• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 2

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
பாரி கடந்த காலத்தை நினைத்து பார்த்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, அதற்குள் அவனது வீடு வந்ததால் நினைவுகள் தடைபட்டது. அவனது மனம் புரிந்தவர் போல எழிலரசி அவனுக்கு உணவு எடுத்து வைக்க, அவனும் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

"ஊர்ல யாரையாவது பார்த்தியாப்பா." என அவர் கேட்க, "ம்ம் கல்யாணத்துக்கு போயிட்டு எப்படி பார்க்காம இருக்க முடியும்?" என்றான் பொதுவாக. ஆனால் அவரோ, "யாரை எல்லாம் பார்த்த?" என மீண்டும் கேட்க, "நீ யாரைக் கேட்கறன்னு சொல்லும்மா. அப்பறம் நான் பதில் சொல்றேன்." என்றான் பாரி.

"வேற யாரை நான் கேட்கப்போறேன். அந்த ஊர்ல இன்னமும் எனக்கு உறவுன்னு இருக்கறது எங்க அண்ணன்தானே. அவரைத்தான் கேட்டேன்." என எழிலரசி கூற, "இல்லம்மா. நான் அவங்க யாரையும் பார்க்கல. கல்யாணத்துக்கு கூட வந்த மாதிரி தெரியலயே." என யோசித்தான் பாரி.

"ஏன் வரலன்னு தெரியலயே. சரி நான் பேசிக்கறேன்." என்றதும், இவனும், "சரிம்மா. நானும் கடைக்கு கிளம்பறேன்." என்றபடி வண்டியை எடுத்தவன் நேராக தங்களது கடைக்கு சென்றான். அங்கிருந்த அவனது தந்தை குலசேகரன், "வாப்பா இப்பதான் வந்தீயா? ரத்தினத்தை எதுவும் பார்த்தீயா?" எனக் கேட்டார்.

"இல்லப்பா. அவங்க வர்றதுக்குள்ள அங்கிருந்து கிளம்பிடனும்னு நினைச்சு வந்துட்டேன். இன்னும் அவங்களுக்கு கோபம் குறைஞ்சிருக்காது." என பாரி கூறவும், அதுவும் சரிதான் என நினைத்துக் கொண்டவர் அதன்பிறகு அமைதியாகி, "சரிப்பா நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்." என கிளம்பினார்.

பாரியோ அவரிடம், "நான் மதியத்துக்கு மேல அந்தக் கடைக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்ப்பா." எனக் கூற, "உன் இஷ்டம்." என்றவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் சரியாக மதிய உணவிற்கு பிறகு அவர் மீண்டும் கடைக்கு வரவும், பாரியும் நிம்மதியாக கிளம்பி சென்றான் அவனும், தகிலனும் நடத்தும் கடைக்கு.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டது கடைப்பக்கம் சென்றே. நடுவில் ஓரிரு முறை தகிலனை பார்த்திருந்தாலும் கடைக்கு செல்லும் எண்ணம் மட்டும் வரவில்லை. அப்போதும் ஒருமுறை பார்த்தபோது தகிலன், "மச்சான் உனக்கு என் மேலதானேடா கோபம். ஆனா இந்த கடை முழுக்க உன்னோட உழைப்பு இருக்கு. நான் வேணும்னா வெளில போயிடறேன்." என்றான்.

"அப்படி ஒன்னும் நீ விட்டுத்தந்து இந்த கடையை நடத்தனும்னு எனக்கு அவசியம் இல்ல. வேற கடையே இல்லையா என்ன எனக்கு. இதை விட பெரிய விசயம்லாம் விட்டுட்டு நிற்கறேன். இந்த கடை எல்லாம் எனக்கு பெருசே இல்ல. பேசாம போயிடு. உண்மையிலேயே அந்த கடை மேல நம்பிக்கை இருந்தா ஒழுங்கா நடத்தற வழியை மட்டும் பாரு." என்றான் பாரி கோபமாக.

ஆனால் மனதிலோ, 'இந்தக் கடையும் இல்லனா நீ வேல தேடி கஷ்டப்படனும் மச்சான். என்னதான் உன் மேல கோபம் இருந்தாலும் இப்போதைக்கு இது உன்கிட்ட இருக்கறது உனக்கு ஒரு பிடிப்பா இருக்கும். அதனால கொஞ்ச நாளைக்கு எல்லாம் அப்படியே இருக்கட்டும்.' என நினைத்துக் கொண்டான்.

அதே நினைவில் அங்கு சென்று பார்க்க, அவர்கள் கடை பூட்டியிருந்தது. பொதுவாக அவர்களது கடையின் விடுமுறையை முன்கூட்டியே தீர்மானிப்பது வழக்கம். அதனால் முதல்நாளே, விடுமுறை அறிவிப்பையும் எழுதி வைத்துவிட்டுதான் கிளம்புவர். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் அங்கு இல்லை. 'திடீரென கடையை மூட வேண்டிய அவசியம் என்ன?' என யோசித்தவன் அருகில் விசாரித்தான்.

"என்னனு எனக்குமே தெரியல தம்பி. நேத்துக் கூட பேசிட்டு இருந்தோம். ஆனா எதுவும் சொல்லல. நீ வேணா ஃபோன் பண்ணி பாரேன்." எனக் கூறவும் பாரியும் அழைப்பு விடுக்க, நீண்ட நேரமாக அழைப்பு சென்று நின்றது. அதைக் கூறவும், "பேசாம வீட்டுக்கு போய் பாருங்க தம்பி." என்றார் அவர்.

அவனது வீடு தெரியாதே என யோசித்தவனுக்கு, அவன் என்றோ அலைபேசியில் முகவரியை அனுப்பி வைத்தது நினைவுக்கு வர, இவனும் தயக்கத்தோடே அங்கே சென்றான். ஆனால் இவனது நேரமோ என்னவோ வீடும் பூட்டி இருந்தது. மீண்டும் அலைபேசியில் அழைப்பு விடுத்து பார்த்தும் பலனில்லை.

அதுவரையில் தைரியமாக இருந்தவனுக்கு, வேறு ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்ற எண்ணம் வர தவிக்க ஆரம்பித்தான். ஆனால் அவனை நீண்ட நேரம் தவிக்க விடாமல் ஆட்டோவில் வந்து இறங்கினான் தகிலன். அவனுக்கு பின்னாலேயே பாரியின் தங்கை சுகமதியும்.

மிருதுளாவிற்கு அன்று கல்லூரியில் பரீட்சை இருக்கவும், அதை எழுத சென்றாள். தேர்வு மையம் சற்றே தொலைவில் இருக்கவும், பேருந்திலேயே செல்லலாம் என முடிவு செய்தாள். அவளோடு உடன் சென்றாள் அவள் தோழி பிறைநிலா. அவளும் இவளுடன்தான் படிக்கிறாள்.

ஆனால் மிருதுளா போல அல்லாமல் ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்று கொண்டே. இருவரும் நல்லபடியாக தேர்வு எழுதி முடித்து வெளியில் வர, அங்கு அந்த கல்லூரிக்கு எதிரே ஒரு கடையில் இருவருக்கும் பிடித்தமான மதுரையின் மயக்கும் பானமான ஜிகிர்தண்டா கடை இருந்தது.

பாலுடன், கடற்பாசியும் இன்ன பிற பொருட்களும் போட்டு கோடையின் வெப்பத்தை போக்க குளிர்ச்சியாக பரிமாறப்படுவதுதான் ஜிகிர்தண்டா. இன்று பெரும்பாலான பகுதிகளில் இந்த பானம் கிடைத்தாலும், மதுரையில் கிடைக்கும் பானத்தின் சுவையே தனி. இருவரும் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொண்டு திரும்பினர்.

அடுத்த நொடியே இருவரது பானங்களும் தரையில் கொட்டிக் கிடந்தது. என்ன நடந்தது என நிமிர்ந்து பார்க்க ஒருவன் அதைத்தட்டி விட்டு ஓடினான். இவர்களை திரும்பி பார்த்து சாரி என சைகை காட்டிவிட்டே ஓட, அவன் பின்னால் ஒருவன் துரத்திக் கொண்டு ஓடி வந்தான்.

ஏதோ பிரச்சனை போல என நினைத்த மிருதுளா, பின்னால் ஓடிவந்தவனை தடுக்க, அவனோ கேள்வியாக அவளைப் பார்த்தான். "அறிவில்லயா உங்களுக்கு. ப்ப்ளிக் பிளேஸ்ல இப்படி பிரச்சனை பண்ணீட்டு இருக்கீங்க." என திட்ட ஆரம்பித்துவிட்டாள். அதைக்கண்ட முன்னால் ஓடியவன் மீண்டும் இவர்களிடம் வந்தான்.

அதற்குள் அங்கு ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. அதை அறியாமல் மிருதுளா திட்டிக் கொண்டே இருக்க, "ஹலோ. கொஞ்சம் ஸ்டாப் பண்றீங்களா? இப்ப என்ன உங்க ஜிகிர்தண்டா கொட்டிடுச்சு. அவ்ளோதானே. அதுக்கு ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க? நான் உங்களுக்கு வேற ஆபர் பண்றேன்." என்றான் அவன்.

"நான் அதுக்கு ஒன்னும் சத்தம் போடல. எதுக்கு அவரை துரத்திட்டு போனீங்க? அதைக் கேட்டேன்." என மிருதுளா கேட்க, "சிஸ்டர் சிஸ்டர். ஏன் இவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கீங்க. நானும் அவனும் குளோஸ் ப்ரண்ட்ஸ். சும்மா விளையாடிட்டு இருந்தோம்." என்ற மற்றொருவன், சுற்றி இருந்த கூட்டத்தையும் கலைய வைத்தான்.

அதில் இன்னும் அவளுக்கு கோபம் வர, "விளையாட இது என ப்ளே கிரவுண்டா?" என சத்தம் போட, "ஹலோ ஹலோ மறுபடி ஸ்டார்ட் பண்ணீடாதீங்க. ஒரு ஜூஸ்க்கு இவ்ளோ ரியாக்ஷன் ரொம்ப ஓவர்." என்றான் எதிரில் இருந்தவன்.

"எது சாதாரண ஜூஸா. சாப்பாடை வேஸ்ட் பண்றதே தப்புனு நினைக்கறவ நானு. இதுல வேணும்னு தட்டி விட்டுட்டு பேச்சு வேற." என மறுபடி மிருதுளா ஆரம்பிக்க, பிறையோ, "ஹேய். வேணாம்டி. வா போகலாம்." என இழுத்துக் கொண்டு போக, "யார்டா இவ. இதுக்கு முன்னாடி இந்தப்பக்கம் பார்த்ததே இல்லையே." என யோசித்தான் சண்டையிட்ட கார்த்திக்.

"நம்ப காலேஜ் இல்ல மச்சி. இன்னைக்கு நிறைய பேர் எக்ஸாம்க்கு வந்திருந்தாங்க இல்ல. அது மாதிரி வந்திருக்கலாம்." என்றான் தட்டி விட்ட பிரபாகரன். "ஓ அப்ப மறுபடி பார்க்க முடியாதோ!" என கார்த்திக் யோசித்தவாறே கூற, "என்னடா நீ கோபப்படுவன்னு பார்த்தா ரசிக்கற மாதிரி இருக்கே." என்றான் பிரபாகரன்.

"அதெல்லாம் இல்லடா வா. இந்த பிரச்சனையில டிரீட்டை மறக்க மாட்டேன். வா ஒழுங்கா." என்றபடி அழைத்து சென்ற கார்த்திக்கும், பிரபாகரனும் இதே கல்லூரியில்தான் படித்தனர். அப்போது உருவான நட்பு இருவருக்குள்ளும் இன்றுவரை அழகாக இழையோடிக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் பெரிய வீட்டு பையன் என்பதால் படித்து முடித்ததும் குடும்பத் தொழில் ஒன்றை எடுத்து வெற்றிக்கரமாக நடத்த, பிரபாவோ அதே கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தான். இருந்தும் வாரம் ஒரு முறையாவது இருவரும் சந்தித்து விடுவர்.

பிரபாவுக்கு இப்போது வீட்டில் பெண்பார்த்து திருமணம் பேசி முடித்துள்ளனர். அதைத் தெரிந்து கொண்ட கார்த்திக், என்னிடம் ஏன் கூறவில்லை என செல்லமாக கோபித்துக் கொண்டுதான் அவனை அடிக்க வந்தான். "கன்பார்மா தெரிஞ்சா சொல்லலாம்னு நினைச்சேன் மச்சான்." என்றான் பிரபாவோ.

"ஓ. ஏன் பத்திரிக்கை அடிச்சிட்டு சொல்ல வேண்டியது தானே? பொண்ணு பார்க்க போகும்போதே கூட்டிட்டு போகனும்னு சொல்லி இருக்கேன்ல." என கார்த்திக் கேட்க, "எதுக்கு மச்சி வம்பு. காலேஜ் படிக்கும்போதே எல்லா பொண்ணுங்களும் உன்னைத்தான் சைட் அடிப்பாங்க. அதான்." என விளையாட்டாக கூறினான் பிரபா.

ஆனால் உண்மைக்காரணம் அதுவல்ல என்பது கார்த்திக்கும் தெரியும். என்னதான் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும், சமுதாய மதீப்பீட்டில் கார்த்திக்கை விட பிரபா சற்று குறைவுதான். அவனோடு பழகுவது கார்த்திக்கின் தந்தைக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை என பிரபாவிற்கு நன்கு தெரியும்.

இதுபோன்ற விசயங்களுக்கு உடன் அழைத்து சென்றால், கார்த்திக்கின் செல்வ நிலையை பயன்படுத்தியே பெண் பார்த்து முடித்ததாக கூறினாலும் கூறுவார் என்பதால்தான் அப்படி கூறினான். கார்த்திக் அதை புரிந்து கொண்டாலும், "சரி பொழைச்சு போ. ஆனா என் தங்கச்சி டீடெயில்ஸ் குடு." என வாங்கிக் கொண்டே கிளம்பினான்.

பேருந்தில் ஏறிய மிருதுளாவிற்கோ, இன்னும் முகம் கடுகடுவெனவே இருக்க, "ஹேய் விடு புள்ள. இப்ப எதுக்கு நீ இவ்ளோ கோபப்படறவ. அதான் தெரியாம நடந்ததுனு சொல்லிட்டாங்கல்ல." என்றாள் பிறை. சற்றே தளர்ந்தவள், "என்னனு தெரியலடி. யாராவது சாப்பாட்டை பத்தி அசால்டா பேசினாலே ரொம்ப கோவம் வருது." என்றாள் மிருதுளா.

"அப்பன்னா எதுக்கும் உன் கல்யாணத்தப்ப இதையும் சொல்லிடனும். ஏன்னா சோறு நல்லா இல்லனு எங்கண்ணன் திட்டிட்டு கையை கழுவிட்டா, வேஸ்டா போயிடுச்சுனு நீ விசிறிடுவ போலவே." என கிண்டலாக பிறை கூற, "ஏன்டி அப்ப நான் ஒழுங்கா சமைக்க மாட்டேனு சொல்றீயா?" எனக் கேட்டாள் மிருதுளா.

"இருந்தாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரி டேஸ்ட் இருக்காதுல்ல. அதான் சொன்னேன்." எனவும், "அப்படீன்னா உங்க நொன்னனையே பொங்கி போட சொல்லு." என நொடித்துக் கொண்டாள் மிருதுளா. இப்படியே பேசியதில் மனம் சற்றே மாற, வீட்டுக்குள் வருவதற்குள் கல்லூரியில் நடந்த நிகழ்வை மறந்தே போயிருந்தாள் மிருதுளா.

ஆனால் கார்த்திக் அதை எளிதில் மறக்கப் போவதில்லை என்பதையும், அதனால் மிருதுளாவின் வாழ்வில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றத்தையும் பாவையவள் அறிந்திருக்கவில்லை.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 30

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_2

பாரி நீ ரொம்ப நல்லவன் டா.தகிலன் மேல கோவம் இருந்தாலும் கடையை அவனுக்கு விட்டுக்கொடுத்திருக்க பாரு.அங்க நின்னுட்ட டா❣️❣️அடேய் இந்த ஜிகிர்தண்டா பார்ட்டி வில்லனா வந்துருவோனா😤😤தகிலன்,சுகமதி எங்க போய்ட்டு வராங்கனு சொல்லலையே ஆறே😌😌😌
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_2

பாரி நீ ரொம்ப நல்லவன் டா.தகிலன் மேல கோவம் இருந்தாலும் கடையை அவனுக்கு விட்டுக்கொடுத்திருக்க பாரு.அங்க நின்னுட்ட டா❣️❣️அடேய் இந்த ஜிகிர்தண்டா பார்ட்டி வில்லனா வந்துருவோனா😤😤தகிலன்,சுகமதி எங்க போய்ட்டு வராங்கனு சொல்லலையே ஆறே😌😌😌
Thanks sister
 
Top