• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே final

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 35

"அதான் கூட்டிட்டு போறேன் சொல்றேன்ல பின்ன ஏன்டி இவ்வளவு அடம் பன்ற?" குரலில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிய தமிழ் தான் கத்திக் கொண்டிருந்தான்.

"எனக்கு இப்பவே போனும் வர முடியுமா! முடியாதா?" அதற்கு ஈடாய் நித்தியின் குரல்.

தமிழ் தன் அன்னை தந்தையிடம் நடந்ததை கூற அதற்கு பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை அவர்களிடம்.

"தமிழினி இப்போ இல்லை கண்ணா! இதை நாங்க எப்பவோ ஏத்துக்க பழகிட்டோம். அதுல இருந்து வெளில வந்துட்டோம். அதனால தான் நீ சத்யாவோட அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணினதா சொன்னதும், எங்கே நீ தப்பான வழியில போய்டுவியோனு பயந்தேன். சத்யாவை பார்த்த அன்னைக்கு அந்த பையன் ரொம்ப நல்லவனா தான் எங்களுக்கு தோணுச்சு. நீ எதுவும் குழப்பிக்காமல் உன்னோட வாழ்க்கையை சந்தோசமா வாழ பாரு. தப்பு பண்ணவனுக்கு அந்த கடவுள் தண்டனை கொடுப்பான்" என அவர்கள் சொல்லிவிட, தமிழும் தலையாட்டி அறைக்கு சென்று நித்தியுடன் குணா வீட்டிற்கு கிளம்பும் நேரம் அவன் மொபைலை அழைத்தது.

ஸ்டேஷன்னில் இருந்து அழைத்தவர்கள் உடனே வருமாறு சொல்ல, அதை நித்தியிடமும் சொல்லி ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக கூற அதற்கு தான் மறுத்துக் கொண்டிருந்தாள் நித்தி.

"தியா ப்ளீஸ் டி! கொஞ்சம் புரிஞ்சிக்கோ. வேலை இருக்கு. உன் மாமாவை பார்க்க கண்டிப்பா இன்னைக்கு கூட்டிட்டு போறேன்" மனைவியிடம் கெஞ்சினான் அந்த ஆண் சிங்கம்.

அதில் வலது கையின் ஆட்காட்டி விரலை கன்னத்தில் வைத்து சிறிது யோசித்த நித்தி, "சரி ஓகே வளந்த மரம்! பட் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என சொல்ல,

அவள் செய்கையை பார்த்துவிட்டு, 'பேச நினச்ச போதெல்லாம் பேசாமல், வேலையில் மனுஷனுக்கு மண்டை காயும் போது பேசணுமாம்' என நினைத்து "சீக்கிரம் சொல்லு" என்றான் அவள் பாவனையை கவனித்தபடி.

"ஏன் உனக்கு என்னை பிடிக்கும்?" என சிறிதும் யோசிக்காமல் அவள் கேட்க, சத்யாவை பற்றி ஏதேனும் பேசுவாள் என நினைத்தவனுக்கு அது இன்பம் அதிர்ச்சி. பின் முதல் முறையாக அவனைப் பற்றி கேட்கிறாளே!

"ஏன்.. ஏன் திடிர்னு?" ஸ்டேஷன் செல்வதையும் மறந்து அவன் கேட்க, "ப்ச் சொல்லு காக்கி" என்றாள்.

மனம் எங்கும் ஒரே நொடியில் இலகுவாக, "இதுதான்னுலாம் சொல்ல முடியாது! உன்கிட்ட எல்லாமே ரொம்ப புடிக்கும். உன்னோட வம்பு பேச்சு, எதுக்கெடுத்தாலும் எதிர்த்து பேசுறது இதெல்லாம் ரொம்ப ரொம்ப புடிக்கும்" இவ்வளவு நேரம் சண்டை போட்ட அதே முகமா என்பது போல அவன் முகம் அப்படியே சந்தோசத்தில் திளைத்து கனவில் மிதந்து பேச, நித்திக்கும் எங்கோ வானத்தில் பறப்பது போல இருந்ததோ!

ஆனால் அப்படியே இருந்தால் அது நித்தி இல்லையே!

"சரி சரி ஓவரா இமாஜின் பண்ணி ட்ரீம்ஸ் போகாத! அடுத்து சொல்லு" என அவள் சொல்ல, அதில் முறைத்துக் கொண்டே அவளை பார்த்தவன்,

'உனக்கெல்லாம் பீலிங்ஸ்சே இல்லையா! போடி பொம்பள ரவுடி!' என நினைத்தாலும் நித்தி கொடுத்த இந்த வாய்ப்பை விட்டால் திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது என நினைத்து அனைத்தயும் கூறினான்.

"உன்னை முதல்ல மால்ல பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சது. அப்புறம் மதுகிட்ட பேசும் போது செகண்ட் டைம் பார்த்தேன்.. அப்போ உன்னோட டீடெயில்ஸ் தெரிஞ்சுக்கணும்னு தான் தூரமா போனேன். உன் கண்ணுக்கு தெரியாத இடத்தில நின்னு பார்த்தேன். ஆனால் நீ சத்யா கார்ல ஏறுனதும் தான் அவனோட ரிலேசன்னு தெரிஞ்சது. அப்பவும் நான் உன்னை விரும்பினது எனக்கே தெரியல. சத்யா மேல இருக்கிற கோபத்தில அவன் விரும்புற பொண்ணை கல்யாணம் பண்ணனும் தான் நினைச்சேன். அதுக்காக தான் அன்னைக்கு மதுகிட்ட பேசினேன். ஆனால் உன்னை பார்த்ததும் அது தப்புனு புரிஞ்சுது" என்று கூறவும் அவள் முறைக்க, கண்களால் கெஞ்சியவன்,

"அப்புறமும் ஒரு நாள் மால்ல என்னை திட்டுனியே? அப்ப கூட கோபம் வர்ல! சிரிப்பு தான் வந்துச்சி! உதய் கூட போறதை பார்த்ததும் தான் செம்ம கோபம் வந்துச்சி. அன்னைக்கு தான் ரெண்டாவது வருஷம் தமிழினி திதி. அதுக்கு தான் புடவை எடுக்க அங்கே வந்தேன். அப்புறம் நிச்சயதார்த்தம்னு மேடைல அவன் கூட நின்னியே அப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுது நான் உன்னை விரும்பினது" என முழுதாய் அவன் சொல்ல, கண்களை மட்டும் அல்ல வாயையும் விரித்து திறந்து நித்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.

“எனக்கு 8 வயசு இருக்கும் போது ட்ரைன்ல ராமேஸ்வரம் போனோம். அப்ப திரும்பி வரும்போது ட்ரைன்ல தான் எங்களுக்கு தமிழினி கிடைச்சா.. எதுவுமே சொல்ல தெரியாமல் அம்மா அப்பா எங்கன்னு கேட்டால் மட்டும் ட்ரெயின்ல இருந்து கீழ எட்டி எட்டி பார்த்தா.. அப்ப எனக்கு புரில.. அம்மா அப்பா தான் எங்களோட கூட்டிட்டு வந்தாங்க.. வளர வளர ஒரு ஒதுக்கம்.. எங்களையும் பாசம் வச்சி இழந்துட கூடாதுனு அவ நினைச்சது எங்களுக்கு லேட்டா தான் புரிஞ்சுது. அப்புறம் ஹாஸ்டல் வேணும்னு கேட்டு ஸ்கூல்லய்யே ஹாஸ்டல் சேர்ந்து தன் படிச்சா.. அப்புறம் காலேஜ்லயும் அது தான்.. ஆனா நான் இன்னுமே கொஞ்சம் அவ மேல கேர் எடுத்து பார்த்திருந்தா என்கிட்ட எல்லாம் ஷேர் பண்ணி இருப்பால்ல! நான் பாசம் வச்சாலும் அதை அதிகமா யார்கிட்டயும் காட்டினது இல்ல”

தமிழினி பற்றி பேசியதும் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் நித்தி. நிஜம் தானே அவள் ஒதுங்கி சென்றிருந்தாலும் இவன் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்தி இருக்கலாம் தானே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"ஆனால் பாரு தியா! நான் ரொம்ப சுயநலவாதியா இருந்தேனோனு இப்ப தான் தோணுது. ஒருநாள் கூட உனக்கு என்னை பத்தி நினைச்சு பார்க்க முடிலனு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு டி. உன் குடும்பத்தில இருந்து உன்னை பிரிச்சுட்டேன்ல! பரவாயில்ல டா! நானே உன்னை அங்கே கொண்டு விடுறேன். உன் மாமா சந்தோசம் தான் உன் சந்தோசம்னு புரியுது. ஆனாலும் உனக்கு எப்ப என்மேலே காதல் வருதோ இல்ல என்கூட இருந்தால் நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்னு தோணுதோ அப்ப வா!"

ஸ்டார்ட்டிங் சூப்பராய் ஆரம்பித்து பினிஷ்ஷிங்கில் அதைவிட சூப்பராய் தமிழ் சொதப்பிவிட, அப்படியே மனநிலை மாறி கொலைவெறியானாள் நித்தி.

"என்ன தியா? நிஜமா தான் சொல்றேன்.. எனக்கு உன்னை புடிக்கும் உனக்கே அது தெரியும் போது..." என்று தமிழ் பேசிக் கொண்டிருக்க,

"ஆமா மாமான்னா எனக்கு உயிர் தான். அப்படி தான் மாமாவை பத்தி பேசுவேன்! ஆனால் எப்பவும் பிரச்சனைனா மாமாவை கூப்பிடுற நான் ஏன் அந்த எம்பி என்னை கட்டி வச்சிருந்த அப்போ உன்னை நம்பி.. என் புருஷன் வந்து உங்களை பார்த்துப்பான்னு சொன்னேன்? சொல்லு ஏன் சொன்னேன்? உனக்கு அதெல்லாம் தெரியாது! என் மாமாவை நான் பேசுறது மட்டுமே தான் உன் காதுல விழும்!" பட்டென்று நித்தி வெடிக்கவும் தமிழ் திகைத்து பார்க்க,

"எனக்காக என் மாமாவை நீ மன்னிச்சதா சொல்லும் போது வராத சந்தோசம், என்னக்காக மட்டுமே நீ என்னை கல்யாணம் செய்துகிட்டதா சொல்லும்போது எல்லாம் மனசுல பட்டாம்பூச்சி பறந்துச்சே! அது தான் காதல்னு எனக்கு தெரியாமல் போனதும் என் தப்பு தானே! உன்னோட ஒவ்வொரு வார்த்தையையும் ரசிச்சு நான் கேட்டேன், ஆனால் அதை உன்கிட்ட காட்றதுக்கு அப்ப எனக்கு தடையா இருந்தது மாமா மேலே நீ வச்சிருந்த கெட்ட அபிப்ராயம் தான். இப்ப பேசலாம்னு வந்தா நீ என்னை பேச விடாமல் நான் யாரோன்ற மாதிரி பேசுற.. போறேன் இனி வரவே மாட்டேன் போ! என் காதல் உனக்கு புரியலைல! போ இனி என்கிட்ட பேசாத போ!" என்றவள் அவனை வெளியே தள்ளி கதவை அடைத்து கொள்ள,

தமிழுக்கு அவள் அழுகையுடன் பேசியதில் அவள் குரல் உள்ளே சென்றிருக்க பாதி புரியாமல் போக கடைசியாக என் காதல் உனக்கு புரியலைல என்ற வார்த்தையை கேட்டவனுக்கு ஒரு நொடியில் உலகே புதிதாய் தெரிந்தது. அவன் அடுத்து பேசுவதற்குள் அவள் கதவை அடைத்து கொள்ள,

"தியா ப்ளீஸ்! கதவை திற!" தமிழ் சத்தமாய் அழைக்க,

"பேசாம போய்டு இல்ல வக்கீல் நோட்டீஸ் அனுப்பிடுவேன்" என்று குரல் கொடுக்க,

"ரவுடி! ரவுடி!" என்று சிரித்தவன், அவளின் மனநிலை புரிந்தும் அந்த நேர சந்தோசத்தை அனுபவிக்கவும் ஜீப்பை எடுத்து கொண்டு உற்சாகத்தில் பறந்து சுற்றி வந்தான்.

"ஹனி ஒரு தோசை" என சாப்பாட்டு மேஜையில் இருந்து உதய் குரல் கொடுக்க, "அவனுக்கு இதை கொண்டு போ. நான் சுட்டு எடுத்துட்டு வரேன்" என்றார் பார்வதி.

"மாமா தோசை எப்படி இருக்கு? நானே பண்ணேன்" ஹனி பெருமையாக சொல்ல, அந்த கிழிந்த தோசையை தூக்கி பிடித்து அவளின் முகம் பார்த்தான்.

"ப்ச் மாமா! தோசை ரௌண்ட்டா தான் இருக்கும்னு யார் சொன்னா? உங்களுக்காக ஸ்பெஷல்லா செஞ்சேன்! போங்க" என அவள் அவன் முகபாவனைக்கு விளக்கம் கொடுக்க,

"நான் நல்லாயில்லைனு சொல்லவே இல்லையே! நல்லா இல்லாமலா ஆறாவது தோசை உள்ளே போய்ட்டு இருக்கு?" என கண் சிமிட்டி சொல்ல, அவள் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம்.

அதை ரசித்துக் கொண்டே உதய் சாப்பிட "வேற என்ன வேணும் மாமா?" என்றதும், யோசிக்காமல் அவன் "ஒரு ஹனி கிஸ்"என்றான்.

"அத்தை! மாமாக்கு ஒரு... " என்று அவள் கத்தி சொல்ல, அதை முடிக்கும் முன் அவள் வாயை மூடினான்.

"ஸ்ஸ்ஸ் ஏன் டி! என்ன கேட்டேன்னு யோசிக்காம இப்படி கத்துற?" என சொல்லிக்கொண்டே அவன் கையை எடுக்க அப்போது தான் அவன் கேட்டதே அவளுக்கு புரிந்தது. ஆனால் அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் அங்கும் இங்குமாய் முழித்து வைத்தாள்.

"ஹாஹா ஹா.. அய்யோ அம்மா என்னால முடிலயே.." என கை தட்டி சிரிக்கும் சத்தத்தில் உதய் ஹனி இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கே இனியா நின்று கொண்டிருந்தான்.

"டேய் இனியா! எப்படா வந்த?" உதய் கை கழுவி அவன் அருகில் வர,

"இப்ப ஒரு தரமான சம்பவம் நடந்துச்சே அப்பவே வந்துட்டேன் அண்ணா" என்றதும் உதய் அசட்டு சிரிப்பு சிரிக்க, ஹனி இன்னும் அவஸ்தையாய் விழித்தாள் அவன் முன்.

"டென் டேஸ் லீவ். அதுவும் அம்மா கால் பண்ணி இங்க நடந்ததை சொல்லவும் உடனே கிளம்பிட்டேன்.. இல்லைனா இன்னும் ரெண்டு நாள் அப்புறம் தான் வந்திருப்பேன்" என்றான்.

"உனக்கு லீவ்வே வந்திடுச்சா! எனக்கு இன்னும் ஒன் வீக் இருக்கே!" ஹனி கவலையுடன் சொல்ல,

"அதுக்கென்ன ஹனி! அதான் பகல்லேயே உங்க ரொமான்ஸ் பயங்கரமா போகுதே.. ஒரு வாரம் எல்லாம் சப்ப மேட்டர்" என இனியா சொல்ல, உதய் ஒரு மெல்லிய சிரிப்புடன் உள்ளே செல்ல, ஹனி வெட்கத்துடன் சமையலறைக்கு ஓடினாள்.

"உதய் அண்ணா! உங்களை நான் அப்பாவி பூனைனு நினச்சேன்.. நீங்க நடு வீட்ல செம்ம படம் ஓட்டுறீங்க"

"டேய் பேச்சை குறை டா! நானே இப்ப தான் எதோ ஆரம்பிச்சு பார்த்தேன்.. நந்தி மாதிரி உள்ளே வந்துட்டு என்னையே ஓட்றீயா?"

"ஹாஹா அதானே! ரொம்ப சந்தோசமா இருக்கு ண்ணா.. லீவ் இல்லாம நான் வராமல் இருந்தாலும் ஹனிக்கு அப்பப்போ கால் பண்ணுவேன். நீங்கள் எப்படி அவளை பாத்துக்குறீங்கனு அவளும் சொன்னா.. ஆனாலும் அன்னைக்கு கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணி வச்ச பீல் எனக்கு.. அதான் மனசுக்குள்ள கொஞ்சம் பயம்! இப்ப உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்த்த அப்புறம் ஐம் ரியால்லி ஹாப்பி அண்ணா. இதை பார்க்க தான் வீட்டுக்கு கூட போகாம நேரே இங்க வந்தேன். எனக்கு தெரியும் ஹனியை நீங்க புரிஞ்சுக்குவீங்கனு"

"பார்ரா! ஹ்ம்ம் டேய் குட்டி பையா! உன் அளவுக்கு இல்லைனாலும் நானும் கொஞ்சமா நல்லவன் தான். உன் பெஸ்ட் பிரன்ட்ட நான் நல்லா பாத்துக்குவேன் போதுமா!" என அவன் தலை முடி கலைத்து சொல்ல, இருவரும் அணைத்துக் கொண்டனர்.

"மாமா! மஞ்சு அத்தை கால் பண்ணாங்க! நாம அங்கே போலாமா?" ஹனி கேட்க, உதய் பதில் சொல்லும் முன் இனியா,

"அட ஹனி நீயும் வரியா? அண்ணாக்கு வேலை இருக்கும்.. நீ வா! நானும் வீட்டுக்கு தான் போறேன்" என சொல்ல,

"டேய் இப்ப தான் உன்னை பெருமையா நினச்சேன்! கொஞ்சமாவது என் மேலே கருணை காட்டு! அவளே புரிஞ்ச்சுக்க மாட்றா! நீயுமா! ஒழுங்கா ஓடி போய்டு! நானே அவளை கூட்டிட்டு வரேன்!" என அவன் காதில் சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டே பார்வதியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"ஹனி நீ அம்மாகிட்ட கிளம்ப சொல்லிட்டு வா! அவங்களையும் கூட்டிட்டு போலாம்" என்று சொல்ல, அவளும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்புவதற்காக அறைக்கு சென்றாள்.

"நான் கேட்டது இன்னும் வரலையே பாப்பாஆஆ!" அறைக்கு வந்தவளிடம் விடாமல் உதய் கேட்க, முகத்தில் எழுந்த செம்மையை மறைத்து,

"என்ன மாமா! சத்யா மாமாவை காப்பாத்த போறேன்னு நைட் பன்னிரண்டு மணிக்கு எந்த பேய் பிசாசுகிட்டயும் மாட்டிட்டிங்களா? ஆளே சரி இல்லையே!" சாதாரணம் போல பேசினாலும் அவளுள் இருந்த பெண்மையின் வெட்கம் குரலில் வந்ததை உதய் அறிய மாட்டானா என்ன!

பின் இருந்து அவளை உதய் அணைக்க, ஹனிக்கு இதயம் வெளி வந்து துடிப்பது போல உணர்வு.

"பேய் பிசாசு எல்லாம் இல்ல! ஒரு பாப்பாகிட்ட தான் மாட்டிகிட்டேன்" என அவன் அணைத்தபடி சொல்ல, அவளுக்கு நா வறண்டு போனது.

"இப்ப பேசு பார்க்கலாம்! எதோ குழந்தை புள்ளயாச்சேனு விட்டா... ஒண்ணுமே தெரிலயே இந்த மக்கு பாப்பாக்கு? அதான் இந்த ஷாக் டிரீட்மென்ட்! எப்படி?"

"மா..மா.. அத்தை.. வந்..து..டு..வா..ங்க" அவள் திக்கி திக்கி சொல்ல, அவளை அப்படியே திருப்பியவன் தன் முதல் இதழ் முத்ததை நெற்றி வகிட்டில் பதித்தான். அடுத்து கண், கண்ணம், மூக்கு என இறங்கி வர, முற்றிலும் புது உணர்வில் கண் மூடி அவள் அவஸ்தையாய் ரசித்தாள்.

இதழ் அருகில் இதழ் நெருங்கி இருக்க சில நிமிடங்கள் கடந்தும் எதுவும் நடக்காமல் ஹனி கண் திறக்க, அவளை கண்களால் அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தவனை பார்த்து வந்த வெட்கத்தை மறைக்க அவனுள் தஞ்சம் ஆனாள் அவள்.

நிமிடங்கள் பல கரைய தன்னில் புதைந்து இருந்தவளை இறுக அணைத்து, "சாரி ஹனி! நான் பேட் பாய் ஆகி உன்னையும் சேர்த்துக்க பாக்குறேன்ல" என சிரித்தவன்

"இன்னும் ஒரு வருஷத்துக்கு இது மாதிரி சின்ன சின்னதா தான். அப்புறம் தான் இந்த ஹனி ஸ்வீட், எக்ஸட்ரா, எக்ஸட்ரா எல்லாம்" என அவள் உதடுகளை கூற, தன் படிப்பிற்காக கூறுகிறான் என புரிந்து நெகிழ்ந்து போனாள் ஹனி.

**************

"இந்த கிட்ட வர்ற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத! அவ்ளோ பீல் பண்ணி என் காதலை சொன்னா நீ என்கிட்ட வராம ஊரு சுத்திட்டு வர்ற! மரியாதையா போய்டு! நான் யார்னு தெரியும்ல.. என் சத்யா மாமாக்கு மட்டும் தெரிஞ்சுது….!" நித்தி தான் எப்போதும் போல கத்திக் கொண்டிருந்தாள்.

நித்தியின் காதலை தெரிந்து கொண்ட தமிழ் உலகே தன் வசம் ஆன சந்தோஷத்தில் சுற்றி வந்தவனை சில நிமிடங்களே தனியே விட்டு பின் அவன் கடமை அழைத்துக் கொள்ள, அதை முடித்து கனவில் மிதந்து வீடு வந்து சேர மூன்று மணி நேரம் ஆனது.

வந்தவன் நேராய் நித்தி முன் போய் நின்றான். அவள் எதுவும் பேசாமல் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அவள் கைகளை பிடித்து "தியா ஐ லவ் யூ" என்று சொல்லி அவளை அணைக்க வர, அப்போது ஆரம்பித்தது நித்தியின் கோபம்.

நான் என் காதலை சொன்னதை கூடாது கண்டுக்காம வேலைக்கு போய் விட்டானே என்ற கோபத்தில் இருந்தவளுக்கும் அவனின் இந்த செய்கை பிடித்து தான் இருந்தது. ஆனால் இவ்வளவு நேரம் காத்திருக்கவிட்டவனை சும்மா விடுவாளா பெண்? அதுவும் நித்தி மாதிரியான பெண்!

"அய்யோ தியா! நான் ஏன் போனேன்னா..."

"பேசாத! கொன்னுடுவேன். போய் உன் வேலையை கட்டிப்புடிச்சுக்கோ..உன் ஐ லவ் யூ எல்லாம் எனக்கு தேவை இல்ல.. இப்ப நான் மாமா வீட்டுக்கு போகணும்.. நீ வரியா இல்லை நான் போகவா?"

"என்ன டி? விட்டா பேசிட்டே போற? கூட்டிட்டும் போக மாட்டேன்.. உன்னை போகவும் விட மாட்டேன்! பாக்கறியா என்ன பன்றேன்னு? சும்மா நொய்யி நொய்யினு பேசிகிட்டு... மனுஷன ஆசையா பேச விடுறியா? எப்பப்பாரு பட்டாசு மாறி பொறிஞ்சிக்கிட்டு.. என்னவோ என்னை பிடிக்காத மாதிரி ஓவரா பண்ற? இந்த வாய் தானே இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை புடிக்கும்னு சொன்னது? அப்புறம் ஏன் டி இவ்வளவு சீன் உனக்கு? பொம்பள ரவுடி!"

"ரவுடியா! பல்லை பேத்துடுவேன்! நீ என்ன..."

"ஏய் பேசாத சொன்னேன்! பல்லை பேத்துடுவியா? பேப்ப டி பேப்ப! ஆமா நீ பொம்பள ரவுடி தான் டி.. அப்படி தான் கூப்பிடுவேன்.. என்ன பண்ணுவ? இனிமேல் உன்னை அப்படிதான் கூப்பிடுவேன்.. தோ இப்படி தான் கட்டி புடிப்பேன்.. இப்படி தான் ஓயாம பேசுற வாய பேச விடாமல் செய்வேன்.." என பேசிக் கொண்டே அவன் அதை செயலிலும் காட்ட, இறுதியில் இருவரின் பேச்சையும் நிறுத்தியது இருவரின் அந்த உதடுகளும் சேர்ந்ததால் தான்.

சில நிமிடங்கள் கழித்தே அவளை மூச்சு வாங்க விட்டவன் "உன் வாயை எப்படி பேச விடாமல் செய்யணும்னு எனக்கு தெரியும்! வா உன் மா..மா வெயிட் பன்றான்" என சொல்ல நாய்குட்டி போல எதுவும் பேசாமல் அவன் பின்னாடி சென்றது நம்ம நித்தி குட்டியே தானுங்க!

"நித்தி மா எப்படி டா இருக்க? நீங்க எப்படி இருக்கீங்க தம்பி?"

நித்தி தமிழிடம் பத்மா கேட்டுக் கொண்டிருக்க, பார்வதி ஹனியுடன் உதய்யும் வந்து சேர்ந்தான்.

தமிழினி அண்ணன் தான் தமிழ் என தெரிந்தவுடனா அல்லது சத்யா மீது எந்த தவறும் இல்லை என்று உறுதியானதாலா என்று சொல்ல தெரியாமல் தமிழ் மேல் இன்னும் கொஞ்சம் மதிப்பு உயர்ந்து தான் போனது அங்கிருந்த பெரியவர்களுக்கு. அதனாலேயே இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் பேச, அதே காரணத்தினால் தமிழும் எந்த தயக்கமும் இல்லாமல் அவரகளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

உதய்யுடன் தமிழ் சாதாரணமாக பேச, உதய்யும் சத்யாவை புரிந்து கொண்டானா என தெரிந்து கொள்ள அவனை பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தான்.

சத்யா மது மடியில் படுத்தவன் தூங்கியிருக்க யார் வந்த போதும் அவனை எழுப்பவே விடவில்லை மது. அவனே தூக்கம் கலைந்து எழுந்தபோது மதியம் ஆகியிருந்தது.

"என்ன மது இப்படியேவா உட்கார்ந்திருந்த? எழுப்பலாம்ல? லூசு.."

"அசந்து தூங்குனீங்க அதான்.. "

"ம்ம் நீ திருந்த மாட்ட டி.." என சொல்லி அவள் மூக்கை பிடித்து ஆட்ட, அந்த கையை தன் கையில் பிடித்து கொண்டவள்

"மாமா! நித்தி மாதிரி எனக்கு பேச தெரியாது.. ஆனால் நான் உங்களை ரொம்ப ரொம்ப விரும்புறேன்.. அந்த தமிழினி பத்தி தெரிஞ்ச அப்புறம் இதை சொல்றேன்னு நினச்சுக்காதீங்க! உங்க மேல தப்பு இல்லாமலே அந்த பொண்ணை காப்பாத்த முடியலனு சொல்றீங்க இல்ல! அந்த மனசை புரிஞ்சிகிட்டதால தான் சொல்றேன்.. எப்பவும் சொல்வீங்க இல்ல.. என் காதல் உங்களுக்கு தெரியும்னு.. சொல்லாமலே என் காதலை தெரிஞ்சுகிட்ட உங்களுக்கு அதே மாதிரி சொல்லாமலே இனி காலம் முழுக்க சந்தோசத்தை மட்டும் தான் இந்த சத்யாவோட மது தருவேன்.." என சொல்லி அவன் நெற்றியில் எம்பி இவள் முத்தம் வைக்க, அவள் வார்த்தையில் அவள்மேல் காதல் புரள நின்றவன் அவளின் செயலில் கண்கள் துளிர்க்க அணைத்துக் கொண்டான்.

"லவ் யூ சோ மச் டி.. " என்று. இருவரும் பேசிமுடித்து கீழே வர, வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் உதய் தமிழ் தவிர. உதய் சத்யாவிற்காக காத்திருக்க, தமிழ் பசி இல்லை என்று சொல்லி இருந்தான்.

சத்யா வந்ததும் உதய் அவனோடு சாப்பிட அழைக்க, திரும்பி தமிழை பார்த்த சத்யா "சாப்பிட வாங்க தமிழ்" என்றான்.

பேசுவானா என்றெல்லாம் நினைக்கவே இல்லை. மரியாதை கிடைக்குமா இல்லை அவன் என்ன சொல்லுவான் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.. நித்தியின் கணவன், தன் தங்கையை இழந்த என் தோழியின் அண்ணன் என்ற எண்ணத்தில் அவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் சத்யா அழைக்க, அவனை விழி எடுக்காமல் பார்த்தான் தமிழ்.

அவன் அருகே வந்த நித்தி, "இது தான் பாஸ் என்னோட மாமா.. யார் மேல் தப்பு, யார் முதல்ல பேசணும்னு எல்லாம் நினைக்கவே மாட்டாங்க.. அவங்களுக்கு புடிச்சிதுன்னா எவ்வளவு தூரம் நீங்க விலகி போனாலும் உங்களை தேடி வந்து பேசுவாங்க. அது தான் என் மாமாவோட ஸ்பெஷல்" என சொல்ல, அவள் மாமா மாமா என்று சத்யாவை தாங்கி பிடிப்பதில் தவறில்லை என்றே இப்போது தோன்றியது தமிழிற்கு.

"ஏய் என்ன மங்கி எங்களுக்கு கேட்க கூடாதுனு தனியா அவர் காதை கடிக்குற?" என உதய் நித்தியிடம் வம்பு வளக்க,

"தோ டா.. உனக்கு வேணும்னா நீயும் ஹனி காதை கடி.. நான் என்ன வேணா செய்வேன் லைசென்ஸ் இருக்கு.. போ டா" என்றாள் அவனை.

“பின்றீங்க அண்ணி” என்ற இனியா ஹனியை எதோ சொல்ல வர, வீட்டில் நடந்ததை சொல்லி விடுவானோ என்று வேகமாக இனியாவை பார்த்து தலையசைத்தாள் ஹனி.

“அந்த பயம் இருக்கட்டும்” என சொல்லி உதயை பார்த்து இனியா கண்ணடிக்க, நித்தி கூறியதில் நிம்மதியுடன் புன்னகை புரிந்த உதய் இனியா கூறியதை கேட்டு ஹனி பக்கம் திரும்ப அவள் வெட்கத்தை மறைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

"சத்யா.."

யாரும் எதிர்பார்க்கா நேரம் தமிழ் சத்யாவை அழைக்க, சத்யாவும் சாப்பிடுவதற்க்காய் நகர்ந்தவன் அவன் அழைப்பில் நின்றான்.

திரும்பி தமிழை சத்யா பார்க்க தமிழும் அவனை பார்த்தவாறு நின்றான். குணா மஞ்சு பார்வதி பத்மா ராஜம்மாள் கூட சிறியவர்களுடன் சேர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்தவாறு இருக்க நித்தி "மன்னிப்பு கேட்க இவ்வளவு பில்டப்பா" என்ற நினைப்பில் நின்றாள்.

உதய் ஒரு ஆர்வத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, சில நொடிகளில் இருவர் முகத்திலும் மொட்டு போல புன்னகை அரும்பத் தொடங்கி விரிந்தது.

அதே அதிகரித்த புன்னகையுடன் "சாரி கேட்கணுமா?" என விழி சுருக்கி தமிழ் கேட்க, மாறாத புன்னகையுடன் ஹை-ஃபை பாணியில் வலது கையை சத்யா மேலே தூக்க, தமிழும் அதை பின்பற்றி அவன் கைகளை பிடித்துக் கொண்டான்.

"யாஹூ.." என்ற துள்ளளுடன் ஓடி வந்து அவர்களை அணைத்துக் கொண்ட உதய் தன் கைகளையும் அவர்களோடு இணைத்துக் கொண்டான்.

“அட ச்ச! மாமா உனக்கு எல்லாம் வெட்கமே இல்லையா? நம்மை எவ்வளவு கஷ்டப்படுத்தினான்? இப்படி ஒரு சிரிப்புல கவுந்துட்ட?” நித்தி தான் எடுத்து கொடுக்க,

“ஹேய் பொம்பள ரவுடி.. அடங்கு! நாங்க அண்ணன் தம்பிங்க அப்படி தான் அடிச்சுப்போம் சேர்ந்துப்போம்… என்னடா சத்யா…“ - தமிழ் கேட்க,

"ப்பா! கலக்கல் காம்பிணேஷன்" என்றான் இனியன்..

“ஆமா ஆமா! நித்தி.. நீ ஏன் எங்களுக்குள்ள சண்டை இழுத்து விட பாக்குற? போ போ வேலையை பாரு..“ என சத்யா சொல்ல,

“மங்கி உனக்கு தமிழ் மேலே கோபம்னா தனியா பேசிக்கோ.. எங்களை விட்டுடு” என்றான் உதயும் புன்னகையுடன்.

“அட போங்க டா குட்டி சாத்தானுங்களா!..” என வாய் கூறினாலுன் மனம் முழுதும் அவர்கள் மூவரையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தது நித்தி மட்டும்னா நினைக்குறீங்க? அதே! அதே தானுங்க…

----------------------------------

இனி அவங்க வாழ்க்கை சந்தோசமா இருக்கும்னு உத்திரவாதம் கொடுத்து நீங்களும் சந்தோசமா இருங்கனு சொல்லிக்கிட்டு உங்ககிட்ட இருந்து நான் அப்பீட் ஆகிக்கிறேன் பை….

சுபம்
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அருமை......
இளமை பட்டாளங்கள்
இன்ப துன்பத்திலும்
இணைந்து இருக்கும்
இவர்களின் வாழ்க்கை
இனிதாய் தொடங்க வாழ்த்துக்கள்..... 💐💐💐💐💐💐
குடும்பம் பாசம்
அன்பு பரிவு நட்பு
கோவம் பிரிவு
அழுகை ஏமாற்றம்
காதல் மோதல்
சுபம்......
அருமை சகி💐💐💐💐
வாழ்த்துக்கள் .....