• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா -7

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
"அவரின் காதலே எனக்கு அந்த ராட்சசி சொல்லி தான் தெரியும்…இதில் எப்படி நான் இங்கே வந்து இருப்பது அவருக்கு தெரியும்?",


என்று அவள் சொன்ன பதிலில் அவள் மனம் ஆறுதல் அடைந்தது கண்டு தன் மனநிலை எண்ணிக் கொண்டு அவனுக்கு வியப்பு வந்தது.


"ஆருத்ரா…உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா?",


"தாராளமா கேளுங்க…, ஆனால் வாழுறதைப் பத்தி தத்துவம் பேசி பிளேடு மட்டும் போடாதீங்க…",


"பிளேடு போடுறதா??",


தேஜஸ் புரியாமல் விழித்தான்.


"நான் ஒருத்தி, நீங்க பெரிய பணக்காரர், பிசினஸ்மேன் தமிழையே எப்பாவது தான் பேசுவீங்க, இதில் நான் போய் இந்த மாதிரி பேசுறன் பாரு!!",


அவள் சொல்லிக் கொள்ள அவன் சிரித்தான்.


"எதை வைத்து நான் பிசினஸ்மேன், பணக்காரர்னு முடிவு செய்தீங்க?",


"உங்களோட இந்த லுக்கும் நீங்க பேசுற விதமும், கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் பார்த்த உங்கள் அரண்மனை போன்ற பங்களாவையும் வைத்து தான்….",


அவள் சொல்ல, அவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.


"கந்தர்வர்கள் விரும்பிய வடிவத்தை எடுக்கக் கூடியவர்கள், தாங்கள் மனிதர்களின் எத்தோற்றத்தை விரும்புகிறார்களோ அத்தகைய தோற்றத்தை எடுத்த உடன் அந்த தோற்றத்துக்கு ஏற்றாற் போல குணங்களும் மேனரிசங்களும் வந்து விடும் என்று இவளுக்கு தெரியுமா? இப்போது நான் பிசினஸ்மேன் தோற்றத்தை எடுத்து இருப்பதால் அதற்கான மேனரிசங்கள் என்னை வந்து அடைந்து இருப்பதை இவள் உணருவாளா? அந்த பங்களா என் மாயாஜாலத்தால் உருவாக்கப் பட்டது என்று இவள் அறிவாளா?",


அவன் மனதில் எண்ணங்கள் ஓடியது.


"ஒண்ணு கேட்கலாம்னு நினைத்து விட்டு கேட்காமல் இருந்தால் எப்படி மிஸ்டர். தேஜஸ்! என்ன கேட்க வந்தீங்க சொல்லுங்க!",


அவள் அவனின் அந்த சிந்தனையை கலைத்தவளாய் கேட்டாள்.


"ஆருத்ரா….ஒரு உயிரை பாதுக்காக மனுஷ வாழ்வில் எவ்ளோ போராட வேண்டி இருக்கு, கஷ்டப் பட்டு பத்து மாதங்கள் சுமந்து, அதன் பின் சத்தானது சாப்பிட்டு, வளர்ந்தப்பின் பாதுக்காத்துனு எவ்ளோ மென கிடுறோம்….ஆனால் ஒரு பிரச்சனை வந்த உடன் அதை தான் முதலில் போக்கிக் கொள்ள நினைக்கிறோம், ஆனால் அத்தனை நாட்களும் உடலில் இருந்து இயக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்த அந்த உயிருக்கு நாம ஏதாவது செய்தோமானா அது இல்லை…ஆனால் அந்த உயிர் அதாவது அந்த ஆத்மா மேலேப் போய் கஷ்டப்பட மட்டும் எல்லா பாவத்தையும் இந்த மனுஷங்க செய்கிறாங்க…",


அவன் முகத்தில் அளவுக் கடந்த வருத்தம் இருந்தது.


"உண்மை தான், ஆனா நீங்கப் பொதுவாக பேசுறீங்க மிஸ்டர். தேஜஸ், நீங்களும் ஒரு மனுஷன் தானு மறந்துட்டு பேசுறீங்க…!!",


அவள் புன்னகை செய்தாள். அதற்கு பதிலுக்கு அவனால் மௌனப் புன்னகை தான் செய்ய முடிந்தது.


"நீங்க ஏன் இந்த தற்கொலை எண்ணத்தை ஒத்தி வச்சிட்டு அந்த ஆத்மா அதாவது உங்கள் உயிருக்கு நல்லது செய்ய வாழக் கூடாது?",


அவன் கேட்டதில் அவள் திகைத்தாள்.


"நான் யாருக்காக வாழ வேண்டும்?",


"நீ எனக்காக வாழ வேண்டும் பெண்ணே…."


அவன் மனதில் தோன்றியதை வாய் வரை வந்து விட்ட அந்தப் பேச்சை அப்படியே விழுங்கியவன் அவளைப் பார்த்தான்.


"இந்தப் பரந்த உலகத்தில் எவ்வளவு விஷயங்கள் வாழ இருக்கு, ஏன் உங்களுக்காக கோடி ரசிகர்கள் இருக்காங்க…",


"எனக்கு அந்த வாழ்வுக்கு திரும்ப போக விருப்பம் இல்லை….",


"அப்படினா நான் சொல்ற வாழ்வுக்கு வரீங்களா?",


என்று தன்னை நோக்கி கை நீட்டியவனைப் புரியாமல் பார்த்தாள் அவள்.


"வாங்க என்னோட…., உங்க வாழ்வை நான் அர்த்தமாக்குறன்….ஆனால் நீங்க சாக மட்டும் கூடாது…",


என்றவன் அவளை நோக்கிப் புன்னகை செய்தப் போது இந்த முறை அவள் அவன் கைப்பற்றத் தயங்கவில்லை. அவள் கைப்பற்றியதும் அவன் உடல் சிலிர்த்தது. அங்கே இதமான பூக்களின் நறுமணம் வீசியது.


"வாவ்….என்ன ஒரு அருமையான வாசனை….!! இங்கே ஏதாவது பூச்செடி இருக்கா என்ன?",


என்றவள் கண்கள் அந்த மரங்கள் அடர்ந்தப் பகுதியை சுற்றும் முற்றும் பார்க்க அவன் அதற்கு பதில் சொல்லாது மௌனமாக அவளைப் பார்த்தான். அவன் கைப்பிடித்து கொண்டு அந்த வனாந்திரத்தை அவள் ரசிப்பதை அவன் ரசித்தான்.


"ஆமாம்…உங்களைப் பற்றி நீங்க சொல்லவே இல்லை?",


அவள் கேட்டாள்.


"நான் தேஜஸ்….!",


"தேஜஸ்னா இந்த சிக்மகளூர் காட்டுக்கே ராஜாவா? உங்களைப் பற்றி சொல்லுங்கனு சொன்னால் உங்கப் பேரை சொல்றீங்க?",


அவள் சிரிக்க, அதை ரசித்துப் பார்த்தான் அவன்.


"பூலோக தேவதை இவள்…..!!! எத்தனை பேரழகாக இருக்கிறாள், என் இத்தனை வருடங்களில் நான் எத்தனையோ மனிதர்களை பார்த்து இருக்கிறேன்…ஏன் இ்வளை விட அழகிகளையும் பார்த்து இருக்கிறேன்….ஆனால் யாரிடமும் மயங்காத, காதலில் விழாத இந்த கந்தர்வனின் மனது இந்தப் பெண்ணிடம் மட்டும் எப்படி மயங்கியது?",


இந்தக் கேள்விக்கு விடை மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அவனும் தங்கள் உலகத்தில் உள்ள அனைத்து அறிஞர்களையும் கேட்டு விட்டான், விதி என்றப் பதிலை தவிர வேறு எந்தப் பதிலும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் உருவாகும் உணர்வுகள் அவன் விதி என்ற ஒரு விஷயத்தில் அடைக்க விரும்பவில்லை. அதையும் தாண்டி அவன் காதல் கொண்ட மனதுக்கு மட்டுமே தெரிந்த எதோ ஒரு உணர்வு என்று தான் அவனால் எண்ணிக் கொள்ள முடிந்தது.





























"பாத்து வாங்க…இங்கே நிறைய மலைப் பாம்புகள் உண்டு..",


இருபுறமும் மரங்களும் செடிகளும் அடர்ந்த அந்த காட்டுப் பாதையில் தனக்கு முன்னால் நடந்து தனக்கு வழி ஏற்படுத்தி தந்துக் கொண்டே செல்லும் அவனைப் பார்த்தப்படி நடந்தாள் ஆருத்ரா.


"இங்கே அடிக்கடி வருவீங்களா?",


"ஆமாம்…கிட்டத்தட்ட இங்கே தான் நிறைய வருடம் இருக்கேன்…",


"அப்போ உங்க பிசினஸ்…",


அவள் கேட்க, அவன் முகத்தில் சிரிப்பு வந்தது.


"அதுக்குலாம் பாத்துக்க ஆள் இருக்கு…",


"அப்போ உங்க குடும்பம், குழந்தை, குட்டிலாம்?",


"குடும்ப, குட்டியா? அப்படினா?",


அவன் கேட்டதில் அவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.


"ஓ சாரி, ஃப்பாமிலி சார்…",


"அதுவா!! எனக்கு எல்லாருமே சொந்தம் தான்…இப்போ எல்லாரும் வெளியே இருக்காங்க..",


"வெளிநாட்டில் தானே? நினைத்தேன்…, அவங்களை விட்டுட்டு நீங்க பாரெஸ்ட்ல ஆட்டம் போடுறீங்களாக்கும்?",


அவள் சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்தது. ஏனோ அவளிடம் அவனுக்கு தான் காந்தர்வன் என்ற உண்மையை சொல்ல பிடிக்கவில்லை, அவன் அவளை ஐந்து வருடங்களாக காதலித்துக் கொண்டு இருப்பவன், அவனுக்கு நன்றாக தெரியும், மனிதப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது அவன் உலகத்தில் நடக்காத ஒன்று. அது மட்டும் அன்றி, அவன் அவளோடு உரையாட வேண்டும், அவளுக்கு நல்லது செய்ய வேண்டும், அது தான் அவன் அவள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த காதலின் வெளிப்பாடு, அதனால் அவளை அவன் தற்கொலையில் இருந்துக் காப்பாற்றினான், தான் ஒரு காந்தர்வன் நாங்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே தூதுவராக இருப்பவர்கள், எங்கள் உலகம் மேலே உள்ளது என்று அவளிடம் சொன்னால் நிச்சயம் அவள் இப்போது அவனிடம் பேசிக் கொண்டு இருப்பது போல் சகஜமாக பேச மாட்டாள், அதனால் அவள் நினைத்துக் கொண்டு இருப்பது போல் தான் இந்த சிக்மகளூர் காட்டில் விடுமுறையை கழிக்க வந்த பணக்காரனாகவே காட்டிக் கொள்ள முடிவெடுத்து கொண்டான் அவன்.


என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தவன் கையை,


"மிஸ்டர். தேஜஸ்….பொறுமையா நடங்க..என்னால் உங்க ஸ்பீடுக்கு நடக்க முடியலை..",


என்றவள் அவனின் நடையை தடுப்பது போல் அவன் கையை பிடித்தாள். அதில் அவன் உடல் மீண்டும் சிலிர்த்தது, அதில் மீண்டும் அங்கே சுகந்தமான பூக்கள் நறுமணம் வீசியது.


"இது என்ன அடிக்கடி செம்ம பிளவர்ஸ் ஸ்மல் வருது….எனக்கு இது ரொம்ப பிடித்து இருக்கு",


"எனக்கும் தான் உன்னை மிகவும் பிடித்து இருக்கிறது பெண்ணே…!! நீ மட்டும் கந்தர்வ கன்னியாக இருந்தால் எப்படி இருக்கும்? உன்னை இந்நேரத்துக்கு காந்தர்வ மணம் செய்து என்னோடு ஒன்றாக்கி கொள்வேன்…!! பெண்ணே!!",


அவன் உள்ளுக்குள் உருகினான். கந்தர்வர்கள் பூக்களின் நறுமணத்திற்கு சொந்தமானவர்கள், அதனால் அவர்கள் நடமாடும் போது எப்போதும் பூக்களின் நறுமணம் வீசும், அதிலும் குறிப்பாக அவர்கள் உணர்வுகளில் அதிதமாக இருக்கும் போது அவர்கள் மேல் உள்ள அந்த பூக்களின் நறுமணம் இன்னும் அதிகமாக இருக்கும். அதை இவளிடம் சொல்ல முடியுமா? என்ற கேள்வி அவனுக்குத் தோன்றியது.


"நாம வந்திட்டோம்…நான் சொன்ன இடத்துக்கு…",


என்றவன் ஒரு பெரிய குகையின் நுழைவாயிலை அடைத்துக் கொண்டு திரைப் போல் தொங்கிய அழகான வெள்ளை நிறப் பூக்கள் கொண்ட கொடிகளை விலக்கி விட்டுச் சொன்னான். அவன் பின்னால் வந்துக் கொண்டு இருந்த ஆருத்ரா ஓடிச் சென்று அங்கே பார்த்தாள்.

அங்கே….

- தொடரும்
 
Top