்லூரியில் மது முக்கியம்.

நித்திக்கு சாந்தியை சுத்தமாக பிடிக்காது. பணம் என்றாள் "ஆ"வென வாயை பிளக்கும் சாந்தியை பார்த்தாலே முகத்தை சுழிப்பாள் நித்தி. வரேன் என்பவளை தடுக்க முடியாது. சரி என சொல்லி விட்டாலும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது மதுவிற்கு.

சாந்தி நித்தியை கண்டிப்பாக எதுவும் சொல்ல போவதில்லை. விழுந்து விழுந்து தான் கவனிப்பார். ஏனென்றால் அவள் பணக்கார வீட்டுப்பெண். ஆனால் நித்தி சித்தியை எதுவும் சொல்லி விடக் கூடாதே என்று தான் அவள் பயம். யோசித்தவாறே மது வேலையை பார்த்துக் கொண்டிருக்க அவளின் மொபைல் அழைத்தது.

"சொல்லு நித்தி" என்றதும் அவளை நித்தி ஹோட்டலிற்கு அழைக்க, திடுக்கிட்டவள் "இல்லை டா! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. உனக்கு வர முடியாதுன்னா பரவாயில்லை இன்னொரு நாள் வா" என்று கூற, நித்தி சத்யாவை பார்த்தாள்.

அவன் மொபைலை நித்தியிடம் பறிக்க முயல, வேகமாக தலையை அசைத்தவள் ஒரு நொடி நிறுத்தி பின் "என்னடி உங்கள் சித்தி வம்பு பண்றங்களா? அவங்ககிட்ட குடு! இன்னைக்கு நானா அவங்களானு பாத்துட்றேன்" என கூறினாள்.

பின்னே அவனிடம் மொபைலைக் கொடுத்தால் யார் மதுவிடம் வாங்கிக் கட்டுவது என்ற பயம் தான்.

அவளுக்கு தெரியும் எங்கு அடித்தால் மது வழிக்கு வருவாள் என்று. அதனால் தான் அவள் பேசியது. நினைத்தது போலவே பயந்தவள் பத்தே நிமிடத்தில் வருவதாக கூறி வைத்தாள்.

அவள் வைத்ததும் சத்யாவை முறைத்தவள் "ஏன் மாமா! அவளை பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல? அப்புறம் ஏன் இங்கே எல்லாம் வர சொல்லி அவளை கஷ்டப்படுத்துறீங்க?" என்றாள். சிரிப்புடன் அமைதியானான் அவன்.

நித்திதான் கூப்பிட்டாள் என்று கூறினால் சாந்தி எதுவும் சொல்லமாட்டார் என்பதால் அவள் கிளம்பி சொன்னது போலவே பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தாள். அவளை அழைக்க வெளியே நித்தி வர "என்னை ஏண்டீ இங்க கூப்பிட்ட?" என கேட்க, எதுவும் சொல்லாமல் உள்ளே அழைத்துச் சென்றாள் நித்தி.

ஒரு தயக்கத்துடன் சுற்றி பார்த்தவாறே அவளுடன் சென்றாள் மது. நித்தி இது மாதிரியான ஹோட்டலுக்கு அடிக்கடி வந்தது இல்லை என்றாலும் குடும்பத்துடன் அவ்வபோது வருவதுண்டு. அப்போதே இவ்வளவு பணம் செலவு செய்து இங்கு சாப்பிட வேண்டுமா என்று தான் யோசிப்பாள்.

ஆனால் மதுவிற்கு இதுவே முதல் முறை. அதனால் கொஞ்சம் தயக்கத்துடனே வந்தாள். அங்கே சத்யா அமர்ந்திருக்க அவனை பார்த்ததும் நித்தியை முறைத்தாள் மது.

"சும்மா முறைக்க வேணாம். நான் தான் உன்னை கூப்பிட்டேன். வேற யாரும் இல்லை" என்று அமர மதுவும் அவள் அருகில் அமர்ந்தாள். வந்ததும் அவனை பார்த்ததோடு சரி அதன் பின் மது நிமிரவே இல்லை. ஒரு பேச்சிற்காய் கூட அவனை கண்டு மது சிரிக்கவில்லை.

"ஏன்டா! குரங்கை எல்லாம் எப்படிடா உள்ளே அல்லோவ் பண்ணாங்க?" என்றவாரே சத்யா அருகில் அமர்ந்தான் உதய்.

உதய் மஞ்சுவின் உடன்பிறந்த தங்கை பார்வதி மகன். உதய் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது அரசியலில் இருந்த அவனது தந்தை குண்டு வெடிப்பில் இறந்தார்.

சத்யா உதய் இருவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் மூன்றாவது வருடம் படிக்கும் போது தான் முதல் வருடத்தில் அடி எடுத்து வைத்தனர் நித்தி மற்றும் மது.

உதய் சத்யா இருவரும் சொந்தம் என்பதை தாண்டி அழகான ஆழமான நட்பு இருவரையும் பிணைத்து உள்ளது. ஒரே கல்லூரி என்பதால் மதுவும் நித்தி மூலம் சத்யா உதய் இருவரையும் அறிவாள்.

"ஹாய் சிஸ்" என மதுவை பார்த்து உதய் சிரிக்க அவளும் வரவேற்புடன் புன்னகைத்தாள்.

"டேய்! குரங்கு அது இதுனு சொன்ன பல்ல பேத்துடுவேன்" என கோபமாய் நித்தி கத்த, "ஏன்டா வந்ததும் அவளை வம்பிழுக்குற?" என அவன் தலையில் தட்டினான் சத்யா.

"இந்தா கொட்டிக்கோ! இதுக்காக தானே வந்த?" என அவன் முன் கேசரி டப்பாவை தள்ளினாள் நித்தி.

தான் கொண்டு வந்த கேசரி டப்பாவை காரில் மறந்து வைத்துவிட்டு வந்திருக்க, அதை நித்தி எடுத்து வந்திருப்பதை நினைத்து சிரித்துக் கொண்டான் சத்யா. எப்போ பாரு வெளியே சண்டை போட்டுட்டு இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் சத்யாவிற்கு வியப்பு தான்.

"வாவ்வ்வ் மஞ்சும்மா கேசரி! ஐ லவ்ட் இட்" என்று உச்சு கொட்டி உதய் சாப்பிட, "திங்கறத பாரு மாடாட்டம்" என்றாள் நித்தி.

உதய், "சாரி சிஸ் மறந்துட்டேன். எடுத்துக்கோங்க" என மது முன் கேசரி டப்பாவை நீட்ட, "மாமா! நம்மளை எல்லாம் இந்த வானரத்துக்கு கண்ணு தெரியலை போல!" என நித்தி கூற,

"அத்தை அத்தைனு ஐஸ் வச்சி வீட்ல நீ ஓரு கிலோ ரவையை காலி பண்ணிட்டு தானே வந்திருப்ப? அப்புறம் சத்யா ஸ்வீட் சாப்பிடமாட்டான்" என கூற இவன்கிட்ட போய் கேட்டோமே என முறைப்புடன் இருந்தாள் நித்தி.

அதன் பின் எதையும் கவனிக்காமல் உதய் கேசரியில் மூழ்கி விட, அவன் சாப்பிட்டு முடித்ததும் தொடர்ந்தான் சத்யா.

"ஏன்டா பாட்டிக்கு தான் வயசாச்சு தெரியாம பேசிட்டாங்க. அதுக்காக நீயும் சித்தியும் இப்படி வீட்டுக்கு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது நல்லா இல்லை டா" என வருத்தத்துடன் கூற,

"ரெண்டும் ஒன்னு தான். பேசியே கொள்ளும்" என உதய் மற்றும் பாட்டியை நினைத்த நித்தி தன் வாயும் அதே வகையறா தான் என்பதை மறந்தாள்.

"ஹாஹா அந்த ஓல்ட் லேடிக்காக நாங்க வரலன்னு நினைச்சியா? அவங்களுக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை டா. ஏதோ அம்மா, அப்பா கட்டின வீட்டில் இருக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதான் ஒரு ஆறு மாசம் அங்கே இருந்துட்டு வந்தோம்" என கூற, தன் பாட்டி மேல் கோபமாக வந்தது வேறு யாருக்கும் அல்ல நித்திக்கு தான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
என்னடா ட்ராக் மாறுது.....
நால்வர் கூட்டணி
நல்லா இருக்கு.... 💐💐💐💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
என்னடா ட்ராக் மாறுது.....
நால்வர் கூட்டணி
நல்லா இருக்கு.... 💐💐💐💐
எல்லாமே மாறும் டா கோச்சுக்காதீங்க 😂😂😂
 
Top