• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 16

பண்டிகை விடுமுறை விடுமுறை எடுத்துக் கொள்ள, முதல் நாள் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த தங்கராஜிடம் வந்தான் கண்ணன்.

அன்று நிஷாவைப் பார்த்துவிட்டு வந்த பின்பு தந்தையிடம் பேசிய கண்ணன் முடிவில் தங்கராஜின் நண்பரின் மகன் ராஜ் உதவி கமிஷனராய் இருக்க, ராஜ் மூலம் அண்ணாமலையை தொடர்பு கொள்ளலாம்.. பேசி பார்க்கலாம் என நினைத்து இருந்தனர்.

இன்றும் தங்கராஜ் ஆபீஸ் செல்லும் வழியில் அங்கே சென்றுவிட்டு போக முடிவு செய்திருக்க, அப்போது தான் கண்ணன் வந்தான்.

"ப்பா" என்று கண்ணன் அழைக்க,

"சொல்லு டா" என்றார் தங்கராஜ்.

"என்ன பா இன்னைக்கு அவரைப் பார்க்க போறிங்களா?" என்றான்.

"ஆமா கண்ணா! அங்கே போய்ட்டு நான் நேரா ஆபீஸ் போய்டறேன்.. அங்கீருந்து உனக்கு கால் பண்றேன்" என்றார் தங்கராஜ்.

"ஹ்ம்ம்! நான் இன்னைக்கு லீவ் தான் பா.. கால் பண்ணுங்க.. அம்மாகிட்ட நான் பேசறேன் இன்னைக்கு.." என்றான் கண்ணன்.

அவனையே பார்த்திருந்தவர் முகம் கனிந்து இருந்தது.

"என்னாச்சு பா" கண்ணன் கேட்க,

"ராம் பொருப்பானவன் தான்.. ஆனா உன்னை விளையாட்டு பிள்ளையா மட்டும் தான் நினச்சு இருந்தேன்.. குடும்பக் கஷ்டம், சுக துக்கம் எல்லாத்தையும் முன்னாடி நின்னு பார்த்துக்குறியே.. அதான் என் புள்ள அவ்வளவு வளர்ந்துட்டானானு பாக்குறேன்" என்றார். அதில் கொஞ்சம் பெருமையும் தெரிந்தது.

"அட! அதெல்லாம் ஒன்னும் இல்ல பா.. எவனோ ஜோசியர் சொன்னான்னு அண்ணனுக்கு கல்யாணத்தை பண்ணியே ஆவேன்னு அம்மா நிக்குது.. அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.. மலையேறிடுவான்.. அதான் பொறுமையா எடுத்து சொல்லலாம்னு இருக்கேன்.. அதுவும் எல்லாத்தையும் சொன்னா அம்மா தனக்குள்ள டம்ப் பண்ணி ஹார்ட் அட்டாக்கை இழுத்து வச்சிக்கும்.. ஸோ சும்மா பிரேக்கப் மாதிரி மட்டும் சொல்லி வச்சுட்டு அண்ணனையும் அலெர்ட் பண்ணிக்கலாம்" என்றான் தெளிவாய்.

"ம்ம் அதுவும் சரி தான்.. சித்து பாவம்" என்று மனைவிக்காய் தந்தை பேச,

"ஹான்! ரொம்பத்தான்.. அது மட்டும் இல்ல.. வேற பொண்ணு பாக்குற வேலை வேற இருக்கே! அவனை வேண்டாம்னு சொல்ல விடக் கூடாது.. பொண்ணு எல்லாம் தேடி ரெடி பண்ணி கன்வின்ஸ் பண்ணனும்..அப்ப தான் எனக்கும் சீக்கிரமே ஏதாச்சும் பார்த்து செய்விங்க!" என்று கிண்டல் பேச,

"உன் வாய் மட்டும் அடங்கவே செய்யாது டா.. உனக்கு எப்படி தான் அண்ணனா பொறந்துட்டு இப்படி அமைதியா இருக்குறானோ ராம்" என்றார்.

"அதெல்லாம் குடுப்பினை பா" என்று பேசிவிட்டே ரூமை காலி செய்தான் கண்ணன்.

ராம் தனது அறையில் அமர்ந்திருக்க, கைகளுக்கு அப்போது சிறிய சிறிய எக்ஸ்ஸர்சைஸ் மருத்துவர் கூறியது போல செய்ய உதவிவிட்டு சென்றிருந்தார் சித்ரா.

எப்போதும் வேலை, வீடு என இருப்பவன் தான்.. நிஷாவை சந்திக்க என அவ்வப்போது வெளியே செல்வதோடு சரி.. நண்பர்களுடன் சுற்றுவது எல்லாம் இல்லை.

இந்த நான்கு சுவர் கொண்ட அறை தான் எப்போதும் என்றாலும் வேலை நேரம் அதிகம் என்பதால் வந்ததும் படுத்தால் உறங்கிவிடுவான்.

எப்போதாவது தான் குடும்பத்துடன் சேர்ந்து நேரம் செலவிடுவது கூட.

நிஷாவிடம் தன்னைத் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டாலும் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இருந்தான்.

இப்போது தந்தை உதவி செய்கிறேன் என்ற பின்பு வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் விழிக்கவே அத்தனை சங்கடமாய் இருந்தது ராமிற்கு.

இத்தனைக்கும் தந்தை தன்னிடம் கோபமாய் ஒரு பார்வை பார்திருந்தால் கூட மனது ஆறியிருக்கும் போல.. அவரும் எப்போதும் போலவே இருக்க, தன் மீதான கோபம் தான் அதிகமானது ராமிற்கு.

அதைக் கண்ணனிடம் கூற, அவனும் சமாதானமாய் பேசி ராமை இன்னும் குற்ற உணர்வில் தான் ஆழ்த்தினான்.

அறைக்குள்ளேயே இருந்து மூச்சு முட்டுவது போல இருக்க, அறையில் இருந்து வெளிவந்து ஹாலில் அமர்ந்திருந்தான் ராம்.

தங்கராஜ் வெளியே கிளம்பி இருக்க, லதாவும் காலேஜ் சென்றிருந்தாள்.

"என்ன டா வேணும்? ரூம்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல?" சித்ரா கேட்க,

"ரூம்லயே எவ்வளவு நேரம் தான் மா இருக்குறது.. அதான்.. கண்ணா எங்கே ஆபீஸ் போய்ட்டானா?" என்றான்.

"அவனுக்கு லீவ் தானாம்.. ஆனா ஏதோ வேலைனு லேப்டாப் முன்னாடி அவன் ரூம்ல இருக்கான்" என்றார்.

எப்படியும் சொல்ல வேண்டியது தானே? சொல்லி விடலாம்.. அன்னை திட்டினாலும் கூட பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பிக்க எண்ணினான் ராம்.

"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் மா" என்று ராம் கூறிய அதே நேரம்,

"உன்கிட்ட ஒன்னு சொல்லணும் டா" என்றிருந்தார் சித்ராவும்.

"நீங்களுமா?" ராம் கேட்க,

"நீயுமா? சொல்லு டா என்ன?" என்று சித்ரா கேட்க,

"சொல்றேன் மா.. நீங்க சொல்லுங்க என்ன விஷயம்?" என்றான்.

"அட யாராவது ஒருத்தர் என்னனு தான் சொல்லுங்களேன்!" என்று வந்தமர்ந்தான் கண்ணன்.

"நீ சின்ன பையன்.. உன்கிட்ட எல்லாம் இதை இப்ப பேச முடியாது.. நீ உள்ளே போ" சித்ரா சொல்ல,

"அப்படி என்ன மா விஷயம்?" என்றான் ஆர்வம் தாங்காமல்.

"ராம் கல்யாண விஷயம் டா.. உனக்கு எதுக்கு இப்ப?" என்று சித்ரா கேட்க,

"ம்மா இதெல்லாம் டூ மச்" என்று சத்தமாய் சொல்லியவன்,

"அந்த நிஷாவை திட்றத்துக்கு மட்டும் நான் துணைக்கு வேணும்.. இப்ப வேணாமா?" என்றான் அவர் காதினில்.

"மாட்டி விட பாக்குறியா? என்னவோ பண்ணு சொன்னா கேட்கவா போற?" என்ற சித்ரா,

"ராம்! உனக்காக நல்லாவே வெயிட் பண்ணியாச்சு.. ஜாதகத்துல வேற மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணலைனா மூணு வருஷத்துக்கு பண்ணவே முடியாதுன்றான்.. ஜோசியரும் அதையே தான் சொல்லறாரு.. சொல்லு நீ அவகிட்ட பேசிட்டியா? இல்ல நாங்க பேசட்டுமா?" என்றார்.

"ம்மா! என்ன இவ்வளவு அவசரம்?" என்றான் கண்ணன் வேகமாய்.

"இதுக்கு தான் டா நீ சின்ன புள்ளனு சொன்னேன்... இதுல தலையிடாதனு சொன்னேன்.. என்ன அவசரமாம்! அவனுக்கு என்ன வயசு பின்னாடியா போய்ட்டு இருக்கு" என்று முறைத்தவர்,

"சொல்லு ராம்" என்றார் கறாராய்.

"ப்ச்! என்ன சொல்லணும்?" என்றான் ஒட்டாத தன்மையில்.

"டேய்! உன் கல்யாணம் பத்தி தான் பேசுறேன்.. அவங்க வீட்டுல பேசிட்டாளாமா? இல்ல நாம தான் பேசணுமா?" மீண்டும் கேட்க,

"ம்மா! பெட்டர் ஐடியா ஒன்னு நான் தரவா?" என்றான் கண்ணன்.

"என்ன?" என்று அவர் முறைக்க,

"அதான் ஜாதகத்துல மூணு மாசம் டைம் இருக்கே! நீங்க ஒரு நல்ல பொண்ணா செலக்ட் பண்ணுங்க.. அண்ணா கல்யாணம் பண்ணிக்கும்" என்று கண்ணன் சொல்ல,

அதற்கு மேல் தான் சொல்ல வந்ததை சொல்லும் தைரியம் இல்லை ராமிற்கு. எழுந்தவன் மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட,

"என்ன டா உளறுற? நான் தான் பேசிட்டு இருக்கேன்ல? அவன் நான் பேசுறதை கேட்குறதே பெருசு.. நீ வேற லூசு மாதிரி பேசி அவனை விரட்டி விட்டுட்டியா?" என்றார் கோபமாய்.

"நான் லூசா? அது சரி.. அவன் சொல்ல வந்ததை என்னனு முதல்ல கேட்ருந்திங்கனா இந்நேரத்துக்கு நம்ம வீட்ல ஸ்வீட் ரெடியாகியிருக்கும்" என்றான்.

"ஸ்வீட் சாப்புடுற அளவுக்கு என்ன நியூஸ்?" என்றார் கண்ணனின் இந்த தலையை சுற்றி மூக்கை தொடும் முயற்சியில்.

"அண்ணன் அந்த நிஷாவை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.." என்று சொல்ல,

"என்னது?" என்று வாயில் கைவைத்தவர், வாயெல்லாம் பல்லாக,

"டேய்! டேய்! மறுபடி ஒருக்கா இந்த காதுல சொல்லேன்" என்றார்.

"ம்மா! நிஜமா தான்.. ராம் காட் பிரேக்கப் வித் நிஷா" என்றான்.

சித்ராவிற்கு அவ்வளவு சந்தோசம்! எத்தனை நாள் மனதுக்குள்ளே பொருமி இருப்பார்?

"எப்படி டா?... ஆமா அதெப்படி டா உனக்கு தெரியும்?... நிஜமா சொல்றியா?... உன்னை நம்பலாமா?..." சித்ரா கேட்க,

"எப்படினு எல்லாம் கேட்காதீங்க.. நீங்க நினைச்சது நடந்துடுச்சு அவ்வளவு தான்.. எனக்கு தெரியாம இந்த வீட்ல எதாவது நடந்திடுமா?" என்று கண்ணனும் பெருமையாய் கூற,

"இருந்தாலும் நம்புற மாதிரி இல்லையே டா.. உன் பேச்சை கேட்டு அவன்கிட்ட கேட்டா அம்மானு கூட பார்க்க மாட்டான் அதுக்காக தான் கோர்த்து விட பாக்குறியா?" என்று விடாமல் நச்சரித்தார் சித்ரா.

"ப்ரோமிஸ் மா... உண்மை தான்..." கண்ணன் எவ்வளவோ சொல்லியும் நம்பாமல் மாற்றி மாற்றி சித்ரா கேட்க,

"அட போங்க ம்மா! நம்பாட்டி எனக்கா நஷ்டம்?" என்று எழுந்து கொண்டு திரும்ப, அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் ராம்.

அவன் நின்ற தோரணையே எல்லாம் கேட்டு விட்டான் என்பது தெரிய,

"பார்த்தியா டா உன்னை பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லி என்னை உன்கிட்ட அடி வாங்க வைக்க பாக்குறான்" என மகனையே மாட்டிவிட்டார் சித்ரா.

"அடப்பாவி அம்மா!" என்று கண்ணன் வாய் பிளந்து நிற்க, வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்க வேண்டியதாய் போயிற்று ராமிற்கு.

என்ன இருந்தாலும் அந்த இடத்தில் சிரித்துவிட்டால் அது ராம் இல்லையே!

கவலை, வருத்தம், குற்ற உணர்ச்சி என பலதும் மனதை அரித்துக் கொண்டிருக்க, தாயும் தம்பியும் தன்னைப் பற்றி பேசுவதை கேட்டதில் அந்த இடத்தில் நிஜமாய் மனம் நிறைந்து தான் இருந்தது.

கொஞ்சமும் தன் மேல் கோபம் இல்லை, தன்னை இருவரும் விட்டுக் கொடுக்கவும் இல்லை என்றால் தான் எடுத்திருந்த முடிவு தவறு என்று அவர்களுக்கு எப்போதோ தெரிந்திருக்கிறது தானே என்றும் நினைத்துக் கொண்டான்.

"நீங்க அவனுக்கு கல்யாணம் பண்ணுங்க.. இல்லை என்னவும் பண்ணுங்க.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. எனக்கு கால் இருக்கு.. நான் வர்றேன்" என்ற கண்ணன் தன் அறைக்குள் புகுந்து கொள்ள,

ராமை குறுகுறுவெனப் பார்த்து நின்றார் சித்ரா. என்ன என்று கண்களால் அவன் கேட்க, கண்ணன் சொன்னது உண்மையா என கேட்கும் தைரியம் கூட அவரிடம் இல்லை.

"ஒன்னும் இல்லையே!" என்று அவர் சொல்லிய பாவனையில் மீண்டும் வந்த சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியவன் அவர் அருகே வந்து அமர்ந்தான்.

சித்ரா அவனையே பார்த்தபடி அமர்ந்திருக்க, சில நொடிகள் அங்கும் இங்குமாய் பார்த்து எச்சில் விழுங்கியவன்,

"கண்ணா சொன்னது உண்மை தான் மா.. எங்களுக்கு.. ப்ச்! எனக்கு செட் ஆகல" என்றான்.

சொல்லி முடிக்கும் போது அவன் முகத்தில் அடிபட்ட பாவனை. ரொம்பவுமே வருந்தினான். அதில் இருந்து மீள முடியும் என்று தோன்றவில்லை.

அவன் சொல்லிய பின்பும் சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்த சித்ராவின் மனதில் மகிழ்ச்சி அலைகள் தான். பின் அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளில் தான் பேச வேண்டும் என்பதே ஞாபகம் வர,

"இதுக்கு ஏன் டா வருத்தப்படுற? நல்ல விஷயம் தானே சொல்லியிருக்க?" என்று சொல்லியவர், ராம் பார்த்த பார்வையில் திருதிருவென முழித்தார்.

இப்போது வந்த புன்னகையை மறைக்கவெல்லாம் பாடுபடவில்லை ராம். வெளிப்படையாய் இதழ்திறக்காமல் சிரிக்க,

"ராம்! எத்தனை வருஷம் ஆச்சு டா உன் சிரிப்பை பார்த்து" என்று சொன்னவர் கை தானாய் ராம் பக்கம் நீண்டுவிட்டது.

தானுமே அப்போது தான்அதை உணர்ந்தான் ராம். மனதில் இருந்து வந்த புன்னகை அது. இப்போது தான் தான் தானாய் இருப்பதாய் ஒரு உணர்வு சொல்ல, தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் மனம் நிம்மதியானது.

தொடரும்..
 
Top