• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா... -5

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
ஆருத்ரா அப்போது பெங்களூரில் உள்ள பிரபல சித்த மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சித்த மருத்துவம் படித்துக் கொண்டு இருந்தாள். அவளின் குடும்பம் சாதாரண குடும்பம் தான். கூலி வேலைக்கு கர்நாடகா வந்து அங்கேயே ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன் கடும் உழைப்பால் சூப்பர் மார்க்கெட் வைக்கும் அளவுக்கு உயர்ந்தவர் அவளின் தந்தை பரம சிவம், ஆருத்ரா நன்றாகப் படித்ததில் அவளுக்கு கர்நாடக சித்த மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. எல்லாம் நன்றாகப் போய் கொண்டு இருக்கும் போது, ஒருநாள் ஒரு விபத்தில் அவள் அம்மா பார்வதி உயிர் விட, அந்த அதிர்ச்சியில் அடுத்த ஒரு மாதத்தில் பரம சிவம் நெஞ்சு வலியில் உயிரை விட்டார். தாய், தந்தையை இழந்த ஆருத்ராவிற்கு பார்வதியின் அம்மா அகிலாண்டம் உறுதுணையாக இருந்தார். அவரோடு அவரது மகன் கல்யாணம், அவரது மனைவி செண்பகவள்ளியும் சேர்ந்துக் கொண்டனர். பரம சிவம் உயிரோடு இருக்கும் போது தமிழ்நாட்டில் இருந்து தன் தங்கையைப் பார்க்க வரும் கல்யாணம் நிறைய இக்கட்டான நேரங்களில் சூப்பர் மார்க்கெட்டை நிர்வகிக்க, தன் தங்கை கணவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார், கல்யாணம், செண்பக வள்ளி ஜோடிக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லாத காரணத்தால் தன் பார்வதி மகளை தங்கள் குழந்தையாகப் பாவிக்கத் தொடங்கினர். அதேப் பாசத்தில் அவர்கள் வந்து இருக்க அகிலாண்டம் அவர்களை நிரந்தரமாக தங்களோடு இருக்கச் சொல்லி விட்டாள்.

இந்த நிலையில் முதலாம் ஆண்டு வெற்றிகரமாக முடித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து
இருந்த ஆருத்ரா தன் கல்லூரியில் நடந்த நாடகத்தில் பங்கேற்று இருக்கும் போது, அங்கே சிறப்பு விருந்தினராக வந்து இருந்த ஒரு பிரபல இயக்குனர் பார்வையில் பட்டுத் தொலைத்து விட்டாள், அவளின் அழகு, அவளின் பாவனைகள், அவளின் நடிப்புத் திறன் கண்டு வியந்த அவர் அவளிடம், அவள் ஒத்துக் கொண்டால் தான் எடுக்கப் போகும் புதியப் படத்துக்கு அவளை கதா நாயகியாகப் ஒப்பந்தம் செய்வதாகவும் அவளின் அபாரமான நடிப்புத்திறமைக்கு நிச்சயம் அவள் திரைத்துறையை ஒரு கலக்கு கலக்குவாள் என்று அவர் கூற, அவளோ தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டாள். தன் முயற்சியில் மனம் தளராது அந்த இயக்குநர் அவளின் குடும்பத்தாரிடம் பேச, முதலில் தயங்கிய அவளின் குடும்பம், பின் அவள் குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டும் நடிப்பாள், கவர்ச்சி கடுகளவு கூட அவள் காட்ட மாட்டாள், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டாள் போன்ற பல்வேறு நிபந்தனைகளுக்கு நடுவே ஒத்துக் கொண்டது. அந்த இயக்குனர் அழகாக ஆருத்ராவின் நடிப்புத் திறனைப் பயன்படுத்திக் கொண்டதில் முதல் படமே மெகா ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவளுக்கு வந்துக் கொண்டே இருக்க, ஆனால் அவள் படிப்பைக் காரணம் காட்டி மறுத்தாள். ஆனால் அவளது குடும்பத்தால் அவ்வாறு மறுக்க இயலவில்லை, காரணம் அந்தப் படங்களுக்கு அவளுக்கு வழங்கப் பட இருந்த அதிகப்பட்ச சம்பளத் தொகை. ஏற்கனவே சூப்பர் மார்க்கெட் நஷ்டத்தில் ஓடிக் கொண்டு இருக்க, வறுமையின் பிடியில் சிக்கி இருந்த அவளின் குடும்பத்தாருக்கு வர இருக்கும் ஶ்ரீதேவியை ஏன் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில் படிக்கும் நேரம் போக ஆருத்ரா சில படங்கள் பண்ண ஒப்புக் கொண்டாள், அதில் ஒன்று அவளின் நடிப்புக்காக தேசிய விருதை அள்ளி விட, அவள் மெல்ல மெல்ல உச்ச நட்சத்திரமாக மாறினாள். அதன் பின் நேரமின்மைக் காரணமாக
அவள் படிப்பு பாதியில் நிறுத்தப் பட்டு
அவள் முழு நேர நடிகையானாள். பாலிவுட்டில் கால் பதித்தவளுக்கு முதல் படமே வெற்றி விழாவாக அமைந்து விட, அவள் அங்கே தவிர்க்க முடியாத நடிகையாகி விட்டாள். அவளுக்கென்று ஒரு ரசிக, ரசிகைகள் கூட்டம் உருவானது. அவள் எது செய்தாலும் அது பரபரப்பு செய்தியானது. குடும்பப் பாங்கான அவளின் முகம் நடுத்தர வயதினரை கவர்ந்தது என்றால் கவர்ச்சி மிகுந்த அவளின் உதடுகளும் கண்களும் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.






"அப்போ இவ்வளவு சின்ன வயதில் நிறையப் பேருக்கு கனவுக் கன்னியா இருந்திருக்கீங்கனு சொல்லுங்க….!!!",

அதுவரை அவள் சொல்லிக் கொண்டு இருந்த கதையினைக் கேட்டுக் கொண்டு இருந்த தேஜஸ் புன்னகை நிறைந்த முகத்துடன் சொன்னான்.
அவன் அருகே அவனால் கொல்லப் பட்டப் கோதுமை நாகம் கிடந்தது.

"ஆமாம்…அது என்னைப் பொறுத்த வரையில் வரம் தான்…",

ஆருத்ரா ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.

"அப்புறம் எதுக்குங்க தற்கொலை பண்ணிக்கத் துடிக்கிறீங்க?",

அவன் கேட்டான்.

"என் விதி….!!! நீங்க என்னை மறுபடியும் காப்பாற்றி விட்டிங்களே…! நீங்க எத்தனை முறை காப்பாற்றினாலும் நான் என் உயிரை மாய்த்துக் கொள்வதை விட எனக்கு வேற வழி இல்லை….என்னை என் வழியில் போக விடுங்க மிஸ்டர். தேஜஸ்….",

என்றவள் அவனைக் கடந்து சென்று அவன் பார்வையில் இருந்து மறைந்து விட, அவனோ அவளை ரசித்துக் கொண்டே அப்படியே அமர்ந்து இருந்தான். அவன் இதழில் ஒருக் குறு நகையுடன் அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

"இவள் மாறவே இல்லை…!! அப்படியே இருக்கிறது அவளது நடை, அதே பாவனை….அதேப் பிடிவாதம்…!!",

எண்ணிக் கொண்டு அவன் அமர்ந்து இருக்கும் போது அவனை ஒரு குரல் கலைத்தது.

"தேஜஸ்…..!! நீ வரம்பு மீறுகிறாய்…,உன் மனதில் இருக்கும் உணர்வுகளை கொன்று விடு….",

அழுத்தமாக ஒளித்த அந்த ஆண் குரலில் தேஜஸ் முகம் மாறியது. அவன் கண்கள் அவனால் சற்று முன் கொல்லப் பட்டிருந்த அந்த கோதுமை நாகத்தின் மேல் பாய, இப்போது அந்த கோதுமை நாகம் இப்போது ஒரு வயதான மனித உருவம் எடுத்தது. வெள்ளை நிறப் பட்டாடை உடுத்தி பூனூல் தரித்து கழுத்து நிறைய ஆபரணங்கள் அணிந்து மார்பை தொடும் வெண்ணிற தாடி இருந்த அவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மஹாபாரதத்தில் உள்ள பீஷ்மர் வேடத் தோற்றத்தை நினைவுப் படுத்தினார்.

"பத்ரா….!! நான் அவளை ஐந்து வருடங்களாகக் காதலிக்கிறேன்….!!! என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்….",

என்ற தேஜஸ் குரல் இறைஞ்சியது. இப்போது அவன் உடை கோட் சூட்டில் இருந்து மாறி ஒரு அரசனைப் போல் இருந்தது. மஞ்சள் நிறப் பஞ்சக்கச்சம் அணிந்து தலையை நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு இருந்த பொன்னால் ஆன கீரிடம் அணிந்து இருந்த அவனின் மேலாடை அணியாத முறுக்கேறிய புஜங்களையும் கழுத்தையும் விலை உயர்ந்த வைர மாலைகளும் நவரத்தின மாலைகளும் அலங்கரித்துக் கொண்டு இருந்தது. அதுப் போக அவன் கழுத்தை
தாமரை மலர்களால் ஆன ஒரு மாலையும் அலங்கரித்துக் கொண்டு இருந்தது. அந்த தாமரைப் பூவை சுற்றி இருந்த ஒளியிலே அவை வாடாத மாலை என்றுத் தெரிந்தது. அவனது ஒரு கையில் வீணை ஒன்று இருந்தது. அவனைச் சுற்றி ஒளி நிறைந்து இருந்தது. அந்த இருவரையும் சுற்றி ஒளி வட்டம் இருந்தது. கோட் சூட்டை விட இதில் அவன் மிக அழகான இருந்தான், அவன் காதில் தொங்கிக் கொண்டிருந்த வைர குண்டலங்களுக்குப் போட்டியாக அவனது கண்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துக் கொண்டே இருந்தது.

"வேண்டாம் தேஜஸ்…. இதுப் போன்ற உணர்வுகள் மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம், நீயோ தேவலோகத்தில் வாழும் கந்தர்வன், இது நடக்காத ஒன்று…. நாம் பூலோகத்திற்கு வந்ததே திங்கள் நாதரை தரிசனம் செய்யதான், அங்கே நமக்கு இருக்கும் பேறு அந்த ஈஸ்வரனால் நமக்கு வழங்கப் பட்ட. வரம், அத்தகையவனை நம் இசையால் தொழுது விட்டு இன்னும் சில காலங்களில் நாம் நம் இடத்திற்கு திரும்ப வேண்டும்…..உன் இடம் என்னவென்று உனக்கு தெரியும்…..நீ நம் இடத்தில், இந்திர சபையில் முதன்மையான கந்தர்வன்... அடுத்த தலைவன் நீயா இப்படி போயும் போயும் ஒரு பெண்ணிற்காக அதுவும் மானுட பெண்ணிற்காக பிதற்றுகிறாய்?",

அந்த வயதானவர் முகத்தில் ஆச்சிரிய ரேகைகள்.

"ஒரு திருத்தம்…நான் பிதற்றுவில்லை…ஏங்குகிறேன்…எனக்கு அவள் வேண்டும் என்று. அவளோடு சேர்ந்து அவள் கைக் கோர்த்து இந்த வனாந்திரம் முழுவதும் உலாவ வேண்டும்…காதல் என்பது ஈரேழு லோகங்களுக்கும் பொதுவானது பத்ரா…அதில் இந்திரன் இருக்கும் இந்திர சபை என்ன? அந்த ஈஸ்வரன் இருக்கும் கயிலை என்ன? எல்லா இடங்களிலும் காதலும் அன்பும் இருக்கிறது பத்ரா....என் அடி மனதின் வேண்டுதல் தான் அவள் இங்கே வந்து இருப்பது…நான் அவளை காதலித்துக் கொண்டே இருப்பேன்…",

"பலே…பின்?",

"அவளை மணப்பேன்……",

"ஆஹா….பின்?",

"அவளை என்னோடு அழைத்துக் கொள்வேன்…",

"எங்கே நம் உலகத்திற்கா?",

என்ற அந்த வயதானவர் முகத்திலும் குரலிலும் ஏளனம் இருந்தது. அதுவரை அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருந்த தேஜஸ்சால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

"நாமும் மானிடர்களும் என்றும் ஒன்று அல்ல…அவளை மறந்து திங்கள் நாதரை தொழுது வா….காதலாம் காதல்…முட்டாள்…!!!",

என்றவர் பழையப் கோதுமை நாகத்தின் உருவத்தை எடுத்து அந்த காட்டில் கலந்து மறைய, அவர் பேசியதை எண்ணிக் கொண்டு அப்படியே நின்று கண் மூடிய தேஜஸ் மனதில் அந்த காட்டின் புதைக் குழி இருக்கும் பக்கம் வழி மாறிப் போய் கொண்டு இருக்கும் ஆருத்ரா தெரிந்தாள்.


- தொடரும்.
Screenshot_20230105-192132_Gallery.jpg
 
Top