• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையே நீ என் தாரகையே! - அத்தியாயம் 3

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
பாரி யோசனையோடே நின்றிருக்க, ஆட்டோவில் வந்து இறங்கினர் தகிலனும், சுகமதியும். இறங்கியதும் பாரியை கண்டதில் மகிழ்ச்சியுடன் அருகில் வந்து, "மச்சான்." என தகிலனும், "அண்ணே." என சுகமதியும் கைகளை பிடித்துக் கொள்ள கண்களில் நீர் சுரந்தது.

பாரியும் கிட்டத்தட்ட உணர்வுகளின் பிடியில்தான் இருந்தான். ஆனால் அவன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. பொதுவாக அண்ணன், தங்கைகளுக்குள் செல்ல சண்டைகளும், கோபங்களும் இயல்பான ஒன்று. ஆனால் பிறந்ததில் இருந்து அப்படிக்கூட சண்டை வந்ததில்லை அவர்களுக்குள்.

காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை அவர்கள் வீட்டில் பாசமலர் படம்தான் ஓடும். எழிலரசி கூட, "டேய். என்ன இருந்தாலும் அவ இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணுடா. இவ்ளே செல்லம் குடுக்காத. அங்க போய் அப்பறம் ஒரு வேலையும் தெரியலன்னு சொல்வாங்க." என அவ்வபோது கண்டிப்பார்.

ஆனால் பாரியோ, "அம்மா எவ்ளோ செல்லமா வளர்ந்தாலும் கல்யாணத்துக்கு அப்பறம் தானாவே எல்லா பொறுப்பையும் எடுத்துப்பாங்க. அவ நம்ப வீட்ல இருக்கும்போதுதான் ப்ரீயா எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருக்க முடியும். அதை அனுபவிக்க விடும்மா." எனக் கூறி அவர் வாயை அடைத்து விடுவான்.

அப்படி பார்த்து பார்த்த வளர்த்த தங்கையை பிரிந்து எப்படி இத்தனை நாட்கள் பாரி இருந்தான் என்பதே அவனுக்கு ஆச்சர்யம்தான். அதை நினைக்கும்போதே பிரிவதற்கான சூழலை உருவாக்கியதே இவள்தானே என்ற கோபமும் சேர்ந்து வந்தது.

முதலில் தன்னை மீட்டுக் கொண்ட தகிலன், "சுகா. மச்சானை உள்ள கூப்பிடு." என்றவாறே கதவை திறக்க, உடனே பாரி, "கடை சாவி வேணும். அதுக்காகத்தான் வந்தேன்." எனவும், "சரி மச்சான் எடுத்துட்டு வரேன். நீ உள்ள வா. சேர்ந்தே போகலாம்." என அழைத்தான்.

பாரியோ, "இல்ல நான் வரல. சாவி மட்டும் போதும்." என்றவன் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான் உடன்பிறந்தவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல். அதைக் கண்ட சுகமதி வேகமாக உள்ளே சென்று அழ ஆரம்பிக்க, யாரை சமாதானம் செய்வது என யோசித்த தகிலன் சுகமதியிடம் சென்றான்.

"சுகா. இன்னும் உங்க அண்ணனுக்கு நம்ப மேல இருக்கற கோபம் போகலன்னு நினைக்கறேன். ஆனா பரவால்ல. நம்பளை தேடி வந்திருக்கான்ல. சீக்கிரமே சரியா போய்டும். என்ன இருந்தாலும் நாம பண்ணது தப்புதானே. உடனே எல்லாம் சரியாகிடுமா என்ன?" எனக் கேட்டு அவளை ஆறுதல்படுத்தினான் தகிலன்.

"இல்லங்க. நாம பண்ண தப்புக்காக அண்ணன் இவ்ளோ கோபப்படல. அண்ணனை நம்பி இந்த விசயத்தை சொல்லி இருக்கனும். சொல்லாம, நம்பாம நாமளா எல்லா முடிவையும் எடுத்துட்டோம்னு தான் கோபம்." என சரியாக தனது அண்ணனை கணித்து கூறினாள் அவனது பாசமிகு தங்கை.

அவளை கண்ட பொழுதில் பாரியின் மனமும் அதையேத்தான் யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் சற்று வேறு விதமாக. 'அவளிடம் ஒரு அண்ணனை போலவோ நடந்து கொண்டோம். ஒரு தோழனை போல இருந்தேனே. எந்த ஒளிவு மறைவும் இல்லாத தூய நட்பினை ஒத்துதானே நமது உறவும் இருந்தது.

பிறகு எந்த கணத்தில் அவளுக்கு நான் அண்ணனாகி போனேன். வாழ்வில் இத்தனை பெரிய முடிவை எடுக்கும்போது என்னை அவள் தேடவே இல்லையா.' இந்த சிந்தனைதான் அவனை மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. சாலையில் அவன் பயணித்தபோது பழைய நினைவுகளும் கேட்பாரின்றி கூடவே வந்து கொண்டிருந்தது.

சுகமதி, கல்லூரிப் படிப்பை முடித்ததும், பணிக்கு செல்லலாமா இல்லை மேல்படிப்பு படிக்கலாமா என்ற யோசனையில் இருக்க அவர்களது வீட்டிலோ இரண்டும் இல்லாமல் திருமணம் செய்துவிடலாம் என்ற முடிவினை எடுத்தனர். ஆனால் முதலில் இது சுகமதிக்கு தெரியாது.

அவள்தான் தகிலனுடன் தனியொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாளே. அன்றும் அதுபோல அவள் கோவிலுக்கு சென்றிருக்க, தகிலன் அவளுக்காக காத்திருந்தான். அவன் முகம் லேசாக வாடியிருக்க, "என்னாச்சு தகிலா. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" எனக் கேட்டாள் சுகமதி.

"உனக்கு அப்ப இன்னும் விசயம் தெரியாதா?" என அவன் கேட்கவும், "உங்க வீட்ல உனக்கு கல்யாணம் பண்றதா முடிவு பண்ணியிருக்காங்க." என கவலையாக கூறவும், இவளோ பதிலுக்கு சிரிக்க ஆரம்பித்தாள்.

"எனக்கு கல்யாணம் பண்ண போறாங்க. இன்னைக்கு இதை சொல்லி விளையாட முடிவு பண்ணியிருக்கீங்களா? அது எப்படி எனக்கு தெரியாம, என்னைக் கேட்காம முடிவு பண்ணுவாங்க?" எனக் கேட்டாள் சுகமதி. தகிலன் அதற்கு, "ஹேய் ஏற்பாடு பண்ணீட்டாங்கன்னு சொல்லல. அடுத்து உனக்கு கல்யாணம் பண்ணீடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க." என்றான்.

அப்போதுதான் முகம் லேசாக மாற, "உனக்கு யாரு சொன்னாங்க?" எனக் கேட்டாள் சுகமதி. "வேற யாரு உங்க அண்ணன்தான். ஒரு முக்கியமான வேலை விசயமா பாரி சென்னை போக வேண்டியிருக்கு. அதோட இப்ப மாப்பிள்ளை பார்க்கற வேலையும் சேர்ந்திடுச்சுனு பேச்சு வாக்குல விசயத்தை சொன்னான்." என்றான்.

"ஓ. அப்படியெல்லாம் நடக்காது. நான் வீட்ல பேசிக்கறேன்." என்றபடி வீட்டுக்கு சென்ற சுகமதி, தான் மேலே படிக்கப் போவதாக கூற, "உன்னை யாரு படிக்க வேணாம்னு சொன்னா. தாராளமா படி." என குலசேகரன் கூறவும், "அப்ப சும்மாதான் பேசிட்டு இருக்காங்க போல." என நினைத்தவள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பித்து வைத்தாள்.

அங்கு இடமும் கிடைத்துவிட, ஆர்வமுடன் கல்லூரிக்கு சென்றாள்.அவளது மலர்ச்சிக்கு படிப்பு ஒரு காரணம் என்றால் படிப்பு முடியும் வரை திருமணத்தை பற்றி பேச மாட்டார்கள் என நினைத்தது இன்னோரு காரணம். ஆனால் அவள் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக கல்லூரி தொடங்கி மூன்று மாதங்களிலே அது நடந்தது.

அன்று வீட்டுக்கு வரும்போதே குலசேகரன் உற்சாகமாக இருந்தார். அந்த நேரத்தில் பாரி வேலை விசயமாக சென்னை சென்றிருந்தான். சுகமதி வீட்டிற்கு வந்ததும், "வாடா. வாடா. உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்றேன். நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க." என்றார் அவர்.

அவளோ அதிர்ச்சியடைந்து, "அப்பா. நான் இன்னும் படிப்பை முடிக்கலயே." என திணறியபடி கூற, "அதனால என்ன கல்யாணம் பண்ணீட்டு படிக்கட்டும்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்களாம். அதனால நீ ஒன்னும் பயப்பட வேண்டாம்." என்றார் எழிலரசி.

சுகமதி, "இல்லம்மா. அதுவந்து இப்ப கல்யாணம் வேண்டாம்." எனக் கூற, "உன் வயசு வரும்போது உங்கப்பனுக்கே நாங்க கல்யாணம் பண்ணி வைச்சுட்டோம். உனக்கு முடிஞ்சாதானே உங்கண்ணனுக்கு பார்க்க முடியும். அவனுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதில்லத்தா." என்றார் அவளது அப்பத்தா.

"பொண்ணு பார்க்கதான்டா வராங்க. வந்து பார்த்துட்டு போனதுக்கு அப்பறமா தான் முடிவு பண்ண போறோம். நான் பார்த்திருக்க பையனை கண்டிப்பா உனக்கு பிடிக்கும். நீ கவலைப்படாம இரு." என குலசேகரன் கூறவும், அதற்கு மேல் வாதாடாமல் சரி என உள்ளே சென்றவள் தகிலனுக்கு அழைத்து விவரம் கூறினாள்.

"நீ அவங்க வர்றதுக்கு முன்னாடியே வந்து பேசு தகிலா." என மதி கூற, "சுகா. பொறுமையா இரு. பொண்ணுதானே பார்க்க வராங்க. நான் எப்படியாவது பாரிக்கிட்ட பேசறேன்." என்றான் அவன். "அண்ணாக்குதான் காலே போகலயே. எப்படி பேசுவ?" எனக் கேட்டாள் மதி.

ஏனென்றால் இருநாட்களாக பாரியின் அலைபேசிக்கு இணைப்பே கிடைக்கவில்லை. அவனது அலைபேசியில் ஏதோ பிரச்சனை எனவும், தானே கூப்பிடுவதாகவும் இன்னொரு எண்ணில் இருந்து வீட்டுக்கு அழைத்து கூறி இருந்தான். "நான் அவன் வேலை விசயமா போன இடத்துல பேசிப் பார்க்கிறேன்." என வைத்தான் தகிலன்.

ஆனால் அடுத்த நாளும் பாரியை அழைக்க முடியாமலே போக, பெண் பார்க்கும் வைபமும் நடந்து முடிந்து விட்டது. அவர்களுக்கு மதியை மிகவும் பிடித்து விட்டது. அதை விட முக்கியமான விசயம் என்னவென்றால் மாப்பிள்ளையின் தந்தை இரத்தினம் குலசேகரனின் உற்றத் தோழன்.

அந்த ஒரு காரணமே மேற்கொண்டு பேச போதுமானதாக இருக்க, அவர்கள் வீட்டில் பெண்ணின் சம்மதத்தை கேளுங்கள் எனக் கூறும்போதும், "அதெல்லாம் நீங்க கவலையே படவேண்டாம். என் விருப்பம்தான் என் பொண்ணு விருப்பமும்." என முடித்துவிட்டார் குலசேகரன்.

அவர்களை பொறுத்தவரை மதியின் மீது எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை. படிப்பை நிறுத்தி விடுவார்களோ என நினைத்து பயப்படுகிறாள் என்றே நினைத்தனர். அதனால் அவள் திருமணம் வேண்டாம் எனக் கூறும்போது,
மாப்பிள்ளையின் படிப்பு, வேலை, குணம், அவர்களின் குடும்பம் பற்றி பேசி மதியை ஒப்புக்கொள்ள வைக்கும் முடிவில்தான் இருந்தனர்.

மதியின் சம்மதம் இல்லாமலே அன்றே நிச்சயத்திற்கும் நாள் குறித்துவிட்டனர். அவள் கலங்கி நிற்க, பாரி அழைப்பு விடுத்தான். அவனிடம் மகிழ்ச்சியோடு விசயத்தை சொன்ன குலசேகரன் இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயம் இருப்பதால் சீக்கிரமா வேலையை முடித்துக் கொண்டு வருமாறு கூறினார்.

பிறகு மதியிடம் பேசும்போது, "மதி. உனக்கு சந்தோஷம்தானேடா." எனக் கேட்க, அவளோ எப்படி விசயத்தை கூறுவது என தயங்கி மௌனமாக இருக்க, அதை வெட்கம் என எடுத்துக் கொண்ட பாரியோ, "சரி நான் சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு வந்திடறேன். வந்ததுக்கு அப்பறமா எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்." என வைத்து விட்டான்.

அதற்கு அடுத்த நாளே தகிலனை பார்த்த மதி, "இதுக்கு மேலயும் என்னால வெயிட் பண்ண முடியாது. இன்னைக்கே நான் அப்பாக்கிட்ட பேசத்தான் போறேன்." என்றவள் வீட்டுக்கு வரும்போது, "எம்புட்டு தைரியம் இருந்தா அந்த கழுதை வேற சாதிக்கார பையனை வந்து காதலிக்கறேனு என்கிட்டயே சொல்லுவா." என சத்தம் கேட்டது.

அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்தான் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார் குலசேகரனிடம். "விடுங்க அண்ணே. கோபப்படாதீங்க. அடுத்து என்னனு பார்க்கலாம்." என எழில் கூற, "அதெல்லாம் பார்த்துட்டேன். இன்னும் இரண்டு நாள்ல என் தங்கச்சி பையனோட கோவில்ல வைச்சு கல்யாணம்." என்றார் அவர்.

"அப்படித்தான் பண்ணனும். இந்த காலத்து பிள்ளைங்க முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே காதல் கீதல்னு வந்து நிக்குதுங்க. நாம எல்லாம் அந்த காலத்துல பெத்தவங்க பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இல்லாமயா போயிட்டோம்." என மதியின் பாட்டி வேறு ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்.

அதோடு இல்லாமல், "அதனால தான் நாங்க எல்லாம் படிப்பு முடிச்ச கையோட கல்யாணம் பேசிட்டோம். எதுக்கும் ஒரு வரைமுறை இல்ல. நம்ப வீட்டு மானம் போகாம நாமதான் பார்த்துக்கனும். நீ கல்யாணத்தை நடத்துப்பா. எவனும் வம்புக்கு வராம என் மவன் பார்த்துக்குவான்." என உத்திரவாதம் வேறு அளித்தார்.

குலசேகரன் அதற்கு தலையாட்ட, வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மதிக்கு தலையே சுற்றியது. தகிலனும் அவளும் வேறு வேறு சாதி என்பதே அவளுக்கு அப்போதுதான் உறைத்தது.

காதலுக்கு சம்மதம் வாங்கலாம் என நினைத்தவளுக்கு சாதி ஒரு தடையாக இருக்கப்போகிறது என நினைத்தவள் உறுதியாக ஒரு முடிவை எடுத்துவிட்டு வீட்டுக்குள் வந்தாள். விளைவு பாரி ஊரில் இருந்து வீட்டுக்கு வரும்போது அவனின் செல்லத்தங்கை வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
 

Attachments

  • IMG-20220404-WA0001.jpg
    IMG-20220404-WA0001.jpg
    147.9 KB · Views: 29

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_3

புரிஞ்சா சரி😤😤அண்ணனை நம்பி சொல்லிருக்கணும் சுகமதி.போன இடத்துலே பாரிக்கும் பிரச்சனையா🤕🤕இவ்வளோ தூரம் வந்தப்புறம் பாரி உனக்கு சம்மதமானு கேட்கும்போது மௌனமா இல்லமா சொல்லிருந்தா சுபம் போட்ருக்கலாம்😜😜😜.கிடைச்ச அந்த கொஞ்ச நேரத்தை மதி யூஸ் பண்ணி பாரி கிட்ட சொல்லிருக்கலாம்🙆🙆மதி மௌனமா இருக்க,பாரி அதை வெக்கம்னு நினைக்க, எஸ்கேப் ஆக,குடும்பமே தலைகுனிய🥱🥱😤😤
 

Arasalaaru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2022
Messages
82
நல்லா போகுது சகோ
 

தென்பெண்ணை ஆறு

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 5, 2022
Messages
73
#காரிகையேநீஎன்தாரகையே
#தென்பெண்ணைஆறு
#அத்தியாயம்_3

புரிஞ்சா சரி😤😤அண்ணனை நம்பி சொல்லிருக்கணும் சுகமதி.போன இடத்துலே பாரிக்கும் பிரச்சனையா🤕🤕இவ்வளோ தூரம் வந்தப்புறம் பாரி உனக்கு சம்மதமானு கேட்கும்போது மௌனமா இல்லமா சொல்லிருந்தா சுபம் போட்ருக்கலாம்😜😜😜.கிடைச்ச அந்த கொஞ்ச நேரத்தை மதி யூஸ் பண்ணி பாரி கிட்ட சொல்லிருக்கலாம்🙆🙆மதி மௌனமா இருக்க,பாரி அதை வெக்கம்னு நினைக்க, எஸ்கேப் ஆக,குடும்பமே தலைகுனிய🥱🥱😤😤
Thanks sister..
 
Top