• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கொழும்பு மாநகரம் வழமைபோல வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

மழை நாட்கள் என்ற போதும் கூட சூரியன் இரண்டு நாட்களாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.

கொழும்பு நகரத்தின் மத்தியிலிருந்து வடக்காகச் சிறிது தூரத்தில் அமைந்திருந்த புறநகர்ப் பகுதியான வத்தளையில், நடுநாயகமாக இரட்டை மாடிகள் கொண்ட வீடொன்று என்னைப் பார் என் அழகைப்பார் என்பது போல நிமிர்ந்து நின்றிருந்தது.

புவியரசனின் இரண்டாவது அண்ணியான மீனாட்சியின், தந்தையின் வீடு இது தான்.

அந்த வீட்டின் மாடியில் நின்று சுற்றுப்புறத்தை வெறித்துக் கொண்டிருந்தான் புவியரசன்.

மீனாட்சிக்குத் திருமணம் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தான் இந்த வீட்டிற்கு நிரந்தரமாகக் குடி வந்திருந்தார் மீனாட்சியின் அப்பா கங்கையமரன்.

கொழும்பில் சொந்தமாக வீடு வைத்திருந்தாலே அவர்களுக்கென்று ஒரு தனி மரியாதை கொடுப்பார்கள் சில உறவினர்.

அந்த வகையில் கங்கையமரனுக்கு யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர்களிடையே ஒரு சில விசிறிகள் இருக்கத்தான் செய்தார்கள்.

அவரின் மூத்த மருமகனான எழிலரசன் ஊரில் வயலை விட்டு வரவே மாட்டேன் என்று ஆணித்தரமாகச் சொல்லி விட்டதால், தனக்கு வரப் போகும் இரண்டாவது மருமகனையே கங்கையமரன் மலை போல நம்பியிருந்தார்.

தன் வீட்டு நிர்வாகம் தொழில் நிர்வாகம் என அனைத்தையுமே தனக்கு வரப் போகும் இரண்டாவது மருமகனிடம் ஒப்படைத்து அவரை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்குவதற்கு அவர் எண்ணங் கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல் எழிலரசனின் தம்பி புவியரசன் மீது ஒரு கண்ணும் இருந்தது.

தமையன்களின் சொல்லைத் தட்டாமல் அதை நிறைவேற்றி விட்டே மற்ற வேலை பார்க்கும் அவனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவனையே தனது இரண்டாவது மகளான வருணாவுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் எனத் தானாகவே ஒரு மனக் கணக்குப் போடத் தொடங்கி விட்டார்.

அவர் செய்த முதலாவது தவறு புவியரசனைப் பார்க்கும் நேரங்களில் எல்லாம் அவனது பொறுமையைச் சோதிக்கும் விதமாக அறிவுரை கூறுகிறேன் என்கிற பெயரில் அவனது கழுத்தறுத்தது தான்…

“என்ன தம்பி உங்கள் வயதுப் பையன்கள் எல்லாம் பெரிய படிப்பு அது இதென்று எவ்வளவு நல்லதொரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ இப்போதும் இந்தப் பட்டிக்காட்டில் விவசாயம் செய்கிறேன் அது இதென்று உங்கள் எதிர்காலத்தையே வீணாக்குகிறீர்களே”

“மாமா… எல்லோரும் படிக்கப் போய் விட்டால் விவசாயத்தை யார் பார்த்துக் கொள்வது”

“அதற்காக… உங்கள் சந்தோசம் எல்லாம் என்ன ஆவது தம்பி.”

“என் சந்தோஷமே இந்த விவசாயம் செய்வதில் தான் இருக்கிறது மாமா”

“அட... ஒரு முறை எங்களுடன் கொழும்புக்கு வந்து பாருங்கள் தம்பி… பிறகு இங்கே வரவே மாட்டீர்கள்”

“அதனால் தான் நான் கொழும்புக்கு வருவதே இல்லை மாமா.”
என்று சிரித்து விட்டு அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது தன்னையும் மீறி வார்த்தைகளை விட்டு விடுவேனோ என்கிற பயத்தில் அங்கிருந்து நழுவிப் போய் விடுவான்.

புவியரசனுக்கு ஏனோ கங்கையமரனின் பேச்சுப் பிடிப்பதில்லை.

ஏதோ கொழும்பில் உள்ளவர்கள் தான் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமே இல்லாமல் பிழியப் பிழிய அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் அவருக்கு எண்ணம் போல எனத் தனக்குள் நொடித்துக் கொள்வான்.

பொதுவாகவே புவியரசன் யாருடைய மனதும் நோகும் படியாக நடந்து கொள்ளவே மாட்டான்.

அதனால் எப்போதும் சிரித்த முகமாகவே வலம் வருவான்.

அவனுக்குக் கோபம் வருவதே அபூர்வம் தான்.

அவனை எப்படியாவது கொழும்புக்கு வர வைத்துத் தன் வசதிகளை எல்லாம் காட்டி அவனது மனதை மாற்ற வேண்டும் என்பது கங்கையமரனின் எண்ணம்.

அதற்குத் தோதாக ஒரு நாள் மாடிப் படிகளில் கால் தடுக்கி விழுந்து விட்டதைப் பயன்படுத்திக் கொண்டார்.

அதனால் ஏற்பட்ட அடியைக் காரணம் காட்டி ஊரில் இருப்பவர்களைக் கொழும்புக்கு வரவழைத்தார்.

ஆனால் அப்போது கூடப் புவியரசன் அங்கு வந்து நலம் விசாரித்து விட்டு உடனே கிளம்பி விடவும் அவருக்கு ஏமாற்றமாகிப் போய் விட்டது.

அவனை எப்படியாவது அங்கே ஒரு சில மாதங்களாவது பிடித்து வைக்க வேண்டும் என்று அவர் போட்ட திட்டத்தை உடனே அமுலுக்குக் கொண்டு வந்தார்.

அதன் அடிப்படையில் தனது காலின் காயத்தால் ஓடித் திரிந்து வெளியே தனது தொழிலைப் பார்க்க முடியாததால் காயம் குணமாகும் வரை யாராவது ஒருவர் துணையாக நிற்க வேண்டும் என்றும் அதற்குப் புவியரஙனைத் தன்னோடு இருக்கச் சொல்லுங்கள் என்றும் அழகரசனிடம் கேட்டார்.

அதைக்கூடத் தனது மகள் மீனாட்சி அருகில் இருக்கும் போது தான் கேட்டு வைத்தார்.

அப்போது தானே யாரும் மறுத்தால் அவள் தனக்காக எதிர்த்துக் கேள்வி கேட்பாள் என்கிற எண்ணம் அவருக்கு.

ஆனால் அவரது நிலையைப் பார்த்த புவியரசனுக்கு ஏனோ மனது கேட்கவில்லை அதனால் அரை மனதுடன் சம்மதித்துக் கொழும்பில் தங்கினான்.

அழகரசனுக்கு ஏனோ தம்பியை அங்கே விட்டு வர மனதில்லை.

ஒரு வயதுப் பெண் இருக்கிற இடத்தில் ஒரு வயதுப் பையனை விட்டு வருவது அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

ஆனாலும் நிலமையை உணர்ந்து வேண்டா வெறுப்பாக ஊருக்குத் திரும்பி வந்தான்.

அவன் தம்பி எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வான் என்கிற தைரியம் இருந்தது.

அதன் அடிப்படையில் புவியரசன் கொழும்பில் உள்ள வத்தளையில் அமைந்துள்ள கங்கையமரனின் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது.

வருணாவுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்ததில் எண்ணிலடங்காத சந்தோஷம்

‘அரசே அரசே'
என்று பழங்காலத்து மன்னர்களை அழைப்பது போலத் தான் அவனை அழைப்பாள்.

அது அவனுக்கும் அடிக்கடி சிரிப்பைக் கொண்டு வரும்.

அது போகக் கொழும்பில் உள்ள சுற்றுலாத் தளங்களான

சுதந்திர சதுக்கம்

கொழும்பு அருங்காட்சியகம்

கொழும்புக் கோட்டை

கொழும்பு வெளிச்ச வீடு

கங்காராம விகாரை

களனி ராஜ மகா விகாரை

பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில்

வோல்வேண்டல் தேவாலயம்

ஜமி-உல்-அல்வார் பள்ளிவாசல்

விகாரமாதேவிப் பூங்கா

காலிமுகத்திடல்

முதலான இடங்களையும் வருணா புவியரசனுக்குச் சுற்றிக் காட்டினாள்.

அவன் ஏற்கனவே இந்த இடங்களெல்லாம் பலதடவைகள் பார்த்து விட்டான்.

இருந்தாலும் அவளது சந்தோஷத்தையும் பெருமையையும் ஏன் குலைக்க வேண்டும் என்பதற்காக முதல் தடவை பார்ப்பது போல எல்லா இடங்களையும் பார்த்து வைத்தான்.

அவள் ஒவ்வொரு இடத்து வரலாற்றையும் பெருமையுடன் சொல்லும் போது அப்படியா அப்படியா என்று கேட்டு வைத்தான்.

கங்கையமரனின் தொழிலைப் பார்ப்பதொன்றும் புவியரசனுக்குக் கடினமாக இருக்கவில்லை.

ஆனால் மாதங்கள் போகப் போக இவருக்கு எப்போது குணமாகும் எப்போது ஊருக்குப் போகலாம் என்கிற எண்ணம் தோன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

இந்த எண்ணம் ஒரு சில நாட்களாக வீரியமாகத் தோன்றத் தொடங்கி விட்டிருந்தது.

அதைப் பற்றித் தான் மாடியில் நின்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குக் கங்கையமரனின் நடவடிக்கையில் எரிச்சல் தோன்றத் தொடங்கி விட்டிருந்தது.

ஆனாலும் அவன் பொறுமைசாலி என்பதால் அனைத்தையுமே பொறுத்துப் போய்க் கொண்டிருந்தான்.

எந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பது போல நேற்றைய தினம் அவனது பொறுமை பறந்து போனது.

அதற்குக் காரணம் கங்கையமரனின் பேச்சும் நடவடிக்கையும் தான்.

மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அவரின் நடை சீராவதைப் பார்த்த புவியரசனுக்கு ஏகப் பட்ட சந்தோசம்.

ஒருவழியாகத் தான் ஊருக்குச் செல்லும் நாள் நெருங்குகிறது என்ற குஷியில் சந்தோஷமாக வலம் வந்தான்.

கங்கையமரனோ அவன் பார்க்கும் போது நடக்கவே முடியாத ஆள் போலத் தன்னைக் காட்டிக் கொண்டார்.

இந்தச் செயல் தொடரவே அவனுக்கு அவர் மேலே கொஞ்சம் சந்தேகம் தோன்றத் தொடங்கியது.

இருந்தாலும் பொறுமை காத்தவனிடம் நேற்று அவர் பேசிய பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியது.

“பார்த்தீர்களா தம்பி! இங்கே வந்தால் திரும்பப் போகவே மனது வராது என்று சொன்னேனே நான் சொன்னது சரிதானே. உங்களுக்கு விவசாயத்தில் கஷ்டப் படுவதை விட இங்கே வேலைகள் சுலபமாக இருக்கிறது தானே. பேசாமல் இங்கே என் வேலையைப் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக இருங்கள்.
உங்களுக்கு இங்கே இருப்பதற்குத் தான் இஷ்டமாக இருக்கிறது என்று உங்கள் அண்ணனிடம் சொல்லி விடுகிறேன்”
என்றவரை ஒரு பார்வை பார்த்தவன் சட்டென்று உள்ளே போய் விட்டான்.

இவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்.

போனால் போகிறது என்று உதவ வந்தால் என் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறாரே என்று எண்ணிக் கொண்டவன்.

நேற்றிரவில் இருந்து இதோ சூரியன் கிழக்கே தோன்றும் வரை அவரைப் பார்க்க விரும்பவில்லை.

மாடியில் நின்றவன் சூரிய உதயத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த அதிகாலை நேரத்தில் அந்த நகரம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

அதை விட வேகமாகப் புவியரசனின் மனது இயங்கிக் கொண்டிருந்தது.

இன்றிரவே முதலாவது பேருந்தில் ஏறி விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதன் பிறகே சிறிது அமைதியானான்.

அதன் பின்னரே கடலோரமாக இருந்த அந்த வீட்டிலிருந்து வெளியே தெரிந்த காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

கடலலைகளும் சூரிய உதயமும் அப்போது தான் கண்வழியே மனதைத் தொட்டது.

இதுவும் ஏதோ ஒரு வகையில் அழகாகத் தான் இருக்கிறது.

ஆனாலும் நம் ஊரின் அழகோடு ஒப்பிடுகையில் இது கொஞ்சம் மட்டுப் பட்டுத் தான் போகிறது.

அந்த வயலும், வாய்க்காலும், குளமும், கோவிலும் அங்குள்ள மக்களும் என்று எண்ணியவனின் மனதில் சட்டென்று ஒருத்தியின் முகம் வந்து போனது.

அவளுக்குப் படிப்பு இப்போது முடிந்திருக்குமா? அவளைப் பார்க்கப் போய் ஐந்து மாதங்களுக்கும் மேலாகி விட்டதே என்றும் எண்ணிக் கொண்டான்.

இன்றிரவு எப்படியும் யாழ்ப்பாணம் போகும் பேருந்தில் ஏறி விடுவேன் தானே, எப்படியும் அங்கு போய்ச் சேரக் கிட்டத்தட்ட பத்து மணிநேரமாவது எடுக்கும்.

அப்படியே அம்பரியையும் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து விட வேண்டும்.
என்று தீர்மானித்துக் கொண்டான்.

பேருந்து எட்டு மணிக்குப் புறப்படும் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவன் ஆறு மணி வாக்கில் வருணாவிடம் சென்றான்.

“வருணா நான் இன்றிரவு எட்டு மணிப் பேருந்தில் யாழ்ப்பாணம் போகிறேன்”

“என்ன சொல்கிறீர்கள் போக வேண்டாம் அரசரே!”

“இல்லை வருணா எனக்கு வீட்டுக்குப் போக வேண்டும் போல இருக்கிறது”

“சரி சரி அப்படியானால் நானும் வருகிறேன்”

“நீயுமா! வேண்டாமே இங்கே உன் அப்பாவுக்குத் துணை வேண்டாமே”

“அவருக்குத் தான் எப்போதோ குணமாகி விட்டதே பிறகு நான் எதற்கு”
என்னவளின் பதிலில் திகைத்தவன்.
தான் ஊருக்குச் செல்வதில்
முன்னைவிடவும் உறுதியானான்.

“உன் அப்பாவிடம் கேட்டு அவர் அனுமதித்தால் தாராளமாக வா வருணா”
என்று சம்மதித்தான்.

புவியரசன் ஊருக்குப் போகிறேன் என்ற போது திகைத்த கங்கையமரன் கூடவே நானும் போகிறேன் என்று வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் சந்தோஷமாகச் சம்மதம் சொன்னார்.

அதிகாலை ஏழு மணியளவில் அந்த அரசாங்கப் பேருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது.

அங்கிருந்து ஒரு முச்சக்கர வண்டியில் கனகாம்பரி தங்கி இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர் இருவரும்.

அங்கே அவள் ஊருக்குப் போய் விட்டாள் என்றதும் மீண்டும் வந்து யாழில் இருந்து கம்பர்மலைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள் புவியும், வருணாவும்.

“யார் அது”

“எது”

“இப்போது யாரையோ பார்க்கப் போனோமே”

“ஆமாம்”

“அது தான் யாரைப் பார்க்கப் போனோம் என்று கேட்கிறேன்”

“அது…”
என்றபடி அவளை எப்படி அறிமுகப் படுத்துவது என்று தடுமாறினான் புவியரசன்.

பின்னர் உடனே சுதாரித்துக் கொண்டு
“என் மாமாவின் மகள் அம்பரி… இங்கே படிப்பதற்காகத் தங்கி இருந்தாள்.”

“ஓ… அப்படியா?”

“ஆமாம்”

“என்ன படிக்கிறார்கள்”

“ஆசிரியராக வேண்டும் என்று படிக்கிறாள்”

“அடடா அப்படியானால் வாத்தியாரம்மா என்று சொல்லுங்கள்”
என்றபடி வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் வருணா.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் ஊரை வந்தடைந்தது பேருந்து.

வெளியே ஏதோ பொருட்கள் வாங்க வந்த கனகாம்பரி பேருந்தில் இருந்து இறங்கிய புவியரசனைப் பார்த்து விட்டாள்.

அவளை அறியாமலேயே அவளது வதனம் தாமரையென மலர்ந்து விகசித்தது.

அவனை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தவள் அவன் பின்னோடு இறங்கிய இளம் யுவதி ஒருத்தியைப் பார்த்ததும் தேங்கி நின்றாள்.

அந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தவளுக்கு அப்போது தான் அது மீனாட்சியின் தங்கை வருணா என்பது புரிந்தது.

அன்றொரு நாள் மீனாட்சி அவளது காதில் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

தாமரையென மலர்ந்த முகம் சட்டென்று அனிச்சம் பூவென வாடியது.

அந்த இடத்தை விட்டுப் போனால் போதுமென விரைந்து திரும்பி விட்டாள்.

அதற்கான காரணம் என்னவென்பதை ஆராய அவள் முற்படவில்லை.

எதேச்சையாக இவள் பக்கம் பார்த்தவனது முகமும் மலர்ந்தது.

தனது பொருளடங்கிய பையை எடுத்துக் கீழே வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தவனின் கண்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் கனகாம்பரி தட்டுப் படவேயில்லை.

எங்கே போய் விட்டாளென்று சுற்றும்முற்றும் பார்த்தவனுக்கு அவள் சென்ற திசையே தெரியவில்லை.

குருவி போல ஒரு இடத்தில் நிற்கிறாளா இவள் என்று புன்னகைத்தவன்.

என்னைப் பார்த்தவள் என்னிடம் வந்து ஒரு வார்த்தை பேசி இருந்தால் குறைந்தா போய் விடுவாள்.
என நினைத்தபடி வருணாவுடன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"உனைப் பார்த்ததும் தானே நானே மெல்லப் பரவசமாகிப் போனேனே!

இதழோரமாய்த் தானே தானே ஒரு புன்னகை விரிவதும் உணர்ந்தேனே!

உன் வளையொலி தானே தேனே என் மனதினை மயக்கையில் சிலிர்த்தேனே!

எனக்கெனத் தானே மானே நீ இங்கு பிறந்தாயென அறிந்தேனே!

உன் கரம் தானே நானே பிடித்து நடப்பதாய்க் கனாக் கண்டேனே!"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top