• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 14

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
மிருது சட்டென, "நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணீக்கல?" என பாரியிடம் கேட்க, அவனோ அதற்கு என்ன பதில் சொல்வதென யோசித்தான். பின்பு, "கல்யாணம்தானே. பொறுமையா பண்ணலாம். இப்ப என்ன அவசரம்?" எனக் கேட்டு வைக்க, "ஆமா பாரி. நீங்க சொல்றதுதான் கரெக்ட். நானும் இதான் சொல்றேன். வீட்ல கேட்டாதானே?" என சலித்துக் கொண்டாள்.

"அது சரி. பசங்களுக்கு வெயிட் பண்ற மாதிரி பொண்ணுக்களுக்கு பார்க்க மாட்டாங்க மிருது." என பாரி கூற, "என்னவோ சொல்லுங்க. சரி நேரம் ஆச்சு. வாங்க போய் தூங்கலாம்." என அவனை அழைத்துக் கொண்டு வந்த போது இருவரின் மனதும் இலேசானதாக மாறி இருந்தது.

இருவரும் மாடியில் இருந்து இறங்கி வந்து குட்நைட் சொல்லிவிட்டு அவரவர் அறைக்கு செல்வதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியை இருவருமே கவனிக்கவில்லை. ஆனால் அவளது பார்வையை கண்ட செல்வன், "என்ன மேடம் யோசனை பலமா இருக்கு?" என்றான்.

"இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ ஓடுது. ஆனா என்னன்னுதான் தெரியல." என்றபடியே சுந்தரி யோசிக்க, "ம்ம். உன் மண்டைக்குள்ளதான் தேவை இல்லாததெல்லாம் ஓடுது. எதுவா இருந்தாலும் நடக்கும்போது தானா தெரிய போகுது. வா." என அவளை அழைத்துச் சென்றான் செல்வன்.

அடுத்த நாள் காலை அனைவருக்கும் உற்சாகமாக விடிய, வேலை இருப்பதாக காலையிலேயே கிளம்பி சென்று விட்டான் பாரி. மிருதுளாவிற்கு விழா சாயங்காலம்தான் என்பதால் சுந்தரியுடன் வளவளத்துக் கொண்டே அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர் மிருதுளாவும், பிறையும்.

மூவரும் பேசிக் கொண்டிருக்க, பொழுது ரம்யமாக சென்றது. மறக்காமல் அவளது நிச்சயத்தை பற்றி கேட்டு விட்டாள் சுந்தரி. அவளும், "ஆமா அக்கா. வர்ற ஞாயிற்றுக்கிழமை நிச்சயம். நீங்களும் அண்ணனும் கண்டிப்பா வரனும்." என அழைப்பு விடுக்க, "இந்த வாரம் வர முடியுமான்னு தெரியல மிருதுளா. ஆனா உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவோம்." என உறுதியளித்தாள் சுந்தரி.

மதியத்துக்கு மேல் பாரியும் வந்துவிட, உணவருந்திவிட்டு மூவரும் கிளம்பினர். "நான் வந்து டிராப் பண்றேன் பாரி." என செல்வன் கூற, "வேண்டாம் மாமா. நாங்க பங்ஷன் அட்டன் பண்ணீட்டு அப்படியே ஊருக்கு கிளம்பிடுவோம். ஆட்டோ பிடிச்சு போயிக்கறோம்." எனக் கூறி விட்டான் பாரி.

"உங்களுக்கும் வேலை முடிஞ்சதா?" என மிருதுளா கேட்க, "ம்ம் முடிஞ்சது மிருது. பஸ் கூட புக் பண்ணீட்டேன். போகலாமா." என்றவன் அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்தான். பிறகு அங்கிருந்து கிளம்பி விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர். முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கூட்டமும், கெடுபிடிகளும் அதிகமாக இருந்தது.

நல்லவேளையாக மிருதுளாவிடம் என்ட்ரி கார்டு இருந்ததால் அதிக சிரமம் இல்லாமல் உள்ளே செல்ல முடிந்தது. மூவரும் விழா ஏற்பாடுகளை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் பணி வாங்கியவர்கள் அனைவருக்கும் ஒப்புதல் ஆணையும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

மிருதுளா சென்று வாங்கியபோது, அதை தனது அலைபேசியில் படமாக்கிக் கொண்டான் பாரி. அதன்பிறகு விழா இனிதே முடிய, மூவரும் அங்கிருந்து கிளம்பி, ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இந்த முறை மிருதுளாவே பாரியை தன்னருகில் அமர சொல்லி விட்டாள்.

அன்று போல் இல்லாமல் இருவரும் நன்கு கதைப் பேசிக் கொண்டே இரவு முழுவதும் தூங்காமல் ஊருக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்து இறங்கும்போதே சுந்தரம் பேருந்து நிலையத்தில் அவர்களுக்காக காத்திருந்தார். பிறகு மிருதுளாவை அழைத்துக் கொண்டு பாரிக்கும் நன்றி உரைத்தவர் மறக்காமல் நிச்சயத்திற்கு வரவேண்டும் எனவும் கூறிச் சென்றார்.

அதன்பிறகு வந்த இருநாட்கள் பரபரப்பாக சென்றது. வெளியில் எங்கும் செல்லக் கூடாது என மீனாட்சி மிருதுளாவிற்கு கட்டளையாக கூறிவிட, அவளோ கடுப்பில் இருந்தாள். ஆனால் அவளது தமக்கையும், அக்கா மகளும் உடன் இருந்ததால் பொழுது நன்றாகவே சென்றது அவளுக்கு.

பவித்ராவோ, தங்கைக்கு ஃபேசியல் போட்டு விடுவது, அழகாக தலை பின்னி விடுவது, மருதாணி வைத்துவிடுவது என அவளை திருமணத்திற்கு தயார் செய்வது போல பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள். "அக்கா. எனக்கு நிச்சயம்தான் நடக்க போகுது. நீ ஏன் ஏதோ கல்யாணம் மாதிரி இதெல்லாம் பண்ற?" என சலித்துக் கொண்டாள் மிருதுளா.

"நிச்சயம் முடிஞ்சா அடுத்த ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வைச்சிடுவாங்கன்னு அம்மா சொன்னாங்கடி. இப்ப இருந்தே இதெல்லாம் பண்ணாதான் முகம் இன்னும் பிரைட்டா இருக்கும்." என பவித்ரா கூற, "எது ஒரே மாசத்துல கல்யாணமா? போக்கா நான் ஒத்துக்க மாட்டேன்." என்றாள் மிருதுளா.

"பின்ன என்ன ஒரு இரண்டு வருஷம் கழிச்சு வைக்க சொல்லலாமா?" என அவள் கிண்டல் செய்ய, "சூப்பர் ஐடியாக்கா." என சிரித்தவள் அதற்கும் ரெண்டு வாங்கிக் கட்டிக் கொண்டாள். "எங்களுக்கு ஓகேவா இருந்து என்ன பண்றது. உன் வருங்கால புருஷன் நிச்சயம் அன்னிக்கே கல்யாணம் வைக்கலாமான்னு இல்ல கேட்கறாராம்." என்னபடியே வந்தான் கதிரவன்.

"ஏன் அத்தான். அவர் பிஸினஸ் ரொம்ப டல்லா போகுதோ?" என மிருதுளா கேட்க, "அப்படியெல்லாம் எதுவும் தெரியலயே. ஏன் கேட்கற?" என்றான் கதிரவன். "அப்பறம் எதுக்குத்தான் அவரு இருக்கற வேலை எல்லாம் விட்டுட்டு கல்யாண வேலையில இவ்ளோ ஆர்வமா இருக்காரு?" எனக் கேட்டாள் மிருதுளா.

"எது கல்யாணம் பண்றதை வேலையில சேர்த்துட்டாங்களா? உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு கார்த்தி எப்படிதான் சமாளிக்க போறாரோ போ." என கதிரவன் கூறிச் செல்ல, "இந்த வாயை கொஞ்சம் குறைடி. அப்பதான் உருப்புடுவ." என்றாள் பவித்ராவும்.

"இப்ப நான் என்ன உருப்படாம போயிட்டேன். இவங்களுக்கு வேற வேலையே இல்ல." என்றபடி மிருதுளாவும் அடுத்த வேலையை பார்க்க சென்றாள். ஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஞாயிற்றுக்கிழமை விடியல் நல்லபடியாக ஆரம்பித்தது.

காலையிலேயே பாரியின் வீட்டினர் அனைவரும் வந்துவிட்டனர். அவர்களை கண்டதும் உற்சாகம் மேலிட சென்று வரவேற்றவள் அனைவரிடமும் நன்கு பழகினாள் மிருதுளா. வீட்டிலேயே வைத்து நிச்சயம் என்பதால் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே சுந்தரம் அழைத்திருந்தார்.

அவர்களே ஐம்பது பேருக்கு இருக்க, வாசலில் பந்தல் போட்டு நாற்காலிகளை போட்டு வைத்தனர். உணவகத்தின் சமையலறையிலே உணவு தயாராகிக் கொண்டிருந்தது. மூத்த பெண்மணி ஒருவர், "ஏன் மீனாட்சி. மாப்பிள்ளை பெரிய இடம்னு சொன்ன. ஆனா நிச்சயம் வீட்லயே வைச்சு இருக்கீங்க." எனக் கேட்டார்.

"இன்னைக்கு உறுதி பண்றதுதானே அத்தை. அதனால சிம்பிளாவே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. கல்யாணம் விமரிசையா பண்ணலாம்னு அவங்களுக்கு யோசனை." என மீனாட்சி விளக்கம் கொடுக்கவும், "ஆமாமா அதுவும் சரிதான்." என அவர் ஒத்துக் கொண்டுவிட, வந்திருந்த அனைவரின் பேச்சும் கார்த்திக் வீட்டை பற்றிதான் இருந்தது.

பத்து மணியளவில் கார்த்திக்கின் வீட்டினர் வந்து இறங்க, மொத்தமே ஏழு பேர்தான் அங்கிருந்து வந்திருந்தனர். ஆரத்தி எடுத்து மீனாட்சி அவர்களை உள்ளே அழைக்க அதன்பிறகு முறைப்படி சடங்குகள் ஆரம்பம் ஆனது. பிரபாவிற்கு இப்போதும் கூட ஆச்சர்யம்தான் கங்காதரன் ஒப்புக் கொண்டதில்.

அதைவிட மகிழ்ச்சியும் அதிகமாக இருந்தது நண்பனின் காதல் நிறைவேறியதில். எப்போதும் அவனைக் கண்டால் குத்தலாக பேசும் கங்காதரன் இன்று ஏனோ அமைதியாகவே இருந்தார். மாம்பழ வண்ணத்தில், அரக்கு நிற பார்டர் கொண்ட பட்டுப்புடவையில் சபையில் வந்து அமர்ந்த மிருதுளாவைக் கண்டதில் சிலையாகி இருந்தான் கார்த்திக்.

"டேய் கொஞ்சம் நார்மலா இருடா." என அவனது காதில் பிரபா கூற, "போடா. நீ கௌசியை பார்க்கும்போது நான் எதுவும் சொல்றேனா." என்றான் கார்த்திக். அவன் கூறியபிறகுதான், "ஆமா இந்த கௌசி இங்கதானே இருப்பேனு சொன்னா எங்க ஆளைக் காணோம்." என முணுமுணுத்தபடியே அவளைத் தேடி சென்றான்.

பிறகு, மிருதுளா சென்று நிச்சயப்புடவை மாற்றிவர, நலுங்கு வைத்து சம்பிரதாய முறைப்படி உறுதி செய்து முடித்தனர். நிச்சயத்தையும் கையோடு முடித்துவிடலாம் என பெரியவர்கள் கூறவும், அனைவரின் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக் கொள்ள, நிச்சயப் பத்திரிக்கை எழுதினர்.

அப்போது கங்காதரன், சில விவரங்களை கூறி, அதன்படியே நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட, அதன்படி இன்னும் பதினைந்தே நாட்களில் நகரின் முக்கிய மண்டபத்தில் திருமணம் வைப்பதாக இருந்தது. அப்போது பவித்ரா, "என்னம்மா சீக்கிரமா முகூர்த்தம் வைப்பாங்கன்னு சொன்ன. ஆனா பதினைஞ்சு நாள்ல எப்படி?" என்றாள்.

"இரு அப்பா பேசுவாங்க." என மீனாட்சி கூற, அதே போல சுந்தரமும் அதைப் பற்றி கேட்டார். கங்காதரனோ, "கல்யாண வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க ரெடியாகி கல்யாணத்துக்கு வந்தா போதும். இன்னும் ரெண்டு நாள்ல பத்திரிக்கை வந்திடும்." எனப் பேசியே அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டார்.

கார்த்திக்கும் இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. மிருதுளா சீக்கிரமாக அவள் வாழ்வில் வந்தால் அவனுக்கும் இன்னும் மகிழ்ச்சி என்ற நிலையில்தான் இருந்தான். ஆனால் நாயகிதான் 'எதற்கு இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டும். ஒரே மகனின் திருமணத்தை ஆற அமர நடத்தினால்தான் என்ன?' என யோசித்தவர் அதை கணவரிடம் கேட்டும் விட்டார்.

"நீ ஆசைப்பட்டதை விட பிரம்மாண்டமா இந்த கல்யாணம் நடக்கும். நீ கவலைப்படாத. எதை எப்படி பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும்." என்றவர், "நாளைக்கே ஜவுளி எடுக்கற வேலையை முடிச்சிடுங்க." ஈன உத்தரவு வேறு இட்டார். அதற்கு மேல் அவர் பேச்சே இறுதியானதாகி திருமண நாளும் குறித்துவிட்டனர்.

பிறகு உணவருந்தும்போது, "டேய் ஆனா இதெல்லாம் அநியாயம்டா. நீ மிருதுளாவை லவ் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு. எங்க கல்யாணத்துக்கே இன்னும் ஒரு மாசம் இருக்கு. ஆனா இப்ப உனக்கு கல்யாணமே நடக்கப் போகுது." என பிரபா புலம்பினான்.

கார்த்திக், "அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும் மச்சான்." எனும்போதே, அங்கு பரிமாற வந்தாள் கௌசி. "தங்கச்சி இங்க பாரும்மா. என்னை மாதிரி பொறுமையா கல்யாணம் பண்ணாம ஏன் அவசரமா கல்யாணம் பண்ணீக்கறன்னு கேட்கறான்." எனக் கோர்த்துவிட்டான்.

"சீக்கிரமா கல்யாணத் தேதி குறிக்காம ஏன் லேட் பண்ணாங்கன்னு கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட கொஞ்சிட்டு, இப்ப ஜாலியா இருக்கா. இருங்க இன்னும் ரெண்டு மாசம் தள்ளி வைக்க சொல்றேன்." என அவள் செல்ல, "ஹேய். நான் எப்போடி அப்படி சொன்னேன். அவன் சும்மா சொல்றான்." என்ற பிரபா அவள் பின்னாடியே ஓடினான்.

கார்த்திக்கும் சிரித்தபடியே எழுந்து கைகழுவ செல்ல, அங்கு நின்றிருந்தாள் மிருதுளா. "அப்பாடா. நீ இங்கதான் இருக்கியா? இன்னைக்கு தனியா பார்க்கவே முடியாதுன்னு நினைச்சேன். எனிவே யூ ஆர் லுக்கிங் வெரி ஃபியூட்டிபுல்." என பாராட்ட, அவள், "தேங்க்ஸ்." எனும்போதே பாரியும் கைகழுவ அங்கு வந்தான்.

"ஓ மீட்டிங்கா." என அவன் கேட்க, "இல்ல சும்மாதான்." என்றவள், "பாரி இங்க வாங்களேன்." என அழைத்து அவனை கார்த்திக்கு அறிமுகம் செய்து வைத்தாள். கார்த்திக்கும் ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டு செல்ல, பாரி, "என்னை இப்ப அவர் கரடின்னு நினைச்சிருப்பாரு. ஏன் மிருது?" எனவும், இவள் சிரித்தாள்.

சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பி செல்ல, வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டது. மிருதுளா சென்று எட்டிப்பார்க்க, தகிலனும், சுகமதியும் வந்திருந்தனர். இவள் ஆவலாக வரவேற்று சுகமதியிடம் அறிமுகம் ஆகிக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு வந்த பாரி அவர்களை அங்கு கண்டதும் அதிர்ந்து உள்ளே திரும்பி பார்த்தான்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 29

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️ஒருவழியா நிச்சயம் முடிஞ்சது, கார்த்திக் கொஞ்சம் relax ஆ இருப்பான் ஆனா மிருது அவன்கூட சகஜமா பேசணுமே அதுதான் இடிக்குது 🤔🤔🤔🤔
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️ஒருவழியா நிச்சயம் முடிஞ்சது, கார்த்திக் கொஞ்சம் relax ஆ இருப்பான் ஆனா மிருது அவன்கூட சகஜமா பேசணுமே அதுதான் இடிக்குது 🤔🤔🤔🤔
Thanks sister..
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
இந்த கங்காதரன் ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் வைக்க சொல்றாங்க🤔அடேய் கார்த்தி இப்படியா கௌசிகிட்ட பிரபாவை கோர்த்து விடுவ🤣🤣
 
Top