• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா... (இறுதி பாகம்)

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
அவனைப் பார்த்ததும் ஆச்சிரியத்துடன் கத்தினாள் ஆருத்ரா.

"தேஜஸ்…",

அவள் கத்தியதில் அவன் திரும்பிப் பார்த்து விட்டான்.

"ருத்ரா….!!",

அவனையும் அறியாமல் அவன் வாய் சொல்லி விட்டதில் அவள் முகத்தில் ஆச்சிரியம் வந்து இருந்தது.

"பெண்ணே…!! நான் தான் உன் தேஜஸ்…நான் உன்னைப் போல் சாதாரண மானுடன் கிடையாது, நான் ஒரு கந்தர்வன், உன்னை சந்திக்க இன்று மாலை உன்னைக் காதலிக்கும் ரோகித் வந்து விடுவார், அவரோடு உன் வாழ்வை சந்தோஷமாக வாழு…",

அவளோ ஸ்தம்பித்துப் போய் நின்றுக் கொண்டு இருந்தாள்.

"நான் சந்திரப் பிரபை பூவை திங்கள் நாதருக்கு சூட்டும் முன் நீ என்னைப் பார்த்து விட்டால் நான் இனி உன் முன் தோன்றக் கூடாது, அது எனக்குக் கிடைத்த தண்டனை. அதனால் நான் இனி உன் முன் வரமாட்டேன்….",

என்றவன் தோற்றம் அவளுக்கு அறிமுகமான கோட் சூட் அணிந்த தேஜஸ் தோற்றத்துக்கு மாறியப் போது,

"வேண்டாம்.. என்னை விட்டுப் போகாதே…!!!",

அவள் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள முயலும் முன்பே அவன் மறைந்துப் போனான்.

"தேஜஸ்….!!! தேஜஸ்….!!!",

அந்த சிக்மகளூர் வனப்பகுதியில் அந்த விடியல் பொழுது அன்று ஆருத்ராவின் கண்ணீர் குரலில் தான் விடிந்தது.

"தேஜஸ்….!!! தேஜஸ்….!!!, எங்கே இருக்க?",

அந்த காடு முழுவதும் அவன் அவனைத் தேடி சுற்றினாள்.

"அந்த சாமி வராது…கண்ணு…",

தும்புவின் பதிலில் அவள் கண்ணீரோடு நிமிர்ந்தாள்.

"ஏன்….?"

"ஏனா அது சாமி…! வானத்தில் இருந்து வந்த சாமி, அது என்னைத் தவிர இங்கே இருக்கும் யாருக்கும் தெரியாது..உங்க கிட்ட அதை அந்த சாமி சொல்ல வேணாம்னு சொல்லிட்டு..நீங்க தினமும் கும்பிடும் அந்த போர்வீரன் சிலை அந்த சாமி தான், அதை தான் நாங்க எங்க பாதுகாப்பு சாமியா கும்பிடுவோம்..",

அவர் சொல்ல,

"இந்தப் போர்வீரன் தான் இவங்களையும் இந்த காட்டையும் காப்பாற்றிக் கொண்டு இருப்பதாக இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ருத்ரா, இந்த காட்டில் பரவும் சூரிய ஒளியின் மூலமாக இவர்களை அவன் காப்பதாக அவர்கள் நம்புகிறார்கள், இப்போ நாம போகப் போற இடத்துக்கு இங்கே அனுமதி கேட்டு விட்டு தான் செல்ல வேண்டும்…",

அவள் மனதில் அவன் சொன்னது எல்லாம் நினைவில் வந்தது. ஒளி என்று அவனைத் தான் சொல்லி இருக்கிறான். அதனால் தான் நான் இந்த சிலையைக் கும்பிடும் போதெல்லாம் என்னைப் பார்த்து சிரித்து இருக்கிறான், அதனால் தான் அவன் இல்லாத நாட்களில் அவனை நான் மிஸ் பண்ணும் போது இந்த சிலை அருகே நான் இருக்கும் போது என் மனதுக்கு இதமாக இருந்து இருக்கிறது. அவளுக்கு எல்லாம் புரிய ஆரம்பிக்க்,

"எனக்கு அவரைப் பார்க்கணும்…",

கண்ணீருடன் கெஞ்சினாள் ஆருத்ரா.

"இல்லை கண்ணு…அந்த சாமியா நினைத்துக் கொண்டா தான் வர முடியும்…நீ வேணும்னா ஒரு காரியம் பண்ணு கண்ணு…திங்கள் நாதர் கோயிலுக்கு போ, அங்கே ஏதாவது உனக்கு விடை கிடைக்கும்…",

அதைக் கேட்ட உடன் அவள் செல்ல எத்தனிக்க,

"கண்ணு…ஒன்னை மட்டும் மறந்துடாதே..உன்னை அந்த சாமி இன்னைக்கு வர யாரோ ஒரு நடிகன் கூடப் போக சொல்லி இருக்கு….",

தும்பு சொல்ல, கண்களில் சீற்றத்துடன் நிமிர்ந்தவள்,

"அது மட்டும் நடக்காது…எனக்கு உங்க சாமி வேண்டும்…. இல்லைனா என் உயிரைப் போக்கிக் கொள்ள எனக்குத் தெரியும்…",

என்றவள் விடுவிடுவென்று திங்கள் நாதர் சன்னதி சென்றாள். யாருமின்றி விடியற்காலை வேளையில் அமைதியாக இருந்தது அந்த கோயில் வளாகம். கருவறையில் ஜொலித்துக் கொண்டு இருந்த இறைவனைப் பார்த்ததும் அவளுக்கு ஓவென்று அழுகை வந்தது.

"தேஜஸ்….!!!",

அதற்கு மேல் அவளுக்குப் பேச்சு வரவில்லை. பைத்தியம் பிடித்ததுப் போல் அவள் கத்தினாள்.

"தேஜஸ்!! ஒரே ஒரு முறை என்னை பாரு…!! ஒரே ஒருமுறை என் முன்னால் வா…!!",

கதறினாள் அவள். அவளின் கதறல் குரலை யாரும் இல்லாத அந்த கோயில் கோபுரத்தில் உள்ள சிலைகள் மேல் அமர்ந்து இருந்த புறாக்கள் மட்டுமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தன.

"தேஜஸ்… நீ இல்லாம நான் இருக்க மாட்டேன்…வந்து உன் முகத்தைக் காட்டி விடு…",

அவள் கெஞ்சினாள். ஆனால் அவளுக்கான பதில் அங்கே கிடைக்க வில்லை, பொறுத்தது போதும் என்று கண்களை துடைத்துக் கொண்டு அவள் எதற்காக அந்த காட்டுக்கு வந்தாளோ அதை செய்ய முடிவெடுத்தவளாய் யாழிசை அருவி நோக்கி ஓடினாள். குதிப்பதற்கு தயாராக அவள் அந்த அருவியின் உச்சியில் நின்றப் போது அவளைத் தடுக்க அவன் வருவானா? என்று அவள் கண்கள் தேடியது.

"நீ சந்தோஷமாக வாழ வேண்டும் ருத்ரா..",

அவனது வசீகரப் புன்னகை முகம் அவள் மனதில் தோன்றியது.

"உன்னோடு இருந்தால் தான் அது எனக்கு சந்தோஷமான வாழ்வுனு புரிந்துக் கொள்ளாலே சென்று விட்டாயே…தேஜஸ்…!!",

அவள் மனதில் எண்ணிக் கொண்டு குதிக்க முற்பட்டப் போது அவளை தடுத்து யாரோ இழுத்தார்கள். அவள் நிமிர்ந்துப் பார்த்தாள். அங்கே பத்ரா வயதான தோற்றத்தில் நின்றுக் கொண்டு இருந்தார்.

"நீ தேஜசை பார்க்க வேண்டுமா?",

அவர் கேட்ட கேள்வியில் கண்களில் உயிர் வந்தவளாய் தலை ஆட்டினாள் அவள்.

"என்னோட வா…",

அவரின் கட்டளைக்கு அடிப்பணிந்து அவள் சென்ற இடம் திங்கள் நாதர் கோயில்.

"அதோ பாரு தேஜஸ்…",

என்று அவர் கைக்காட்டிய இடத்தில் கோயில் கோபுரத்தை தவிர ஒன்றையும் காணவில்லை.

"எங்கே சார்?",

அவள் வினவிக் கொண்டே அவனைத் தேடினாள்.

"அந்த கோபுரத்தில் இசைக் கருவிகள் கையில் கொண்டு நிறைய சிலை இருக்கிறது பார், அதில் வீணை வைத்துக் கொண்டு போர்வீரன் போல் ஒரு சிலை இருக்கிறது பாரு அது தான் தேஜஸ்…",

"என்ன?",

அவள் அதிர்ச்சியில் நிமிர்ந்தாள்.

"நாங்கள் அனைவரும் கந்தர்வர்கள், வருடத்திற்கு ஒரு முறை இங்கே வந்து திங்கள் நாதரை எங்கள் இசைக் கருவிகள் மூலம் மகிழ்வித்து தொழுவோம், இந்த காடு எங்களுக்கு பிடித்து விட்டதால் இங்கேயே சில காலம் தங்கினோம், அப்போது தான் உன்னை தேஜஸ் பார்த்தான். உன் பதினைந்து வயதில் இருந்து நீ உன் பாட்டியோடு அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்துக் கொண்டு இருந்தாய், அப்போதில் இருந்தே அவன் உன் மேல் காதல் கொள்ள ஆரம்பித்து விட்டான், தினமும் இந்த கோபுரத்தின் மேலே சிலையாக இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான், ஐந்து வருட காதல் என்றும் அவன் காதல் கரை சேராது என்று தெரிந்ததும் உன் சந்தோஷம் மட்டுமே தான் அவன் காதல் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தான், உன் இருபதாவது வயதில் நீயே இங்கே வந்து விட்டதில் அவன் உன் முன் தோன்றினான், உன் மாமா, அத்தை என உனக்கு துன்பம் கொடுத்த அனைவரையும் கொன்றான்.நான் கண்டித்தேன், ஆனால் அவன் கேட்கவில்லை. அவனுக்கு தண்டனை கிடைத்தது. இனிமேல் அவன் திரும்ப மானுட கண்ணுக்கு தெரிய மாட்டான், அவனை நீ இந்த சிலை ரூபத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்…",

அவர் சொல்ல சொல்ல அவள் அப்படியே அதிர்ந்துப் போய் நின்றாள்.

"எனக்காகவா…? என் பதினைந்து வயதில் இருந்து எனக்கேத் தெரியாது என் மேல் காதல் கொண்டு இங்கே நான் வரும் போதெல்லாம் சிலையாக என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தானா?",

"நீ வாழ வேண்டும் அதுவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் அவன் இத்தனையும் செய்தான், அதனால் அவன் ஆசைப்படி நீ அவனை மறந்து விட்டு உன் வாழ்க்கையில் கவனம் செலுத்துவாயாக…., உனக்கான வாழ்க்கை அந்த ரோகித் கூட தான்…சென்று விடு பெண்ணே…தேஜஸ் இனி உன் வாழ்வில் இல்லை…அவன் சார்பில் நான் தரும் பரிசாக அவன் நினைவுகளை வைத்துக் கொள்…, அதை நான் அழிக்க மாட்டேன்…",

என்ற பத்ரா இப்போது தன் உண்மையான தோற்றத்துக்கு வந்து அவளுக்கு தன் கைகளை உயர்த்தி ஆசி வழங்கினார். சடாரென்று அவரின் காலில் விழுந்தாள் ஆருத்ரா.

"அய்யா…எனக்கு தேஜசை தவிர வேறு யாரும் வேண்டாம்..",

"முட்டாள் பெண்ணே…..!! இப்போது தானே உன்னிடம் கூறினேன், அவர் வர மாட்டான் என்று..",

"அவர் வரமாட்டார் தான்…ஆனால் நான் அவர் பக்கத்தில் இருக்க வேண்டும், நிரந்தரமாக….",

என்றவள் கண்கள் அந்த கோபுரத்தின் மேலே இருந்த தேஜஸ் சிலையைப் பார்த்தது. அதைப் புரிந்துக் கொண்ட பத்ரா வாய் முணுமுணுத்தது.

'இந்தக் காதல் பொல்லாதது... கந்தர்வனையும் அடிமையாக்கி விட்டதே..!!!"





"ஓம் நமசிவாய…..!!!!",


கைகளை கூப்பி வேண்டிக் கொண்டு இருந்த ஆருத்ராவின் தலையில் பத்ரா கைவைத்தார். அடுத்த நொடி ஆருத்ரா மறைந்துப் போனாள்.

"தேஜஸ்….உன் காதல் உன்னைத் தேடி வந்து விட்டது…",

தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவர் கண்கள் அந்த திங்கள் நாதர் கோபுரத்தைப் பார்த்தது. அங்கே கையில் வீணை ஏந்தி இருந்த அந்தப் போர்வீரன் சிலையின் கால் அருகே அவன் காலில் சாய்ந்தப்படி ஒரு பெண் அமர்ந்து இருக்கும் சிலை புதிதாக வந்து இருந்தது. அதே சிலை அந்த பழங்குடியின மக்கள் கும்பிடும் தேஜஸ் சிலையின் அருகேயும் வந்து இருந்தது. அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டார் நூற்றி ஐம்பது வயதான தும்பு.

அடுத்த நாள், பத்ரா ஏற்பட்டால்,

சிக்மகளூர் அருகே அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆருத்ரா பலி

என்று தொலைக் காட்சியில் செய்தி ஓடிக் கொண்டு இருக்க, அதைப் பார்த்துக் கொண்டு இருந்த ரோகித் முகம் வருத்தத்தில் மூழ்கியது. அனைவரும் அவளின் உடலைப் பார்க்க அங்கே ரோட்டில் கூட, அவளின் ஆத்மாவோ சிலையாக தன் மனம் கவர்ந்தவன் சிலை அருகே நின்றுக் கொண்டு இருந்தது.

இனி தேஜஸ் இருக்கும் இடமெல்லாம் ஆருத்ராவும் இருப்பாள். இனி அவர்களுக்கு இடையே பிரிவே இருக்காது, மனிதர், கந்தர்வர் என்றப் பாகுபாடு இன்றி அவர்களின் காதல் அவர்களின் பிரியாத உருவச் சிலைகளில் வாழ்ந்துக் கொண்டே இருக்கும்.

- முற்றும்
Screenshot_20230105-192132_Gallery.jpg
 
Top