• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா - 11

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
"பிரபல நடிகை ஆருத்ராவின் பங்களாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: நடிகையின் மாமா,அவரது மனைவி உடல் கருகி பலி"


"அடக் கடவுளே…!! இனி என்னப் பண்ணுவாங்க ஆல் இந்தியன் பியூட்டி?",

"அவங்களுக்கு என்ன? பாரினில் இருந்து வந்த உடன் ரெண்டு நாள் துக்கம் கொண்டாடிட்டு மூணாம் நாள் அந்த ராக் ஸ்டார் ரோகித் கூட டும் டும் தான்..டீவியில நீ லைவ் டெலிகாஸ்ட் நீ பார்க்கலையா? அந்த ராக் ஸ்டார் குடும்பம் காலையிலேயே வந்து அந்த ஸ்பாட்டில் நின்னுக் கொண்டு இருந்தாங்களே…",

"நான் பார்க்கலைப்பா…!! ஆனா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணுனா ரொம்ப நல்லா இருக்கும்..நட்சத்திர ஜோடிப்பா அது…",

சிக்மகளூர் வனப்பகுதி எல்லை ஆரம்பம் என்று அறிவிப்பு பலகை பொறிக்கப் பட்டிருந்த இடத்திற்கு அருகே இருந்த டீக்கடையில் தொங்கிக் கொண்டு இருந்த அந்த செய்தித் தாளைப் பார்த்து இருவர் பேசிவிட்டு செல்வதை மரங்களுக்கு நடுவே யார் கண்ணுக்கும் தெரியாமல் நின்றுக் கொண்டு கவனித்துக் கொண்டே இருந்த தேஜஸ் மனக் கண்ணில் மீண்டும் அந்த ராக் ஸ்டார் ரோகித் முகம் தோன்றியது.

"ஹ்ம்ம்…..அழகா தான் இருக்கான்…",

என்று எண்ணிக் கொண்டவன் கண் மூடினான். அடுத்த நொடி ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் யாழிசை அருவியின் அருகே நின்றுக் கொண்டு இருந்தான்.

"ச…. ரீ…..க…ம…..ப…..த….நீ….",

அவன் அங்கே வந்ததால் இசை பாறைகளை தழுவிய காற்று சங்கீதம் இசைத்தது. வெளியே மக்கள் அந்த இசைபாறைகளில் சப்தம் வருவது இயற்கையாக அமைந்தது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தேஜஸ் போன்ற கந்தர்வர்கள் வந்து செல்வதாலும் அவர்கள் அந்தப் பகுதியில் நின்றுக் கொண்டு இருப்பதாலும் தான் அங்கே காற்று பாறைகளில் மோதி இசையை தோற்றுவிக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

"ச்சே….அந்த ராட்சசியாவது சீக்கிரம் இறந்து விட்டாள், ஆனால் அந்த ராட்சசன் உயிர் விரைவில் போக வில்லை, அவனால் தான் அந்த பங்களா இப்போது தீ விபத்துக்கு ஆட்பட்டு விட்டது…",

எண்ணிக் கொண்ட தேஜஸ், தன் கைகளை குவித்து கண் மூடி,

"ஓம் நமசிவாய…ஓம் நமசிவாய…..",

உச்சரித்து விட்டு அப்படியே அந்த யாழிசை அருவியில் பாய்ந்தான். அவன் நீராடி விட்டு அந்த அருவி நீரில் இருந்து எழுந்தப் போது, அவனின் வழக்கமான கந்தர்வ தோற்றத்திற்கு மாறி இருந்தான். கரை நோக்கி அவன் நகர்ந்தப் போது அந்தப் போது அந்த அருவிக் கரையின் பாறையின் மீது அவனையேப் பார்த்துக் கொண்டு பளிச் சென்று வெள்ளை நிறக் கொக்கு அமர்ந்து இருந்தது.

"பத்ரா….!!!",

அதைப் பார்த்ததும் தேஜஸ் வாய் முணு முணுத்தது.

"உன்னை நான் இந்த கொக்கு ரூபத்தில் பின் தொடர்ந்து வந்தேன் தேஜஸ்…",

என்று பேசிய அந்த கொக்கு இப்போது மனித உருவத்துக்கு மாறி இருந்தது. கண்களில் கோபத்தோடு நின்றுக் கொண்டு இருந்த தன் குருவின் கண்களில் இருந்து கனலில் மௌனமாக தலைக் குனிந்து நின்றுக் கொண்டு இருந்தான் தேஜஸ்.

"உன்னை நான் இடி மின்னல் மூலம், மரங்கள் மூலம், அசீரீரி மூலம் எச்சரித்தேன்…ஆனால் என் எச்சரிக்கையை மீறி நீ தவறு செய்து விட்டாய்…நீ அந்தப் பெண்ணை தேடி இந்த காட்டுக்கு வந்த ரெண்டு பேரை காயப் படுத்தி விரட்டி இருக்கிறாய், நம் விதிகளை மீறி அவளை கந்தர்வர்கள் மட்டும் உலாவும் தோட்டத்துக்கு அழைத்து சென்று இருக்கிறாய், அந்தப் பெண்ணின் மாமா, அத்தை உறவு உடையவர்களை அக்னியில் எரித்து இருக்கிறாய்… இவை அனைத்ததையும் தாண்டி நீ இந்த திங்கள் நாதன் சன்னிதி, இந்த காட்டின் எல்லைத் தாண்டி மானுடர்கள் வாழும் இடத்திற்கு சென்று இருக்கிறாய்…
இது எதுவுமே நீ ஒரு கந்தர்வனாக செய்யக் கூடாத செயல்கள்…அதனால் உனக்கு தண்டனை உண்டு…",

"தெரியும்…நான் அதை ஏற்க தயாராக இருக்கிறேன், தயவு செய்து கொடுத்து விடுங்கள்…!!!",

என்ற தேஜஸை அவர் வியப்பாகப் பார்த்தார்.

"மூடனே…!! தெரிந்தும்மா கேவலம் ஒரு மானுடப் பெண்ணுக்காக நீ இவ்வாறு செய்தாய்…?",

"அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் குருவே…அவள் சந்தோஷத்தை நான் மேலே இருந்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன்…",

"ஆனால் உன்னால் எல்லா மானுடர்கள் போல அவளோடு வாழ முடியாது, உன் உலகத்து நியதிகள் வேறு, அவள் உலகத்து நியதிகள் வேறு…",

"தெரியும் குருவே…அவள் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும்… அதற்கு இந்த உலகத்தில் அவளைக் கஷ்டப் படுத்திய அந்த ராட்சசர்கள் இருக்க கூடாது…அதனால் தான் அவர்களை அழித்தேன், இப்போது எல்லா சொத்துக்களுக்கும் அவள் தான் உரிமையானவள், அவள் லகஷ்டப் படாமல் வாழ அவள் பண வாழ்க்கை சீராக்கி விட்டேன்…, அடுத்து அவளின் மண வாழ்க்கை..",

என்றவனுக்கு இப்போது பேச முடியாது துக்கம் தொண்டை அடைத்தது. ஒருவாறு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு சொன்னான்.

"ஆருத்ரா மாதிரி நான் போனில் பேசி அந்த ராக் ஸ்டார் ரோகித்துக்கு அவள் இருக்கும் இடத்தையும் காதலையும் சேர்த்தே சொல்லி விட்டேன்…அவன் வெளிநாட்டில் இருப்பதால் இன்னும் சில நாட்களில் வந்து விடுவான், அவனோடு ஆருத்ரா கிளம்பிப் போய் விடுவாள், அவன் ரொம்ப நல்லவன் பத்ரா, அவன் நிச்சயம் என் ருத்ராவை நல்லாப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கு…நிச்சயம் ருத்ரா சந்தோஷமாக வாழ்வாள்…",

என்றவன் முகத்தில் இன்பம், துன்பம் என்று இரண்டும் மாறி மாறி வந்துப் போனது. ஆனால் அவனின் வழக்கமான வசீகரப் புன்னகை மட்டும் மிஸ்ஸிங்.

"ஆனால் அந்தப் பெண் உன்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்…",

என்ற பத்ரா குரலில் நிமிர்ந்தான் தேஜஸ்.

"தெரியும்…உங்களுக்கு முன்னாலே அவளின் பார்வைகள் அவள் மனதை என்னிடம் சொல்லி விட்டது…ஆனால் நான் அவள் வாழ்வில் ஒரு ஒளி அவ்வளவு தான், அவள் வாழ்வில் இருந்து இருளை விரட்டி வெளிச்சத்தைக் கொடுக்க வந்த ஒளி.
என் காதல் அவளின் சந்தோஷத்தில் வாழும், அவள் புன்னகையில் என் காதல் வாழும்…அவள் அந்த ரோகித் கூட வாழப் போகும் வாழ்வில் என் காதல் வாழும்…"

"அப்போ அவளது காதல்?",

"ரோகித் இங்கே வந்து விட்டால் அவள் நினைவுகளில் இருந்து என்னோட நினைவுகளை மட்டும் நான் என்னோடு எடுத்துக் கொண்டு சென்று விடுவேன், அவளின் நினைவாக அவளுடைய காதல் என்னோடு இருக்கட்டும்…",

தேஜஸ் சொல்லி முடிக்க அவன் கண்ணில் நீர் கலங்கி இருந்தது. அதைப் பார்த்த பத்ரா முகம் கோபத்தில் சிவந்தது.

"ஐந்து வருடங்களாக இதைத் தான் நான் உன்னிடம் படித்து படித்து சொன்னேன், எவ்வளவு சிறந்தவன் நீ! இப்படி போய் ஒரு மானுட பெண்ணின் மேல் காதல் கொண்டு விட்டாயே..
பொல்லாதது இந்த காதல்….!! தேஜஸ்…உனக்கான தண்டனை, இனி நீ மனிதர்களின் கண்ணுக்கு தெரிய மாட்டாய்..இனி நீ அவளைப் பார்க்க கூடாது, அவளோடு பேசக் கூடாது,
இனி நீ திங்கள் நாதர் சன்னிதியை விட்டு நகரவே கூடாது…",

"ஆனால் குருவே…!! அவள் என் பேச்சை நம்பி இங்கே இருக்கிறாள், நான் செய்தது தீமை தான், ஆனால் அதில் அவள் நன்மை அடைந்து இருக்கிறாள், அதற்காகவாது எனக்கு உங்கள் தண்டனையில் இருந்து விதிவிலக்கு அளியுங்கள்….",

என்று அவரின் காலைப் பிடித்து விட்டான் தேஜஸ்.

"சரி, நமது கந்தர்வ தோட்டத்தில் உள்ள சந்திர பிரபையை பறித்து விடிவதற்குள் திங்கள் நாதருக்கு ஒவ்வொரு திங்கள் கிழமையும் நீ சூட்டி விட்டு அவரை வழிபட்டு விட்டு அந்த ஒருநாள் மட்டும் நீ அவளை சந்திக்கலாம், ஆனால் பூவை சூட்டும் முன் நீ அவள் கண்ணில் பட்டு விட்டால் அக்கணமே நீ மறைந்து விடுவாய்..அதன் பின் நீ மனிதர்களின் யாருடைய கண்ணுக்கும் எப்போதுமே புலப்பட மாட்டாய்….",

அவர் சொல்லி விட்டு மறைய அவன் அப்படியே நின்றான். அதுவரை அவன் அடக்கி வைத்த உணர்வுகள் அவன் கண்களில் நீராக கலங்க, அதனால் அந்தப் பிரதேசம் முழுவதும் காற்று கிளம்பியது. அப்படியே பாறை மேல் அமர்ந்து இருந்தவன் மடியில் அதற்காகவே காத்து இருந்ததுப் போல்
ஒரு வீணை தோன்ற, அதை கண்ணீரோடு மீட்ட ஆரம்பித்தான். அவன் மனதில் ஆருத்ரா வந்து நின்றாள்.

"தேஜஸ்….",

என்று கத்திக் கொண்டு துள்ளி ஓடினாள்; சிரித்தாள்; முறைத்தாள்; அவனை நெருங்கி வந்து அவன் மீது வரும் பூக்களின் வாசம் பிடித்தாள்.

"ச….

ரீ…..

க…

ம…..

ப….

த….

நீ….",

அவனது வீணைக்குப் போட்டியாக அந்த ஏழு இசைப் பாறைகளில் காற்று விளையாடியது. அவனது வீணை சோக கீதத்தை இசைக்க ஆரம்பிக்க, அந்த இசை வெள்ளத்தின் வேகம் தாங்க முடியாமல் மரங்கள் புயல் கொண்டு வீச ஆரம்பித்தன. அதுவரை அவன் கண்களில் திரண்டு இருந்த அந்த கண்ணீர் முத்தாக அவன் வீணையில் விழ, அவ்வளவு தான் வானில் பளிச்சென்ற மின்னலுடன் பெரும் சப்தத்துடன் இடி இடித்து மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. சில நொடியிலே அந்த வனாந்திரம் முழுக்க வெள்ளக்காடாக மாறியது. அவனோ இசைப்பதை நிறுத்தவே இல்லை. ஒருவேளை வனங்களில் மழையும் வெள்ளமும் இதுப் போன்ற கந்தர்வர்களின் செயல்களால் தான் ஏற்படுகிறதோ என்னவோ!!! அவன் இசைக்க, வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் அவன் அமர்ந்து இருந்த பாறையையே மூழ்க அடிக்க, அப்போது தான் அவன் கண் விழித்துப் பார்த்தான்.

"மழை பெய்து வெள்ளக் காடாகி விட்டதே…ருத்ரா!!! பங்களாவில் தனியாக இருப்பாளே….",

அப்போது தான் அவனுக்கு அவள் நினைவு வந்து அவனிடம் பதட்டம் ஏற்பட, அவன் எழுந்தான்.

"இனி அவளைப் பற்றி இதுப் போன்ற கவலைக் கொள்ள ரோகித் இருக்கிறான்ல?",

என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்து அடங்க, அவன் முகத்தில் வருத்தத்தோடு எழுந்தவன் அப்படியே அமர்ந்து விட்டான்.

"தேஜஸ்….",

அவளின் குரல் அவன் மனதில் ஒலிக்க, அவள் அவனை அழைப்பது போல் அவனுக்கு தோன்ற, அவன் அவள் இருக்கும் இடம் நோக்கி சென்று மறைந்தான்.

- தொடரும்
Screenshot_20230105-192132_Gallery.jpg
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
மிகவும் அருமை மா..
ரெண்டு பேரையும் பிரிச்சிடுவீங்களா..
ஆருத்ரா இல்லாம தேஜஸ் எப்படி இருபபன்
 
Top