• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா...

ஹரிணி அரவிந்தன்

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 5, 2023
Messages
25
காதல் செய்யடா காந்தர்வா-2



டிங்….டிங்……!!!!!

அந்த வனாந்திர பிரதேசத்துக்கு நடுவே கருங் கல்லில் கட்டப் பட்டிருந்த அந்த திங்கள் நாதர் கோயிலில் கண் மூடி அமர்ந்து இருந்தாள் ஆருத்ரா. சுற்றிலும் காடால் சூழப்பட்டு நடுவே அமைதியாக அதுவும் தெய்வீக உணர்வு தரும் அந்த இடம் ஆருத்ராவின் மனதில் இருந்த வலிகளுக்கு இதமாக இருந்தது. கொஞ்ச நேரம் அவள் தன் வலிகளை மறந்து அந்த கோயிலைப் பார்த்தாள்.
நுழைந்த உடன் கழுத்தை தூக்கி மெனகிட்டு அண்ணாந்து பார்க்க வேண்டிய அவசியம் இன்றி சிறிய ஒரே ஒரு பிரதான கோபுரம், ஆனால் அந்த பிரதான கோபுரம் முழுவதும் நூற்றுக்கணக்கான வித விதமான சிலைகள் கையில் இசைக்கருவியுடன் இருப்பது வடிக்கப்பட்டு இருந்தன, கோயில் முகப்பில் சிவனைப் பார்த்தவாறு ஒரு கல் நந்தி கழுத்தில் மனோரஞ்சிதம் மாலையுடன் இருந்தது. மற்றப்படி அந்த கோயிலில் பெரிதாக ஈர்ப்பது போல் எதுவும் இல்லை.

"ஓம் நமச்சிவாய….!!! ஓம் நமச்சிவாய….",

காவி வேட்டி கட்டிக் கொண்டு கழுத்தில் ருத்ராட்சம் அணிந்துக்கொண்டு ஒரு வட இந்திய சந்நியாசி கும்பல் ஒன்று அவளை கடந்துப் போய் கொண்டு இருந்தது.

"இந்த திங்கள் நாதரை கும்பிட்டால் நடக்க முடியாத அற்புதங்கள் எல்லாம் நடக்குமாம்….",


ஒரு சாது இன்னொரு சாதுவுக்கு ஹிந்தியில் சொல்லிக் கொண்டு இருந்ததைக் கேட்டு ஆருத்ரா சிரித்துக் கொண்டாள். இதுப்போல் தான் அவளின் பாட்டி அகிலாண்டம் கதைகள் கூறுவார். அவரால் ஆருத்ராவிற்கு அறிமுகப் படுத்தி வைக்கப் பட்டவர் தான் இந்த கோயில் கருவறையில் இருக்கும் திங்கள் நாதர்.

"நிச்சயம் உன் வாழ்க்கையில் நல்லது நடக்கும்…நல்லா கும்பிட்டுக்கோ…ஓம் நமச்சிவாய…",

என்றப்படி அவர் நடக்க, ஆருத்ராவின் கண்கள் கருவறையில் இருந்த இறைவனை நோக்கிப் போனது. லிங்க உருவத்தில் தான் இருந்தான் அந்த ஈஸ்வரன், ஆனால் லிங்கத்தின் மேல் மற்ற சிவலிங்கங்களில் இல்லாததுப் போல் அரை வட்டமாக தேய்ந்த நிலா இருந்தது. கற்பூரம் காட்டும் போது அந்த ஒளியில் அது ஜொலித்ததில் தான் அது வைரத்தால் ஆன தேய்பிறை என்று தெரிந்தது.

'இனி இவரால் ஆகப் போவது என்ன? அரை மணி நேரப் பேட்டிக்கு ஐந்து கோடி கூடத் தர தயாராக இருக்கும் பத்திரிகை உலகம், ஆருத்ரா நடித்த படம் என்றால் பாலும் தேனுமாக தியேட்டர் வாசலில் ஊற்றும் ரசிகர் கூட்டம், எங்க வீட்டுப் பொண்ணு என்று பிரியத்தோடு சொல்லிக் கொள்ளும் பெண்கள் கூட்டம், ஆல் இந்தியன் பியூட்டி ஆருத்ரா யூஸ் பண்ணின ஹேர்பின் ஒரு லட்சம் ஒரு தரம் என்று சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்க தயாராக உள்ள தொழில்திபர்கள் கூட்டம், தான் சம்பாதித்து வைத்து இருக்கும் பங்களா, எஸ்ட்டேட், சொத்துக்கள் என்று தன் பெயர், புகழ் என அனைத்தையும் விட்டு விட்டு நிம்மதியான மரணத்தை தேடி வந்து இருப்பவளுக்கு அந்த திங்கள் நாதரால் ஆவதற்கு தான் என்ன இருக்கிறது?'

எண்ணிக் கொண்டவளுக்கு சற்று முன் அந்த சாதுக்கள் பேசிய பேச்சு நினைவுக்கு வர சிரிப்பு வந்தது. தூக்கு கயிறின் முன் நிற்பவளிடம் தீர்க்காயிசா இரு என்று வாழ்த்துவதுப் போல் இருக்கிறது அதைக் எண்ணிக் கொண்டவள் மீண்டும் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

"அம்மா….பிரசாதம் வாங்கிக்கோங்க….",

அவளின் கவனத்தை கலைப்பது போல் தொன்னையில் சர்க்கரைப் பொங்கலை நெற்றியில் விபூதி பட்டையுடன் ஒருவர் புன்னகை முகத்துடன் நீட்டினார். அவள் வேண்டாம் என்று தலையாட்டி மறுத்தாள்.

"என் குழந்தைக்கு ரொம்ப நாளாக உடம்பு சரியில்லாமப் போயிருந்தது….இங்கே ரெண்டு முறை வந்து இசைக் கருவி வாங்கி வச்சேன், இப்போ சரியா போயிட்டு, அதற்காக தன் இங்கே எல்லாருக்கும் சாமிக்கு படைச்ச பிரசாதம் தரேன்…வாங்கிக் கொள்ளுங்க அம்மா….",

அவர் கோரிக்கையை மறுக்க முடியாது வாங்கியவள், அவருக்காக கஷ்டப் பட்டுப் புன்னகைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிடுவதை கவனித்துக் கொண்டே நகர்ந்த அந்த வெள்ளை வேட்டி சட்டை அணிந்த மனிதர், தன் விட்டு விட்டு சிக்னல் வந்து போன போனில்,

"அந்த பொண்ணு இங்கே தான் சிக்மகளூர்ல இருக்கா…., அவளை யாருக்கும் அடையாளம் தெரியக் கூடாதுனு ஐம்பது வயது அம்மா மாதிரி மேக்கப் போட்டுக் கொண்டு வந்து இருக்காள், அதை அவளை நெருங்கி நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்….",

என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டுத் தன் போனை மேலே தூக்கி தூக்கிக் காட்டி சிக்னல் கிடைத்த உடன் அந்த குறுஞ்செய்தி சென்று விட்டதை உணர்ந்தவன் நடந்தார்.



உண்மையில் அந்த சர்க்கரைப் பொங்கல் அபார சுவையாக இருந்தது. நேற்றில் இருந்து ஒன்றும் சாப்பிடாத வயிறு, கொடுத்ததை ஆவலுடன் வாங்கிக் கொள்ள அதற்கு வாயும் கையும் வேக வேகமாக உதவி செய்தன.

"ஆரும்மா….சர்க்கரைப் பொங்கல் இத்தனைப் பிளேட் சாப்பிட்டால் அப்புறம் குஷ்பு மாதிரி ஆயிடுவ….இதே பிகரை மெயின்டெய்ன் பண்ணினா தான் உனக்கு ஹிந்தியில் மதிப்பு…தமிழ்நாட்டுக்கு வேணா தலுக் மொழுக் சரியா இருக்கும்…இங்கே பாலிவுட்டில் எல்லாமே ஒல்லி பெல்லி தான்…",

என்றப்படி ஆருத்ராவின் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கல் பிளேட்டை பறித்து ஒரே ஒரு ஆப்பிள் கொடுக்கும் தனது அத்தையான செண்பக வள்ளியின் நினைவு ஆருத்ராவிற்கு வந்ததில் ஏனோ அவளுக்கு தொண்டையில் உணவு இறங்க மறுத்தது.

"அத்தை……..!!!!!!",

சொல்லிக் கொண்டவள் கண்களில் இருந்து நீர் பொல பொல வென்று
இறங்கியது. அப்போது அவளின் கவனத்தை ஈர்ப்பது போல் அங்கே யாரோ புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஆருத்ராவிற்கு தன் பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. உடல் நிலை சீராக இல்லை என்றால் அந்த திங்கள் நாதர் கோயிலில் ஏதேனும் இசைக்கருவி வாங்கி வைத்து வேண்டிக் கொண்டால் உடல்நிலை சரியாகி விடுமாம். அது எதனால் என்று கேட்டப் போது காலம் காலமாக இருக்கும் பழக்கம் என்றத் அகிலாண்டம் சொன்னார். அது ஒரு நம்பிக்கையாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு தன் டிராவல் பேக்கைப் பிரித்தாள். அதில் ஒரு குறிப்பிட்ட ஜிப்பை பிரித்தவள் மரத்தாலான அழகிய வேலைப்பாடுகள் உடைய கைக்கு அடக்கமான சிறிய வீணையை எடுத்தவள் கருவறையில் இருக்கும் இறைவனைப் பார்த்தாள்.

"அப்பா…..எல்லாத்தையும் எனக்கு கொடுத்த நீ நிம்மதினு ஒன்னை தர மறுத்துட்ட…இந்தப் பிறவியில் தான் கொடுக்கலை….அடுத்தப் பிறவியிலாவது இதுப் போல் நிம்மதி வேண்டும் பிறவியாக படைக்காமல் இரு….எனக்கு இந்த மனிதப் பிறவியே வேண்டாம் அப்பா….!!!",

என்று வேண்டிக் கொண்டே அங்கே குவிந்துக் கிடந்த இசைக்கருவி மாடல்களுக்கு நடுவே தன் கையில் இருந்த வீணையை போட்டவள் உண்டியலை நோக்கி நகர்ந்தவள் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். ஏனோ தெரியவில்லை அந்த கோயிலுக்கு அவள் நுழைந்ததில் இருந்தே யாரோ அவளை கவனித்துக் கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு. அந்த உணர்வை எப்போதும் அவள் எப்போது மீடியாவின் வெளிச்சத்தில் வந்தாளோ அப்பொதில் இருந்தே உணர்ந்து கொண்டு தான் இருக்கிறாள், ஆனால் இப்போது அவள் மனதில் ஏனோ பெயர் தெரியாத உணர்வுகள் வந்ததில் அவள் மீண்டும் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். மாலைப் பொழுதை நெருங்கிக் கொண்டிருந்ததால் அந்த இடத்தில் ஒன்றிரண்டு பேரே இருந்தார்கள். அவர்களும் தம் வேலைகளில் கவனமாக இருந்ததால் அவளைப் பார்ப்பதாக அவளுக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

'ஒருவேளை தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் சாகப் போறோம் என்பதை உணர்த்தும் வகையில் இதுப் போன்ற உணர்வுகள் வருதோ?'

என்று எண்ணிக் கொண்டே அவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தன் டிராவல் பேக்கில் இருந்த வைரம் மற்றும் நகைகளை எடுத்து ஒவ்வொன்றாக தன் அருகே இருந்த உண்டியலில் போட ஆரம்பித்தாள். அடிக்கடி கர்நாடக அரசால் மழைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படும் அந்த சிக்மகளூர் பகுதியில் உள்ள காட்டுக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு மழைக்கும் உடையும் அல்லது காணாமல் போகும் கேமிராவை மெனகிட்டு அந்த கோயில் வளாகத்தில் பொருத்தி வைக்காத கோயில் நிர்வாகத்தின் அலட்சியம் ஆருத்ராவிற்கு வசதியாகப் போய் விட, அந்த பையில் இருந்த எல்லா நகைகளையும் உண்டியலில் போட்டு விட்டு அவள் யாழிசை அருவி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"இன்னும் சற்று நேரத்தில் கோயில் நடை சாத்தப் போவதால் பக்தர்கள், சுற்றுலா வாசிகள் அனைவரும் கோயிலை விட்டுப் புறப்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறது….",

என்ற அறிவிப்பு, கன்னடம், இந்தி, ஆங்கில மொழியில் வர, அதைக் கேட்டு அங்கே இருந்த சொச்ச நபர்களும் சென்று விட, ஆருத்ரா அந்த கோயிலில் இருந்து யாழிசை அருவி செல்லும் வழியில் உள்ள ஒரு பெரிய மரத்துக்கு அடியில் ஒருமுறை கோயிலை சுற்றி சரிபார்க்கும் காவலாளியின் கண்ணில் படாமல் ஒளிந்துக் கொண்டாள். அந்தப் பகுதி லேசாக மாலை இருளை வாங்கிக் கொண்டு இருக்க, வானில் வெள்ளிக் கீற்றாய் மின்னிய பிறையின் வெளிச்சம் அவளுக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்க, வெறுங்கையை வீசி கொண்டு தன் வாழ்க்கையின் இறுதி யாத்திரையாக யாழிசை அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் சென்ற சில நொடிகளில் அவள் நேர்த்தி கடனாக வைத்து இருந்த அந்த மர வீணையை கையில் எடுத்துக் கம்பீரமும் அழகும் நிரம்பிய ஆடவன் ஒருவன் கோட் சூட் அணிந்து புன்சிரிப்புடன் அவள் சென்றப் பாதையிலே நடக்க ஆரம்பித்தான். ஒளி பொருந்திய அவனின் கண்களும் அவன் முகத்தில் இருந்த சிரிப்பும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றுச் சொல்லியது. பார்த்த உடன் ஒரு கணம் தன்னை மறக்க செய்யும் அழகு உடைய அந்த வசீகரன் நடப்பதே ஒரு வித அழகோடு தான் இருந்தது.

யாரிவன்...?


-தொடரும்

Screenshot_20230105-192132_Gallery.jpg
 
Top