• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 32

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 32

உதய் டிடெக்ட்டிவ் மூலம் அறிந்து கொண்டதை நித்திக்கு மொபைலில் சொல்ல, நித்தி எதுவும் சொல்லாமல் வைத்தாள்.

பீச்சில் இருந்து நித்தியை ஹோட்டல் அழைத்து செல்லாமல் வீட்டில் விட்டுவிட்டு உடை மாற்றி வெளியே சென்ற தமிழ் இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்தான்.

இன்னும் நித்தி உறங்காமல் இருப்பதை பார்த்தவன் எதுவும் கேட்காமல் தூங்க செல்ல, நித்தி தயங்கி தயங்கி அவன்முன் வந்து நின்றாள்.

அப்போதும் கண்டுகொள்ளாமல் அவன் வேலையை தொடர, வேறு நேரமாய் இருந்தால் நித்தி எப்படி பேசியிருப்பாளோ! இப்போது மெதுவாக அழைத்தாள்.

"தமிழ்"

தமிழினி பற்றி தெரிந்ததும் அவள் தன்னை ஏற்று கொள்ள தயாராய் இருப்பாள் என அவனுக்கு தெரியும். ஆனால் அது அவனுக்கு தேவையில்லையே! அது காதல் இல்லை இரக்கம்...

பதில் இல்லாததால் மீண்டும் அழைத்தாள். "தமிழ்"

"கேட்குது.. சொல்லு"

"மாமா.. மாமா.. உன்னை பார்க்க வந்தானங்களா?"

அவள் கேள்வியில் புருவங்கள் முடிச்சிட இல்லை என திரும்பாமலே தலையாட்டினான்.

மணி பதினொன்றை தாண்டியும் இன்னும் சத்யா வராமல் மொபைலை அணைத்து வைத்திருப்பதாக மது தான் நித்திக்கு அழைத்து கூறியிருந்தாள்.

மீண்டும் ஒருமுறை மதுவிற்கு அழைத்து நித்தி கேட்க, இன்னும் வராமல் வீட்டில் எல்லோரும் கவலையாக இருப்பதாக கூறி அழுதாள் மது.

"மாமா... காணுமாம்" என நித்தியும் அழும் குரலில் கூறினாள்.

"அவன் என்ன சின்ன குழந்தையா! வந்திடுவான்" என்று எரிச்சலுடன் தமிழ் சொல்ல,

"இல்லை! மாமா இவ்வளவு நேரம் எங்கேயும் போகமாட்டாங்க தமிழ்.. பயமாயிருக்கு" என்று சொல்ல, இப்போது கோபம் தான் கூடியது தமிழிற்கு.

"என்ன டி என்ன! என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு! ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து, அவ சாக காரணமா இருந்தவனை தேடுற! இவ்வளவு நேரம் நான் எங்கே போனேனு தெரியுமா? இல்லை கேட்டியா? இப்ப கூட அவனுக்காக தமிழ் தமிழ்னு என் பேரை இத்தனை வாட்டி சொல்றியே? இதுநாள் வரை ஒரேஒரு நாள் ஆச்சும் என்னை பேர் சொல்லிட்டு கூப்டிருப்பியா?" என கையெடுத்து கும்பிட்டவன்,

"அம்மா தாயே! தப்பு தான். உன்னை ஆசைபட்டு கட்டிகிட்டது தப்பு தான். அதுக்காக நான் உன் மாமாவை எதுவும் செய்யல. அவன் ஊரு முழுக்க வம்பு பண்ணி எங்கே யார்கிட்ட மாட்டிருக்கானோ! போ போய் தேடு.. நான் எப்படி போனா உனக்கு என்ன? உனக்காக உன் மாமன மன்னிச்ச நான் கெட்டவன்! உன் மாமன் ரொம்ப...... நல்லவன்.. போ தாயே போ!" என விளக்கமாய் விபரம் பேசுவதிலேயே அவன் கோபம் தெரிய,

இதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்று தோன்ற, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டாள் நித்தி.

ஏற்கனவே தமிழுக்கு ஸ்டேஷனில் இருந்து போன் செய்தவர்கள் யாரோ ஒரு எம்பி சத்யாவை தேடுவதாக தகவல் வந்திருக்க, நித்தி கேட்டதும் சேர்ந்து கோபத்தில் கத்தினாலும் இவனுக்கும் ஏதோ தவறாகதான் பட்டது. ஆனாலும் இவ்வளவு நேரம் தன்னை தேடாதவள், அதுவும் தமிழினி தன் தங்கை என தெரிந்த பிறகும் அதை சொன்ன எனக்கு எவ்வளவு வலி இருக்கும் என புரியாமல் சத்யாவை பற்றி மட்டுமே நித்தி கவலைப்படுவதை எண்ணி நொந்துவிட்டான். என் ஒருவனுக்காக மொத்த குடும்பத்தையும் பிரித்தது தவறோ! இப்போது அவளும் நிம்மதியாய் இல்லை.. அவளால் எனக்கும் நிம்மதி இல்லையே! என தோன்ற அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்து கண் மூடினான்.

எம்பிக்கும் சத்யாவிற்கும் என்ன சம்மந்தம் என அறிய அவன் எம்பி பற்றிய தகவல் தேட, அது எம்பியின் இன்னொரு முகத்தை காட்டி இருந்தது.

ஆனால் அந்த மொத்த குடும்பமும் சத்யா நம்பும் அளவுக்கு அவன் நல்லவன் என்று மட்டும் தமிழால் நம்ப முடியவில்லை. தமிழினி இறந்தது தெரிந்து அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து அவன் சென்னைக்கும் மதுரைக்கும் அலைந்தது... தங்கையை நினைத்து முழுதாய் கவலைப்பட முடியாமல் அம்மாவிற்கு எதுவும் ஆகிடுமோ என பயந்தது...தமிழினியுடன் பாசத்தை கொட்டி அவன் கான்பித்து விடவில்லை தான். ஆனால் அண்ணன் தங்கை பாசம் இருக்கும் தானே! அவளை பற்றிய ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தானே தெரியும். அம்மா பற்றிய கவலையில் தங்கை கையில் இருந்த கடிதத்தை போலீஸ் காட்டிய போது அதிர்ச்சி அடைந்த அவனால் அதற்கு அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. ஆக்ஷன் எடுக்க சொல்லியிருந்தான் தான்! ஆனால் அதன்பின் அதை தெரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காததால் குணாவிற்கு சத்யாவை காப்பாற்றுவது எளிதானது.


தமிழ் அவ்வளவு எளிதில் யாரோடும் மனம் விட்டு பேசிட மாட்டான். அவன் பேசியதும் பேச விரும்பியதும் அவன் தியாவிடம் மட்டுமே.. தமிழினியிடம் அவ்வளவு நெருக்கம் இல்லாததற்கு காரணம் தமிழினியே தான்.

தமிழ் சென்னை ட்ரான்ஸ்பெரில் வந்த போது சத்யா பற்றி விசாரிக்க அன்று தான் தோன்றியது. விசாரித்து அவனை கண்டுபிடிக்கவும் செய்துவிட்டான். ஆனால் அவனை என்ன செய்து என்ன பலன் என்றும் தோன்ற, அவனை நேரில் பார்த்தவுடன் கோபத்தில் மதுவை தப்பாய் நெருங்க முயற்சித்து அதுவும் தியாவால் தெளிந்தவன் ஆகிற்றே..

யோசித்தவன் எழுந்து மணியை பார்க்க பதினோரு மணியை தாண்டியது. நித்தி பத்தின நினைவே அப்போது தான் வர வீட்டின்னுள் தேடியவன், "ஓஹ் மை காட்! இந்த நைட்ல எங்கே போனா? அவனை தேடி நிஜமாவே போய்விட்டாளா? இவளை எங்கே போய் தேடுவேன்?" என தவிப்புடன் எழுந்தவன், ஜீப்பில் ஏறினான்.

மொபைலை எடுத்துவராத தன்னையே நொந்து கொண்ட நித்தி எங்கு செல்வது என தெரியாமல் அந்த இரவில் தனியாக சத்யாவை தேடி திரிந்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு ஆபத்து என்று தான் அவளுக்குள் மனம் அடித்துக் கொண்டிருந்தது. அது பொய் இல்லை என்பது போல எதிரே வந்த கார் ஒன்று அவள் முன் நிற்க, அவள் சுதாரிக்கும் முன் காரில் ஏற்றி மயக்கமடையவும் செய்திருந்தனர்.

வழியில் தமிழ் நடுஇரவு என்பதையும் மறந்து உதய்க்கு கால் செய்து நித்தியை விசாரிக்க, உதய்க்கும் நித்தி சத்யாவை தேடி சென்றது தெரியாமல் பயந்தான்.

பின் தமிழ், சத்யா வந்துவிட்டானா என கேட்க, அவனை தேடி தான் உதய்யும் அலைந்து கொண்டிருப்பதாக கூறினான்.

தமிழ் ஒரு முடிவுடன் உதயை எம்பியின் வீட்டிற்கு சென்று வரும்படி கூற, எதற்கு என புரியாவிட்டாலும் சரி என்று விட்டு அங்கு சென்றான்.

தமிழ் குணாவிற்கு கால் செய்து நித்தியை விசாரிக்க அங்கும் இல்லை என்றதும் பெரும்பயம் அவனை தொற்றிக் கொண்டது.

ஸ்டேஷனிற்கு கால் செய்து தகவலை சொல்லியவன், பின் உடனே ஸ்டேஷன் சென்று எம்பியின் மற்ற இடங்களை விசாரித்துவிட்டு பழைய ஃபைல் ஒன்றையும் நோண்டினான். அடுத்து கான்ஸ்டபிள்க்கு என்ன செய்ய வேண்டும் என கட்டளை இட்டவன் கிளம்பினான்.

உதய்க்கும் திரும்ப திரும்ப தமிழ் அழைக்க அவன் மொபைல் கேட்பார் இன்றி ரோட்டில் கிடந்தது அவன் அறியாதது.

"டேய் எவன் டா அவன்? நான் யார்னு தெரியுமா? என் கண்ணை மட்டும் அவுத்து விடுங்க டா.. அப்புறம் இருக்கு உங்களுக்கு!.. நான் யாருனு தெரியாமலே என் மேலயே கை வச்சுட்டீங்க இல்ல? இன்ஸ்பெக்டர் தமிழரசன் பொண்டாட்டி டா நானு.. இங்க இருக்குற ஒருத்தனும் தப்பிக்க முடியாது.. உங்க எல்லாரையும் நடுத்தெருவுல என் புருஷன் தரதரனு இழுத்துட்டு போகல... பாருங்க டா டேய்..."

கொஞ்சமும் பயம் இன்றி மயக்கம் தெளிந்தது முதல் நித்தி இப்படி கத்திக் கொண்டிருக்க, சரியாய் உள்ளே நுழைந்திருந்தான் தமிழ்.

எம்பி யார் என்று தெரியாவிட்டாலும் சத்யா யார் என்று இவ்வளவு நாட்களில் ஓரளவு தெரிந்து வைத்திருந்தான் தமிழ். ஒரு பிரச்சனை என்றால் யார் என்ன என்று பார்க்காமல் அந்த இடத்திலேயே சண்டைக்கு தயாராகி விடுவான் சத்யா. எம்பியிடம் அதே போல ஏதோ பிரச்சனை இழுத்து வைத்திருக்கிறான் போல என நினைத்தவன் வெளியில் அதிகம் தெரியாத, யாரும் உபயோகப்படுத்தாத அந்த பங்களாவை தனது இரண்டாவது மனைவியின் தம்பி பெயரில் பினாமியாய் அந்த எம்பி வைத்திருப்பது தெரிந்து, யூகத்தில் என்றாலும் உள்மனம் அடித்து கூறியதில் அங்கு சென்றான்.

இப்படி வர வேண்டியது இருக்கும் என நினைக்கவில்லையே தவிர, சத்யாவிற்கு எம்பி மூலம் பிரச்சனை என்றதும் எம்பியினை பற்றிய தகவல் தேடிய போது கிடைத்தது தான் இதுவும். சத்யாவிற்கு என்றதும் அசால்ட்டாய் இருந்தவன் நித்தியினால் இப்பொழுது எழுந்திருந்தான்.

பங்களா ஊருக்கு வெளியே இருந்ததாலும், சுற்றி வேறு எந்த வீடுகளும் இல்லாததாலும் நித்தியின் அந்த பேச்சு நன்றாகவே தமிழின் காதுகளில் விழுந்தது.

மற்ற நேரமாய் இருந்தால் அவன் மனம் அவளின் பேச்சை ரசித்து, சிரித்து அவள் இதயத்தில் மீண்டும் சிறை கொள்ள ஆசைப்பட்டிருக்கும். ஆனால் இது அந்த மாதிரியான சூழ்நிலை அல்லவே!

அந்த நடுஇரவில் இவன் நித்தியை நினைத்து கலங்கி, மனதின் ஒரு ஓரத்தில் போலீஸ் என்ற மமதையையும் தாண்டி பயத்தில் இவன் மெதுவாக உள்ளே நுழைந்திருக்க, நித்தியின் குரலில் அவனுக்கு முதலில் கிடைத்தது என்னவோ பெரும் நிம்மதி தான்.

நீண்ட பெரும் மூச்சை வெளியிட்டு, நெஞ்சில் கை வைத்து தன்னை சமன்படுத்தியவன் குரல் வந்த திசை நோக்கி சென்றான்.

"டேய்.. யாருடா நீங்க? என்னை ஏன் டா கடத்துனீங்க?" நித்தியின் புலம்பல் முடிந்த பாடில்லை.

நித்தி குரலில் அந்த அறை பக்கம் சென்ற தமிழ் கதவை மெலிதாய் திறக்க, கண்ட காட்சியில் அந்த நிலையிலும் சிரிப்பை அடக்க முடியவில்லை தமிழிற்கு.

ஒரு மூலையில் சேரில் நித்தியை கட்டி வைத்திருக்க, அவள் கண்களை கட்டியும், வாயில் பிளாஸ்திரி ஒட்டியும் வைத்திருக்கின்றனர். வாயில் இருந்த பிளாஸ்திரியை எச்சிலாலே எடுத்திருப்பாள் போல!. வாய் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தது.

மற்றொரு மூலையில் சத்யா. அவன் அருகில் உதய். இருவரும் மயக்கத்தில் கிடந்தனர்.

தமிழ் அந்த அறையில் இருந்து நகர்ந்து , அனைத்து இடங்களையும் அலசிக் கொண்டிருக்க, நித்தியின் பேச்சும் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது. வீட்டினுள் சுற்றிலும் ஒருவர் கூட இல்லை. அந்த அறை ஜன்னல் அருகே சென்று எதோ செய்தவன் பின் நித்தியிடம் வந்தான்.

நித்தி அருகே சென்று அவள் கை கட்டுகளை ஒரு புன்னகையுடன் அவிழ்க்க, அது தமிழ் என்று அறியாத நித்தி மீண்டும் கத்துவதற்கு வாய் திறந்த நேரம் அவளை அறிந்த தமிழ் தன் ஒரு கையால் அவள் வாயை மூடி இன்னொரு கையால் அவிழ்த்து விட்டான்.

கண்களை நன்கு கசக்கிவிட்டு நித்தி எதிரே நின்றவனைப் பார்க்க அவனும் அவளை பார்த்துவிட்டு உதய் பக்கம் சென்றான்.

'நம்ம பேசினதை கேட்டிருப்பானோ?' என்ற யோசனையோடு அவள் சத்யா பக்கம் சென்ற நேரம் யாரோ வரும் அரவம் கேட்க, நித்தியை இழுத்து தன் கையனைப்பில் வைத்து கொண்ட தமிழ், அடுத்து என்ன என யோசிக்கும் முன் அவர்கள் அறைக்குள் நுழைந்தனர் சில ஆஜானுபாகு உடல் கொண்ட ஆண்கள். தொடர்ந்து வெள்ளை வேஷ்டி சட்டையில் ஐம்பது வயதை கடந்த ஒருவன்.

தொடரும்..
 
Top