• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 31

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 31

நிச்சயமாய் நித்தி எதிர்பார்க்கவில்லை தமிழ் குடும்பத்தை தமிழினி குடும்பமாய். அதே நேரம் மதுரையில் இருந்து சத்யாவிற்கும் உதய்க்கும் தகவல் வந்தது. லட்சுமி லட்சுமணன்க்கு இரு பிள்ளைகள். மகள் சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கும் போது ஏதோ பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதன் பின்னே தான் 1 வருடம் கழித்து தமிழரசன் டிரான்ஸ்பெரில் சென்னை வந்ததாகவும்.

இருவருக்கும் அந்த பெண்ணின் பெயர் கூட தேவைப்படவில்லை தமிழ் யார் என்று அறிய!

"டேய் தமிழினி அண்ணனா தமிழ்? இது எப்படி டா நாம மறந்தோம்? அப்ப நிஜமாவே நித்தியை பழி வாங்க தான் கல்யாணம் பண்ணனா அந்த ராஸ்கல்?" என உதய் குழப்பத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடிக்க, என்னவென்று சொல்ல முடியாத நிலையில் இருந்தான் சத்யா.

மது எங்கே இந்த பிரச்சனையில் தன்னை தவறாக நினைத்து விடுவாளா என்று தானே கல்லூரி படிக்கும் போதே இவன் அவளிற்கு ப்ரொபோஸ் செய்தது. இப்படி பிரச்சனை தமிழ் ரூபத்தில் நித்திக்கு வரும் என்று தெரிந்து இருந்தால் அப்போதே தமிழ் வீட்டில் சென்று பேசி இருப்பானே! தமிழ் வருந்துவதை விட அன்று நூறு மடங்கு அதிக வலியை அனுபவித்தது அவன் தானே! நித்தி உதய்யால் தானே அவன் அதன்பின் நடமாட துவங்கியது.

நித்தி, தமிழ், உதய், சத்யா நால்வர் எண்ணமும் தமிழினியிடம் இருந்தது.

5 வருடங்களுக்கு முன்..

கல்லூரி முதல் வருடத்தின் பாதியில் ஹாஸ்டல் மெஸ் உணவு சரியில்லை என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த, அதில் அவர்களுக்கு உதவியது சத்யா உதய் தான். யாருமே முன் வராத எம்எல்ஏ தரப்பில் இருந்த மெஸ்க்கு எதிராக போராட்டத்தை முன் நின்று கம்பிரமாய் குரல் கொடுத்தது சத்யா மற்றும் உதய். தமிழினி சத்யா உதய் மூவரும் ஒரே வகுப்பு.

ஹாஸ்டல் வாழ்க்கை பிடிக்காமல் இருந்த தமிழினியும் மெஸ் மேல் எத்தனையோ முறை பிரின்சிபாலிடம் சொல்லியும் கேட்காததால் அவளும் இந்த போராட்டத்தில் முன் நின்றாள்.

சத்யா உதய் இருக்கும் தைரியத்தில் முதல் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, தன்னை விட சிறியவர்களுக்கு இருக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்காதா என சீனியர்ஸ்கூட சேர்ந்து போராட்டம் வலுபெற அதன் பின் தான் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து பிரின்சிபால் கரஸ்பான்டன்ட் கலந்து பேசி 3 நாட்களில் எம்எல்ஏ தரப்பு ஆர்டரை கன்செல் செய்தனர்.

அப்போது ஆரம்பித்தது தான் சத்யா தமிழினி நட்பு. அதன் பின் சின்ன சின்ன பிரச்சனைகளை சத்யா உதய் சந்தித்து வந்தனர். பிரின்சிபால் கூட இவர்களை அழைத்து எம்எல்ஏவிடம் ஜாக்கிரதையாக இருக்க சொல்ல, வயதிற்கு உரிய துடிப்பு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்து அவர்கள் முதல் வருடம் முடித்து இரண்டாவது வருடமும் வந்திருக்க, எலெக்ஷனும் அப்போது நடந்து முடிந்த நேரம். நினைத்ததை விட பெரிதாக நடந்தது அந்த விபத்து. தமிழினி வராவிட்டால் உதய் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று அங்கிருந்த அந்த மூன்று பேருக்கு மட்டுமே தெரியும்.

அன்று கல்லூரி பேருந்தில் வந்த உதய் மாலை லேப்பில் இருந்ததால் பேருந்தை விட்டுவிட, சத்யா அவனுக்கு முன்பே சென்றிருந்ததால் பேருந்து நிலையம் நோக்கி உதய் நடந்த நேரம்...

தமிழினி வந்து உதய்யை தள்ளிவிட, அவளைப் பிடித்து இழுத்தது இன்னொரு கை.

சில நொடி நடந்தது புரியாமல் தலையை உலுக்கிய உதய் நிமிர்ந்து பார்க்க, லாரி இவர்களை கடந்து சென்றிருந்தது. எதிர் பக்கத்தில் சத்யா தமிழினியை பிடித்து இழுத்ததில் இருவரும் விழுந்து கிடந்தனர்.

"மினி ஆர் யூ ஓகே?... டேய் சத்யா!.." என்று ஓடி வந்து உதய் இருவரையும் தூக்கிவிட, தமிழினி வாட்ச்மேன் போனில் எம்எல்ஏவிடம் பேசியதை கேட்டு ஓடி வந்ததாக சொல்ல, சத்யா குணா மூலம் எம்எல்ஏவை கவனிக்க ஆள் வைத்திருந்ததால் பதறி வந்திருந்தான்.

தமிழினி மேனேஜ்மென்டில் பேசி வாட்ச்மேனை டிஸ்மிஸ் செய்திருந்தனர். எம்எல்ஏ அந்த எலெக்ஷனில் தோற்றுவிட அவருக்கு இந்த பிரச்சனை அப்போது மறந்து போனதால் இவர்களும் நிம்மதியாகினர்.

கல்லூரிக்கே உரிய அழகிய நினைவுகளுடன் நாட்கள் நகர, சத்யா மூன்றாவது வருடம் தொடங்க, மது நித்தி முதல் வருடம் காலடி எடுத்து வைத்தனர். மது அப்போதெல்லாம் நித்தி வீட்டில் தான் அதிகமாக செலவிடுவாள்.

அதனால் வீட்டிலேயே சத்யா தமிழினி பற்றி சொல்லியிருக்க, கல்லூரி வந்ததும் மது நித்தி இருவருக்கும் தமிழினியை மினி என்றும் தோழியாய் அறிமுகப்படுத்தி வைத்தான்.

நாட்கள் செல்ல, கல்லூரியில் உதய் சத்யாவுடன் மினியும் சேர்ந்து கொண்டாள். எங்கும் இவர்களை பற்றியே பேச்சு. அதிலும் சத்யா மினி இருவரையும் சேர்த்து காலேஜ் முழுதும் பேச அதை உதய் நித்தி ஏன் மது கூட என்றுமே அவர்களை தவறாக எண்ணியது இல்லை.

"சத்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். ஈவினிங் வெளியில மீட் பண்ணலாமா?" என தமிழினி போனில் சண்டே அன்று கேட்க, சத்யாவும் வருவதாக சொல்லி வைத்தான்.

உதய்யை அழைத்து செல்லலாமா என நினைத்த சத்யா பின் இதுவரை வெளியில் சந்தித்து பேசியது இல்லை. இன்று கூப்பிடுகிறாள் என்றால் எதாவது தனியே பேச இருக்குமோ என நினைத்து அவன் மட்டும் சென்றான். அதேபோல தான் நடந்ததும்.

"மினி நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நித்தி நாலு கால் பண்ணிட்டா! நீ ஏன் அமைதியா இருக்க?" என்று சத்யா கேட்க,

"நீ நித்தியை விரும்புறியா சத்யா?" என்றாள் அவள்.

"சரியா போச்சு போ! இதுக்காகவா இவ்வளவு தூரம் வர சொன்ன? இதை நித்திகிட்ட கேட்டுடாத அவ்வளவு தான் ஆடிடுவா" என சிரிப்புடன் கூறியவன், மினி சீரியஸாய் யோசிப்பதை பார்த்ததும்,

"ஹேய் என்னாச்சு உனக்கு? நித்தி மை க்ளோஸ்டு ஹார்ட், மை பிரண்ட், அண்ட் நித்தி தான் எனக்கு எல்லாமே! அப்புறமா நித்தி, ஹனி ரெண்டு பேருமே என்னோட சிஸ்டர்ஸ் மாதிரினு கூட வச்சுக்கலாம்" என சொல்ல, அவன் சொல்லி முடிக்கவும்,
"ஐ லவ் யூ சத்யா" என்றாள்.

இதை எதிர்பார்க்காத சத்யா அதிர்ச்சியானாலும், உடனே தெளிந்தவன் "மினி நீ என் பெஸ்ட் பிரண்ட். நீ எப்படி என்னை...?" என அவன் தலையை இடவலமாக ஆட்ட, மினி முகம் சுருங்கினாள்.

"மினி சீரியஸ்லி நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல. நீ ஹர்ட் ஆகியிருந்தால் ஐம் ரியல்லி சாரி. பட் நிஜமாவே ஐ லவ் சம்ஒன்" என சொல்ல, தன் கஷ்டத்தை மறந்து,

"ஹேய் சூப்பர் டா. இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை? பெஸ்ட் பிரண்ட்னு சொல்லிட்டு மறச்சுட்ட பார்த்தியா? யாரு டா அந்த லக்கி கேர்ள்?" என மினி கேட்க, உடனே தன்னை மாற்றிக் கொண்டு அவனுக்காக சந்தோசப்படுபவளை நினைத்து பெருமை கொண்டவன் மது மேல் தான் கொண்ட காதலை, அதை உணர்ந்ததை என முதலாய் அனைத்தையும் அவளிடம் கூறினான்.

"வாவ் மது ரொம்ப லக்கி. அண்ட் மது மாதிரி ஒரு பொண்ணு உனக்கு ஓவர் டா" என அவள் கலாய்க்க, அதில் சிறிதாய் வெட்கமுற்றவன்,

பின் "மினி ஆர் யூ ஓகே? நீ தெளிவா இருக்கிற தானே? நீ புரிஞ்சிகிட்ட தானே?" என அவன் கேட்க,

"ஹாஹா ச்ச ச்ச! நோ வே சத்யா! எனக்கு உன்னை புடிக்கும். பட் இன்னும் ஆறு மாசத்துல உன்னை பிரிய கஷ்டமா இருந்துச்சு. அதை காதல்னு பீல் பண்ணி.. உன்கிட்ட உளறி.. ப்ச்.. சாரி யா!" என அவள் உணர்ந்து பேச,

"ஹேய் கூல். உனக்கு புரியுது இல்ல! அது போதும் எனக்கு" என கூறி அவளை அனுப்பி வைத்து வீடு வந்து சேர்ந்தான் சத்யா.

அடுத்தநாள் காலை ஹாஸ்டல் அறையில் தமிழினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வர, அனைவரை விடவும் பித்து நிலைக்கு சென்றது சத்யா தான்.

மேலும் அவள் கையில் இருந்த லெட்டர். அதில் 'அடுத்த ஜென்மத்திலாவது என்னை ஏமாற்றாமல் ஏற்றுக்கொள் சத்யா' என்ற வார்த்தைகள்.

ஒரு வாரம் பித்து பிடித்தது போல எதிலும் ஈடுபடாமல் இருந்தவனை உதய், நித்தி நிகழ் உலகுக்கு கொண்டு வர தெளிந்த சத்யாவிற்கோ தமிழினி மேல் அளவுக்கு அதிகமாய் கோபம். என்னிடம் நன்றாக பேசிவிட்டு கடைசி வரை என்னை குற்றஉணர்ச்சியில் ஆழ்த்திவிட்டு சென்றதும் இல்லாமல் என்னை குற்றவாளி ஆக்கிவிட்டாளே என்று.

குணா மஞ்சு பத்மா நித்தி ஹனி உதய் ராஜம்மாள் என மொத்த குடும்பத்தில் ஒரே ஒருத்தர் கூட சத்யாவை ஒரு கேள்வி கேட்கவில்லை. சத்யாவை யாரும் தவறாக நினைக்கவில்லை. அவனும் யாருக்கும் விளக்கம் கொடுக்கவில்லை.

அந்த லெட்டரை வைத்து கல்லூரியில் அனைவரும் வாய்க்கு வந்ததை பேச, நித்தி அவர்களை உண்டு இல்லை என செய்து விடுவாள். போலீஸ் ஸ்டேஷனில் இந்த வழக்கு வந்த போதும் குணா அதை சத்யாவிற்கு எந்த பாதிப்பும் வரவிடாமல் பார்த்து கொண்டார்.

கல்லூரியில் யார் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாமல் படிப்பை தொடர்ந்தான் சத்யா. சஸ்பென்ஸன் முடிந்து அவன் வந்த போது பல பேச்சுக்கள்.. எதற்கும் காது கொடுக்கவில்லை அவன். கல்லூரி முடிய சில நாட்கள் இருக்கும் போது தான் சத்யாவிற்கு தோன்றியது அது.. மது தன்னை புரிந்து கொள்வாளா! இல்லை எல்லாரும் போல அவளும் என்னை தவறாக நினைப்பாளா என்று. அதன்பின் அவனால் சாதாரணமாக அவளிடம் பேச முடியாமல் போக, ஒருநாள் அவளிடம் தன் மனதில் உள்ளதை கூறிவிட்டான்.

அவள் அதை ஏற்று கொள்ளவும் இல்லை வெறுக்கவும் இல்லை. முதலில் திகைத்து பின் மெதுவாக முகம் மாற எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டாள்.

ஆனால் அவள் முகத்தில் அவனுக்கு புரிந்தது என்னவோ அவள் தன்னை தவறாக நினைக்கவில்லை என்ற உணர்வே. இது போதும்.. என் காதல் தெரிந்தால் போதும். மெதுவாக அவள் முடிவை சொல்லட்டும் என விட்டுவிட்டான்.

நினைத்துப் பார்த்த சத்யாவிற்கு தமிழ் மேல் அத்தனை கோபம். நல்லவனாய் நேருக்கு நேர் நின்று கேட்காமல் நித்தியை வைத்து விளையாடியவன் மேல் மொத்தமாய் வெறுப்பு அந்த நேரம். ஆனாலும் நித்தி என்ற ஒருவளுக்காக நிதானமடைந்தவன் தமிழைத் தேடி சென்றான். அவனுக்கு விளக்கம் கொடுக்க சென்றான்.

அதே போல பழையதை நினைத்த நித்திக்கும் என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. சத்யாவிடம் தமிழினி ப்ரொபோஸ் செய்தது அந்த லெட்டரில் ஏன் தமிழினி அவ்வாறு எழுதி இருந்தாள் என எதுவுமே தெரியாமல் தமிழிடம் என்னவென்று பேச என யோசித்துக் கொண்டிருந்தாள்.

நித்திக்கு மட்டும் அல்ல யாருக்குமே ஏன் உதய்க்கும் கூட தெரியாது அன்று மாலை நடந்ததும் அந்த லெட்டர் விஷயமும்.

"மது மாமா எங்கே? போன் பண்ணினா எடுக்க மாட்டுறான்?" நித்தி தான் மதுவிடம் பேசினாள்.

"ஆபிஸ் தான் போனாங்க நித்தி. இன்னும் வர்லயே!" என சொல்ல, நித்தி தமிழ் பற்றி அவளிடம் கூறினாள். அதிர்ந்த மதுவிற்கு ஏனோ சத்யா நித்திக்காக தமிழைப் பார்க்க சென்றிருப்பான் என தோன்ற, நித்தியிடம் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு உதய்க்கு அழைத்தாள்.

"சொல்லு மா" எடுத்ததும் உதய் சொல்ல,

"அண்ணா மாமா எங்கே?" என்றாள்.

"அவன் வீட்டுக்கு அப்பவே கிளம்பிட்டானே! இன்னும் வரலையா?" என கேட்க, இப்போது சந்தேகம் தெளிவானது. உதயை தமிழ் ஸ்டேஷன்க்கு சென்று பார்க்க சொல்லிவிட்டு, நித்திக்கும் அழைத்து தமிழ் வந்துவிட்டானா? என கேட்டாள்.

வரவில்லை என்றதும் ஏனோ பயம் தான் அதிகம் ஆனது மதுவிற்கு.

தொடரும்..
 
Top