• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
காற்று லேசாகச் சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது.

வீட்டின் முன்பக்கமாக அமைந்திருந்த கூடத்தில் வழமை போல அமர்ந்திருந்தான் அழகரசன்.

வழமை போல் அவனது மனைவி சுந்தரவல்லி பித்தளைக் குவளையில் காய்ச்சிய பசும்பாலை வார்த்துக் கொடுத்தாள்.

அந்த இனிய பசுப் பாலை ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தான் அழகரசன்

“அத்தான்…”

“ம்… சொல்லு சுந்தரம்”

“நம் புவி இல்லாமல் வீடே சோபை இழந்தது போல இருக்கிறது அத்தான்”

“எனக்கும் அப்படித்தான் ஏதோ போல இருக்கிறது சுந்தரம்”

“அவன் அங்கே சென்று ஐந்து மாதங்கள் ஆகி விட்டது தெரியுமா?”

“பரவாயில்லையே சரியாகக் கணக்கு வைத்து இருக்கிறாயே”

“நான் சரியாகக் கணக்கு வைத்தது உங்களுக்கு எப்படித் தெரியும் அத்தான்… அப்படியானால் நீங்களும் கணக்குப் பார்த்தீர்களா?”

“தெரிகிறது தானே பிறகென்ன கேள்வி”

“அது சரி… அதிருக்கட்டும் புவியை அழைத்து வருவது பற்றி ஏதாவது யோசித்தீர்களா?”

“சுந்தரம்… இந்த மாமா எழிலைத் தன்னோடு நிறுத்தி வைத்திருக்கலாம் தானே? அதை விடுத்துப் புவியை ஏன் தன்னோடு இருத்திக் கொண்டார் அதற்கு ஏதும் காரணம் இருக்குமா?”

“காரணத்தை யோசிப்பதை விட்டு அவனை அழைத்து வரும் வழியைப் பாருங்கள். அவன் இல்லாமல் எப்படித் தான் இந்த ஐந்து மாதங்கள் போனதோ தெரியவில்லை”

“நீ சொன்னால் செய்து விட வேண்டியது தான்”

“அத்தான் இன்னொரு விஷயம்”

“என்ன சுந்தரம்”

“நம் கனகம் படிப்பு முடித்து ஊருக்கு வந்து விட்டாளாம்… அவளைப் போய்ப் பார்க்க வேண்டாமா?”

“ஏன் போகாமல்… கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும்… முன்பெல்லாம் எப்படியோ ஆனால் இப்போது கனகம் நம் வீட்டின் எதிர்கால மருமகள்”

“அருமையான பெண் அத்தான் அவள்”

"ஆனாலும் என் சுந்தரத்தை விடச் சற்றுக் கம்மி தான்"
என்றவாறு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

"போங்கள் அத்தான் நீங்கள்"
என்றபடி சிறு வெட்கத்துடன் கணவனின் தோளில் லேசாக முகத்தை மறைத்தாள் சுந்தரவல்லி...

"எங்கே போக... சுந்தரம்... உன்னை விட்டு நான் எங்கே போவேன்"
என்றபடி மனைவியின் அந்த அழகிய வெட்கத்தை ரசனையுடன் பார்த்தவன் அவளது முடியை லேசாகக் கோதி விட்டான்.

"நானும் போக விட மாட்டேன் அத்தான்..."
எனக் கணவனின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.

இருவரும் அந்த மோனநிலையில் சிறிது நேரம் லயித்து இருந்தார்கள்.

மாமரத்தில் இருந்த மஞ்சட்குருவி ஒன்று லேசாகக் கீச்சிட்டு நானும் இங்கே தான் இருக்கிறேன் என்பது போலத் தனது இருப்பை உணர்த்தியது.

இருவரும் அப்போது தான் சுற்றுப்புறத்தை உணர்ந்தார்கள்.

“சரி சுந்தரம் நான் வயல் வரை போய் வருகிறேன்”
என்றபடி அழகரசன் வெளியே சென்று விட்டான்.

உள்ளே எழுந்து போகத் திரும்பிய சுந்தரவல்லி வாசலில் அரவம் கேட்டு நின்று, மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே புவியும் வருணாவும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவள் சந்தோசம் கலந்த அதிர்ச்சியுடன் தேங்கி நின்று விட்டாள்.

“புவி… என்னப்பா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறீர்கள்”

“உங்களை எல்லாம் விட்டு என்னால் அங்கே இருக்க முடியவில்லை அண்ணி… நீங்களாக வந்து அழைப்பீர்களென்று இருந்தேன் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அது தான் நானே புறப்பட்டு வந்து விட்டேன்”

“மன்னித்து விடு புவி”

“ஐயோ நீங்கள் ஏன் அண்ணி மன்னிப்புக் கேட்கிறீர்கள்”
என்றபடி வெளியே வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த நீரைச் செம்பினால் மொண்டு கால்களைக் கழுவி விட்டு உள்ளே சென்று அமர்ந்தபடி சோம்பல் முறித்தான்.

வாசலில் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த மீனாட்சி ஓடி வந்து தங்கையைக் கட்டிக் கொண்டாள்.

“ஏய் வருணா சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டாயே”

“ஒரு வேளை சொல்லி இருந்தால் நீ வர விட்டு இருப்பாயோ என்னவோ”

“அடி போடி இவளே... சரி சரி வாசலிலேயே நிற்கிறாயே உள்ளே வா”

“அக்கா எனக்கு இந்த ஊர் சாப்பாடு நிறைய செய்து கொடு”

“அதற்கென்ன செய்து கொடுத்தால் போகிறது… அங்கே வீட்டுக்குக் கொடுத்தனுப்பவென்று பலாப்பழம் நேற்று வாங்கி வைத்தேன்”

“நிஜமாகவா அக்கா எனக்கும் கொடு கொடு”

“வருணா… முதலில் குளித்து விட்டு வா எல்லாம் எடுத்து வைக்கிறேன்”
என்றவாறு வீட்டினுள் தன் தங்கையை அழைத்துச் சென்றாள் மீனாட்சி.

உள்ளே சென்ற இருவரையும் பார்த்த சுந்தரவல்லி புவியரசனிடம் திரும்பினாள்.

“ஏன் தம்பி ஏதாவது பிரச்சினையா? ஒரு கடதாசி கூடப் போடாமல் திடீரென வந்து நிற்கிறீர்கள்”

“அது தான் சொன்னேனே அண்ணி உங்களை எல்லாம் விட்டு அங்கே இருக்க முடியவில்லை என்று”

“ஐந்து மாதங்கள் அங்கே இருந்தாய் தானே”

“சந்தோஷமாகவா இருந்தேன் கடமைக்காக இருந்தேன். இதோ பாருங்கள் அண்ணி… இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைக் கொழும்புக்குப் போகச் சொல்லக் கூடாது”

“சரி சரி சொல்ல மாட்டோம்”

“நீங்கள் சொன்னாலும் நான் போக மாட்டேன்”

“என்னடா புவி நடந்தது உனக்கு… பொதுவாக நீ இப்படி எல்லாம் பேச மாட்டாயே சொல்வதெல்லாவற்றையும் பேசாமல் கேட்டுக் கொண்டு இருப்பாயே”

“சொல்வதெல்லாவற்றையும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்ததால் தான் நான் எல்லோருக்கும் கிள்ளுக்கீரை ஆகி விட்டேன் போல”

“என்ன புவி என்னிடம் எரிந்து விழுகிறாய் நான் என்னடா செய்தேன்… என்ன பிரச்சினை என்று சொன்னால் தானே எனக்குத் தெரியும்”

“உங்களிடம் மட்டும் தானே அண்ணி என்னால் உரிமையாக எரிந்து விழ முடியும். நான் வேறு யாருடன் இப்படிப் பேச முடியும் சொல்லுங்கள்”

“சரி சரி… அண்ணியிடம் தாராளமாக நீ எரிந்து விழலாம்… கொஞ்சம் காரணத்தைச் சொல்லி விட்டு எரிந்து விழக் கூடாதா?”

“எனக்கு அங்கே சின்ன அண்ணியின் அப்பா பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை அண்ணி”

“சரி… இப்போது தான் இங்கே வந்து விட்டாயே இனிமேல் ஒரு போதும் உன்னை அங்கே அனுப்ப மாட்டேன். யாரையும் அனுப்ப அனுமதிக்கவும் மாட்டேன் போதுமா?”

“ரொம்ப நன்றி அண்ணி… ஏதோ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்த உணர்வாக இருக்கிறது”

“உன்னைப் பார்க்க எனக்கும் தான் ஏதோ பெரிய கண்டம் கடந்து வந்தவன் போல இருக்கிறது”

“அது சரி இந்த வாண்டுகள் எங்கே? வழமை போல் ஊர் சுற்றப் போய் விட்டார்களா?”

“அது தான் இந்த வாலுக் கூட்டத்தின் தலை ஊருக்கு வந்து விட்டாளே அவளைப் பார்க்கவென்று நீ வருவதற்குக் கொஞ்சம் முதல் தான் சென்றார்கள்”

“ஓ அப்படியா?”

“நானும் கனகத்தைப் போய்ப் பார்த்து வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். ஒரு வழியாகப் படித்து முடித்து விட்டாள். சரி நீ உள்ளே வா புவி”

என்றபடி சுந்தரவல்லி வீட்டினுள் சென்று விட்டாள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
உன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக
உன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலாக் காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
உன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

என வானொலி வழியே ஞானகியம்மாவின் கனிந்த குரல் தவழ்ந்து வந்து கனகாம்பரியின் செவி தொட்டு உயிர்வரை தீண்டிச் சென்றது.

குளக்கரையோரமாக நின்றிருந்த கொன்றல் மரத்திற்குக் கீழே இருந்த கல்லில் அமர்ந்து வானொலிப் பெட்டியைக் கையில் வைத்திருந்தாள்.

பாடல் முடியும் வரை இமைகளை மூடி அந்த அழகிய பாடலை இரசித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மாயாஜாலம் நடத்திக் கொண்டிருந்தன.

கண்மணியோ கொன்றல் மரத்தில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த நேரம் பார்த்து அவளது கண்களை யாரோ பொத்தினார்கள் கையின் ஸ்பரிசத்திலும் அளவிலும் யாரென்று அவளுக்குப் புரிந்து விட்டது.

“ஏய் விஷ்ணு… நீ தானென்று எனக்குத் தெரியும்”
என்றவளின் முன்னால்

“அக்கா சும்மா என்றாலும் தெரியாதது போல நடித்திருக்கலாம் தானே”
என்றபடி வந்து நின்றான்.

கூடவே மனோ, மோகனா மற்றும் கானப்பிரியாவும் வந்து நின்றார்கள்.

“போங்கள் நான் உங்களோடு கோபமாக இருக்கிறேன்”

“உங்களைப் பார்க்க வரவில்லை என்று தானே அக்கா உங்களுக்குக் கோபம்”

“தெரிகிறது தானே பிறகென்ன கேள்வி”

“மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா… கொழும்புத் தாத்தாவுக்கு மாடியில் விழுந்து காயம்... அது தான் அங்கே போய் விட்டோம் அக்கா”

“ஐயையோ இப்போது அவருக்கு எப்படி இருக்கிறது”

“அதெல்லாம் இப்போது நன்றாகத் தான் இருக்கிறார்”

“சரி தெரியாமல் கோபித்து விட்டேன் மன்னித்து விடுங்கள்”

“உங்களைப் பார்க்க எங்களை அழைத்து வரவும் யாருமில்லை. இந்தப் புவிச் சித்தப்பாவும் கொழும்புத் தாத்தா வீட்டிலேயே தங்கி விட்டார் தெரியுமா?”
என்று அது பெரிய குற்றம் போலச் சொன்னார்கள் சிறுவர்கள்.

“சரி சரி அதை விடுங்கள். இப்போது தான் நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோமே அதைக் கொண்டாடுவோம் சரியா”
என்றவளை
“எப்படிக் கொண்டாடுவது அக்கா என்று கேள்வி கேட்டார்கள் சிறுவர்கள்.

“அங்கே வீட்டில் உங்களுக்காக வாங்கி வந்த தின் பண்டங்கள் பரிசுகள் எல்லாம் இருக்கிறது அதை வைத்துக் கொண்டாடுவோம்”
என்றவளை
“உண்மையாகவா அக்கா என்றால் அக்கா தான் பட்டு அக்கா”
அவளது கன்னத்தைப் பிடித்து ஆளாளுக்கு ஆட்டினார்கள்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வருணாவிற்கு வயலைச் சுற்றிக் காட்டவென்று அவளுடன் வரப்பில் புவியரசன் வந்து கொண்டிருந்தான்.

கூடவே மீனாட்சியும் தூதுவளை இலைகள் பறிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து வந்தாள்.

எதேச்சையாக அதைத் திரும்பிப் பார்த்த கனகாம்பரி சிறுவர்களை அழைத்துக் கொண்டு மற்றப் பாதையில் தனது வீட்டை நோக்கி விரைந்தாள்.

நால்வரது எண்ணமும் அவள் வாங்கி வந்திருக்கும் பரிசு என்னவாக இருக்கும் என்பதிலேயே குவிந்திருந்தது.

அதனால் அங்கே வந்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பார்க்கவில்லை.

வரப்பில் ஏறும் போதே கனகாம்பரியையும் பிள்ளைகளையும் பார்த்த புவியரசன் அவர்கள் இருந்த திசைப் பக்கம் நடக்கத் தொடங்கினான்.

இடையில் வருணா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லி விட்டுத் திரும்பியவன் கனாம்பரி அடுத்த பாதையில் செல்வதைப் பார்த்ததும் ஏனென்று புரியாமல் திகைத்தான்.

“இவளுக்கு என்னவாயிற்று நாங்கள் வருவதை நிச்சயமாகப் பார்த்திருப்பாள் நின்று இரண்டு வார்த்தைகள் பேசினால் குறைந்து விடுவாளாமா?”
என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

“அக்கா… அங்கே செல்வது நம் வீட்டுப் பிள்ளைகளா?”

“ஆமாம் வருணா”

“அது யார் கூடவே போகும் பொண்ணு”

“இந்த ஊர்தான் நம் உறவுக்காரப் பெண் கனகாம்பரி என்று பெயர்”

“எங்களைப் பார்த்து விட்டா போகிறார்கள்”

“ஆமாம் ஆமாம்”

“ஏன் அக்கா அப்படி”

“அவள் யாழ்ப்பாணம் போய்ப் படித்தவள் அந்தத் திமிர் கொஞ்சமாவது இருக்கும் தானே”

“உண்மையாகவா? எப்படி அக்கா அப்படிச் சொல்கிறாய்”

“எப்படிச் சொல்கிறேன் என்றால்… உதாரணமாக என்னை எடுத்துக் கொள் நான் இப்படிப் படித்து விட்டு வந்தால் யாரையும் கண்டு கொள்ளாமல் திமிராக நடந்து கொள்வேன் அது தான் ஒரு வித பெருமிதமாக இருக்கும்… அது போலத் தானே அவளுக்கும் இருக்கும்.”

“நல்ல வேளை மீனாக்கா… அப்பா உன்னைப் பதினோராம் வகுப்போடு நிறுத்தி விட்டார். இல்லையென்றால் உன் அலப்பறை தாங்காமல் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்திருப்பார்கள்”

“போடி இவளே”
என்றபடி தங்கையைக் கிள்ளினாள் மீனாட்சி.

இவர்கள் பேசியது எதுவும் புவியரசனின் காதுகளுக்குக் கேட்கவேயில்லை.

அம்பரிக்கு என்னவானது என்னவானது என்று மட்டுமே அவனது மனம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
“முகம் திருப்பும் தாரகையே
நான் என்ன தவறிழைத்தேன்…

உன் பாரா முகம் என்னை
ஏனோ வதைக்கிறதடி…

ஒரு புன்னகை சிந்தவா
இத்தனை கஞ்சத்தனம்…

உன் வாயாடித்தனத்தில்
உதிரும் வார்த்தைகளைக்
கேட்கத் தான் என் செவி ஏங்குகிறது
அதை நீ அறிய மாட்டாயா?

இதை யாரிடம் சொல்வேன் இதயம் ஏனோ குமுறுகிறதடி...

இதற்கு என்ன காரணம் என்று
சொல்லத் தெரியவில்லை எனக்கு...

ஆனாலும் இது கூடப் பிடித்திருக்கிறது எனக்கு... இது தான் இன்பமான துன்பமோ?”

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top